World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

An exchange on Bolshevism and revolutionary violence

போல்ஷிவிசம் மற்றும் புரட்சியில் வன்முறை பற்றி ஒரு கருத்துப்பரிமாற்றம்

27 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்ய புரட்சி, போல்ஷிவிக்குகள் மற்றும் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலா மற்றும் அவருடைய குடும்பம் மரணதண்டனைக்குட்படுதல் பற்றி, வாசகர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு எழுதிய கடிதத்தையும், பீட்டர் டானியல்ஸ் அதற்குக் கொடுத்த பதிலையும் கீழே பிரசுரிக்கிறோம்.

அன்புள்ள WSWS,

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி போன்ற மார்க்சிசவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை, பிரெஞ்சுப் புரட்சியின் அற்பமான தீவிரவாத கட்சியான மத்தியதரவர்க்க Mountain இன் முன்னணிப் படையுடன் ஒப்பிடுகிறார்கள். என்னுடைய தாழ்ந்த கருத்தில், ஜாக்கோபின் குழு, பிரெஞ்சு மக்கள் மீது கொடூரமான செயல்களைப் புரிந்தனர்; பிரான்சில் இருந்த ஆஸ்திரிய விலைமாதையும் (ஏதோ ஒரு வகையில் அவள் இழிந்தவள்தான் என்றிருந்தாலும்), அவளுடைய நிரபராதியான மகனையும் கொன்றமை போன்றவை தேவையற்ற செயல்கள். வரலாற்று மனிதர்களான தத்துவமேதை-கொலைகாரர் மாரட் (Marat) குளியல் தொட்டியிலேயே கொலைசெய்யப்பட்டமை மற்றும் திரு. ஊழல்படுத்தப்படமுடியாதவர் (Mr. Incorruptible) தலைதுண்டிக்கப்பட்டது போன்றவற்றிற்கு தகுதியாகவே அவர்கள் இருந்தனர்.

லெனின் விளக்கியவாறு, போல்ஷிவிக் மரபு உண்மையான பாட்டாளி வர்க்க தலைமை ஜாக்கோபின் கட்சியை ஒத்திருந்தது என்று கூறுகிறது, அதில் அவை இரண்டும் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில் இரண்டு வித்தியாசமான புள்ளிகளில் மிகமுற்போக்கான வர்க்கத்தை பிரதிபலித்தது. அதில் ஒன்று, மூலதனத்தின் எழுச்சியின்போது நகரத்திலும் நாட்டுப்புற ஏழைகளையும் மற்றொன்று, சோசலிசத்தின் தோற்றத்தின் போது தொழில்துறை தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் தீவிரமயப்படுத்தப்பட்ட விவசாய பிரிவினரையும் பிரதிபலித்தது. ஆனால், ஜாக்கோபின்களின் மாதிரியான புரட்சிகர பயங்கரத்தன்மையிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில், லெனின் பிராவ்தாவில் எழுதிய கட்டுரை ஒன்றில், ஒரு நல்ல உதாரணத்தைப் பின்பற்றுதல் என்பது அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பின்பற்ற வேண்டும் என்பதல்ல, குறிப்பாக சில கருவிகளை பயன்படுத்தும்போது (கில்லட்டின் கொலை இயந்திரங்கள், பரந்த அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகள் போன்றவை) அவ்வாறில்லை என்று கூறியுள்ளார். இக்கருத்தில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறும் பாசாங்கை காண்கிறேன், ஏனென்றால் உள்ளூர் போல்ஷிவிக்குகளும் ஜாரையும் அவரது குடும்பத்தையும் கொன்றனர். ஈவிரக்கமற்ற ரஷ்ய பிற்போக்காளர்களின் தூண்டுதலால் நடைபெற்றன என்று மற்றவர்கள் பயங்கரத்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டனர். ஆனால் இது உள்ளூர் போல்ஷிவிக்குகள் ஜாரையும் அவருடை குழந்தைகளையும் கொன்றதற்கு மன்னிப்பளிக்க முடியாததாகும்.

நீங்கள் இதை "Richard Pipes" அல்லது "Robert Conquest" உடைய சீற்றம் போல் கண்டிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்; மேலும் புரட்சியில் வன்முறையைப்பற்றி வரலாற்று உள்ளடக்கத்திலும், இன்றைய பின்னணியிலும் உங்கள் கருத்து என்ன என்றும் கேட்க விரும்புகிறேன். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, துப்பாக்கி வழிபாட்டை மாவோயிச குப்பை என்று உதறித்தள்ளியுள்ளதை நான் அறிவேன்; ஆனால் ஒரு தொழிலாளர் அரசாங்கம் பின்னடைவிலிருந்து எப்படிக் காத்துக்கொள்ள முடியும்? நான் ஒரு இடதுசாரி, என்னை ஒரு புதிய மார்க்சிசவாதியாகத்தான் கருதிக்கொள்ளுகிறேன்; (எனக்கு வயது 17தான், இருந்தபோதிலும், டோனி கிளிவ் (Tony Cliff) உடைய அரசு முதலாளித்துவ கருத்தாய்வு, ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒட்டுண்ணி/ அதிகாரத்துவ கருத்தாய்வுடன் ஒப்பிடப்படும்பொழுது எனக்கு சிறிது உளைச்சல் இருக்கிறது. ஆனால், இவ்வாறான தற்கொலைகளை மன்னிப்பதற்கு எனது தீவீரவாதம் போதாது. போல்ஷிவிக் தலைமை, தமது உரிமைகளை விட்டுக்கொடுக்காத குழுக்களின் (Maximalist league) "சீரழிந்த வர்க்கங்களை" எவ்வாறு நடத்துவது என்ற கருத்துக்களோடு விளையாடிற்றோ என்றும் தோன்றுகிறது. சோல்ஜெனிட்சின் (Solzheintsyn) லெனினுடைய "போட்டியை எவ்வாறு ஒழுங்கமைப்பது" என்பதில் இருந்த சில பகுதிகளை மேற்கோளிட்டு, ஸ்ராலின் தன்னுடைய ஒட்டுண்ணிப் பிற்போக்கு ஆட்சியில் காட்டிய அதே இரக்கமற்ற போக்கைத்தான் வெளிப்படுத்தியிருப்பார் என நிரூபிக்கிறார்.

எனவே, போல்ஷிவிக்குகள் ஜாரையும் அவர் குடும்பத்தினரையும் கொன்றது ஒழுக்கநெறி அற்றது என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களா அல்லது லெனின் உத்தரவை அனுப்பவில்லை என்று மறுக்கிறீர்களா அல்லது (George Bernard Shaw கூறுவது போல்) சோசலிச ஆட்சி ஒன்று தீய சக்திகளை, உகந்த முறையில் அகற்றிவிட்டால் அது சரிதான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

அல்லது இது ஒரு முக்கியமற்ற விடயம் என்று விட்டுவிடுவீர்களா; ஏனென்றால், வரலாறு ஒருநாள் மார்க்சிச-லெனினிசப் பிரிவின் தவறிழைக்கும் போக்குகள் அனைத்தையும் மன்னித்து அதை தூய்மைப்படுத்தி விடக்கூடும். (ஸ்ராலினிசத்தில் செய்தது போல், அவர்களுடைய குற்றம் இல்லை, உள்நாட்டுப்போர், சோசலிசம் விஸ்தரிக்கப்பட முடியாமல் போனமை, அதிகாரத்துவத்தின் வளர்ச்சி, இடது எதிர்ப்பை நசுக்கியமை, இதுபற்றி நான் அதிகம் படிக்கவேண்டும், என்பது போன்ற செயல்கள் அனைத்தும், சோசலிச நிகழ்ச்சிப்போக்குடனான மோதலில் பரந்த விவசாயிகள் திரண்டு நின்ற புறநிலை காரணிகள் அல்ல, அகநிலைக் காரணிகளின் காரணமாக என்று கூறப்பட்டது போல்).

உண்மையுடன்,

HF

* * *

அன்புள்ள WSWS வாசகரே,

உலகசோசலிச வலைத்தளத்திற்கு நீங்கள் சமீபத்தில் எழுதிய கடிதத்திற்கு நன்றி. உங்களுடைய கேள்விகளுக்கு சுருக்கமாகப் பதிலளிக்கிறேன்.

நீங்கள் இரண்டு பெரிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளீர்கள். முதலில், பிரெஞ்சுப் புரட்சியில் ஜாக்கோபின் தலைமையின்மீது குற்றஞ் சாட்டியிருக்கிறீர்கள்; இரண்டாவதாக இரண்டாம் ஜார் நிக்கோலா, அவருடைய குடும்பம் கொலையுண்டது போல், அதேபோன்ற "பயங்கரமான" வன்முறைச் செயல்களை போல்ஷிவிக்குகளும் புரிந்து, குற்றத்திற்குரியவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளீர்கள்.

இந்த இரண்டு முடிவுகளுடனுமே எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஜாக்கோபின்களை பற்றிய உங்கள் கருத்து, அருவமானதும், வரலாற்றுரீதியற்றதும் ஆகும். காலம் கடந்துவிட்ட சமுதாய முறையின் கொடூரத்தன்மைக்கும், நசுக்கும் தன்மைக்கும் அடையாளமாக இருந்த மேரி அந்துவானெட் (Marie Antoinette) போன்றோரின் விதியைப்பற்றி நாம் முக்கியத்துவம் வழங்கத்தேவையில்லை; அந்த அமைப்புமுறையை எதிர்க்க தேவையாக இருந்த வரலாற்றுப் போராட்டம் பற்றியதாக இருக்கவேண்டும். வரலாற்றுச் சான்று இதில் தெளிவாக உள்ளது. போராட்டம் ஜாக்கோபின்களால் தலைமை ஏற்கப்பட்டது. நம்முடைய நோக்கம், ஏன், எவ்வாறு அவர்கள் அந்தப் பங்கைப் புரிந்தனர் என்பதைப் புரிந்து கொள்வதாககத்தான் இருக்கவேண்டும்.

ஜாக்கோபின்கள் அக்காலகட்டத்தில் மிகுந்த, தொடர்ச்சியான புரட்சிகரப் போக்கை பிரதிநிதித்துவம் செய்தனர் என்ற உண்மையை அறிவதற்கு, அவர்கள் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும், 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர்களுடைய தீவிர சமத்துவக் கொள்கையினால், பிரெஞ்சுப் புரட்சியின் அதிரடி முன்னணிப்படை என்ற பங்கை அவர்களை கொண்டு, அப்பொழுது இருந்த எழுச்சி பெற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் அப்போதைய புரட்சிகர தன்மையை தமக்குள்ளே உள்ளடக்கியருந்தனர்.

இறுதியில், முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்றளவிலான வரம்புகளை ஒட்டியே, இவர்களுடைய பங்கும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எழுச்சியாகிக் கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கம், புரட்சிக் காலகட்டத்தின் பொழுது எழுப்பப்பட்ட தீவிர சமத்துவ கருத்துருக்களிலிருந்து பின்வாங்க தலைப்பட்டது. அவர்களுடைய பங்கிற்கு, ஜாக்கோபின்கள் எதிர்வரவுள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருந்தது என்ற இடதுபுறத்திலிருந்தும் மற்றும் கூடுதலான முற்போக்கு சமத்துவ, சக்திகளினால் விமர்சிக்கப்பட்டனர். புரட்சியில் உச்சக்கட்டத்திற்கு பின்னர், முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துடன் ஜாக்கோபின்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.

அத்தகைய வரலாற்று ஒப்புமையின் இன்றியமையாத வரம்புகள் இருந்தபோதிலும், லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ஏனைய போல்ஷிவிக்குகளும் தங்களை ஜாக்கோபிய மரபினராக கொண்டிருந்தனர். அக்டோபர் புரட்சியின் விரோதிகளான காடேட் தலைவர் மிலியுகோவ் (Miliukov) இதனை பின்வருமாறு ஒப்புக்கொண்டதை ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகின்றார், "போல்ஷிவிக்குகள் எங்கு தாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவர், தேர்ந்தெடுத்திருந்த அந்த திசையில், வெற்றியளிக்காத சமரசவாத சோதனை இருந்தும், இலக்கை நோக்கி அருகில், சென்றவண்ணம் இருந்தனர். இன்னும் நியாயத்தோடு, ஜாக்கோபின்களைப்பற்றி... கூறப்பட்டதையும் சேர்த்து போல்ஷிவிக்குகளைப் பற்றி சொல்லலாம். அவர்கள் அந்தச் சகாப்தத்திற்கும், அதன் பணிகளுக்கும் போதுமானவர்களாக இருந்தனர்."

நீங்கள் கூறுவதுபோல், ஜாக்கோபின்களை பற்றி, லெனினுடைய கருத்துக்கள் பாசாங்குத்தனத்தை கொண்டிருக்கவில்லை. ஜாக்கோபின்களின் ஒவ்வொரு செயலுக்கும் அவர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று கிடையாது; மேலும் பிந்தைய காலத்தில் ஜாக்கோபின்களின் "இரத்தவெறி" என்று பாசாங்குத்தனமாக பின்விளைவைக் குறைகூறியதிலும் அவர் சேர்ந்ததில்லை. போல்ஷிவிக்குகள் உண்மையான மார்க்சிசவாதிகள் என்ற முறையில், தனிநபர் பயங்கரவாதம் மற்றும் அமைதிவாதம் இரண்டையுமே எதிர்த்தனர். குறிப்பிட்ட திட்டவட்டமான நிலைமைகளில் வன்முறையின் தேவையைப் பற்றி அவர்கள் உறுதியாக அறிந்திருந்தனர். பின்னர், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார் ''எந்த ஆளும் வர்க்கமும் தானாக முன்வந்து அமைதியாக அதிகாரத்தை துறந்ததில்லை. 1789லும், 1917லும் இவ்வாறுதான் இருந்தது''.

போல்ஷிவிக் பயங்கரம் "ரஷ்ய பிற்போக்காளர்களின் இரக்கமற்ற தன்மையினால் தூண்டப்பட்டது", ஆனால் இரண்டம் நிக்கோலா ஜார் கொலையோடு அதற்குத் தொடர்பில்லை என்று நீங்கள் கூறும்போது, இல்லாத ஒரு செயலில் வேறுபாட்டை காண்கிறீர்கள். ஜார் மன்னரும் அவர் குடும்பமும் கொலை செய்யப்பட்டமை, தன்னுடைய உயிர் தப்புதலுக்கு எல்லா பக்கத்திலும் பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவத்தினால் ஆதரிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான விரோதிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த பொழுது, புரட்சியின் திணிக்கப்பட்ட அதிதீவிர நடவடிக்கையாகும்.

ரஷ்ய புரட்சியின் மாபெரும் வரலாற்றாசானும் அதன் இணைத் தலைவருமான ட்ரொட்ஸ்கி, இந்த மரணதண்டனைக் காலத்தில், 1918 கோடைகால நிலைமைகளைப்பற்றி, தன்னுடைய வாழ்க்கை நூலான எனது வாழ்க்கையில் (My Life) விவரிக்கிறார்: "போருக்குப் பின் நடப்பவை அனைத்தும் அப்பொழுதுதான் தங்கள் தன்மையைப் புலப்படுத்தி நின்றன.... முற்றிலும் நம்பிக்கையற்று, பொருளாதாரத்தில் முற்றிலும் வலுவிழந்து, பெரும் களைப்படைந்து, முற்றிலும் பேரழிவிற்குட்பட்டிருந்த ஒரு நாடு ஒரு புதிய ஆட்சியை ஆதரித்து அதன் சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு சக்தியை கொண்டிருந்தது குறித்து ஒருவர் வியப்படையலாம். உணவு கிடையாது, இராணுவம் கிடையாது, இரயில்வேக்கள் முற்றிலும் சீர்குலைந்திருந்தன, அரசாங்க இயந்திரம் அப்பொழுதுதான் உருவாகிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட வண்ணம் இருந்தன."

1918-ன் நடுப்பகுதியில் செம்படையை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்தான் தோன்றியிருந்தன. எதிர்ப்புரட்சிகர சக்திகளோ, தங்கள் பிரச்சாரங்களை நன்கு முடுக்கிவிட்டிருந்தன; ஏகாதிபத்திய தலைநகரங்களான வாஷிங்டன், லண்டன், பாரிஸ், பேர்லின், டோக்கியோ போன்றவை இவற்றிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பது அதிகரித்துக் கொண்டிருந்தது. ஜப்பானியர்கள் சைபீரியாவை தாக்கி, விளாடிவாஸ்டோக்கை ஆக்கிரமித்திருந்தனர். ஜேர்மனியர்கள் உக்கிரேனில் பெரும்பகுதியையும், கிரிமியா, கருங்கடல், அசோவ் கடல் பகுதியோரங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர் Murmansk ல் இறங்கியிருந்தனர்.

ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசிற்கு எதிராகப் போரிட ஆர்வம் மிகுந்திருந்த சிறைக்கைதிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த Czech Legion வீரர்கள், ஜேர்மனிக்கு திருப்பியனுப்பப்பட இருக்கின்றனர் என்ற வதந்திகளைக்கேட்டு, புதிய சோவியத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தலைப்பட்டனர். கடற்படை தளபதி கோல்ச்சாக்கின் கூட்டுத் தலைமையில் வெண் படையினர் (White Guards) உடன், செக்கோஸ்லாவாக்கிய வீரர்கள் பொது நோக்கத்தடன் இணைந்து, சமாரா, உபா, சிம்பிர்ஸ்க், எக்கார்டன்பேர்க் (Ekaterinburg) உள்ளிட்ட மத்திய ரஷ்யாவின் பெரும்பகுதிகளில் ஆக்கிரமித்திருந்ததன் மூலம் இப்படைகள் புரட்சிக்கு நேரடியான அச்சுறுத்தலைக் கொண்டிருந்தன.

எக்கார்டன்பேர்க் என்ற இடத்தில்தான் ஜாரும் அவர் குடும்பத்தினரும் காவல் முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கட்டம் வரை, போல்ஷிவிக்குகள் அரச குடும்பத்திற்கு எதிராக பொதுப்படையான முறையில்தான் நடந்து வந்திருந்தனர். ஜார் மன்னரை ஓர் புரட்சிகர நீதிமன்றம் மூலம் விசாரணைக்கு உட்படுத்துவதாக திட்டங்கள் இருந்தன. செக்கோஸ்லாவாக்கியர்களும், கோல்ஷாக்கும் ஒரு புதிய, ஆபத்தான நிலைமையை ஏற்படுத்திவிட்டனர். இரண்டாம் நிக்கோலசும் அவருடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டு, அவர்கள் எதிர்ப்புரட்சிகர சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படக்கூடும் என்ற காரணமும் பயமும் நியாயமாக ஏற்பட்டன. ட்ரொட்ஸ்கி, பின்னர் எழுதியது போல, "உள்நாட்டுப்போர் முன்னணி, மாஸ்கோவின் கழுத்தைச்சுற்றி இறுகும் சுருக்குக் கயிறு போல், மேலும் மேலும் வலுவுற்றது." எனவே, ஜாரையும், அவர் குடும்பத்தினரையும் மரணதண்டனைக்கு உட்படுத்தும் முடிவு எடுக்கப்படலாயிற்று.

ஏப்ரல் 1935ல் தன்னுடைய நாட்குறிப்பில், ட்ரொட்ஸ்கி ஜாரின் தலைவிதியைப்பற்றி விவரித்துள்ளார். உள்நாட்டுப்போர் மிக நெருக்கடியான கட்டத்தில், அவர் போர்முனையில் இருந்தபோது அது நடந்தது. மாஸ்கோவிற்குத் திரும்பிய பின்னர், இந்த முடிவு லெனின் தலைமையில் போல்ஷிவிக்குகளால் எடுக்கப்பட்டது என்பதை இவர் அறிந்தார். "இந்த முடிவு உடனடியாக எடுக்கப்படவேண்டியது மட்டுமில்லாமல், தேவையானதும் ஆகும்." என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். "உடனடி நீதி கடுமையாக வழங்கியது, உலகத்திற்கு நாங்கள் தொடர்ந்து இரக்கமின்றிப் போராடுவோம், எதற்கும் துணிந்துள்ளோம் என்பதைக் காட்டியது. ஜார் குடும்பம் கொலைசெய்யப்பட்டது, எதிரிகளை பயமுறுத்தவும், கொடூரத்தைக் காட்டவும், எதிரியின் மனத்தளர்வுக்காவும் மேற்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், எங்கள் அணிகளுக்கும் ஓர் உலுக்கலாக இருந்து, இனி பின்வாங்கப் போவதில்லை, நமக்கு முன்பு முழுவெற்றி அல்லது முழு அழிவுதான் என்பதைக் காட்டுவதற்கும் தேவையாயிற்று."

இத்தகைய புரட்சிகர பயங்கர நடவடிக்கைகள் வரலாற்றில் இப்பொழுதான் முதல்தடவையாக தேவையானதாக இருக்கவில்லை. மற்றும் மார்க்சிசவாதிகள் சமரசத்திற்கிடமின்றி, எதிர்ப்புக்காட்டும், தனி நபர் பயங்கரவாததத்திற்கும் இச்செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்நாட்டுப் போர்ச் சூழ்நிலையில் சில சமயம் அசாதாரண நடவடிக்கைகள் தேவை. போல்ஷிவிக்குகளுடைய கருணையற்ற நடவடிக்கைகள் இல்லாவிட்டால், கணக்கிலடங்கா சோக விளைவுகள் தொழிலாளர், விவசாய மக்களுக்கு இழைத்திருக்கக் கூடும் என்பதுடன், எதிர்ப்புரட்சிகர சக்திகள் வெற்றி பெற்றிருக்கவும் கூடும்.

அமெரிக்கா உட்பட எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் புரட்சியை அதன் பிறப்புடனேயே கழுத்தை நெரித்துக் கொன்று விடவேண்டும் என்று உறுதிகொண்டிருந்த ஒரு எதிர்ப்புரட்சிகர சதியை போல்ஷிவிக்குகள் எதிர்த்துப் போராடிவந்தனர். இம்முறையில், 1864ல் ஆப்ரகாம் லிங்கன் தலைமையில் ஜெனரல் ஷேர்மன் ஜோர்ஜியாவைக் கடந்து, திட்டமிட்டு, ஈவிரக்கமற்று அழித்தலில் ஈடுபட்டு கூட்டிணைவின் (ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்நாட்டுப் போரில் விலகிப் போன பதினோரு நாடுகளின் கூட்டமைப்பு) படைகளை மனம் தளர்வுறச்செய்யவும் அழிக்கவும் செய்த செயலில் இருந்த "ஒழுக்க நெறியற்ற தன்மையை விட" அதிக அளவு போல்ஷிவிக்குகள் செய்யவில்லை.

இதில் தொடர்புடைய வேறு ஒரு பிரச்சினையும், 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளும் உண்டு. நீங்கள் Aleksandr Solzhenitsyn, என்னும் இழிவான, தேசியவெறி, கம்யூனிச எதிர்ப்பு உடைய, ஜார் பேரரசு நாட்களைப்பற்றிய இனிய நினைவுகளை கொள்ளும் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவர், லெனினுடைய புரட்சிகர நடவடிக்கைகளை, ஸ்ராலினின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுடன் சமப்படுத்திப் பேசுகிறார். உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்குகளுடைய செயல்கள் நியாயப்படுத்தப்படும் தன்மையுடையவை போலும் என்றால், ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகளும் அவ்வாறுதான் என்று, ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா மாஸ்கோவில் ஸ்ராலினிச ஆட்சிக்கு வக்காலத்து வாங்கிய கருத்தை சுருக்கி உரைத்ததின் மூலம், நீங்களும் அதனை உட்குறிப்பாகக் கூறுகிறீர்கள்.

இந்தக் கருத்தும், வர்க்கப் போராட்டத்தில் மற்றும் புரட்சியின் தர்க்கத்தில் இருக்கவேண்டிய ஒழுக்க நெறிக்கு மாறாக, அருவ ரீதியான ஒழுக்கநெறி ஆய்வுகளின் தன்மையில், வரலாற்றுரீதியற்ற முறையிலிருந்து விளைந்த அணுகுமுறையாகும். புரட்சிக்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள் அனைவரும், போல்ஷிவிசத்தின் தர்க்கரீதியான பின்விளவுதான் ஸ்ராலினிசம் என்று கூறுகிறார்கள். இத்தகைய கருத்து, ஜார் மன்னர் கொலைசெய்யப்பட்டதற்கும், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்கும் அடிப்படையில் வேறுபாடு ஒன்றுமில்லை என்றும், ஸ்ராலினிச ஆட்சியினால், கிட்டத்தட்ட முழு போல்ஷிவிக் தலைமையும் பொய்ப் புனைவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டதை நியாயம் என்றும் கூறும் பிற்போக்கான முடிவுக்கே வழிவகுக்கும்.

தன்னுடைய இறுதிக்காலத்தில் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையிலும் ஸ்ராலினிசமும், போல்ஷிவிசமும் ஒன்று என்ற அவதூற்றினை, தளராது அரசியல் முறையில் அம்பலப்படுத்தியதானது ட்ரொட்ஸ்கி மார்க்சிசத்திற்காக செய்த முக்கியமான பங்களிப்புக்களில் ஒன்றாகும். இந்த அம்பலப்படுத்தல், தேசியவாத சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடாத்திய கொள்கைவழிப் போராட்டத்தின் மிக முக்கியமான கூறுபாடு ஆகும். இறுதி ஆய்வில், ஏகாதிபத்தியத்தின் முகவர்போலச் செயல்பட்ட ஸ்ராலினிசத்திற்கு எந்தச் சலுகைகளும் கொடுக்காமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், முதலாளித்துவத்தின் பிற்போக்கிற்கு எந்தச் சலுகைகளையும் கொடுக்காமல், ஸ்ராலினிசத்தையும் எதிர்த்து உறுதியாகப் போராடியது ட்ரொட்ஸ்கிசம் ஆகும். குறிப்பாக 1937-38ல் ட்ரொட்்ஸ்கி எழுதிய ஸ்ராலினிசமும் போல்ஷிவிசமும் (Stalinism and Bolshevism), அவர்களது ஒழுக்கநெறிகளும் நமதும் (Their Morals and Ours) என்ற இரு சிறு வெளியீடுகளையும் படிக்குமாறு உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

போல்ஷிவிசத்திலிருந்து, "ஸ்ராலினிசம்" உருவாகியது, அது போல்ஷிவிசத்தின் தர்க்கரீதியான விளைவு அல்ல, அதன் எதிர்ப்புரட்சிகர எதிர் போக்காக ஆகும். ஜாரிசத்தின் பங்கைப் பற்றிய உண்மையை போல்ஷிவிக்குகள் எடுத்துக்கூறி, புரட்சியை காப்பாற்ற மிகக் கருணையற்ற நடவடிக்கைகள் எடுத்திருந்தபோது, ஸ்ராலினிஸ்டுகள், ஒரு புதிய ஆளும் அடுக்கான சோவியத் அதிகாரத்துவத்திற்காக புரட்சிகரத் தலைவர்களை பொய்ப்புனைவு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கினர், அது புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் அழிவுதரும் குரோதமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் பாரிய நிகழ்வுகள் பற்றிய WSWS ன் நிலைப்பாட்டை, மேற்கூறியவை விளக்கியுள்ளன எனக் கருதுகிறேன். நீங்கள், ஸ்ராலினிசத்திற்கெதிரான போராட்டம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பிரதான எழுத்துக்கள் உட்பட இந்தக் கருத்தைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

WSWS ஆசிரியர் குழுவிற்காக,

பீட்டர் டானியல்ஸ்.

Top of page