World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Sixty million Indian workers strike against government economic policies

அரசாங்க பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக
அறுபது மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

By Deepal Jayasekera
4 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் நவீன தாராளவாத பொருளாதார ''சீர்திருத்த'' திட்டங்களை எதிர்ப்பதற்காக செப்டம்பர் 29 வியாழனன்று நடைபெற்ற ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதிலும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தத் திட்டங்களில் அரசிற்கு-சொந்தமான பல வர்த்தக நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், கதவடைப்பு செய்தல், வேலைதளங்களை மூடுதல் மற்றும் ஒப்பந்தக் கூலி முறை இவற்றின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றும் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது அடங்கும். வேலை நிறுத்தம் செய்வதற்கு அரசியலமைப்பில் அரசாங்க ஊழியர்களுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இரத்து செய்வதற்கு மத்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வேலை நிறுத்தம் செய்தவர்கள் கோரினர்.

கண்டனத்திற்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்களின் குழு தந்திருக்கின்ற தகவலின்படி, கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் அஸ்ஸாம் மற்றும் தென் மாநிலமான கேரளா ஆகியவற்றில் முழு வேலை நிறுத்தம் நடைபெற்றது. (வடக்கு மத்திய இந்தியாவிலுள்ள) அரியானா, ஒரிஸ்ஸாவிலும், (கிழக்கு இந்தியாவின்) ஜார்கண்ட்டிலும் ''பந்த் போன்ற நிலவரம்''------பொது வேலை நிறுத்தம் உட்பட முழு அடைப்பு மற்றும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் போக்குவரத்திலும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

பெருவர்த்தக நிறுவனங்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற வகையில், விமானங்கள் போக்குவரத்தும், பொது வங்கிகளின் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் ஒரு கணிசமான அளவிற்கு தங்களது விமானப் பயணங்களை இரத்து செய்தன. விமானப்படை வீர்ர்களை அனுப்புவதற்காக மட்டுமே சில விமான நிலையங்கள் திறந்திருந்து செயல்பட்டன.

புது தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை விரிவுபடுத்துவது உட்பட, விமான நிலையங்களை நவீனமயப்படுத்துவதில் தனியார் துறையை சேர்ந்தவர்களை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை குறிப்பாக எதிர்ப்பதற்காக நாட்டின் விமான நிலையங்களை தனது நிர்வாகத்தில் வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணியாற்றுகிற ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

வெளிச் செலாவணி, பணம் சேமிப்பு- திரும்பப் பெறுவது மற்றும் காசோலைகளை பைசல் செய்வது ஆகிய பணிகள் உட்பட பொதுத்துறை வங்கிகளின் பணிகள் நாடு முழுவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்தியாவின் நிதி செலாவணி மையமான, மும்பையில் தினசரி 40 மில்லியன் ரூபாய்களுக்கான காசோலைகள் பைசல் செய்யப்படுகின்றன, ஆனால் வேலை நிறுத்தத்தின் காரணமாக எந்த காசோலையும் பைசல் செய்யப்படவில்லை. எண்ணெய், காப்பீடு மற்றும் தகவல் தொடர்பு பிரிவுகளிலும் ஏறத்தாழ முழு வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டின் 6,00,000 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். ஹரியானா உட்பட பல தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றது, அங்கு ஜூலை மாதம் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த ஹோண்டா தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரியதொரு மோதல் நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு பிரதானமாக அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்கள் இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளோடு இணைக்கப்பட்டவை- இந்தக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான UPA விற்கு நாடாளுமன்றத்தில் முண்டுக்கொடுத்து வருகின்ற இடதுசாரி முன்னணிக்கு தலைமை வகிப்பவை.

இந்த வேலை நிறுத்தத்தில் பரவலாக தொழிலாளர்கள் பங்கெடுத்துக்கொண்டது பற்றி கருத்து தெரிவித்த இந்தியாவின் மத்திய தொழிற்சங்க (CITU)----தலைவர் M.K. பாண்டே, இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு CPI(M)- ஓடு இணைக்கப்பட்டது. ``இந்த வேலை நிறுத்தம் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேல் ஒரு வெற்றியாகும்.`` என்று அவர் குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகள் முழுமையாக UPA-யை பதவியில் நீடிக்கச் செய்வதில் ஸ்ராலினிஸ்டுகள் உறுதியோடு உள்ளனர். உண்மையிலேயே, இடதுசாரி அணி மற்றும் அவர்களோடு இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை தொடக்கியதன் நோக்கம் தங்களது நவீன தாராளவாத எதிர்ப்பு முறுக்கை நிலைநாட்டுவதற்காகத்தான், அரசாங்கத்திற்கு அவர்களது ஆதரவை சிறப்பாக தொடர்வதற்குத்தான்.

இதற்கு முந்திய பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான ஆட்சி செயல்படுத்திய நவீன-தாராளவாத கொள்கைகள் மீது பொதுமக்களுக்கு அலைபோன்றதொரு ஆத்திரம் உருவானதை தொடர்ந்து 2004 மே மாதத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க-சார்பு நோக்குநிலை ஆகியவற்றால் பெருகிவரும் அதிருப்தியை எடுத்துக்காட்டுவதற்கு இடதுசாரி அணியும் தொழிற்சங்கங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொழிலாள வர்க்கத்தை ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக ஒருங்கிணைந்து பெருவர்த்தக நிறுவனங்களின் அபகரிக்கும் சமூக-பொருளாதார செயல்திட்டத்திலிருந்து சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவுகளையும் பாதுகாப்பதற்கு நடத்தப்படும் போராட்டத்தின் முன்னணிப்படையாக அதனை வைப்பதற்கு பதிலாக ஸ்ராலினிஸ்ட்டுகள், சென்ற வார எதிர்ப்பை UPA- ''மக்களுக்கு ஆதரவான'' கொள்கைகளை மேற்கொள்ளுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நவீன-தாராளவாத சீர்திருத்தங்களுக்கு ஒரு ''மனிதநேய முகத்தை'' வழங்கும் கொள்கையுடன் தொழிலாள வர்க்கத்தை UPA-வோடு முடிச்சுப்போடும் நோக்குடன் மேற்கொண்டனர்.

இந்த நோக்குநிலையை வேலை நிறுத்தம் நடைபெற்ற அன்று CPI-யோடு இணைந்திருக்கின்ற அனைத்து இந்திய தொழிற்சங்க மாநாடு (AITUC)-இன் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா தெளிவாக விளக்கினார். எதிர்ப்புக்களை அரசாங்கம் செவிமடுக்காவிட்டால் மேலும் வேண்டுகோள்கள் விடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

``ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு நாங்கள் முன் அறிவிப்பு கொடுத்திருக்கிறோம். அது தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் அபிலாசைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அடிக்கடி மற்றும் நீண்டகால வேலை நிறுத்தங்கள் நடக்கும்`` என்று தாஸ்குப்தா கூறினார்.

இதற்கிடையில், CPI (M) தொழிலாளர் சந்தையில் அதிக நெகிழ்வுப்போக்கை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தோடு தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்க விருப்புக்கொள்ளும் என்று கருத்து தெரிவித்தது. ``தொழிற்சங்கங்களோடு முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் தொழிலாளர் சட்டங்களில் அரசாங்கம் மாற்றங்களை கொண்டுவரக்கூடாது என்று இந்த வேலை நிறுத்தம் அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக வேலைசெய்யும்`` என CPI (M) அரசியற்குழு அறிவித்தது (அழுத்தம் சேர்க்கப்பட்டது).

சென்ற வியாழக்கிழமைக்கு முன்னர் இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் பற்றி முதலாளித்துவ பத்திரிகைகள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமையன்று, மடைதிறந்த வெள்ளம்போல் தலையங்க அவதூறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இவை UPA அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்திடையே வளர்ந்துவரும் எதிர்ப்பு குறித்து இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டிருக்கிற பதட்டத்தை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் இடது முன்னணியின் பாராளுமன்ற ஆதரவை உத்திரவாதம் செய்ய எந்த சலுகைகளையும் தரக்கூடாது என்ற ஒரு வலுவான செய்தியை அனுப்புவதையும் கூட அது அர்த்தப்படுத்தியது.

பல தலையங்கங்கள் இடதுசாரி அணி அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்வதற்கும், அரசாங்கம் ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கு அது ஆதரவு தருவதற்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடுகளை பிடித்துக்கொண்டு திரும்பத் திரும்பக் கூறின.

``இடதுசாரி கட்சிகள் முன்னர் எழுப்ப வேண்டிய உண்மையான கேள்வி இதுதான், அரசாங்கத்தின் மீது அவர்கள் அவ்வளவு கோபமாக நாடாளுமன்றத்திற்கு வெளியில் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள விரும்புவார்களானால் நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?`` என்று இந்துஸ்தான் டைம்ஸ் கேட்டிருக்கிறது.

``சீனாவை பார்த்து உத்வேகம் பெறுங்கள், வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம்`` என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியுள்ள தலையங்கத்தில் இந்த வேலை நிறுத்தத்தை கண்டித்திருக்கிறது, அதே நேரத்தில் சீனாவை பாராட்டியிருக்கிறது, அதை CPI (M) தொடர்ந்து சோசலிச நாடு என்று, அதற்கொரு எடுத்துக்காட்டு என்று பாராட்டி வருகிறது: ``தொழிற்சங்கங்கள் ஊழியர்களுக்காக போராடுபவையாகத்தான் இருக்கவேண்டும். மாறாக முதலீட்டை கட்டுப்படுத்துவதற்கு போராடுவதன் மூலம் தனது சொந்த ஆதரவாளர்களுக்கு தீங்கு செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றும் தொழிச்சங்கங்களின் இடதுசாரி ஆதரவாளர்கள் சீனாவை பார்க்க வேண்டும், அது இந்தியா ஈர்க்கும் 3.4 பில்லியன் டாலர்கள் FDI யைவிட 10 மடங்கு மேலாக இந்த ஆண்டு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது, இதை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரக் கொள்கையில் எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்."

இடதுசாரிகளின் ஆட்சேபனைகளை மீறி UPA வலதுசாரி கொள்கைகளை அடிக்கடி முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தாலும் வேலை நிறுத்தத்திற்கு பிந்திய தலையங்கத்தில் Indian Express இடதுகளின் போலி ஆட்சேபங்களை கண்டித்திருக்கிறது. ``இடதுசாரிகள் ஆதரவோடு தொழிற்சங்கங்கள் நடத்திய நாடுதழுவிய வேலை நிறுத்தம் ஒரே ஒரு காரியத்தை மட்டுமே சாதிப்பதை நம்பிக்கையாக கொண்டதாகும், அது இடதுசாரி கட்சிகளின் பலத்தை அவலட்சணமாக காட்டுவதாகும், இடதுசாரி ஒரு எதிர்க்கட்சியாக தன்னை நிறுவிக்கொள்ள முயலுமானால், அரசாங்கத்தோடு தனக்குள்ள ஆழமான மற்றும் பரவலான கருத்து வேறுபாட்டை காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதற்கு பதிலாக முதலில் அதன் ஆதரவை UPA-யிடமிருந்து விலக்கிக்கொள்ளக்கூடாதா?``

CPI (M)-ம் அதன் நண்பர்களும் சென்ற வார எதிர்ப்பு வேலைநிறுத்தத்தை நடத்தியது, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் UPA அரசாங்கத்தை ஆட்சியில் நீடிக்கச் செய்வதற்கும்தான் என்று திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருந்தாலும் பெருநிறுவன ஊடகங்கள் அத்தகை நடவடிக்கைகளைக்கூட அவர்கள் கைவிட வேண்டும் என்று கோரி வருகின்றன, ஏனென்றால், தொழிலாள வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் பாதகமாக இந்தியாவின் வர்க்க உறவுகள் தீவிரமாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதால் ஸ்ராலினிச தலைவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் அவை வளர்ந்து சென்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக--- உச்சநீதிமன்றம் அண்மையில் தொடர்ந்து பழமைவாத தீர்ப்புகளை வழங்கியிருப்பதன் மூலம் சமிக்கை காட்டப்பட்டிருப்பதைபோல்---இந்தியாவின் ஆளும் வர்க்கம் நாட்டின் நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஒழித்துக்கட்டி முதலாளித்துவத்தின் முன்னுரிமையை பெருமளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வேலை நிறுத்தத்தின் பொருளாதார தாக்கத்தை குறைத்து மதிப்பிட முயன்றார், ஆனால் பெருவர்த்தக நிறுவனங்களின் பேச்சாளர்கள் ஆத்திரமடைந்தனர். வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைப்பின் தலைவர் M.K.ஷங்கி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, ``நாடு முழுவதிலும் ஒரு கணிசமான அளவிற்கு இந்த வேலை நிறுத்தம் பொருளாதார மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளை முடக்கிவிட்டது, இப்போது அதனால் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கிடுவது சங்கடமாகும்`` என்று கூறினார். இந்திய தொழிற்துறை மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்புத் தலைவர் ஓங்கார் S. கன்வார் கருத்துத் தெரிவிக்கும்போது, இந்தியா ஒரு பூகோள பொருளாதார வல்லரசு என்ற கீர்த்திக்கே இந்த வேலை நிறுத்தம் ஒரு ''கடுமையான அதிர்ச்சியை'' தந்திருப்பதாக சொன்னார். ``உலகின் இதர பகுதிகளோடு இந்தியா மிகப்பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில் தொழிலாளர்கள் பிரதான உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவைகளில் வேலை நிறுத்தம் செய்வது வெளிநாடுகளுக்கு எதிர்மறை சமிக்கைகளை தந்துவிடும்.``

தென் மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேட்டி கண்டனர். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் விஜே டயஸ் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரதிகளை அந்த நிருபர்கள் விநியோகித்தனர் மற்றும் வேலை நிறுத்தம் நடந்த அதே தினத்திலேயே WSWS அந்த அறிக்கையை வெளியிட்டது.

இடதுசாரி அணியும், தொழிற்சங்கத் தலைவர்களும் தங்களது தலைமை மீது வளர்ந்து கொண்டு வருகின்ற சமூக அதிருப்தியை காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு முடிச்சு போட்டுவிட எப்படி முயலுகிறார்கள் என்பதை டயஸ் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய தொழிலாளர்கள் இந்த தேசியவாத, நாடாளுமன்றவாத மற்றும் இடதுசாரி அணியின் வர்க்க ஒத்துழைப்பு அரசியலில் இருந்து முறித்துக் கொண்டு வெளியேறி UPA அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்தியாவை ஒரு மலிவு ஊதிய உழைப்புக்கான புகலிடமாக உலக முதலீடுகளுக்கு மாற்றுகின்ற முயற்சிக்கும் எதிராக சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தங்களது போராட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

டயஸ் எழுதினார் காந்தி தலைமையிலான காங்கிரசை தேசிய ஜனநாயகப் புரட்சியின் தலைமை என பாராட்டுவதற்கும் இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷ் காலனித்துவ அரசிற்கு ஆதரவு தருவதற்கும் இடையில் ஊசலாடிய, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸ் வசமும் பிரிவினையின் பயங்கரத்திடமும் ஒப்படைப்பதில் உதவியது. இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்துதான் சிபிஐ(எம்) தோன்றியது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிபிஐ-ம் அதற்குப் பின்னர் சிபிஐ(எம்)-ம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் கருச்சிதைவிலிருந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையிலான இந்திய அரசை', ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரண் என்று பாராட்டின. அந்த நிலைப்பாட்டை ஒட்டி இன்றைய தினம் ஸ்ராலினிஸ்ட்டுகள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் நாச வேலைகளையும் இந்திய முதலாளித்துவ தேசிய அரசு மூலம் எதிர்த்துப் போராட முடியும் என்று கூறுகின்றனர்

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எங்களது சக சிந்தனையாளர்களும், ஸ்ராலினிஸ்ட்டுகளது இந்த நிலைப்பாட்டிற்கு மாறாக, முதலாளித்துவ பூகோளமயமாக்கல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கும் அதன் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு அமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதின் மூலம்தான் சாத்தியமாகும் என்று வலியுறுத்துகிறோம். இந்தப் பேராட்டத்தின் ஓர் பகுதியாக தெற்காசிய போட்டி முதலாளித்துவ ஆட்சிகளால் ஊட்டி வளர்க்கப்படும் பிற இனபழிப்புவாத, வகுப்புவாத மற்றும் சாதிய அரசியலுக்கு எதிர்ப்பின் மற்றும் எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச கூட்டமைப்பிற்காக போராடுகிறது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக அந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளை WSWS நிருபர்கள் விவாதித்தனர். மற்றும் SEP ஜனாதிபதி வேட்பாளர் இந்தியாவின் கூட்டங்களில் உரையாற்றுவது பற்றியும் விவாதித்தனர். SEP-ன் இந்த முயற்சிக்கு தொழிலாளர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். தெற்கு ஆசியா முழுவதிலும் தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைமையை வழங்கும் SEP-ன் முயற்சியையும் வரவேற்றனர்.

``பிரதமர் மன்மோகன்சிங் அரசாங்கம் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் விரோதமான அரசாங்கமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை அது தனியார்மயமாக்கத் துவங்கியிருக்கிறது. தகவல் தொடர்பு துறையில் 7.4 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு வழி திறந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL ஒழிந்து போய்விடும்`` என்று சென்னையை சேர்ந்த ஒரு தகவல் தொடர்புத்துறை தொழிலாளி K. ஜெயக்குமார் கூறினார்.

சென்னையிலுள்ள அயனாவரம் பஸ் டிப்போவைச் சேர்ந்த ஒரு பேருந்து நடத்துநர் K.ராமகிருஷ்ணன் தொழிற்சங்கத் தலைவர்களை கண்டித்தார்: ``எல்லா தொழிற்சங்கத் தலைவர்களுமே சுயநலவாதிகள். இன்றைய தினம் தொழிற்சங்கங்களால் எந்த ஒரு தொழிலாளியும் பயனடையவில்லை. எந்த வடிவத்தில் வந்தாலும் சோசலிசத்தை நான் வரவேற்கிறேன். சென்னையில் நடக்கும் கூட்டத்தில் இலங்கை தேர்தலில் போட்டியிடும் உங்களது கட்சி வேட்பாளர் பேசுவதை கேட்க வருவேன்.``

அதே பேருந்து பணிமனையை சார்ந்தத தொழில்நுட்ப ஊழியரான T. பாண்டியன் சொன்னார், ``எங்களது பணிமனையில் பணியாற்றுகின்ற பல ஊழியர்கள் இலங்கையில் நடக்கும் அபிவிருத்திகளை கவனித்து வருகின்றனர். அங்கு தமிழ் மக்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறையை நாங்கள் எதிர்க்கிறோம். இலங்கை டெரன்யாகலவில் நான் பிறந்தேன். சிறு குழந்தையாக இருக்கும்போது சிறீமாவோ சாஸ்திரி ஒப்பந்தப்படி நான் இந்தியாவிற்கு வந்தேன் (அந்த ஒப்பந்தம் இலங்கை தோட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான தமிழர்களை கட்டாயமாக இந்தியாவிற்கு அனுப்ப வகை செய்தது.) இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடும் உங்கள் கட்சி வேட்பாளர் உரையை கேட்க விரும்புகிறேன்.``

See Also :

வேலை நிறுத்தங்கள், தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு முன்னணி இந்திய நாளேடு அழைப்பு

இந்தியாவில் ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் சோசலிச சர்வதேசிய மூலோபாயத்தின் அவசியத்தை வெளிக்காட்டுகின்றது

Top of page