World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The British working class and the 2005 general election

பிரித்தானிய தொழிலாள வர்க்கமும் 2005 பொதுத் தேர்தலும்

Statement by the Socialist Equality Party (Britain)
12 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

மே 5ம் தேதி நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் பிரச்சினை, வெளிநாடுகளில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஏகாதிபத்திய இராணுவாதத்திற்கும், உள்நாட்டில் சமூக நலன்கள் மீதான தாக்குதல் கொள்கைக்கும் எதிரான சுயாதீனமான அரசியல் பதிலை வழங்குவதாகும்.

1997ம் ஆண்டு, பழைமைவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு அலைகளால் ஆதரிக்கப்பட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததிலிருந்து தொழிற்கட்சி தன்னுடைய வலதுசாரி கொள்கைகள் மூலம், பெருகிவரும் எதிர்ப்பினை ஒடுக்கும்வகையில், இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் டோரிக்கள்தான் மீண்டும் பதவிக்கு வரும் சாத்தியம் ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆனால், கடந்த எட்டு ஆண்டுகள் தெளிவாக்கியுள்ளதுபோல், "புதிய தொழிற்கட்சிக்கும்" (New Labour), "பழைமைவாதிகளுக்கும்" இடையே முக்கிய வேறுபாடு ஒன்றும் எந்தக் கொள்கையிலும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டுமே பெருவணிகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறந்த முறையில் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக் கொண்டுதான் நிற்கின்றன.

ஈராக்கிற்கு எதிராக பிரிட்டனை ஒரு சட்டவிரோதப் போருக்கு தலைமையேற்று அழைத்துச் சென்ற இரண்டாண்டுகளுக்குள், தொழிற்கட்சி மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பிற்காக தேர்தலில் நிற்கிறது. ஒவ்வொரு நாளும் சிரியா, ஈரான், வட கொரியா மற்றும் பல நாடுகளுக்கு எதிராக ஆட்சி மாறுதல்களுக்காக புதிய அச்சுறுத்தல்கள் வெளிவருகின்றது. வாஷிங்டனால் "கொடுங்கோன்மைக்கு எதிரான போர்" என்ற முறையில் புதிய பெயரிடப்பட்டு, இதன் பின்னணியில் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு தன்னுடைய உலக மேலாதிக்க உந்துதலை முன்னெடுத்து செல்லும் முயற்சியை கொண்டுள்ளது.

போர் உந்துதலுடன், நீண்டகால ஜனநாயக உரிமைகளின் மீதான தொழிற்கட்சியின் திட்டமிட்ட தாக்குதல்களும் இணைந்துள்ளன. ஒரு புதிய சகாப்தமான ஏகாதிபத்திய நவ-காலனித்துவம், மற்றும் பொது மக்களுடைய இழப்பில் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக பொருளாதார, சமூக உறவுகள் ஆகியவற்றை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எவ்வித எதிர்ப்பு ஏற்பட்டாலும் அவற்றை அடக்குவதைத்தான் இது இலக்காக கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிற்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அழைப்பைவிடவில்லை. தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கும் ஓர் அரசியல் பிரிதிநிதிகளாக தொழிற்கட்சி சித்தரிக்கப்படலாம் என்ற நிலை எப்பொழுதோ மறைந்துவிட்டது. பிரதம மந்திரி டோனி பிளேயரை சுற்றியுள்ள குழு "புதிய தொழிற்கட்சி" கருத்தை பிரகடப்படுத்தியது, முதலாளித்துவ முறையை எதிர்ப்பதாக கூறியிருந்த கொள்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததில் இருந்து கட்சி தலைமையும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் அதன் ஆதரவாளர்களும் நீண்ட காலமாக அகன்றுவிட்டதன் உச்சக்கட்டமாகத்தான் வெளிவந்தது.

பெருவணிகம் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவந்து சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் பாதுகாப்போம், என்றிருந்த தொழிற்கட்சியின் பழைய கொள்கைகள் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப்பட்டுவிட்டன; அப்பொழுது கட்சி தலைவராக இருந்த ஜேம்ஸ் காலகன், சர்வதேச நாணய நிதியத்தினதும் (IMF), மற்றைய பிரிட்டனின் பெரும் நிதியளிக்கும் நிறுவனங்களும் கோரியிருந்த வகையில், ஊதிய உறைதலையும் மற்ற சமூக தாக்குதல்களையும் நியாயப்படுத்தும் வகையில் நன்கறிந்த வகையில் வலியுறுத்திக் கூறியதாவது: "அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதின் மூலமும், வரிக்குறைப்புக்கள் மூலமும் மந்த நிலையில் இருந்து மீண்டு விடலாம் என்ற கருத்தை நாங்கள் கொண்டிருந்தோம். ஆனால் அத்தகைய முறை இனிப் பலனளிக்காது என்பதை வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன்."

இன்று தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக்காக்கும் என்ற போலித்தன நிலைப்பாட்டைக்கூட தொழிற்கட்சி கொள்ளவில்லை; பெருவணிகத்திற்கு சிறிதும் அசைந்து கொடுக்காத விசுவாசத்தை தான் கொண்டிருப்பது பற்றியும் அது வெட்கப்படவில்லை. மேலும், உத்தியோகபூர்வ அரசியலுக்குள் தொழிற்கட்சியின் வலதுசாரி தீர்வுகளுக்கு உண்மையான எதிர்ப்பும் இல்லை. முன்பெல்லாம் தாராளவாத ஜனநாயகவாதிகளாவது தொழிற்கட்சிக்கு இடதாக நிற்க விரும்பியிருந்தனர்; ஆனால் இப்பொழுது அவர்களும் கூடுதலான வலதுபுறம் சார்ந்தே நின்று, பெருவணிகத்திற்கு ஆதரவளிக்க பிளேயருடன் போட்டியிடுகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில், தொழிற்கட்சிக்கு சோசலிச மாற்று கொடுக்கிறோம் என்று வெளிப்பட்டுள்ள குழுக்களும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தப் புதிய அரசியல் உறைவிடத்தையும் கொடுக்கவில்லை. பிளேயர் மற்றும் அவருடைய போர்வெறிக்கும் விரோதம் காட்டுபவர்களின் ஆதரவை அவர்கள் ஈர்க்க முற்பட்டாலும், அவர்களுடைய கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் சமூகநிலைகளை மற்றும் வேலைகள் பாதுகாப்பு ஆகியவற்றை வெளிப்படையாக பாதுகாக்க தவறிவிட்ட சீர்திருத்த கொள்கைகளுக்கு ஒரு புதிய வடிவத்தை கொடுக்க விரும்புகின்றன. .

இந்நிலை தொழிலாள வர்க்கம் உண்மையாக தேர்ந்தெடுப்பதை இல்லாதொழித்துள்ளதுடன், தங்களுடைய சுதந்திரமான நலன்களை வெளிப்படுத்துவதற்கு கூட அவர்களுக்கு அரசியல் அமைப்பு இல்லாமல் போய்விட்டது.

பிளேயருக்கு எதிராக உள்ள பரந்த எதிர்ப்பானது, முன்னோடியில்லாத வகையில் எதிர்ப்பு வேட்பாளர்களையும், கட்சிகளையும் வெளிப்படுத்தும் என்பது உறுதிதான். ஆனால் அத்தகைய "ஒற்றைப் பிரச்சினை" அரசியலால் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. அரசாங்கத்தின்மீது சீற்றத்தைப் வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. போருக்கான உந்துதலும், தொழிலாளர்கள் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களின் அடிவேர்களுக்கு எதிராக போராடுவதன் மூலம்தான், அதாவது முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராகவே வெற்றிகரமாக போராடமுடியும்.

இந்த தேர்தல்களினால் எழுப்பப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினை, ஒரு புதிய கட்சியை அமைக்க வேண்டிய அவசரத் தேவையை உணர்த்துகிறது; அக்கட்சி ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கினால் ஆயுதபாணியாக்கப்பட்டு, போர், காலனித்துவம், சமூக சமத்துவமின்மை இவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை திரட்டுவதை தனது பணியாகக் கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அலைத்துலகக் குழுவின் பிரித்தானிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய முன்னோக்கை முன்வைக்கிறது.

ஈராக்கும், காலனித்துவத்தினையும் போரையும் நோக்கி திரும்புதலும்

1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர், எதிர்க்கமுடியாத உலக மேலாதிக்கம் என்ற தன்னுடைய இலக்கை இறுதியாக அடைவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராகிவிட்டது.

உலக வர்த்தக மையத்தின் மீதான செப்டம்பர் 2001 பயங்கரவாத தாக்குதலை, புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்து அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், ஈராக்கின் மீது சட்டவிரோதமான போரைத் தொடுத்து வெற்றி காண்பதற்கும், இழிவுணர்வுடன் ஒரு போலிக் காரணமாக பயன்படுத்தியது. இது காஸ்பியன் பகுதி மற்றும் மத்திய கிழக்கு என்ற உலகின் இரு முக்கியமான எண்ணெய் உற்பத்தி இடங்களை தன் பிடியில் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

இத்தகைய முறையில் இராணுவ வாதத்தினையும், காலனித்துவத்தை வெற்றிகொள்வதை நோக்கி திரும்பியதானது வெள்ளை மாளிகையில் இருக்கும் குடியரசுக்கட்சி கும்பலின் அகநிலையான விருப்பங்களின்படி நிகழ்வது அல்ல. அதிகாரத்தில் யார் இருந்தாலும் அடிப்படையில் வேறுவிதமாக விஷயங்கள் நடந்திருக்காது. போருக்கான உந்துதல் என்பது அமெரிக்க முதலாளித்துவ அமைப்பு முறையில் இருக்கும் தீர்க்கப்பட இயலாத பொருளாதார, சமூக முரண்பாடுகளின் விளைவாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு என்பது முதலாளித்துவ முறையில், உலகளாவிய முறையில் இணைக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்திற்கும், உலகம் தேசிய அரசுகளாக பிரிக்கப்பட்டுள்ளதற்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாட்டை கடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்; அதற்காக அது அமெரிக்கா என்னும் ஒரு நாடு ஏனைய நாடுகள் அனைத்திலும் மேலாக தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட விழைகிறது.

தன்னுடைய பொருளாதாரச் சரிவு, மற்றும் தன்னுடைய ஆசிய, ஐரோப்பியப் போட்டியாளர்களின் அறைகூவலை சமாளிப்பதற்கும் ஒரு வழியாக, பொறுப்பற்றமுறையில் இராணுவ மேன்மையை பயன்படுத்தலாம் என அமெரிக்கா நம்புகின்றது. இந்தப் பாதையின் வழியாகச் சென்றால், இனி பின்வாங்க முடியாது. ஜனாதிபதியாக ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்பட்ட முந்தைய வண்ணச் சொற்கள் மாற்றப்பட்டு இன்னும் கூடுதலான முறையில் அனைத்தையும் உட்படுத்திக் கொள்ளும் "கொடுங்கோன்மைக்கு எதிரான போரை" தொடக்குதல் என்ற உறுதிமொழி கொடுக்கும் சொற்றொடர் வந்துள்ளது. இந்தப் புதிய, வசதியான கொடியின் உதவியை கொண்டு வாஷிங்டன் அல் கொய்தாவுடன் தொடர்புபடுத்த வேண்டியது, அல்லது பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது என்று ஈராக்கிய போர் ஆரம்பத்திற்கு முன் கூறியது போல் கூறவேண்டிய அவசியமில்லாமல், தனக்குப் பிடிக்காத எந்த நாட்டின் மீதும் இலக்கு கொண்டு போர் தொடுக்கலாம்.

"ஆட்சி மாற்றம்" என்பது ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்ற கருத்துடன் தொடர்பற்றதல்ல. அதனது நோக்கம் மிகப் பெரிய சர்வதேச வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் மீது தடையற்ற ஆட்சியை சுமத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இருக்கும் ஆட்சியை மிரட்டுதலோ அல்லது அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்பு இயக்கங்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளுவதோ முடியாவிட்டால், இராணுவ வலிமையை பயன்படுத்தி தமக்கு இணங்கி நடக்கும் அரசாங்கம் ஒன்று நிலைநிறுத்தப்படும்.

இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாற்றுவகை செயற்பாட்டிற்கு பிளேயரே முக்கிய, முதன்மையான கூட்டாளியாக இருந்திருக்கிறார். வாஷிங்டனுடன் நெருக்கமாக பிணைந்து நின்று, போரின் பங்குகளில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்புவதுடன், ஐரோப்பிய போட்டியாளர்களான ஜேர்மனி, பிரான்ஸ் இவற்றிற்கெதிராக பிரிட்டனின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

அவருடைய அரசாங்கம் அமெரிக்க பிரச்சாரத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும், திருப்பத்தையும் பிரதிபலித்துள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாக நிற்பதற்கு எத்தகைய போலிக் காரணமும் பிளேயருக்குப் போதுமானது: ஈராக் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருந்தது என்ற பொய்க்கூற்று, ஈரானிலும் வட கொரியாவிலும் அணுவாயுதத் திட்டங்கள் இருக்கின்றன அல்லது லெபனானின் மீதான சிரிய ஆக்கிரமிப்பு அல்லது ஆபிரிக்க நாடுகளில் அரசாங்கத்தில் ஊழல் என்ற யாவும், அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு பிளேயருக்கு உடன்பாடான கூற்றுக்கள்தான்.

பிளேயருடைய கொள்கை அவருக்கு பிரித்தானிய முதலாளித்துவ முறையின் ஆதிக்கம் மிகுந்த பிரிவுகளின் ஆதரவைக் கொடுத்துள்ளபோதிலும்கூட, அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவு பிரிட்டனின் சொந்த தேசிய நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று அரசியலில் உள்ள ஒரு சில பிரிவுகளிடையே எதிர்ப்புணர்வையும் தூண்டியுள்ளது. ஐரோப்பாவுடன் நெருங்கிய பொருளாதார தொடர்பு கொண்டு ஐரோப்பிய வணிக முகாமிற்குள்ளும் சிறப்பிடம் வேண்டும் என்ற நிலையில், அமெரிக்காவுடன் "சிறப்பு" அரசியல், பொருளாதார கொள்கைகளுக்காக நம்பியிருக்க வேண்டும் என்றால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய போட்டியாளர்களுடன் உள்ள உறவுகள் சீர்கெடலாம் என்ற சங்கடத்தை பிளேயரின் நிலைப்பாடு வெளிப்படுத்துகிறது.

இப்படி ஒரு சமநிலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய வழிவகையில், ஈராக்கிய போரில் பிளேயர் கொண்டுள் தந்திரோபாயமுறை முற்றிலும் கொள்கையற்றதாக இருப்பதாக அரசியல் அமைப்பினுள்ளே உள்ள சில பிரிவினரால் விமர்சிக்கப்படுகின்றது. தாராளவாத ஜனநாயகவாதிகளும், தொழிற்கட்சியினரினையே எதிர்க்குரல் கொடுக்கும் ரொபின் குக், கிளேர் ஷோர்ட் போன்றவர்களும் இராணுவாதத்திற்கும் மற்றும் சிறிய நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் பெரும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அல்லர். ஆனால் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான பேரவாக்களுக்கு தடை செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயலும் ஐரோப்பிய சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்து, அதன் மூலம்தான் பிரிட்டன் உலகில் முக்கிய இடங்களில் தன்னுடைய மூலோபாய நலன்களை பாதுகாக்கமுடியும் என்றும் கூறுகின்றனர். இறுதியில், பிளேயரின் பெரும்பாலான பெயரளவு எதிர்ப்பாளர்களும் தங்களுடைய குறைகூறல்களை கைவிட்டுவிட்டு அவருடன் அணிவகுத்துத்தான் நிற்கின்றனர்.

பேர்லின் மற்றும் பாரிஸ் உடன் அல்லது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து கூட்டு வைத்துக் கொள்ளுவது ஒன்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உடன்பாட்டை கொள்ளுவதைவிட முற்போக்கானதல்ல. இதுவும் இராணுவாதம், போர் ஆகியவற்றை நோக்கிய ஒரு மாற்று வழிதான். உண்மையில் பிளேயர், அமெரிக்காவுடன் நெருக்கமான உடன்பாட்டை வைத்துக்கொண்டு, ஐரோப்பிய வணிக மற்றும் இராணுவ முகாமிலும் பிரித்தானியாவிற்கு ஒரு சிறந்த இடத்தை உறுதிப்படுத்துக் கொள்ளுவதில் முயன்று வருகிறார். தங்கள் பங்கிற்கு ஜேர்மனியும், பிரான்சும் வாஷிங்டனை திருப்தி செய்யும் பிரிட்டனின் முயற்சியை பிரதிபலிப்பதற்கும், தங்களுடைய இராணுவத்திறனை அதிகரித்து உலகில் மூலவளங்கள், சந்தைகள் ஆகியவற்றை மறு பங்கீடு செய்வதில் தங்கள் கரங்களை தாங்களே வலுப்படுத்திக் கொள்ளுவது என்ற இரண்டிற்கும் இடையே தவித்து ஊசலாடிக்கொண்டுள்ளன.

ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்

இராணுவ முறையை நோக்கி திரும்புதல் என்பது ஏற்கனவே கடுமையான இழப்புக்களை கொடுத்துள்ளது. போரின் விளைவாக கிட்டத்தட்ட 100,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் கிட்டத்தட்ட 9,000 பிரிட்டிஷ் துருப்புக்கள் உள்ளனர்; வாஷிங்டன் முடிவெடுக்கும் வேறு நடவடிக்கைக்கும் கூடுதலான துருப்புக்கள் அனுப்பப்படுவர் என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதல் ஏற்கனவே 1,500 அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புக்கள் உயிரிழந்துள்ளனர்; மற்றும் 11,000 துருப்புக்கள் காயமடைந்துள்ளனர் என்பதுடன் மிருகத்தனமான விளைவுகளுக்கு ஏராளமான மற்றவர்களும் உட்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் மக்களின் வரிசெலுத்துபவர்களுக்கு இப் போர் 7 பில்லியன் பவுண்டுகள் செலவைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் சித்திரம் கூட பிளேயரின் போர்வெறியை விளக்கப் போதுமானதாக தெரியவில்லை. "பயங்கரவாதத்தின் மீதான ஒரு போர்" என்பது அதற்குரியவர்கள் மீது நடத்தப்படவேண்டும் என்றால், பிளேயர் அரசாங்கம்தான் முக்கிய இலக்காக இருக்கவேண்டும்.

கடைசிக் கட்டத்தில், தொழிற்கட்சி பயங்கரவாத-எதிர்ப்பு சொல்வண்ணத்தை குடி உரிமைகளின் மீதான தாக்குதலுக்கு ஒரு காரணமாக பயன்படுத்தியுள்ளார். குவாண்டநாமோவில் நூற்றுக்கணக்கான மக்கள் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதில் அரசாங்கம் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதோடு மட்டுமின்றி, அபு கிராய்ப் சிறையிலும், பிரெட்பாஸ்கெட் முகாமிலும் இழைக்கப்பட்ட கொடூரங்களிலும் பங்கு கொண்டு, இதேபோன்ற ஜனநாயகத்தை அவமதிப்பது உள்நாட்டில் காட்டப்படுவதற்கும் சான்றுகள் உள்ளன.

ஒரு தூண்டுதலின்றி தொடரப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை நெறிப்படுத்துவதற்காக, அரசாங்கம், நாடு, செய்தி ஊடகம் ஆகியவற்றின் முழுக் கருவிகளும், பிரித்தானிய மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டன. முன்னரே தீர்மானித்திருந்த போருக்காக எந்தப் பொய்யும் கூறலாம் என்று அரசாங்கத்தால் கருதப்பட்டது. ஈராக்கில் இருந்து உடனடியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று பிரித்தானிய பொதுமக்களை பயமுறுத்த முற்பட்டாலும், திரைக்குப் பின் பாதுகாப்பு துறைகளுக்கு, போரை நியாயப்படுத்தும் வகையில் பிறர் கருத்துக்களை திருடுதல், போலி ஆவணத் தொகுப்புக்களை தயாரித்தல் ஆகியவற்றிற்காக உத்தரவும் இடப்பட்டது.

இத்தகைய முன்னோடியில்லாத பிரச்சாரத் தாக்குதல் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கம் அதை ஏற்கத் தயாரில்லாமல் நியாயமற்றது, தேவையற்றது என அவர்கள் கருதிய போருக்கு எதிராக மிகப் பெரிய எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு விடையிறுக்கும் வகையில், பிளேயர் மக்களுடைய விருப்பத்திற்கு கட்டுப்பட்டு தான் நடக்கவேண்டியதில்லை என்று அறிவித்தார். ஜனநாயக முறையில் பொறுப்புக் கூறுதலுக்கு தான் எவ்விதத்திலும் கட்டுப்பட்டவர் அல்ல என்பதை உறுதிபடுத்தும் வகையில், பிரிட்டனுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கும் முடிவை தான்தான் எடுப்பேன் என்றும் பிளேயர் அறிவித்தார்.

இவை ஒன்றும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்று கூற இயலாது. பிரிட்டிஷ் நடைமுறைக்குள் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு உறுதிகொள்ள வேண்டும் என்ற கருத்துடைய முக்கிய பிரிவு ஏதும் இல்லை என்பதைத்தான் ஈராக்கிய போரும் அதற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. பெயரளவிற்கு எதிர்ப்பு கொடுத்தபின்னர், பாராளுமன்றமும் ஈராக்கின் மீதான போரில் பிரிட்டன் பங்கு பெறுவதற்கு ஒப்புதல் கொடுத்தபின், போர் முயற்சிகளுக்கு ஆதரவையும் கொடுத்தது. போரை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட பொய்யுரைகளின் தொகுப்பு ஒன்றன் பின் ஒன்றாக தெரிய வந்த பின்னரும் கூட, பல விசாரணைக் குழுக்கள் மூலம், குறிப்பாக டாக்டர் டேவிட் கெல்லி என்ற முன்னாள் ஆயுத ஆய்வாளர் மரணம் பற்றி ஹட்டன் பிரபு நடத்தியது போன்றனவே, எந்தத் தவறையும் பிளேயர் அரசாங்கம் செய்யவில்லை என்ற அறிவிப்புக்கள்தான் தொடர்ந்தன.

இந்த வளர்ச்சிப் போக்கில் முக்கியமானது உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கம் முற்றிலும் சிதைந்த நிலையில் நின்று அரசாங்கத்திற்கு எதிராக எந்த அறைகூவலையும் கொடுக்க முடியாமற் போனதுதான். தொழிற்கட்சியும், அதன் தொழிற்சங்கக் கிளைகளும் மகாத்தான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட கலந்து கொள்ளாமலேயே இருந்தன; தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்புக்கள் அதிகாரபூர்வமாக இந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தன. இதன்பின்னர் இரு அமைப்புக்களுமே ஈராக்கிய ஆக்கிரமிப்பில் அரசாங்கத்திற்குப் பின் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த நிலைப்பாடு, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடுமையாக வர்க்கப் போராட்டங்கள் நடத்திப் பெறப்பட்ட சட்டபூர்வமான சுதந்திரங்களை, உரிமைகளை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆக்கம் கொடுத்தது.

மெளனமாக இருக்கும் உரிமை தள்ளுபடி செய்யப்பட்டது, ஒரே குற்றத்திற்காக ஒருவரை இருமுறை விசாரணைக்கு உட்படுத்துவது, ஆதாரமில்லாத சான்று, முந்தைய குற்றச்சாட்டுக்களில் கூறப்பட்டதை புதிய வழக்கில் சாட்சியமாக கொள்ளுதல் ஆகியவற்றை ஏற்றல் போன்றவன்றை கடந்த சில காலமாக தொழிற்கட்சி அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது நீதிமன்ற நடுவர்கள் கொள்கையை இல்லாதொழித்துவிட்டது. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற முறையில் சித்திரவதையின்போது திரட்டப்பட்ட சாட்சியங்கள் ஏற்கப்படலாம் என்றும் கூறப்பட்டுவிட்டது.

ஆட்கொணர்வு உரிமை, இன்னும் பல பிரிட்டிஷ் அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளும் அநேகமாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் குறைக்கப்படுகின்றன. நாட்டின் உள்துறை மந்திரி அல்லது ஒரு நீதிபதி கூறிவிட்டால் எவரும் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது வீட்டுக் காவலில் விசாரணையின்றி வைக்கப்படலாம் என்று வந்துள்ளது. குற்றமிழைக்கும் தன்மை உடையவராக ஒருவர் இருப்பார் என்ற சந்தேகம்கூட முன்னோடியில்லாத வகையில் குடியுரிமைகளை குறைப்பதற்காக நியாப்படுத்தப்பட்டு மேற்கோளிடப்படாலாம். அல் கொய்தாவைக் காரணம் காட்டி அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மக்கட்தொகுப்பின் பரந்த பிரிவுகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதத்தடையும் இல்லை.

இந்தத் தேர்தல் அரசாங்கத்தால், ஓர் அச்சம்மிக்க சூழ்நிலையை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்; இது புஷ் அவ்வாறு செய்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை பார்த்த நம்பிக்கையின் காரணத்தால் இவ்வாறு உள்ளது. தங்களுடைய பங்கிற்கு எதிர்க் கட்சிகள் தொழிற்கட்சியுடன் தாங்களும் ''பயங்கரவாதத்தின் மீது கடுமையாக'' இருப்பதாகப் போட்டியிட்டுக்கொண்டு, சட்ட ஒழுங்கு காத்தல், பள்ளிகளில் கூடுதலான கட்டுப்பாடு, புகலிடம் கோருவோருக்குக் கடும் விதிகள் ஆகியவற்றிற்கு கூடுதலாக தம்மை அர்ப்பணித்துள்ளன.

அதிகாரத்தில் இருக்கும்போது தொழிற்கட்சியின் வெறுக்கத்தக்க தன்மையின் செயற்பாடுகளின் காரணமாக, உதாரணமாக பழைமைவாதிகளே தங்களுடைய தேர்தல் முயற்சிகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக உணர்வை மத்திய புள்ளியாக கொண்டுள்ளனர். தொழிற் கட்சியை விடக் கடுமையாக தாம் இருப்போர் என்று அவர்கள் காட்டிக் கொள்ளுவதற்கு காரணமாக, அவர்கள் கூறுவது பிரிட்டனில் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஒரு வரம்பு வேண்டும், அதற்கு உட்பட்டுத்தான் அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்; உண்மையில் டோரிகள் இன்று பயன்படுத்தப்போகும் ஓர் அச்ச சூழ்நிலை, இனவெறி போன்றவற்றை தூண்டிவிட்டதற்காக அவர்கள் தொழிற்கட்சிக்கு நன்றிக்கடன் கூறவேண்டும். பல ஆண்டுகளாக செய்தித்தாட்களில் ஏராளமான கட்டுரைகள் புகலிடம் கோருவோர், குடியேறவிரும்புவர் மற்றும் நாடோடிகளை கடுமையான, தீய முறையில், அவர்கள்தான் அனைத்து சமுதாய கெடுதல்களுக்கும் காரணம் என்று கூறும் வகையில், அவர்களை தாக்கிய வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு விடையிறுக்கும் வகையில் தொழிற்கட்சி தன்னுடைய ஆட்சியில்தான் கூடுதலான எண்ணிக்கையில் புகலிடம் கூறுவோர் தடை முகாம்களில் தள்ளப்பட்டுள்ளதாகவும், நாடுகடத்தும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டுள்து என்றும் சலுகைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு விட்டதாகவும், கடுமையான நடவடிக்கைகளை குடியேற முற்படுவோர் மீது எடுப்பதாகவும் கூறுகின்றனர். புகலிடம் கோருவோரின்மீதான தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் குடியுரிமைகள் மீது நடத்தப்படும் பொதுத் தாக்குதல்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன; மேலும் பொதுநலப் பணிகள் பெரும் சுமையாக போய்விட்டதாகவும், அவற்றில் சில கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும் தொழிற்கட்சி வலியுறுத்துகிறது.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி

மேலோட்டமாக பார்த்தால் பயங்கரவாதம் பற்றிய அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்பட்டு விட்டது போலவும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பற்றிய கவலை பகுத்தறிவற்றது போலவும் தோன்றம். ஆனால் இப்பொழுது அரசாங்கம் தொடர்ந்து கொண்டுள்ள போக்கின் அடித்தளத்தில் ஓர் அரசியல், தர்க்க வாதம் இருப்பது தெரிய வரும்.

முதலில், ஆளும் தட்டு அதன் காலனித்துவ முறையிலான ஆதிக்க உந்துதல் சர்வதேச, உள்நாட்டு அளவில் எதிர்ப்பை தூண்டி விட்டுள்ளது என்பதை அறிந்துள்ளது. அத்தகைய எதிர்ப்பு முறியடிக்கப்பட வேண்டும் என்றால் முந்தைய சட்ட நெறிகளுக்குட்பட்ட நடவடிக்கைகள் பொருந்தா தன்மையைத்தான் கொண்டிருக்கும்.

இரண்டாவதாக, காலனித்துவ வெற்றிகளை கொள்ளுவதற்கு பெரிய சக்திகளை தூண்டும் இதே பொருளாதார கட்டாயங்கள்தாம், தொழிலாள வர்க்கத்தின் மீது மேற்கொள்ளப்படும் சுமைகளின் அளவை மிகப் பெரிய வகையில் அதிகரிக்கவும் கட்டாயப்படுத்துகின்றன. இது வர்க்க உறவுகள் இடையே வெடிக்கும் தன்மையுடைய திறனை கொடுத்துள்ளது.

ஆளும்தட்டு 1950கள் மற்றும் 1960களில் வழங்கிய சலுகைகள் அனைத்தும் இப்பொழுது பொதுநலத் திட்டங்களை தகர்ப்பதன் மூலம் திரும்பப் பெறப்படுகின்றன; மேலும் தொழிலாளர் சந்தையின் மீது கட்டுப்பாடுகளை தளர்த்துவதின் மூலமும், வரிவிதிகள் சுமையை பெருவணிகத்தின் முதுகுகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளுக்கு மாற்றுவதின் மூலமும் செயல்படுத்தப்படுகின்றன.

தொழிற்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் Institute of Public Policy Research கூட இங்கிலாந்தில் பிளேயர் அரசாங்கத்தின் கீழ் சமுதாய, அரசியல் வாழ்வு "வர்க்க மற்றும் செல்வத்தின்" அடித்தளத்தில் பெரும் பிளவிற்கு உட்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மக்கட் தொகையில் மிகச் செல்வம் கொழிக்கும் உயர் 1 சதவிகிதத்தினர் இப்பொழுது தேசிய வருமானத்தில் மிகக் கூடுதலான பங்கை 1930களில் இருந்து இல்லாத அளவிற்கு அனுபவிக்கின்றனர். பிரிட்டனின் மிகச் செல்வம் படைத்த உயர்மட்ட 1000 நபர்கள் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் 150 பில்லியன் பவுண்டுகளை தங்கள் செல்வத்துடன், 152 சதவிகித பெருக்கம் என்னும் முறையிலே அதிகரித்துள்ளனர். இப்பொழுது இங்கிலாந்தில் 40 பில்லியனர்கள் உள்ளனர்; இதுகாறும் இந்த அளவிற்கு இருந்தது கிடையாது.

பிளேயர் அரசாங்கம் லண்டனை ஒரு சொர்க்கபுரியாக இந்த செல்வந்தர் தட்டிற்கு உருவாக்கி கொடுத்துள்ளது; லண்டன் பெருகிய முறையில் தொழிற்கட்சியின் சமூக அடித்தளமாக மாறிக்கொண்டு வருகிறது. சமீபத்திய New Statesman கட்டுரை ஒன்று கூறியது: "லண்டனில் 40 பில்லியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது; இதில் 13 பேர் வெளிநாட்டினராவர். உலகத்தில் வேறு எங்கும் இத்தகைய நிலை கிடையாது. வெளிநாட்டினர் திறந்த கரங்களுடன் வரவேற்கப்படுகின்றனர். லண்டன் நகரம், வரிவிலக்குகளுக்கான உலகத்தின் மிக முக்கியமான சொர்க்கபுரியாக மாறிவிட்டது. அவர்கள் ஓர் இணை உலகத்தை இங்கு நடத்திவருகிறார்கள்; அவர்கள்தான் பெருமதிப்புடைய விளையாட்டு படகுகள், சொந்த ஜெட் விமானங்களை வைத்திருப்பதோடு மற்றும் அவர்களின் தேவைகளை, வினியோகிப்போரால் ஈடுசெய்ய முடியாதுள்ளது. உலகத்தில் வேறு எங்கு நீங்கள் 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள, வைரம் இழைத்துள்ள நீச்சல் ஆடையை வாங்க இயலும்?

இதற்கு முற்றிலும் எதிராக பல தொழிலாளர்களும் நகரத்திலும் புறநகரங்களிலும்கூட வசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவகையான சமூகப் பிரிவினைகள்தாம் பிரிட்டனின் முக்கிய நகரங்களிலும் தோன்றியுள்ளன.

இதற்கான காரணங்களை கண்டறிதல் கஷ்டம் அல்ல. மக்கட்தொகையில் அடிமட்ட 50 சதவிகிதமானவர்களின், பொதுச் செல்வத்தில் அவர்களுடைய பங்கு 1986ல் இருந்த 10 சதவிகிதத்தில் இருந்து 2002ல் 5 சதவிகிதத்திற்கு தள்ளப்பட்டுள்னர். தொழிற்கட்சியின் ஆட்சியின் கீழ் குறைந்த ஊதியம் அறிமுகப்படுத்தல், வரிவிதிப்பில் மாறுதல்கள் போன்றவை வறுமை-எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று கூறப்பட்டன; உண்மையில் அவை முதலாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்குவதைத்தான் இலக்காக கொண்டு, குறைவூதிய நிலைப் பொருளாதாரத்தை தோற்றுவிக்க உதவியுள்ளன. இதன் விளைவாக வறுமையின் பரப்பு விரிந்து தொழிற்கட்சியின் ஆட்சியில் இப்பொழுது "வேலையில் இருக்கும் ஏழை" (working poor) என்ற கருத்து வந்துவிட்டது; அதே நேரத்தில் இல்லங்களில் வசிக்கும் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் அதிகாரபூர்வமாக ஏழைகள் என்று வரையறுக்கப்பட்ட வீடுகளில் உள்ளனர்.

ஐரோப்பாவில் அதிக வருமானத்திற்கு குறைந்தவரி என்ற வகையில் பிரிட்டனின் வரிவிதிப்பு முறை உள்ளது. வருமானவரியின் வரிவிகிதத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மிகக் குறைந்த அளவில்தான் ஏழைகளுக்கு பலனை கொடுத்துள்ளன; பணக்காரர்கள் இப்பொழுது 1945க்கு பின்னர் இல்லாத வகையில் குறைந்த விகிதத்தில்தான் வரி செலுத்துகின்றனர். பொருட்களுக்கான வரி (VAT) என்ற வகையில் மறைமுக வரிவிதிப்பின்பால் ஏற்பட்டுள்ள மாற்றம் ஏழைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவிகிதத்தினர் தங்களுடைய மொத்த ஆண்டு வருமானமாகிய 6000 பவுண்டுகளுள் மூன்றில் ஒரு பகுதியை மறைமுக வரியாக செலுத்துகின்றனர்; 84,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் உயர் 10 சதவிகிதத்தினரைவிட இது கூடுதலான சுமையாகும்.

தொழிலாள வர்க்கத்தின் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி தனியார் கடன் மற்றும் செலுத்துமதி பாரியளவு அதிகரித்துள்ளது என்ற காரணியால் மூடுதிரையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தனிப்பட்ட கடன் 980 பில்லியன் பவுண்டுகள் என்று உயர்ந்தது; இது 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மாதம் ஒன்றுக்கு 10.7 பில்லியன் பவுண்டுகள் புதிய கடன்கள் என்று பெருகி வரும் நிலையில், தனிக்கடன்கள் 1 டிரில்லியன் பவுண்டு தரத்தை, அதாவது $1,000 பில்லியனை இந்தக் கோடையில் கடந்து சென்றுவிடும். இதன் பொருள் இங்கிலாந்தில் தனியார் கடன், முதல் தடவையாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளில் இருந்து வரும் தேசிய வருமானத்தை விட அதிகமாகிவிடும். சர்வதேச பின்னணியில் பாரத்தால், பிரிட்டனின் 58 மில்லியன் மக்களுடைய கடன் ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா இவற்றின் வெளிநாட்டுக் கடன்களின் கூட்டை விட அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான கடன்கள் குடும்பத்தின் வருமான உத்தரவாதம் என்பதைவிட வீட்டின் உத்தரவாதத்தின் கீழ் உறுதி அளிக்கப்பட்டுள்ளவை ஆகும். ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் பங்குகளின் விலைகள் சரிவையொட்டி, குடும்ப வீடுதான் பெரும்பாலான மக்களுடைய ஒரே கணிசமான சொத்து ஆகும்; இதுதான் ஓய்வுக்காலத்தில் காப்பு கூடாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சொத்துச் சந்தையில் (property market) எந்தச் சரிவு ஏற்பட்டாலும் மில்லியன் கணக்கான மக்கள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் தள்ளப்படுவர்; பொருளாதாரத்தின் முழுத்தன்மையிலும் பேரழிவு தரும் விளைவுகள் ஏற்பட்டு விடும்.

வறுமை, கடன்சுமை போன்றவை பெருகுவதை தொடர்ந்து, முக்கியமான சமூகநல சேவைகள், மற்றும் சமூகப் பணிகள் மீதும் தொழிற்கட்சி திட்டமிட்ட வகையில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தக் கொள்கைகள் டோரிகளின் தனியார்மயமாக்குதல், மற்றைய முயற்சிகளான பெரும் மூலதனத்தை கூடுதலான செல்வக் கொழிப்பிற்கு தள்ளும் முயற்சிகளையும் விட அதிகமாக உள்ளன; முன்பு அரசாங்கப் பணிகளாக இருந்து, அவற்றின் பாதுகாப்பிற்கு எதிராக ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதெல்லாம் பழங்கதையாக போய்விட்டது.

தொழிற்கட்சியின் கல்விக் கொள்கையும், பள்ளிகளை தனியார் துறைக்கு தாரை வார்த்துள்ளன. அரசாங்கப் பள்ளிகள் வணிகத் துறையில் இருந்து மூலதனத்தை பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; இதையொட்டி மாணவர் தேர்ந்தெடுப்பு என்பது திறமையை ஒட்டி என்று அமைந்து சமூகப் பிரிவினைகள் பெருகுவதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் ஜனநாயகம் என்ற கோஷத்தின் கீழ், பள்ளிகள் தங்களுடைய சொந்தக் கல்வித் திட்டத்தை நிர்ணயிக்கும் உரிமையைப் பெறும்; இந்த நடவடிக்கையின் மூலம் சமயத் தளமுடைய கல்வி அதிகரிக்கப்பட்டு கடவுளால் உலகம் தோற்றுவிக்கப்பட்டது என்ற வகையிலான கல்வி நெறிகள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதேபோல்தான் தொழிலாள வர்க்கத்தின் நீண்ட கால பொதுநல நடவடிக்கைகளில் தேசிய சுகாதாரத்துறையில் தனியார்மயமாக்குதல் மெதுமெதுவாக செயல்படுத்தப்படுதல், நிறுவன மருத்துவமனைகள் (Foundation Hospitals) என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதில் இருக்கிறது; மேலும் டோரிகளால் நிறுவப்பட்டுள்ள "உட்சந்தைகளின்" விரிவாக்கமும் இந்த நோக்கத்தை கொண்டதுதான். சுகாதாரத்தை செலவினத்தின் அடிப்படையில் பங்கு போட்டுக்கொள்ளும் ஒவ்வொரு வாய்ப்பும் நியாயப்படுத்தப்படுகிறது.

ஒரு தன்னலக்குழுவின் ஆட்சி

சமூகத்தின் மிகச் சிறிய பிரிவின் மகாத்தான செல்வ வளர்ச்சி பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியோடு தொடர்பு கொள்ளவில்லை. மாறாக இது பிளேயர் அரசாங்கத்தின் உந்துதலின் கீழ் பெருகியுள்ள ஒரு நிலைப்பாடான, மிகப் பெரும் செல்வந்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும், அது சொத்து, பங்குச் சந்தை ஊக வருமானம் இவற்றின் இணைப்பில் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளவேண்டும் என்ற தன்மையையை கொண்டுள்ளது.

உத்தியோகபூர்வமான அரசியல் என்பது இப்பொழுது மிக அதிக சலுகை பெற்றுள்ள சமூக தட்டுக்களின் பிரத்தியேகமான ஆதிக்க இடமாகும்; இது இன்னும் கூடுதலான வகையில் செல்வத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பது பொருளாதாரத்தை இன்னும் கூடுதலான முறையில் உலகந்தழுவிய முறையாக்க வேண்டும் என்பதுடன் பிணைந்து உள்ளது. இத்தகைய முன்னோடியில்லாத பிளவுபடுத்தும் தன்மையை முன்னின்று ஏற்படுத்தும் முயற்சிக்கு, தலைமை தாங்க தயாராக தான் இருப்பதை தொழிற்கட்சி காட்டிக் கொள்ளுவது, நிதி உயர் தன்னல குழுவின் ஆதரவை அதற்கு தேடிக் கொடுத்துள்ளது.

இப்படி வரலாற்றில் முன்னோடியில்லாத அளவிற்கு சமூகப் பிளவுகள் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை உண்மையான வகையில் தக்கவைத்துக் கொள்ளுவதுடன் பொருந்தாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

பாராளுமன்ற ஆட்சிமுறை என்பது, ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே ஆதரவை பெறும் திறமையில் தங்கியுள்ளது; எப்படிப்பட்ட விஷேடமான கொள்கைகளை அவை கொண்டு இருந்தாலும் அவை முதலாளித்துவ இலாப முறையை கேள்விக்கு இடம் கொடுக்காமல் காப்பதில் உறுதியுடன் இருக்கும். இத்தகைய ஆட்சியின் வடிவமைப்பு இறுதியில் சமூகப் பிரிவுகளின் நிலையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதிலும் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதிலும் ஆளும் வர்க்கத்தின் திறன் மற்றும் விருப்பம் என்பதில் தங்கியுள்ளது.

எப்படியிருந்தபோதும், தொழில்வல்லுனர்கள் மற்றும் உயர்மட்ட தொழிலாளர்கள் உட்பட, இன்று மக்களில் பெரும்பாலானவர்கள், பொருளாதார பாதுகாப்பற்ற தன்மை மற்றும் பெருகிவரும் கடன் தொல்லையை எதிர்கொண்டுள்ளனர். மக்கட் தொகையின் பெரும்பாலானவர்களின் இழப்பில் சிறுபிரிவின் செல்வத்தை கொழிக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் மக்களுடைய ஆதரவைப் பெறுதல் என்பது கடினமாகும். உண்மையில் பெருவணிக எஜமானர்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றால், முழு அரசியல் போக்கும் பொதுவான கட்டுப்பாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தை அரசாங்கங்கள் செயல்படுத்த வேண்டும் என்று ஆகிவிட்டது.

இந்த சமூக போக்குகளின் இறுதி வெளிப்பாட்டைத்தான் தொழிற்கட்சியின் அரசியல் வளர்ச்சி காட்டுகின்றது. வேறு எந்த முந்தைய அரசாங்கமும் பெற்றிராத அளவிற்கு அடித்தட்டு மக்களுடைய ஆதரவை அனுபவித்துள்ள பிளேயர் அரசாங்கம் டோரிக்களுடைய தொகுதிக் கோட்டைகளை கூட கைப்பற்றி பதவிக்கு வந்திருந்தது. நாட்டின் செல்வம் கொழிக்கும் பகுதிகள் அனைத்துமே இப்பொழுது தொழிற்கட்சிக்குத்தான் வாக்களிக்கும் என்று Financial Times குறிப்பிட்டுள்ளது.

முன்பு இல்லாததைவிட கூடுதலான முறையில், தேர்தல்கள் செய்தி ஊடக நிகழ்வுகளாக மாறிவிட்டன; பிரபல செய்தித்தாட்களின் ஆதரவைத் திரட்டி, பயத்தையும் குற்றங்கள், குடியேறுதல் போன்ற பிரச்சினைகளில் மக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதையும் கட்சிகள் இலக்காகக் கொண்டுள்ளன. "முக்கியக் கட்சிகள்" என்று அழைக்கப்படும் கட்சிகளில் இருந்து வலதுசாரி தீவிர அமைப்புக்களான பிரிட்டிஷ் தேசிய கட்சி, இங்கிலாந்து சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் முக்கிய கருத்துரைகளும் வலதுசாரி அரசியல் பார்வையையே கொண்டுள்ளன.

இதனுடைய இறுதி விளைவு உண்மையான அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து பரந்த மக்கட்திரளின் வர்க்க நலன்கள் புறக்கணிக்கப்படுவதே ஆகும்.

இத்தகைய தொழிற் கட்சிக்கு இடது பக்கத்தில் இருக்கிறோம் எனக் கூறிக்கொள்ளும் குழுக்களோ அல்லது கட்சிகளோ உண்மையான மாற்றீட்டை முன்வைக்கவில்லை. சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிச கட்சி மற்றும் சோசலிச தொழிற் கட்சி ஆகியவற்றின் அடிப்படை அரசியல் கொள்கை முதலாளித்துவத்தை அகற்றும் ஓர் உண்மையான சோசலிச திட்டத்தை ஏற்று, சுயாதீனமான தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்கு எதிர்ப்பைக் காட்டுவதாகத்தான் இருக்கிறது. பழைய தொழிலாள வர்க்க அமைப்புக்களிடம் இந்த அமைப்புக்கள் முன்பு வெற்றிகொண்டிருந்த சீர்திருத்தப்போக்கு கொள்கைகள் தோற்றுவிட்டன என்பதை கூடுதலாக உணர்ந்த அளவில் தொழிலாளர்கள் விரோதப்போக்கு கொண்டு அதிலிருந்து அந்நியப்படுகையில், இந்த ''இடது" குழுக்கள் தொழிலாளர்களுக்கு ஒரே வழி என்று வலியுறுத்தி தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அழுத்தம்கொடுப்பதன் மூலம் மீண்டும் குறைந்த பட்ச சமூக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் பிளேயருக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க நிர்ப்பந்திக்கலாம் என்றும் வலியுறுத்தி கூறுகின்றன.

இது ஈராக் போரிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு காட்டிய பிரதிபலிப்பில் மிகத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டது. போரை நிறுத்துக என்ற கூட்டினை சுற்றிவந்த இந்த அமைப்புக்கள் முதலாளித்துவ-எதிர்ப்பு அரசியலை வெளிப்படையாக கூறுதல் என்பது தாங்கள் சோசலிஸ்டுகள் அல்ல என்று கருதுபவர்களில் இருந்து அந்நியப்படுதலை தவிர வேறு எந்தப் பலனையும் தராது என்று வாதிட்டனர். இது ஆகக்குறைந்த ஜனநாயக, சமூக கோரிக்கைகளை அடித்தளமாக கொண்ட வர்க்க வேறுபாடற்ற கூட்டணியை அமைப்பதற்கு சாதகமான, ஆனால், தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட எவ்விதமான அரசியலையும் கைவிடுவதற்கான பரிந்துரையாகும்.

இந்த வலதுசாரி பாதை Respect என்ற அமைப்பின் உருவாக்கத்தில் முற்றாக வெளிப்படுகின்றது. இவ் அமைப்பு சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைமையால் பரப்பப்படும் மற்றும் தொழிற் கட்சியின் நீண்டகால தலைவராக இருந்த ஜோர்ஜ் காலோவேயால் தலைமை தாங்கப்படுகின்றது. ஒரு தெளிவற்ற போர் எதிர்ப்பு உணர்வையும் மற்றும் இன, சமய அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுமுழுதான அடிபணிதலையும் கலவையாக கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற முயற்சியில் பெரும் ஈடுபாட்டை அதன் முக்கிய தேர்தல் இலக்காக கொண்டுள்ளது.

Respect மட்டும் வர்க்க அரசியலுக்கு பதிலாக அடையாள அரசியலை மாற்றாக கொண்டிருக்கவில்லை. இங்கிலாந்து வகையில் இருந்து ஸ்கொட்டிஷ் சோசலிச கட்சி சிறுவிதத்தில்தான் வேறுபட்டுள்ளது; அது வெளிப்படையாக தேசியவாதம்தான் அரசியல் மூலோபாயத்திற்கு அடிப்படை என்று வலியுறுத்தியுள்ளது. இரண்டு குழுக்களுமே, முதலாளித்துவ அரசு என்பதை உலகந்தழுவிய பெருநிறுவனக் கொள்ளை முறையை எதிர்க்க பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்படலாம் எனக் கூறுகின்றன. அத்தகைய கொள்கை தொழிற்கட்சியின் பழைய சீர்திருத்தக் கொள்கையின் சீரழிந்த வெளிப்பாடுதான்.

ஒரு புதிய கட்சிக்கான தேவை

தொழிற் கட்சியின் வலதுசாரி வளர்ச்சிக்கான காரணங்கள் பிளேயர் போன்ற தனி நபர்களின் அகநிலை செயற்பாடுகளில் காண்பதற்கில்லை. சமுதாயத்தின் உண்மையான அடித்தளத்தில் ஏற்படும் ஆழ்ந்த மாறுதல்கள்தான் சீரழிவிற்கு காரணங்களே ஒழிய, தொழிற்கட்சி அல்லது பிரிட்டனில் உள்ள தொழிற்சங்கங்கள், அல்லது உலகத்தில் உள்ள நாடுகளில் காணப்படும் அதிகாரபூர்வ தொழிலாளர் கட்சிகளின் செயற்பாடுகள் மட்டும் காரணம் அல்ல

பொருளாதார வாழ்வு தேசிய அரசுகளின் அடிப்படையில் பெருமளவு கட்டமைக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்னைய சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச அமைப்புக்கள் தொழிலாளர்கள் இயக்கத்தை ஆதிக்கத்திற்குள் கொண்டிருந்தன. பிரிட்டன் போன்ற அபிவிருத்தியடைந்திருந்த நாடுகளில் அவை தொழிலாளர்களை தொழிற்சங்க கூட்டிற்குள் பிணைத்து வைத்திருந்ததுடன், ஆளும் வர்க்கத்தை சீர்திருத்த சலுகைகள் கொடுப்பதற்கு அழுத்தத்திற்குள்ளாக்குவதன் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவ முறையை பாதுகாத்தன.

இந்த சந்தர்ப்பவாத, தேசியவாத அதிகாரத்துவத்தினரின் நீண்டகால ஆதிக்கத்தின் விளைவு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் உணர்வை இல்லாதொழித்துள்ளது. இதையொட்டி 1980 களிலும், 1990 களிலும் ஏற்பட்ட தீர்மானகரமான மாறுதல்களுக்கு முற்றிலும் தயாரற்ற நிலையில் தொழிலாள வர்க்கம் தள்ளப்பட்டிருந்தது; அக்கால கட்டத்தில் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்தன; மேற்கில் சமூக ஜனநாயக கட்சிகள் சீர்திருத்த நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட்டுவிட்டன.

இத்தகைய வெளிப்படையான முறையில் பழைய அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்ததற்கு அடித்தளமாக இருந்தது பூகோளமயமாக்கலின் வளர்ச்சியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் உற்பத்தி, பங்கீட்டு முறை, பண்டங்கள் மாற்றுதல் ஆகியவற்றினை அனைத்துக் கூறுபாடுகளும் உலகந்தழுவிய தன்மைக்கு மாறியதுடன், தேசிய அடித்தளத்தை கொண்டிருந்த தொழிலாளர் அமைப்புக்களின் அடித்தளத்தையும் இல்லாதொழித்துவிட்டது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற வாதத்தை இலாபமுறையுடன் இணைத்துக் காக்கும் முயற்சிகளில் இனியும் ஈடுபடமுடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. உலகந்தழுவிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மூலதனம், பாரிய சர்வதேச பெருநிறுவன, நிதிய நிறுவனங்கள் வடிவமைப்பில் வெளிப்பட்டு, உலகில் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தியை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அது இருந்து, தேசிய அரசாங்கங்களுக்கு தன் விருப்பங்களை கட்டளையிடுகிறது. இதுகாறும் காணப்படாத முன்னோடியில்லாத அளவிற்கு, வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலும் பொருளாதார வெற்றி என்பது சர்வதேச முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற நிலையில், உலகச் சந்தைகளில் நிலவும் போட்டிகளின் கடுமையினால் சமூகநல செலவுகளை குறைக்கும் கட்டாயத்தையும், ஊதியங்களை குறைக்கும் நடவடிக்கைகளிலும், வேலை நிலைமைகளை கடுமையாக்கும் தன்மையிலும் வெளிப்பட்டு ஆசிய, கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் தன்மையை எங்கும் கொண்டுவரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிளேயரின் "புதிய தொழிற்கட்சி" என்ற கருத்தின் வளர்ச்சி, மற்றும் தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தின் கையாட்களாக மாறியுள்ள தன்மை, மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் விடையிறுப்பாக உள்ளன.

கடந்த காலத்தில் இருந்த நிலைமைக்கு திரும்புவோம் என்று கூறும் வகையில் தொழிலாளர் இயக்கத்தின் சீரழிவிற்கு தக்க விடையைக் காண்பது இயலாது. தேசிய பொருளாதார கட்டுப்பாட்டிற்கான அழைப்புக்கள், செயற்திறனற்றவை என்பது மட்டும் அல்லாமல் பிற்போக்குத்தனமானதும் ஆகும். அவை பெருவணிகத்தின் பெரும் கொள்ளைமுறையை எதிர்த்து நிற்கும் சக்தி அற்றதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் முயற்சிக்குத்தான் உதவும்.

ஒவ்வொரு நாட்டிலும், அனைத்து நாடுகளின் எல்லைகள் கடந்தும், மொழி, தேசம், தோல் நிறம் இவற்றிக்கு அப்பாற்பட்டு தொழிலாள வர்க்த்தின் ஒற்றுமைக்கு பாடுபட, போரிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக உள்ளது. இராணுவவாதம், போர் இவற்றின் உந்துதலுக்கு எதிராக ஓர் முக்கிய அடித்தளத்தை கட்டமைப்பதற்கும் இது உறுதுணையாக செயல்படும்.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப சமுதாயம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம். இந்த இலக்கை அடையும் பொருட்டு, பெரும்பான்மையான மக்களுடைய நலன்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மற்றும் தனியார் இலாபத்திற்கு அடிபணியாத ஒரு புதிய சமூகப், பொருளாதார ஒழுங்கு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம். இதுமட்டும்தான் வியத்தகு முறையில் இருக்கும் மனித, தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி வறுமையை முடிவிற்குக் கொண்டுவந்து, அனைவருக்கும் கெளரவமான வாழ்க்கைத் தரங்களையும், பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கித் தரும்.

* ஈராக்கிய ஆக்கிரமிப்பை கைவிடு. சோசலிச ஐரோப்பிய ஒன்றியத்திற்காக பாடுபடு

காலனித்துவ அடக்குமுறையை ஐயத்திற்கு இடமின்றி சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படைகள் அனைத்தும், அந்நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈராக்கில் இருந்து நிபந்தனையற்ற முறையில் உடனே வெளியேற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நடைபெற்ற படையெடுப்புக்களின் போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும், இப்பொழுது குவாந்தனாமோ மற்றும் பல அமெரிக்க சிறைச்சாலைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தடுப்புக் காவல் முகாம்களில் உள்ள கைதிகள் உட்பட, விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

அனைத்து பிரிட்டிஷ், வெளிநாட்டுப் படைகளை, அயர்லாந்து, பால்கன்கள், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா மற்று உலகத்தில் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் உடனடியாக திருப்பப் பெறவேண்டும் என்று கோருகிறோம்.

இராணுவவாதம், சமூக நலன்கள் அழிப்பு ஆகியவற்றிக்கு எதிரான சாத்தியமான எதிர்ப்புக்கு இன்றியமையாத அடிப்படை ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியாகும்.

ஐரோப்பிய கண்டத்தின் பொருளாதார, அரசியல் வாழ்வு ஏற்கனவே வியத்தகு முறையில் ஒன்றிணைந்த போக்கை கொண்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் முதலாளித்துவ முறையின் நலன்களுக்காக முக்கியமாக தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் செய்யப்பட்டதாகும்.

முதலாளித்துவ முறையில் ஐரோப்பிய ஒன்றியம் என்பது அமெரிக்கா, ஆசியா இவற்றிற்கு எதிராக வணிகத்திலும் மூலதனத்திலும் திறமையுடன் செயல்படும் வகையில் பரந்த உட்சந்தையை தோற்றுவிக்கவேண்டும் என்ற கருத்தில் விளைந்த முறையாகும். ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச நிறுவனங்களை தடைகளில் இருந்து விடுவிப்பதற்கும், சமுதாய நலக் காப்புக்களை அகற்றுவதற்கும், ஊதியங்களை குறைப்பதற்கும், ஐரோப்பிய இராணுவத் திறனை இணைந்த முறையில் வளர்ப்பதற்கும், ஒரு கருவியாக பயன்படுத்தும் வகையில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது; ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலதுசாரிக் கொள்கைக்கான எதிர்ப்பை தேசிய அரசின் அமைப்புக்களுக்கு பாதுகாப்பு என்ற முறையில் கையாளப்படவேண்டும் என்று முயலுவோர்களின் கருத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது; அவர்கள் தேசிய அரசு வடிவமைப்புக்கள் "கூடுதலான முறையில் பொறுப்புக் கொண்டிருக்கும்" அல்லது "ஜனநாயகத்தை" கொண்டிருக்கும் என்று அவர்கள் பிழையான வாதத்தை தளமாக கொண்டுள்ளனர். உற்பத்தி பூகோளமயமான நிலைமையில், தொழிலாள வர்க்கத்தின் செய்றபாடுகளை தேசிய அரங்கிற்குள் கட்டுப்படுத்துவது என்பது பேரழிவிற்கு வித்திட்டுவிடும்.

முற்போக்கானவகையில் ஐரோப்பிய ஒற்றுமையானது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைமூலம்தான் இயலும். ஐரோப்பிய சோசலிச ஒன்றியம் என்பது தொழிலாள வர்க்கம் தங்களுடைய சமூக, ஜனநாயக நலன்களை முன்னேற்றுவிக்கும் வகையின்மூலம்தான் கருத்துப்படிவம் பெறமுடியும். அப்பொழுதுதான் காலம் கடந்துவிட்ட முறையான தேசிய எல்லைகள் அகற்றப்பட்டு, இன்றியமையாத சமுதாய தேவைகளுக்காக உற்பத்திமுறை பகுத்தறிவான முறையில் சீரமைக்கப்படவும், திட்டமிடப்படவும் முடியும்.

மேலும், அது அமெரிக்கா இராணுவ வாதத்திற்கு எதிரான உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாக உருவெடுத்து ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கும்; அமெரிக்க தொழிலாளர்களுக்கும் புஷ் நிர்வாம் மற்றும் பென்டகன் போர் இயந்திரம் இவற்றிற்கெதிரான அவர்களுடைய போராட்டத்திற்கும் ஊக்கம் கொடுக்கும்.

*தொழிலாள வர்க்க அரசாங்கத்திற்காக போராடு

இலாப முறை என்பது பரந்த மக்கட்தொகையினரின் அடிப்படை தேவைகளுடன் பொருந்தாத தன்மை உடையது ஆகும். தொழிலாளர்களின் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம்; அது ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் சமூக, பொருளாதார நலன்களை காப்பதுடன் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவுகளின் மீது கட்டுப்பாட்டை கொள்ள வைக்கும்.

வாக்குரிமை, தேர்தல் உரிமைகள், குடி உரிமைகள் உட்பட அனைத்துக் கடந்த கால ஜனநாயக நலன்களையும் காப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அயராமல் பாதுகாக்கின்றது. வேலைநிறுத்தங்கள் மற்றும் மறியல்களுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; தேசம், இனப் பின்னணி, சமயம், பால் வேறுபாடு, பாலியல் முன்னுரிமைகள் போன்றவற்றினை அடிப்படையிலான சகல அவமதிப்புகளும் முற்றிலும் சட்டவிரோதமாக ஆக்கப்படவேண்டும். தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்தோர் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். அனைத்து குடியேற்ற, பயணத் தடைகளும் உடனடியாக கைவிடப்படவேண்டும் என்று அழைப்புவிடுகிறோம். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து வேலை செய்யும் உரிமை கொடுக்கப்படவேண்டும்; முழுக்குடியுரிமைகள் மற்றும் அனைத்து சமுதாய நலன்களுக்கும் அவர்களுக்கு வசதிகள் கொடுக்கப்பட வேண்டும். விரும்போது எவ்விதத் தடையும் இன்றி மகளிர் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை வேண்டும்.

ஆனால் ஜனநாயக உரிமைகள் பற்றிய சகல தன்மைகளும் வெறும் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற பெயரளவிலான நிலைக்கு அப்பால் செலுத்தப்படவேண்டும்; இது சமூக, பொருளாதார சமத்துவமற்ற தன்மைக்கு ஒரு வெறும் மறைப்பைத்தான் கொடுத்துள்ளது. உண்மையான ஜனநாயகம் என்றால் பொருளாதாரம் பற்றிய முடிவுகள் எடுத்தல், வேலைச் சூழ்நிலை பற்றிய விதிமுறைகள் மற்றும் தங்களுடைய அன்றாட பொருளாதார சூழல் பற்றி முடிவு எடுக்கும் உரிமை ஆகியவை சாதாரண மக்களுக்கு இருக்க வேண்டும். அத்தகைய உண்மையான ஜனநாயகம் அறிவு நிறைந்த, வர்க்க உணர்வுநிறைந்த உழைக்கும் மக்கள் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான அரசியல் அணிதிரட்டல் மூலம்தான் சாதிக்கப்பட இயலும்.

* சமூக சமத்துவத்திற்காக

பெரும்பாலான மக்களின் பொருளாதார பாதுகாப்பின்மையும், மில்லியன் கணக்கான மக்களுடைய வறிய நிலையையும் கொண்டுள்ள ஓர் உலகத்தின் தன்மைக்கு முற்றிலும் எதிரிடையான வகையில், நாம் சமூக சமத்துவத்தைத்தான் உண்மையான சுதந்திரமான, ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத அடிப்படையாக கொள்ளும் போராட்டம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அனைத்து பெரிய தொழில்துறை, விவசாய பெருநிறுவனங்களும், வங்கிகள், மற்றும் பெருநிதிய அமைப்புக்களும் பொது உடைமையாக ஆக்கப்பட வேண்டும்; சிறிய பங்குதாரர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்பட வேண்டும்; பெரிய பங்குதாரர்களுக்கு பொதுப் பேச்சு வார்த்தைகள் மூலம் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

முழு வேலை நிலை மற்றும் நல்ல ஊதியமுடைய வேலைகள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மிகப் பெரிய அளவில் பொது வேலைகள் அடங்கிய திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று கோருகிறோம். வேலைகள் தோற்றுவிக்கப்படுவதற்கும், தொழிலாளர்கள் இன்னும் கூடுதலான முறையில் அரசியல், கலாச்சார வாழ்வில் பங்கு பெறும் வகையிலும், வாரந்திர வேலைநேரம் 30 மணி நேரத்திற்கு, ஊதிய இழப்பு ஏதும் இல்லாமல் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வேலை செய்ய முடியாதவர்களான ஊனமுற்றவர்கள், தனிப்பெற்றோராக இருப்பவர், நோய்வாய்ப்பட்டுள்ளவர் போன்றோருக்கு வாழ்வதற்கு தேவையான ஊதியம் அளிக்கப் படவேண்டும்; இதையொட்டி அவர்கள் ஒரு கெளரவமான வாழ்க்கையை மேற்கொள்ள இயலும். அனைத்துக் குடிமக்களுக்கும் போதுமான ஓய்வூதியத் தொகை, ஓய்வு வயது வந்த பின்னர் கொடுக்கப்பட வேண்டும்; இப்பொழுது ஓய்வூதிய தொகைகளை முதலாளிகள் கொள்ளையடிப்பது குற்றம் என்று கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுகாதார, மருத்துவ வசதிகள், நல்ல கல்வி ஆகியவை அனைவருக்கும் அடிப்படை உரிமையாக, கட்டணம் ஏதுமின்றிக் கொடுக்கப்பட வேண்டும். பொது மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகள் நலவசதிகள் ஆகியவற்றிற்குப் பில்லியன் கணக்கான பவுண்டுகள் செலவழிக்கப்பட வேண்டும்; இப்பணிகளில் கருவிகள் நவீனதொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாக இருந்து, ஊழியர்களுக்கு தக்க பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். பொது வீடுகளை விற்கும் நிலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்; பாரியளவில் அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு வீடு கட்டிக் கொடுக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். வாடகைகளும், வீட்டு அடமானங்களும் குறைக்கப்படவேண்டும்; எந்த விதத்திலும் ஒரு தொழிலாளி தன்னுடைய ஊதியத்தில் உறைவிடத்திற்காக 20 சதவிகிதத்திற்கும் மேலாகச் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் விஞ்ஞான வளர்ச்சி கொள்கைகளுடன் இணைக்கப்படுவதோடு, கலாச்சார வாழ்விற்கும் கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்; பெரும்பாலான மக்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட வேண்டும்; அப்போதுதான் ஒவ்வொரு மனிதனும் முற்றிலும் வளர்ச்சி பெற்ற நிலையை அடைந்து சமுதாயமும் முழுமையாக செழிக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்பு

சோசலிச சமத்துவக் கட்சி என்பது நான்காம் அகிலகத்தின் பிரித்தானிய பிரிவாகும்; இது 1938ம் ஆண்டு, ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் எதிரான உலகந்தழுவிய சோசலிச புரட்சி முன்னோக்கை பாதுகாப்பதற்காக லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பெற்றது.

சோசலிசம் என்பது தொழிற்சங்க தீவிரவாதத்தின் விரிவாக்கப்பட்ட விளைவுதான் என்ற கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இது மிக உயர்ந்த அளவிலான கலாச்சாரத்தாலும் திட்டமிடுதலாலும், அரசியல் உணர்வு பெற்ற தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கையால், தன்னுடைய சொந்த கட்சியினால் வழிகாட்டப்படுவதன் மூலம்தான் உருவாக்கமுடியும்.

ஒரு சோசலிச கட்சியின் முக்கிய பணி தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியறிவு புகட்டி, உலக அறிவை உணர்த்துவதும் ஆகும்; அது தீர்க்ககரமான கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களுக்கு அடிப்படையாக இருக்கும். இந்த நோக்கத்தை கருத்திற் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதனுடைய இணைய தளமான உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவி தற்கால நிகழ்வுகள் பற்றிய மார்க்சிச ஆய்வை கொடுப்பதோடு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளருக்கு சோசலிசத் திட்டத்தையும் முன்வைக்கிறது.

போர், சமூக சமத்துவமற்ற நிலை, பிற்போக்குத்தனம் இவற்றிற்கு உண்மையான மாற்றை காண விரும்பும், பிரித்தானியாவில் உள்ள அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறு ஊக்குவிப்பதுடன், மற்றும் WSWS மூலம் எமது வேலைத்திட்டங்கள் பற்றிய விவாதங்களிலும் பங்கு பெறுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய வேலைத்திட்டங்கள், முன்னோக்குகள் இவற்றுடன் உடன்படுபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு புதிய தொழிலாள வர்க்க அரசியல் கட்சியாக கட்டியமைக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம்.

Top of page