World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Georgia: Tensions increase between Abkhazia and Tbilisi

ஜோர்ஜியா: அபிகாசியா மற்றும் திபிலிசி இடையே பதட்டங்கள் அதிகரிக்கிறது

By Simon Whelan
22 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜியா குடியரசிலிருந்து பிரிந்து சென்ற அபிகாசியாவிற்கும் (Abkhazia) FHLCJTM (Tbilisi) உள்ள சாக்காசிவிலி ஆட்சிக்கும் இடையே தற்போது நேரடி இராணுவ மோதல் நடக்காவிட்டாலும் சொற்போர் நடந்து கொண்டிருக்கிறது. திபிலிசியில் உள்ள மத்திய அரசாங்கம் அட்ஜாரியாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவுடன் அபிகாசியா அதிகாரிகளைச் சரிகட்டுவது அல்லது அச்சுறுத்துவது என்ற மாற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தலைநகர் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சுக்குமியிலிருந்து (Sukhumi) திரும்பத் திரும்ப அபிகாசியா, அட்ஜாரியா அல்ல என்று வந்து கொண்டிருந்தாலும் திபிலிசியில் உள்ள புதிய அரசாங்கம் அது போன்ற காட்சியைத்தான் நடத்தி வருகிறது.

மே 19 ல் சமரச முயற்சிகள் தொடங்கின. ஜோர்ஜியாவின் சுதந்திர தினமான மே 26 ல், அபிகாசியன் மற்றும் தெற்கு ஒஸெடியன் (Ossetian) பிரச்சனையில் தீர்வு காண்பது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாக ஜனாதிபதி சாக்காசிவிலி அறிவித்ததோடு, சமாதான வழிமுறைகளில் ஜோர்ஜியா மறு ஐக்கியப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அதற்கு முதல் நாள் அபிகாசியா பிரதமர் ராகுல் கஜிம்பா (Raul Khajimba) தனது ஆட்சியின் நிலைப்பாடான தன்னாட்சியுரிமை அந்தஸ்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார். அபிகாசியா சுதந்திர நாடு என்ற அந்தஸ்து குடியரசின் அரசியல் சட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அதை விவாதத்திற்குட்படுத்த முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜோர்ஜியாவின் நாடாளுமன்ற அவைத்தலைவர் நினோ புஜநாட்சே (Nino Burjanadze) RIA Navosti என்ற செய்தி ஏஜென்ஸிக்கு பேட்டியளித்தபோது, சாக்காசிவிலி ''அபிகாசியா மோதலை சமாதான வழியில் தீர்த்துவைக்க தன்னால் முடிந்தவரை முயலுவார்'' என்று ''நல்ல போலீஸ்காரர்'' பாணியில் அறிவித்தார்.

''ஆனால் நாங்கள் முடிவில்லாமல் காத்துக்கொண்டிருக்க முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று அவைத்தலைவர் ''கெட்ட போலீஸ்காரர்'' வேடமிட்டு அறிவித்தார். மேலும், அபிகாசியாவின் பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்கு ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மே 15 மற்றும் 16 ல் ரூமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்ட்டுக்கு விஜயம் செய்த கொடுமைக்காரரான சாக்காசிவிலி மற்றொரு ''ரோஜாப் புரட்சி'' வருமென்று உறுதியளித்தார். இதனை சரியாக கூறுமிடத்து ''புரட்சி'' என்பதை சதிப்புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். அது அந்தக் கருங்கடல் குடியரசில் நிறைவேற்றப்படும். அபிகாசியாவில் ''புரட்சி'' மேகம் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

சாக்காசிவிலி, இந்தப் பதட்டங்களை சற்று அதிகமாக முற்றச்செய்யும் நோக்கில், இராணுவ சேவை என்றால் என்ன என்பதை அமைச்சர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தனது அமைச்சர்கள் இராணுவத்தில் சேரவேண்டும் என்று கட்டளையிட்டார். ஜோர்ஜியாவின் ஜனாதிபதி தன்னுடைய முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்று இராணுவத்தை உருவாக்குவது என்றும் அந்த நடவடிக்கை உயர்ந்த படைத்துறை அணிவகுப்பிலிருந்து (echelons) துவங்குமென்றும் அறிவித்தார். சென்றமுறை கட்டாய இராணுவ சேவையிலிருந்து நழுவிக்கொண்ட அமைச்சர்கள் இந்த முறை தங்களது அமைச்சரவை பொறுப்புக்களை துணை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு மூன்று மாதங்களுக்கு படைப் பிரிவுகளுடன் (reservists) பயிற்சி பெற வேண்டும் என்றும் அறிவித்தார்.

ஜோர்ஜியா அரசாங்கமானது இரண்டு உறுப்பினர் கூட்டாட்சி அரசு (two-member federation state) என்ற கருத்தை உலவவிட ஆரம்பித்திருக்கிறது. இந்த மோதல் தொடர்பான ஏப்ரல் மாத அறிக்கையில் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னன் ''மந்தமான முன்னேற்றம்'' என்று குறைபட்டுக் கொண்டதோடு, தனது பிடிவாதத்தை கைவிடுமாறும் அபிகாசியன் தரப்பை கேட்டுக்கொண்டார்.

சாக்காசிவிலியிடம் ''மீண்டும் நாடு பிடிக்கும் செயற்திட்டத்தை'' வாஷிங்டன் வடிவமைத்து நிதியுதவி செய்து தூண்டிவிட்டிருக்கிறது என்று மொஸ்கோ டைம்சில் சலோ ஆர்னோல்ட் என்பவர் எழுதியுள்ளார். இது, தெற்கு காக்கஸஸ் பகுதிக்குள் ரஷ்யாவின் செல்வாக்கை நேரடியாக அச்சுறுத்துவதாக அமைந்திருக்கிறது. அபிகாசியா, தெற்கு ஒசெட்டியா மற்றும் சற்று குறைந்தளவிற்கு அட்ஜாரியா ஆகியவை ஜோர்ஜியாவிற்குள் மாஸ்கோவின் மிச்சமுள்ள புவியியல் செல்வாக்கு முனைகள் ஆகும். அட்ஜாரியாவில் உள்ள பாட்டூமியில் அல்சன் அபசிட்ஸ் (Alsan Abashidze) உடைய ஆட்சியை கவிழ்த்தவுடன் அபிகாசியா பிரதிநிதி ஒருவர் மொஸ்கோ வந்து, அபிகாசியாவின் கொடோரிப் (Kodori) பள்ளத்தாக்கின் மேல்பகுதியில் ரஷ்யத் துருப்புக்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். எனெனில் அந்த மண்டலத்தில் தான் ஜோர்ஜியாவின் துருப்புக்கள் காலூன்றி உள்ளன.

ஜோர்ஜியா மண்ணில் அமெரிக்கத் துருப்புக்கள் நுழையாது என்ற உறுதிமொழியை சாக்காசிவிலியிடமிருந்து பெற்றுக்கொண்டதன் விளைவாக, ஜோர்ஜியா பிரச்சனையில் அண்மையில் கிரெம்ளின் விட்டுக்கொடுக்கும் போக்கில் நடப்பதாக சில விமர்சகர்கள் ஊகிக்கின்றனர். அந்த ஊகம் சரியாக இருக்கலாம், என்றாலும் அதே விமர்சகர்கள் அபிகாசியா மற்றும் தெற்கு ஒசெட்டியா தொடர்பாக கிரெம்ளின் திட்ட செயல்பாடு குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

இந்த வாரத் தொடக்கத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு சபை செயலாளர் இகோர் இவாநோவ், ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவின் உறவுகள் குறித்தும் அதன்மூலம் அபிகாசியாவின் நிலைகுறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

ரஷ்யாவிலிருந்து ஜோர்ஜியாவிற்குள் செச்செனியா கிளர்ச்சிக்காரர்கள் புகுந்து விடாது தடுப்பதற்காக எல்லையில் ஜோர்ஜியா மற்றும் ரஷ்ய துருப்புக்கள் தற்போது கூட்டாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பன்கிசி (Pankisi) பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிற செச்செனியா அகதிகள், தங்களை ஜோர்ஜியா போலீசார் அதிகளவில் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தோன்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர். இது விடயமாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினும், சாக்காசிவிலியும் இலையுதிர் காலத்தில் சந்திக்கவிருக்கின்றனர்.

சென்ற வாரம் ரஷ்யாவின் அரசாங்க பாதுகாப்பு தலைமை அதிகாரியான கிவி அரக்பா என்பவர், அபிகாசியா இனம் வாழ்கின்ற கலி (Gali) பகுதியில் புகுவதற்கு திட்டமிட்டு வருவதாக ஜோர்ஜியா அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினார். அத்தோடு, ஜோர்ஜியாவின் சுதந்திர தினத்தன்று ஜோர்ஜியாப் படைகள் தாக்குதலில் இறங்கக்கூடும் என்று அபிகாசியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொடோரி பள்ளத்தாக்கு நிலவரத்தை மிக நெருக்கமாக கண்காணிக்குமாறு ஐ.நா தலைமை இராணுவ கண்காணிப்பாளரான மேஜர் ஜெனரல் Kazi Ashfaq Ahmed ஐ அபிகாசியா அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அபிகாசியா எல்லைப் பகுதி ஜோர்ஜியா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்ததன் மூலம் அபிகாசியாவின் தலைநகரான சுக்குமி (Sukhumi) மீது எளிதாக முன்னேறிச்சென்று தாக்குதல் நடந்துவதற்கு வழி கிடைத்துவிடும் என்று இராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஜோர்ஜியா துருப்புக்கள் அந்த பிராந்தியத்தில் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன என்று கூறி கலி மாவட்டத்தில் அபிகாசியன் அதிகாரிகள் மேலும் தமது துருப்புக்களை அனுப்பியுள்ளனர். கலி மாவட்டத்தில் 60,000 ஜோர்ஜியா இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடையே கிளர்ச்சியை உருவாக்கி, இந்தப் பிராந்தியத்தில் தலையிட்டு இறுதியாக சுக்குமியிலுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு திபிலிசி (Tbilisi) திட்டமிடுவதாக சுக்குமி குற்றம் சாட்டியுள்ளது.

இத்துடன், தெற்கு ஒசெட்டியா துருப்புக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளன. ஜோர்ஜியா சுதந்திர நாளை பயன்படுத்தி அந்த பிராந்தியத்தின் மீது படையெடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். சுக்கிமியை போன்று தெற்கு ஒசெட்டியாவின் அதிகாரிகளும் தங்களது எல்லையில் அட்ஜாரியா பாணியில் தீர்வு காண்பதற்கு வழியில்லை என்று கூறுகின்றனர்.

அபிகாசியா ஜோர்ஜியாவின் வடமேற்கு முனையில் அமைந்திருக்கிறது. அபிகாசியாவிலுள்ள கருங்கடல் கரையோர விடுதிகள் சோவியத் ஆட்சிக்காலத்தில் பிரபலமானவை. தற்போது ஜோர்ஜியாவைப் போன்று அபிகாசியாவின் பொருளாதாரமும் சிதைந்து கிடக்கிறது. மக்கள் தொகை 100,000 ஆக இருந்தபோதிலும், அதுவும் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. இந்தப் பகுதி அரசு என்று அபிகாசியா பாவணை காட்டிவந்தாலும் சுற்றியுள்ள பெரிய நாடுகளுக்கு, அதற்கெல்லாம் மேலாக ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளில், அது ஒரு விளையாட்டு மைதானமாக ஆகியுள்ளது. இந்த மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டு (passports) வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக இந்த மக்கள் ரஷ்ய அரசோடு சேர்ந்து கொள்ளலாம் என்று முன்பு கருதி வந்தார்கள். ஆனால், இப்போது அதற்கு ஆதரவு குறைந்து மீண்டும் ஜோர்ஜியாவோடு இணைக்கப்படுவதற்கு ஆதரவு பெருகிவருகிறது.

1993 ம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான போரில் ஜோர்ஜியாப் படைகள் விரட்டப்பட்டபோது ஆயிரக்கணக்கான அபிகாசியா இனத்தவர்களும், ஜோர்ஜியர்களும் கொல்லப்பட்டனர். இரண்டரை லட்சம் ஜோர்ஜியா இன அகதிகள் இந்தக் குடியரசிலிருந்து விரட்டப்பட்டனர். 1994 ல் அபிகாசியா சுதந்திரப் பிரகடனம் செய்தபோதும், இதுவரை எந்த ஒரு நாடும் அதை அங்கீகரிக்கவில்லை. ஜோர்ஜியா பொருளாதாரத் தடையை சமாளித்து வருகிறது. ஆனால் ரஷ்யா சுக்கிமியுடன் ரயில்வே தொடர்புகளை திரும்பவும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல்களை ஐ.நா இராணுவ கண்கானிப்பாளர்களும், ரஷ்ய அமைதிகாப்பு படைகளும் கண்காணித்து வருகின்றன. இரண்டு மோதல்கள் நிறைந்த இடைத்தடை (Buffer) மண்டலங்களில் ஐ.நா படைகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இங்கொன்றும், அங்கொன்றுமாக மோதல்களும், ஆட்களை கடத்துவதும் நடந்து கொண்டிருப்பதால், இந்த நிலவரம் மேலும் மோசமடையும் நிலைக்கு தள்ளப்படும்.

Top of page