World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Oppose the state of emergency in France!

பிரான்சில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை எதிர்!

By the WSWS Editorial Board
9 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

சிராக்-வில்ப்பன்-சார்க்கோசி அரசாங்கம் பிரான்சில் அவசரசால நிலைமையை புகுத்தியுள்ளதை உலக சோசலிச வலைத் தளம் எதிர்ப்பதோடு, கண்டனமும் செய்கின்றது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை புகுத்துதல், CRS கலகப்படை போலீஸ் பிரிவிற்கும் மற்றய அடக்கு முறை அமைப்புக்களுக்கும் இளைஞர்கள் மீது முழு அளவிலான தாக்குதல் கொடுப்பதற்கு பச்சை விளக்கு காட்டுவதாக உள்ளது, ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதல் என்பதோடு பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் முழுவதற்குமே ஓர் அச்சுறுத்தல் ஆகும். தேசிய முன்னணி (National Front) என்னும் புதிய பாசிச அமைப்பின் தலைவரான ஜோன் மரி லு பென் உடைய மகளும் சக சிந்தனையாளருமான மரீன் லு பென் தான் முதல்முதலாக இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என்று வெளிப்படையாக கூறியதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சமூக சமத்துவத்திற்கு போராடுதல் என்பது இன்னும் அர்த்தம் உள்ளது என்று கருதும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் மற்றும் மக்கட்தொகையின் உண்மையான இடதுசாரி கூறுபாடு கொண்டவர்களுக்கு, பார்வைக் கோளாறு கொண்ட பிரெஞ்சு முதலாளித்துவத்துடனான போராட்டத்தில் வறுமையில் வாடும் இளைஞர்களை பாதுகாக்க வருமாறும், ஒரு அரசியல் முன்னோக்கை வழங்க முன்வருமாறும் அழைப்பு விடுகிறோம்.

பாரிஸ் நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான நகரங்கள், சிறுநகரங்களில் இருக்கும் தொழிலாள வர்க்க புறநகர்ப்பபகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் அவற்றின் துன்பியலான, திகைப்பூட்டும் கூறுபாடுகளை கொண்டுள்ளன; ஆனால் வன்முறைக்கான பொறுப்பு முற்றிலும் பிரெஞ்சு அரசியல் அமைப்பு முறையிடந்தான் உள்ளது; அதில் "இடது", "தீவிர இடது" என்ற இரு பிரிவுகளும் அடங்கும்; இவர்கள் அடிப்படையில் நிலவும் நிலைமை தொடர்வதில் திருப்தி அடைவதுடன், இழிவான சூழ்நிலையில் தங்கள் இருண்ட வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலையில் இருக்கும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் விதியைப் பற்றி அக்கறையில்லாதிருக்கிறார்கள்.

நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை, மற்றும் அனைத்து போலீஸ் படை இருப்பு பிரிவினரை அழைத்தல், ஆகியவற்றுடன் உள்ளூர் அரசாங்கங்கள் தடையுத்தரவுகளை பிறப்பிக்கவும், போலீசார் வாரண்டுகள் இல்லாமல் சோதனைகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு 1955ம் ஆண்டுச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட நெருக்கடிக்கால ஆணை 12 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்; ஆனால் நாட்டின் தேசிய சட்ட மன்றம், "தேவையானால்", அதன் காலத்தை நீட்டித்து ஒரு சட்டமியற்ற முடியும். இன்னும் நிர்ணயிக்கப்படாத பகுதிகளில் செவ்வாய் நள்ளிரவில் இருந்து ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரும். கீழ்ப்படிய மறுத்தல் என்பதற்கு இரண்டு மாத சிறைத் தண்டனை அல்லது 3,750 யூரோக்கள் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த ஆணையின்படி, உள்ளூர் அதிகாரிகளுக்கு மக்களை வீட்டுக்காவலில் வைக்கும் அதிகாரமும், ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பணிக்கும் அதிகாரமும் உண்டு. இச்சட்டமானது பொது இடங்களை மூட முடியும். பத்திரிகை சுதந்திரத்தையும் மக்கள் கூடுவதற்கான சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் மற்றும் திரை, நாடக அரங்குகளை மூடும் அதிகாரத்தையும் அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது.

France Inter என்னும் அரச வானொலி நிலையம் நவம்பர் 8 அன்று செய்தி ஊடகத்திற்கும் அரங்குகளுக்கும் தடைகள் ஏதும் இராது என்று அறிவித்தது; ஆனால் ஓர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இது பற்றி உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.

1968ம் ஆண்டு பரந்த பொது வேலைநிறுத்தம் கூட அவசரகால நிலைமையை தோற்றுவிக்கவில்லை. 1955ம் ஆண்டு சட்டம் பொதுவாகவே, அதுவும் வட ஆபிரிக்க பழைய தலைமுறையினரிடையே, அல்ஜீரியாவில் இருந்து பிரான்சுக்கு 1950, 1960களில் குடியேறிய அல்ஜீரிய மக்கள் மீது பிரெஞ்சு அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறை, சித்திரவதை இவற்றைத்தான் நினைவிற்கு கொண்டு வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 1961 அக்டோபர் 17 அன்று இதுபோன்ற அவசரகால ஊரடங்கு உத்தரவிற்கு எதிராக ஒரு மக்கள் எதிர்ப்பு இருந்தபோது, போலீசார் குறைந்தது 50 பேரையாவது படுகொலை செய்தததுடன், 200 அல்ஜீரிய புலம்பெயர்ந்தோரையும் கொன்றிருந்தனர்; அவர்களில் சிலர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் அடித்தே கொல்லப்பட்டனர்; சிலர் காயப்படுத்தப்பட்டு சேன் ஆற்றில் வீசி எறியப்பட்டனர்.

பிரதிநிதிகள் நிறைந்திருந்த தேசிய சட்ட மன்றத்தில் நடவடிக்கையின் விவரங்களை அறிவித்த பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன், "சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மிக முக்கிய முன் நிபந்தனையாகும்.... தனிப்பட்ட நபர்கள், அமைப்புடன் கூடிய குற்றம் செய்யும் கும்பல்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் என்று ஒழுங்கின்மையையும் வன்முறையையும் ஏற்படுத்துவதில் எவ்விதத்திலும் பின்வாங்காதவர்களை சந்திக்கத் தயாராக உள்ளோம்" என்று அறிவித்தார்.

"உண்மை பற்றிய இக்கணத்தில் இக்குடியரசில்... வன்முறை நிறுத்தப்படவேண்டும்" என்று வில்ப்பன் பிரான்சின் பாராளுமன்றத்தில் கூறி, "அரசாங்கம் இந்த நிகழ்வுகளை எச்சரிக்கையாகவும், சவலாகவும் எடுத்துக் கொள்ளும்" என்றும் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 1,500 இருப்பில் வைக்கப்பட்டுள்ள போலீசார், வன்முறையினால் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் தொழிலாளர் புறநகர் குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே உள்ள 8,000 போலீசாருக்கு உதவ கொண்டுவரப்படுவர். பிரெஞ்சு இராணுவப்படை நாட்டின் புறநகர்ப்பகுதிகளில் கொண்டுவரப்படுமா என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியாளர் கேட்டதற்கு, வில்ப்பன் பதில் கூறினார்: "அந்தக் கட்டத்தில் நாம் இல்லை... ஆனால் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரான்ஸ் முழுவதும் விரைவில் ஒழுங்கை நிலைநிறுத்தும் வகையில் இருக்கும்."

அவசரகால நிலைமையை சுமத்துவது என்ற முடிவிற்கு பின்னர், வன்முறையை பெரிதும் தூண்டி விட்டிருந்த இனவாத மற்றும் ஆத்திரமூட்டல் கருத்துக்களை கூறியிருந்த உள்துறை மந்திரியான நிக்கோலா சார்க்கோசி, சீற்றத்துடன் அறிவித்தார்; "இத்தகைய நிகழ்ச்சிகளை தடுக்கும் வகையில் நம்மால் இப்பொழுது நடந்து கொள்ள முடியும். நிகழ்வுகள் தோன்றும் விதத்தை படிப்படியாக கண்காணிப்போம்." அதாவது "தடுப்புமுறையில் ஏராளமானவர்களை" கைது செய்யலாம் என்ற கருத்தை சர்கோசி எண்ணத்தில் கொண்டிருக்கிறார் போலும்.

பாதிக்கப்பட்ட அண்டை அயல் பகுதிகளில் வேலையின்மை, சமூக அவலம் என்று நீண்ட காலமாக பெரும் குழப்பத்தில் இருக்கும் தன்மையை அகற்றும் இலக்கை கொண்ட சில பெயரளவு நடவடிக்கைகளையும் தேசிய சட்டமன்றத்தில் வில்ப்பன் அறிவித்தார். இவருக்கு முன் பதவியில் இருந்த வலதுசாரி ஜோன் பியர் ரஃப்ரான் குறைத்திருந்த பண வெட்டுக்களை மீட்பதும் இதில் அடங்கும். வேலையின்மை என்பது புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் இளைஞர்களிடையே 40 சதவிகிதமாக உள்ளது.

இரண்டு புறநகர் இளைஞர்கள் போலீசாரிடமிருந்து தப்பி ஒடும்போது மின்தாக்குதலுக்கு ஆளாகி இறந்தபின் வெடித்த சமூக கொந்தளிப்பில் கிட்டத்தட்ட 6,000 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன; 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவர்களில் பலர் மிக இளம்வயதினர். எண்பத்தி நான்கு பொதுக் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரு குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்ட தீயை அணைக்க முற்பட்ட 61 வயது நபர் ஒருவர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களினால் திங்களன்று இறந்து போனார். அமைதியின்மை பாரிசில் இருந்து லியோன், துலூஸ், மார்சை இன்னும் அப்பாலும் பரவிவிட்டது. திங்கள் முழு இரவும் இளைஞர்கள் 226 கார்களை பிரெஞ்சு நகரங்களில் எரித்திருந்தனர், முதல்நாள் இரவில் எரித்த 274 கார்களுக்கும் குறைவானதாகும்.

தேசிய போலீஸின் செய்தி தொடர்பாளர் கூற்றின்படி தெற்கு நகரமான துலூஸில் இளைஞர்கள் ஒரு பஸ் பயணிகளை கீழே இறங்க உத்தரவிட்ட பின்னர், அதைக் கொளுத்தியதோடு, போலீசாரை பெட்ரோல் குண்டுகள், கற்கள் இவற்றினால் தாக்கவும் செய்தனர். ஸ்ரான் என்னும் பாரிஸ் புறநகர்ப்பகுதி ஒன்றில் மற்றொரு பஸ் எரிக்கப்பட்டது. வித்திரி-சூர்-சேன் என்னும் புறநகர் பகுதியில் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டது என்றும், Burgundyயில் உள்ள Chenove இல் ஒரு போலீஸ் நிலையம் தாக்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் ஆய்வு இயக்குனராக இருக்கும் Sebastian Roche ஒரே நேரத்தில் கலகத்தால் இத்தனை நகரங்கள் பாதிக்கபட்டதை தான் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

அண்டை அயற் பகுதிகளில் கலகப்படை போலீசார் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது பற்றி செய்தி ஊடகம் மெளனமாக உள்ளது; ஆனால் CRS ன் கடந்தகாலத்தை கருத்திற் கொண்டால், அதன் கைகளில் எந்த இளைஞராவது சிக்குண்டால் மிருகத்தனமான செயல்களை எதிர்கொள்ள நேரிடும். கைதுசெய்யப்பட்டவர்கள் "விரைவு நீதிமன்ற" விசாரணையை எதிர்கொள்ளுகின்றனர்; மனித உரிமைகளுக்காக வாதிடுபவவர்கள் இதைக் குறை கூறியுள்ளனர். பாரிசின் வடகிழக்கு புறநகரான Bobigny யில் இருக்கும் நீதிமன்றத்தில் கலக தொடர்புடைய 60 வழக்குகள் ஒரே நாளில் தீர்வை கண்டதுடன், மூன்று அதிகப்படி மாஜிஸ்ட்ரேட்டுக்களும் "நிறைந்து வழியும்" வழக்குகளை பரிசீலிக்க வருவிக்கப்பட்டிருந்தனர். வயதிற்கு வந்த 52பேர்களும் 23 சிறுவர்களும் சிறைத் தண்டனை பெற்றனர் அல்லது தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் போலீஸ் தலைமையதிகாரியான Michel Gaudin செவ்வாயன்று, "வன்முறையின் தீவிரம் குறைந்து கொண்டிருக்கிறது, போலீஸ், பொதுச் சொத்துக்களின் மீதான தாக்குதல் சேதத்தை பொறுத்தவரையில் தாக்குதல்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. பாரிசை விட மற்ற பெரிய நகரங்களில் வன்முறை அவ்வளவு குறையவில்லை என்றும் துலூஸ், லியோன் மற்றும் சான்ட்-எற்றியான் நகரங்களில் அத்தகைய நிலைமைதான் உள்ளது" என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரஸ்ஸல்ஸிலும், பேர்லினிலும் வன்முறை வெடித்துள்ளது என்ற தகவல்கள் வந்த பின்னர் யூரோவின் மதிப்பு இரண்டாண்டுகளில் ஏற்படாத அளவு டாலருக்கு எதிராகக் குறைந்தது.

அவசரகால நிலைமையை வில்ப்பன் அறிவித்தமை, இடது மையவாத Le Monde ஏட்டிடம் இருந்து உணர்ச்சிவசப்பட்ட விடையிறுப்பைக் கண்டது; செவ்வாயன்று வெளியிட்ட தலையங்கத்தில், "1955ல் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சட்டத்தை இளைஞர்களுக்கு எதிராக பயன்படுத்துவது வியத்தகு மிருகத்தனமான செய்தியைத்தான் புறநகர் இளைஞர்களுக்குக் கொடுக்கும்; 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களை அவர்களுடைய தாத்தாக்களை நடத்தியதை போல் நடத்துவோம் எனக் கூறுதல் போல் உள்ளது."

மற்றொரு மைய இடது செய்தித்தாளான Liberation, அவசரகால சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை, "சோகமான கேலிக்கூத்து" என்று வர்ணித்துள்ளது. "அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துதல்" என்பது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றாலும், அதற்காக எந்த விலையும் கொடுக்கலாம் என்பது ஏற்பதற்கில்லை என்று இவ் ஏடு கூறியுள்ளது.

மனித உரிமைகள் குழு அவசரகால சட்டங்களை புகுத்தியமை "பேரழிவை தரக்கூடியது" என்று கூறியுள்ளது. "இது ஒரு சமூக நெருக்கடியே ஒழிய, போர் அல்ல" என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வில்ப்பனுடைய அறிவிப்பிற்கு உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் விடையிறுப்பு கணிக்கக் கூடியதே ஆகும். சோசலிஸ்ட் கட்சி (PS), கோலிஸ்ட்டுகளுடனும் மற்றய வலதுசாரி கட்சிகளுடனும் இணைந்த வகையில், தொழிலாள வர்க்க பகுதிகளில் இருக்கும் மோசமான நிலைமைக்கு பொறுப்பை கொண்டுள்ளது, வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளதற்காக அரசாங்கத்தின் "பெரும் பொறுப்பு" பற்றி, குறிப்பாக உள்துறை மந்திரி சார்க்கோசி பற்றி அது சாடியுள்ளது. அடுத்த மூச்சிலேயே சோசலிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் Jean-Marc Ayrault, "ஊரடங்கு உத்தரவிற்கு கொள்கையளவில் நாங்கள் விரோதம் பாராட்டவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். "நாட்டில் அவசரகால நிலை என்பது முதற்கண் ஒரு சமூகவகை அவசரகால நிலையாகும்" என்று Ayrault பொருளற்ற வகையில் அறிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஊரடங்கு உத்தரவை எதிர்த்து, "ஏதோ நாம் போரில் ஈடுபட்டுள்ளது போல்", அரசாங்கம் 50 ஆண்டு காலத்திற்கு முந்தைய சட்டத்தை தோண்டி எடுத்துள்ளது என்று புகார் கூறியுள்ளது. பதிலாக ஸ்ராலினிஸ்டுகள் வரவுசெலவுத் திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். PCF தலைவி Marie-George Buffe இளைஞர்களிடம் சீற்றத்தை இந்த அரசாங்க ஆணை தூண்டிவிடும் என்று எச்சரித்தார்: "இன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபடுவதற்கான அறைகூவல் புதுப்பிக்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளப்படலாம்" என்று அவர் கூறினார். "நாம் ஒன்றும் உள்நாட்டுப் போரில் இல்லை" என்று நெருக்கடி நடவடிக்கைகளை பசுமைக் கட்சியினரும் எதிர்த்துள்ளனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ( LCR) இந்த நடவடிக்கையை "பொறுத்துக் கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளது. LCR இன் செய்தி தொடர்பாளரான Olivier Besancenot, "அனைத்து இடது, ஜனநாயக அமைப்புக்களும் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். Rouge வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் LCR தலைமையிடம், "அவர்களுடைய சீற்றம் புரிந்துகொள்ளக் கூடியது என்றாலும், வசிப்பவர்களின் கார்கள், பள்ளிகள், உடற் பயிற்சி மையங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவற்றை எரிப்பது என்பது, இளைஞர்கள் தவறான மரத்திற்கு முன் நின்று ஊளையிடுவது போல் உள்ளது" என்று உபதேசித்திருக்கிறது.

இப்படி இளைஞர்களிடையே அரசியல் முன்னோக்கு இல்லாமல் இருப்பதற்கு காரணம் "தீவிர இடது என்று அழைக்கப்படும் கட்சிகளின்பால் உள்ளது; அவைதான் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் என்ற பல பிரிவுகளுடனும் முற்றிலும் இணக்கத்துடன் செயல்படுகின்றன. அவைகளும் இளைஞர்களின் மிக வறிய பிரிவுகளை காட்டிக் கொடுத்து, கைவிட்டுவிட்டன.

அவசரகால நிலைமையை வில்ப்பன் அறிவித்திருக்கும்போது, ஒரு புதிய கருத்துக் கணிப்பு நான்கில் மூன்று பிரெஞ்சு குடிமக்கள் இந்த நெருக்கடி கையாளப்பட்ட விதத்தைப் பற்றி ஒப்புதல் தெரிவிக்காத வகையில் கருத்துக் கூறியுள்ளனர். LH2 மையத்தால் கடந்த வார இறுதியில் எடுக்கப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு, தொடர்பு கொள்ளப்பட்டவர்களில் 71 சதவிகிதத்தினர் நிகழ்வுகளை அரசாங்கம் எதிர்கொண்டது "தவறான திசையில் இருந்தது" என்று கூறியதாக காட்டியுள்ளது.

எந்தக் கோணத்தில் அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது என்பதை கருத்துக் கணிப்பு கூறவில்லை; அது சீற்றமுடைய இளைஞர்கள் பால் மிகக் கடுமையாக இருந்ததா அல்லது நீக்குப்போக்குடன் நடந்ததா என்று தெரிவிக்கவில்லை. ஆனால் வாஷிங்டன் போஸ்டினால் பேட்டி காணப்பட்ட பாரிஸ் தெரு விற்பனையாளர் ஒருவர் கூறிய கருத்து பிரத்தியேகமானது அல்ல. 59 வயதான மிசேல் நார்போன், போஸ்டிடம் தெரிவித்தார்: "அவர்களுடைய வருங்காலமே இருண்டு, முன்னேற்றமில்லா பாதை என்று தோன்றும்போது அந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஒன்றும் வியப்பு அல்ல. பெரும்பாலான பிரெஞ்சுக் குடிமக்கள் போல், அவர்களும் பெரும் விரக்தியில் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் செய்யவேண்டும் என்று விரும்பினார்களோ அதைத்தான் இந்தப் பிள்ளைகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

See Also :

போலீசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக பாரிஸ் கலகங்களை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன

போலீசிற்கு எதிரான கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு

Top of page