World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan and Zimbabwe: a tale of two autocrats

பாக்கிஸ்தானும், ஜிம்பாப்வேயும்: இரு சர்வாதிகாரிகளின் கதை

By Rick Kelly
26 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பாக்கிஸ்தானில் 1999 ல் நடைபெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் காமன்வெல்த்திலிருந்து அந்நாடு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்தது. லண்டனில் சனிக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சர்களுக்கான நடவடிக்கை குழுக்கூட்டத்தை தொடர்ந்து, இந்த தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், முரணான எல்லா சான்றுகளையும் காமன்வெல்த் புறக்கணித்துவிட்டு ''பாக்கிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்பதற்கும், ஜனநாயக அமைப்புக்களைத் திரும்பக் கட்டி எழுப்புவதற்குமான நடவடிக்கைகள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன'' என்று அறிவித்துள்ளது.

உண்மை என்னவென்றால், பிரதமர் நவாஸ் ஷெரீபின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கியபோது நிலைநாட்டிய அதே சர்வாதிகார ஆட்சியைத்தான் இன்றைக்கும் ஜெனரல் பல்வேஷ் முஷ்ராப் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார். முஷ்ராப் ஆட்சி வாஷிங்டனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதற்கு குறிப்பாக, அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முக்கிய ஆதரவு தந்துவருவதால் பாக்கிஸ்தான் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஊடக செய்திகளின்படி, புஷ் நிர்வாகம் பாக்கிஸ்தானை மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு காமன்வெல்த் நாடுகளை நிர்ப்பந்தம் கொடுத்துக்கொண்டு வந்தது என்றும், புஷ்ஷின் விசுவாச சகாக்களான பிரிட்டிஷ் டோனி பிளேயரும், அவரது ஆஸ்திரேலிய கூட்டாளியான ஜோன் ஹோவார்ட்டும் காமன்வெல்த் அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டத்தில் (CMAG) கலந்து கொண்ட ஒன்பது நாடுகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும் கார்டீயன் பத்திரிகை தகவல் கொடுத்துள்ளது.

இந்த விவகாரத்தைப் பல மாதங்களாக லண்டன் வலியுறுத்தி வருவதுடன், சென்ற நவம்பரில் காமன்வெல்த்துடன் மீண்டும் பாக்கிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்படுவதை ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ தனது பாக்கிஸ்தான் சகாவை சந்தித்தபோது தெரிவித்தார். அத்துடன், ''பாக்கிஸ்தானுடனான கூட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது'' என்றும் அவர் அறிவித்தார்.

அமெரிக்க அரசுத் துறையின் தெற்கு ஆசியாவிற்கான துணைச் செயலாளரான கிறிஸ்ரினா ரொக்கா இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து, பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட எல்லையில் அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், ஈராக்கிற்கு துருப்புக்களைத் வழங்க வேண்டும் என்றும் முஷ்ராப்பை வலியிறுத்திக் கேட்டுக்கொண்ட சில நாட்களில் காமன்வெல்த்தில் மீண்டும் பாக்கிஸ்தான் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

''பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு'' உள்நாட்டில் எதிர்ப்புக்கள் பெருகிக்கொண்டு வருவதாலும், தொடர்ந்தும் இஸ்லாமாபாத் இதற்கு ஆதரவு தருவதை ஊக்குவிப்பதற்காகவும், வழங்கப்பட்டுவரும் பல்வேறு வகைப்பட்ட அரசியல் மற்றும் நிதி வழங்கும் லஞ்ச நடவடிக்கைகளில் ஒன்றுதான் காமன்வெல்த்தில் பாக்கிஸ்தான் திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதாகும். காமன்வெல்த்தில் பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் உறுப்பினர்களாக இருப்பதால் ஆக்கபூர்வமான பயன்கள் இல்லாவிட்டாலும், முஷ்ராப் ஆட்சியை நியாயப்படுத்த உதவுகிறது.

பாக்கிஸ்தானில் நிலவுகின்ற ஜனநாயக உரிமைகள் பற்றி அக்கறையுள்ள ஆய்வுகள் எதுவும் நடத்தி, அதன் அடிப்படையில் காமன்வெல்த் இந்த முடிவை எடுக்கவில்லை. 1999 ல் ஷெரீப்பை, முஷ்ராப் ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு அரசியலமைப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதியாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். அதற்குப்பின்னர் அவர் பல அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும், அவை பெரும்பாலும் மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேய்பவையாக இருந்தனவே ஒழிய, அவரது ஆட்சியின் சர்வாதிகாரத்தன்மையை குறிப்பிடத்தக்க அளவிற்கேனும் மாற்றுபவையாக இருக்கவில்லை. முஷ்ராப் உருவாக்கியுள்ள நாடாளுமன்றமானது அரசியல் அடிப்படையில் செயல்பட முடியாததுடன், ஜனாதிபதியின் அனுமதிக்கு மேல் அதற்கு எந்த உண்மையான அதிகாரமும் கிடையாது.

2002 ல் நடைபெற்ற தேர்தலானது மோசடியான ஒன்றாகும். பல்கலைக்கழக பட்டம்பெறாத எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், மக்களில் 98 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, வாக்குப்பதிவு உயர்த்திக்காட்டப்பட்டது. ஆனால், 41 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் பார்வையாளர்கள் பாக்கிஸ்தான் இராணுவம் ''தேர்தல் ஏற்பாடுகளிலும் ஜனநாயக நெறிமுறைகளிலும் நியாயமற்ற வகையில் தலையிட்டதாக'' குற்றம்சாட்டினர். மேலும் ''தேர்தல் நடைமுறைகளில் மிகக்கடுமையான தவறுகள் ஏற்படுகிற அளவிற்கு பாக்கிஸ்தான் அதிகாரிகள் செயல்பட்டதாகவும்'' அறிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் இராணுவப் படைகளின் தலைவர் என்ற தனது பதவியை விட்டுவிடப் போவதாகவும், ஜனாதிபதி என்கிற முறையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவராக நீடிக்கப்போவதாகவும் முஸ்ராப் சமிக்கை காட்டினார். இராணுவ அதிகாரிகளே நிறைந்துள்ள இந்தக் கவுன்சிலின் தலைவர் பதவி முஷ்ராப்பிற்கு சர்வாதிகாரத்தனமான அதிகாரங்களை வழங்கும். அரசாங்க முடிவுகளை ரத்து செய்யவும், இராணுவ மற்றும் அரசாங்க தலைமை அதிகாரிகளை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும், நாடாளுமன்றத்தை கலைக்கவும் முஷ்ராப்பிற்கு இதன்மூலம் மேலும் அதிகாரங்கள் குவிந்துவிடுகிறது.

இந்த ஆட்சியை பல்வேறு மனித உரிமைக்குழுக்கள் கண்டித்திருக்கின்றன. இந்த ஆண்டுத் துவக்கத்தில் அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் ''பாக்கிஸ்தானில் பரவலாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மறைக்கின்ற, சட்டப்பூர்வமான முலாம் பூசப்பட்ட முகமூடியாக அந்த ஆட்சி செயல்படுகிறது. ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன மற்றும் அவற்றிற்கு தொந்தரவுகள் தரப்படுகின்றன. குழு வன்முறைகள் அதிகரித்து வருவதுடன் பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் முறைகேடாக நடத்தப்படுகின்றனர். அரசியல் எதிரிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். மற்றும் அமெரிக்காவோடு ஒத்துழைத்து 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' நடத்தப்படுவதில் சட்டப்பூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை'' என்பது உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை இந்த ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டுள்ள பிரதமர்களான பெனாசீர் பூட்டோவையும் நவாஷ் ஷெரீப்பையும் நாடு திரும்பவிடாமல் முஷ்ராப் தொடர்ந்தும் தடுத்து வருகின்றார். அத்துடன், மே 11 ல் நவாஷ் ஷெரீப்பின் சகோதரரும், பாக்கிஸ்தான் முஸ்லீம் கழகத் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப்பை (Shahbaz Sharif) செளதி அரேபியாவிற்கு நாடு கடத்தினார். சென்ற மாதம் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான மாக்டொம் ஜவாட் ஹஸ்மி (Makhdoom Javed Hashmi) என்பவர் மீது போலியான தேசத் துரோக குற்றம்சாட்டி, அவருக்கு 23 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காமன்வெல்த் போன்று, புஷ் நிர்வாகமும் முஷாரப்பின் ஜனநாயக உரிமைகள் மீதான அத்துமீறலை கண்டுகொள்ளாமல் அவரது சேவைக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. 2001 செப்டம்பர் 11 க்கு முன்னர், தலிபான் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் இராணுவ மற்றும் சட்டரீதியான ஆதரவு தாலிபான் ஆட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அமெரிக்காவின் பகையை சந்திக்க வேண்டிவரும், தன்னை விரோதி என்று அமெரிக்கா குறிவைத்துவிடும் என்று எதிர்பார்த்து முஷ்ராப் தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டு, காபூலில் தனது முன்னாள் கூட்டணியினர் கவிழ்க்கப்படுவதை ஆதரித்தார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல் நடத்திய போது முஷ்ராப், அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தான் இராணுவத் தளங்களையும் விமான வழித்தடத்தையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததுடன், FBI மற்றும் CIA அதிகாரிகள் பாக்கிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா உறுப்பினர்களைத் தேடுவதற்கும் அனுமதி வழங்கினார். இதன்போது, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டவர்கள் பாக்கிஸ்தானில் கைது செய்யப்படுவதற்கு அமெரிக்க அதிகாரிகளுடன் உள்நாட்டுப் படைகள் நெருக்கமாக ஒத்துழைத்தன.

அத்துடன், பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்களிடையே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை பாக்கிஸ்தான் சர்வாதிகாரி ஏற்று செயல்படுத்தினார். தலிபான் மற்றும் அல்கொய்தா தலைவர்கள், இந்தத் தொலைத்தூர பிராந்தியங்களில் பதுங்கியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மார்ச் மாதம் ஏறத்தாழ 70,000 பாக்கிஸ்தான் துருப்புக்கள் இந்த எல்லைப் பிராந்தியங்களில் தாக்குதலைத் தொடுத்தபோது, முஷ்ராப் அல்கொய்தா முன்னணித் தலைவர் என்று கருதப்படுபவரை தனது படைகள் சுற்றி வளைத்து விட்டதாகத் தெரிவித்தார்.

காமன்வெல்த் பொதுச்செயலாளர் டொன் மக்கினொன் (Don McKinnon) இந்த முடிவில் அமெரிக்கா பங்களிப்பு எதுவும் செய்யவில்லை என்றும், அல்லது இந்த அரசியலில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்றும் ஒரு குழப்பமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், பாக்கிஸ்தானுக்கு கைமாறாக இது கிடைத்திருக்கிறது என்பது மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும். ''உலகில் பொதுவாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இங்குள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும், தெளிவாகத்தெரியும். இங்குள்ள எல்லா அமைச்சர்களும், பாக்கிஸ்தானின் ஜனநாயகம் மீட்கப்படுவது பற்றி தங்களது முடிவுகளை CMAG ல் தெரிவிக்க வேண்டுமென்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த முடிவுகள் புவியியல்-மூலோபாய அல்லது அரசியல் நிலைப்பாட்டால் செய்யப்படுவதல்ல'' என்று அவர் கூறினார்.

பாக்கிஸ்தானும், ஜிம்பாப்வேயும்

இந்த விடயத்தில் ஜிம்பாப்வே நடத்தப்பட்ட விதத்தை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, பாக்கிஸ்தானை மீண்டும் அனுமதிப்பது பற்றிய முடிவில் அடங்கியிருக்கின்ற சிடுமூஞ்சித்தனம் மிகத்தெளிவாக வெளிப்படுகிறது. 2002 ல் இரண்டு நாடுகளிலுமே நடைபெற்ற தேர்தல்களில் மோசடிகள் பற்றி பரவலான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. பாக்கிஸ்தானைப் பொறுத்தவரை வாக்குப்பதிவு ''ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைப்பது'' என்று கருதப்பட்டது. ஜிம்பாப்வேயைப் பொறுத்தவரை ஜனாதிபதி ரொபேட் முகாபேக்கு (Robert Mugabe) எதிராக எடுக்கப்பட்ட அரசியல் தாக்குதலின் காரணமாக அந்த நாடு காமன்வெல்த்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகள் பற்றி புஷ் மிகுந்த இறுமாப்போடு ஒரு அறிவிப்பை வெளியிட்டதோடு, ''இந்த தேர்தல் முடிவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை, இந்தத் தவறான தேர்தல் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுபற்றி எங்களது நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார். தேர்தலில் முகாபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை, பிளேயர் மற்றும் ஹோவார்ட் அரசாங்கங்கள் இதேபோன்று தேர்தலின் சட்டப்பூர்வமான தன்மையை அங்கீகரிக்க மறுத்துவிட்டன.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரிட்டன் ஜிம்பாப்வேயை காமன்வெல்த்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைப்பதை வற்புறுத்தி வெற்றிகண்டது. இதற்கு ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட சலுகையாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய ஒரு குழுவை ஜிம்பாப்வேயின் மனித உரிமைகள் பற்றி ஆராய்வதற்காக நியமித்தது.

இந்த முயற்சிக்கு ஆஸ்திரேலியா பிரிதமர் ஹோவார்ட் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்பில் முக்கிய பங்களிப்பை செய்ததுடன், ஆப்பிரிக்க நாடுகள் ஏதாவது ஒரு வடிவத்தில் முகாபேயுடன் சமரசம் செய்து கொள்வதற்கான முயற்சியையும் அவர் தள்ளுபடி செய்தார். அத்தோடு, ஜிம்பாப்வேக்கு எதிராக கடுமையான பொருளாதார மற்றும் ராஜியதந்திர தடைகளை விதிக்கவேண்டும் என்றும் நிர்ப்பந்தம் கொடுத்துவந்த ஹோவார்ட், சென்ற டிசம்பரில் இதில் வெற்றியும் பெற்றார். இதன் விளைவாக ஜிம்பாப்வே காமன்வெல்த்திலிருந்து விலகிக்கொண்டது.

முகாபே ஒரு சர்வாதிகார மனப்பான்மையுள்ள ஆட்சியாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜிம்பாப்வே நீக்கப்பட்டதற்கு அது காரணமல்ல. முகாபே இதற்கு முன்னர் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார். 1980 ல் இயன் ஸ்மித்தின் (Ian Smith) இனவாத அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் சொத்துக்களை காப்பதிலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதிலும், அவரது பங்களிப்பை இந்த இரு நாடுகளும் மதித்தன. அப்போது முகாபே, மற்றாபெல்லான்டில் (Matabeleland) உள்ள தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதை இவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர்.

1990 களின் கடைசியில் ஜிம்பாப்வேயில் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தோன்றியதுடன், அவற்றை தூண்டிவிடுகிற வகையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகள் சுமத்தியிருந்தது. இதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் பெருமளவில் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால், முகாபே தனது பழைய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆவேச உரைகளை மீண்டும் கிளப்பி வெள்ளையருக்குச் சொந்தமான பண்ணை நிலத்தை மிகுந்த குழப்பமூட்டும் வகையில் அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கீகரித்தார்.

இந்த முயற்சிகளை லண்டன் ஆவேசமாக கண்டித்தது. முகாபேயின் இந்த நடவடிக்கையால் ஜிம்பாப்வேயில் பிரிட்டனின் நலன்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், முகாபேயின் வெற்று முழக்கங்களால் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள இதர பெரிய அரசுகளின் நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

பாக்கிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே தொடர்பான இரட்டை வேடப்போக்கு உலகம் முழுவதிலும் புஷ், பிளேயர் மற்றும் ஹோவார்ட் ஆகியோர் ஜனநாயத்தின் முகவர்கள் என்று கூறப்படும் வங்குரோத்தான வெற்றுக் கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த மூவரும் சட்டவிரோதமான ஈராக் ஆக்கிரமிப்பில் சேர்ந்து கொண்டதோடு ''ஈராக் விடுதலை செய்யப்படும்'' என்றும், மத்திய கிழக்கு முழுவதிலும் ஜனநாயகத்திற்கு கலங்கரை விளக்கமாக ஈராக் அமையும் என்றும் கூறி வந்தனர்.

ஆகவே, பாக்கிஸ்தான் காமன்வெல்த்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருப்பதானது ஒன்றை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நாடு பெரிய நாடுகளின், அவற்றிற்கெல்லாம் மேலாக வாஷிங்டனின் அரசியல் மற்றும் மூலோபாய மதிப்பிற்கு பாத்திரமாகிறதோ, அந்த நாட்டுத் தலைவரை ''ஜனநாயகவாதி'' என்பார்கள். இல்லை என்றால் ''சர்வாதிகாரி'' என்று கண்டிப்பார்கள்.

Top of page