World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington installs new puppet regime in Baghdad

பாக்தாத்தில் புதிய பொம்மை ஆட்சியை வாஷிங்டன் அமைத்தது

By Peter Symonds
3 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் முதலாம் தேதி செவ்வாய் கிழமையன்று பாக்தாத்தில் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஈராக்கின் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமெரிக்க ஜனாதிபதி புஷ் ''ஜனநாயகத்திற்கு நெருங்கிவரும் ஒரு படி'' என உடனடியாக அறிவித்தாலும், அந்தக்கூற்று மோசடி என்பதை நியமிக்கப்பட்ட முறையானது எடுத்துக்காட்டுகின்றது. ஈராக்கின் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகள், அமைச்சர்கள் அனைவரும் இரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் தலைமை நிர்வாகி போல் பிரேமர், ஐ.நா சிறப்புத்தூதர் Lakhdar Brahimi -ன் உதவியோடும் ஒத்துழைப்போடும் ஈராக்கிய ஆளும் குழுவிலிருந்து (IGC) வாஷிங்டன் பொறுக்கி எடுத்த அடிவருடிகளுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்

பிரேமர்-ன் கூட்டணி இடைக்கால ஆணையத்தோடு (Coalition Provisional Authority -CPA) நெருக்கமான உறவு கொண்டுள்ள வர்த்தகர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய குறுகிய வட்டத்திற்குள்ளிலிருந்து அனைத்து புதிய நியமனமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குள்ள முதன்மை தகுதி சட்டவிரோத மற்றும் கொடூரமான அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பை ஆதரிப்பது மற்றும் தாங்கி நிற்பதும்தான். ஜூன் 30-ல் ''முழு இறையாண்மை'' வழங்கப்படவிருக்கும் இந்த புதிய பொம்மை ஆட்சியை முடிவு செய்வதில் மிகப்பெரும்பாலான ஈராக் மக்களுக்கு எந்தவிதமான பங்குமில்லை என்பதை சொல்லத்தேவையில்லை.

இடைக்கால அரசாங்கம் பதவியேற்ற சூழ்நிலையே பொதுமக்கள் முன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தகுதியில்லாதது என்பதை விளக்கிக் காட்டுகிறது. CPA -வின் கடுமையான பாதுகாப்பிற்குட்பட்ட பசுமை- மண்டல (Green Zone) தலைமை அலுவலகங்களில் இந்த பதவியேற்புவிழா நடைபெற்றது. மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 400- ஈராக் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்தான் விழாவிற்கு அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் கனரக ஆயுதந்தாங்கிய அமெரிக்க மற்றும் ஈராக்கிய துருப்புக்கள், காவலுக்கு நின்றன. மோப்பநாய்கள், எங்காவது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தன. அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அந்தக் கட்டடத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எவராவது உள்ளே நுழைவதற்கு முயற்சித்தால் சுடுவதற்கு தயாராக நின்றனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தும் பல்வேறு குண்டுவெடிப்புக்களுக்கு நடுவில்தான் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அருகாமையிலுள்ள அமெரிக்கா ஆதரவு குர்து கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் மூன்றுபேர் கொல்லப்பட்டனர். குறைந்த பட்சம் ஐந்து பீரங்கி குண்டுகள் பசுமை- மண்டலத்தில் விழுந்தன. ஒரு குண்டு அமெரிக்க மாநாட்டு மையத்திற்கருகில் விழுந்ததில் அந்தச்சுவர்கள் அதிர்ந்தன, வெண் புகை விண்ணில் எழுந்தது.

''அல் கொய்தா பயங்கரவாதிகள்'' மற்றும் ''பாத்திஸ்டுகளில்'' மிச்சம் மீதியிருப்பவர்களது செயல் இது என்று வழக்கமாக புஷ் நிர்வாகம் கூறிவருவதற்கு மாறாக, இடைக்கால அராசங்கத்தைவிட அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ந்துகொண்டிருக்கும் கிளர்ச்சிக்கு ஈராக் மக்களிடையே தெளிவாக ஆதரவு அதிகம் உள்ளது. பல அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுக்காக ஈராக் மக்களிடையே கருத்துக்கணிப்புக்களை நடத்துகின்ற ஆராய்ச்சி மையம் தந்துள்ள தகவலின்படி, சென்ற அக்டோபருக்கும் ஏப்ரல் மாதத்திற்குமிடையே அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் ஈராக்கை விடுவிக்க வந்தவரல்ல என்று கருதுகின்ற ஈராக் மக்களின் எண்ணிக்கை 43- சதவீதத்திலிருந்து 88-சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது. உடனடியாக அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதே காலத்தில் 17- சதவீதத்திலிருந்து 57-சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்கா தலைமையில் வந்த ஆக்கிரமிப்புப்படைகளுக்கு மிகப்பெரும் அளவில் எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வந்ததால் புஷ் நிர்வாகம் ஐ.நா-வையும் அதன் பிரதிநிதி பிராமி-யையும் உதவிக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடைக்கால அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு சர்வதேச சட்ட அங்கீகார முகமூடியை வழங்குவதற்காக பிராமி அழைக்கப்பட்டார். ஆனால் வாஷிங்டன் முடிவுகளை தெளிவாகக் கட்டளையிட்டது. இந்த நியமன முறை இப்படி தாறுமாறான தன்மை கொண்டதாக அமைந்திருந்தாலும் ஐ.நா பொது செயலாளர் கோபி அன்னான் உடனடியாக தனது ஆசியை அதற்கு வழங்கினார்.

பதவிகளை வழங்குவதில் இறுதிவரை அரசியல் பேரங்கள் மற்றும் நிலைப்பாடுகள் மின்னாற்றல் செல்வதுபோல் நடந்தேறின. சென்ற வெள்ளிக்கிழமை முக்கிய நிர்வாக பதவியான பிரதமர் பதவிக்கு உரியவர் பெயர் அறிவிக்கப்பட்டது. ஈராக்கிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்த Ayad Allawi- ஐ பிரதமராக்குவதற்கு IGC உடன்பட்டது. அவர் நீண்டகாலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்புக்களோடு தொடர்பு கொண்டிருந்தவர், ஆனால் பெரும்பாலும் அலங்காரப்பதவியான ஜனாதிபதி பொறுப்பில் யாரை நியமிப்பது என்பதில் தகராறு நீடித்தது. ஈராக்கின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தூதரகத்துறையில் மிகுந்த அனுபவமுள்ளவருமான Adnan Pachachi- ஐ நியமிக்க வேண்டுமென்று பிரேமரும், பிராமியும் வலியுறுத்தினர். அதே நேரத்தில் IGC தனது உறுப்பினர்களில் ஒருவரான Ghazi Ajil Al -Yawar- ஐ வலியுறுத்தியது.

இந்தத் தகராறு மீதமுள்ள பதவிகளுக்கு உரியவர்களை தேர்ந்தெடுப்பதைத் தாமதப்படுத்தியது. அமெரிக்கப் படையெடுப்பை ஆதரித்து நிற்கும் பல்வேறு அரசியல் அமைப்புக்கள் மற்றும் போட்டி இனக்குழுக்கள், ஆகியவற்றிற்கு பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் கம்பிமேல் நடப்பதைப்போன்று கவனமாக அரசியல் சமன்பாட்டு நிலையை உருவாக்கி வந்தார்கள். ஞாயிறன்று IGC வாக்கெடுப்பை விரும்பினால் Yawar நியமனத்தை இரத்துசெய்யும் தனது அதிகாரத்தை பயன்படுத்தபோவதாக பிரேமர் மிரட்டினார். இந்தத் தகராறு திங்களன்று நீடித்தது. செவ்வாய்க்கிழமை காலையிலும் தொடர்ந்தது. இறுதியாக Pachachi ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் IGC எதிர்ப்பை சுட்டிக்காட்டி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார். Yawar ஒரு சுன்னி முஸ்லீம் அவருக்கு அந்தப்பதவி தரப்பட்டது. இரண்டு துணை ஜனாதிபதிகள் பதவிகளும், ஷியாக்களை அடிப்படையாகக் கொண்ட Dawa Islam- கட்சி முன்னணித் தலைவர் Ibrahim Jofari-க்கும், குர்திஸ்த்தான் நாடாளுமன்ற தலைவரும் குர்திஸ்தான் ஜனநாயகக்கட்சி (KUP) உறுப்பினருமான Rosh Shawais- ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டன.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு Yawar தெரிவித்த ''ஆட்சேபனைகள்'' பற்றி ஊடகங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. என்றாலும் அவரது விமர்சனங்கள் அனைத்துமே ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தந்திரத்தன்மை கொண்டதாகவே அமைந்திருக்கிறது. Allawi -யைப்போன்று இவரும் முன்னாள் பாத்திஸ்ட் ஆட்சியின் பாதுகாப்பு அமைப்புக்களையும், இராணுவத்தையும், கலைத்துவிட வாஷிங்டன் முடிவு செய்தது தொடர்பாக விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். ஆனால் நியமிக்கப்பட்டுள்ள மற்றவர்களைப் போல் இவருக்கும் புதிய ஆட்சி இராணுவ அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் முழுமையாக அமெரிக்காவையே நம்பியிருக்கிறது. என்பது தெளிவாகவே தெரியும். Yawar ஒரு பொறியாளர், அவருக்கு சவுதி அரேபியாவிலும், அமெரிக்காவிலும் தொடர்புகள் உண்டு. அவர் இரண்டு நாடுகளிலுமே படித்தவர். சவுதி அரேபியாவில் அவருக்கு வர்த்தக அக்கறைகள் உண்டு, அங்கு அவர் ஒரு டெலிகாம் கம்பெனியை நடத்துகிறார்.

ஒரு துணைப் பிரதமர் தேசிய பாதுகாப்பிற்காக நியமிக்கப்பபட்டிருக்கிறார் மற்றும் 31- அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலாச்சார அமைச்சராக தனது பதவியைத் தக்க வைத்திருக்கும் ஈராக்கிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த (ICP) Mufid Mohammad Jawad al- Jazairi உட்பட அனைவருமே அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அடிபணிந்து செல்பவர்கள் என்ற சாதனை படைத்தவர்கள். ICP-ஐ சேர்ந்தவர் பண்பாட்டுத்துறை அமைச்சராக தனது பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உருவாகும் எதிர்ப்பை நசுக்குவதற்கு பழைய பாத்திஸ்ட் பாதுகாப்பு அமைப்புக்களில் ''முக்காபரத்'' என்ற படுமோசமான புலனாய்வு சேவை உள்பட, பழைய பாத்திஸ்ட் சக்திகளுக்கு பதவி தரவேண்டும் என்ற Allawi -யின் கருத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு முக்கிய பாதுகாப்பு பதவிகள் ஒதுக்கப்பட்டன. உள்துறை அமைச்சாரக நியமிக்கப்பட்டுள்ள Falah Hassan சதாம் ஹூசைன் ஆட்சியின் கீழ் பணியாற்றிய முன்னாள் துணை தலைமை தளபதி ஜெனரல் Hassan Al Naqib- ன் புதல்வர் ஆவார்.

''முழு- இறையாண்மை''

மீதமிருக்கும் பதவிகளில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எண்ணெய் அமைச்சகம். அந்த அமைச்சகம் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அமெரிக்கா உறுதி செய்துகொண்டிருக்கிறது. புதிய எண்ணெய் அமைச்சர் Thamir Ghadbhan, பிரிட்டிஷ் இல் பயிற்சி பெற்ற முன்னாள் ஈராக் அதிகாரி ஆவார். அமெரிக்கா தலைமையிலான சீரமைப்பு மற்றும் மனித நேய உதவி அலுவலகத்தில் எண்ணெய் அமைச்சகத்தின் ''தலைமை நிர்வாகியாக'' சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் எண்ணெய் தொழிலில் தலைமை வகித்து புஷ் நிர்வாகத்தின் சார்பில் எண்ணெய் அமைச்சகத்தை கண்காணித்துவந்த Royal Dutch/ Shell முன்னாள் அமெரிக்க தலைமை நிர்வாகியான Phillip Carroll- உடன் நெருக்கமாக பணியாற்றி வந்தவராவர்.

ஈராக்கில் வாஷிங்டனின் முதன்மை குறிக்கோள்களில் ஒன்றாக இருப்பது அந்த நாட்டின் பரவலான எண்ணெய் வளத்தின்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதாகும். ஜூன் 30-ந்தேதி "முழு இறையாண்மை" கொண்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான பிரதான காரணம், அந்த ஆட்சி சட்டபூர்வமாக எண்ணெய் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். OPEC என்கிற பெற்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் ஈராக்கின் பிரதிநிதியாக பங்கெடுத்துக் கொள்ள முடியும். தனியார் மயமாக்குவது மற்றும் முதலீடுகள், உட்பட இதர நிதி தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். இந்த பொருளாதார சூறையாடலுக்கு இடைக்கால அரசு தேவைப்படுகின்ற முகமூடியை தரமுடியும்.

Allawi -யின் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்காவின் சுட்டுவிரல் அசைவிற்கே கட்டுப்பட்டு ஆகவேண்டும். அமெரிக்காவும், பிரிட்டனும், ஐ.நா -பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம் இந்தக் கபட நாடகத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் தருவதை நோக்கமாகக் கொண்டது. அமெரிக்கா தலைமையிலான இராணுவப்படைகள் அந்த நாட்டில் நீடித்திருக்கவும், ஈராக் பாதுகாப்புப் படைகள் அமெரிக்க இராணுவ தலைமையின் கீழ் இயங்கவும், பொருளாதாரம் குறிப்பாக எண்ணெய் தொழில் அமெரிக்க மேற்பார்வையில் இயங்கவும் அந்த வரைவு தீர்மானம் உறுதிசெய்கிறது.

சீனா, பிரான்ஸ், மற்றும் ரஷ்யாவின் விமர்சனங்களுக்கு பதில் தருகிற வகையில் மேலெழுந்தவாரியாக மேல் பூச்சு போன்ற சில திருத்தங்களை வாஷிங்டன், பிரிட்டன், தங்களது உத்தேச தீர்மானத்தில் கொண்டு வந்திருந்தாலும், அடிப்படைகள் மாறாமல் அப்படியே உள்ளன. இடைக்கால அரசாங்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் "இடைமருவு அரசாங்கத்திற்கான" தேசிய தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்யும். அந்தத் தேர்தல்கள் மூலம் உருவாகும் அரசாங்கம் அரசியல் சட்டத்தை உருவாக்கும் மற்றும் "நிரந்தர அராசங்கத்தை" உருவாக்குவதற்காக 2005-ல் இறுதிவாக்கில் பொதுத்தேர்தலை நடத்தும்.

முதலாவது வரைவு தீர்மானத்தைப் போல் அல்லாது, திருத்தப்பட்ட தீர்மானம் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கான ஐ.நா கட்டளை 2005- டிசம்பர் 31-ல் முடிவடையும் என்கிறது. ஆனால் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைஸ் நேற்று குறிப்பிட்டிருந்ததைப்போல் கட்டளை நீடித்திருப்பதற்கு, அதனைப் புதுபித்துக்கொள்ள முடியும். தீர்மானத்தில் 2-வது திருத்தம் கற்பனையான மாற்றம் - ஈராக் இடைக்கால அரசாங்கம் தனது கட்டளையை முடித்துக்கொள்ளுமாறு ஐ.நா வைக் கேட்க முடியும் என்பது. அது நடைபெறுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் வாஷிங்டனும் லண்டனும் தீர்மானங்களை இரத்து செய்கிற அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றன.

பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் மேலும் மாற்றங்கள் தேவையென்று அறிவித்திருந்தாலும் தீர்மானத்திற்கு குறிப்பாக சவால் விடுகிற நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. அந்த விவாதத்தில் ஈராக் மக்களின் அடிப்படை உரிமை குறித்து மூச்சு விடவில்லை. அதற்கு மாறாக பிரான்சு, சீனா, ரஷ்யா, மற்றும் இதர அரசுகள் மத்திய கிழக்கில் தங்களது சொந்த நலன்களை பாதுகாக்க முயன்று வருவதுடன், ஈராக் பொருளாதாரத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று கோருகின்றன.

அகற்றப்பட்ட சதாம் ஹூசைன் ஆட்சிக்கு கணிசமான கடன்களை வழங்கியிருக்கிற பிரான்சு மற்றும் இதர நாடுகளுக்கு உள்ள கவலைகளில் ஒன்று அந்தக் கடன்கள்தான் என்று பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட எக்கனாமிஸ்ட் சுட்டிகாட்டியுள்ளது. ''Allawi அரசாங்கத்திற்கு மிகவும் கவலை தருகிற மற்றொரு தகராறுக்குரிய பிரச்சனை நாட்டின் வெளிநாட்டுக் கடன்களில் எவ்வளவு தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான், ஈராக்கின் தேசிய கடனில் 80- முதல் 90-சதவீதத்தை இரத்துசெய்துவிட அமெரிக்கா சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரான்சு 50- சதவீத கடன்களை மட்டுமே இரத்து செய்யவேண்டும் என்று கூறிவருவதாகக் கூறப்படுகிறது'' என்று அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.

ஐ.நா- பாதுகாப்பு சபை விவாதங்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஈராக் நிர்வாகத்தின் பெரும்பகுதியையும் பொருளாதாரத்தையும், அமெரிக்கா ஏற்கனவே இடைக்கால அரசியல் சட்டத்தின் மூலமும், CPA இயற்றியுள்ள சட்டங்களின் மூலமும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது. ஜூன் 30-க்கு பின்னர் CPA கலைக்கப்பட்டுவிடும், ஆனால் உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க தூதரகத்தை நிலைநாட்டி, அதிலுள்ள ஏராளமான அதிகாரிகள் மூலம் அமெரிக்கா தனது செல்வாக்கை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டிருக்கும். அத்துடன் 110-முதல் 160- அமெரிக்க ஆலோசகர்கள் ஈராக் அமைச்சரவைகளில் இணைக்கப்பட்டு அவற்றின் நடவடிக்கைகளுக்கு கட்டளைகளை பிறப்பிப்பர், மற்றும் கண்காணிப்பர், டிசம்பர் 2005-வரையிலான காலத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, தனது நீண்டகால நலன்களை -பொருளாதார மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம்- உறுதிசெய்துகொள்ள அமெரிக்கா கருதுகின்றது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த Zbignew Brezezinski முழுமையான இறையாண்மையை ஈராக்கிற்கு தருவதாக புஷ் -நிர்வாகம் கூறுவதன் அபத்தத்தை தனது கருத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். Brezezinski அமெரிக்க ஆளும் வட்டாரங்களிலுள்ள மற்றவர்களைப் போன்று ஈராக் தோல்வியால் அமெரிக்க நலன்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கவலை கொண்டிருக்கிறார். ''முழு இறையாண்மை'' என்ற வார்த்தை நம்பகத்தன்மை இல்லாதது என்று அவர் கூறுகிறார். ''எந்த ஒரு நாடும் அந்த நாட்டை ஒரு வெளிநாட்டு இராணுவம் பிடித்துக் கொண்டிருப்பது நீடிக்கும் வரை முழுமையான இறையாண்மை பெற்றதாக ஆகாது. நமது அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட 1,40,000- துருப்புக்கள் அங்கிருக்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார். ஈராக்கில் புதிய அரசாங்கத்தை அந்நாட்டு மக்கள் எப்படி கருதுவார்கள் என்பது பற்றி கருத்துத் தெரிவித்த அவர் ''பெயருக்கு இறையாண்மையை தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஈராக்கியர் வசம் ஒப்படைப்பதை -அந்த நாடு இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில்- இறையாண்மை கொண்ட அரசாங்கம் என்பதை இராஜத்துரோகம் செய்யும் அரசாங்கம் என்றே மக்கள் கருதுவார்கள்'' என்று குறிப்பிட்டார்.

வாஷிங்டன் புதிய காலனியாக்கத்தை ஈராக்கில் நிலைநாட்டுவதற்கு ஐ.நா உடந்தையாக செயல்படுவது அந்த அமைப்பு, பெரிய நாடுகளின் சூழ்ச்சி குகைதான், மனித இனத்தின் பெரும்பான்மையினரது உரிமைகளை, நலனை முன்னேற்றுவதல்ல என்பதை கோட்டிட்டுக்காட்டுகிறது. ஈராக்கிய மக்களின் நியாயமான ஜனநாயக, கண்ணியமான வாழ்க்கைத்தர எதிர்பார்ப்புகளை ஐ.நா சபையின் மூலம் நிறைவேற்ற முடியாது. ஈராக்கிய மண்ணிலிருந்து எல்லா வெளிநாட்டு துருப்புக்களும் உடனடியாக நிபந்தனை எதுவுமில்லாமல் வெளியேறுவதுதான் ஈராக் மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அவசியமான முன் நிபந்தனையாகும்.

Top of page