World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Marines pull back from Fallujah: a debacle for American imperialism

கடற்படையின் நிலப்படைப்பிரிவினர் பல்லூஜாவில் இருந்து வெளியேறல்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நெருக்கடி

By Patrick Martin
4 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பல்லுஜா நகரத்தை முற்றுகையிட்டிருந்த கடற்படையின் நிலப்படைப் பிரிவினரை, அங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று புஷ் நிர்வாகமும், பென்டகனும் எடுத்த முடிவு, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு ஒரு பேரழிவு தரும் பின்னடைவு ஆகும். நகரத்தில் வேரூன்றியுள்ள எழுச்சிக்கு எதிராக வீட்டிற்கு வீடு மோத வேண்டும் என்ற நிலையை எதிர்நோக்கியதால், நகரத்தை மீண்டும் அரசியல், இராணுவ முறைகளில் பழையபடி பொறுப்பேற்றுக் கொள்ளுதல் பெரும் சுமையாகிவிடும் என்ற வெளிப்படையான முடிவிற்கு அமெரிக்க அரசாங்கம் வந்து விட்டது.

கடற்படையின் நிலப் படையினரை திரும்பப் பெற்றுக்கொள்ளுதல் என்ற அறிவிப்பு முதலில் ஏப்ரல் 29 வியாழன் அன்று வெளிவந்தது, அவ்விடத்தில் இருந்த பெரும்பாலான கடற்படை தளபதிகள் அவர்கள் பல்லூஜாவை காவல் காக்கும் பொறுப்பு பழைய ஈராக்கிய தளபதிகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது எனக் கூறியதை அடுத்து அறிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் அந்நகரவாசிகள் ஆவர். பொறுப்பேற்றுக்கொண்ட தளபதிகள் கடந்த ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒட்டி ஈராக்கிய இராணுவம் கலைக்கப்பட்டபோது, பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அப்பொழுது, அமெரிக்கா தேர்ந்தெடுத்திருந்த ஈராக்கிய இராணுவத்தில், சதாம் ஹுசைனின் கீழ் மிகப் பெரிய பொறுப்புக்களில் இருந்ததாலும் அவர்கள் பாத் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மீண்டும் வேலை கொடுக்கப்படவில்லை

சுன்னி முஸ்லிம் "பல்லூஜா பாதுகாப்பு இராணுவம்" நிறுவப்பட்டுள்ளது சிறப்புப் பிரிவினர் நகரத்தை முழு அளவில் தாக்குவதற்கு மாற்றாக அளிக்கப்பட்ட திட்டம் ஆதலின், ஒரு மாத காலப் போராட்டத்திற்கு பின் பல்லூஜாவில் வந்துள்ள இந்த நடவடிக்கை அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பிற்கு தைரியம் கொடுத்துள்ளது என்பதில் கேள்விக்கு இடம் இல்லை. நகரத்தில் இருந்து வரும் செய்தி ஊடக அறிக்கைகள், நகரவாசிகள் தெருக்களில் நடனமாடி மகிழ்ந்தனர் என்றும் கொரில்லா போராளிகள், கடற்படையின் நிலப்படைப் பிரிவினர் நகரத்தின் வடமேற்குப் பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டை கைவிட்டதை, தங்கள் வெற்றி என அறிவித்தனர் என்றும் தெரிவிக்கின்றன.

"போராளிகள் பல்லூஜா நகரத்தில் வண்டிகளில் வலம் வந்து, மக்கள் சந்தடியற்ற தெரு முனைகளில் கூடியபோது, நகரமக்கள் V என்பது வெற்றிக்கு என்ற அடையாளத்தைக் காட்டினர்; மசூதிகள் அமெரிக்கரின்மீது கொண்ட வெற்றியைச் செய்திகளாக ஒலி பெருக்கின. 'நாங்கள் வென்றுவிட்டோம்' என்று அபு அப்துல்லா, அப்துல்லாவின் தந்தை என்று தன் பெயரைக் கூறிக்கொண்ட ஒரு பழைய வீரரும் தற்போதைய போராளியுமான ஒருவர், 'நாங்கள் அமெரிக்கர்கள் நகரத்திற்கு வருவதை விரும்பவில்லை; அம்முயற்சியில் நாங்கள் வெற்றி கண்டுவிட்டோம்' எனக் கூறினார் என்று" வாஷிங்டன் போஸ்ட் தகவல் தந்துள்ளது.

Los Angles Times இடம் பேசிய நகரவாசி ஒருவர் இந்த எழுச்சியை, ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிரான மக்கள் புரட்சி என்று விவரித்தார். "ஆயுதம் ஏந்தக்கூடிய ஒவ்வொரு பல்லுஜா நகரவாசியும் இதில் பங்கு கொண்டனர். நாங்கள் அனைவரும் முஜாஹிதீன்கள். நாங்கள் வெளிப்படையாகவே போராட்டம் நடத்துகின்றோம். புதிய ஈராக்கிய தளபதியுடனும் அவருடைய மக்களுடனும் எங்களுடைய உறவு நல்ல முறையில் உள்ளது. அவர்கள் அமெரிக்கப் பீரங்கிவண்டியில் வரவில்லை. அவர்கள் எங்களுடைய பிள்ளைகள்." மசூதி வாயிலில் தொங்கவிட்டிருந்த அடையாளம் ஒன்றை, மக்கள் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதற்குச் சான்றாக Times உடைய நிருபர் மேற்கோளிட்டார். "நாங்கள் மகம்மதின் வீரர்கள்; சதாம் ஹுசைனின் வீரர்கள் அல்ல. நீங்கள் வாழ்வை நேசிப்பதுபோல் நாங்கள் மரணத்தை நேசிக்கிறோம்." என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

வீறாப்பிலிருந்து பின்வாங்கல்

பல வாரங்கள் அதிகரித்த அளவில் இரத்தத்தை உறையவைக்கும் அச்சுறுத்தல்களை கொடுத்தபின், புஷ் நிர்வாகம், தேவையானால் ஆயுதமேந்திய அனைவரையும் கொன்று இடைக்கால நிர்வாக சபையின் அதிகாரத்தை மீண்டும் நகரத்தில் நிலைநாட்டுவோம் என்று கூறியபின்னர், திடீரென கைவிட்டது. பிரிட்டிஷ் செய்தித்தாளான Guardian புஷ் நிர்வாகத்தின் ஒரு பிரிவு நகரத்தை "தரைமட்டமாக" ஆக்கவேண்டும் என விரும்பியதாகவும், மற்ற பிரிவுகள் அத்தகைய நடவடிக்கை ஈராக்கில் ஆட்சியை தொடரமுடியாமல் செய்துவிடும் என்றும், மற்ற அரபு நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சிகளுக்கு தூண்டுதலாக போய்விடும் என்றும் கருத்துத் தெரிவித்தனர் என தெரிவிக்கிறது.

ஏப்ரல் 24ம் தேதியன்று, பின்வாங்குவதற்கு ஐந்து நாட்கள் முன்பு, புஷ் தன்னுடைய காம்ப் டேவிட் ஒய்விடத்திற்குச் சென்று, உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒளிக்காட்சி முறைக் கூட்டம் (Videoconference) ஒன்றிற்குத் தலைமை தாங்கி, நகரத்தை பெரும் தாக்குதலுக்கு உட்படுத்துவது பற்றி விவாதித்தார். இந்தக் கூட்டத்தில் அத்தகைய தாக்குதல் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்க கடற்படையினர், ஈராக்கியப் பாதுகாப்புப் படைகள் இணைந்து சுற்றப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 27 அன்று தொடங்குவதாக இருந்து, பின்னர் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நகரத்தின்மீது பலமுறை போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களிலிருந்து வானவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 28 புதன் அன்று இறுதிவரை கூட, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பல்லூஜாவை, வியட்நாம் போரில் டெட் தாக்குதலுக்கு (Tet Offensive) ஒப்பிட்டுப் பேசி, அமெரிக்க இராணுவ தலையீடு ஒரு தோல்வி என்று அமெரிக்க மக்கள் கருதுவதை தடுக்கும் பொருட்டு, அதன் காப்பாளர்களை உயர்ந்த சக்தியினால் பூண்டோடு அழித்து, அந்த நகரத்தை ஓர் உதாரணமாக ஆக்குவது அவசியம் என்று அறிவித்தனர். "நாங்கள் உள்ளே நுழையும்போது, பெரும் குண்டு சக்தியுடன் சென்று மக்களைக் கொன்று குவிப்பதைக் காண்பீர்கள்" என்று ஒரு உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரி Los Angles Times இடம் கூறினார்.

மறுநாள், கடற்படையின் நிலப்படைப்பிரிவின் தளபதி டேவிட் கான்வேக்கும், ஈராக்கிய தளபதி குழு ஒன்றுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது, அதற்கு ஒரு நாள் பின்னர், ஏப்ரல் 30 அன்று, வெள்ளிக்கிழமை, முதல் ஈராக்கியத் தளபதி, பழைய மேஜர் ஜெனரல் ஜாசிம் மகம்மது சலே நகரத்தில் ஹுசைன் காலத்திய இராணுவச் சீருடையுடன் சில நூறு ஈராக்கிய தன்னார்வத் தொண்டர்களுடன், நுழைந்தபோது பெரும் ஆரவாரத்துடன் அவர் வரவேற்கப்பட்டார். முன்பு அமெரிக்கப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தின் சோதனைக்கூடங்கள் புதுப்படையினால் பொறுப்பேற்கப்பட்டு, "பாதுகாப்பு, உறுதி இவற்றிற்குப் பொறுப்பு ஏற்கும்" என்று கடற்படையின் நிலப்படை ஆணையகம் அறிவித்தது.

பல்லூஜாவில் கடுமையான போரை எதிர்கொண்டிருந்து, எழுச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றிய கட்டிடங்களில் இருந்துவந்த இரண்டு மரைன் பட்டாலியன்கள், அவற்றைக் கைவிட்டு, ஆங்காங்கே மூன்று வாரகாலத்திய முற்றுகையில் தங்களால் திடீரெனத் தோற்றுவிக்கப்பட்டிருந்த கோட்டைகளையும் தரைமட்டமாக்கிவிட்டனர். வார இறுதிக்குள் அவர்கள் தங்களுடைய முன்னணி நிலையில் இருந்து ஐந்து மைல்கள் பின்வாங்கி முகாம் இட்டனர், அமெரிக்க செய்தித் தொடர்பாளர்கள் இச்செயல்களை "மறு நிலைகொள்ளல்" என்று குறிப்பிட்டனர்.

குழப்பமும் முரண்பாடுகளும்

பல்லுஜாவிற்கு வெளியே இருக்கும் மரைன் தளபதிகளின் அறிவிப்புக்கள், பாக்தாதில் இடைக்கால நிர்வாக சபையிலிருந்து வருபவை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையிலிருந்து முறையே வரும் வேறுபட்ட அறிவிப்புக்கள், இவற்றுடன் தந்திரோபாயங்கள் மற்றும் கொள்கையில் விரைவான மாறுதல்கள் பெருமளவில் அவ்வப்பொழுது இருந்த நிலைமக்கு ஏற்றவாறு, ஒருங்கிணைக்கப்படாத முறையில் இருந்தனவோ எனத் தோன்றுகின்றன. ஹுசைனின் பழைய தளபதிகளுடன் உடன்பாடு கொள்ளுதலும், பல்லுஜாவின் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கும் முடிவும் எந்த மட்டத்தில் முதன் முதலாகக் கொள்ளப்பட்டது என்பது பற்றியும் தெளிவு இல்லை.

இந்தப் போரில் தீவிர ஆதரவாளரான Washington Post உடைய பகுப்பாய்வு, புஷ் நிர்வாகம் கிட்டத்தட்ட பெரும் பீதியில் இந்த முடிவைக் கொண்டிருந்தது எனக் கூறியுள்ளது. "உதாரணமாக, பல்லுஜாவின்மீது மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்காக, ஈராக்கின் பழைய தளபதிகளிடம் பொறுப்பேற்குமாறு அணுகிய முடிவு குழப்பமான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது; ஈராக்கில் இராணுவ அதிகாரிகள் இதைப் பற்றி வாஷிங்டனில் இன்னும் ஆய்வு செய்யப்படவேண்டும் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பும் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்கள், ஈராக்கிய கைதிகளை பாலியல் தவறுகளுக்குப் பயன்படுத்தியது பற்றிய மனரீதியிலான பாதிப்பும் தொலைக்காட்சித் தோற்றங்களில் வெளிப்பட்டதால் ஈராக்கியரின் பெருகிய சீற்றத்தின் பின்னணியில் இதுவந்துள்ளது. நிர்வாகம் பல மாற்றுக்களை ஆய்ந்து வரக்கூடும் என்றுதான் சில பகுப்பாய்வாளர்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர், ஏனென்றால் இந்தப் புதிய தந்திரோபாயம், பெரிய மூலோபாயத்துடன் அல்லது மறைந்துள்ள அதன் ஆபத்துக்களுடன் எவ்வாறு பொருந்தும் என்று அவர்களை எண்ண வைத்துள்ளன. உலகம் முழுவதும், உண்மையில், உடன்பாடானது முதலில், கிளர்ச்சிப் படைகளின் உறுதியான எதிர்ப்பை எதிர்நோக்கமுடியாமல், அமெரிக்கர் பின்வாங்கினர் என்றுதான் விளக்கப்பட்டது

இந்தப் புதிய ஏற்பாடு ஒரு குறைந்த மாறுதலைத்தான் கொண்டுள்ளது என பென்டகன் அதிகாரிகள் விளக்கினர்; அதாவது, ஆயிரக்கணக்கில் கடற்படையின் நிலப்படைப் பிரிவினர் வெளியேறி பின்வாங்கிய நிலையில், ஒரு சில பாதுகாப்புப் பொறுப்புக்கள் கடற்படையினரிடமிருந்து புதிய ஈராக்கிய இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டது என்பது அவர்கள் கூற்று ஆகும்.

ஞாயிறன்று, சில தொலைக் காட்சி செய்தி நிகழ்ச்சிக்கு கொடுத்த பேட்டிகளில், அமெரிக்க இராணுவத்தின் கூட்டுத் தளபதி, ஜெனரல் ரிச்சார்ட் மையர்ஸ், கடற்படையினர்கள் பல்லுஜாவிலிருந்து பின்வாங்கிவிட்டனர் என்ற கருத்தை முழுமையாக மறுத்தார் மற்றும் செய்தி ஊடகம் நகரத்திலிருந்து அனுப்பும் தகவல்களை முற்றிலும் பிழையானவை என்றும் கண்டனத்திற்கு உட்படுத்தினார். ஆனால், "உண்மையில் இரண்டாம் கடற்படைப்பிரிவு, ஐந்தாம் கடற்படை ரெஜிமென்ட்டின் முதல் படைப்பிரிவு, இரண்டாம் கடற்படையின் இரண்டாம் படைப்பிரிவும் நகரத்திற்கு அருகே அவை கொண்டிருந்த முகாம்நிலையை விட்டு நீங்கியுள்ளன. முதல் படைப்பிரிவு தனது முன்னணி நிலையை, நகரத்திற்குள் இருந்த குளிர்பான ஆலை ஒன்றில் கொண்டிருந்த நடவடிக்கை தளத்திலிருந்து, நகரத்திற்கு வெளியே ஐந்து மைல் தள்ளி ஒரு தளத்திற்கு வெள்ளியன்று சென்றுவிட்டது" என Post எழுதியுள்ளது.

அவ்விடத்தில் உள்ள சில அமெரிக்க அதிகாரிகள், வாஷிங்டனைக் கலந்து ஆலோசிக்காமலேயே, பல்லூஜா பாதுகாப்பு படையின் பொறுப்பைக் கொள்ள சலேயை (Saleh) தங்கள் விருப்பத்தேர்வாக குறிப்பிட்டிருக்கின்றனர். முழுப் பொறுப்பையும் சலே ஏற்கமாட்டார் என்றும், இரண்டாம் பட்ச பங்குதான் அவருடையதாக இருக்கும் என்று கடந்த ஞாயிறன்று தொலைக்காட்சி பேட்டிகளில் மையர்ஸ் அறிவித்தார். "கீழ்மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்வு இது. இப்பொழுது அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கருத்திற்கொண்டு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் " என்றும் அவர் சேர்த்துக்கொண்டார்.

இந்த மாற்றுக் கருத்தைக் கேட்டு ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி மனத் தளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்ட் இடம் கூறினார், "இப்பொழுதுதான் நாங்கள் அவரிடம் அவர் ஒரு பிரிகேட் அமைத்து நகரத்தின் பொறுப்பை கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். நாம் இப்பொழுது அவரிடம் நீங்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறமுடியமா? அவர் வீட்டிற்குப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியமா?" மறுநாள் பென்டகன், மற்றொரு ஹுசைனின் தளபதியான, பழைய இராணுவ உளவுத்துறைத் தலைவர் முகம்மது லத்தீப்பின் பெயரை அறிவித்து, அவர் பல்லுஜாவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என்றும் சலே அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார் என்றும் கூறியது.

இதற்கிடையில் சலேயே, பல்லுஜாவில் அயல்நாட்டுப் போராளிகள் உள்ளனர் என்பதை மறுத்தார்; அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கே இதுதான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. நகரத்தில் ஏற்பட்ட வன்முறை அமெரிக்கர் அங்கிருந்ததால் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். "அமெரிக்கர்களின் தூண்டிவிடும் தன்மையில் எதிர்ப்பிற்கான காரணங்கள் உள்ளதாகவும், சோதனைகள், இராணுவத்தை கலைத்தமை ஆகியவை எதிர்ப்பில் ஈராக்கியர்களைச் சேர வைத்தது" என்றும் அவர் Reuters இடம் தெரிவித்தார்.

சலேயுடைய உதவியாளர்களில் ஒருவர் செய்தியாளரிடம் கூறினார்; "பல்லூஜியர்கள் தான் இங்கு சண்டை புரிகின்றனர். இங்கு அரேபியர்கள் இல்லை; அரேபியர்கள் இருந்தால் இஸ்லாமிய நகரத்திற்கே அவமானம் ஆகும். அமெரிக்கர்கள் பல நாட்டுக்காரர்களை -பிரிட்டிஷ், ஸ்பானிய, சால்வடோரிய, உக்ரைனிய என்ற பிரிவுகளை கொண்டுவந்தனர். அது அவர்களுக்கு பொருந்தலாம், எங்களுக்கு மறுக்கப்படவேண்டுமா?"

எத்தனை ஆட்டம் கண்டிருந்தாலும், இடைக்காலத் தன்மையுடையதானாலும், பல்லூஜாவில் கொள்ளப்பட்ட உடன்பாடு, அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரமிப்பை பற்றிய பரந்த தேசிய எதிர்ப்பை பிரதிபலிக்கிறது என்றில்லாமல், ஈராக்கில் ஒரு சிறிய "பழைய ஆட்சிக் கூறுபாடுகளிலிருந்து வருகிறது" என்று புஷ் நிர்வாகம் கூறுவது மடமையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

கடற்படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பலர், பென்டகனிடம் இருந்து ஆயுதங்கள் மற்ற தளவாடங்களை பெற்றுக்கொண்ட பின்னர், இப்பொழுது பல்லூஜா பாதுகாப்புப் படையின் பகுதியாக இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். எல்லோரும் எதிர்பார்க்கின்றபடி, நகரத்தின் அரசியல் நிலைமை மீண்டும் வெடிக்குமேயானால், இந்தப் போர் சாதனங்கள் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான அடுத்த சுற்றில் நன்கு பயன்படுத்தப்படக் கூடும்.

Top of page