World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The politics of opportunism: the "radical left" in France

Part two: The LCR assembles the "anti-capitalist left"

சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"

பகுதி 2 : "முதலாளித்துவ எதிர்ப்பு இடதை" LCR ஒன்று திரட்டல்

By Peter Schwarz
17 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதிகள்

 

 

 

 

 

பகுதி 1: LO-LCR தேர்தல் கூட்டு

பகுதி 3: பப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாடு

பகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு

பகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்

பகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல்
 

பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு பகுதிகள் கொண்ட கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதியை கீழே காணலாம். முதல் பகுதி (ஆங்கிலத்தில்) மே 15ம் தேதி வெளிவந்தது.

LCR (Ligue Communiste Revolutionnaire, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) மிகவும் தயக்கத்துடன்தான் LO (Lutte Ouvriere தொழிலாளர் போராட்டம்) உடன் தேர்தல் உடன்படிக்கையில் பங்கு பெற ஒப்புக்கொண்டது. 2003 நவம்பர் மாதம் நடந்த LCR கட்சி பேராயத்தில் (Congress) 70 சதவிகித பேராளர்கள்தான் இக்கூட்டு பற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தனர். மற்றவர்கள் தனித்த முறையில் LO வுடன் கூட்டுச்சேர்வது ஒரு "மிகக் குறுங்குழு தன்மை" பெற்றதாகிவிடும் என்ற கருத்தில் இருந்தனர். இந்தக்கூட்டில் வேறு எந்த அரசியல் அமைப்போ அல்லது போக்கோ பங்கு பெறக் கூடாது என LO வலியிறுத்தியிருந்தது.

LCR பேராயத்தில், "முதலாளித்துவ எதிர்ப்பு இடதைத் திரட்டுதல்" என்ற தீர்மானத்திற்குக் கூடுதலான வாக்குகள் போடப்பட்டன. (1) இத்தீர்மானம் 82 சதவிகிதப் பேராளர்களால் ஆதரிக்கப்பட்டிருந்தது. இது ஒரு பரந்த, கூட்டான இயக்கம் அனைத்து மரபுவழி இடது மற்றும் போர் எதிர்ப்பு மற்றும் பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு இயக்கங்கள் இவற்றையெல்லாம் அரவணைத்து ஒரு பரந்த கூட்டமைப்பை உருவாக்குவதற்கு அழைப்பை விடுத்தது. அதிலிருந்து எழக்கூடிய "ஒரு புதிய அரசியல் சக்தி", "பரந்த, பன்முகமான, தீவிரமான, முதலாளித்துவ எதிர்ப்பு உடைய, உறுதியுடன் ஜனநாயக முறையில்" இயங்கும் அமைப்பாக இருக்கும். மேலும், அது "அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்க்கும் ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு, மகளிர் உரிமை, சுற்றுசூழல் பாதுகாப்பு அரசியல் சக்தியை பற்றி" பேசுகிறது.

LCR இன் உண்மையான நோக்குநிலையை இத்தீர்மானம் விளக்குகிறது. உத்தியோகபூர்வ இடதின் வாக்குகள் விரைந்து சரியத்தொடங்கியதையும், LO சார்பில் குரல்தரவல்லவரான ஆர்லட் லாகியே ஒப்பீட்டளவில் கூடுதலான வாக்குகளைப் பெற்றதையும் எடுத்துக் கொண்டால், LO உடனான தேர்தல் உடன்பாடு, ஒரு கட்டாய தற்காலிகத்தேவை என்ற முறையில் அது கொள்ள வேண்டியதாயிற்று. LCR ஐப் பொறுத்தவரையில், அதன் "முதலாளித்தவ-எதிர்ப்புக் கூட்டணியில்," தயக்கம் காட்டும் LO வைப் பின்னர் இணைத்துக் கொண்டுவிடலாம் என்ற கருத்தும், இல்லாவிடில் குறைந்தபட்சம் அதில் ஒரு பகுதியையாவது சேர்த்துக் கொண்டுவிடலாம் என்றும் நம்பியது.

பொதுவான தேர்தல் வேலைத்திட்டத்தினை எதிர்த்து, "முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" என்பது பற்றிய தீர்மானமும் மாற்று அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசுகிறது. ஒரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எங்கள் போராட்டத்தையும், நம்பிக்கையையும் சமூக-தாராளவாத இடதுடன் கூட்டிற்காகவோ அல்லது முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களால் கட்டளையிடப்படும் முன்னோக்கிற்காகவோ, வீணடிக்கப்பட இருப்பதை நாங்கள் ஒன்றாக ஏற்க மறுக்கிறோம். வலதுசாரி தேசிய முன்னணிக்கு [பிரான்சின் புதிய பாசிச கட்சி] மற்றும் Medef [முதலாளிகளின் அமைப்பு] இவற்றுக்கு மாற்றீடு, மக்களை ஜனநாயக முறையில் அணிதிரட்டுவதன் அடிப்படையிலான அரசாங்கமாகும், சமூக நடவடிக்கைகளின் ஒரு அவசர வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் அரசாங்கமாகும்".

"மக்களை அணிதிரட்டி, ஒரு தீவிரமான சமூக மாற்றத்தின் மூலம் சமுதாய தேவைகளை பூர்த்தி செய்தலையும், பொருளாதாரத்தின் தனியார் உரிமையை அகற்றுதலையும் பொறுப்பெடுத்து, பொருளாதாரத்தை அனைவருடைய பொறுப்பிலும் வைப்பதை சாத்தியமாக்கும், ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தின் நோக்கம்" பற்றி மற்றொரு பகுதி கூறுகிறது.

ஆனால், இந்த "தொழிலாளர்களின் அரசாங்கம்" எந்த விதமான தெளிவான வேலைத்திட்ட அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. LCR, பல பத்தாண்டுகளின் அனுபவத்தின் மூலம் - அதன் உண்மையான வேலைத்திட்டத்தை தீவிர மற்றும் புரட்சிகர கருத்துக்களைக் கூறும் சொற்றொடர்களின் மூடுபனிக்குப் பின்னால் மறைக்கும் கலையை சிறப்புற அறிந்தது- இந்த நாட்டில் 18, 19ம் நூற்றாண்டுகளின் புரட்சிகர மரபுகள் கூட இன்னும் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில் இது ஒரு கடினமான செயல் இல்லை; ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) முன்பு நாட்டில் வலுவான கட்சியாகச் செயல்பட்டிருந்தது; இந்த நாட்டில்தான் மிகப்பழைய முதலாளித்துவ கட்சி கூட தன்னை தீவிரவாத கட்சி என அழைத்துக் கொள்ளுகிறது.

LCR தன்னுடைய "ஒரு கட்சியாக மறுகூடல்" என்பதில் சேர்த்துக்கொள்ள இருக்கும் பல அரசியல் போக்குகளும் சமுதாயக் குழுக்களும், அதன் "தொழிலாளர்களின் அரசசாங்கம்" என்ற இலக்கு, இதுகாறும் மார்க்சிஸ்டுகள் அறிந்துள்ள தொழிலாளர் அரசாங்கம் என்பதோடு எந்தப் பொதுத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து சுதந்திரமாக மற்றும் தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதன் அடிப்படையிலான ஒரு அரசாங்கம் அல்ல. மாறாக LCR, உத்தியோகப்பூர்வ இடதுசாரி கட்சிகளின் சரிவினால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முற்றிலும் தளர்வான, பல்வேறு கூறுகளைக் கொண்ட ஒரு சமுதாய மற்றும் அரசியல் இயக்கத்தைக் கட்டுவதற்கு விரும்புகிறது மற்றும் நெருக்கடியான நிலையில், முதலாளித்துவ அரசாங்கத்துள் நுழைவதற்கும் தயாராக உள்ளது.

LCR- ஆல் தன்னுடைய வேண்டுகோளில் அழைக்கப்பட்டுள்ள பெரும்பாலான போக்குகளும் குழுக்களும் எந்த விதத்திலும் ஒரு சோசலிச முன்னோக்குடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

முதலாவதாக பூகோளமயமாக்கல் எதிர்ப்பு அல்லது மாற்று என்றுள்ள இயக்கம்; இதனை தன்னுடைய "முதலாளித்துவ-எதிர்ப்பு இடதின்" மிக முக்கியமான பகுதியாக காங்கிரசின் தீர்மானம் கூறுகிறது. இவ்வியக்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் முதலாளித்துவ சமுதாய உறவுகளை அந்தவாறாக எதிர்க்கவில்லை. மாறாக, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் ஒரு குறிப்பட்ட வடிவத்தை, "புதிய-தாராளவாத முதலாளித்துவம்" என்று கூறப்படுவதையே எதிர்க்கின்றனர்.

சிலர் வர்த்தக தடைகள் மற்றும் ஏனைய காப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிக்கு வக்காலத்து வாங்கும், 1960களில் மேலாதிக்கம் செய்திருந்த தேசிய ரீதியில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ள முதலாளித்துவத்திற்கு திரும்புவதை விரும்புகின்றனர்; இவை பிற்போக்கான கோரிக்கைகள், இவற்றின் தர்க்கரீதியான விளைவு வர்த்தக மற்றும் இராணுவ யுத்தங்களை வளர்த்துவிடுவதாகும். இந்த இயக்கத்தில் உள்ள மற்றவர்கள், தற்கால சமுதாயத்தில் உள்ள தீமைகளை, முதலாளித்துவ சொத்தை எந்தப் பாதிப்பிற்கும் உட்படுத்தாமல் மந்திரம் போன்ற முறையில் தீர்க்க இயலும் (உதாரணமாக Tobin Tax முறை) என்ற கருத்தை உடையவர்கள் ஆவர். (2)

"முதலாளித்துவ-எதிர்ப்பு இடதின்" இரண்டாம் பெரும் தூண், போர் எதிர்ப்பு இயக்கம் என பெயர் குறிக்கப்பெறுகிறது. இங்கும் நாம் மிகவும் வேறுபட்ட பலவிதமான அரசியல் போக்குகளை காண்கின்றோம். ஒரு பிரிவு ஜேர்மன் அதிபரான ஹெகார்ட் ஷ்ரோடர், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் ஆகியோருடைய வெளிநாட்டுக் கொள்கையை ஆதரிக்கிறது (இதைப்பற்றி LCR குறிப்பிடத்தக்க வகையில் மெளனம் சாதிக்கிறது). மற்றொரு பிரிவு சமதானவாதிகள் நிலைப்பாட்டை எடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தார்மீக வேண்டுகோளை விடுப்பதில் தங்கி நிற்கிறது.

மார்க்சிச வாதிகளைப் பொறுத்தவரையில், இதற்கு மாறாக, போருக்கு எதிர்ப்பு என்பது முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கிடையே உள்ள காரண காரியத் தொடர்பை அறிவதின் அடிப்படையில் அமைந்ததாகும். போருக்கு எதிரான போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது.

இறுதியாக, LCR ஆல், சுற்றுச்சூழல் மற்றும் பெண்ணுரிமை இயக்கங்கள் போல் "முதலாளித்துவ-எதிர்ப்பு இடதில்" சேர்க்கப்பட்டுள்ள இயக்கங்கள் முதலாளித்துவ எதிர்ப்பு நோக்குநிலையின் எவ்வித தடத்தையும் கொண்டிருக்கவில்லை, ஜேர்மன் பசுமைக் கட்சியின் தலைவிதி தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளதைப் போல. 25 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி, அக்கால கட்டத்தில் LCR இன் ஜேர்மானிய சக சிந்தனையாளர்களாலும் பாராட்டப்பட்டிருந்த ஜேர்மன் பசுமை கட்சியினர் அடிப்படை மட்டத்து ஜனநாயகம், அமைதிவாதம் இவற்றுடன் சேர்த்து, சுற்றுச் சூழல், பெண்ணிலைவாதம் என்ற கொடிகளை உயர்த்தினர், மற்றும் இன்று மற்ற எந்த முதலாளித்துவ கட்சியை போலவும் இவை வலதுசாரியாகத்தான் உள்ளன.

LCR தீர்மானம், "கம்யூனிச, சோசலிச, பசுமைக் கட்சி வாக்காளர்கள், உறுப்பினர்கள்" ஆகியோரை இலக்குக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறுகிறது; அதேபோல "மரபு வழி இடதில் இருந்து தோன்றியுள்ள கூறுகளையும்" இலக்கு கொண்டுள்ளது. ஆயினும், எந்த அடிப்படையில் சீர்திருத்தக் கட்சிகளின் இந்த உறுப்பினர்களும், முன்னாள் உறுப்பினர்களும் ஒன்றாக ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஒன்று சேர்க்கப்படுவர் என்பது முற்றிலும் தெளிவாக்கப்படவில்லை. அவர்கள் தங்களுடைய பழைய கட்சியைப் பற்றி ஏமாற்றம் கொண்டுவிட்ட காரணத்தால் அவர்கள் தங்களுடைய கட்சிகளின் சீர்திருத்தக் கருத்துருக்களிலிருந்து முறித்துக் கொண்டுவிட்டனர் என்றோ அல்லது அக்கட்சியின் சரிவிற்கான காரணத்தை அறிந்து தேவையான அரசியல் படிப்பினைகளை கற்றுக் கொண்டுள்ளனர் என்றோ பொருள் கொள்ள முடியாது.

LCR ஐ பொறுத்தவரை இந்த அரசியல் பிரச்சினைகள் பற்றி விளக்குவது அவர்களுடைய உளநோக்கமாக இல்லை என்பது முற்றிலும் வெளிப்படை. பதிலாக, அது இந்த மாறுபட்ட மற்றும் மோதல்கள் கொண்ட அரசியல் போக்குகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவர விரும்புகிறது. அதன் நோக்குநிலை இந்த அமைப்பின் உறுப்பினர்களை முற்றிலும் ஈர்ப்பதாக மட்டும் இல்லாமல், அவற்றின் தலைமையையும் ஈர்ப்பது ஆகும். எனவேதான் LCR, எடுத்துக்காட்டாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடத்துடன் பலமுறையும் விவாதங்களை நடத்திவருகிறது. PCF-ம் தீர்மானித்தால், LCR அதையும் "முதலாளித்துவ-எதிர்ப்பு இடது" என்ற அணிசேர்தலுள் ஒரு உறுப்பாக வரவேற்கத் தயாராக இருக்கிறது.

LCR ஒட்டுப்போட்டு அமைக்க முற்படும் இத்தகைய வடிவற்ற மற்றும் பல்வேறான உட்கூறுகளைக் கொண்ட அமைப்பு, சமூக நெருக்கடிக் காலங்களில் ஒவ்வொரு அரசியல் இயக்கமும் எதிர்கொள்ளவேண்டிய கருத்தியல் மற்றும் அரசியல் அழுத்தங்களை தாங்க முடியாது என்பது தெளிவாகிறது. ஏப்ரல் 21, 2002 அன்று நடந்து கொண்டதைப் போல் (ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்), சிராக்கின் "குடியரசு முகாமிற்கு" கொடியை அசைத்து நின்ற நிலைபோல், LCR எதிர்வினை கொடுக்குமேயாயின், இன்னும் ஆழ்ந்த நெருக்கடி நிலையில், "முதலாளித்துவ எதிர்ப்பு இடது" போன்ற முற்றிலும் பல்வேறுபட்ட உட்கூறுகளை கொண்ட குழுக்களின் தாறுமாறான கலவை எத்தகைய எதிர் விளைவைக் காட்டும்?

முதலாளித்துவ அமைப்பின் உள் முரண்பாடுகளை ஆளுமை செய்யும் விதிகளால் அத்தகைய நெருக்கடிகள் அபிவிருத்தி அடைகின்றன, ஆனால் அவற்றின் வளர்ச்சியும், விளைவுகளும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் கணக்கில் அடங்கா அனுபவங்கள், அத்தகைய நெருக்கடிகளில் தொழிலாள வர்க்கம் கொண்ட வெற்றி அல்லது தோல்விகள், அதன் தலைமையின் தயாரிப்பு, அரசியல் பக்குவம் மற்றும் தலைமையின் விடாப்பிடியான தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமைந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. LCR தான் அதன் பிரெஞ்சுப் பகுதி எனக் கூறிக் கொள்ளும் (இந்த உரிமை பற்றிப் பின்னர் பேசுவோம்), நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டம், தற்செயலாக கீழ்க்கண்ட சொற்களுடன், அதாவது: "உலக அரசியல் நிலைமை ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியால்தான் பிரதானமாக பண்பிடப்படுகிறது."(3) என்பதுடன் ஆரம்பித்ததல்ல

இந்த நெருக்கடியைத் தீர்ப்பது தன்னுடைய பொறுப்பாக LCR கருதவில்லை. இல்லாவிடில், அது அதன் அரசியல் முன்னோக்கை தெளிவுபடுத்துவதில் மற்றும் தன்னை சீர்திருத்த, இடைநிலை வாத, குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நிகழ்ச்சிப்போக்கில் கடுமுயற்சி எடுத்திருக்கும். இக்கருத்தை "குறுங்குழுவாத தன்மை உடையது" என அது வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது. அவ்வாறு அது செய்திருந்தால், LCR அதிகாரத்துவக் கருவிகள், தாராளவாத அறிவுஜீவிகள், மத்தியதர வகுப்பு எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியவற்றின் அணிகளில் பல நண்பர்களை இழந்துவிடும். ஒரு தைரியமான, சமரசத்திற்கு இடம்கொடாத முன்னோக்கு, இடது பேச்சுக்களுக்கு கைதட்டல், விளைவற்ற வெற்று எதிர்ப்புக்கள், வெற்றியடையாத வேலைநிறுத்தங்கள் இவற்றில் களைப்புக் கொண்டவர்களை ஆற்றல் நிரம்பிய புது சக்திகளாக ஈர்த்திருக்கும், துணிவான மற்றும் தொலை நோக்கான நோக்குநிலையை தேடும் சக்திகளை ஈர்த்திருக்கும். எவ்வாறாயினும், இது LCR உடைய இலக்கு அல்ல.

ஓர் உண்மையான சோசலிச இயக்கம் வளர்ச்சி அடைவதற்கு மேலதிகமான தடையாகத்தான், அனைத்து இயக்கத்தையும் "இடது" என தழுவிக் கொள்ளும் இயக்கம் ஏற்படுத்திக்கொள்ளும். பிரெஞ்சு அக்டோபர் வருகிறது என்றால், LCR லெனினையோ, ட்ரொட்ஸ்கியையோ அல்லாமல், கெரென்ஸ்கியைத்தான் ஆதரிக்கும்.(4) ஆழ்ந்த நெருக்கடிக் காலங்களில், பிற்போக்கானது திருப்பித் தாக்குவதற்கு போதுமான அளவு வலிமை பெறும்வரை, மக்களை குழப்ப, முடக்க, செயலற்றதாக்கும் பொருட்டு ஆளும் வர்க்கங்கள் அடிக்கடி இத்தகைய தளர்ந்துள்ள, இடைநிலைவாத அமைப்புக்களை பயன்படுத்தும். இத்தகைய பணி பிரான்சிலும் ஸ்பெயினிலும் மக்கள் முன்னணி இயக்கங்களால் 1930 களிலும், அதேபோல சல்வடோர் அலண்டே (Salvador Allende) ஆல் சிலியிலும் நடந்தது.

பிரான்சில், ஆளும் செல்வந்த தட்டு, நீண்ட காலமாகவே இந்தப் வார்த்தைஜால- புரட்சிகர இடது என்ற கருத்தை தன்னுடைய அரசியலுக்கு ஆள் சேர்ப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1997லிருந்து 2002வரை பெரும்பான்மை கொண்டிருந்த இடது அரசாங்கத்திற்கு தலைமைதாங்கிய, சோசலிஸ்ட் கட்சியின் லியோனல் ஜொஸ்பன் ஆவார். 1970 களின் நடுப்பகுதியில் இருந்து, 1980கள் முழுவதுமே ஜொஸ்பன் Organisation Communiste International (OCI) இன் இரகசிய உறுப்பினராக இருந்திருந்தார். இக்கட்சியே Parti des Travailleurs (PT, தொழிலாளர் கட்சி) என்னும் கட்சியின் முன்னோடியாகும்; அத்தகுதியில்தான் அவர் சோசலிஸ்ட் கட்சியின் தலைமையிடத்திற்கு உயர்ந்தார். (5)

ஆயினும், ஜொஸ்பன் ஒருவர் மட்டுமே உதாரணம் இல்லை. 1970களில் LCR இல் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும், இப்பொழுது பிரான்சின் தினசரி பத்திரிகைகளில் முன்னணியில் இருக்கும் Le Monde இன் தலைமை ஆசிரியருமான எட்வி பிலனெல் (Edwy Planel) அவருடைய புத்தகமான இளமையின் இரகசியங்கள்- (Secrets of Youth) இல்: "நான் ஒருவன்தான் என்று இல்லை: எங்களுடைய தொடர்பு ட்ரொட்ஸ்கிச அல்லது ட்ரொட்ஸ்கிசம் அல்லாத இயக்கங்களில் இருந்த பின், பல்லாயிரக்கணக்கானவர்கள், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தீவிர இடதாக இருந்தவர்கள், பழைய போர்க்குண படிப்பினைகளை துறந்துவிட்டோம். இன்று நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம், அப்போதைய எமது பொய்த்தோற்றங்களை விமர்சனத்துடன் திரும்பி பார்க்கிறோம், ஆயினும், எங்கள் ஆரம்ப கோப உணர்வை இழக்காமலும், நாங்கள் கற்ற படிப்பினைகளுக்கு பட்டுள்ள நன்றிக்கடனை மறைக்காமலும், திரும்பிப் பார்க்கிறோம்." (6) என கூறியுள்ளார்.

ஆளும் செல்வந்தத் தட்டின் பெரும் விரிசல் தன்மையை அம்பலப்படுத்திய 1995-96ல் ஏற்பட்ட எழுச்சி இயக்கத்திற்கு பின்னர் ஜொஸ்பன் அரசாங்கத்தை பொறுப்பெடுத்தார். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ஜொஸ்பனுடைய இடதுசாரி ஒளிவட்டம் மறைந்து விட்டது, இது ஜனாதிபதித் தேர்தலில் அவரது தோல்வியில் நிரூபிக்கப்பட்டு விட்டது. வருங்கால நெருக்கடிகளில், ஆளும் செல்வந்தத் தட்டு இடதிலிருந்து புதிய முண்டு கொடுப்புக்ககளுக்கான தேவைகளை கொண்டிருக்கும். இந்த இலக்கைக் கருதி, LCR தன்னுடைய "முதலாளித்துவ எதிர்ப்பு இடது" என்பதைக் கொடுக்கிறது.

"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு" பிரியா விடை

கடந்த நவம்பரில் நடைபெற்ற காங்கிரசில், LCR இன் அமைப்பு விதிகளில் இருந்தே "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்றொடரை நீக்கியது தற்செயலான நிகழ்வு அல்ல. அதன் விதிமுறைகளில் எந்த மார்க்சிச அமைப்பும் இந்தக் குறிப்பிட்ட சூத்திரப்படுத்தலை கட்டாயமாகப் பயன்படுத்தவேண்டும் என்று கிடையாது; இதற்கும், பல மார்க்சிச கருத்துருக்களைப் போலவே பரந்த அளவு பிழையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், பல பத்தாண்டுகளில் ஸ்ராலினிசத்தால் இச்சொல் தவறாகவும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதை ஒரு புனித செயற்கை பொருளாக எடுத்துச்செல்லவேண்டும் என்ற கட்டாயமும் எந்த மார்க்சிச அமைப்பிற்கும் கிடையாது. ஆயினும், அதன் உள்ளடக்கம் தவிர்க்க முடியாத அடிப்படை அரசியல் பிரச்சினையுடன் தொடர்புடையது: முதலாளித்துவ அரசின்பால் காட்டப்படும் ஓர் மனப்பாங்காகும்.

லெனிள் 1917 அக்டோபர் புரட்சியின்போது, அரசு பற்றிய மார்க்சிச புரிதலை மிகுந்த கவனத்துடன் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் மார்க்சிச சொற்றொடரான "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்றொடரின் பொருளைத் தெளிவு படுத்தினார். (7)

"சர்வாதிகாரம்" என்ற சொல் முதல் எடுத்துக்காட்டில், ஒவ்வொரு அரசிலும், ஜனநாயகமாயினும், எதேச்சாதிகாரமாயினும், ஒரு வர்க்க ஆட்சியின் கருவி என்பதை தெளிவாக்குகிறது. "மார்க்சின் கருத்தின்படி, அரசு என்பது வர்க்க ஆட்சியின் கருவி, ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் ஒடுக்கு வதற்கான கருவி, இது 'ஒழுங்கு' என்பதை தோற்றுவிக்கும், வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை சாந்தப்படுத்துவதன் மூலம் இந்த ஒடுக்குமுறையை சட்டபூர்வமானதாக்கும் மற்றும் நிலைக்க வைக்கும்" என்று லெனின் எழுதினார்.(8) எனவே, சோசலிசப் புரட்சியின் பணி, முதலாளித்துவ அரசுக்கு ("முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம்"), பதிலீடாக தொழிலாளர் அரசை ("பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்") கொண்டுவருவது ஆகும்.

தொழிலாள வர்க்கம் அரசை உள்ளிருந்தே, அதாவது அரசின் கருவிகளை, அதன் இராணுவம், போலீஸ், அரசின் அதிகாரத்துவம் இவற்றைக் கைப்பற்ற முடியாது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார். 1871 பாரிஸ் கம்யூன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மார்க்சும் எங்கெல்சும் ஏற்கனவே, "தொழிலாள வர்க்கம் தயாராக உள்ள அரசு எந்திரத்தை தான் எடுத்துக் கொண்டு தன்னுடைய நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது" என்ற முடிவிற்கு ஏற்கனவே வந்துவிட்டனர்.

பழைய அரசு எந்திரம் "ஆயிரக்கணக்கான இழைகளால் முதலாளித்துவத்துடன் கட்டுண்டு, அன்றாடச் செயல்களிலும், செயலற்ற நிலையிலும் எல்லாப்பகுதியிலும் பரவி பிணைந்து இருக்கிறது." (லெனின்), ஒரு சோசலிச அமைச்சர் அதற்குத் தலைமை தாங்குவதனால் அது அதனுடைய வர்க்கத் தன்மையை மாற்றிக் கொள்ளுவதில்லை. இந்த அரசு நொருக்கப்பட்டு புதியதொன்று ஏற்படுத்தப்படவேண்டும். இந்தப் பிரச்சினையில், லெனினைப் பொறுத்தவரையில், மார்க்சிசத்திற்கும் மற்ற அனைத்து சந்தர்ப்பவாத வடிவங்களுக்கும் இடையே மிகவும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. இதுதான் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்பதை ஒப்புக்கொள்வதின் மையத் தன்மை ஆகும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புக்களை போன்றே, லெனினுடைய எழுத்துக்களும் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின்" ஒவ்வொரு வடிவமும், எந்த முதலாளித்துவ அரசையும் விட ஒப்பிடமுடியா வகையில் கூடுதலான ஜனநாயகமயமானதாக இருக்கும், அது சோசலிசத்திற்கு மாறுகையில், முற்றிலுமாக உலர்ந்து உதிரும் என்பதை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்துகின்றன. "முதலாளித்துவத்தின் கீழ் ஜனநாயகமானது, கூலி அடிமை முறை, வறுமை மற்றும் துன்பநிலை ஆகிய அனைத்து நிலைமைகளாலும் தடுக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது, தடைசெய்யப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது" என்று அவர் எழுதினார். மேலும் "சோசலிசத்தின் கீழ், ஜனநாயகத்தின் பழைமை முறை தவிர்க்கமுடியாத வகையில் புதுப்பிக்கப்படும், ஏனென்றால் முதல்முறையாக நாகரிகம் அடைந்துள்ள சமுதாயத்தில் மக்கட்திரளினர் வாக்களிப்புக்களிலும் தேர்தல்களிலும் ஒரு சுதந்திரப் பங்கினை வகிப்பர் என்று மட்டும் இல்லாமல், அரசின் அன்றாட நிர்வாகத்திலும் பங்கை வகிப்பர். சோசலிசத்தின்கீழ் அனைவரும் சுழற்சி முறையின் படி ஆள்வர்; விரைவில் ஒருவருடைய ஆட்சி என்பது இராது." எனவே லெனினுடைய கருத்துருவான "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" பின்னர் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் தோன்றிய எதேச்சதிகார, அதிகாரத்துவ மோலோக் (குழந்தைகள் பலியிடப்பபட்ட செமிட்டிக் கடவுள் சிலை) நடத்திய விதத்தை நியாயப்படுத்த இடம் அளிக்காது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்றொடரை நடைமுறையில் அது எப்பொழுதோ கைவிட்டு முதலாளித்துவத்திற்கு முற்றிலும் விசுவாசமாக இருந்தபோதிலும்கூட, 1976ம் ஆண்டு வரை அதன் வேலைத்திட்டங்களில் கொண்டிருந்தது. இறுதியில் இந்தச் சொற்றொடரிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டபோது, அது கணிசமான ஆர்வப் பாராட்டை விளைவித்தது. முதலாளித்துவ அரசாங்கத்தினுள்ளே நுழைவதற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தயார்நிலையின் அரசியல் அடையாளமாக அது கருதப்பட்டது; உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அது அவ்வாறே செய்தது.

LCR தன்னுடைய தற்போதைய செயல்களுக்கும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இன் செயல்களுக்கும் ஒப்புமை இருப்பதை மறுப்பதற்கு கடும் முயற்சிகள் செய்து வருகின்றது. கட்சியின் செய்தி தாளான, Rouge தன்னுடைய டிசம்பர் 11, 2003 வெளியீட்டில் தன் வாசகர்களுக்கு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்றொடர் நீக்கம் முற்றிலும் "ஒரு பெயரளவு முறையே ஒழிய, உள்ளடக்கம் தக்கவைத்துக் கொள்ளப்படும்.... எங்கள் இயக்கம் ஒரு சோசலிசப் புரட்சிக்காக, தொழிலாளர் அதிகாரத்திற்காக நிற்கிறது." "இப்புதிய சூத்திரப்படுத்தலை, லெனின் மற்றும் அவருடைய தோழர்களால் செய்யப்பட்ட எந்தவித உண்மை அல்லது தவறுகள் என்று கூறப்படுபவையின் அடிப்படையில் நியாயப்படுத்துதல் தவறாகும்." (9)

இந்த மறுப்புக்கள் இருந்தபோதிலும்கூட, முதலாளித்துவ அரசுடனான அதன் உறவு பற்றி இப்பொழுது தீவிரமான விவாதங்கள் LCR க்குள்ளேயே நடைபெற்று வருகின்றன. இவ்விவாதத்தின்போது, லெனின் செய்ததாகக் கூறுப்படும் தவறுகள் பற்றிய விவாதங்கள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல், பிரெஞ்சு முதலாளித்துவ குடியரசிற்கு ஆதரவு கொடுப்பது பற்றியும் அது வெளிப்படையாக எண்ணிப்பார்க்க தலைப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம், Rouge இதழில் பிரான்சுவா ஒலிவியே (Francois Ollivier) என்னும் LCR உடைய முன்னணி சர்வதேசப் பிரதிநிதிகளில் ஒருவர் எழுதிய கட்டுரையில், லெனின், ட்ரொட்ஸ்கியைப் பற்றிய அழுத்தமான விமர்சனத்துடன் சேர்த்து "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கருத்தின் மீது தாக்குதல் தொடுத்தார்.

"ரஷ்ய புரட்சியாளர்களின் பிழைகளுக்கு ஒருவர் திரும்பவேண்டி இருக்கிறது" என ஒலிவியே எழுதினார். "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில், விசேட சூழ்நிலையின் விளவாக எழுந்த தனித்தன்மை வாய்ந்த அரசாங்க வடிவமைப்பாக புரிந்து கொள்ளப்பட்டது; இதையொட்டி லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் பல போல்ஷிவிக் தலைவர்கள் எடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் புதிய புரட்சிகர அமைப்புக்களினுள்ளே ஜனநாயகத்தை மூச்சுத் திணற அடித்தன: அவற்றில் குழுக்கள் மற்றும் சபைகளை பலிகொடுத்து சோவியத் ஜனநாயகத்திற்குப் பதிலாக, கட்சியின் அதிகாரத்தைக் கொண்டுவந்தது; புதிய அரசியல் அமைப்பு நிர்ணய சபைக்கு அழைப்புவிடுக்க மறுத்தது, இறுதியாக, போல்ஷிவிக் கட்சியிலேயே பிரிவுகளுக்கு (கன்னைகள்) தடையைக் கொண்டு வந்தது ஆகியவை அடங்கும். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தியது, 1918 லிருந்து 1924 வரைதான் என்றாலும், அது அரசையும் கட்சியையும் ஒன்றாக்கி, படிப்படியாக அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கிவிட்டது.

இத்தகைய துன்பியலான வரலாற்று அனுபவம் இந்தச் சொற்றொடரின் பயனை செல்லுபடியற்றதாக்கி விட்டது." (10)

ஒலிவியேயின் வாதம் ஒரு பழைய பல்லவியின் புதிய மாறுதல் வடிவம்தான்; இதன்படி, சோவியத் ஒன்றியத்தின் சீரழிவு 1917 அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தை போல்ஷிவிக்குகள் கைப்பற்றியதினால்தான் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்தச் சீரழிவிற்கான காரணம் ஸ்ராலின் என்றில்லாமல் லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது.

நிலைமையை சமாளித்துக்கொள்ள, ஒலிவியே "ரஷ்ய புரட்சியின் பிழைகள்" 1918 லிருந்தே தொடங்கியதாகக் கூறுகிறார். ஆனால், இந்த "பிழைகள்" 1918 ம் ஆண்டிலேயே, "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" செயல்படுத்தப்பட்டதின் விளைவு என்றால், பின்னர் மிகப்பெரிய "பிழை", தர்க்கரீதியாக அச்சர்வாதிகாரத்தை 1917 லேயே ஏற்படுத்தியதாகத்தான் இருக்க முடியும். ஒலிவியேயின் முடிவுரைகள், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி உட்பட, மார்க்சிசத்தின் முழு மரபியத்தையும் முற்றிலும் நிராகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இத்தத்துவம் 1906ம் ஆண்டிலிருந்து ரஷ்யப் புரட்சியின் ஜனநாயகப் பணிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம்தான் தீர்க்கப்படமுடியும் என்று வலியுறுத்தியிருந்தது.

LCR இன் மற்றொரு முக்கிய உறுப்பினராகிய கிறிஸ்ரியான் பிக்கே (Christian Picquet) பிரெஞ்சு குடியரசை ஆதரிப்பதோடு அதன் மதிப்பீடுகளை LCR இன் திட்டங்களின் முக்கிய, மூலோபாயமான அச்சாகக் கொள்ள விழைகிறார். இதுதான் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, அவருடைய புத்தகமான Republic in Turmoil: Essays for a Left of the Left என்ற நூலின் முக்கிய செய்தியாகும்.(11) இதில் பிக்கே, LCR 2002ம் ஆண்டுத் தேர்தலில், ஜாக் சிராக்கின் "குடியரசு முன்னணியில்" சேர்ந்த பொழுது கொண்டிருந்த மனப்பாங்கை பொதுமைப்படுத்துகிறார்.

தன்னுடைய அணுகுமுறையை நியாயப்படுத்த, பிக்கே பிரான்சில் இடது சிந்தனை உடையவர்கள் குடியரசிடத்தில் பிரத்தியேகமான உறவைக் கொண்டுள்ளனர் எனக் கூறுகிறார். ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் மக்கள் வெறுப்பு, இனவெறி இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலமும், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றுக்காக ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலமும், வலதுசாரித் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்க்கின்றனர், இந்த மதிப்பீடுகள் அனைத்தும் வரலாற்றுக் காரணங்களினால் பிரெஞ்சு குடியரசின் சிந்தனை முறையின் எண்ணங்களாக வெளிப்பட்டுவிட்டன. எனவே 2002 ஜனாதிபதித் தேர்தல்களில் இரு வாக்குப்பதிவிற்கு இடைப்பட்ட அமைதியற்ற காலக்கட்டத்தில், மக்கள் குடியரசின் பெயரால் தெருக்களுக்கு வந்துவிட்டனர் என்று பிக்கே கூறுகிறார்.

இதைப் பின்தொடர்வது பிரான்சின் வரலாறு பற்றிய திரித்தல் ஆகும்: "பொய்த் தோற்றம் [குடியரசு] 200 ஆண்டுகளுக்கும் மேலாக உடைமை வர்க்கங்களின் பேய் ஆட்டிப்படைப்பது போன்ற கூறுபாட்டைக் கொண்டிருந்தது. எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளால் ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தப்பட்டபோது, தங்களுடையது என்று அவர்கள் கருதியதை பிற்போக்குத்தன்மை அல்லது குருட்டுத்தன்மை மீண்டும் எடுத்துக் கொள்ளக்கூடும் என்று தோன்றியபோதெல்லாம், நாம் கணக்கில் அடங்கா மக்கள் எழுச்சியைக் கண்டிருக்கிறோம். 1789 லிருந்து 1796 வரை, 1830 லிருந்து 1848 வரை, பின்னர் பாரிஸ் கம்யூன் காலத்தில் இருந்து Dreyfus Affair வரை, பின்னர் மக்கள் முன்னணிக் காலத்தில் இருந்து தடுப்பு இயக்க காலம் வரை, விடுதலை பெற்றதில் இருந்து அல்ஜீரியா ஆட்சிக் கவிழிப்பு வரை, ஐந்தாம் குடியசில் பலமுறை இவை இயங்குமா என்பதே கேள்விக்குள்ளாகிவிட்ட, பொதுப் பள்ளிகளை காத்திடலில் இருந்து தேசிய முன்னணிக்கு எதிரான போராட்டம் வரை, பின்னர் இடைவிடா ஒற்றுமையை சமுதாய காப்புத் திட்டத்திற்கு (Sécu Social insurance Scheme) காட்டியதில் இருந்து பொதுப்பணிகள் உடைக்கப்பட அனுமதிக்கப்படமாட்டா என மறுத்தவரையில், ஒவ்வொரு பெரிய இயக்கத்திலும் பொதுவான தன்மையாக இருந்தது இந்த "குடியரசை சார்ந்தவர்களின் ஒன்றுகூடலின்" பல மாறுபட்ட வடிவமைப்புக்கள்தான்."

இவருடைய குடியரசு பற்றிய பரவசத்தில், நூலாசிரியர் பிரெஞ்சுக் குடியரசு, அதன் ஆரம்பத்தில் இருந்து ஐந்தாம் குடியரசு வரை எப்பொழுதும் முதலாளித்துவ ஆட்சியின் கருவியாகத்தான் இருந்தது, இருந்துவருகிறது என்பதை மறந்துவிடுகிறார். குடியரசில் மக்கள் பற்றிய இவருடைய உற்சாகம் நிறைந்த கற்பனைத் தோற்றங்கள் முறையே, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் புரட்சிகரமான எழுச்சிகளை தடைசெய்ய சமூக ஜனநாயகவாதிகளாலும், ஸ்ராலினிஸ்டுகளாலும், மேற்கொள்ளப்பட்ட உத்திகளால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. அத்தகைய பணியைத்தான் 1930 களில் மக்கள் முன்னணி (Popular Front) செய்தது, அது தொழிலாளர்களுக்கு பேரழிவு தரக்கூடிய தோல்வியில் முடிந்தது.

Rouge கூட சில மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகளை சுட்டிக் காட்டவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது. பிக்கே இன் நூலைப்பற்றிய ஒரு திறனாய்வாளர், குடியரசு என்பது "தொழிலாளர்களுக்கு பெருந்துன்பம் தரக்கூடிய பொறியாக" உள்ளது என கவனத்தை ஈர்க்க வைத்தார். இக்கருத்துத்தான் ஆளும் வர்க்கங்களுக்கும் சீர்திருத்த இயக்கத்திற்கும் இடையேயான அனைத்து வகையான புனிதமான கூட்டுக்களுக்கும் அடிப்படையாக இருந்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியரசு என்ற பெயரால், வட ஆபிரிக்கா, துணை சகாரா பகுதிகளில், இந்தோனேசிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிராக காலனித்துவ முறையில் படையெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன; இவற்றை தொடர்ந்து ஒடுக்குமுறை கொள்கையும் கட்டாயமான முறையில் இணைப்புக்களும் நியாயப்படுத்தப்பட்டன. "அமைச்சர் முறையின்" (சோசலிஸ்ட் அலெக்சாண்ட்ர் மில்லெரண்ட் 1899ல் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தார்) ஆரம்பத்தில் முதல் அனுபவத்தில் இருந்து, 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பின்னர் மக்கள் முன்னணி பொதுவேலைநிறுத்தத்தின் ஆக்க சக்தியை தீவிரக் கட்சிகளுடன் கூட்டுக்குள் திருப்பியவரையில், பின்னர் 1944-45ல் முதலாளித்துவ அரசின் மறுசீரமைப்பு வரை (சார்ல்ஸ் டு கோல் என்ற கபடமானவரின் தலைமையில், எதிர்ப்பு கலைக்கப்பட்டுவிட்ட நிலையில்), இவை அனைத்தும் குடியரசு என்ற போர்வையில் நிகழ்ந்த இவையாவும் முதலாளித்துவ அரசின் நிறுவனங்களுடன் அடையாளம் கொள்ளப்பட்டவை, திரும்பத்திரும்ப சமூக இயக்கங்களையும் நிராயுதபாணி ஆக்கியவை ஆகும்."(12)

உண்மை என்னவெனில் LCR முதலாளித்துவ அரசிற்கான ஆதரவை பகிரங்கமாக விவாதித்துக் கொண்டிருப்பதானது அது இதுதொடர்பாக எந்த மனத்தடையையும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த உள்ளடக்கத்தில்தான் அது "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்றொடரிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளும் முயற்சி புரிந்துகொள்ளப்படவேண்டும்; முன்பு இவ்வாறுதான் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி செய்திருந்தது, இந்தவகையில் முதலாளித்துவ அரசாங்கத்தின் கட்சிகளில் ஒன்றாக LCR இன் விருப்பத்திற்கான தெளிவான அடையாளத்தை காட்டுகின்றது.

தொடரும்

Notes
1) Rassembler la gauche anticapitaliste, http://www.lcr-rouge.org/appelanticap.pdf.
2) The "Tobin tax," after the American economist James Tobin who first advocated it in 1972, is the guiding policy of the French organisation Attac (Association for the Taxation of Financial Transactions for the Aid of Citizens), founded at the end of 1997 and now comprising a number of affiliates in Europe and internationally. The Tobin tax is a tax that would be charged on all international currency transactions. See "Globalisation, Jospin and the political programme of Attac," 10 September 2001, http://www.wsws.org/articles/2001/sep2001/att-s10.shtml.
3) Leon Trotsky, The Transitional Programme, Labor Publications, 1981, p.1
4) Alexander Kerensky was the leader of the bourgeois Provisional Government that replaced Tsarist rule in Russia after the Tsar abdicated in February 1917. His government was subsequently overthrown in the October 1917 Revolution, led by V. I. Lenin and Leon Trotsky.
5) See also: "Lionel Jospin and Trotskyism," 27 June 2001 http://www.wsws.org/articles/2001/jun2001/josp-j27.shtml; "Leader of the French OCI acknowledges past relations with Prime Minister Jospin," 13 November 2001 http://www.wsws.org/articles/2001/nov2001/jos-n13.shtml.
6) Edwy Plenel, Secrets de jeunesse, Èditions Stock 2001, p. 21-22.
7) V.I. Lenin, State and Revolution, August 1917.
8) Ibid.
9) Le pouvoir des travailleuses et travailleurs, Rouge 2043, 11/12/2003.
10) Et la dictature du prolétariat?, Rouge 2040, 20/11/2003.
11) Christian Picquet, La République dans la tourmente. Essai pour une gauche à gauche, Syllepse 2003.
12) Pierre-François Grond and François Sabado, Révolution et République, Rouge 2051, 12/02/2004.

Top of page