World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : நினைவகம்

Druba Jyoti Majumdar: pioneer Indian Trotskyist dies

துருப ஜ்யோதி மஜும்தார்: முன்னோடி இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட் காலமானார்

By Nanda Wickremasinghe and Ganesh Dev
27 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலையில், முன்னோடி இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட்டான துருப ஜ்யோதி மஜும்தார், மேற்கு வங்கத்தில், கட்வாவில், ஆஸ்த்துமா நோயினால் தன்னுடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75 ஆகும்.

தன்னுடைய குடும்பத்திற்கும் தோழர்களுக்கும் துர்போ என்று நன்கு அறிமுகமாகிய மஜூம்தார், அப்பொழுது இந்திய துணைக்கண்டத்தில் நான்காம் அகிலத்தின் பகுதியாக இருந்த இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியில் (Bolshevik-Leninist Party of India - BLPI), 1946ம் ஆண்டு தன்னுடைய 17வது வயதில் சேர்ந்திருந்தார். தன்னுடைய எஞ்சிய வாழ்வு முழுவதிலும் தன்னை அவர் ஒரு புரட்சிகர சோசலிஸ்ட்டாகவும், ட்ரொட்ஸ்கிஸ்டாகவும் கருதியிருந்தார். ஆனால் குட்டி முதலாளித்துவ காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உள், 1948ம் ஆண்டு இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் இந்தியப்பகுதி கலைக்கப்பட்டதை அடுத்து, துருபோவின் அரசியல் வளர்ச்சி பல தசாப்தங்களாக துண்டிக்கப்பட்ட து.

துர்போவும், அவர் தொடர்பு கொண்டிருந்த, பெரும்பாலான இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அடங்கிய கொல்கத்தா (கல்கத்தா) சோசலிஸ்ட்களின் குழு வும், 1990களில், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய முதலாளித்துவ மறுஸ்திரப்படலினால் ஏற்பட்ட அழுத்தத்தினால் நான்காம் அகிலத்திற்குள்ளேயே எழுந்த பெரும் ஆபத்துநிறைந்த சந்தர்ப்பவாத போக்கான பப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொடுத்திருந்த, பல தசாப்தங்கள் நீடித்த போராட்டத்தைப் பற்றி அறிந்தனர். மிசேல் பப்லோ, மற்றும் ஏர்னஸ்ட் மன்டேல் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்தப் போக்கு, புறநிலை சக்திகளானது, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம், அதன் துணைக் கட்சிகள், சமூக ஜனநாயகவாதிகள், மற்றும் ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்படும் நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியன ஒரு முற்போக்கான, மற்றும் புரட்சிகரமான பங்கையும் கூட ஆற்ற நிர்பந்திக்கும் என்று கூறியது. எனவே ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடைய பணி தொழிலாள வர்க்கத்தின் தலைமையை இந்த பகை வர்க்க சக்திகளிடமிருந்து பிரிப்பது என்றில்லாமல் அவர்களை இடதுபுறத்திற்கு கொண்டு செல்லும் அழுத்தத்தை கொடுப்பது என்று இருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பப்லோவாதத்தைப் பற்றி அளித்திருந்த விமர்சன ஆய்வு, பப்லோ வலியுறுத்திய போல்ஷேவிக் லெனினிச கட்சியின் கலைப்பு மீதாக முற்றிலும் புது ஒளியைப் பாய்ச்சியது; மேலும் கொல்கத்தா குழு பின்னர் பப்லோவாதிகளின் சர்வதேச அமைப்பான இப்பொழுது ஐக்கிய செயலாளர் குழுமம் (United Secretariat) என அறியப்படுவதன் ஆதரவாளர்களாக ஆக்கியதன் விளைவாக ஏற்பட்ட கசப்பான அரசியல் அனுபவங்களின் மீதும் இது புதிய பார்வையைக் கொடுத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளுடன் மிகப் பரந்த விவாதங்களுக்கு பின்னர், துர்போ, துலால் போஸ், கணேஷ் டட்டா, நிர்மல் சமாஜ்பதி, தினேஷ் சன்யால் உட்பட கல்கத்தா குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட இந்திய அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்துடன் இணைந்தது.

இதற்குப் பின்னர் துர்போ, துலால் போசுடன் இணைந்து சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) பணியை ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Marxist) முக்கிய கோட்டையாக உள்ள மேற்கு வங்கத்தில் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆஸ்த்துமா நோயினால் கடும் அவதியுற்றாலும், துர்போ SLL இன் வங்க செய்தித் தாளான Anthrajathik Shramik (International Worker - சர்வதேச தொழிலாளி) மற்றும் அதன் முன்னோடி இதழான ஷ்ரமிகேர் பாத் (தொழிலாளர் பாதை) யிலும் பரந்த அளவில் எழுதினார், SLL இன் பொதுக் கூட்டங்கள் கட்வா மற்றும் கல்கத்தாவில் நிகழ்ந்தபோது அதில் உரையாற்றியும், உலக சோசலிச வலைத் தளத்தில் வந்த கட்டுரைகள் பலவற்றை வங்க மொழியில் மொழிபெயர்த்தும், டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு (The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International) என்பதன் வங்க மொழிபெயர்ப்பை தயாரிப்பதில் உறுதுணையாக ஒத்துழைத்தார்.

கட்வா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருந்த துர்போ கூரிய மதிநுட்பத்தையும், மிகப் பரந்த முறையில் அறிவார்ந்த நலன்களையும் கொண்டிருந்தார். இவர் மார்க்சிச தொல் இலக்கியங்களையும் (Marxist Classics), புராதன மற்றும் தற்கால இந்திய தத்துவத்தையும் நன்கு கற்றறிந்தவர் ஆவார். வங்கம், இந்தி, ஆங்கில மொழிகளில் சரளமான தேர்ச்சி பெற்றிருந்து, தொழில்முறை அல்லாத மொழியியற் புலமையும் பெற்றிருந்தார். இந்தியாவில் இருந்தோ, உலகின் மற்ற பகுதிகளில் இருந்தோ தோழர்கள் இவரைக் காண வந்தபோது, சிங்கள மொழிக்கும் வங்க மொழிக்கும் இடையிலான தொடர்புகள் உள்பட, பல மொழிகளிலும் உள்ள சொற்களின் உறவுகளை விவாதிப்பதிலும், கண்டறிவதிலும் பெரும் களிப்படைந்தார்.

உளவியற்கூறுபாட்டைப் பற்றி மிகப் பரந்த அளவில் ஆராய்ந்திருந்த துர்போ, உளவியல் பிரச்சினைகளை சடரீதியான பார்வையில், வங்க இதழான Manabman (மனித மனம்) மூலம் விளக்குவதற்கு முயற்சி செய்ததுடன், 2003-04ல் Manabik Chetanar Sawrup Sandhane (In Search of Human Conscisousness - மனித ஆழ்மனதை தேடல்) என்ற இரண்டு பகுதிகள் கொண்ட நூலையும் வெளியிட்டார். இவருடைய முன்னோடி நூலான சிதைந்த மனம் பற்றிய உளவியல், உளநோய் இயல் ஆங்கிலம்-வங்க மொழி அகராதியை (English-Bengali dictionary of Abnormal Psychology and Psychopathology) மேற்கு வங்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்கள் வரை, துர்போ ஒரு இளைஞரின் புத்துணர்வைக் கொண்டிருந்தார். இவருடைய நோய், இவரை அதிகம் பயணிக்கவிடாமல் கஷ்டத்திற்கு உட்படுத்தியபோதும், இவர் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பணிக்குத் தன் பங்களிப்பை கொடுக்க எப்பொழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய சக தோழர்களின் உடல், பொருள் நலம் பற்றிய இவருடைய அக்கறை இவருடைய தாராள மனப்பான்மைக்கு தக்க சான்றாக இருந்ததுடன், புரட்சிகர காரியாளர்களின் தேவைகள், முக்கியத்துவம் பற்றிய இவருடைய உணர்விற்கும் சான்றாக விளங்கியது.

துர்போவும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியும்

1929ம் ஆண்டு, மார்ச் 3ல், இப்போதைய பங்களாதேஷில், ரங்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்னா என்னும் இடத்தில் துர்போ பிறந்தார். பெற்றோருடைய ஐந்து குழந்தைகளில் இரண்டாவது மகவான இவர், சலுகை பெற்றிருந்த ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்தார். இவருடைய தந்தையார் குற்றவியல் துணைநீதிபதியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நீதியை வழங்கும் மகிழ்ச்சியற்ற பொறுப்பில் இருந்தார்.

இந்திய மக்களின் ஏகாதிபதித்திய எதிர்ப்பு இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் பெருகிய போராட்டங்கள், பாசிசத்தின் கொடூரங்கள், உலகப் போர் மற்றும் ஆங்கிலேயரின் தூண்டுதலால் நிகழ்ந்திருந்த 1943-44ம் ஆண்டு வங்கப் பஞ்சம் ஆகியவற்றின் பாதிப்பினால், துர்போ தன்னுடைய குடும்ப நடைமுறைகளுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார். தன்னுடைய 13வது வயதில் "இந்தியாவைவிட்டு வெளியேறு" போராட்டத்தில் அவர் பங்கு பெற்றார்; மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகஸ்டு 1942ல் கைது செய்யப்பட்டதை அடுத்து தேசம் முழுவதும் தன்னெழுச்சியான கிளர்ச்சி வெடித்தது.

இக்காலக்கட்டத்தில் ஒரு பிராமணருடைய சமய ஒழுங்குமுறை, சாதி உயர்வு இவற்றின் அடையாளமாக இருந்த தன்னுடைய "புனிதப்" பூணூலை இவர் அறுத்து எறிந்தார். பிற்காலத்தில் இவர் இந்திய மரபான பெற்றோர்கள் செய்துவைக்கும் திருமணத்திற்கும் எதிர்ப்பை காட்டினார்.

கல்கத்தாவில் மாநிலக்கல்லூரியில் இவர் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தபோது இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியுடன் இவர் 1947ம் ஆண்டு முதன் முதலாகத் தொடர்பைக் கொண்டார். இரண்டாம் உலகப் போர் முடிவிற்கும், பிரிட்டனின் இந்தியப் பேரரசு தகர்ந்ததற்கும் இடையேயான இரண்டு ஆண்டுகள் பெரும்விளைவுகளை உருவாக்கும் புரட்சிகரத் தன்மை நிறைந்த போராட்டங்களால் நிறைந்திருந்தன; அவற்றுள் வேலைநிறுத்தங்கள், விவசாயிகளின் எழுச்சிகள், சமஸ்தானங்களில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிரான பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவும், வங்காளமும் வகுப்புவாத முறையில் ஆகஸ்ட் 1947ல் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்டபோதும், இந்தப் போராட்டங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைவரையும் ஐக்கியப்படுத்தின.

அண்மைக்கால நிகழ்வுகளை படித்து ஆய்வு செய்ததன் விளைவாக, துர்போ இக்கால கட்டத்திலேயே ஒரு மார்க்சிஸ்டாக வரவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார். இந்திய தேசிய காங்கிரசின் முதலாளித்துவ தன்மையை இவர் நன்கு அறிந்திருந்தார். அரசு எந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை கைவிட இந்தியாவின் காலனித்துவ மேலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்பொருட்டு காந்தியின் தலைமையில், காங்கிரஸ் பரந்த மக்களை அணிதிரட்டலின் மீது கட்டுப்பாட்டை அதிகரித்தது, அதேவேளை, தொழிலாள வர்க்கத்தின் எந்தவித சுயாதீனமான நடவடிக்கைகளையும் முதலாளித்துவ சொத்துடைமைக்கு எந்தவித சவாலையும் பிடிவாதத்துடன் எதிர்த்தது.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) பற்றியும் துர்போ நன்கறிந்திருந்தார். சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தல் என்றபெயரில், 1942ன் ஆரம்பத்தில் இருந்து CPI, இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆட்சியுடன் வெளிப்படையாக நெருக்கமாக கூடியிருந்ததுடன், "இந்தியாவைவிட்டு வெளியேறு" எழுச்சியை கண்டனத்திற்கு உள்ளாக்கியதோடு அதை எதிர்த்தது. 1945-47ல் அரை எழுச்சிப் போராட்ட காலத்தில், CPI தொழிலாள வர்க்கத்தை, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டிக் கட்சிகளின் நலனுக்கு கீழ்ப்படுத்தியதுடன், ஒருவர்மீது ஒருவர் கத்தியைத் தீட்டித் தாக்கிய வண்ணம் இருந்த காங்கிரஸ், முஸ்லீம் லீக் (5) தலைவர்களின் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கை பிரிட்டிஷ் எதிர்ப்பு தேசிய முன்னணியில் இணையவும் அதற்குத்தலைமை வகிக்கவுமான தங்களின் "பொறுப்பை" உண்ரப்பண்ணுவதற்கு அவற்றுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தொழிலாளர்களை அழைத்தது.

1940களின் நடுப்பகுதிகளில், துர்போ தன்னை, இந்தியாவைவிட்டு வெளியேறு இயக்கத்தில் முன்னணி பங்கை ஆற்றியிருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை (CSP) பின்பற்றுபவர் என்று கருதியிருந்தார். காங்கிரசின் ஒரு பிரிவான CSP காந்தியத்தை, பாபியனிசத்துடனும், மார்க்சிசத்துடனும் இணைக்க முற்பட்டது. 1947ஐ ஒட்டி, காங்கிரஸ் தலைவர்கள், காலனித்துவ அரசாங்க இயந்திரத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் உடன்பாடு காணுவதில் கொண்டிருந்த உந்துதலுக்கு CSP இணங்கியதை பற்றி மன உளைச்சல் கொண்டார்.

காங்கிரஸ், CSP இன் தீவிர தேசியவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் ஆகியோருக்கு எதிராக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மட்டுமே புரட்சிகர முன்னோக்கை முன்னெடுத்தது.

லங்கா சம சமாஜக் கட்சி (இலங்கை) யின் முன்முயற்சியின் பேரில் 1942ம் ஆண்டு நிறுவப்பட்டிருந்த இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி, இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள், மன்னராட்சிகளுக்கு உட்பட்டிருந்த பகுதிகள் மற்றும் இலங்கை முழுவதிலும் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஐக்கியப்படுத்தியது.

அனைத்து இந்திய புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சி என்பதின் வளர்ச்சி, நான்காம் அகிலத்திற்கும் நிரந்தரப்புரட்சி வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிக்கும் LSSP -ன் ஆதரவிலிருந்து வெளிப்பட்டுப் பெருகிய மூலோபாயமாகும். தன்னுடைய ஸ்தாபக ஆவணங்களில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியானது, ஜனநாயகப் புரட்சியின் பணிகள், தெற்கு ஆசியா முழுவதிலும் தொழிலாள வர்க்கமானது, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை எதிர்க்கும் போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து எடுத்துக் கொண்டு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் விவசாய மக்களையும் அணிதிரட்டி, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை உலக தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் போராட்டத்தின் உள்ளடங்கிய பகுதியாக மாற்றினால்தான முடியும் என்று கூறியிருந்தது.

இந்த முன்னோக்கிற்கு சக்திவாய்ந்த ஆதரவு கிடைத்திருந்தது; இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கல்கத்தா (கொல்கத்தா), பம்பாய் (மும்பை), மட்ராஸ் (சென்னை) போன்ற பெருநகரங்களில் பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை வகிப்பதில் முன்னணியில் இருந்தது. செய்தி ஊடகமோ, பம்பாயில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்திற்காக திரட்டுவதில் முன்னணிப் பங்கினை ஆற்றியதற்காகவும், பெப்ரவரி 1946ல் அரசாங்கத்தின் இந்திய கடற்படை வீரர்கள் எழுச்சிக்கு ஆதரவாக தடுப்பு அரண்களை நிறுவியதற்காகவும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை தாக்கி எழுதியது. இறுதியில், கடற்படை வீரர்களின் எழுச்சி (Royal Indian Navy -RIN), பிரிட்டிஷ் படைகள், மற்றும் காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள் ஆகியோரின் இணைந்த முயற்சிகளினாலான, கடற்படைவீரர்கள் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து முறியடிக்கப்பட்டது.

தொழிலாளர்கள்-விவசாயிகளின் போராட்டங்கள் எழுச்சி பெற்று விடுமோ என்ற அச்சமும் அவை ஒருவேளை பிரிட்டிஷ் இந்திய படைகளிடையே தாக்கத்தை கொள்ளுமோ என்ற அச்சமும் காங்கிரசை இன்னும் கூடுதலாக திகைப்பூட்டிய வகையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் விரைவான உடன்பாட்டை கொள்ள வைத்தது.

பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் அழிவுகரமான தாக்கம்

1947-48 ல் அதன் இளைஞர் பகுதித் தலைவராக துர்போ வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தைரியம் நிறைந்த, கொள்கைப் பிடிப்புடைய நிலைப்பாட்டை எடுத்தது. அந்நிலைப்பாடு இன்றளவும் சமகாலத்திய முக்கியத்துவத்தைப் பெற்றது ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அரசியல் அதிகாரத்தை தேசிய முதலாளித்துவ வர்க்கத்திடம் மாற்றியதையும், தெற்கு ஆசியாவில் "சுதந்திரமான" மூன்று முதலாளித்துவ அரசுகளை தோற்றுவித்ததற்கும் எதிர்ப்பை தெரிவித்தது; அவற்றின் பிறப்பிலிருந்தே இவை வகுப்புவாத பிளவுகளின் திருவுருவமாகவும் ஊட்டிவளர்ப்பனவாகவும் இருருந்து வருகின்றன. காங்கிரசும், முஸ்லீம் லீக்கும், பிரிட்டிஷ் இந்தியா முஸ்லிம் பாகிஸ்தான், இந்து இந்தியா என்ற இரு பகுதிகளாக இரத்தம்தோய்ந்த வகையில் பிரிவினைசெய்யப்பட்டதை மேற்பார்வையிட்டிருந்த அதேவேளை, இலங்கை முதலாளித்துவ வர்க்கம் "இந்திய" தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுத்து, தன்னுடைய புதிய நாட்டை திருவினை (ஞானஸ்நானம்) முழுக்காட்டியது. இத் தொழிலாளர்கள்தான் தீவின் தொழிலாள வர்க்கத்தின், தொடர்பற்றதாய் அல்லாமல், சக்தி வாய்ந்த கூறுபாடாக இருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

ஆனால் இந்த பகுப்பாய்வை ஆழ்ந்து கொள்ளாமலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை தேசிய முதலாளித்துவம் கருச்சிதைத்ததன் படிப்பினைகளை தெற்கு ஆசிய, உலக தொழிலாள வர்க்கத்திற்கு உரைக்காமலும், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் இந்தியப் பகுதி தன்னுடைய 1948 மாநாட்டில் --துர்போ முதல்தடவையாக பங்கு பெற்ற மாநாட்டில்-- காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் கலைக்கலாமா என்ற விவாதத்திற்கு அர்ப்பணித்தது.

பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் குறைந்த தன்மை பெற்றதும், காங்கிரசைப் பற்றி மக்கள் உள்ளங்களில் இருந்த பிரமைகளும், தெற்கு ஆசியாவில் ஏற்பட்டிருந்த புதிய அரசியல் ஒழுங்கும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை கலைப்பிற்கு இட்டுச் சென்ற சக்திவாய்ந்த அரசியல் குழப்பங்களையும், நோக்குநிலை தவறலையும் கொடுத்தன. ஆனால் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற திட்டம் பல ஆண்டுகளாக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் பெரும்பான்மையினால் எதிர்ப்பிற்கு உட்பட்டிருந்தது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை அரசியல்ரீதியாய் நிராயுதபாணியாக்கலில் தீர்க்கமானதாக இருந்தது பப்லோ, மண்டேல் ஆகியோர் வளர்த்திருந்த சந்தர்ப்பவாத அரசியல் முன்னோக்கு ஆகும்; அது ஒரு குறிப்பிட்ட நாட்டில் தொழிலாளர் வர்க்கம் எந்த இயக்கத்தில் கூடுதலாக செல்வாக்கை கொண்டுள்ளதோ அதை ஆதரிக்கவேண்டும் என்ற தேசிய-தந்திரோபாய நோக்குநிலையை ஒருங்கிணைந்த உலகப் புரட்சிகர மூலோபாயத்திற்கு பதிலீடு செய்தது.

இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டதானது தெற்கு ஆசியாவில் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியின் மீது அழிவைத்தரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் திறமையான முறையில் கலைக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் பப்லோ, இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பகுதியை, இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி 1942ல் அமைக்கப்படும்போது அதை எதிர்த்திருந்த ஒரு ஓடுகாலிக் குழுவுடன், LSSP இன் பெயரை தன்னுடையதென திருடிக் கொண்ட அமைப்புடன், 1948ல் இலங்கை சுதந்திர உடன்படிக்கைக்கு வாக்களித்த அமைப்புடன் சேருமாறு ஊக்கம் கொடுத்தார். இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி இதன் போட்டிக் கட்சியான LSSP உடன் இணைந்ததானது, இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இடைநிலைவாத சரிவில் முக்கிய கட்டமாக இருந்து, இறுதியில் LSSP 1964ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயிலான ஒரு முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் சேர்வதில் முடிவுற்றது மற்றும் முதலாளித்துவ ஒழுங்கின் பாதுகாப்பு அரணாக ஆனது.

மேற்கு வங்கத்தில் துலால் போஸ் முக்கிய தலைவராக இருந்த ஒரு குழுவில் துர்போ ஓர் உறுப்பினராக இருந்தார்; இந்த குழுவானது, இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டதை ஈவிரக்கமின்றி எதிர்த்தது. அவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அசோக் மேத்தா இவர்களுடைய சோசலிஸ்ட் கட்சியில் சேர்வது ட்ரொட்ஸ்கிஸ்டுகளை "தொழிலாள வர்க்கத்துடன் நெருக்கமாகக் கொண்டுவரும்" என்று தெரிவித்தவர்களின் கருத்தை எதிர்த்து வாதம் புரிந்தனர். காங்கிரஸ், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் காட்டிக் கொடுத்தபோது, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP) அதன் இடதுசாரியாகத்தான் செயல்பட்டு வந்திருந்தது என்றும் சுட்டிக்காட்டியதோடு, அக்கட்சி தொழிற்சங்க அலுவலர்கள், மத்தியதர தீவிரப் போக்கினரின் கட்சி என்றும், ஒரு தேர்தலைநாடும் கட்சியாக விரைவில் சீரழியும் என்றும் கூறினர்.

இதன் பின்னர் துர்போவும் மேற்கு வங்கத்தில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கலைப்பை எதிர்த்த ஏனையவர்களும், பழைய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி இன் வங்க மொழி இதழான Inqulab (புரட்சி)-இல் பங்காற்றினர். ஆனால் பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் எதிர்ப்பாளர்கள் 1953ல் அனைத்துலகக் குழுவை நிர்மாணித்த நான்காம் அகிலத்திற்குள் நடந்த போராட்டத்திலிருந்து இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் கலைப்பிற்கு காரணமாக இருந்த சந்தர்ப்பவாதத்தின் சமுதாய வேர்களை அறியமுடியாமலும், புரட்சிகர தலைமையின் முக்கிய பங்கு, அது தொழிலாளர் வர்க்கத்துடன் கொண்டிருக்க வேண்டிய உறவுகள், பப்லோவாத வகைகள் பலவற்றை மறுப்பதற்கும், மக்கள் இயக்கத்துடன் இணைவது பற்றிய வினாக்களுக்கு விளக்கம் காண்பதற்கும் முடியாமல் போயிற்று.

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான, அரசியல் ரீதியாக மிகவும் புடம்போட்டு எடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச கட்சியான LSSP இன் தலைமையே, இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பப்லோவாதத்திற்கு எதிராகக் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி அறியாமையில் இருந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும். LSSP தலைவர்கள் பப்லோவாத சந்தர்ப்பவாத சூத்திரப்படுத்தல்கள் பலவற்றை எதிர்த்தனர்; குறிப்பாக சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் புரட்சிகர உள்ளாற்றல் பற்றிய கருத்துக்களை எதிர்த்தனர்; ஆனால் அவர்கள் உண்மையான ட்ரொட்ஸ்கிச சக்திகள் தனியே ஓர் அமைப்பாக அணிதிரளவேண்டும் என்ற கருத்தையும் எதிர்த்திருந்தனர்; நான்காம் அகிலம், அனைத்துலகக் குழுவால் அரசியல் மறுநிர்மாணம் செய்யப்படுவதானது தங்களுடைய வெளிப்படையான பாராளுமன்ற, தொழிற்சங்கவாத நோக்குநிலையை இடையூறு செய்யும் என்ற அச்சத்தில் எதிர்த்தனர்.

1990களின் ஆரம்பத்தில் அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவு கொடுத்திருந்த துர்போவும் ஏனைய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தோழர்களும் பிந்தைய நான்கு தசாப்தங்களையும் கடுமையுடனும், வெட்க உணர்வுடனும் நினைவு கூர்ந்தனர். 1954ம் ஆண்டு, புரட்சி (Inqulab) குழுவானது பப்லோவாத அகிலத்தின் இந்தியப் பிரிவான கம்யூனிஸ்ட் லீக்குடன் இணைந்தது. பப்லோவாத செல்வாக்கின் கீழ் துர்போவும் அவருடைய தோழர்களும் தொழிலாள வர்க்கத்தை எதிர் கொண்டுள்ள அரசியல் மையப் பிரச்சினைகளுக்கு தெளிவை காணமால், செல்வாக்கை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் தந்திரோபாய சூழ்ச்சி கையாளல்களில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தனர்.

1960 களின் நடுப்பகுதியில் இன்குலாப் குழு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டுகள்) அல்லது CPM ல் நுழைய முயன்றது. CPI இல் இருந்து பிரிந்திருந்த CPM, CPI இன் காங்கிரசிற்கு இசைந்து நடக்கும் தன்மையை கண்டித்து, சோவியத் தலைமை பற்றி சீன அரசாங்கம் தெரிவித்த சில குறைபாடுகளை கிளிப்பிள்ளைபோல் ஒப்பித்துவந்தது; ஆனாலும் ஸ்ராலினிச மரபு முழுவதையும், இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தில் இருந்து, தனியொரு நாட்டில் சோசலிசம், மற்றும் மாஸ்கோ விசாரணைகள் வரை ஆதரித்தது.

CPM தலைமை "எதிர்ப்புரட்சிகர ட்ரொட்ஸ்கிஸ்டுகளை" தங்கள் கட்சியில் நுழைய அனுமதி மறுத்த பின்னர், துர்போ CPMல் ஒரு தனிப்பட்ட மனிதராக சேர்ந்தார். ஆனால் CPM முதலாளித்துவ அரசுடன் கைகோர்த்து மாவோயிச-நக்சலைட்டுகள் எழுச்சியை அடக்க தலைப்பட்டவுடன், அதில் இருந்து நீங்கினார்.

அரசியல் மறுபிறப்பு

சோசலிசத் தொழிலாளர் கழகம் மற்றும் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகளிடம் துர்போ கூறுவார்: "அரசியல்வகையில் பேசும்போது, உங்களையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய தோழர்களையும் சந்தித்த பின்னரே நான் மறுபிறப்பு எடுத்துள்ளேன். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைய தோழர்கள், தலைவர்கள் தொடர்ந்து, பொறுமையுடன் விளக்கி, விவாதித்து தெளிவுபடுத்திய முறையில், முந்தைய தலைமுறையை சேர்ந்திருந்த நானும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி இன் ஏனைய தோழர்களும், குழப்பம், பொய்த்தோற்றம், பெரும் ஏமாற்றம் என்று பப்லோவாத கலைப்பு எங்களை நான்கு தசாப்தங்களுக்கு தள்ளிவிட்டிருந்த நிலையில் இருந்து மீண்டு விட்டோம். நாங்கள் எங்களுடைய பழைய, பெருமிதம் நிறைந்த இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் நாட்களுக்கு வந்துவிட்டதாக உணர்கிறோம், ட்ரொட்ஸ்கியின் நான்காம் அகிலத்தில் இருப்பதையும் உணர்கிறோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும், அதன் தலைமையினாலும், நாங்கள் மகிழ்ச்சியுடன், எங்களுடைய சிந்தனயில் தெளிவுடன், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம். கடைசியாக, இவ்வளவு தசாப்தங்களுக்கு பின்னர் நாங்கள் எங்களுடைய ட்ரொட்ஸ்கிச நம்பிக்கைகளில் பெரும் அமைதி கொண்டு விளங்குகிறோம்."

அரசியல் குழப்பம், தனிமை என நீண்ட ஆண்டுகள் இருந்தது துர்போவின் உடல்நலத்தைப் பாதித்தது. எளிதான வாழ்க்கை போதும் என்றிருந்தால், 1977ல் இருந்து மாநில அரசாங்கத்தின் பொறுப்பை கொண்டிருக்கும் மேற்கு வங்க ஸ்ராலினிஸ்டுகள், அவருக்கு தங்கள் எந்திரத்தில், பிரகாசத்தை கொடுத்திருந்த அவருடைய கடந்தகால அரசியல், அறிவார்ந்த உயர்நிலை இவற்றை கருத்திற்கொண்டு, அவருக்கு ஓரிடத்தைக் கொடுத்திருப்பர். ஆனால் அத்தகைய ஊக்கங்களுக்கு இடம் அளித்துவிட துர்போ தயாராக இருந்ததில்லை, 1965ம் ஆண்டு அவர் மேற்கு வங்க கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்நதெடுக்கப்பட்டார்; ஆனால் சங்கங்களின் ஸ்ராலினிச தலைமைக்கு எதிர்ப்பை கொண்டிருந்ததால் மறு ஆண்டே இவர் மீண்டும் சங்க தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை ஏற்காமல், சங்கத்தை விட்டு அகன்றார்.

இவருடைய அரசியலில் வளைந்து கொடுக்காத தன்மையினால், துர்போ ஸ்ராலினிஸ்டுகளால் இவருடைய வேலைபார்க்குமிடத்திலும், அறிவார்ந்த வட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டார். போலீஸ் கண்காணிப்பிற்கும் உட்பட்டிருந்தார்; இவருடைய இல்லம் ஆயுதமேந்திய வீரர்களால், நக்சலைட்டுகளுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்ற எண்ணத்தின்பேரில் சோதனையிடப்பட்டது. உண்மையில் இவர் மாவோவாத பற்று உடைய மாணவர்களிடம் மேற்கொண்ட விவாதங்களில் துர்போ நக்சலைட்டுக்களின் தனிமனித பயங்கரவாதம் மற்றும் "வர்க்க ஒழிப்புக்கான" குருதியை கொதிக்க வைக்கும் அழைப்புக்கள் பற்றிய தத்துவங்களை, அதாவது உள்ளூர் நிலப்பிரபுக்களை கொலைசெய்தல், இவற்றை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அரசாங்கம் இரக்கமற்ற முறையில் நக்சலைட்டுக்களை ஒடுக்குவது பற்றி வலிமையாக பேசிவந்தார்; அதன் காரணமாக அவரும் அவருடைய குடும்பமும் நீண்டகால போலீஸ் துன்புறுத்தலுக்கு உட்பட்டனர்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் மற்றும் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகளுடன் அவர் தொடர்பு கொண்ட தருணத்தில், உடலளவிலும் உள்ளத்தளவிலும் கொண்டிருந்த கடுமையான அழுத்தங்கள், துர்போவை பலவீனமாக ஆக்கியிருந்தன. தன்னுடைய ஆஸ்த்துமாவை ஒதுக்கிவைக்கும் வகையில் இவர் ஸ்டெராய்டுகள் உட்பட பல மருந்துக் கலைவைகளை உட்கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார். அவர் கொல்கத்தாவிற்கு பயணம் செய்வதற்கு முயன்றாலும் மாசு மற்றும் தூசுகளின் காரணமாக அவரால் சிறிதளவே பயணம் செய்யக் கூடியதாயிருந்தது.

ஆனால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பு கொண்டதனால் துர்போ ஒரு புத்துயிர்ப்பு பெற்றார். நான்காம் அகிலத்தின் அணிகளில் அவர் மறுபடியும் இணைந்தமை, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை --சோவியத் அதிகாரத்துவம் அவ்வகையில் கடைசியாக ஏகாதிபத்தியத்திற்கு தன் பணியயை செய்தது-- சீனாவின் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் வெளிப்படையாக முதலாளித்துவ மீட்பில் சேர்ந்தமை, இந்திய ஸ்ராலினிஸ்டுகளும், முதலாளித்துவ வர்க்கத்தின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கை திட்டத்தை தழுவியமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றபோது ஏற்பட்டதாகும். துர்போ ஸ்ராலினிச CPM உடன் போரிட பெரும் ஆர்வத்துடன் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தார்.

"ஸ்ராலினிச இயக்கத்தை சூழ்ந்திருந்த பலரும், ஸ்ராலினிச கட்சி அரசியலுக்கு தங்கள் ஆதரவை நியாயப்படுத்தும் முயற்சியில், தொழிலாள வர்க்கம் புரட்சிகர அரசியலுக்கு இன்னும் பக்குவப்படவில்லை எனக் கூறுகின்றனர்" என்று ஒருமுறை விவாதத்தின்போது அவர் குறிப்பிட்டார். "ஆனால் இந்த தயாரிப்பற்ற நிலை ஸ்ராலினிச கட்சி மற்றும் பப்லோவாத திரித்தல்வாதிகளால், தங்களை மறைத்துக் கொள்ளுவதற்காக தயாரிக்கப்பட்டது என்ற முக்கியமான உண்மையை அவர்கள் மூடி மறைக்கின்றனர்" என்றார் துர்போ.

துர்போ, அவருடைய மனைவியார் ஜரானா, மற்றும் அவருடைய பெண்கள் என்று அனைவரும் கட்வாவிற்கு வருகை புரியும் தோழர்களுக்கு உறைவிடமும் உணவும் அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அவருடைய ஊரில் அவருடைய அரசியல் அறிவிற்காகவும், கொள்கைப் பிடிப்பிற்காகவும் அனைவரும் அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்தனர்.

2001TM WSWS துலால் போஸ் பற்றிய இரங்கற் குறிப்பில் கூறியுள்ளபடி, 1990 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணியில் சேர்ந்த அவருடைய வாழ்வும் மற்றய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடைய வாழ்வும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் போருக்குப் பிந்தைய காலத்தில் எதிர்கொண்ட அரசியல் கஷ்டங்களை மட்டும் பிரதிபலிக்காமல், இந்திய தொழிலாள வர்க்கத்தில் ஆழ்ந்து வேர்விட்டிருந்ததையும் பிரதிபலித்தது.

இந்தியாவில் உள்ள புரட்சிகர தொழிலாளர்களின் ஒரு புதிய தலைமுறை, இளைஞர்கள், அறிவுஜீவிகள் துர்போவின் அயராத தன்மை, தைரியம், தொழிலாள வர்க்கத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தலில் தீராத ஆர்வத்துடன் கொண்டுள்ள நம்பிக்கை இவற்றிலிருந்து பெரும் வலிமையைப் பெறுவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னுடைய வாழ்வின் இடர்பாடுகளில் இருந்து தான் பெற்ற அரசியல் படிப்பினைகள், அவருக்கும் அவருடைய தலைமுறைக்கும் ஏற்பட்ட பேரிழப்புக்களில் இருந்து படிப்பினைகள் பெற வேண்டும் என்று விரும்புவார். அதாவது, தொழிலாள வர்க்கம் அரசியலில் சுயாதீனம் பெறுவதற்கான போராட்டத்தில் குறுக்கு வழி ஏதும் கிடையாது; தந்திரோபாயங்கள் ஊற்றெடுக்க வேண்டும் மற்றும் அவை உலகப் புரட்சிகர மூலோபாயத்திற்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும்; தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவூட்டலை பலியிட்டு, குறுகியகால நன்மைகளை பெறுவதைவிட தற்காலிகமாக தனிமைப்படலுக்கு மார்க்சிசவாதிகள் முன்னுரிமை கொடுத்தனர்; ஏனெனில் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக மாற்றம் பெறுவதானது, ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் சுயாதீனமான, வரலாற்று நலன்களை தெளிவாய் உரைக்கும் ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கான போராட்டத்தின் மூலம்தான் இடம்பெறும் என்பதை, ஒரு மார்க்சிச வாதி நன்கறிவார்.

இந்தியாவின் சோசலிச தொழிலாளர் கழகமும் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை தங்களின் ஆழ்ந்த இரங்கலை தோழர் துருப ஜ்யோதி மஜும்தாரின் குடும்பத்திற்கு தெரிவிக்கின்றன.

See Also:

துலால் போஸ் 1918-2001
முதுபெரும் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட் 82 வது வயதில் கல்கத்தாவில் காலமானார்

Top of page