World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

What happened to "African socialism"?

A reply to a reader

"ஆபிரிக்க சோசலிசத்திற்கு" என்ன நடந்தது?

ஒரு வாசகருக்குப் பதில்

By Chris Talbot
19 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தள வாசகர் ஒருவரிடம் இருந்து வந்துள்ள கடிதமும் அதற்கு கிறிஸ் டால்போட் கொடுத்துள்ள பதிலும் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நான் கடந்தகால, தற்கால உலக சம்பவங்கள் பற்றிச் சரியான முன்னோக்கை பெறுவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தை பெரிதும் நம்பிவருகிறேன். இந்த உலக சோசலிச வலைத் தளத்தால் வழமையாகவே வழங்கப்பட்டு வரும் முன்னோக்குகளின் ஆழ்ந்த தன்மை பற்றி நான் முற்றிலும் வியப்பைத்தான் அடைந்துள்ளேன், சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இவ் வலைத் தளம் பற்றி அறிந்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன்! வாழ்த்துக்கள்! Fox News (உண்மையில் பிழையான (Faux) செய்திகள்) காற்றலைக்கு நேரத்தைக் கொடுத்து பலராலும் காணப்படுகிறது; அதைப் பார்ப்பவர்கள் பலரும் இங்கு உலக சோசலிச வலைத் தளத்தால் கொடுக்கப்படும் ஆய்வுகளால் பெரிதும் பலனடைவார்கள். அவ்வாறு அவர்கள் பெறாதது துரதிருஷ்டமே.

என்னுடைய கேள்விக்கு வருகிறேன்: காலனித்துவ காலத்திற்கு பின்னர் சோசலிசம் என்று அழைக்கப்படுவது தொடர்பாக (ஆபிரிக்க சோசலிசம்), நடைமுறையில் ஆபிரிக்காவில் இருந்த சோசலிம் பற்றி உலக சோசலிச வலைத்தளம் எப்பொழுதாவது வரலாற்று முறையில் ஆய்வு நடத்தியுள்ளதா என்று நான் வியந்ததுண்டு. எனக்கு குறிப்பாக தன்சானியாவிலும் அதன் ஜனாதிபதி மீதும் அக்கறை உண்டு; அதுவும் டங்கன்யிகா சுதந்திரம் பெற்ற, ஜூலியஸ் ந்யேரேரே (Julius Nyerere) பதவிக்கு வந்த பின்னர். நான் தன்சானியாவில் வசித்திருக்கிறேன்; ஜனாதிபதி ந்யேரேரேவை தெரிந்தவர்களிடம் பேசியபோது, அவர் சோசலிசத்தை சரியான முறையில் செயல்படுத்த முயற்சித்தார் என்ற தகவல் உள்ளது. என்ன ஆயிற்று? ஒரு நல்ல ஆய்விற்கு அது ஒரு பொருளாக அமையும். என்னுடைய வினாவை பரிசீலனை செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

«ü.âTM.

* * *

அன்புள்ள ஜே.எல்.

"ஆபிரிக்க சோசலிசம்" அல்லது "ஆபிரிக்க ஒன்றிணைப்புவாதம்" (Pan-Africanism) என்பதற்கு என்ன ஆயிற்று என்பது மிக முக்கியமான வினாவாகும்; ஆபிரிக்க மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலை ஏன் இத்தகைய பேரழிவிற்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு அது முக்கியமாகும். இப்பிரச்சினை பற்றி, தன்சானியாவை பற்றி குறிப்பாக இல்லை என்றாலும், நாங்கள் பலமுறை எங்கள் ஆபிரிக்கா பற்றிய கட்டுரைகளில் [1] விவாதித்திருக்கிறோம்.

தன்சானியா ஆபிரிக்காவில் உள்ள மிக வறிய நாடுகளில் ஒன்றாகும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GNP) ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்க $280 மட்டும்தான்; இங்கு 51 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் (அதாவது நாளொன்றுக்கு அமெரிக்க சென்ட்டுக்கள் 65 தான் என்ற நிலையில்); ஐ.நா.வின் மனித அபிவிருத்திக் குறியீட்டில் (UN Human Development Index), உள்ள 177 நாடுகளில் பட்டியலில் இது 162ம் இடத்தில் உள்ளது. UNAIDS இன் கருத்தின்படி, மொத்தம் உள்ள 35 மில்லியன் மக்களில் 1.6 மில்லியன் மக்கள் HIV இன் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்; 160,000 பேர் எய்ட்ஸ் நோயினால் 2003ம் ஆண்டு இறந்துள்ளனர். அது மிக வறிய நாடுகளில் ஒன்றாக இருக்லாம், ஆனால் கண்டத்தில் இருக்கும் மற்ற நாடுகளை போல்தான் இதுவும் உள்ளது. ஆபிரிக்காவிலேயே மிகவும் அதிகமான முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள தென்னாபிரிகாவில்கூட, இனப்பிரிவினை அகற்றப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த பின்னரும், மொத்தம் உள்ள 44 மில்லியன் மக்களில் 4 மில்லியன் மக்கள் "மிகக் கடுமையான ஏழ்மை நிலையில்" (நாளொன்று ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையில்) வாழ்ந்து வருகின்றனர்; எய்ட்ஸின் விளைவினால் ஒரு மனிதன் சராசரி வாழக்கூடிய ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைந்து விட்டன.

ஆபிரிக்கா முழுவதும் உள்ள தேசிய இயக்கங்களும் அரசாங்கங்களும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போல் (ANC) போராடியிருந்தாலும் அல்லது காலனித்துவ வல்லரசுகளால் சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்ட தன்சானியா போன்ற நாடுகளாயினும், கண்டத்தில் பூகோள முதலாளித்துவத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை தடுத்து நிறுத்த இயலவில்லை. உதாரணமாக தன்சானியா, இப்பொழுது அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட $3 பில்லியன் டாலர் பணத்தை மேலை நாடுகளின் வங்கிகளில் கடன்பட்டுள்ளது; சுகாதார வசதிக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் பணத்தைவிட அதிகமாக வாங்கிய கடனை திரும்பித்தர வேண்டியுள்ளது.

போருக்கு பின்னர் காலனித்துவத்திற்கு வெகுஜன எதிர்ப்பை காட்டிய பல ஆபிரிக்க நாடுகளை போலவே, அப்பொழுது டங்கன்யிகா என்று அழைக்கப்பட்ட பகுதியிலும் வளர்ச்சியடைந்திருந்த எதிர்ப்பை கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பெரும்பாலான பிரிட்டிஷ் காலனித்துவத்தின் தலைவர்களைப்போல் நியேரேரையும் பிரிட்டன் வளர்த்துவந்தது. 1959ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "...ஆபிரிக்க ஒன்றிணைப்புவாதம்'' என்பது, நாம் அச்சத்தாலும், சந்தேகத்தினாலும் நடுங்க வேண்டிய ஒரு சக்தியல்ல. மாறாக, அது தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்போமானால், அதனை சுதந்திர உலகிற்கு பரிவுணர்வு காட்டும் வகையில் அதை வழி நடத்த முடிவதோடு, சோவியத் ஒன்றியம் ஆபிரிக்காவில் நுழைவதை தடுப்பதற்கு, அது ஒரு நீண்ட கால முன்னோக்கில் வலிமையான, உள்ளூர் தடையாக அமைந்துவிடும்...."[2]

1950களிலும், 1960களிலும், உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்கம் மேற்கு வல்லரசுகளை அரசாங்க செயலர்கள், நலன்புரி அரசுகளின் நிர்வாகிகள், கல்வியாளர்கள், வக்கீல்கள் போன்ற மத்தியதர சமூக தட்டுகளை அதிகரிக்கச் செய்து, அதனுடைய விளைவாக தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. ஒடுக்கப்பட்ட நாடுகளில், இதேபோன்ற தட்டு வளர்ச்சியுற்றது; இந்த தட்டுதான் காலனித்துவம் முடிவுற்ற தறுவாயில் அதிகாரத்தை பெற்றது. தன்சானியாவிற்கு பிரிட்டிஷின் கட்டுப்பாட்டு காலத்தில் மிகக் குறைந்த முதலீடுதான் கிடைத்திருந்தது, வெகுசிலரே ஆரம்ப கல்வித் தரத்தையும்விட அதிகமாக படித்திருந்தனர்; எனவே அத்தகைய மத்தியதர தட்டு அங்கு இருந்ததாக கூறுவதற்கில்லை.

பிரிட்டனிடம் இருந்து கிடைத்த உதவித் தொகையினால், நியேரேரை பல கல்வியாளர்கள், ஆசிரியர்கள், உதவி தொழிலாளர்கள் என மேலை நாடுகளில் இருந்து தருவித்து புதிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி கொடுத்து இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப வகை செய்தார். பிரிட்டிஷ் தொழிற் கட்சியில் தான் பெற்றிருந்த அனுபவத்தை பயன்படுத்தி சோசலிச வார்ததைகளை பேசி, அதன் விளைவாக உயர் நோக்குடைய பல மாணவர்களும், சோசலிச சிந்தனைப் போக்கு உடையவர்களும் தன்சானியாவிற்கு 1960களில் ஈர்க்கப்பட்டனர்----இதைத்தான் நீங்கள் நினைவிற் கொண்டுள்ளீர்கள் என்று கருதுகிறேன்.

1950களில் இருந்த டங்கன்யீக ஆபிரிக்க தேசிய ஒன்றியத்தை (Tanganyika Africa National Union-TANU), நியாரேரே கட்டியெழுப்பினார்; இது 1961ல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவிருந்தது. டங்கன்யீகா மிக வறிய நாடாக இருந்தபோதிலும்கூட, மற்ற தேசிய தலைவர்களைவிட அவருக்கு சில நன்மைகள் இருந்தன; அதாவது ஆதிக்கம்மிக்க இனக்குழுக்கள் அங்கு இல்லை; அனைவரும் பேசும் ஒரு மொழியாக lingua franca (ஸ்வாஹிலி) இருந்தது; வெள்ளை குடியேறியவாசிகளும் மிகக் குறைவாகவே இருந்தனர்.

அவர் சிறு தொழில் துறையின் பிரிவுகளை தேசியமயமாக்கினார் (பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்து, பின்தங்கிய வளர்ச்சியில்தான் இருந்தது); அரசு நலன்புரி வழங்கலை, குறிப்பாக கல்வியில், அளிக்கும் வகையில் சில முன்னேற்றங்களைக் கண்டார். அரசாங்க அமைச்சர்களும், கட்சி அலுவலர்களும் நிறுவனங்களில் பங்கு உரிமை பெறுதலோ, இயக்குனர் பதவி பெறுவதோ, ஒரு ஊதியத்திற்கு மேல் பெறுவதோ கூடாது என்ற தடைக்கு உட்படுத்தப்பட்டனர். நியாரேரேயின் கருத்துப்படி மிகப் பெரிய வகையிலான தனியார் முதலாளிகள் நாட்டை வழிநடத்திக் கொண்டிருந்த நலிந்த தட்டுகளை சிதற அடித்துவிடக் கூடும் என்பதாகும்.

தேசிய தளத்தை கொண்டுள்ள ஒரு பொருளாதாரம், மிக அதிக அரசாங்க தொழிற்பிரிவுகளை கொண்டுள்ள நிலை என்பது 1960களில் அசாதாரணமானது அல்ல; அத்தகைய முறை எகிப்து, அல்ஜீரியா, கியூபா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து ஆளும் செல்வந்த தட்டு தேசியமயமாக்குதலை செயல்படுத்தி கல்வி, பொதுச் சுகாதாரம் இவற்றில் குறைந்த அளவு முன்னேற்றத்தை கொண்டுவந்தது. இவர்கள் பனிப்போர் முரண்பாடுகளை பயன்படுத்திக் கொண்டு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து ஆதரவை நாடினர், இயன்றபோது மேற்கு நாடுகளிடம் இருந்தும் உதவியை வருத்திப் பெற்றனர். இத்தகைய உத்தி முறையில் நியாரேரே சிறந்து விளங்கினார்.

இந்த அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும் இதுதான் சோசலிசத்தை கட்டமைக்க ஒரு புதிய வகை என்று கூறினர்: இவர்கள் உண்மையில் பெருகிக் கொண்டுவரும் மத்தியதர தட்டின் பிரதிநிதிகளாகத்தான் அடிப்படையில் செயலாற்றிவந்தனர். இவர்கள் 1950களிலும், 1960களிலும் பெரிதும் விரும்பப்பட்ட தேசிய அபிவிருத்தி மூலோபாயங்கள் என்ற நப்பாசைகளுக்கு வித்திட்டனர்.

சில மேலை நாட்டு அறிவுஜீவிகள் தன்சானியாவில் நடைபெற்ற மேலீடாக தெரிந்த அரசியல் கலைந்துரையாடலின் சுதந்திரம் பற்றிப் புகழ்ந்தனர்; ஆனால் அவர்கள் TANU வின் கீழ் நடைபெற்ற எதிரிகள் மீதான அடக்குமுறைபற்றி காணாமல் இருந்துவிட்டனர். உதாரணமாக, 1964ம் ஆண்டு நியாரேரே, பிரிட்டிஷ் படைகளை உதவிக்கு அழைத்து டங்கனியிகன் படையின் கலகத்தை அடக்கினார். ஒரு இடது எழுத்தாளர் "நியாரேரே வெல்வெட் உறைக்குள் கொண்டிருந்த இரும்புக் கை பற்றி" குறிப்பிட்டு எழுதியுள்ளார்; "ஒரு விதமான தகப்பன் அதிகாரம், அல்லது ஒருவேளை ஸ்ரானிலிசத்தின் எஞ்சியிருந்த ஒருவகை, இடதுசாரிகளாக இருந்த எங்களில் பலரால்" இதைப் பற்றி, அதாவது தன்சானிய ஆட்சியில் எதிரிகள் ஒடுக்கப்பட்ட முறையைப் பற்றிப் பேசுதல் மிகவும் கடினமானது ஆகும்." [3]

1964-ம் ஆண்டு, டங்கன்யிகாவும் புதிதாக சுதந்திரம் பெற்ற ஜான்ஜிபாரும் ஒன்றாக இணைந்து தன்சானியாவாக உருவெடுத்தன. அப்பொழுது உதவி கிடைத்தல் என்பது அமெரிக்கா மற்றும் ஜேர்மனியிடம் இருந்து மட்டும்தான் என்று இருந்தது; ஏனெனில் ஜான்ஜிபாரில் இருந்திருந்த ஆட்சி சோவியத் சார்பு உடையதாக இருந்தது. 1965-68 காலத்தில் பிரிட்டிஷ் உதவியும் குறைந்து போயிற்று; ஏனெனில் நியாரேரே ரோடிசியாவில் (இப்பொழுது ஜிம்பாப்வே) இருந்த வெள்ளை சிறுபான்மை ஆட்சிக்கு பிரிட்டன் ஆதரவு கொடுத்ததை எதிர்த்திருந்தார்.

மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு, மிகக் குறைவான தொழிற்துறை வளர்ச்சியே இருந்த நிலையில், நியாரேரே 1960களின் நடுப்பகுதியில் மேற்கிற்கு மாற்றீடாக சீனாவிடம் உதவியை நாடினார்; ஆனால் பெருகிய முறையில் மாவோவியிச கருத்துக்களின் செல்வாக்கிற்கு, அதிலும் குறிப்பாக விவசாயத்துறையில் உட்பட்டார். 1967ம் ஆண்டு அருஷா பிரகடனத்தில் (Arusha Declaration), மில்லியன் கணக்கான ஏழை மக்கள் கிராமக் கூட்டுறவின் மூலம் இணைந்து செயல்படுத்தக்கூடிய ஒரு சோசலிச அரசாங்கத்தை (ujamas) உஜாமாக்கள் என்ற வகையில், அமைப்பதற்கு அவர் திட்டமிட்டார்.

ஆரம்பத்தில் விவசாயிகளிடையே, முக்கியமாக ஒதுக்குப் புறமாக வாழ்ந்து வந்திருந்த விவசாயிகளிடையே, இந்தக் "கிராமப்புறமாக்கப்படுதலுக்கு" கணிசமான எதிர்ப்பு இருந்தது. விவசாயிகளை கிராமத்திற்கு இட்டுச் சென்று, அவர்களுடைய புராதன மரபுகளை முறிப்பது என்பது மிகப் பெரிய செயற்பாடு என்பது தெளிவானதுதான். எந்த அளவிற்கு வன்முறை பயன்படுத்தப்பட்டது, எந்த அளவிற்கு அரசியல் முறையில் வலியுறுத்தல் இருந்தது என்பது விவாதத்திற்கு உரியதுதான்; ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தன்சானியாவை பற்றி இடது சார்புடைய அறிவுஜீவிகள் எழுதியுள்ளவை உண்மையை பூசி மெழுகியுள்ளன.

1970களின் முதல் பகுதியில், கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் உஜமாக் கிராமங்களில் குடியேற்றப்பட்டனர். விவசாயிகள் தனிப்பட்ட நிலங்களில் நிலைத்த தானியவகைகளை விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்; ஆனால் பெரிய அளவு தனியார் சொத்துடைமை என்பது அனுமதிக்கப்படவில்லை. விற்கும் தானியங்கள் உற்பத்தி செய்தல் கூட்டாகத்தான் சீன முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நியாரேரே கூறிய சோசலிசம் வளர்க்கப்படுவது ஒருபுறம் இருக்க, சீனாவில் இருந்ததைப் போன்றே, இங்கும் விவசாயத் தளத்தின் அடிப்படையில் உற்பத்தியை பெருக்குவதில் தீவிர பிரச்சினைகள் ஏற்பட்டன. (On China, see [4].)

உஜாமாக்களின் விளைவு, நாடு அந்நியச் செலாவணிக்கு நம்பியிருந்த வணிகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட விளைபொருள் உற்பத்தி உண்மையில் சரிந்தது. 1970களில் இருந்த உலகப் பொருளாதார நெருக்கடி ஓரளவு இதற்கு காரணம் என்றாலும், பொருளாதாரம் தொடர்ந்து தேக்கம் அடைந்து நின்றதை உஜாமாக் கொள்கைகளும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967ல் இருந்து 1975 க்குள்ளாக தன்சானியா ஆண்டு ஒன்றிற்கு 1.4 சதவிகித வளர்ச்சியை மட்டுமே சாதிக்க முடிந்தது; ஆனால் அதன் மக்கட்தொகை 2.8 சதவிகிதம் என்று அதிகரித்தது.

பெரிய அளவு தொழிற்துறைகள் இல்லாத நிலையில், (இதில் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் இல்லாத நிலை, (இன்னும் உதவிப்பொருட்களான உரங்கள், பூச்சி கொல்லிகளும் அடங்கும்), போதுமான உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பத் திறன் போன்றவை இல்லாவிடில், உஜாமா போன்ற திட்டங்கள் முற்றிலும் செயல்படுத்தப்பட முடியாதவையாகும். மிகப் பெரிய கூட்டுறவு முறை இருக்கும் சீனா போன்ற மிகப் பெரிய நாட்டில்கூட, "ஒரு முன்னேற்றமான தொழில் வளர்ச்சியுடைய பொருளாதாரத்தை தோற்றுவிப்பது என்பது முடியாத காரியமாகும் ...அதுவும் உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையிலும், உழைக்கும் வெகுஜனங்களே பெரும் ஆர்வத்துடனும் நனவுபூர்வமாகவும் ஈடுபாடு கொண்டிராவிட்டால் என்பது நினைவிற்கொள்ளப்படவேண்டும்." [4]

இன்னும் கூடுதலான பிரச்சினைகளும் நியாரேரேயை அவருடைய வெளியுறவுக் கொள்கைகள் எதிர்கொள்ளவைத்தன. அதிகாரத்திற்கு வந்தவுடன், ஆபிரிக்கா முழுவதிலும் இருக்கும் பேரவா உடைய ஆளும் வர்க்கங்கள், காலனித்துவ வல்லரசுகள் சுமத்தியிருந்த தேசியப் பிளவுகளை ஏற்றன; அதிலும் ஆபிரிக்க தேசங்களை பொறுத்தவரையில் நாட்டு எல்லைகள் புவியியல்ரீதியான அல்லது இனகுழுக்கள் ரீதியாகவும் சட்டப்படி செல்லக்கூடிய தன்மையை கொண்டிருக்கவில்லை. "ஆப்பிரிக்க ஒன்றிணைப்புவாதம்" என்ற கருத்து நாடுகளை ஐக்கியப்படுத்தும் முயற்சி; இது விரைவில் சிதைவுற்றது; ஏனெனில் புதிய தலைவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, காலனித்துவ வல்லரசுகளில் இருந்து வாரிசுரிமையாக பெறப்பட்டிருந்த, நாட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகளின்மீது அதிகாரத்தை முழுமையாகக் காண விரும்பினர்.

1967ல் நியாரேரே கென்யா, உகண்டா இவற்றுடன் ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாணய ஒன்றியத்தை (East African Currency Union) ஏற்படுத்தியதானது 10 ஆண்டுகள் நீடித்திருந்த போதிலும்கூட, இது போட்டியை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்று; இந்த தேசிய அமைப்புக்களுள் மோதல்கள்தான் மிஞ்சின. 1978ல் உகண்டாவின் சர்வாதிகாரி இடி அமின் தன்சானியப் பகுதிமீது படையெடுத்தார். 1979ம் ஆண்டு, தன்சானியா பதிலடி கொடுக்க நேரிட்டு, தன்னுடைய படையை உகண்டாவிற்கு அனுப்பிவைத்து இடிஅமினை பதவியில் இருந்து அகற்றியது. இந்த இராணுவச் செலவினங்கள் மற்றும் அங்கோலா, மொசாம்பிக், ரோடிசியா ஆகியவற்றில் சுதந்திர இயக்கங்களில் ஈடுபட்டிருந்த கொரில்லாக்களுக்கு செலவு செய்தமை இவற்றால், ஏற்கனவே நலிந்திருந்த பொருளாதாரம் இன்னும் சீர்குலைந்தது.

நியாரரே இன்னும் கூடுதலான உதவியை மேற்கு நாடுகளில் இருந்து 1970களில் பெற முடிந்தது என்றாலும், (அமெரிக்க 2.7 பில்லியன் டாலர் 1971-1981 காலத்தில்), 1985ல் ஜனாதிபதி பதவியில் இருந்து நியாரரே கீழிறங்கிய நேரத்தில் தன்சானியா முற்றிலும் திவாலாகி இருந்தது. அப்பொழுதிலிருந்து தன்சானிய அரசாங்கம் அனைத்து உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை ஏற்று, பெரும்பாலான அரசுத்துறைகளை தனியார்மயமாக்கி, பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனத்தை ஏற்கவும் அனுமதித்துவிட்டது. இந்த சுதந்திர சந்தை நடவடிக்கைகளினால் தன்சானியா ஆபிரிக்காவில் மிக வறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பதைக் கூறவேண்டிய தேவையில்லை.

தன்சானியா போன்ற நாடுகளின் வளர்ச்சி முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்தன்மைக்கு முழுமையான உறுதிப்படுத்தல் மட்டுமல்லாது ட்ரொட்ஸ்கிச ஆய்வின் ஒரு நிரூபணமுமாகும். சோசலிஸ்ட் ''என்று கூறப்படுபவை என" நீங்கள் பயன்படுத்திய சொற்றொடர் சரியே; ஏனெனில் தன்சானியா போன்ற நாடுகள் முதலாளித்துவ தேசிய நாடுகள், காலனித்துவத்திற்கு பிந்தைய ஆபிரிக்கா தங்களை வெறுமே சோசலிச நாடுகள் என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தன. கண்டம் முழுவதும் இருக்கும் நாடுகள் அல்லது சுதந்திர இயக்கங்கள் எதுவுமே மார்க்சிச அர்த்தத்தில் சோசலிசத் தன்மை கொண்டவை எனக் கூறப்படமுடியாதவையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் நிலவிய வர்க்க இயக்கவியல் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வு இன்று முற்றிலும் பொருந்தக் கூடியவையே ஆகும். அவருடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில்---- இதை அடிப்படையாகக் கொண்டுதான் 1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சி தோன்றி தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது----, அவர் காலம் கடந்து முதலாளித்துவம் வளர்ச்சியுற்று, அதில் இருந்து வெளிவரும் முதலாளித்துவ நாடுகள் 1789ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற முறையிலான தேசியப் புரட்சிகளை செய்யமுடியாது என்று விளக்கியிருந்தார்.

இவை தங்களுடைய முதலாளித்துவ புரட்சியையே செயல்படுத்த இயலாத தன்மையை கொண்டவையாகும்; ஏனெனில் 19ம் நூற்றாண்டில் வர்க்க உறவுகள் அடிப்படையிலேயே மாறிவிட்டன. ரஷ்யாவில், தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி, முந்தைய நிலமானித்துவ முறையைவிடக் கூடுதலான வகையில், ஏகாதிபத்தியக் கொள்ளை முறையையும் முதலாளித்துவத்தை எதிர்நோக்க வேண்டி இருந்தது.

இவ்வாறு, இப்பொழுது, தொழிலாள வர்க்கம் ஒரு ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கரமான பங்கை வகிக்க முடியும்; ஜனநாயகப் புரட்சி ஒரு சோசலிசப் புரட்சியாக பரிணாமம் எடுத்து முதலாளித்துவ சொத்து உடமையை அகற்றும். அத்தகைய பாட்டாளி வர்க்கப் புரட்சி ரஷ்யா போன்ற ஒரு நாட்டுடன் நின்றுவிடாமல், உலகம் முழுவதும் ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் பின்தங்கிய ரஷ்யாவில் ஒரு சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுதல் என்பது ஐரோப்பாவில் இன்னும் கூடுதலான தொழிற்துறை வளர்ச்சியடைந்திருந்த நாடுகளிலும் புரட்சி விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையைக் கொண்டிருந்தது.

இந்த வர்க்க ஆய்வுதான் நியாரேரே மற்றும் TANU ஆகியவை சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி இவற்றின் நடவடிக்கைகளூடாக கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏகாதிபத்திய தாக்குதலின் முன் இயலா நிலையை காட்டியதை விளக்கிக் காட்டுகிறது. தன்சானியாவை ஆண்ட மத்தியதர வர்க்கமும், அவாவுடைய முதலாளித்துவ தட்டுகளும் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கண்டம் முழுவதும் அணிதிரட்டும் பணியை எதிர்த்திருந்தன. அவர்களுடைய நலன்களை தங்களுடைய நாட்டு பரப்பு மீது இறுக்கமான பிடியை தளர்த்தக் கூடாது என்றுதான் இருந்தது. சோவியத் ஒன்றியம் மேற்கு சக்திகளுக்கு எதிரான ஒரு எதிர்சமநிலைக் கருவியாக இருந்தவரையில், இந்நாடுகள் தங்களை சோசலிஸ்டுகள் என்று கூறிக் கொள்ள முடிந்தது; ஆனால் சோவியத்தின் தகர்ப்பிற்கு பின்னர் அவை சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை தழுவிவிட்டன.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை என்ற ட்ரொட்ஸ்கியின் கருத்தாய்வை நம்முடைய அரசியல் பார்வையின் தளமாகக் கொள்ளுவது ஒன்றுதான், தன்சானியா மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் இருக்கும் நாடுகள் அனைத்திற்கும் சாத்தியமான ஒரு மூலோபாயம் ஆகும். உழைக்கும் மக்களும் ஏழை வெகுஜனங்களும் அரசியல், பொருளாதாரம், காலாச்சார வகைகளில் பெரும் விடுதலைக்கு ஒரு சோசலிச இயக்கத்தால்தான் முன்னேற்றுவிக்கப்படமுடியும்; அந்த முறையில்தான் உற்பத்தியும், நிதியும் தனியார் மூலதனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, வெளிநாட்டுக் கடன்களை நிராகரிக்க இயலும். அரசாங்க அதிகாரிகளை தளமாகக் கொண்ட தேசியப் பொருளாதாரத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும்----இன்றைய ஜிம்பாப்வே அதற்குச் சான்றாகும். அத்தகைய தொழிலாள வர்க்க இயக்கம் தொடக்கத்தில் இருந்தே ஒரு சர்வதேச வடிவமைப்பை கொண்டிருக்க வேண்டும்; இது ஐரோப்பா, அமெரிக்க, மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் இலாப முறையை தூக்கிவீச முயலும் சோசலிச புத்துயிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.

இப்படி கோடிட்டுக் காட்டியுள்ளது உங்களுடைய தன்சானியாவிலும், ஆபிரிக்க சோசலிசத்திற்கும் என்ன நடந்தது என்ற வினாவிற்கு ஓரளவு விடையைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.

சிறந்த வாழ்த்துக்களுடன்,

கிறிஸ் டால்போட்

Top of page