World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

An intellectual pygmy denounces Trotsky

அறிவுஜீவிக் குள்ளன் ட்ரொட்ஸ்கியை தூற்றல்

By David North
2 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

பிற்போக்கான அரசியல் காலங்களில், பின்தங்கிய சமூகநிலை, அறியாமை மற்றும் மடமை என்பன எண்ணற்ற வடிவங்களில் தமது உண்மை உருவங்களை பெறுகின்றன. பொதுக் கருத்தின் உத்தியோகபூர்வ சாதனங்கள் அத்தனையும் ஒரு ஒவ்வா நாற்றத்தை வெளியிடுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பில் இன்புற்றிருப்பவர்கள், அறிவுஜீவி வாழ்வின் இழிவுற்ற நிலையினால் மீண்டும் அவர்களது நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு, பொதுவிடத்தில் இழிசெயல் செய்தாலும் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள் என்று நியாயமான அளவு அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தற்காலத்திய "கருத்திற்கு உருவம் கொடுப்பவர்கள்" தாம் எதைப் பேசுகின்றார்கள் அல்லது எதை எழுதுகின்றார்கள் என்பது பற்றி அவர்களுக்கு வெட்க உணர்வு கூட வருவதில்லை.

இப்படியான வெறுப்பூட்டும் சமூகச் சூழ்நிலையில், ட்ரொட்ஸ்கியை பற்றி வசைமாரியான பழித்துரை ஒன்று, கிறிஸ்தோபர் ஹிச்சென்ஸ் எழுதியுள்ள ஒரு புதிய புத்தகத்திற்கு தியோடர் டால்ரிம்பிள் எழுதியுள்ள மதிப்புரையின் மத்தியில், எதிர்பாராத முறையில் தோன்றியுள்ளது. பைனான்ஷல் டைம்ஸின் வார இறுதிப்பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள டால்ரிம்பிளின் மதிப்புரை, ஹிச்சென்ஸ்ஸின் நூலில் லியோன் ட்ரொட்ஸ்கியை ஓரளவு போற்றிச் சித்தரிக்கும் அத்தியாயம் ஒன்றிற்கு அது அதன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வெளிவரும் ஸ்பெக்ரேற்றர் (Spectator) என்ற வலதுசாரி இதழிற்கு வாடிக்கையாக கட்டுரைகள் எழுதிவரும் டால்ரிம்பிள், ட்ரொட்ஸ்கி, ஆகக் குறைந்த பட்சம் ஒரு மாபெரும் எழுத்தாளர் என்று ஹிச்சென்ஸ் ஏற்றுக் கொண்டதை, அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஹிச்சென்ஸ் தன்னுடைய கடந்த காலத்தைய தீவிரவாதத்தில் இருந்து தன்னை முறித்துக் கொண்டு, புஷ் நிர்வாகத்தின் மற்றும் ஈராக்கிய போரின் ஆதரவாளனாக அவர் மறு கோலம் பூண்ட பொழுதும், ரஷ்ய புரட்சியின் தலைவர் சம்பந்தமாக ஹிச்சென்ஸ் தயங்கிய வண்ணம் காட்டும் இருமனப் போக்கைப் பார்த்து அவர் சீற்றம் கொள்ளுகின்றார்.

"ஒழுக்க நெறியில் ட்ரொட்ஸ்கி ஒரு அரக்கன்", என்று டால்ரிம்பிள் முழக்கமிடுகின்றார். அப்படிப்பட்ட மனிதர் ஒருவரின் இலக்கிய திறமைகள் பற்றி சாதகமாக் குறிப்பிடுவது என்பது, "ஹிட்லர் தன்னுடைய அல்சேஷன் நாயான பிளோன்டியிடம் காட்டிய அன்பை அறிகுறியாகக் கொண்டு, பிரதானமாகவும், மிகவும் நினைவில் நிற்கும் முறையிலும், அவர் பிராணிகளை நேசிப்பவர் என்றும், அல்லது அவர் ஒருமுறை இழு தாங்கிகளுடனான (braces) தோலாலான அரைக் காற்சட்டையை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் நிழற்படம் எடுக்க நின்றதை வைத்து, ஹிட்லர் இயற்கையின் மேல் பற்று உள்ளவர் என்று கூறுவதற்கும் இது ஏறக் குறையச் சமமானதாகும்."

டால்ரிம்பிள் தொடர்கிறார். "ட்ரொட்ஸ்கி சொற்தொடர்களை படைப்பதில் ஆற்றல் மிக்கவர் அல்லது அவர் நல்ல இலக்கிய நடை கொண்டவர் என்பது விஷயத்திற்கு அப்பாற்பட்டது. அவர் பரந்தளவில் மக்களை கொன்ற கொலையாளி. ஸ்ராலினைப் போல் உறுதியாக மற்றும் சிறிது சிறிதாக என்றில்லாது, அவர் உலகம் முழுவதையும் ஒரே நேரத்திலும், என்றென்றுமாய் அடிமைப்படுத்திவிட விரும்பினார். இவை எல்லாம் முழுமையிற் போதாத மற்றும் அடிப்படையில் புராதனமான தத்துவம் ஒன்றின் அடிப்படையில் கருத்திற் கொள்ளாது விடப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட தாக்குதலானது, வாசகருக்கு கையாளப்படும் விடயம் பற்றி முற்று முழுதாக எதுவுமே தெரியாது என்ற ஊகத்தைக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கியை, ஹிட்லருடன் ஒப்பிடுவது வெறுப்பூட்டுவதாக இருக்கின்றது மட்டுமல்லாது அது அடிப்படை வரலாற்று உண்மைகளைப் பற்றிய அறியாமையின் அறியமுடியாத ஆழத்தைத்தான் வெளிக்காட்டுகின்றது. பாசிசத்தின் அபாயங்களைப் பற்றி வேறு எவரும் ட்ரொட்ஸ்கியைவிட துல்லியமாகப் புரிந்திருக்கவில்லை. அல்லது இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஜேர்மனிய மற்றும் சர்வேதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ட்ரொட்ஸ்கி செய்ததைவிட அதிகமாக வேறு எவரும் செய்யவில்லை. எவ்வகையிலும் சிறிய எண்ணிக்கையினராக இல்லாதிருந்த பிரிட்டிஷ் முதலாளித்துவ அரசியல்வாதிகள், ஹிட்லருடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்தபோது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக தமது நண்பனாக வரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளவர் ஹிட்லர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபொழுது, ட்ரொட்ஸ்கி நாசிசத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூறினார்.

பாசிசம் சமுதாயத்தை அதன் ஆழத்திலிருந்து அரசியலுக்கு திறந்துவிட்டுள்ளது.... தேசிய உயிரமைப்பிலிருந்து (national organism) சமுதாயத்தின் வழமையான வளர்ச்சிப் போக்கில் கலாச்சார கழிவாக அகற்றப்பட்டிருக்க வேண்டியவை அனைத்தும் இப்பொழுது தொண்டையிலிருந்து திடீரென பொங்கி வழிகின்றன. முதலாளித்துவ சமுதாயமானது ஜீரணிக்கப்படாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றது. இப்படியாகத்தான் தேசிய சோசலிசத்தின் உடற்கூறியல் (physiology) இருக்கின்றது[1]

அவருடைய காலத்தைப் பற்றிக் கூற வேண்டிய தேவையில்லை, முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு, ட்ரொட்ஸ்கியை "சொற்தொடர்களைப் படைப்பதில் திறமைமிக்கவர்" என்று வர்ணித்திருந்தால், அது அரசியல் ரீதியில் கல்வி பெற்ற பொதுமக்கள் மத்தியில் ஏதோ ஒரு முழு மடைத்தனமான குறையுரையாகத் தோன்றியிருக்கும். இது மற்ரீஸ், பிக்காசோ, ரிவேரா ஆகியோரை கருத்தில்லாமல் கிறுக்கும் திறமை படைத்தவர்கள் எனக் கூறுவது போல் இருந்திருக்கும். அரசியல் ரீதியில் வெறுப்பு நோய் பீடிக்கப்பட்டு வெறுக்கும்--- ஸ்ராலினிஸ்டுகள், மற்றும் யூத விரோத பாசிஸ்டுகள் மத்தியில் தவிர- இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் இலக்கியப் படைப்பாளர்களில், ட்ரொட்ஸ்கியும் ஒருவர் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இக்கருத்து ட்ரொட்ஸ்கியின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்மிக்க அறிஞர்களின் கருத்தும் ஆகும். உதாரணத்திற்கு ஜூன் 3, 1931ல் வால்டர் பெஞ்சமினுடைய நாட்குறிப்பில் பின்வருவன எழுதப்பட்டிருந்தன.

இதற்கு முந்தைய மாலையில் [பெர்த்லொற்] பிரெக்ட், [பேன்ஹாட் வொன்] பிரென்டனோ மற்றும் [ஹேமன்] ஹெசேயுடன் கபே டு சென்டரில் கலந்துரையாடல் நடந்தது. கலந்துரையாடல் ட்ரொட்ஸ்கி பக்கம் திரும்பியது. ஐரோப்பாவில் தற்பொழுது உயிரோடிருக்கும் மிகப் பெரும் எழுத்தாளர் ட்ரொட்ஸ்கிதான் என்பதற்கு நல்ல காரணங்கள் உள்ளன என்று பிரெக்ட் உறுதியாய் கூறினார். நாம் அவருடைய நூல்களில் இருந்து உட் கதைகளை (episodes) பரிமாறிக்கொண்டோம். [2]

நிச்சயமாக டால்ரிம்பிள் புரிந்து கொள்ளாததை, அதாவது, "சொற்தொடர்களை படைப்பதில் திறமைமிக்கவர்" ஒருவருக்கும், "ஐரோப்பாவில் உயிரோடிருக்கும் மிகப் பெரும் எழுத்தாளர்" ஒருவருக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு என்பதை பிரெக்ட், பெஞ்சமின், பிரென்டனோ மற்றும் ஹெசேயும் புரிந்து கொண்டிருந்தனர். முந்தையவர் -"சொற்தொடர்களை படைப்பதில் திறமைமிக்க" - ஒருவர், மாடிசன் நிழற்சாலையை (Avenue) அதன் பண்டங்களை விற்க உதவ முடியும், அல்லது செய்தித்தாள்களின் பத்திகளை நுகரும் தவறான கேள்வியறிவுடையவரின் மட்டுப்படுத்தப்பட்ட அறிவார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடும். பிந்தையவர் - "ஐரோப்பாவில் உயிரோடிருக்கும் மிகப் பெரும் எழுத்தாளர்"- ஒருவர் மனித இனத்தின் மேல் பிரமாண்டமான கலாச்சார மற்றும் ஒழுக்க நெறி ரீதியான செல்வாக்கை செலுத்துகின்றார்.

ஓர் எழுத்தாளர் என்ற முறையில், ட்ரொட்ஸ்கியின் மாட்சிமை, அவர் அரசியல் அதிகாரத்தின் பரிக்கலணைகள் (Trappings) அத்தனையையும் வெளிப்படையாகவே இழந்து நெடுங்காலத்திற்கு பின்னரும், அவர் ஒரு சிந்தனையாளர் என்ற ரீதியில், உலகம் முழுவதும் பெரும் கவனத்தை மற்றும் மதிப்பையும் ஆட்கொண்ட கருத்துக்களின் மனிதர் என்ற அவரது உயர்ந்த சாதனையை புலப்படுத்தியது.

"முழுமையிற் போதாத மற்றும் அடிப்படையில் புராதனமான தத்துவம்" என்று செயல்நயமற்ற முறையில் டால்ரிம்பிள் குறிப்பிடுவதை ஒருவர் படித்தாலே போதும், டால்ரிம்பிளுக்கு ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை பற்றி எதுவுமே தெரியாது என்றும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பணையம் வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் பற்றிய அரிதளவு அறிகுறிகளைக் கூட அவர் அறிந்திராதவர் என்றும் உடனே உணர முடியும். ட்ரொட்ஸ்கியின் எந்த நூலை டால்ரிம்பிள் படித்திருக்கின்றார்? எண்ணிறைந்த நூல்களை ட்ரொட்ஸ்கி படைத்துள்ளார் என்ற நிலையில், இவற்றுள் டால்ரிம்பிள் ஒன்றைக் கூட படித்திருப்பாரா? என்று ஒருவர் ஐயப்பட வேண்டியுள்ளது.

ஒர் அற்பமான மற்றும் அறிவிலித்தனமான முறையில் டால்ரிம்பிள் ட்ரொட்ஸ்கியின் "முழுமையிற் போதாத, மற்றும் அடிப்படையில் புராதனமான தத்துவம்" பற்றிக் குறிப்பிட்டிருப்பதை, நாம் 32 ஆண்டுகளுக்கு முன்பு, கல்விச் சூழலில் பயன்படுத்தப்படும் பாடநூல்களை வழங்கி வந்த முன்னணி நிறுவனமான பிரிண்டிஸ் ஹோல் வெளியிட்ட ட்ரொட்ஸ்கியை பற்றிய நூலில், ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை பற்றிய வர்ணணையுடன் ஒப்பிடுவோம். "உற்று நோக்கப்பட்ட மாபெரும் வாழ்க்கைகள்" ("Great Lives Observed") என்ற தொடர் நூல்களில் ட்ரொட்ஸ்கியும் சேர்க்கப்பட்டிருந்தார். "இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் வாழ்ந்திருந்த பெருந்திறலாளர்களில் (Giants) ஒருவர்" என்று ட்ரொட்ஸ்கியை இந்த நூற் தொகுப்பின் முன்னுரையில் வர்ணித்த பின், அத் தொகுப்பு அவரின் தத்துவார்த்த வேலையைப் பற்றிய இம்மதிப்பீட்டை முன்வைக்கின்றது.

ரஷ்யப் பேரரசில் இருந்த சமூக சக்திகளைப் பற்றிய அவருடைய பகுப்பாய்வும், "நிரந்தரப் புரட்சி" என்ற கருத்தை அவர் அபிவருத்தி செய்ததும், அவர் ஒரு மார்க்சிச சிந்தனையாளர் என்ற முறையில் அவர் தன்னுடைய சொந்தப் படைப்பாற்றலில் வலிமையின் அடிப்படையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சும் முறைப்படுத்தி முன்வைத்தவற்றிற்கு (formulations) அப்பால் செல்லக் கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார். இந்த அர்த்தத்தில் அவருடைய தத்துவார்த்த பங்களிப்புகள், அவரை அந்தப் பழைய, ஆனால் பெரும் கூர்அறிவுடைய பிளெக்கனோவ், காவுட்ஸ்கி மற்றும் லுக்சம்பேர்க் போன்ற அத் தனிக் குழுவுடன், அந்த அர்த்தத்தில் லெனினுடனேயே அவரையும் அணிசேர்க்கின்றது. [3]

ட்ரொட்ஸ்கியை "ஒழுக்க நெறியில் ஒர் அரக்கன்", என்ற டால்ரிம்பிளின் வர்ணணையை பொறுத்தவரை அவர் எந்த அளவுகோலைக் கொண்டு இத்தகைய மதிப்பீட்டுக்கு வந்து சேர்ந்தார் என்று வியப்படைய வேண்டியுள்ளது. ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சியாளர். வர்க்கப் போராட்டத்தை அரசியல் இலக்குகளை அடைவதற்காக கையாளக் கூடிய பல வழிகளில் ஒன்றாக அவர் அதைக் கருதவில்லை. ஆனால் அவர் அதை மனித சமுதாயத்தின் உள்ளமையியலில் (Ontological) நிலவும் யதார்த்தம் என்று பார்த்தார். இந்த உருவரையினுள் (Framework), அவர் மிகக் கடுமையான ஒழுக்க நெறிக் கோட்பாடுகளை கடைப்பிடித்தார். இவை தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ரீதியான நலன்களுடனும், மற்றும் சுரண்டல், அநீதி என்பனவற்றின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான அதன் போராட்டங்களுடனும், அந்தத் தனிநபரின் நடத்தை உறவுபடுத்தி மதிப்பிடப்பட்டன.

தான் பிரகடனப்படுத்திய புரட்சிகரக் கோட்பாடுகளை பாதுகாக்க, தனது அனைத்தையும் தியாகம் செய்த ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பிற்கு எதிரான போராட்டத்தில், தனது உயிரையே கொடுத்த ட்ரொட்ஸ்கி, தனது ஒழுக்க நெறியின் கோட்பாடுகளை பற்றி ஒர் அறிக்கையை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

ஒரு வழிமுறையை (means) அதன் இலக்கைக் கொண்டே நியாயமானது என நிறுவ முடியும். ஆனால் இலக்கும், அதன் முறை வரும் பொழுது, அதுவும் நியாயப்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது. இயற்கையின் மேல் மனிதன் தனது ஆற்றலை அதிகரிக்க வகைசெய்ய மற்றும் மனிதன் மற்றொரு மனிதன் மீது வைத்திருக்கும் அதிகாரத்தை அகற்றுவதற்கும் இலக்கு வழியமைக்குமேயானால், பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று நலன்களை வெளிப்படுத்தும் மார்க்சிசக் கண்ணோட்டத்தில் இருந்து, அதை நியாயமானது என்று நிறுவ முடியும்.

"அப்படியாயின் இந்த இலக்கை அடைய எதையும் அனுமதிக்க முடியும் என்று நாம் புரிந்து கொள்ளலாமா? என்று, உயர் நாட்டமற்ற பிலிஸ்தீன், ஏளனமாகக் கேட்கின்றார். இதன் மூலம் அவர் தான் எதையும் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றார். நாம் அதற்குக் கொடுக்கும் விடை, மனித இனம் சுதந்திரமடைவற்கு அதை உண்மையில் இட்டுச் செல்லும் எதையும் அனுமதிக்முடியும் என்பதே. இந்த இலக்கு ஒரு புரட்சியின் மூலமாக மட்டும் அடைய முடியும் என்பதால், தொழிலாள வர்க்கத்தின் விடுதலை செய்யும் ஒழுக்க நெறி இன்றியமையாது புரட்சிகரத் தன்மையைக் கொண்டுள்ளது. அது சமரசமின்றி மதக் கொள்கைகளை மட்டுமல்லாது ஆளும் வர்க்கத்தின் மெய்யியல்கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதுடன் எல்லா வகையான கண்மூடித்தனமான சிந்தனைப் போக்குக்களையும், ஆளும் வர்க்கத்தின் மெய்யியற் காவற்படையினரின் அனைத்து விதமான காரணமின்றி பின்பற்றப்படும் கருத்துவாத மூடக் கொள்கைகளையும் எதிர்க்கும். அது சமுதாய வளர்ச்சியின் விதிகளில் இருந்து, நடத்தைக்கான விதிகளை, இப்படிப் பிரதானமாக வர்க்கப் போராட்டத்தில் இருந்து அனைத்து விதிகளின் விதியான இந்த விதியை அது வருவித்தெடுக்கும்.

"இருந்த போதிலும்" ஒழுக்கநெறியாளர் தொடர்ந்து வலியுறுத்துவதாவது, "முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் அனைத்தும், பொய்கூறல், பொய்ப்புனைவுக் குற்றச் சாட்டுகள், கொலை போன்ற இன்னோரன்னவையும் அனுமதிகக் கூடியனவையா? நாம் அதற்கு கொடுக்கும் விடையானது: புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தை எவை ஐக்கியப்படுத்துகின்றனவோ, ஒடுக்குதலுக்கு எதிராக அவர்களுடை இதயங்களில் சமரசமற்ற விரோதத்தை நிறையச் செய்யும், உத்தியோக ஒழுக்க நெறிக்கு எதிராக மற்றும் அதன் ஜனநாயக எதிரொலிப்பாளர்களுக்கு எதிராக, அவர்களுக்கு வெறுப்பைக் கற்பிக்கும், அவர்களது வரலாற்று ரீதியான வாழ்க்கைப் பணி பற்றிய நனவை அவர்களை உள்வாங்கச் செய்யும், போராட்டத்தில் அவர்களின் துணிவை மற்றும் சுய தியாக மனப்பான்மையை உயர்த்திவிடும் வழிமுறைகள் எவையோ, அவைதான் அனுமதிக்கக் கூடியவை மட்டுமல்லாது அவைதான் கட்டாயமானவையாகவும் உள்ளன. திட்டவட்டமாக இதிலிருந்து எல்லா முறைகளும் அனுமதிக்க முடியாதவை என்பது இயல்பாகவே தொடருகின்றது. ஒரு வழிமுறை அதன் இலக்கைக் கொண்டே நியாயமானதாகின்றது, என்று நாம் கூறும் பொழுது, நமக்கு அப்பொழுது அதைத் தொடர்ந்து தொடருகின்ற முடிவு என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தில் ஒரு பகுதியை மற்றைய பகுதிகளுக்கு எதிராக மோதவிட, அல்லது பரந்த மக்களை அவர்கள் பங்கு கொள்ளாது அவர்களை மகிழ்ச்சியடைய செய்ய முயற்சித்தல், அல்லது பரந்த மக்களை தம் மேலும் தமது இயக்கங்களின் மேலும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தாழ்த்தும், இவற்றை "தலைவர்களின்" வழிபாடு மூலம் பிரதியீடு செய்ய முயற்சித்தல் என்பனவற்றை மாபெரும் புரட்சிகர இலக்கானது வெறுப்புடன் நிராகரிக்கின்றது. முதலாளித்துவத்துடனான உறவுகளில் அடிமைத்தனத்தை மற்றும் உழைப்பாளர்களுடனான உறவுகளில் அகங்காரத்தையும், அதாவது குட்டி முதலாளித்துவ பகட்டாரவாரக்காரர்கள் மற்றும் ஒழுக்க நெறியாளர்கள் முற்று முழுதாக ஊறிப்போய் இருக்கும் குண இயல்புகளைப் பிரதானமாகவும் சமரசம் இன்றியும், புரட்சிகர ஒழுக்க நெறியானது நிராகரிக்கின்றது.[4]

அரசியல் நடவடிக்கை ஒன்றை அல்லது மற்றொன்றை, மெய்யியலின் அடிப்படையில் கான்ரின் (Kant's) நிபந்தனையற்ற தவிர்க்க இயலாமையின் (categorical imperative) அடிப்படையில் மதிப்பீடு செய்வதை நிச்சயமாக எதிர்க்க முடியும். ட்ரொட்ஸ்கியின் மிக உறுதியான எதிர்ப்பாளர்களில், அமெரிக்க மெய்யியல்வாதியான ஜோன் டுவேயும் ஒருவர் ஆவார். ஆனால் மிகப்பெரிய அறிவுஜீவி நேர்மையுடைய மனிதரான டுவேக்கு, ட்ரொட்ஸ்கியை "ஒழுக்க நெறியில் ஒரு அரக்கன்", என்று விவரிக்க ஒரு பொழுதும் தோன்றியிருக்காது.

ட்ரொட்ஸ்கி அவரது அரசியல் வாழ்வின் இயல்பின்படி, அவர் ஒரு ஒழுக்கநெறிக் குற்றவாளியாக இருந்திருந்தால், ஸ்ராலினிச ஆட்சியினால் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவது என்பது, பொருளற்றது என்று மட்டுமில்லாமல் ஒழுக்கநெறிப்படியும் இயலாததாக இருந்திருக்கும். மார்க்சிசத்தின் உலக நோக்குடன் டுவே கருத்து வேறுபாடு கொண்டிருந்த பொழுதும், ட்ரொட்ஸ்கியின் புகழ், அவரது "புரட்சிகர நன்மதிப்பு" என்பனவற்றை பொய்யான மற்றும் எந்தவித ஆதாரமும் அற்ற குற்றச் சாட்டுகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுவதில், பெரும் கோட்பாட்டு ரீதியான பிரச்சினைகள் பணையம் வைக்கப்பட்டுள்ளன என்பதை டுவே மிக நன்கு புரிந்திருந்தார். அத்தகைய ஒழுக்கநெறிச் சூட்சுமம் மற்றும் குறிப்பிட வேண்டப்படாத தனிப்பட்ட நேர்மை என்பன திரு. டால்ரிம்பிளினுடைய அறிவுஜீவித் தொடுவானத்திற்கு அப்பால் எவ்வளவோ தொலைவில் இருந்தன

இறுதியாக இப்பத்தியாளர் முதலாளித்துவ வர்க்கத்தின் கடந்த கால அல்லது தற்கால அரசியற் தலைவர்களில் எவரை அவர் ஒழுக்கநெறியின் மிகச் சிறப்பான மாதிரி என்று நம்பியிருக்கின்றார் என்பதை எமக்கு கூறத் தவறிவிட்டார். சிலவேளை முதலாம் உலகப் போரின் பொழுது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை அர்த்தமற்ற மரணத்திற்கு அனுப்பிய, மற்றும் 1920ம் ஆண்டுகளில் கிளர்ந்தெழுந்த ஈராக்கியர்களுக்கு எதிராக விஷவாயுவை பயன்படுத்த இசைவாணை வழங்கிய வின்ஸ்ரன் சேர்ச்சிலையா? அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு அற்ற இரு நகரங்களான, ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி 200,000 மனிதர்களைக் கொல்ல இறுதிக் கட்டளையை பிறப்பித்த ஜனாதிபதி ஹாரி ட்ரூமனையா? அல்லது தற்கால பின்னணியில் முற்று முழுதாக அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் தன்னுடைய நாட்டைப் போருக்கு இட்டுச் சென்று, பல்லாயிரக் கணக்கான உயிர்கள் போககக் காரணமான பிரதம மந்திரி டோனி பிளேயரையா?

நாம் திரு டால்ரிம்பிளின் பதிலுக்குக் காத்திருக்கின்றோம், ஆனால் எவ்விதத்திலும் அதிகளவு ஆர்வத்துடன் அல்ல.

குறிப்புகள்:

1. ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ( நியூ யோக்: பாத் ஃபைண்டர், 2004) பக்கம் 468

2.தேர்வு நூல்கள், தொகுதி 2, 1927 - 1934 (கம்பிரிஜ், எம். ஏ., ஹவாட் பல்கலைக் கழக அச்சகம், 2001), பக்கம் 477

3 உற்று நோக்கப்பட்ட மாபெரும் வாழ்க்கைகள்: ட்ரொட்ஸ்கி (எங்கல்வூட் கிளிப்ஸ் என்.ஜே. பிரின்டிஸ் ஹோல், 1973), பக்கம் 1.

4. அவர்களது ஒழுக்க நெறியும் நமது ஒழுக்க நெறியும், www.marxists.org/archive/trotsky/works/1938/1938-mor.htm.  இல் பெற முடியும்

Top of page