World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Blair and Bush plan further crimes in the Middle East

மத்திய கிழக்கில் மேலும் பல குற்றங்கள் புரிய பிளேயர் மற்றும் புஷ் திட்டம்

Statement by the Socialist Equality Party (Britain)
22 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 16 வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனுக்கு மேற்கொண்ட பிரதமர் டோனி பிளேயரின் சுற்றுப் பயணமானது, ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷூடன் உள்ள ''சிறப்பு உறவு முறை'' பற்றிய கட்டுக்கதையின் அரசியல் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. பல மாதங்கள் வரை பிளேயர் தன்னை நியாயத்தின் குரல் என்றும் அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சமான போக்குகளைக் கட்டுப்படுத்துபவர் என்றும் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஒரு இணைப்புப் பாலம் என்றும் முன்னிலைப்படுத்திப் பேசியதானது, அப்படி ஒன்றுமில்லை என்பது இந்தப் பயணத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்துவிட்டது.

புஷ், பிளேயரை ''நல்ல நண்பன்'' என்று பாராட்டினாலும், அவர் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். மற்றும் அவர் தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டார்.

ஈராக்கிற்கு எதிரான போரில் தான் கொடுத்துவரும் ஆதரவிற்கு கைமாறாக, இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் திட்டவட்டமான பயன்தருகிற வகையில் நியாயமான தீர்விற்கு அமெரிக்கா ஆதரவு தந்திருப்பதாக பிளேயர் திரும்பத்திரும்ப கூறினார். ஆனால், அதற்கு மாறாக பிளேயர் மிகவும் அசெளகரியமான நிலையில் புஷ்ஷின் கூற்றை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். மேற்குக்கரையின் பாதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பை இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் கைப்பற்றிக்கொண்டு காசா பகுதியில் உள்ள சில ஆயிரம் யூதர்களை திரும்ப அழைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பது, ''பழைய சாலை வரைபடத்திற்கு செல்லும் நடைமுறைகளில் ஒரு பகுதி'' என்று பிளேயர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்குப் பின்னர் பத்திரிகையாளர் பேட்டியில் வாஷிங்டனுடன் ஈராக் விவகாரத்தில் முழுமையான ஒற்றுமை நிலவுவதாகக் கூறினார். அத்துடன், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கூடுதல் படைகளைக் கொண்டுவந்து ஈராக் ஆக்கிரமிப்பைக் கண்காணிக்க ஏற்பாடு செய்வதில் ஐ. நா. உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தரகராக தன்னை ஆக்கிக்கொள்ள பிளேயர் முன்வந்தார்.

பிளேயரின் வாஷிங்டன் பயணத்திற்கு முன்னர் பிரிட்டனின் ஊடகங்களில் ஊகச்செய்திகள் நிறைய வந்தன. ஷரோனின் ஒருதலைப்பட்சமான, இஸ்ரேலை தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவு தந்த புஷ்ஷிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார் என்றும் பாலஸ்தீனிய அகதிகள் தங்களது பூர்வீக இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையை மறுப்பது சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது என்பதை வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மற்றும், ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் தற்போது நடைபெற்றுவரும் எழுச்சியில் கொடூரமாகவும், அத்துமீறி அளவிற்கதிகமாக செயல்பட்டு வருவதாகவும், ஈராக்கிலுள்ள பிரிட்டனின் இராணுவத் தலைமை கருதுவதாகச் செய்திகள் வந்தன. ஈராக்கில் போருக்கு பிந்திய நிர்வாகம் ஐ.நா சார்பு அச்சாணியைக் கொண்டதாகவும், பல நாடுகளைக் கொண்டதாகவும் அமையுமாறு பிரிட்டனின் அழுத்தத்தை புஷ் ஏற்றுக்கொள்வார், அந்தளவிற்கு குடியரசுக்கட்சி நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது, ஏனென்றால் ஸ்பெயின் படைகள் வெளியேற முடிவு செய்துவிட்டன, இந்தச் சூழ்யிலையில் பிளேயர் சொல்வதை புஷ் ஏற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் வெள்ளை மாளிகை சென்றதும் புஷ் ஆட்டுவித்தபடி ஆடத் தொடங்கினார். புஷ்ஷிற்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால் சிறிதளவாவது சுதந்திரத்தோடு பிளேயர் செயல்படுவார், அந்த அளவிற்கு அவர் ஊக்குவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, அதற்கு எதிரான விளைவுகள்தான் அவருக்கு ஏற்பட்டது. பிளேயரை பொறுத்தவரை புஷ்ஷின் நெருக்கடி அவரது சொந்தப் பிரச்சனை, அதை அவர் என்ன விலை கொடுத்தாயினும் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

பிளேயரின் அமெரிக்க விஜயம் குறித்து பிரிட்டனின் ஊடகங்கள் ஒரே சீரான விமர்சனங்களை வெளியிட்டிருக்கின்றன. மிகப்பெரும்பாலான விமர்சகர்கள் இழந்துவிட்ட வாய்ப்புக்களுக்கு ஏமாற்றம் தெரிவித்து, தனது அனுபவத்தால் பிளேயர் பலவீனமடைந்துவிட்டதாக முடிவு செய்துள்ளனர். ஒரு சிலர் பிரதமரின் தனிப்பட்ட தோல்விகளுக்கும் அப்பாற்சென்று விளக்கங்களை தந்திருக்கின்றனர்.

ஊழ்வினையில் பிணைந்தவர்கள்

பிளேயர், புஷ்ஷை ஆதரித்து நிற்பதில் சுயநலம் பின்னிப் பிணைந்திருக்கிறது. வரலாற்றில் இரண்டு தலைவர்களது எதிர்காலம் இப்படி ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது மிக ஆபூர்வமாகத்தான் நடக்கக்கூடிய ஒன்றாகும். புஷ்ஷிற்கு ஈராக்கிலோ அல்லது அவரது நாட்டிலோ ஏற்படுகின்ற எந்த இழிவும் அதே அளவிற்கு கடுமையாகத் தன்னை பாதிக்குமென்று பிளேயர் கருதுகிறார். வாஷிங்டன் சட்ட விரோதமாகவும், எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமலும் ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்தியபோது, பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மிகக்கடுமையாக எதிர்த்த நேரத்தில் அதையும் மீறி தனது செல்வாக்கு முழுவதையும் ஈடுபடுத்தி அந்தப்போருக்கு பிளேயர் ஆதரவு தெரிவித்தார். ஈராக் மக்களது எழுச்சி ஒடுக்கப்படாவிட்டால் வாஷிங்டனும், லண்டனும் ஈராக்கிலிருந்து விரட்டப்பட்டுவிடும், படையெடுப்பு நடத்தியது அந்த நாட்டில் பொதுமக்கள் ஆதரவுபெற்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்குத்தான் என்ற அவரது கூற்று பொய்யாகிவிடும். எப்படி ஈராக் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற பொய் அம்பலத்திற்கு வந்ததைப் போல் இதுவும் ஆகிவிடும்.

ஸ்பெயினில் போருக்கு எதிராக மிகப்பெருமளவிற்கு எழுந்த மக்களது உணர்வுகள் மற்றும் பிரதமர் ஜோசே அஸ்னாரை பதவியிலிருந்து மக்கள் வெளியேற்றியது என்பன பிளேயருக்கு ஏற்கெனவே தெரியும். அந்த நேரத்தில் எக்னாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருந்த தலைப்பு ''ஒருவர் போய்விட்டார், இருவர் இதைநோக்கி போகவேண்டும்'' என்றிருந்தது.

''அமெரிக்க மாதிரியில்'' (American model) எந்தவிதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை ஒட்டுமொத்தமாக கடைப்பிடித்து வரும் பிளேயர், புஷ்ஷின் ஜனாதிபதி பதவி காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் மிகக் கவலையோடு இருக்கிறார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் தொழிலாளர் என்ற பெயரைக் கொண்டுள்ள கட்சிக்கு தலைமை தாங்குகிறோம் என்ற சங்கடத்தோடுதான் பிளேயர் கண்விழிக்கிறார். புதிய தொழிற்கட்சியில் எந்தவிதமான சமூக ஜனநாயக அம்சமும் கிடையாது. புஷ்ஷின் வலதுசாரிக் கொள்கைகளை எதிரொலிக்கின்ற வாகனமாகவே அது விளங்குகிறது. இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மற்றும் செல்வாக்கை இழந்துவிட்ட அஸ்னார் ஆகியோரது கொள்கைகளையும் அவர் பின்பற்றுகிறார். புஷ் தோல்வியுற்றால் தனது உள்நாட்டுக் கொள்கைகள் பற்றிய ஆட்சேபனைகள் கிளம்பும் என்று பிளேயர் அஞ்சுகிற போதிலும், ஜனநாயக் கட்சி இதற்கு மாற்றாக இருப்பதால் அந்த அச்சம் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால், வலதுசாரிகள் அசைக்க முடியாதவர்கள் என்ற கற்பனை மரண அடிவாங்கும் என்று அஞ்சுகிறார்.

வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் நடந்திராத அளவிற்கு ஒரு தொழிற்கட்சித் தலைவர், ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கு எந்தவிதமான ஆதரவும் காட்ட மறுத்ததில்லை. அந்த மட்டத்திற்கு, செனட்டர் ஜோன் கெரியை சந்திக்க பிளேயர் குறிப்பாக தவறியதுடன், தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு தரும் அல்லது உதவும் என்ற அறிக்கை எதையும் அவர் வெளியிடவில்லை.

பிரிட்டனின் ஆளும் குழுக்களுக்குளேயே நிலவுகின்ற வாஷிங்டன் ஆதரவு நிலைநோக்கை வெளிப்படுத்துகின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

பிளேயர், திட்டவட்டமான வெளிநாட்டுக் கொள்கை மூலோபாயத்தின் பிரதிநிதியாக உள்ளார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முன்னிலைப் பங்களிப்பை அமெரிக்காவிற்கு தந்துவிட்டது. இந்த மாற்றத்தின் முழுமையான விளைவுகள் இரண்டாவது உலகப் போருக்குப்பின் தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்கா மேற்கு நாடுகளுக்கிடையில் ஒரு வல்லரசாக உருவானபோது, எந்த ஐரோப்பிய அரசும் அல்லது ஐரோப்பிய அரசுகளின் கூட்டணியும் குளிர் யுத்தகால சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு சவால் விடுகிற அளவிற்கு தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை. இந்த வகையில் 1956 ல் சூயஸ் நெருக்கடியின் போது பிரிட்டன் கடைசியாக மேற்கொண்ட முயற்சி மிக மோசமான தோல்வியில் முடிந்தது.

எனவே, அமெரிக்காவுடன் மூலோபாய உடன்பாட்டை நிலைநாட்டுவதுதான் புத்திசாலித்தனம் என்று பிரிட்டனின் ஆளும் வட்டாரங்கள் கருதின. அந்த வகையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஐரோப்பிய நண்பனாக செயல்பட பிரிட்டன் முன்வந்தது. இந்த வகையில் பெரிய ஐரோப்பிய போட்டி நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு எதிராக பிரிட்டனின் கரம் வலுத்தது.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமநிலையைப் பேணும் கடினமான நடவடிக்கையைப் பின்பற்றும் சூழ்நிலைமையின் கீழ் பிளேயர் ஆட்சிக்கு வந்ததானது சோவியத் ஒன்றியத்தின் பொறிவினால் புறநிலை ரீதியாக கீழறுக்கப்பட்டது. அதுவரை மாற்று உலக வல்லரசாக சோவியத் ஒன்றியத்தின் இருப்பினாலும், மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு சமூக மற்றும் அரசியல் மாற்றாக ஒரு எடுத்துக்காட்டாகவும் கூட அது இருக்க முடியும் என்பதாலும் தனது மேலாதிக்கம் மிக வலிந்து உறுதிப்படுத்தப்படுவதில் இருந்து தான் தடுத்து நிறுத்தப்படுவதாக அமெரிக்கா உணர்ந்து வந்திருந்தது. ஆதலால், அது ஐரோப்பாவுடனும் ஜப்பானுடனும் சமரசம் செய்து அவற்றை நேட்டோ கட்டமைப்புக்குள் ஒரு ஐக்கிய முன்னணியில் பேணி வைத்துக்கொள்ள தயாராக இருந்தது.

1990 களில் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கப் போக்குகளை எந்தவிதமான எதிர்ப்பிற்கும் இடமின்றி செயல்படுத்தத் தொடங்கியது. 1997 ல் பிளேயர் ஆட்சிக்கு வந்தபோது இந்த நிலை தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, அவர் கிளின்டன் நிர்வாகத்துடன் முடிந்தளவு மிக நெருக்கமான உறவகளை நிலைநாட்ட முயன்றதுடன், ஐரோப்பிய நாடுகளுடன் தனது நெருக்கத்தையும் நிலை நாட்டிவந்தார். திட்டவட்டமான இந்த நிலைமையில் ஐ.நா போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் கிளின்டன் நிர்வாகம் மேலாதிக்கத்துடன் இருக்க விரும்பியதே தவிர பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தகராறுகளில் ஈடுபடவில்லை.

2000 ஜனாதிபதி தேர்தலைக் களவாடி புஷ் பதவிக்கு வந்ததும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தில் புஷ் நிர்வாகம் தீவிர வலதுசாரிப் போக்குகளை உள்ளடக்கிய நிர்வாகமாகும். அது, ஐரோப்பாவிற்கும், ஜப்பானுக்கும் நேரடி சவாலாக அமெரிக்காவின் வலிமையை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவு செய்தது. அது இரண்டாவது உலகப்போருக்குப் பிந்திய பன்னாட்டு அமைப்புக்களுடன் பணியாற்ற விரும்பவில்லை.

இதன் மூலம் பிளேயர் சரியான படிப்பினைகளை தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு, உலகின் வேறு எந்த தலைவரையும் விட புஷ்ஷின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டார். ஈராக் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்த நேரத்தில் புஷ் ''எங்களோடு இருக்கவேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும்'' என்று அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டன் ஐரோப்பிய பொருளாதார நலன்களை விட்டுவிடாமல் வாஷிங்டனுடன் நல்லுறவுகளை நிலைநாட்ட வேண்டியது அவசியமென்று கருதி பிளேயர் செயல்படத் தொடங்கினார்.

ஒரு சிலர் ஆட்சியின் (oligarchy) அரசியல் பிரதிநிதி

பிரதான அரசியல் கணிப்பீடு என்பது, அனைத்து வகையான எச்சரிக்கைகளிலும் உரத்துக் குரலொலிக்கும் வாய்ச்சவடாலிலும் கவர்ச்சிமிக்கதாக்கப்பட்டது. பூகோளரீதியாய் ஒன்றை ஒன்று சார்ந்துள்ள உலகில் பயங்கரவாதத்தாலும் ''தோல்வி அடைந்த'' நாடுகளாலும் உருவாகின்ற அச்சுறுத்தலை எதிர்த்து போராடும் பொருட்டு அது அவசியமாக கருத்தப்பட்டது. அமெரிக்கா, அதன் தோல்விகள் எதுவாக இருந்தாலும், "உலகின் மிக வலுவான ஜனநாயகமாக" அது விளங்கிறது மற்றும் அதை நன்மைதரும் சக்தியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கருதப்பட்டது. பிளேயர் அதன் விசுவாசமான நண்பராக கருதப்பட்டதால், வாஷிங்டனால் மதிக்கப்படக்கூடிய இணக்கப்படுத்தும் மற்றும் அவசியமான குரலாக செயல்படுவதற்குத் தேவையான தகுதியை அவருக்குக் கொடுத்தது. அவர் பென்டகனிலும், வெள்ளை மாளிகையிலும் இடம் பெற்றுள்ள கடுமையான ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்காரர்களுக்கு எதிராக வாதிட முடியும் மற்றும் அரசுத்துறை செயலர் கொலின் பவல் போன்ற "பன்முக நடவடிக்கையாளர்களை" பலப்படுத்த உதவமுடியும்.

உண்மையிலேயே பிளேயர் இது போன்ற உயர்வுகள் பெரும்பாலானவற்றை நம்பினார் என்று நம்புவதற்கு எல்லா காரணமும் இருக்கிறது. மற்றும் பிரிட்டனில் ஆளும் வட்டாரங்களினுள்ளே உள்ள ஏனையோரும் மற்றும் ஐரோப்பாவிலும் கூட அது உண்மை என்று நம்பினர்.

அத்தகைய ஏமாற்றுதல்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பார்த்தால் கூட, பிளேயர் எந்த சம்பவத்திலும் முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளே உள்ள புதிய ஒரு சக்திவாய்ந்த மூலக்கூறுகளை தனக்கு அடிப்படையாகக் கொள்ள முடியும். அத்தகைய முதலாளித்துவ சக்திகளின் அக்கறைகள் மிகவும் செயல்முறைவாத தன்மையாக இருந்தன: ஒற்றை தேசிய நலன் கொண்ட சில ஒருங்கிணைந்த சாரப்பொருளாக - குறிப்பாக வாஷிங்டனுடன் கொண்டுள்ள கூட்டு - பிரிட்டனது நலன்களுக்குப் பயன்படுமா பயன்படாதா என்று அக்கறை கொள்ளாமல், மாறாக தங்களது சொந்த நலன்களுக்குப் பயன்படுமா என்பதில் அக்கறை கொண்ட சக்திகளாக இருந்தனர்.

ஆகவே, இத்தகைய சமூக சக்திகளின் பிரதிநிதி என்று கருதப்படும் ருப்பேர்ட் முர்டோக்கின் (Rupert Murdoch) புதிய சர்வதேச கொட்டடியில் இடம்பெற்றுள்ள ஊடகங்கள் பிளேயரை ஆதரிக்கின்றன. அமெரிக்காவில் புஷ்ஷை ஆதரிக்கின்ற பிரதான ஆதரவாளர்கள் அவர்கள்தான். அவர், கடந்த இரு தசாப்தங்களாக உலகில் வளர்ந்துவிட்ட, முன்னணிக்கு வந்திருக்கும் பெரும்பணக்காரர்களின் குரலை எதிரொளிப்பவராக இருப்பதுடன், உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்களுக்கு கொள்கைகளை வகுத்து கட்டளையிடுகிற வல்லமை படைத்தவராகவும் இருக்கின்றார். இந்தப்பணியை வேறு எந்த நாட்டையும்விட அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் அவர் மிக நேரடியாகச் செய்து வருகிறார்.

அதிகார வட்டாரங்களுக்குள் பழைய குரல்களை பிளேயரும் அவரது குழுவினரும் மங்கச் செய்துவிட்டனர். இது அவர்களது உயர்ந்த தொலைநோக்கால் நடக்கவில்லை. மாறாக, ஒரு சிலர் ஆட்சியின் (oligarchy) கோரிக்கைகளை உடனடியாக அரசாங்கக் கொள்கையாக மாற்றுகின்ற வல்லமையால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக சிவில் நிர்வாக சேவையை ஓரங்கட்டிவிட பிளேயர் விருப்பத்தோடு உள்ளார். அவர்களுக்குப் பதிலாக தனது சொந்த ஆலோசகர்களை நியமித்திருக்கிறார். அத்துடன் தனது சொந்தக் கட்சி மற்றும் அமைச்சரவையை, ஓரங்கட்டிவிட்டு அரசாங்கத்தில் நேரடியாக வர்த்தகர்களை நியமித்திருக்கிறார்.

மிகவும் அடிப்படையான வகையில் ஈராக் போருக்கான முன்னேற்பாடு நடந்த நேரத்தில் பிளேயர் பொதுமக்களது கருத்தை முற்றிலுமாக அலட்சியப்படுத்தியதுடன், தார்மீக நெறிப்படி சரி என்று கருதுகின்ற கொள்கையை தான் கடைப்பிடிப்பதாக பிடிவாதமாக குறிப்பிட்டார். இப்படி பிளேயர் பயனற்ற பகட்டு நிலைப்பாட்டை மேற்கொண்டதற்கும், தான் தவறே செய்யாத மனிதன் என்று கருதியதற்குமான காரணம் அவருக்கு ஒரு சிலர் ஆட்சியிடம் உள்ள சுயாதீனமற்ற நெருக்கமாகும்.

வெள்ளை மாளிகையின் கட்டளை ஒவ்வொன்றையும் ஏற்றுச் செயல்படுத்துவதற்கு பிளேயர் அரசாங்கம் தயாராக இருப்பதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டுமென்றால், அவரது உண்மையான அரசியல் அடித்தளத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். புஷ் அரசாங்கத்தைப் போல் பிளேயர் அரசாங்கமும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப்பரவலாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக சூழ்ச்சியாக செயல்பட்டு வருகிறது. உலகின் பொருளாதார வளங்களை கையகப்படுத்திக் கொண்டு அதன்மூலம் ஏற்கெனவே கொழுத்துவிட்ட செல்வச்செழிப்பை மேலும் பெருக்குவதற்கு முயன்றுவரும், அரை கிரிமினல் நிதியாதிக்க செல்வந்த தட்டின் முயற்சிகளால், முழுமையாக அதன் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

பிளேயர் வாஷிங்டன் விஜயத்தை மேற்கொண்ட இரண்டு நாட்களில் பிரிட்டனின் சன்டே டைம்ஸ் பிரிட்டனிலுள்ள மிகப்பெரும் பணக்காரர்களின் ஆண்டுப் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இது தற்செயலாக நடந்துவிட்ட ஒரு சுவையான சம்பவம் ஆகும். இந்தப் பட்டியலில் முதன்மை இடம் ரஷ்ய முதலாளியான ரோமன் ஆப்ரமோடிச் (Roman Abramodich) என்பவருக்கு கிடைத்திருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 7.5 பில்லியன் பவுன்கள் ஆகும். இப்படிப்பட்ட பல மிகப்பெரும் பணக்காரர்கள், குறிப்பாக ஒன்று வெளிநாட்டு முதலாளிகள் அல்லது நலன்புரி அரசு சிதைக்கப்பட்டதால் மற்றும் தொடர்ந்து வந்த பழமைவாத மற்றும் தொழிற்கட்சி அரசாங்கங்கள் மேற்கொண்ட தனியார்மயத் திட்டங்களால் பயனடைந்து பணம் சம்பாதித்தவர்களாக உள்ளனர். கடந்த 12 மாதங்களில் இந்தத் தரப்பினர் ஒட்டுமொத்தமாக தங்களது வருவாயை 30 சதவீதம் உயர்த்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் மிகக்பெரும்பாலான தொழிலாள வர்க்கம் கடன் சுமையாலும், பெருகிவரும் துயரத்தாலும் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த தட்டுக்கள் பிளேயர் தொடர்ந்து ஈராக் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை விரும்புகின்றனர். வேறு எந்த இராணுவ நடவடிக்கையில் வாஷிங்டன் ஈடுபட்டாலும், அதையும் பிளேயர் ஆதரிக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இவர்கள், தங்களது சொந்தச் செல்வத்தை பாதுகாப்பதற்காக, நலன்புரி அரசு சேவைகளுக்கு எதிரான மற்றும் மிகக்குறைந்த கம்பெனி வரிவிதிப்பு முறைக்கு ஆதரித்து நிற்கின்றனர். இந்த மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மேட்டுக் குடியினர் தங்களது சொந்த லாபத்திற்காகவும், அடிமட்டத்திலுள்ள தொழிலாளர்களை கண்டு அஞ்சியும், துச்சமாக மதித்தும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்தத் தரப்பு சக்திகள்தான் பிளேயர் அரசாங்கத்தில் ஊழியர்களாக உள்ளனர். எனவேதான் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறை தொடர்பாக தொழிற்கட்சியின் பின்வரிசையில் இருப்பவர்கள் வாய்மூடி மெளனிகளாக உள்ளனர். வாஷிங்டன், ஷரோனுக்கு வழங்கியுள்ள சுதந்திரமான நடவடிக்கை அனுமதியைப் பற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை.

தொழிற்கட்சிக்கு அப்பால் பிளேயருக்கு மாற்றுக் கொள்கையுள்ள எந்தத்தரப்பும் இல்லை. ஆளும் செல்வந்த தட்டிற்குள் உள்ள அதிகாரப்பூர்வமான அரசியல் வட்டாரங்களில் பிளேயரின் போர் வெறி மற்றும் சமுக விரோத உள்நாட்டு செயற்திட்டங்களுக்கு மாற்றாக கொள்கை அடிப்படையில் மாற்றுத்திட்டம் எதையும் தருவதற்கு இவர்களில் எவருமில்லை. அத்துடன், எதிர்கட்சியில்லை என்ற காரணத்தினால் தன்னுடைய இயல்பான வலிமை அல்லது விரிவான அரசியல் ஆதரவுத் தளம் இல்லாவிட்டாலும் கூட பிளேயரால் பதவியில் நீடிக்க முடிகிறது.

இந்த நிலைமையில் தொழிலாள வர்க்கத்திற்கு வருகின்ற ஆபத்துதான் வெள்ளை மாளிகை தோட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் காட்சிக்கு வந்தது. பிளேயர் ஏற்கெனவே ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ரத்தம் சிந்தச் செய்ததோடு, பிரிட்டனை முதலாளிகளின் விளையாட்டு மைதானமாகவும் மாற்றிவிட்டார். இப்போது ஈராக் மக்களை ஒடுக்குவதற்கும் புஷ் மேற்கொள்ளும் இதர ஏகாதிபத்திய கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு தருவதாக பிளேயர் உறுதியளித்துள்ளார். இந்த ரத்தக்களறியானது ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அல்லது மத்திய கிழக்கின் வேறு இடங்களில் எங்கு நடந்தாலும் அதை ஆதரிக்க அவர் புஷ்ஷிற்கு உறுதியளித்துள்ளார்.

ஆகவே, இந்த நடவடிக்கையை ஒட்டி உழைக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்வது மிகவும் அவசியமாகும். பிளேயரின் அரசாங்கத்திற்கு எதிராக, சுதந்திரமான அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணரச் செய்வதுடன், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை மேற்கொள்ள விழிப்படையச் செய்யவேண்டும்.

Top of page