World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : நினைவகம்

Nathan Steinberger dies at 94

A life dedicated to the fight against fascism and Stalinism

நத்தான் ஸ்ரைன்பேர்கர் 94 வயதில் காலமானார்

பாசிசம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை

By Verena Nees
9 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

பேர்லினில் ஒரு மருத்துவ மனையில் தன்னுடைய 94-வது வயதில் பெப்ரவரி 26ம் தேதி நத்தான் ஸ்ரைன்பேர்கர் காலமானார். இவருடைய மனைவியார் எடித் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். புரட்சிகர எழுச்சிகளையும், தொழிலாளர் இயக்கத்தின் பெரும் துயரமான தோல்விகளையும் கண்டிருந்த ஒரு சகாப்தம் முழுவதும் வாழ்ந்திருந்த ஒரு தலைமுறையின் கடைசி உறுப்பினர்களின் மத்தியில் நத்தான் மற்றும் எடித் ஸ்ரைன்பேர்கர் இருவரும் இருந்தனர். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) உறுப்பினர்களாக சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்தபொழுது, அவர்களின் வாழ்க்கை தவிர்க்க முடியாமல் பாசிசம், மற்றும் ஸ்ராலினிச பயங்கரம் இவற்றின் பயங்கர அனுபவங்களுடன் விடுவித்துக்கொள்ள இயலாதவகையில் பிணைந்திருந்தது, அவர்கள் அரிதாகவே உயிர் தப்பி இருந்தனர். [See also: An interview with Nathan Steinberger (1997)]

1910-ம் ஆண்டு பேர்லினில் ஒரு மரபு வழி யூதக்குடும்பத்தில் இளைய குழந்தையாக பிறந்திருந்த நத்தான் சார்புரீதியான வறுமையில் வளர்ந்து வந்தார். உலகத்தைப் பற்றிய இவருடைய மிக இளவயதுக் கருத்தானது போர், வறுமை மற்றும் பின்னர் பேர்லின் தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களால் வரையறுக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், அவர் 1920-களின் கலாச்சார மேல்நோக்கிய போக்காலும் செல்வாக்கிற்கு ஆளாகியிருந்தார். ஒரு ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே தன்னுடைய மூத்த சகோதரிக்காக இவர் நடன, நாடக அரங்குகளில் நுழைவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருப்பார். அவருடைய மூத்த சகோதரர் வீட்டிலேயே ஒரு டாடா நாடகக் குழுவினருடன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். பல நாடகங்களில் சிறு பாத்திரங்களை ஏற்று நடித்ததின் மூலம் நத்தான் கூட கைச்செலவுக்காக சில்லைறையாக சம்பாதித்தது உண்டு மற்றும் தன்னுடைய கடைசி காலம் வரையில் தன்னுடைய நண்பர்களையும் பார்வையாளர்களையும் தன்னுடைய இலக்கியம், ஓவியம் பற்றிய அறிவினால் அவர் திகைக்க வைக்க முடிந்தது.

முதலாம் உலகப் போர் ஆரம்பித்தபோது நத்தானுக்கு நான்கு வயதாகி இருந்தது, இவருக்கு ஏழு வயதான போது ரஷியப் புரட்சி தோன்றியது. 90 வயதில், சிறுவயது நினைவுகளைப் பற்றிக் கேட்டபோது, "ரஷ்யப் புரட்சி பேர்லினில் ஒரு புயலை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் லெனின், ட்ரொட்ஸ்கி பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். திரும்பிப்பார்க்கையில், ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகள் பேர்லினிலும், ஜேர்மனி முழுவதும் மகத்தான பாதிப்பைக் கொடுத்திருந்தது என உறுதியாகக் கூற முடியும்" என்று அவர் நினைவுகூர்ந்தார்.

1918 நவம்பர் புரட்சியில் சில மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும் தெருப் பூசல்களும் ஸ்ரையின்பேர்க் குடும்ப இல்லத்திற்கு மிக அருகே நடைபெற்றன. நத்தானும் அவருடைய இளைய சகோதரர் லியோவும் Spartakusbund (புரட்சிகர ஸ்பார்டாக்கஸ் கழகம், ரோசா லுக்சம்பேர்க், கார்ல் லீப்க்னெட் தலைமையில் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாக ஆனது) க்கும் Freikorps படைவீரர்களுக்கும் (பிற்போக்கு இணை இராணுவ அமைப்புக்கள்) இடையே நிகழ்ந்த ஆயுதமேந்திய பூசல்களின் விளைவாக தெருக்களில் சிதறிக் கிடந்த வெற்றுத் தோட்டாக்களை சேகரித்து, அடிக்கடி விளையாடுவர். பலநேரமும் பள்ளி நேரத்திற்கு பின்னர், நத்தான் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுவார்: மாலை நேரங்களிலும் KPD, UPSD (Independent Social Democratic Party of Germany), மற்றும் SPD-யினர் (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) அருகில் அரங்குகளில் நடத்தும் சூடான விவாதங்களைக் கேட்க வீட்டிலிருந்து விரைந்து சென்றுவிடுவார்.

பின்பு நாஜிக்களால் Mauthausen கடூழியச்சிறை முகாமில் கொல்லப்பட்ட, இவருடைய மூத்த சகோதரர் அடோல்பின் செல்வாக்கின் கீழ், நத்தான் விரைவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 14 வயதிலேயே அவர் கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டமைப்பில் உறுப்பினரானார், (கம்யூனிஸ்ட் கட்சியில் பள்ளி மாணவர் பிரிவான-Kommunistische Pennälerfraktion) KoPeFraa மற்றும் சோசலிசப் பள்ளி மாணவர்கள் கூட்டமைப்பை (SSB) கட்டுவதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்றினார்.

ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் பிரச்சினைகளை நத்தான் மிகச் சிறிய வயதிலேயே நன்கு அறிந்திருந்ததுடன், ஜேர்மனியில் ரஷ்ய புரட்சி முன்மாதிரியில் முயற்சிகள் மேற்கொண்டதிலும் அனுபவத்தைப் பெற்றார்.

கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஜனநாயக தொழிலாளர்கள் மத்தியில் 1923ம் ஆண்டு பெரும் நம்பிக்கையையும், பதட்டங்களையும் கொடுத்ததாக அவர் திரும்பநினைவு கூறுகிறார். அந்த ஆண்டு முழுவதும் வேலை நிறுத்தங்கள் இருந்தன. "முக்கியமான நிகழ்வு வரவிருப்பதாக, அரசியல்ரீதியாக உணர்வு உடைய அனவருமே அது விரைவில் நிகழும் என்று உணர்ந்திருந்தனர். பேர்லினில் இருந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு ஜேர்மனிய அக்டோபர் புரட்சியை பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தனர். அக்காலக்கட்டத்தில் அதை நான் தெளிவுடன் உணர்ந்திருந்தேன்" என்று அவர் நினைவு கூர்ந்தார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை நெடுநாள் தயக்கத்தை காட்டி இயக்கத்தின் சிகரத்தை தவறவிட்ட பொழுது ஏமாற்றம் மிகப் பெரிதாயிற்று. "ஒருநாள் இது எல்லாம் முடிந்து விட்டது என்று நான் உணர்ந்தேன். திடீரென்று ஒரு பெரும் தேக்கம் ஏற்பட்டிருந்தது. என்னால் அதனை விளக்க முடியவில்லை, ஆனால் பரபரப்புக்கள் அனைத்தும் திடீரென்று மறைந்து விட்டன, ஏமாற்ற உணர்வு படர்ந்திருந்தது. KPD யில் சேர்ந்திராத தொழிலாளர்கள் குறிப்பாக ஏமாற்றத்தை அடைந்தனர். சில நாட்களுக்கு ஒடுக்குதலுக்குரிய அமைதிதான் நிலவியது."

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஸ்ராலினின் பிரிவிற்கும் (கன்னைக்கும்) லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த இடது எதிர்ப்புக்கும் இடையே நடந்த போராட்டங்களை அடுத்து, 1923க்குப் பின்னர் KPD-யிலும் பூசல்கள் வெடித்தெழுந்தன. அரசியல் பிரச்சினைகளை நன்கு புரியக் கூடிய வயதில்லாவிடினும், நத்தானும் அவருடைய முழு கிளையும் (Local) கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டமைப்பில் (KJVD) இருந்து 1926ல் வெளியேற்றப்பட்டனர். இதற்காக வழங்கப்பட்ட காரணம் கட்சியின் நிலைப்பாட்டைப்பற்றிய முக்கிய விமர்சகரான Karl Korsch-ன் செல்வாக்கின்கீழ் அக்கட்சிக் கிளை இருந்தது என்பதுதான்.

SSB இல் நத்தான் ஸ்ரைன்பேர்கர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் அரசியல் கலைந்துரையாடல்கள் என்று மட்டும் இல்லாமல், Erich Kästner, Arnold Zweig போன்ற எழுத்தாளர்களுடனும் மற்றும் சிலருடனும் விவாதங்களை நடத்தியதோடு உளவியல், பாலியல் பற்றிய பிரச்சினைகளையும் விவாதித்தனர். 1929ம் ஆண்டு கல்லூரி நுழைவுத் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற பின், நத்தான் முதலில் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் தனக்குப் பிடித்த பாடமான உளவியலைத் தொடரலாம் என்ற நம்பிக்கையில் சேர்ந்தார், பின்னர் அரசியல் பொருளாதார படிப்பைத் தொடருவதற்கு மாறிக் கொண்டார். விவசாய அறிவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார், மாஸ்கோவிலுள்ள சர்வதேச விவசாயக் கூடத்தின் பிரதிநிதியாக இருந்த புகழ் பெற்ற விஞ்ஞானியான கார்ல் விட்போகெலின் (Karl Wittfogel) இடம் பயின்றார்.

முன்பு கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும், நத்தான் 1928-ம் ஆண்டு KPD உறுப்பினரானார். ஸ்ராலின் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த "சமூக பாசிச தத்துவம்", அந்த ஆண்டில் KPD உறுப்பினர்களிடையே தீவிர சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த தத்துவத்தின் படி, சமூக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இப்படி தற்கொலைக்கு ஒப்பான கொள்கையின் விளைவு சமூக ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களும் பாசிஸ்டுகளின் பெருகிவரும் செல்வாக்கிற்கு எதிரான எந்தவித பொதுப்போராட்டத்தையும் தடுப்பதாக இருந்தது.

உள்ளுணர்வுடன் நத்தான் இந்த நிலைப்பாட்டை நிராகரித்தார். பின்னாளில் அவர் நினைவுகூர்ந்தவாறு "இந்தத் தீவிர-இடது நிலை அரசியலில் அறியாமை உடையோருக்கு ஏதோ ஒன்றாக இருக்கலாம். 1918 மற்றும் 1923 புரட்சிகர அனுபவங்களைக் கண்டிருந்த பெரும்பாலானவர்கள், சமூக ஜனநாயகக் கட்சியை பாசிஸ்ட்டுக்களுடன் சமன்படுத்தி பேசுதலை நிராகரித்தனர். எவ்விதத்திலும் அந்தச் சொற்றொடரான 'சமூக பாசிசம்' என்பதை தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது, நான் உபயோகித்தது இல்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காலக் கட்டத்தில்தான் நத்தான் ஸ்ரைன்பேர்கர் முதன் முதலாக, வளர்ந்துவரும் நாஜிக்களின் செல்வாக்கிற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர்களின் ஒரு ஐக்கிய முன்னணிக்காக அழைப்பு விடுத்த லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை எதிர்கொண்டார்.

இதையொட்டிச் சிறிது காலத்திலேயே நத்தான் ஸ்ரைன்பேர்க்கருடைய வாழ்க்கை வியத்தகு முறையில் மாற இருந்தது. கார்ல் விட்போகெலின் பரிந்துரையின் படி, அவர் 1932ம் ஆண்டு மாஸ்கோ விவசாயப் பல்கலைக் கழகத்தில், படிப்பை முடிப்பதற்கு முன்னரே, நியமனம் பெற்றார். KPD யில் தீவிரமாக இருந்த இவருடைய நண்பியான எடித்தும் இவருடன் சென்றார். மாஸ்கோவில் இவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருப்பதாக இருந்தது, ஆனால் ஹிட்லர் 1933-ல் ஆட்சிக்கு வந்த பின்னர் இளம்வயது தம்பதிகள் ஜேர்மனிக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆகிவிட்டது. இதற்குக் காரணம் அவர்கள் KPD உறுப்பினர்களாக இருந்தது மட்டுமின்றி, யூதர்களாக இருந்ததும்தான்.

நத்தானும் எடித்தும் ஜேர்மனியில் தொழிலாளர்கள் இயக்கத்தின் தோல்வி, பாசிசத்தின் வெற்றி இவற்றினால் மனம் உடைந்து போயினர். அதேநேரத்தில் தங்களை அரசியலுக்கு ஈர்த்திருந்த 1920 களின் புரட்சிகர நம்பிக்கைகள் ஏதும் ஸ்ராலினிச ஆட்சியில் இல்லை என்பதையும் கண்டுகொண்டனர். விவசாயக் கல்விக் கூடத்தில், நத்தானின் மூத்த சக ஊழியர்கள் கட்டாயப்படுதப்பட்ட கூட்டுப் பண்ணைமயமாக்கலின் பொழுது கிராமப் பகுதிகளில் நடந்த கொடூரமான, மிருகத்தனமான நிகழ்வுகளைப் பற்றி அவரிடம் எடுத்துரைத்தனர். ஒரு சுவிஸ் புரட்சியாளராகவும், லெனினுடன் நெருங்கியிருந்தவருமான ஃபிரிட்ஸ் பிளாட்டென் போன்ற பழைய போல்ஷிவிக்குகளை அவர் சந்தித்தார்; பிளாட்டெனும் மற்ற பழைய கட்சி உறுப்பினர்களும் எவ்வாறு அதிகரித்த முறையில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதை உணர்ந்தார். இக்காலக்கட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டு விட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். நத்தான் கலந்துகொண்ட கட்சிக் கூட்டங்களில் வெளிப்படையான அரசியல் விவாதம் ஏதும் அரிதாகத்தான் இருந்தது. கட்சி ஜனநாயகம் என்பது அதிகரித்த அளவில் அதிகாரத்துவ மற்றும் சதியாலோசனைகளினாலான தூசிப் படலமாக இருந்தது.

1935-ம் ஆண்டு நத்தான் தன்னுடைய டாக்டர் பட்டத்தை பெற்றார். அவரது அறிஞர் பட்டத்திற்கான "தேசிய சோசலிசத்தின் விவசாய அரசியல்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டது, ஆனால் அதன் பின்னர் திடீரென்று அவருடைய அறிவியல் பணி ஒரு முடிவிற்கு வந்தது. லெனின்கிராட் கட்சிச் செயலாளர் கிரோவ் கொலை செய்யப்பட்ட பின்னர், பெரிய வகையில் அரசியல் களைஎடுப்புகள் ஆரம்பமாயின. புகழ்பெற்ற எதிர்ப்பாளர்கள் மட்டும் இல்லாமல், இதுவரை ஸ்ராலினின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்த பல கட்சித் தோழர்களும் பெருமளவில் ஸ்ராலினிச இரகசியப் போலீஸ் GPU வின் பிடியில் சிக்குண்டனர். 1936-ம் ஆண்டு விவசாயக் கூடத்தில் இருந்து நத்தான் பணி நீக்கம் செய்யப்பட்டார், 1935-ல் பிறந்து மரியான் எனப் பெயரிடப்பட்டிருந்த, ஒரு மகவும் சேர்ந்திருந்த தன் குடும்பத்தின் வருமானத்திற்கு, ஜேர்மன் பாடங்களை எடுத்ததன் மூலம், முதல்தடவையாக முயற்சி செய்தார்.

மாஸ்கோ பொய்புனைவு விசாரணைகளுக்குப் பின்னர், நாஜிக்களிடம் இருந்து தப்பி வந்திருந்த ஜேர்மன் அகதிகள் முழுப்பேரும் அலை அலையாகக் கைது செய்யப்பட்டனர். திரும்பவும் நினைவுகூர்ந்த நத்தான், "தன்னுடைய அரசியலை விமர்சிக்கக்கூடியவராக வரக்கூடிய எவருக்கு எதிராகவும் ஸ்ராலின் நடவடிக்கை எடுக்க முற்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மனியில் தோல்வி தன்னுடைய அரசியலின் விளைவுதான் என்பதையும் அவர் நன்கறிந்திருந்தார்" என்று சுட்டிக் காட்டினார்.

1937-ம் ஆண்டு மே தின வேளையில் நத்தான் கைது செய்யப்பட்டார். சோவியத் ஒன்றியத்தை ஜேர்மனி படையெடுத்தபோது, இவருடைய மனைவியார் எடித்திற்கு இதே நிலைமை 1941ல் ஏற்பட்டது. அவர்கள் நட்பு கொண்டிருந்த ஒரு யூதக் குடும்பத்தின் பராமரிப்பில் அவர்களுடைய ஆறு வயதுப் பெண்குழந்தை இருந்தது.

இப்பொழுது தொடங்கிய தியாக வாழ்வு 1956 வரை நீடித்தது. மிகவும் இழிபுகழ் பெற்றிருந்த பூடிர்கி (Butyrky) சிறைச்சாலையில் நத்தான் முதலில் அடைக்கப்பட்டு பின்னர் சைபீரியாவில் இருந்த கோலிமாவிற்கு மாற்றப்பட்டார். "ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள்" என்ற குற்றம் அவர்மீது சுமத்தப்பட்டது, மற்றவற்றுடன் 15 வயதில் ஜேர்மன் கம்யூனிச இளைஞர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரது "குற்றமும்" சேர்ந்தது. இவருடைய மனைவியார் கஜகஸ்தானில் ஒரு கடூழியச் சிறை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு அவர் உயிருடன் வாழ்ந்ததே பெரிய காரியமாயிற்று.

பூடிர்கிச் சிறையில், நத்தான் இந்தக் கைதுகள் அனைத்தும், ஏதோ காரணமின்றி ஒருதலைப்பட்சமாக நடக்கவில்லை என்று கண்டுணர்ந்தார். அவை அக்டோபர் புரட்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்த, மிகவும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட கட்சி உறுப்பினர்களை இலக்கு கொண்டிருந்தன. முதன் முதலில் சிறை அறை ஒன்றில் அவர் இடது எதிர்ப்பாளர் சினோவியேவின் மகன் மற்றும் பழைய போல்ஷிவிக், மற்றும் கட்சி வரலாற்றாளர் விளாடிமீர் இவனோவிச் நெவ்ஸ்கி ஆகியோருடன் இருந்தார்; 1917ம் ஆண்டு புரட்சியின்போது நெவ்ஸ்கி, பெட்ரோகிராட் புரட்சிகரக் குழுவின் உறுப்பினராக இராணுவத் தயரிப்பில் ஈடுபட்டிருந்தார்: லெனின் கீழான முதல் தொழிலாளர் அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்திருந்தார். நத்தான் பூடிர்கிச் சிறைக்கு வந்த சில வாரங்களில், நெவெஸ்கி சிறையின் குறுகிய அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போதைய கிட்டத்தட்ட அவரது அனைத்து நண்பர்களையும் போலல்லாமல், நத்தான், எடித் ஸ்ரைன்பேர்கர் எப்படியோ தப்பித்து உயிர் வாழ்ந்தனர். தங்கள் மகளுடனும் சேர்ந்து அவர்கள் 1956ம் ஆண்டு (கிழக்கு) பேர்லினுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பபட்டனர்; ஆனால் முற்றிலும் மெளனமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அவர்கள் மீது ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) விதித்தது. ஸ்ராலினிச கொடுஞ் சிறைமுகாம்களை பற்றி ஒரு வார்த்தைகூட கூற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. GDR பொறிவு மற்றும் அதை அடுத்த சோவியத் ஒன்றியம் கலைப்பிற்கு பின்னர்தான், நத்தான் ஸ்ரையின்பேர்கர் ஸ்ராலினிச பயங்கர ஆட்சியில் தன்னுடைய அனுபவங்களை எடுத்துக் கூறினார். தப்பியிருந்த மற்ற குலாக்குகளைப் போல், இவர் வலதுசாரி அரசியலை தழுவிவிடவில்லை, இளைமைக் காலத்தில் தான் கொண்டிருந்த சோசலிச குறிக்கோள்களிடம் விசுவாசத்தைக் கொண்டிருந்தார்.

தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் ஸ்ராலினிசம் சோசலிசத்துடன் இணையானது அல்ல என்பதை விளக்குவதற்கு நத்தான் பயன்படுத்திக் கொண்டார். தன்னுடைய தொன்னூறாவது பிறந்த தினத்தன்று அவர் பல நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த போது, நத்தான் ஸ்ரைன்பேர்க்கர் தன்னுடைய வாழ்வில் தான் பெற்ற அனுபவங்களின் முடிவுரையாக பின்வரும் வார்த்தைகளில் தொகுத்துரைத்தார்: "இளைஞர்கள் ஸ்ராலினிசம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய நான் உதவுவேன். இந்தத் பொய்மைப்படுத்துதல், அடக்கு முறை இவற்றில் இருந்து எப்பொழுதும் சோசலிசம் விலகி இருக்க வேண்டும்; ஸ்ராலினிசத்தில் இருந்து அது அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் அதன் செல்வாக்கு அரங்கிலும் இருந்த ஆட்சிகளுக்கும் சோசலிசத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது."

நத்தான் ஸ்ரைன்பேர்கருடைய கடைசி ஆண்டுகள் கஷ்டமாக இருந்தன. அவருடைய மனைவியையும், சோசலிஸ்ட் பள்ளி மாணவ கூட்டமைப்பு நிறுவப்பட்ட காலத்தில் இருந்த மாக்ஸ் காஹனே என்னும் அவருடைய பழைய பள்ளி நண்பர் கடந்த ஆண்டு இழந்தமை உட்பட, இன்னும் பல நீண்டகாலத் தொடர்பு உடைய நண்பர்களையும் இழந்தார். அவரால் மிகவும் கஷ்டப்பட்டே எழுத முடிந்தது மற்றும் அவரது கேட்கும் ஆற்றல் குறைந்துபோனதும் அவரைப் பெரிதும் கஷ்டத்திற்குள்ளாக்கியது மற்றும் தனிமைப் படுத்தியது. ஆயினும், இறுதிவரை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தது யாதென்றால், அவரது நகைச்சுவை உணர்வு மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்திருந்த நண்பர்கள் இவற்றுடன் சேர்ந்து ஒரு புதிய தலைமுறை 1930-களின் படிப்பினைகளைப் பெறும் மற்றும் ஒரு சிறந்த சமுதாயத்திற்காக போராடிய அவரது தலைமுறையின் போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்.

Top of page