World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London terror bombings: a political crime

லண்டனில் பயங்கரவாத குண்டுவெடிப்புக்கள்: ஓர் அரசியல் குற்றம்

By the Editorial Board
8 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

லண்டனில் டசின் கணக்கான உயிர்களைக் குடித்து, நூற்றுக்கணக்கான மக்களை காயமும் படுத்திய பயங்கரவாதிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலை, உலக சோசலிச வலைத் தளம் சிறிதும் தயக்கமின்றி கண்டனம் செய்கிறது. இறந்தவர்கள், காயமுற்றோர்கள் மற்றும் தாங்கள் பட்ட அனுபவத்தினால் பெரும் மன அதிர்ச்சிக்கும் உடல்நல பாதிப்பிற்கும் ஆளாகியிருப்பவர்களுடைய குடும்பங்களுக்கும், எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தங்களுடைய அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எவ்விதத்திலும் பொறுப்பு பெற்றிருக்காதவர்கள் ஆளாகியிருக்கின்ற மரணங்கள், காயம், துன்பங்களின் கொடூரக் காட்சிகளை மீண்டும் உலகம் காண்கின்றது. பணிக்கு அதிகமானவர்கள் செல்வதால், தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதால் அல்லது பல காட்சியகங்களுக்கும் செல்லுவதால் உச்சபட்ச எண்ணிக்கை கொண்டவர்களை கொல்லும்பொருட்டும் முடமாக்கும்பொருட்டும் மிகவும் பரபரப்பான நேரத்தில் குண்டுவெடிப்புக்கள் இயங்கும்படி செய்யப்பட்டிருந்தன.

இறந்தவர்கள், காயமுற்றவர்களின் இறுதி எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை; மதிப்பீடுகளோ தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.

ஜூலை 7ம் தேதி காலை 8:51க்கு தொடங்கி நான்கு குண்டுகள் தொடர்ந்து விரைவான இடைவெளியில் வெடித்தன. லண்டன் சுரங்க இரயில் போக்குவரத்துப் பகுதியில் மூன்று குண்டுகள் வெடித்தன மற்றும் ஒன்று ஒரு நெரிசல் மிகுந்த இரட்டை அடுக்கு பஸ் ஒன்றில் வெடித்தது. ஆல்ட்கேட் மற்றும் லிவர்பூல் தெரு, ரஸ்ஸல் சதுக்கம் மற்றும் கிங்ஸ் கிராஸ் இவற்றிடையே சென்று கொண்டிருந்த இரயில்கள், மற்றும் எட்க்வேர் சுரங்க இரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரயில் ஒன்று எனத் தாக்குதல்களுக்குள்ளாயின. ஹாக்னேயில் இருந்து மார்பிள் ஆர்ச்சிற்குச் சென்று கொண்டிருந்த, பயணிகள் நிறைந்திருந்த பஸ்ஸின் மாடிப் பகுதியும் தாக்குதலுக்குட்பட்டு சின்னாபின்னமாயிற்று.

அதிகாரபூர்வ வட்டாரங்களின் தகவல்படி, சுரங்க இரயில் பகுதியில் 35 பேர் இறந்தனர், பஸ் தாக்குதலில் இரண்டு பேர் இறந்தனர் மற்றும், வெடித்தாக்குதலால் பாதிக்கப்பட்ட காயத்தின் விளைவாக ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். குறைந்தது 700 பேராவது காயம் அடைந்தனர்; இவர்களில் 45 பேருடைய நிலைமை கவலைக்கு இடமாக உள்ளது. ஏராளமான நபர்கள் உறுப்புக்களை இழந்தும், பலர் பெரும் தீப்புண்களை கொண்டும் உள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் ABC News இடம் பிரிட்டிஷ் போலீசார் இந்த நான்கு வெடிப்புக்களை அடுத்து, இரண்டு வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்ததாக கூறியுள்ளனர்.

ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிராக கணக்கிலடங்கா எதிர்ப்புக்களை தெரிவித்த நகரத்திலேயே இத்தகைய நிகழ்வு நடந்துள்ளமை, இக்கொடூரங்களின் குற்றம் சார்ந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2003 பெப்ரவரியில் 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் லண்டனில் அணிவகுத்து ஈராக்கின்மீது படையெடுத்த, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளின் திட்டத்தை எதிர்த்திருந்தனர்.

ஓர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால்தான் இந்த குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டன என்பது உறுதியானால், அது இன்னும் கூடுதலான முறையில் அத்தகைய குழுக்களில் அரசியல் பிற்போக்குத் தன்மை மற்றும் குருதி நிறைந்த தன்மை இவற்றிற்கு சான்றாக அமையும். பயங்கரவாதத்தால் ஏகாதிபத்தியத்தை தடைசெய்ய முடியாது. மாறாக, அது லண்டன், வாஷிங்டனில் இருக்கும் அரசியல் உயர் செல்வ அடுக்குகள் மற்றும் அவர்களுடைய செய்தி ஊடகத்தின் செல்வாக்கிற்கு மக்கள் இணங்கிச் செயல்படும் வண்ணம் அவர்களின் கரங்களில் கையாளப்படும் அச்சம், கோபம், குழப்பம் மற்றும் அரசியல் திசைவிலகல் இவற்றைப் பரப்பும்.

ஆயினும், இந்தக் கட்டத்தில் இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்பதை இப்போது துல்லியமாக கூறவியலாது. "ஐரோப்பாவில் உள்ள அல் கொய்தாவின் இரகசிய அமைப்பு" என்று தன்மை அழைத்துக் கொள்ளும் குழு ஒன்று ஒரு இஸ்லாமிய வலைத் தளத்தில் இதற்கு பொறுப்பேற்று, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பிரிட்டன் தொடர்பு கொண்டுள்ளதற்கு பதிலடியாக இக்குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. ஆனால் அக்குழு இதற்குமுன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டிராததாக இருக்கிறது, மற்றும் சில நிபுணர்கள் இச்செய்தி வெளியீட்டின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இத் தகவல் தெரியாத நிலை ஒன்றும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேர், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் G 8 உச்சி மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்தில் கூடியிருக்கும் மற்ற நாடுகளின் தலைவர்களை, இக்கொடுமைகளை காரணம் காட்டி தங்களுடைய போர், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என்பவற்றை நியாயப்படுத்தும் முயற்சியில் இருந்து அவர்களை தடுத்து நிறுத்திவிடவில்லை.

பெரும் செல்வக் கொழிப்பு உடைய Gleneagles சூழ்நிலையில் இருந்து பேசிய பிளேரும் புஷ்ஷும், தங்கள் இலக்குகளுக்காக இக்குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்த அதிக நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பங்களின் பெரும் துயரம் இவற்றைப் பற்றி சற்றே கூறியபின், பிளேயர் G8 உச்சி மாநாடு தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்தார். அவருடைய கருத்தின்படி இக்குண்டு வீச்சுக்கள் "குறிப்பிடத்தக்க முறையில் காட்டுமிராண்டி தனமானவை"; ஏனெனில் "ஆபிரிக்காவில் வறுமையை அகற்றும் பிரச்சினைகளை பற்றியும், தட்பவெப்ப மாறுதல், சுற்றுச் சூழல் இவற்றின் நீண்ட கால விளைவுகள் பற்றியும், சிலர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது."

"ஒன்றாக இணைந்து வறுமையை நீக்கப் பணியாற்றிக் கொண்டிருக்கும், உலகத்தில் இருந்து பெரும் தொத்து வியாதியான AIDS (அப்படியேதான் குறிக்கப்பட்டுள்ளது), ஐ அகற்றுவது இவை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் G 8 தலைவர்களுக்கும்" பயங்கரவாதிகளான தீயசக்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிளேயர் வலியுறுத்திப் பேசினார்.

"பயங்கரவாதத்தின்மீதான போர் தொடரும்" என்று அறிவிப்பதற்கு முன்னர், "மனித உரிமைகள், மனித சுதந்திரம் இவற்றைப் பற்றி தீவிரமாக கருத்திற் கொண்டு செயல்படும் எங்கள் விருப்பங்கள், உள்ளங்கள் மற்றும் பிறரை கொல்லுபவர்கள், தங்களுடைய உள்ளத்தில் அத்தகைய தீமையை கண்டு நிரபராதி மக்களை கொல்லுபவர்கள் இவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு இதைவிட தெளிவாகக் காண்பதற்கில்லை" என்று அவர் தொடர்ந்தார்.

"தொடர்ந்து ஒரு சிறந்த உலகிற்காக அவர்களுடைய விவாதங்களை நடத்துவோர்... இங்கு, இந்த உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்கள் உலக வறுமையை எதிர்த்தும் மனித வாழ்வை மேம்படுத்தவும் பாடுபட்டுவருகின்றர்" என்று கூறும், கூடியிருக்கும் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் வலியுறுத்தும் ஓர் அதிகாரபூர்வமான அறிக்கையையும் ஜி8 வெளியிட்டது.

இந்த அறிக்கைகள் உடனடியாக சர்வதேசச் செய்தி ஊடகத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவிலா வகையில் வெளியே பரப்பப்பட்டன.

நூற்றுக் கணக்கில் மக்கள் இறந்தும் காயமுற்றும் இருக்கும் நேரத்தில், குடும்பங்கள் பிரியமானவர்கள் இறந்த கொடூரச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், G8 ல் கூடியுள்ள அவநம்பிக்கையாளர்கள், உயர் பாசாங்குக்காரர்களின் சுயநல வெற்றுரைகளை கேட்பது என்பது துயரத்தில் வாடியிருக்கும் எவருக்கும் கடைசி பட்ச விருப்பமாகத்தான் இருக்கும்.

Top of page