World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Fishing dispute between Taiwan and Japan leads to diplomatic tensions

தாய்வானுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மீன்பிடி தகராறு ராஜதந்திர பதட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது

By John Chan
8 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜப்பானிய கடற் காவல்படை கப்பல்கள் சென்ற மாதம் தாய்வான் மீன்பிடி படகுகளுக்கு தொந்தரவு கொடுத்து தண்ணீரில் தகராறு நடந்த பின்னர், ஜப்பானுக்கும் தாய்வானுக்குமிடையே நீண்டகாலமாக நிலவி வருகின்ற கடல் எல்லைத் தகராறு கூர்மையான பதட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

சீனாவில், கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படும் மற்றும் தாய்வானில் டியாயூ (Diaoyus) தீவுகள் என்றழைக்கப்படும் மற்றும் ஜப்பானில் செங்காக்கூஸ் என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழாத குட்டித் தீவுகள் அடங்கிய ஒரு கடற்பகுதி, ஒரு வளமான மீன்பிடி மண்டலமாகும். இதை சீனாவும், தாய்வானும் மற்றும் ஜப்பானும் உரிமை கொண்டாடுகின்றன. இங்கு இயற்கை வாயு இருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தீவுகளை சுற்றிய 200 மைல்-கடற்பகுதியை ''பொருளாதார மண்டலமாக'' தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டும் இறையாண்மை கொண்டாடுகின்றன.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ இப்பகுதியை ''பிரத்தியேக பொருளாதார மண்டலமாக'' அறிவித்த பின்னர் ஜப்பானின் கடல் காவற்படையினர் திரும்பத்திரும்ப தாய்வானின் மீனவர்களை அச்சுறுத்துவதும் மிரட்டுவதுமாக இருந்து வருகின்றனர். 2001 முதல், ஜப்பானிய அதிகாரிகள் இப்பகுதியில் ''சட்ட விரோதமாக'' மீன் பிடித்ததாக 13 தாய்வான் மீன்பிடிப் படகுகளை பிடித்து வைத்துக் கொண்டனர். மற்றும் அவர்கள் 4 முதல் 5 மில்லியன் யென்களை (35,000 முதல் 44,500 அமெரிக்க டாலர்கள்) அபராதம் செலுத்திய பின்னர்தான் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் 8 ல், ஜப்பானிய கடற்காவல் படகுகள் மீண்டும் ஐந்து தாய்வானின் மீன்பிடிப் றோலர்களை அந்தப் பகுதியிலிருந்து விரட்டின. இப்படி பல ஆண்டுகள் தொந்தரவிற்கு உட்பட்ட தாய்வான் மீனவர்கள், தாங்கள் பாரம்பரியமாக மீன்களை பிடிக்கின்ற பகுதிகள் அவை என்று கடைசியாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மிகவும் ஆவேசமாக பதிலளித்தனர். அடுத்த நாள், 60 தாய்வானின் மீன்பிடிப் படகுகள் ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்காக அந்தப் பகுதிக்கு சென்றன.

தாய்வான் மீன்பிடி சங்கத்தின் பெயர் குறிப்பிடப்படாத ஒரு அதிகாரி ராய்டர்ஸ்க்கு பேட்டியளித்த போது: ''அண்மையில், ஜப்பான் திரும்பத்திரும்ப தனது ரோந்து படகுகளை அங்குள்ள பொருளாதார எல்லைகளுக்குள் அனுப்பி எங்களது மீன்பிடிப் படகுகளை விரட்டி, தொந்தரவு கொடுத்து வருவதோடு, எங்களது படகுகளை பிடித்து வைத்து அபராதமும் விதித்து வருகிறது. நாங்கள் அனைவரும் மிகவும் கோபமாக இருக்கிறோம். அவர்கள் தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறார்கள். எமக்கு மீன்பிடிப்பதற்கு வேறு இடமில்லை. எங்களுக்கு வேறு தேர்வு இல்லாததால் நாங்களே இந்த விவகாரத்தை எங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்.

ராஜதந்திர நிலை ஒன்றை தவிர்ப்பதற்காக, தாய்வான் அரசாங்கம் மீனவர்களை கட்டாயப்படுத்தி திரும்பக் கொண்டு வருவதற்காக ஏழு கடற்காவல் ரோந்துப் படகுகளை அப்பகுதிக்கு அனுப்பியது. எதிர்பார்க்கப்பட்டதுபோல் ஜப்பான் அப்பகுதிக்கு தனது ரோந்துப் படகுகளை அனுப்பவில்லை. மாறாக, பல வேவுபார்க்கும் விமானங்களை அந்த கண்டனத்தை கண்காணிப்பதற்கு அனுப்பியது.

இப்படி பெருகிவரும் பதட்டங்கள் ஜப்பானின் தொடரும் ஆத்திரமூட்டல்களை நிறுத்தவில்லை. ஜூன் 18 ல், தாய்வான் மீன்பிடிப் படகு ஒன்று ஜப்பானின் ரோந்துக் கப்பல்களால் ஜப்பானின் ''பொருளாதார மண்டலத்திற்குள்'' கண்டுபிடிக்கப்பட்டது. தாய்வான் படகு ஜப்பானியர்களின் கோரிக்கைகளை புறக்கணித்ததோடு, அதிலிருந்து தப்பிக்கொள்ளவும் முயன்றது. ஜப்பானிய கப்பல்கள் அந்த மீன்பிடி படகை விரட்டிச் சென்று, பல மணி நேரம் கழித்து அதை பிடித்துக் கொண்டது. ஜப்பானிய கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக தாய்வான் படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு பெருந்தொகையை அபராதமாக கட்டி 24 மணி நேரம் கழித்த பின்னரும் அந்தப் படகு விடுவிக்கப்படவில்லை.

ஜப்பானின் நடவடிக்கைகள் தாய்வானில் ஆத்திரத்தை தூண்டிவிட்டன. மீனவர்கள் மிகப் பெரிய கண்டனப் பேரணிகளை நடத்தப்போவதாக அச்சுறுத்தியதால், தாய்வானின் ஜனாதிபதி Chen Shui-bian க்கு ஒரு கற்பாறைக்கும் மணலுக்குமிடையில் சிக்கி கொண்டது போல் இருந்தது. தாய்வானை ஒரு தனி அரசாக அறிவிக்கலாம் என்று வாதிட்டு வரும் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP), தாய்வான், இறையாண்மை கொண்ட சீனாவின் பிரதான நிலப்பகுதியுடன் சேர்ந்தது என்ற சீனாவின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. சீனாவிலிருந்து எந்த அச்சுறுத்தல் வந்தாலும், அதை சமாளிப்பதற்காக, தாய்வான் தேசியவாதிகள் பாரம்பரியமாக ஜப்பானையும், அதேபோல் அமெரிக்காவையும் ஆதரவிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னின் இருதலைக்கொள்ளியை தன் கையில் எடுத்துக்கொள்ளுகிற வகையில் சீனா சிக்கலான ஜூன் 8 ல் நடந்த நிகழ்ச்சியை தன் கையில் எடுத்துக்கொண்டது. சீனா, Diaoyu தீவுகளில் மட்டுமல்ல, தாய்வான் முழுவதிலும் தனது இறையாண்மையை வலியுறுத்தி அதன் மீனவர்களுக்கு தனது ஒருமைப்பாட்டை அறிவித்தது. ஜூன் 9 ல் சீன அரசாங்கம் பெய்ஜிங்கிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு ஒரு அதிகாரபூர்வமான கண்டனத்தைத் தெரிவித்தது. அந்த அறிக்கை: ''கடலில் ஒரு பொதுவான பணியை செய்து கொண்டிருந்த தாய்வான் மீனவர்களை ஜப்பான் பலாத்காரமாக வெளியேற்றுவது, சீனாவின் உரிமைகளையும், இறையாண்மையையும் மீறுகின்ற ஒரு செயலாகும்'' என்று குறிப்பிட்டிருந்தது.

தாய்வானில், சீனாவுடன் ஓரளவிற்கு அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவரும் எதிர்க்கட்சிகளான குவாமிங்டாங் (KMT) மற்றும் மக்கள் முதலாவது கட்சி (PFP) ஆகிய இரண்டும் ஜப்பானுக்கு எதிராக நடவடிக்கையை சீனா எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன. ஜூன் 17 ல், KMT நாடாளுமன்ற உறுப்பினர்கள் Diaoyu தீவுகளில் தாய்வானின் இறையாண்மையை வலியுறுத்தும் வகையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

பொதுமக்களது தீவிரமான அழுத்தங்களின் கீழ், சென் அரசாங்கம் இரண்டாவது சம்பவத்திற்கு பதிலளிக்கிற வகையில் வழக்கத்திற்கு மாறாக, கடுமையாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜூன் 21 ல் தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர், Lee Jye யும், நாடாளுமன்ற சபாநாயகர் Wang Jin-pyng கும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இரண்டு ஏவுகணை செலுத்தும் நாசகாரி கப்பல்களில் ஏறி தகராறுக்குரிய பகுதியில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தலையீடு செய்தனர்.

Lee Jye நிருபர்களிடம் ''இந்தப் பகுதி வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எங்களுக்கு சொந்தமானது. நாம் நமது இறையாண்மையை பாதுகாத்து நிற்க வேண்டும். நமது மீன் பிடிப்பு உரிமைகளை காக்க வேண்டும். நமது சொந்த கொல்லைப்புறத்தை நாம் ரோந்து சுற்றி வருகிறோம். நமது மீனவர்களின் உரிமையை காப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை ஜப்பானிய அரசாங்கம் அறிந்து கொள்வதற்காக'' இதை செய்கிறோம் என்று குறிப்பிட்டார்.

எதிர்கால KMT ன் தலைவராக வரக்கூடும் என்று கருதப்படுகிற தைப்பே மேயரான மா இங்-ஜியோ மேலும் அதிக போர் வெறி பிரகடணத்தை வெளியிட்டார். இந்த தகராறை தீர்ப்பதற்காக ஜப்பானுடன் "ஒரு போர்" புரிவதற்கு தாய்வான் தயாராக இருக்க வேண்டுமென்று அறிவித்தார்.

ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிற ஒரு தீவிரமான தாய்வான் தேசியவாதியான முன்னாள் ஜனாதிபதி லீடெங் ஹீவின், தாய்வான் ஒருமைப்பாடு ஒன்றியத்தின் (TSU) நிலைப்பாட்டை கோடிட்டு காட்டுகின்ற வகையில், ஜப்பானுடன் ஒரு பிளவு சாத்தியக்கூறு குறித்து குறிப்பிட்டதானது, தாய்வானின் ஆளும் செல்வந்தத்தட்டினரிடையே கவலைகள் நிலவுகின்றன என்பதைக் காட்டுகின்றன. அரசாங்கம் போர்க் கப்பல்களை அனுப்பியதையும், KMT போருக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் ''பைத்தியக்காரத்தனம்'' என்று TSU கண்டித்தது.

கடற்படை கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர், சென் அரசாங்கமும் DPP யும் தங்களால் முடிந்தவரை இந்தக் கடல் எல்லைத் தகராறை அமுக்கி வாசிக்கவும், டோக்கியோவுடன் எந்தப் பிளவையும் தடுக்கவும் முயன்றன. நாடாளுமன்றத்தில் ஜூன் 17 ல், DPP காக்கஸ் குழுவின் தலைவர் பகிரங்கமாக தகராறிற்குரிய கடற்பகுதியில் கடற்படை கப்பல்களை அனுப்புவதால், பேச்சுவார்த்தைகளில் ''சங்கடத்தை'' உருவாக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜப்பானின் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கை

இருந்தபோதிலும், இந்த மோதல் முடிந்துவிடாது என்று தோன்றுகிறது. Diaoyu தீவுகள் மற்றும் இதர தகராறுக்குரிய குட்டித் தீவுகளில் தனது இறையாண்மையை வலியுறுத்தி மற்றும் தனது கடல் எல்லைகளை விரிவாக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியின் ஓர் அங்கமாகத்தான் தாய்வான் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்ற நவம்பரில் இதற்கு முன்னர் கண்டிராத ஒரு செயலாக, ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானிய கடல் எல்லைக்குள் ஊடுருவிவிட்டதாக குற்றம்சாட்டி, அதனைத் தாக்குவதற்கு டோக்கியோ கடற்படைகளை அனுப்பியது. இந்த ஆண்டு துவக்கத்தில், ஒரு வலதுசாரி தேசியவாதக் குழுவான ஜப்பான் இளைஞர் சங்கம் Diaoyus ல் நிறுவிய ஒரு கலங்கரை விளக்கை ஜப்பான் அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டது. அத்தோடு, மனிதர்கள் எவரும் குடியிருக்காத Diaoyus தீவில் ''வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்'' என்று 20 ஜப்பானிய குடிமக்களை மே மாதம் அது பதிவு செய்தது.

ஜப்பானும் தென்கொரியாவும் உரிமை கொண்டாடிவரும், டாக்டோ தீவு (Dokto Island) தொடர்பாகவும் இதேபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஜூன் மாத துவக்கத்தில், அந்தத் தீவை சுற்றி இரண்டு நாடுகளும் தங்களுக்கு சொந்தமான ''பிரத்யோக பொருளாதார மண்டலம்'' என்று வலியுறுத்தி, அந்தப் பகுதியில் தென்கொரியா மற்றும் ஜப்பானிய ரோந்துப் படகுகள் ஒன்றையொன்று எதிர்கொண்டன.

ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்ஸூமி மேற்கொண்டுள்ள பெருகிவரும் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாகத்தான் டோக்கியோவின் கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன. அவர் பதவியேற்றது முதல் அவரது அரசாங்கம் 2001 ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பதற்கு உதவுவதற்கும், மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் தனது இராணுவப் படைகளை அனுப்பியது. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர், ஒரு போர் மண்டலத்திற்கு ஜப்பானின் தரைப்படைகள் முதன்முறையாக அனுப்பப்பட்டிருக்கின்றன. வாஷிங்டனின் ஆதரவோடு, தனது உடனடி பிராந்தியத்திற்குள் எந்த வகையிலும் சமரசத்திற்கிடமில்லா நிலைப்பாட்டை கொய்ஸூமி எடுத்துக்கொண்டு வருகிறார்.

கொய்ஸூமியின் வலதுசாரி தேசியவாத நிலைப்பாட்டிற்கு தெளிவான எடுத்துக்காட்டுக்களில் ஒன்று, Diaoyus மீது ஜப்பான் தனது இறையாண்மையை வலியுறுத்தி வருவதாகும். சீனாவுடன் நடைபெற்ற ஒரு போரைத் தொடர்ந்து, 1895 ல் தாய்வானையும், அந்த குட்டித்தீவுகளையும் ஜப்பான் தன்னோடு இணைத்துக் கொண்டதானது, அடுத்த தசாப்தங்களில் ஜப்பான் மேற்கொண்ட காலனித்துவ விஸ்தரிப்பின் துவக்கத்தை குறிப்பதாக இருந்தது. சீனாவின் மஞ்சு அரச குடும்பத்துடன் செய்துகொள்ளப்பட்ட சிமனோசெக்கி ஒப்பந்ததத்தின் கீழ், Diaoyus தீவு ஜப்பானின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதோடு, அது ஒகினோவா பகுதிக்குள் சேர்க்கப்பட்டது.

1943 ல், ஜப்பான் இரண்டாவது உலகப்போரில் தோல்வியை எதிர்நோக்கி இருந்த சூழ்நிலையில் அமெரிக்கா, சீனா மற்றும் பிரிட்டன் வெளியிட்ட கெய்ரோ பிரகடணத்தில், ''சீனர்களிடமிருந்து ஜப்பான் கொள்ளையடித்த மஞ்சூரியா, பார்மோசா (தாய்வான்) மற்றும் பெஸ்கடோர்ஸ் போன்ற அனைத்து எல்லைகளும் சீன குடியரசிற்கு திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றும் ஜப்பான் தனது வன்முறையால் அல்லது ஆசை வெறியினால் எடுத்துக்கொண்ட அனைத்து எல்லைகளில் இருந்தும் விரட்டப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய காலத்தில் தகராறுக்குரிய தீவுகள் தொடர்பாக ஒரு சமரச அணுகுமுறையை ஜப்பான் எடுத்தது. டோக்கியோ தனது ராஜதந்திர அங்கீகாரத்தை தாய்வானிலிருந்து 1972 ல் சீனாவிற்கு மாற்றிய போது எடுத்துக்காட்டாக, டோக்கியோ மற்றும் பெய்ஜிங் ஆகிய இரண்டு தரப்பினரும் Diaoyus பிரச்சனையை ஒரு பக்கமாக ஒதுக்கிவைக்க உடன்பட்டனர். காலஞ்சென்ற சீனத்தலைவர் டெங் ஜியோ பிங் ஜப்பானுடன் சேர்ந்து கூட்டாக கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஒரு ''கூட்டு அபிவிருத்தி'' மண்டலத்தை உருவாக்குவதற்குக்கூட முன்மொழிந்தார்.

சோவியத் யூனியன் சிதைந்த பின்னர் வந்த ஆண்டுகளில் ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக்கொள்கை மாறியது. பொருளாதார மந்தநிலை மற்றும் உலக சந்தையில் தீவிரமான போட்டியினால் ஒரு ஒன்றரை தசாப்தங்களின் பிறகு, ஜப்பானிய ஆளும் செல்வந்தத்தட்டின் பிரிவுகள் தங்களது நலன்களை பாதுகாப்பதற்கு இராணுவவாதத்திற்கு புத்துயிர் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறது. குறிப்பாக எரிசக்தி வளங்கள் தங்களுக்கு வழியமைத்துக் கொடுக்க உறுதியளிக்கும் என்று கருதுகிறது. இது சீனாவுடன் மோதலை வளர்ப்பதாக அமைந்ததோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளைக்கு போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டது.

தகராறுக்குரிய கடல்நீர் பரப்புக்களுக்கு கீழே இலாபம் தரக்கூடிய எரிவாயு கிணறுகள் மீது ஜப்பான், தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதுதான் அதற்கு மிக முக்கியமானதாக இருந்தது. அந்த அடிப்படையில் தான் கிழக்கு சீனக் கடற்பகுதியில் ''மீன்பிடிப்பது'' தொடர்பான பதட்டங்கள் தோன்றியுள்ளன. 1996 க்கு பின்னர் தாய்வானுக்கும், ஜப்பானுக்கும் இடையே தங்களது கடல் எல்லைகளை முடிவு செய்வதற்காக 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. என்றாலும், டோக்கியோ எந்த சலுகையும் தாய்வானுக்கு வழங்க மறுத்து வந்துள்ளதோடு, தாய்வானை ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவும் அது அங்கீகரிக்கவில்லை. இந்த மாதம் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மீன்பிடி தகராறுகள் தொடர்பாக நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் எந்தத் தீர்வும் தோன்றவில்லை.

இரண்டாவது உலகப்போர் முடிந்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் நமது கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால், போருக்கு முந்திய காலனித்துவ உடைமைகள் அடிப்படையில் ஜப்பான் இன்னமும் தனது எல்லைகளைப் பற்றிய உரிமைகளை வலியுறுத்தி வருகிறது என்பதாகும். ஆதலால், தற்போது கொய்ஸூமியின் கீழ் இந்தக் கோரிக்கைகளை ஆதரிப்பதற்கு தனது இராணுவ வலிமையை ஜப்பான் காட்டி வருகிறது.

Top of page