World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Twenty years since the Air India bombings
Part 1: Why is the Canadian government resisting a public inquiry?

எயர் இந்தியா விமானம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிவு

பகுதி 1 : ஒரு பொது விசாரணைக்கு கனேடிய அரசாங்கம் ஏன் எதிர்ப்புக் காட்டுகிறது?

பகுதி 2

By David Adelaide
29 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது ஒரு இரு பகுதிக் கட்டுரையின் முதல் பகுதியாகும்.

வட அமெரிக்காவில் 2001 உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்வரை மிகவும் கொடுமையான பயங்கரவாதத் தாக்குதல் செயலாக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல்கள் நடந்து இருபது ஆண்டுகளுக்கு பின்னரும், கனேடிய அரசாங்கம் இதற்குப் பொறுப்பானவர்களை பிடித்து தண்டிக்கும் முயற்சி பற்றி பொதுவிசாரணை நடத்துவதற்கு தொடர்ந்து உறுதியாக எதிர்ப்பைக் காட்டிவருகிறது.

பிரதம மந்திரி போல் மார்ட்டின், குண்டுத் தாக்குதல் நடந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக, அயர்லாந்தில் உள்ள கோர்க் என்னுமிடத்திற்கு, ஜூன் மாதம் மரியாதை நிமித்தமாகச் சென்றார். கனேடிய பிரதம மந்திரியின் வருகையினால் முதல் முறையாக "ஆசீர்வதிக்கப்பட்ட" 20வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில், ஒரு புதிய நினைவுச் சின்னம் நிறுவப்படும் என்றும் "பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய" நினைவையொட்டி ஞாபகார்த்த ஆண்டு தினம் ஒன்று தொடக்கப்படும் என்றும் மார்ட்டின் அறிவித்தார்.

இத்தகைய நிழற்படம் எடுப்பு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த எயர் இந்தியா விசாரணை முடிவு மார்ச் 2005ல் முடிந்ததை அடுத்து, பொது விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளதை திசை திருப்புவதை வெளிப்படையான இலக்காகக் கொண்டது ஆகும். அந்த விசாரணையில் இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டதோடு மட்டும் இல்லாமல், கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை (Canadian Security Intelligence Service -CSIS) மிக அதிக அளவில் பெரும் சான்றுகளை அழித்துவிட்டதுடன், ஒருவேளை அதன் உளவாளி ஒருவரும் குண்டுத்தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்திருக்கக் கூடும் என்பதும் வெளியாயிற்று.

CSIS பற்றிய தகவல் வெளியீடுகள் பொது விசாரணைக்கு அரசாங்கம் ஏன் எதிர்ப்புக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுவதில் முக்கிய துணையாக உள்ளது. செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகளை காட்டி போலீஸ் அதிகாரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நடத்தக் கூடுதலான அதிகாரம் இவற்றை விரும்பும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டைப் போன்றே, கனேடிய ஆளும் செல்வந்தத் தட்டிற்கும் பாதுகாப்பு, பொது விசாரணை மூலம் மேற்கொள்ளப்படும் அவர்களுடைய உளவுத்துறைக் கருவிகள் பற்றிய எந்த ஆய்வும் வெறுக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது. தெற்கு ஆசியாவில் பிரிவினைப் போர் மற்றும் கனேடிய உளவுத்துறை, நாட்டுப் பாதுகாப்பு நிறுவனங்களில் பெரும் சீரமைப்பு இவற்றின் இணைப்பில் பொதிந்திருந்த எயர் இந்தியா பேரழிவு நாசவேலையை கடந்த கால நிகழ்வாகப் புதைப்பதில்தான் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

1985ம் ஆண்டு ஜூம் மாதம் 23ம் தேதியன்று, மொன்ட்ரியாலில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த எயர் இந்தியாவின் விமானம் ஒன்று ஐரிஷ் ஆகாயப்பகுதியில் நுழைந்த சற்று நேரத்தில் ஒரு குண்டுத் தாக்குதலினால் தகர்க்கப்பட்டது. அதற்கு 54 நிமிஷங்களுக்கு முன்பு ஜப்பானில் நாரிடா விமான நிலையத்தில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் இரண்டு சரக்கு ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இரண்டு குண்டுவெடிப்புக்களும் வான்கூவரில் சேர்ப்பிக்கப்பட்டிருந்த பயணிகளுடையதில்லாத சரக்கு என்று கண்டறியப்பட்டது; மேலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியான பஞ்சாப்பில் காலிஸ்தான் என்ற சுதந்திர சீக்கிய நாட்டை தோற்றுவிக்க வேண்டும் என்ற பிற்போக்கு பிரச்சாரத்தை தொடுத்துக் கொண்டிருந்த சீக்கிய பிரிவினைவாதிகளின் வேலை என்றும் கண்டறியப்பட்டது.

எயர் இந்திய விமானத் தாக்குதல் நடத்தப்படும் வரை, பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான பூசல் வியத்தகு முறையில் ஆழ்ந்த தன்மையை அடைந்திருந்தது. ஜூன் 1984ம் ஆண்டு இந்திய அரசாங்கம் அமிர்தசரசில் இருந்த தங்கக் கோயிலை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத தலைமையை தாக்குவதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டது. சீக்கியர்களின் புனிதமான இடமான பொற்கோவில் மீதான தாக்குதலில் 1000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் ஆவணங்களும் நாசத்திற்குள்ளாயின.

இத்தகைய முழு உணர்வுடன் கூடிய தூண்டுதல் மற்றும் அழிவு மிகுந்திருந்த செயற்பாடு வகுப்புவாதப் பூசலுக்கு எரியூட்டியதின் விளைவாக, அக்டோபர் 1984ன் கடைசிப் பகுதியில் இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தி தன்னுடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே கொலைசெய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்த நாட்களில் ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) தலைவர்கள் சிலர் சீக்கியருக்கு எதிரான கலகத்தை தூண்டிவிட்டு அதில் 3000 பேருக்கும் மேலானவர்கள் மடிந்தனர்.

1984ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று, இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான சீக்கிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடக்கப்பட்ட நேரத்தில், தொலைவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனேடிய பப்பர் கால்சா சீக்கியச் சங்கம் (Babbar Khalsa Sikh Society of Canada) அமைக்கப்பட்டது; இதன் நோக்கம் ஒரு சுதந்திர சீக்கிய நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று இருந்தது. இந்தச் சங்கத்தின் தலைவர் டல்வீந்தர் சிங் பர்மார்தான் எயர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல்களுக்கு பின்புல செயற்பாடு கொண்டிருந்தவர் என பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார். RCMP, தாக்குதல்களின் சில மாதங்களுக்கு பின்னர் பர்மாரை கைது செய்தது, ஆனால் போதிய சான்றுகள் இல்லாததால் அவரை விடுவித்துவிட்டது.

பர்மார் இந்தியாவிற்கு திரும்பினார்; அங்கு இந்திய போலிசாரால் 1992ல் கொல்லப்பட்டுவிட்டார். இவரைத் தவிர வேறு ஒரு நபர்தான் குண்டுத்தாக்குதல்களுடன் உறுதியாகத் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார். 1991ம் ஆண்டு இந்தர்ஜித் சிங் ரேயத் (Inderjit Singh Reyat) என்பவர் நாரிடா விமான நிலையத்தில் வெடித்த குண்டை கட்டமைத்ததில் பங்கு பெற்றதற்கு தண்டனை வழங்கப்பட்டு 10 ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு கொடுக்கப்பட்டது. 2001ல் இவர் விடுவிக்கப்பட்ட பின்னர், இவர் 182 பயணிகளை அழித்திருந்த குண்டு தயாரிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டார். மார்ச் 2003ல் குற்றத்தை ஏற்ற இவருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் குண்டுத் தாக்குதல் சதித் திட்டத்தில் வேறு இரு நபர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தால் ரேயட்டிற்குக் குறைவான தண்டனை எனப்பட்ட பேரம் நடந்திருக்கக் கூடியது ஏற்கத்தக்கதேயாகும். ரிபுடமன் சிங் மாலிக் (Ripudaman Singh Malik), மற்றும் அஜைப் சிங் பக்ரி (Ajaib Singh Bagri) என்ற இருவரும் 2002 அக்டோபரில் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர்கள்மீதான விசாரணைக்கு முன் 18 ஆண்டுகள் புலனாய்வுகள் நடந்து கிட்டத்தட்ட $100 மில்லியன் செலவழிக்கப்பட்டிருந்த போதிலும்கூட, நீதிபதி, அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்று கண்டறிந்தார்.

அரசுதரப்பு வழக்கு மாலிக்கும் பக்ரியும் தாக்குதல்களுக்கு தாங்களே பொறுப்பு எனக் கூறியதை நேரடியாகக் கண்ட பலரின் சாட்சியைத்தான் முற்றிலும் நம்பியிருந்தது. இந்த சாட்சிகளின் தன்மை நம்பிக்கையற்றது என்ற முடிவிற்கு நீதிபதி வந்தார்; அதற்குக் காரணம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இவர்களுக்கு தனிப்பட்ட காழ்ப்பு உணர்வு இருந்திருக்கலாம் அல்லது சாட்சியம் அளிப்பதில் இழி நோக்குப் பெற்றிருக்கலாம் அல்லது அவர்களின் அறிக்கைகளில் வெளிப்படையான பல முரண்பாடுகள் இருக்கலாம்.

அப்படி ஆதாரமற்று இருந்த வழக்கு ஏன் கொண்டுவரப்பட்டிருந்தது?

விசாரணை முடிந்த உடனேயே, சிலர், திறமையற்ற ஆய்விற்குக் காரணம் இன எதிர்ப்பு உணர்வு எனக் குற்றம் சாட்டினர். அந்த நேரத்தில் அப்பொழுதிருந்த அரசாங்கம் எயர் இந்திய விமானத் தாக்குதலை கனேடிய பிரச்சினை என்பதைவிட இந்தியாவின் பிரச்சினை என்று சித்தரித்தது உண்மையே. ஆயினும்கூட, இன எதிர்ப்புமுறை என்னும் வாதம் விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிப்பு பற்றிய அடிப்படைப் பிரச்சினையை மூடிமறைக்கிறது.

கனேடிய பாதுகாப்பு, உளவுத்துறைப் பிரிவுகள் தங்கள் செயற்பாடுகள் சிலவற்றை மூடி மறைப்பதற்காக இந்த ஆய்வை பெரும் சமரசப் பாதிப்பிற்கு உட்படுத்தினர் எனக் கூறுவதற்கு வலுவான குறிப்புக்கள் இருக்கின்றன.

CSIS ஐ பொறுத்தவரையில், எயர் இந்தியா விமானத்தின்மீதான தாக்குதலுக்கு முந்தைய மாதங்களில் அது பப்பர் கால்சாக் குழுவை கண்காணிப்பிற்கு உட்படுத்தித்தான் வைத்திருந்தது. முக்கிய சதிகாரரான டல்வீன்தர் சிங் பர்மாரின் செயல்கள் நெருக்கமான முறையில் கண்காணிக்கப்பட்டிருந்தன; அவருக்கு வந்த 300 தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் எயர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற உடன், இந்தப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் கிட்டத்தட்ட 246 ஐ CSIS அழித்து விட்டது!

ஜூன் 1985 ஆரம்பத்தில் CSIS பர்மர், ரேயட், இன்னும் ஒரு அடையாளம் காணப்படாத மனிதனை வான்கோவர் தீவின் கோடிப்பகுதிவரை தொடர்ந்தது; அவர்கள் அங்கு ஒரு வெடிகுண்டுச் சோதனை ஒன்றை நடத்தினர். ஆனால் ஒரு துப்பாக்கிவெடிச் சத்தத்தைத்தான் தன்னுடைய ஒற்றர்கள் வெடிகுண்டுச் சத்தம் என தவறாக நினைத்துவிட்டனர் என்று CSIS பின்னர் கூறியது. மிகப் பரந்த அளவில் ஒரு சோதனை வெடிப்பு வரை, அதுவும் முக்கிய சதிகாரர்களை தீவிரமாய் கண்காணித்ததே CSIS க்கு தாக்குதல்கள் பற்றி முன்கூட்டித் தெரிந்திருக்குமோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

ஆனால், பக்ரியுடைய RCMP ஆய்வுத் தகவல்கள் (RCMP யால் விசாரணையின்போது வெளியிடப்பட்டவை) இன்னும் ஆபத்தான ஊகத்தையும் எழுப்புகிறது. பக்ரி விசாரணைக்கு உட்பட்டபோது, RCMP அதிகாரிகள் சிலர் பப்பர் கால்சாவின் உறுப்பினரும், பர்மரின் நெருங்கிய சகாவுமான சுர்ஜன் சிங் கில் உண்மையில் குண்டுவெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பெற்ற காலத்தில் CSIS க்காகப் பணியாற்றவர் எனக் கூறுகின்றனர்.

வெளியிடப்பட்ட உரையாடல் குறிப்புக்கள் சில இடங்களில் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் கூட அவற்றில் CSIS உடனான கில் தொடர்பு பற்றி மூன்று இடங்களில் தெரியவருகிறது. முதலில் 65ம் பக்கத்தில் RCMP ஆய்வாளர் லோர்னே ஷ்வார்ட்ஸ், "திரு. சுர்ஜன் சிங் கில் இதில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்தார்; ஒருேைள என்ன நடக்கிறது என்பதை அறியக் கடைசிவரை இரு என்று சிலரால் அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்" என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்.

விசாரணையின் பிற்பகுதியில் சார்ஜென்ட் ஜிம் ஹன்டர் CSIS பின்னர் கூறிய வான்கூவரில் துப்பாக்கி சத்தத்தை சோதனைக் குண்டு வெடிப்பு எனத் தவறாக கூறியுள்ளதாக தெரிவித்த கருத்தை நேரடியாகவே மறுத்துள்ளார். CSIS வான்கூவர் தீவில் என்ன நடக்கவுள்ளது, அதாவது ஒரு சோதனை வெடிப்பு நடக்கவுள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று ஹன்டர் உட்குறிப்பாகக் கூறுகிறார். 132ம் பக்கத்தில் ஹன்டர் கூறுகிறார்: "எனவே இங்கு சுர்ஜன் சிங் கில் அங்கு சரியாக இருப்பதைப் பார்க்கிறோம். அவர் ஏன் தீவிற்கு செல்லவில்லை? நான் நினைக்கிறேன், போகாதீர்கள் என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள். அவருக்கு உத்தரவு கொடுப்பவர்கள் அவ்வாறு கூறியிருக்க வேண்டும். அந்த குண்டுச் சோதனையில் தொடர்பு கொள்ளாதே எனக் கூறியிருக்க வேண்டும்."

பின்னர், 150ம் பக்கத்தில் ஹன்டர் வெளிப்படையாகவே CSISஐ கில்லுடன் தொடர்புபடுத்தி கூறுகின்றார். "சுர்ஜன் பின்வாங்கப் பார்க்கிறார். இப்பொழுது, அவர் ஏன் பின்வாங்க வேண்டும்? பயம் ஏற்பட்டுவிட்டதா? எதிர்பாரா தகவல் அதிர்ச்சி வெளியானதை தடுக்க ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன; ஏனெனில் டல்விந்தருக்கு இவர் பின்வாங்குவது தெரிய வந்துவிட்டது. ஆனால் அவர் எதற்காகப் பின் வாங்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். ஏனெனில் அவருடைய CSIS முகவர்கள் அவரிடம் பின் வாங்குமாறு கூறிவிட்டனர். அவர்கள் அவ்விடத்தில் இருந்து நகர்ந்துவிடு என்று அவரிடம் கூறிவிட்டனர்."

RCMP இத்தகைய தவறான கருத்துக்களை தாங்கள் காவலில் வைத்தவரை மிரட்டும் முயற்சிக்காகவோ, விசாரணையின் வெளிப்பாட்டை செல்வாக்கிற்குட்படுத்தும் நோக்கத்துடனோ கூறியிருப்பார்கள் எனக் கூற இடமுண்டு. அப்படி இருந்த போதிலும், குண்டுத்தாக்குதல் சதித்திட்டத்தில் கில்லின் பங்கு பற்றிய உண்மைகள் CSIS இன் ஒற்றர் அவர் என்ற கருத்திற்கு இடமளிக்கின்றன. இவர்தான் பர்மர், ரேயட், திரு. எக்ஸ் ஆகியோரை, அவர்கள் சோதனை வெடிப்பு நடத்திய இடத்திற்கு அருகில் படகுத்துறை வரை கொண்டு விட்டவர் ஆவார். திடீரென்று எயர் இந்தியா விமானத் தாக்குதலுக்கு முன்பு கில், வன்முறையில் நம்பிக்கை இல்லாததால் பப்பர் கால்சா குழுவை கைவிடுகிறாராம். குண்டுச் சதியுடன் நிருபிக்கப்பட்டுள்ள தொடர்பு இருந்தபோதிலும், அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை; இங்கிலாந்திற்கு செல்வதாக கனடாவில் இருந்து புறப்பட்ட பின்னர் காணாமற் போய்விடுகிறார்.

எயர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல் விசாரணை CSIS ஒலிநாடாக்களை அழித்தது "ஏற்கப்பட முடியாத பொறுப்பற்ற தன்மைக்கு உதராணம்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்; ஆனால் CSIS ஒற்றர் ஒருவர் குண்டுவெடிப்பு சதியில் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என்று எவ்விதக் குறிப்பும் கொடுக்கவில்லை.

CSIS இன் பங்கு பற்றிய துல்லியமான தன்மை முழுமையாக தெளிவாக இல்லை. கனேடிய அரசாங்கம் இப்படியே விஷயங்கள் இருக்கட்டும் என்று நினைத்தால் அதற்குக் காரணம் எயர் இந்தியா வழக்கு பற்றி CSIS நடந்து கொண்ட தன்மையின் குறிப்புக்கள் மட்டும் காரணமில்லை. நாம் பின்னர் பார்க்க இருப்பது போல், சோசலிஸ்டுகள், தொழிற்சங்க வாதிகள், மாணவர் குழுக்கள், போரெதிர்ப்பு செயல்வீரர்கள் உள்பட கனேடிய அரசாங்கத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை ஒழுங்குசெய்தல் மற்றும் உளவறிதல் ஆகியவற்றை செய்து வந்தவேளை சட்டத்தை மீறும் நீண்டகால நடைமுறை அம்பலப்பட்டமையால் மதிப்பிழந்துபோன RCMP என்ற ஒரு பாதுகாப்புத்துறை, கலைக்கப்பட்ட பின்னர் தோன்றிய அமைப்புத்தான் CSIS ஆகும்.

எயர் இந்திய விமானத் தாக்குதல் பற்றிய விசாரணையில் இருந்து பக்கிரி ஆய்வு உரையாடல்கள் போன்றவற்றின் சில பகுதிகள் கீழ்க்கண்ட வலைத் தளத்தில் காணக்கிடைக்கும்:

http://www.cbc.ca/news/background/airindia/files_investigation.html

தொடரும்...

Top of page