World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report

Sri Lankan schools still not rebuilt after tsunami

நேரடி அறிக்கை

இலங்கை பாடசாலைகள் சுனாமிக்குப் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பப்படவில்லை

By M. Aravindan and Sarath Kumara
10 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில், இளைஞர்களுக்கு வறுமையிலிருந்து தப்புவதற்கான பிரதான வழி கல்வியேயாகும். டிசம்பர் 26 சுனாமியால் படசாலைகள் அழிவுக்குள்ளாகியமை சாதாரண மக்களுக்கு, குறிப்பாக கிழக்கு கரையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு பலத்த அடியாகும்.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, கடற் பேரலைகளால் மாவட்டத்தில் 40 பாடசாலைகள் சேதமாகியுள்ளன. இவற்றில் 28 பாடசாலைகள், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் எந்தவொரு கட்டுமான வேலைகளையும் தடை செய்துள்ள கடற் கரையிலிருந்து 200 மீட்டர் பிரதேசத்திற்குள் இருந்தவையாகும். ஆகவே இவை வேறு இடங்களில் மீண்டும் கட்டுவிக்கப்பட வேண்டும்.

23 பாடசாலைகள் சேதத்திற்குள்ளாகியுள்ள அக்கரைப்பற்று கல்வி வலயத்தில், ஒரே ஒரு பாடசாலையில் மட்டுமே மீள் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்முனை கல்வி வலயத்தில் அழிவுக்குள்ளாகியுள்ள 17 பாடசாலைகளில் 15 முற்றாக அழிந்துள்ளதோடு 8 பாடசாலைகள் வேறு ஒரு இடத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன. இந்த வலயத்திலும் மீள் கட்டுமானம் ஒரு பாடசாலையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தள குழுவொன்று, அழிவுக்குள்ளான மற்றும் இப்போது தற்காலிக வசதிகளுடன் இயங்குகின்ற பல பாடசாலைகளை பார்வையிட்டது. மருதமுனையில் 1978ல் ஸ்தாபிக்கப்பட்ட ஷேம்ஸ் மத்திய கல்லூரி சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1,542 மாணவர்களில் 104 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சுமார் 1,300 மாணவர்கள் இப்போது பாடசாலைக்கு வருகை தருகிறார்கள்.

பாடசாலையின் உப அதிபர் பி.எம்.எம். பதூர்தீன் குறிப்பிட்டதாவது: "இந்த பாடசாலை பிரதேசத்தில் கல்வியின் மையமாக உள்ளது. 1978ல் இருந்து இந்த பாடசாலை 23 வைத்தியர்கள் மற்றும் 50 பொறியியலாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. கடந்தாண்டு பல்கலைக்கழக தேர்வுப் பரீட்சையிலும் கூட, இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் ஒரு மாணவன் பொறியியற் பீடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார்கள். எல்லாமாக கிட்டத்தட்ட 30 மாணவர்கள் பல்கலைக் கழக்திற்கு சென்றார்கள். இந்த பாடசாலை முழு பிராந்தியத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அதன் அழிவு மக்களுக்கு பெரும் அடியாகும்.

இந்த பாடசாலை தற்காலிகமாக மஸ்ஜுதுல் கபீர் பள்ளிவாசலில் இயங்குகிறது. தகரங்களால் ஏழு கூடராங்கள் அமைக்கப்பட்டுள்ளன. "ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக, ஜனவரி 25 அன்று பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்க எங்களால் முடிந்தது. எங்களிடமிருந்த 20 கனணிகள் சுனாமியால் அழிந்து போய்விட்டன. இப்போது எங்களிடம் கனணியோ அல்லது ஆய்வுக்கூடமோ கிடையாது," என பதூர்தீன் விளக்கினார்.

பாடசாலை நிர்வாகமே பொருத்தமான காணியை தேடும் பொறுப்பை ஏற்க வேண்டும் என கல்வியமைச்சு கூறியுள்ளது. இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வைத்தியராக இருக்கும் ஒரு முன்நாள் மாணவன் பாடசாலைக்காக ஒரு துண்டு நிலத்தை வாங்கியுள்ளார்.

கடலுக்கும் ஏரிக்கும் இடையில் அமைந்துள்ள இந்த பிரதேசம் அடர்த்தியான ஜனத்தொகை கொண்ட வறுமையான பிரதேசமாகும். அம்பாறையின் ஏனைய பகுதிகளைப் போலன்றி, நெற் பயிர்ச் செய்கைக்கு நிலத்தை தேடுவது கடினமாகும். தண்ணீர் விவசாயத்திற்கு பொருத்தமில்லாததால் 20 வீதமானவர்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஜனத்தொகையில் கால்வாசிப் பேர் மீன்பிடியிலும் இன்னும் கால்வாசிப் பேர் கைத்தறியிலும் தங்கியிருக்கின்றனர். எஞ்சியவர்கள் ஆசிரியர்கள், குமாஸ்தாக்கள், வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்ற அரசாங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத் துறையில் உள்ள மிகப் பெரும்பாலானவர்கள் இலவச கல்வியினாலேயே அவர்களது தகமையை பெற்றுள்ளனர். பதூர்தீனின் சகோதரர் பீ.எஸ். நஸூர்தீன் உலக சோசலச வலைத் தளத்துடன் உரையாடிய போது: "என்னுடைய தந்தை ஒரு மீனவர். ஆனால் அவரது ஏழு மகன்களில் எவரும் இப்போது மீன்பிடியில் ஈடுபடவில்லை. நாங்கள் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டோம். எனது குடும்பத்தில் நான் மட்டுமே எனது இளமானிப் பட்டத்தை பெற முடியாமல் உள்ளேன். நான் 1998ல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போதிலும், அப்போதிருந்த நாட்டின் ஸ்திரமின்மை காரணமாக கல்வியை முடிக்காமலேயே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி விட்டேன். இப்போது நான் மருதமுனை வட்டார ஆஸ்பத்திரியில் தாதியாகப் பணிபுரிகிறேன்."

"எனது சகோதரர்களில் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தத்துவ விரிவுரையாளராக உள்ளார். பிரதேசத்தில் எனது குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பட்டதாரிகள் உள்ளனர்," என்றார்.

"எங்களுக்கு பதில் கூட கிடைக்கவில்லை"

நாங்கள் இன்னுமொரு முஸ்லிம் பாடசாலையான மல்ஹருஸ் ஷேம்ஸ் மகா வித்தியாலயத்திற்குச் சென்றோம். அதிபர் ஏ.ஏ. ரஸூல் குறிப்பிட்டதன் படி, பாடசாலையின் 1,765 மாணவர்களில் 98 பேர் கொல்லப்பட்டு விட்டனர். தற்போது 1,448 மாணவர்கள் தமது படிப்பை தொடர்ந்த போதிலும் அடிப்படை வசதிகள் கிடையாது. நூலகம், கனணி மற்றும் விஞ்ஞான ஆய்வுக் கூடங்களை சுனாமி அழித்துவிட்டது. நிலைமையை மாற்ற அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை. ஒரு தற்காலிக விஞ்ஞான ஆய்வுக் கூடம் --உங்களால் அவ்வாறு கூற முடியும் என்றால்-- ஒரு சில பரிசோதனைக் குழாய்கள் மற்றும் சில இராசயனப் பொருட்களுடனும் இயங்குகிறது.

ரஸூல் விளக்கியதாவது: "எங்களால் பாடசாலைகளை பெப்ரவரியிலேயே ஆரம்பிக்க முடிந்தது. 1 முதல் 5 ம் வகுப்புகள் வரை சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் பிற்பகல் 1 மணி முதல் 5 மணிவரை நடத்தும் அதே வேளை, 6 முதல் உயர்தரம் வரையான வகுப்புகளும் மாலையில் அல் ஹலால் பாடசாலையில் நடத்தப்பட்டுவருகின்றன. ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆனால் அல் ஹலால் பாடசாலையில் போதிய அறைகள் இன்மையால் சுற்று முறையிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தரம் 6,7 மற்றும் 8 ஒரு வாரம் நடைபெறும். இந்த வகுப்புகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை கொடுப்பதோடு ஏனைய வகுப்புகள் நடத்தப்படும்.

"எங்களால் கற்பித்தலை சரியாக முன்னெடுக்க முடியவில்லை. ஆகவே, பெற்றோர்களும் பழைய மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து பாடசாலையை இந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். இது கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பொது விளையாட்டு மைதானம். இங்கு அதிகளவில் கட்டிட கழிவுப் பொருட்கள் இருந்தன. ஒரு அரச சார்பற்ற நிறுவனம் அவற்றை அகற்றியது. இன்னுமொரு அரச சார்பற்ற நிறுவனம், ஒட்டுப் பலகைகளையும் தகரங்களையும் கொண்டு மூன்று தற்காலிக வகுப்பறைகளை கட்டித் தந்தது. அரைவாசிக் கட்டப்பட்ட பார்வையாளர் பகுதியையும் நாங்கள் பயன்படுத்துவதை நீங்கள் காணலாம்.

"ஆயினும் அறைகள் போதவில்லை. ஆகவே பாடசாலைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறுகின்றன. 1 முதல் 5ம் வகுப்பு வரை மாலையிலும் ஏனைய வகுப்புகள் காலை வேளையிலும் நடைபெறுகின்றன. ஒரு ஹங்கேரியன் அரச சார்பற்ற நிறுவனம் பாடசாலை கட்டிடங்களை அமைக்க முன் வந்த போதிலும், அரசாங்கம் பாடசாலைக்கான நிலத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்காததால் அவர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். நாங்கள் மாநகர சபை ஆணையாளரிடம் பேசிய போது, தனக்கு தேவையான சட்ட அதிகாரம் இல்லை என்றும், நாங்கள் வடகிழக்கு மாகாண சபை ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பாடசாலை அபிவிருத்தி சபை ஆளுநருக்கு எழுதிய போதிலும், எங்களுக்கு பதில் கூட கிடைக்கவில்லை."

பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் உள்ள ஒரு மாணவன் குறிப்பிட்டதாவது: "எங்களது பாடசாலை சுனாமியால் அழிக்கப்பட்டுவிட்டது. அது இப்பொழுது சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக இயங்குகிறது. அறைகள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. முன்னர் ஒரு பாடத்திற்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இப்போது எங்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. எங்களுடைய புத்தகங்கள் அழிந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு புதிய புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்கள் கடந்தும் அரசாங்கம் எதையும் செய்யவில்லை.

"எமது (பாராளுமன்ற) பிரதிநிதிகளான பேரியல் அஷ்ரப் மற்றும் அப்துல்லாஹ் (முஸ்லிம் அரசியல் கட்சியான தேசிய ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்கள்) ஆகியோரும் எதையும் செய்யவில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு முற்றிலும் வேறுபட்ட வகையில், எங்களது ஆசிரியர்கள் ஒரு தொகை கஷ்டங்கள் சிரமங்களுக்கு மத்தியிலும் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். சிலர் அவர்களது விளையாட்டு மைதானம் பாடசாலைக்காக பயன்படுத்தப்படுவதை எதிர்த்தனர். மைதானங்களை மீண்டும் அமைத்துக்கொள்ளலாம் ஆனால் பாடசாலைகள் மிகவும் முக்கியமானவை. அரசாங்கம் இந்த இடத்தில் உடனடியாக நிரந்தர கட்டிடங்களை அமைக்க வேண்டும்."

அவர் சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் குமாரதுங்க அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்தாபிக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு எதிரான பேரினவாத பிரச்சாரத்தை கண்டனம் செய்தார். "அவர்களுக்கு எதிரான வேறுபாடுகளின் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதங்களை ஏந்தினர். 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தின் போதும் நாடு அழிவுக்குள்ளாகியது. இப்போது பேரினவாத பெளத்த பிக்குகள் பொதுக் கட்டமைப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்கள் யுத்தத்திற்கு செல்லத் தயாரா? எங்களுக்கு யுத்தம் தேவையில்லை. அரசாங்கம் அனைவரையும் சமத்துவ அடிப்படையில் நடத்த வேண்டும்."

அதே வகுப்பில் இருந்த ஒரு மாணவி குறிப்பிடுகையில்: "தொந்தரவுகள் காரணமாக இந்த தற்காலிக கட்டிடத்தில் எங்களால் படிக்க முடியவில்லை. இங்கு இரைச்சல் அதிகம். இந்த வகுப்புகள் ஒழுங்காகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அடுத்த வகுப்பில் உள்ள ஆசிரயர் பேசுவது எங்களுக்கு எப்பொழுதும் கேட்கும். எங்களுக்கு போதுமான மலசலகூட வசதிகள் கிடையாது. ஒரே ஒரு தற்காலிக தண்ணீர் தாங்கியே உள்ளது. எங்களுக்கு விஞ்ஞான ஆய்வுக் கூடமோ, மனையியல் வசதிகளோ அல்லது கனணி வசதிகளோ கிடையாது. படிப்பைத் தொடர எங்களுக்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் வேண்டும்."

"எங்களால் படிப்பில் எப்படி அக்கறை செலுத்த முடியும்?"

காரைதீவில் உள்ள விபுலானந்த மத்திய மகா வித்தியாலயத்தில் 27 மாணவர்கள் சுனாமியால் உயிரிழந்துள்ளனர். அழிவிற்கு முன்னர் இருந்த 1,200 மாணவர்களில் இப்போது 1,150 மாணவர்களே பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். உப அதிபர் எஸ். தில்லையம்பலம் எம்மிடம் குறிப்பிட்டதாவது: "நாங்கள் யுனிசெப்பால் (ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்) வழங்கப்பட்ட முரட்டுத் துணியினாலான கூடாரங்களின் உதவியுடன் ஆர்.கே.எம் மகளிர் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கு இடப் பற்றாக்குறை காரணமாக பாடசாலை இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தரம் 10 முதல் 13 வரையான வகுப்புகள் காலை 8 மணி முதல் 12.30 வரை நடைபெறுகின்றன. தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகள் பிற்பகல் 1 மணி முதல் 5 வரை நடைபெறுகின்றன.

"பாடசாலை கட்டிடத்திற்கு 120 மில்லியன் ரூபா வழங்குவதாக இத்தாலி தூதரகம் அறிவித்த போதிலும், நாங்கள் ஐந்து ஏக்கர் நிலத்தைத் தேட வேண்டும். விற்பனை விலை 3.5 மில்லியன் ரூபாய்களாகும் (35,000 அமெ. டொலர்). ஆனால் அரசாங்கம் எங்களுக்கு இந்த பணத்தை கொடுக்கத் தயாரில்லை. நாங்கள் பல அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் கேட்டோம், ஆனால் எவரும் எங்களுக்கு உதவவில்லை. ஆகவே நாங்கள் தடை செய்யப்பட்டுள்ள 200 மீட்டர்களுக்கு சற்றே வெளியில் உள்ள முன்னைய இடத்தில் பாடசாலையை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம். நாங்கள் அங்கு சென்றால் மாணவர் வருகை குறைவானதாக இருக்கும். ஆசிரியர்கள் அதைப்பற்றி சந்தோசப்படவில்லை. ஆனால் எங்களுக்கு வேறு மாற்றீடுகள் கிடையாது."

சுனாமியால் வீடுகள் அழிக்கப்பட்டு உடமைகளையும் இழந்த 13 ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும் அவர் விளக்கினார். "அரசாங்கம் அவர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை வட்டி இல்லாத கடனாக வழங்க வாக்குறுதியளித்தது. ஆனால் அவர்கள் அதை இன்னமும் பெறவில்லை. எப்படி தமது சம்பளத்தில் மட்டும் அவர்களால் வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும்? இந்த ஆசிரியர்கள் தமது உறவினர்களுடன் தங்கியிருக்கின்றனர். இந்த சிரமமான நிலைமைகளில், அவர்களால் ஒழுங்காக கற்பிக்க முடியுமா?

தரம் 7 படிக்கும் ஒரு மாணவன் குறிப்பிட்டதாவது: "மாலை பாடசாலையில் படிப்பது கடினமானது. பாடசாலை மாலை ஐந்து மணிக்கு முடிவதால் எங்களுக்கு வீடு செல்வதற்கு தாமதமாகின்றது. எங்களால் எப்படி படிப்பில் கவனம் செலுத்த முடியும? எங்களுக்கு ஒழுங்கான தண்ணீர் வசதியோ அல்லது மலசலகூட வசதியோ கிடையாது." ஏனைய மாணவர்கள் மேசை மற்றும் நாற்காலி பற்றாக்குறை பற்றி முறையிட்டார்கள். விஞ்ஞான ஆய்வுக் கூடமும் கனணி அறையும் நூலகமும் அழிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் இதுவரை அவற்றை மீண்டும் அமைக்கவில்லை.

அக்கறைப்பற்றில் அல் பதூர் வித்தியாலயம், தற்போது பதூர் நகர் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளது. யுனிசெப்பால் கொடுக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் புத்தகங்களுடன் இந்தப் பாடசாலை மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்குகிறது. நாங்கள் அங்கு சென்றபோது, தற்காலிக தண்ணீர் தாங்கி வெற்றாகி இருந்ததுடன் மூன்று நாட்களாக தங்களுக்கு தண்ணீர் இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு மாதத்திற்குள் அங்கிருந்து இடம் மாறுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், தங்களுக்கு போவதற்கு இடம் இல்லை என ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். கடற் கரையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த முன்னைய பாடசாலை முற்றாக அழிந்து விட்டது.

108 மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போனது போல் தோன்றுகிறது. ஒரு ஆசிரியர் குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபாவும் நிலத்திற்காக இன்னும் 2.8 மில்லியன் ரூபாவும் தேவை. கல்வி அமைச்சில் உள்ள ஒரு உயர் அதிகாரி, அரசாங்கத்திடம் பணம் இல்லை எனவும் பொருத்தமான நிலத்தை தேடுவது ஆசிரியர்களதும் பெற்றோர்களதும் பழைய மாணவர்களதும் பொறுப்பு. பின்னர் கட்டிட நிதிக்காக அமைச்சு ஒரு அரச சார்பற்ற நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் என தெரிவித்துள்ளார். நாங்கள் பணக்காரர்கள் அல்ல. நாங்கள் அதற்காக பணம் தேடுவது எங்கே?"

Top of page