World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's new government signs up for US "war on terrorism"

இலங்கையின் புதிய அரசாங்கம் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்துடன்" ஒன்றிணைகிறது

By K. Ratnayake
9 June 2004

Back to screen version

இலங்கையில் ஏப்பிரல் 2 தேர்தலை அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய அதன் வரையறுக்கப்பட்ட விமர்சனங்களை கைவிட்டுள்ள அதே வேளை, அது "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" ஆதரவளித்தல் என்ற போர்வையில் புஷ் நிர்வாகத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குகிறது.

வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உட்பட ஒரு தொகை விடயங்கள் பற்றி சிரேஷ்ட அமெரிக்க அலுவலர்களுடன் ஒரு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக மே நடுப்பகுதியில் வாஷிங்டனுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டார். ஈராக்கினுள் பரந்தளவிலான அமெரிக்க விரோத எழுச்சியும் மற்றும் ஈராக்கிய கைதிகள் மீதான திட்டமிடப்பட்ட அமெரிக்க சித்திரவதைகள் பற்றிய அம்பலப்படுத்தல்களும் இடம்பெற்ற சமயத்திலேயே கதிர்காமர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும், அவர் அமெரிக்க கொள்கைகள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் செய்யவில்லை.

மாறாக, புரூகிங்ஸ் நிலையத்தில் கதிர்காமர் உரையாற்றும் போது புஷ் நிர்வாகத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். "செப்டெம்பர் 11க்கும் நீண்டகாலத்திற்கு முன்னதாகவே இலங்கை பயங்கரவாதத்திற்கு இலக்காகிவந்துள்ளது. இப்போது அது உலகம் அறிந்த விடயம். பயங்கரவாதத்தின் கொடுமைகளையிட்ட உங்களுடைய மனவேதனைகளை நாமும் பகிர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவை உலகம் முழுவதும் மெச்சுகிறது. நாம் அமெரிக்காவின் நிரந்தர நண்பர்களாக இருப்போம்," என அவர் தெரிவித்தார்.

இலங்கை, அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" வழங்கும் ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, கொழும்பு அரசியல் நிறுவனம் வழமையாகவே "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்திவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதில் அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றது. வாஷிங்டன், விடுதலைப் புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நெருக்கிவருகின்றது. கொழும்பு அரசாங்கம் தன்னுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு தள்ளுவதற்காக புஷ் நிர்வாகத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.

கதிர்காமரின் கருத்துக்கள், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) பக்கம் ஒரு பெரும் மாற்றத்தை பிரதிபலிக்கவில்லை. 2001ல் அவரது முன்னைய ஆளும் கூட்டணியான பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை வெளியேற்றுவதற்காக தனது முழு ஆதரவையும் கொடுத்தது. இது ஐம்பது வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தலையீடாகும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமெரிக்காவிற்கு விமானத்தள மற்றும் துறைமுக வசதிகளை வழங்குவதற்கு தனது தயார் நிலையை பிரகடனப்படுத்தியது.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட சமயம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இருக்கவில்லை. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் யுத்தத்திற்கு சந்தேகத்திற்கிடமற்ற ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது ஐ.தே.மு வின் நிலைப்பாட்டை தொகுத்துரைத்தார். ஐ.நா வை குற்றம்சாட்டுவதன் மூலம் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமைப்பை நியாயப்படுத்திய அவர், "ஐக்கய நாடுகள் சபையின் தோல்வி" வாஷிங்டனுக்கு ஒரு "உலக பொலிஸ்காரனைப் போல்" "தலையீடு செய்வதைத் தவிர வேறு தேர்வுகள் இல்லாத நிலைமையை தோற்றுவித்துள்ளது எனப் பிரகடனம் செய்தார்.

குமாரதுங்கவோ அல்லது "இடதுசாரி" பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ சரி அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பையும், அதை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட பொய்களையும் அல்லது இந்த எண்ணெய்வள நாடு மீதான சட்டவிரோதமான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பையும் கண்டனம் செய்யவில்லை. யுத்த விரோத எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்வதன் பேரில், குமாரதுங்க சில எச்சரிக்கைகளை வெளிப்படுத்தியதோடு விக்கிரமசிங்கவையும் விமர்சித்தார். சில ஸ்ரீ.ல.சு.க தலைவர்கள் யுத்த விரோத எதிர்ப்புகளிலும் இணைந்துகொண்டனர்.

எவ்வாறெனினும், குமாரதுங்கவின் நிலைப்பாடானாது எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் ஐ.நா. வின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் எனும் பிரான்சினதும் ஜேர்மனியினதும் அழைப்பிற்கு ஆதரவளிப்பதோடு வரையறுக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரியில் கோலாலம்பூரில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய போது: "ஐ.நா அமைப்பின் அங்கீகாரமின்றி ஒரு இறைமையுடைய நாட்டை ஆக்கிரமிப்பது இலங்கையின் நிலைப்பாடு அல்ல," எனப் பிரகடனப்படுத்தினார். அவரது உரையில், அமெரிக்கா பற்றியோ அல்லது ஈராக்கிலான அதன் திட்டங்கள் பற்றியோ குறிப்பிடுவதற்குக் கூட தவறிவிட்டார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து குமாரதுங்க இந்த முணுமுணுப்பு விமர்சனங்களைக் கூட கைவிட்டுவிட்டார்.

எவ்வாறெனினும், குறிப்பிடத்தக்க வகையில், சுதந்திரக் கூட்டமைப்பில் ஸ்ரீ.ல.சு.க வின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அரசாங்கத்தின் நிலைப்பாட்டையிட்டோ அல்லது அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்துவதையிட்டோ எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. 1960ல் சிங்கள பேரினவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தின் ஒரு கலவையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஜே.வி.பி, இன்னமும் சில சந்தர்ப்பங்களில் "ஏகாதிபத்திய விரோதியாக" காட்டிக்கொள்வதோடு மற்றும் அடிக்கடி ஊடகங்களில் "மார்சிச" அமைப்பாகவும் விபரிக்கப்படுகிறது.

ஜே.வி.பி, அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, யுத்ததிற்கு தனது எதிர்ப்பை பிரகடனப்படுத்தியதோடு பிரான்சையும் ஜேர்மனியையும் சமாதானத்தின் வல்லுனர்கள் என புகழ்ந்தது. ஆனால், புஷ் படையெடுப்பை பிரகடனப்படுத்திய பின்னரும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈராக்கிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதை ஏற்றுக்கொண்டதை அடுத்தும் ஜே.வி.பி "எதிர்ப்பு" மங்கிப்போனது.

இப்போது, ஸ்ரீ.ல.சு.க முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஜே.வி.பி, அரசியல் நிறுவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் யுத்த விரோத வாய்வீச்சுக்கள் சம்பிரதாய சொற்பொழிவுகளுக்காக விதிவிலக்கற்று ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு இராணுவங்கள் ஈராக்கைவிட்டு "வெளியேற வேண்டும்" என்பது ஜே.வி.பி யின் இந்த வருட மேதினக் கூட்டத் தீர்மானங்களில் ஒன்றாக இருந்த போதிலும், சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அத்தகைய கொள்கைக்கு அடிபணிய வேண்டும் மற்றும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கோரும் எண்ணம் அந்தக் கட்சிக்கு கிடையாது.

அமெரிக்க இலங்கை இராணுவ உறவுகள்

சுதந்திரக் கூட்டமைப்பு சொற்களில் மாத்திரமன்றி செயலிலும் பிராந்தியத்திலான வாஷிங்டனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றது. புதிய அரசாங்கமானது வாஷிங்டனுடனான இராணுவ உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முன்செல்கின்றது. இது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்புக்கு வசதியளிக்கும். இலங்கைத் தீவானது முக்கிய கடல் மார்க்கங்களைச் சார்ந்திருக்கும் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் விசேடமாக தெற்காசியாவிலான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு வசதியான தேவை நிரப்பும் மையமாக விளங்கும் இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கின்றது.

கதிர்காமரின் விஜயத்தின் போது, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆமிடேஜ், அமெரிக்காவின் மூலோபாயத்திற்கு இலங்கையில் அதிகரித்துவரும் முக்கியத்துவம் பற்றி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சமிக்ஞை செய்தார். "எல்லா விவகாரங்களிலும் இலங்கையின் உதவி பெறப்படும்.... பயங்கரவாதம் மீதான யுத்தம் பற்றிய விடயத்தில்," என அவர் விவரிக்காமலே பிரகடனம் செய்தார்.

ஐ.தே.மு அரசாங்கம், அமெரிக்க யுத்தக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எண்ணெய் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய சேவைகளுக்குமாக இலங்கையில் உள்ள தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதற்காக பாவனைக்கும் பரிமாற்றத்திற்குமான உடன்படிக்கை (Access and Cross Servicing Agreement -ACSA) ஒன்றைப் பற்றி அமெரிக்காவுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை தொடங்கிவிட்டது. கதிர்காமர் வாஷிங்டனில் இருக்கும்போது, பிராந்தியத்தில் ஒரு விரிவான அமெரிக்க இராணுவ தேவை நிரப்பு வலையமைப்புக்கான திட்டத்தின் பாகமாக விளங்கும் இத்தகைய உடன்படிக்கையுடன் முன்செல்வதற்கு சுதந்திரக் கூட்டமைப்பின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டினார்.

மே 23 சண்டே ஐலண்ட் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர், புதிய அரசாங்கம் ஏ.சி.எஸ்.ஏ உடன் துரிதமாக முன்செல்லும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார். இந்த உடன்படிக்கை "அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் வசதிகளை வழக்குவதற்கும் மேற்பட்டதாகும். அந்த வசதிகளை நாம் இப்பொழுதும் கூட கொண்டிருக்கின்றோம்," என அவர் விளக்கினார்.

2002ல் பிலிபைன்ஸால் கைச்சாத்திடப்பட்ட இது போன்ற ஒரு உடன்படிக்கை அமெரிக்காவின் கோரிக்கையின் அளவு என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறது. இராணுவ அணிவகுப்பு மற்றும் உதவி உடன்படிக்கையானது, படைவீரர் தங்குவதற்கு வசதியளிப்பது போன்ற அடித்தள சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் வைத்திய சேவை உட்பட, விரிவான தேவை நிரப்பு மற்றும் களஞ்சிய வசதி போன்றவற்றை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குகிறது.

சுதந்திரக் கூட்டமைப்பு ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்பாத போதிலும், இலங்கை தற்போது "அமைதிகாக்கும்" படைக்கு அமெரிக்க அனுசரனையிலான ஒரு பயிற்சி முகாமை நடத்துகிறது. முதற்தடவையாக, பங்களாதேஷிய, நேபாள மற்றும் மொங்கோலிய துருப்புக்கள் தெற்காசிய அமைதிகாக்கும் முன்நடவடிக்கையின் ஆதரவின் கீழ் தீவின் தெற்குப் பகுதியில் ஒரு இரகசியமான இருப்பிடத்தில் கூட்டு காலாட்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்கிலி (Jane's Defence Weekly) பத்திரிகையின் அண்மைய வெளியீட்டில், இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல: "ஆரம்பத்தில், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு, நாம் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடவேண்டிவரும். பின்னர், எங்களால் சமாதான அமுலாக்கத்திற்கு செல்லமுடியும்," என குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்கள், இலங்கை அமெரிக்காவின் பூகோளம் முழுவதும் கொள்ளையிடும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிசெய்ய தயாராகின்றது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது --இவை அனைத்தும் அமைதிகாத்தல் என்ற போர்வையிலேயே இடம்பெறுகின்றன.

அமெரிக்கா இலங்கை இராணுவத்தில் நீண்ட தலையீடு செய்துள்ள வரலாற்றைக் கொண்டுள்ளது. இதில், இலங்கையின் விசேட படைப் பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பதும் அடங்கும். ஆயினும் இந்த அபிவிருத்திகள், சுதந்திரக் கூட்டமைப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவை அமைப்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதிர்காமர் அமெரிக்காவில் இருக்கும் போது, அமெரிக்க கடற்படை இலங்கைக்கு விற்கவுள்ள கடற்கரை பாதுகாப்பு கப்பலையும் பார்வையிட்டார். பென்டகனும் மே மாதத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க அனுசரனையிலான கோப்ரா கோல்ட் கூட்டு இராணுவப் பயிற்சியை பார்வையிட இலங்கைக்கு அழைப்புவிடுத்திருந்தது.

இலங்கை, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு வெளிப்படையாக எதிர்ப்பதோடு எல்லா வெளிநாட்டு துருப்புக்களையும் உடனடயாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோருமானால், இந்த அனைத்தும் இயல்பாகவே சாத்தியமற்றதாகிவிடும் --இது குமாரதுங்கவும் ஸ்ரீ.ல.சு.க வும் மற்றும் ஜே.வி.பி.யும் செய்யவிளையாத ஒன்று.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved