World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Tense Iranian election goes into second round

பதட்டமான ஈரானியத் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு செல்கிறது

By Justus Leicht and Ulrich Rippert
23 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 17ல் நடந்த ஈரானிய ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகள் அரசியல் விமர்சகர்கள் பலரை வியப்புக்குள்ளாக்கி நாட்டின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. தேர்தலில் வெற்றிபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அயத்தொல்லா அல் அக்பர் ஹசேமி ரஃப்சன்ஜானி அறுதிப்பெரும்பான்மை பெறத்தவறிவிட்டார். 1979ல் இஸ்லாமிய குடியரசு உருவாக்கப்பட்ட பின்பு ஜனாதிபதித் தேர்தலில் முதன் முறையாக இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு தேவைப்படுகிறது.

சமீபத்திய தேர்தல் கணிப்புகளின்படி தான் ஜனாதிபதியாக இருந்தபோது 1989-91ல் தாராள சந்தைமயமாக்கல், மற்றும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கல் ஆகியவற்றுக்காக ஒரு திட்டத்தை அமுலாக்கிய நாட்டின் மிகப்பெரிய செல்வந்தரும், மிகவும் அதிபமான செல்வாக்கு உடையவருமான ரஃப்சன்ஜானி வெறும் 20.8 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் ஊடகங்களால் வெற்றிபெற முடியாதவராக கருதப்பட்டவரும் மக்களுக்கு பெரும்பாலும் அறிமுகமில்லாதவருமாகிய தெஹெரான் மாநகர் மன்றத் தலைவராகிய மஹ்முது அஹ்மதினெஜாத் ஏறக்குறைய அதே எண்ணிக்கையுள்ள வாக்குகளை (19.3 சதவிகிதம்) பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.

ஈரானின் தலைநகராகிய தெஹெரான் மாநகரின் மன்றத் தலைவராயிருந்து சமுதாய மற்றும் கலாச்சார சுதந்திரத்தை நசுக்க முயன்ற அஹ்மதினெஜாத் மிகவும் அததீவிர இஸ்லாமிய பழமைவாதியாக வருணிக்கப்படுகிறார். இவர் தமது அரசியல் ஆதரவை முக்கியமாக தீவிரவாத ஆயுதக்குழுக்ககளிடமிருந்தும், செல்வாக்குள்ள மத குருக்களிடமிருந்தும் பெறுகிறார். மதவெறியையும், சமூக வாய்வீச்சையும் கலந்து உபயோகித்து மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவு மக்களிடமிருந்து தமது தேர்தல் ஆதரவைப் பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தது.

இந்த தேர்தலில் தோற்றவர்களில் ''சீர்திருத்தவாதிகள்'' என அழைக்கப்படும் தற்போதைய ஜனாதிபதியாகிய முகமது கட்டாமியின் தலைமையிலானவர்கள் மறு தேர்தலில் போட்டியிட முடியாதபடி அரசியல் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளனர். சீர்திருத்தவாதிகளின் முக்கிய வேட்பாளரான முஸ்தபா மோயின் பின்னணியில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். குறைந்தபட்சம் வேறு மூன்று பழமைவாத வேட்பாளர்கள் இவரைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

பாதுகாவலர்கள் மன்றம் (Council of Guardians) என்ற பழமைவாத அமைப்பின் தீர்மானத்தின்படி தேர்தலில் போட்டியிடும் உரிமை மோயினுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் தலைமை மதத் தலைவரான அயத்தொல்லா அலி கமேனியின் தனிப்பட்ட தலையீட்டினால்தான் இவர் தேர்தலில் போட்டியிட முடிந்தது. இச்சம்பவம் எந்த அளவிற்கு சீர்திருத்தவாதிகள் தீவிர மதவாதிகளின் கைப்பிடியில் உள்ளனர் என்பதை தெளிவாக்குகிறது.

பிரபலமான பழமைவாத வேட்பாளர்கள் ஐந்து பேரும் சேர்ந்து மொத்தமாக 2 கோடி வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளனர். மெஹ்தி கர்ரூபி (Mehdi Karrubi) என்பவரும் இதில் அடக்கம். இவர் கொஞ்ச காலம் கட்டாமி ஆட்சியில் பாராளுமன்ற தலைவராகவும், குமேனியின் ஆலோசகராகவும் இருந்தவராவர். இவர்கள் ஐவரும் பெற்ற வாக்குகள், சீர்திருத்த வேட்பாளர்கள் இருவரும் சேர்ந்து பெற்ற 50 இலட்சம் சொற்ப வாக்குகளைப்போல் நான்கு மடங்காகும்.

அரசின் புள்ளிவிபரப்படி இந்தத் தேர்தலில் 62.7 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 12 சதவிகிதம் அதிகம். சீர்திருத்தவாதிகளின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் கடந்த தேர்தல்களில் செய்ததை போலவே இந்தத் தேர்தலிலும் வாக்களிக்கச் செல்லவில்லை என ஆரம்பத் தேர்தல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள், குறிப்பாக, முன்பு கட்டாமிக்கு ஆதரவளித்த நடுத்தர வகுப்பு மக்களில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் மிதமான பழமைவாத வேடபாளர்களுக்கு முக்கியமாக ரஃப்சன்ஜானிக்கு வாக்களித்தனர். இன்னொரு பக்கம் மஹ்முது அஹ்மதினெஜாத் புதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

நகரத்தில் வாழும் மிகவும் பின்தங்கிய அடுக்குகளை சேர்ந்தவர்களை தனக்கு ஆதரவாக ஒன்று திரட்டுவது தெஹெரான் மாநகர மன்றத் தலைவருக்கு உண்மையிலேயே சாத்தியமாயிருந்தது. பல கோடிக்கணக்கானோர் வாழும் இஸ்ஃபஹன் நகரத்தில் அவர் அறுதிப்பெரும்பான்மையை பெற்றார். மேலும் அரசின் துணைஇராணுவம் மற்றும் தீவிரவாத பிரிவுககளின் நம்பிக்கையை பெறவும், கீழ்த்தட்டு மக்களின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்ளவும் அவரால் முடிந்தது. Frankfurter Rundschau பத்திரிகையில் கார்ல் க்ரோப் எழுதும்போது அவரின் இந்த உறவினை நிராகரித்து அதற்கு எதிராக ''தேர்தலின் உண்மையான முக்கியத்துவம் இந்த அணிதிரட்டுதலிலும் மற்றும் தங்களை நவீனமானவர்களாகவும், அரசியலிலும் புத்திக்கூர்மையிலும் மேம்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்கின்ற மத்தியதர வர்க்கத்தினர் ஒரு அரசியல் சக்தியிலிருந்து வீழ்ச்சியடைந்ததிலும்தான் உள்ளது'' என்று குறிப்பிடுகின்றார்.

''மத்தியதர வர்க்கத்தினரை ஒரு அரசியல் சக்தி'' என்று எழுதுவதும் அல்லது இதை முழுமையாகச் சீர்திருத்தவாதிகளின் கட்சியுடன் சம்பந்தப்படுத்துவதும் உண்மையை மிகைப்படுத்துவதாகும். ஆனால், கட்டாமி மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் திவாலானதையே இந்தத் தேர்தல் குறிக்கிறது என்பது தெளிவு. தேர்தல் முடிவைப் பற்றி அவர்களிடமிருந்து வெளிப்பட்ட அவர்களின் சொந்தப் பிரதிபலிப்பும் இதைத் தெளிவாக்குகிறது. சீர்திருத்தப் பாசறையின் பிரபலமான பிரதிநிதிகள், மஹ்முது அஹ்மதினெஜாத்திற்கான ஆதரவு தருவது ''சமுதாயத்தை இராணுவமயமாக்குதல்'' மற்றும் ''துளிர்விடும் பாசிசத்திற்கான வரைவு'' ஆகிய ஆபத்துக்களை உள்ளடக்கியது என்று அறிவித்தனர். அதே மூச்சில் அவர்கள் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் ரஃப்சன்ஜானிக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டனர்.

ஞாயிறு மாலையில் சீர்திருத்த இயக்க தலைவர்களில் ஒருவராக கருதப்படுகின்ற பத்திரிகையாளரும், மனித உரிமைகள் பாதுகாவலருமான எமாத் பாஹி ''ஈரானின் சீர்திருத்தத்திற்காகவும், புதுப்பித்தலுக்காகவும் செயல்படும் அனைத்து சக்திகளையும் ரஃப்சன்ஜானிக்கு வாக்களிக்க அழைக்கிறேன்'' என்று அறிவித்தார். மேலும் அவர் ''அஹ்மதினெஜாத்துடன் ஒப்பிடும்போது பிஸ்தாசியன் கோடீசுவரரான ரஃப்சன்ஜானி (தேர்தலுக்கு முன்பு சீர்திருத்தவாதிகள் இவரை ''சீர்திருத்தங்களை புதைக்க குழி தோண்டுபவர்'' என்று அழைத்தனர்) ஒரு சிறிய தீமையே'' என்றார்.

மிகவும் செல்வாக்குள்ள சீர்திருத்த கட்சிகளில் ஒன்றான இஸ்லாமிய பங்கெடுப்பு முன்னணியும் (Islamic Participation Front), ரஃப்சன்ஜானிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "இராணுவக் கட்சியொன்றின் பங்கெடுப்புடன் எப்படியாவது தேர்தல்களில் வெற்றிபெற முயற்சி செய்யும் ஒன்றும், இந்த ''தீவிரவாதத்தை குறித்து மிகவும் கவலைப்படும்'' மற்றொன்றுமாக ஒன்றையொன்று எதிர்க்கும் ''இரண்டு முன்னணிகளை'' பற்றி அந்த அறிவிப்பு பேசியது. திங்களன்று, நாட்டின் மிகப்பெரிய மாணவர் கூட்டமைப்பு, தேர்தலை புறக்கணிக்க தான் ஏற்கனவே விடுத்திருந்த அழைப்பை திரும்பப் பெற்றுக்கொண்டதுடன் ரஃப்சன்ஜானிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் மாணவர் குழுக்களை அமைக்கப் போவதாகவும் அறிவித்தது.

முற்போக்கு பத்திரிக்கைகள் -குறிப்பாக Sharg என்னும் செய்தித்தாள்- இதேபோன்ற வாதங்களை முன்வைத்தன. தகுதியற்ற அஹ்மதினெஜாத்தின் வெற்றியை தடுப்பதற்காக ரஃப்சன்ஜானியின் பின்னால் ஒன்று திரளும்படி சீர்திருத்த பாசறைக்கு அது அழைப்பு விடுத்தது. ''அடுத்த வெள்ளிக்கிழமை ஏற்படவிருக்கும் ஒரு அழிவை தடுப்பதற்காக அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுவதே தற்போதைய பிரச்சினை`` என்று Aftab என்னும் தெஹெரான் செய்தித்தாள் எழுதியது.

எது எப்படியிருப்பினும் ரஃப்சன்ஜானி, அஹ்மதினெஜாத்துக்கு மாற்றீடு அல்ல. அதிதீவிர வலதுசாரி மதகுரு வட்டங்களுடன் மிக நெருக்கமானதொரு உறவை பராமரித்து வரும் இவர், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் மேல் கொடிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டவர். 1995ல், இவருடைய பொருளாதார சீர்திருத்தங்கள் இரட்டிப்பான விலைவாசி உயர்வுக்கு இட்டுச் சென்றபொழுது விலைவாசி உயர்வை கண்டித்து அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் மேல் இராணுவ ஹெலிக்காப்டர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அரசுத் தலைமையாகிய இவர் உத்தரவிட்டார். அப்பொழுது 100க்கும் மேற்பட்டோர் இறந்ததாக வெளிநாட்டு பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

உண்மையில் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி சீர்திருத்தவாதிகளுடைய கொள்கைகளின் நேரடி விளைவேயாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, முல்லாக்கின் பிற்போக்கு ஆட்சியின்மேல் மக்களுக்கு ஏற்பட்ட பரவலான வெறுப்பை தொடர்ந்து அதிகப் பெரும்பான்மையுடன் கட்டாமி ஆட்சியை பிடித்தபோது சமூக முன்னேற்றமும், ஜனநாயக சீர்திருத்தமும் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருடைய அரசு, பாதுகாவலர்கள் மன்றத்தில் உள்ள அதிகார சக்திகளை கட்டுப்படுத்தவோ அல்லது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.

அந்த சமயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஆதரவும், ஆனால் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதிகளையும், அரசு எந்திரத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக நீதித்துறையையும், தேசீய தொலைக்காட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடுமையான போக்குடைய மதவாதிகள் தங்களுடைய அடக்குமுறை சாதனங்களை திட்டமிட்டு நிர்மாணித்துக் கொண்டனர். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் தடை செய்யப்பட்டன, அரசியல் எதிரிகள் சிறையில் தள்ளப்பட்டனர். வேலை நிறுத்தங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் போன்றவை துணை இராணுவப் படைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டன. யூதர்களின் வழக்கு விசாரணைகளை வேண்டுமென்றே பெரும்பிரச்சினைகளாக்கி விளம்பரப்படுத்துவதின் மூலம் யூத எதிர்ப்புணர்வுகள் ஊக்குவிக்கப்பட்டன.

சமூக நிலைமை சீர்கெட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தபொழுது, கட்டாமியும் அவருடைய பாராளுமன்ற சீர்திருத்தக் குழுக்களும், இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அடிக்கடி பின்வாங்கினர். இந்தச் சூழலில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே தங்களின் முக்கிய தேவையென்று உணர்ந்தனர். முன்னேற்றம் பற்றிய ஆரம்பக்கால எதிர்பார்ப்புக்கள் திட்டமிட்டபடி கலைக்கப்பட்டன. சமுதாயத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளை சேர்ந்த மக்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இஸ்லாமிய வெறியர்கள் இந்த அபிவிருத்திகளை தமக்கு சாதகமாக பாவித்துக்கொண்டனர்.

பக்கத்து நாடான ஈராக்கில் நடைபெற்ற போரும், ஈரானின் மேல் இராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று புஷ் நிர்வாகம் தொடர்ந்து பயமுறுத்தி வந்ததும் தெஹெரானின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்க உதவின. போரையும், ஈராக் மற்றும் வளைகுடா பகுதி முழுவதையும் மிருகத்தனமாக அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டதையும், சமுதாயத்தின் பெரும்பாலான பிரிவினர் எதிர்த்தபோது, அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவும், ஒத்துழைக்கவும், தான் ஆயத்தமாயிருப்பதாக கட்டாமியின் அரசு சைகை காட்டியது. அரசின் மேல் மக்களின் நம்பிக்கை இழப்பைத் துரிதப்படுத்த இதுவே உதவியது.

தேர்தலுக்கு முந்திய நாள் மாலை ஜனநாயக வழிமுறைகளை தடுப்பதாக குற்றம்சாட்டி, அமெரிக்க ஜனாதிபதி புஷ் தெஹெரான் அரசின் மீது அழுத்தத்தை அதிகரித்தார். ''உள்நாட்டில் சுதந்திரத்தை நசுக்கி, உலகளவில் பயங்கரவாதத்தை பரப்பும் மனிதர்களால் இன்று ஈரான் ஆளப்படுகிறது'' என்று புஷ் வாஷிங்டனில் அறிவித்தார். ''அடிப்படை ஜனநாயக தேவைகளை புறக்கணிக்கின்ற ஒரு தேர்தல் முறையின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்படாத சிலரின் கைகளில் அதிகாரம் இருக்கிறது'' என்று அவர் மேலும் கூறினார். 1000 வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் இடம்பெறாமல் செய்யப்பட்ட சம்பவத்தை அவர் மேற்கோள்காட்டி, ''ஜனாதிபதி தேர்தல் வருந்தத்தக்க வகையில் இந்தக் ஒடுக்குமுறை ஆதாரங்களின் விளைவாக இருக்கின்றது'' என்றும் கூறினார். தான் கூறிய இக்கருத்துக்களின் முடிவாக தேர்தலை புறக்கணிக்க மக்களுக்கு மறைமுக புஷ் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் இந்தத் தலையீடு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசையும் அதன் கொள்கைகளையும் தாங்கள் புறக்கணிப்பதை வெளிக்காட்டுவதற்காகவே பல ஈரானியர்கள் தேர்தலில் பங்கெடுத்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் அரசுத்துறை பேச்சாளரான ரிச்சர்ட் பெளச்சர் ''ஈரானில் ஜனநாயக மயமாக்கலுக்காக பிரச்சாரம் செய்யும் ஈரானியர்களுக்கும், அரசுசாரா நிறுவனங்களுக்கும் (NGOs) உதவி செய்வதற்காக அமெரிக்க அரசு பல மில்லியன் டாலர்களை வழங்குகிறது'' என்று அறிவித்தார். இதே நோக்கத்திற்காக ஒரு இணைய தளமும் கூட ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான பிரபலிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு பின் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ், ஈரானிய தேர்தலில் 62.7 சதவிகிதம் வரை அதிகமாக வாக்குகள் பதிவாகியிருந்தும் அதன் முக்கியத்துவத்தை மறுத்தார். ABC தொலைக்காட்சி செய்திக்கு அளித்த பேட்டியில், வேட்பாளர்கள் வாக்குச் சீட்டிலிருந்து நீக்கப்பட்டதை ரைஸ் மீண்டும் குறிப்பிட்டு, ''ஈரானில் எதிர்காலத்தில் ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் ஒரு உண்மையான முயற்சியாக ஈரானிய தேர்தல்கள் இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார். கெய்ரோவிற்கு புறப்பட்டுச் செல்வதற்கு சற்று முன்பாக அவர் இக்கருத்தைக் கூறியிருப்பது கேலிக்குரியதாகும். ஏனெனில், அவர் கெய்ரோவில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசின் ஸ்திரத்தன்மையை புகழ்ந்து பேசினார். இந்த ஹொஸ்னி முபாரக்கின் சமீபத்திய தேர்தல் சீர்திருத்தங்கள் வன்முறைமிக்க எதிர்ப்புக்களையும், தேர்தலை புறக்கணிக்க எகிப்திய எதிர்க்கட்சி விடுத்த அழைப்பினையும் எதிர்கொண்டது.

பாக்தாத்தில் செய்ததைப் போல் தெஹெரானிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில் சமுதாய மற்றும் அரசியல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரானிய வாக்காளர்களில் பாதிப்பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். வேலையில்லாத இளைஞர்களில் பலர் பல்கலைக்கழக படிப்புக்கு செல்ல ஆர்வமுள்ளவர்களாகவும், சீர்திருத்தவாதிகளுடனோ, அல்லது இஸ்லாமிய வெறியர்களுடனோ எந்த ஈடுபாடும் அற்றவர்களாக இருக்கவும் விரும்புகின்றனர்.

Top of page