World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Lecture one: The Russian Revolution and the unresolved historical problems of the 20th century

முதலாம் விரிவுரை: ரஷ்ய புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

By David North
30 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது "ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய உரைகளின் இரண்டாம் பகுதியாகும். இவ்விரிவுரை நான்கு பகுதிகளாக வெளியிடப்படும். முதல் பகுதி (தமிழில்) செப்டம்பர் 2, 2005 அன்று வெளியிடப்பட்டது.

வரலாற்று நனவுக்கு எதிராக பின்நவீனத்துவம்

மனித விடுதலைக்கான போராட்டத்தில் அத்தகைய ஒரு முக்கியமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை, வரலாற்று அனுபவம் பற்றிய அறிவிற்கும் தத்துவார்த்த உள்வாங்கலுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுக்கும் நாம், உயர்த்திப்பிடிக்கும் வரலாறு பற்றிய கருத்துருவானது, நிலவுகின்ற முதலாளித்துவ சிந்தனையின் அனைத்து போக்குகளுக்கும் சமரசப்படுத்த முடியாத பகைமையாக இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக சிதைவானது, தாக்கும் முனையாக முன்னணி வகிக்காவிட்டால், அதன் புத்திஜீவித தரம்தாழ்தலால் பிரதிபலிக்கிறது. அரசியல் பிற்போக்குக் காலத்தில், அறியாமை தன் கோரப் பற்களை காட்டும் என்று ஒருமுறை ட்ரொட்ஸ்கி கூறினார்.

முதலாளித்துவ சிந்தனையின், மிகத் தேர்ச்சிபெற்ற மற்றும் சிடுமூஞ்சித்தனமான அவநம்பிக்கை கல்வியாளர்களால், அதாவது பின்நவீனத்துவ வாதிகளால், இன்று முன்வைக்கப்படும் அறியாமையின் குறிப்பிட்ட மற்றும் வினோதமான வடிவம் வரலாறு பற்றிய அறியாமையும் வெறுப்புணர்வும் ஆகும். வரலாற்றின் செல்லும்தன்மை மற்றும் சமூகச் சிந்தனையின் அனைத்து உண்மையான முற்போக்கான போக்குகளாலும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையப் பாத்திரம் இவை பற்றிய பின்நவீனத்துவ வாதியின் தீவிர நிராகரிப்பு, அவர்களின் தத்துவார்த்த கருத்துருக்களின் இன்னொரு அடிப்படை ஆக்கக்கூறுடன் - புறநிலை உண்மையானது மெய்யியல்ரீதியான (Philosophical) விசாரணைகளின் மைய இலக்கு என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கு என்பதை ஏற்கமறுத்தலுடன் மற்றும் வெளிப்படையாக தள்ளுகையுடன் பிரிக்கவியலாதபடி பிணைந்துள்ளது.

அப்படியானால், பின் நவீனத்துவம் என்றால் என்ன? இப்போக்கின் முக்கியமான கல்வியியற் காப்பாளர் பேராசிரியர் கீத் ஜென்கின்ஸ் எழுதியுள்ள ஒரு பந்தியை ஒரு விளக்கமாக மேற்கோளிட அனுமதியுங்கள்:

"இன்று நாம் பின்நவீனத்துவத்தின் பொதுச் சூழலினுள் வாழ்கிறோம். இதைப் பற்றியதில் வேறு தேர்வு கிடையாது. பின்நவீனம் என்பது நாம் ஏற்பதற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நிலைப்பாடோ அல்லது 'கருத்தியலோ' அல்ல; பின்நவீனம் என்பது துல்லியமாக நம்முடைய சூழ்நிலையாகும்: அதாவது நம்முடைய கதியாகும். சமூக வாழ்வில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பொதுத் தோல்வியால் - இருபதாம் நூற்றாண்டின் மீது தூசி படிந்துள்ளதால், இப்பொழுது மிகத்தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடிய ஒரு பொதுத் தோல்வியால் - வாதத்திற்குரிய முறையில் உண்டுபண்ணப்பட்டிருக்கும் சூழ்நிலைமையைத்தான் நாம் நவீனம் என்று அழைக்கின்றோம். அதன் சொந்த வார்த்தை பதங்களால் அளவிடப்பட்டவாறு, ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டைச்சுற்றி அதிலிருந்து, பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் அவர்களின் குடிமகன்களை / குடிமக்களை அதிகரித்த அளவில் தாராளமாய் விடுதலை செய்வதற்காக சட்டமியற்றும் சமூக உருவாக்கங்களுக்குள்ளே தனிநபர் மற்றும் சமூக நலன்புரி வாழ்க்கையின் மட்டத்தை கொண்டுவர எடுத்த முயற்சியின், 'மனித உரிமை சமுதாயங்களாக' ஆவதற்கு சிறந்த முறையில் அவர்கள் முயற்சி செய்தார்கள் என்று கூறுவதன் மூலம் நாம் பண்பிடக்கூடும், முயற்சியின் பொதுத்தோல்வி ஆகும் அது.

"நவீன பரிசோதனையை தாங்கிநிற்கும் கட்டுமானம் என்று கூறப்படும் வகையில் எந்த 'உண்மையான' அத்திவாரங்களும் இப்பொழுதும் இல்லை, இதற்குமுன் இருந்ததுமில்லை .."[3]

பின் நவீனத்துவவாதிகளின் மொழியிலேயே இந்த மேற்கோள் பகுதியைக் "கட்டுடைப்பதற்கு" என்னை அனுமதியுங்கள். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, 18ம் நூற்றாண்டு வரை நீடிக்கின்ற காலத்தில், அறிவொளியூட்டலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றினால் உந்தப்பட்ட சிலர், மனித முழுமை அடைவதின் சாத்தியத்தில், முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்த சிலர்; வரலாற்றின் புறநிலை விதிகளுக்குள் விஞ்ஞான நுண்ணறிவுத்திறம் என்று தாங்கள் நம்பியதன் அடிப்படையில் சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுதற்கு விழைந்தனர்.

அத்தகையவர்கள், தனி மனிதர்களுடைய அகநிலை நனவில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் சமூக பொருளாதார சக்திகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு விதி ஆளுமைசெய்யும் மாற்றுப்போக்கு என்ற வகையில் வரலாற்றில் (தடித்த எழுத்துக்களில்) நம்பிக்கை கொண்டனர், ஆனால் அவ்விதிகளை மனிதர்கள் கண்டுபிடிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும், மனித முன்னேற்றத்தின் நலன்களுக்காக அவற்றின் மீது செயல்பட முடியும் என்றும் நம்பினர்.

ஆனால், அத்தகைய கருத்துருக்கள் யாவும் சூதுவாதற்ற பிரமைகளாக காட்டப்பட்டிருக்கின்றன என்று பின்நவீனத்துவ வாதிகள் அறிவிக்கின்றனர். வரலாறு ஒன்றும் (பெரிய முதலெழுத்துடன்) இல்லை. சொல்லப் போனால், ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காக மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய (சிறிய எழுத்துடன் தொடங்கும்) வரலாறு கூட கிடையாது. நோக்கங்கள் என்னவாக இருக்கட்டும், அகநிலை ரீதியாக தீர்மானிக்கப்படும் பயனுடைய நோக்கம் ஏதாவதொன்றை அடைவதற்கு பயன்படுத்தப்படும் மாறுகின்ற சொற்களுடன், வெறுமனே அகநிலை "விளக்க உரைகளாக", அல்லது "சொல்லாடல்களாக" (Discourses) இருக்கின்றன, இப்பொழுது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்கின்றனர். .

இத்தகைய நிலைப்பாட்டில் இருந்து, "வரலாற்றில் இருந்து" "படிப்பினைகளை" பெறுதல் என்ற கருத்தே முறைகேடான திட்டமாகும். உண்மையில் படிப்பதற்கு மற்றும் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லை. ஜென்கின்ஸ் வலியுறுத்துகின்றவாறு, இறுதியில் சுயமேற்கோள் காட்டும் உரையாடலின் (பகட்டாரவாரமான) அந்தஸ்திற்கு அப்பால் எமது நம்பிக்கைகளுக்கான ஒரு முறைமையான மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக்குரிய அல்லது மனித அறிவை பற்றிய இயலுக்குரிய அல்லது ஒழுக்கநெறி சார்ந்த அடிப்படைகள் இருக்காத சமூக உருவாக்கங்களுக்கிடையே நாம் வாழ்கிறோம் என்பதை நாம் இப்பொழுதுதான் புரிந்துகொண்டிருக்கிறோம்...... அதன் விளைவாக, ஏதோ ஒருவகை சாரத்தை வெளிப்படுத்தும் கடந்த காலம் என்ற அத்தகைய ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப் போவதும் இல்லை என்பதை இன்று நாம் அறிகிறோம்."[4]

சாதாரணமாகப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கூறவேண்டும் என்றால், ஜென்கின்ஸ் கூறவிரும்புவதாவது: 1) இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அல்லது கண்டிபிடிக்கப்பட இருக்கின்ற புறநிலை விதிகளின் அடிப்படையில் கடந்த கால அல்லது தற்கால மனித சமுதாயங்களின் செயல்பாடு அறியப்பட முடியாதது; மற்றும் 2) மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தை பற்றி என்ன நினைப்பார்கள், கூறுவார்கள், அல்லது செய்வார்கள் என்பதற்கு ஆதாரமாய் இருக்கும் புறநிலை அடித்தளங்கள் எதுவும் கிடையாது. தங்களை வரலாற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள், கடந்த காலத்தை பற்றி ஏதாவதொரு பொருள் விளக்கத்தை முன்வைக்கலாம்; ஆனால் ஒரு விளக்கத்திற்கு பதிலாக மற்றோர் விளக்கத்தை முன்வைப்பதன் மூலம் அது முன்னால் எழுதப்பட்டதைவிட ஏதோ புறநிலைரீதியாக உண்மையை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கில்லை; ஏனெனில் புறநிலை உண்மை என்று ஏதும் நெருக்கமாக அடைவதற்கு இல்லை. வரலாற்றாளனின் அகநிலையாக மனத்தால் உணரும் பயன்களுக்கு பொருந்தும் காரணங்களுக்காக, அதுவெறுமனே கடந்த காலத்தை பற்றி ஒருவிதமாக கூறுவதற்கு பதிலாக, வேறு விதமாக கூறும் பதிலீடுதான்.

இத்தகைய பார்வையை முன்மொழிபவர்கள் நவீனத்தின் இறப்பை வலியுறுத்திப் பேசுகின்றனர், ஆனால் அவர்களது முடிவுரைகள் மூலாதாரமாய்க் கொண்டிருக்கும் சிக்கலான ஒட்டுமொத்த வரலாற்று மற்றும் அரசியல் மதிப்பீடுகளை ஆராய மறுக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள்தான், அவை அவர்களுடைய தத்துவார்த்த கருத்துக்களில் அடிப்படையாய் இருப்பதுடன் வெளிப்பாட்டையும் காண்கின்றது. பின்நவீனத்துவத்தின் முன்னணி வாதிடுபவர்களில் ஒருவரான பேராசிரியர் ஹைடன் வைட், வெளிப்படையாகவே கூறினார்: "அது சமூக படிநிலைகளில் "மேலிருந்து வந்தாலும்" சரி, "கீழிருந்து வந்தாலும்" சரி, மற்றும் சமுதாயம், வரலாறு பற்றிய விஞ்ஞானங்களில் நுட்பம் உடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, அரசியல் 'தன்னியல்பை' புகழ்பவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, இப்பொழுது நான் புரட்சிகளுக்கு எதிரானவன் ."[5]

எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு மெய்யியல் கருத்துருவின் முறைமையானது அதை முன்வைக்கும் தனிநபரின் அரசியலால் தானாகவே மறுக்கப்பட்டுவிடாது. ஆனால் பின்நவீனத்துவத்தின் மார்க்சிச விரோத, சோசலிச-விரோத வளைவரை பாதையானது, அதன் தத்துவார்த்த கருத்துருக்களை அதன் அரசியல் முன்னோக்கில் இருந்து சிக்கலகற்றி பிரித்தெடுப்பது கிட்டத்தட்ட முடியாத அளவுக்கு தெளிவாக உணரப்படத்தக்கது.

இந்தத் தொடர்பு அதன் மிக ஐயத்திற்கிடமற்ற வெளிப்பாட்டை பிரெஞ்சு மெய்யியலாளர் ஜோன் பிரான்சுவாஸ் லியோதார்ட் மற்றும் அமெரிக்க தத்துவவாதியான ரிச்சார்ட் ரோர்ட்டி ஆகியோருடைய எழுத்துக்களில் காண்கிறது. நான் முன்னவருடன் ஆரம்பிக்கிறேன். லியோதார்ட் நேரடியாக சோசலிச அரசியலில் தொடர்பு கொண்டிருந்தார். 1949ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பிரிவான Parti Communiste Internationaliste உடனான பிளவில் தோன்றிய Socialisme ou Barbarie என்ற குழுவில் 1954ம் ஆண்டு அவர் சேர்ந்தார். ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தை ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு என்று வரையறுத்ததை அக்குழு ஏற்காததுதான் அந்த பிளவிற்கான அடிப்படை ஆகும். Cornelius Castoriadis மற்றும் Claude Lefort ஆகியோரை முன்னணி தத்துவார்த்தவியலாளர்களாக கொண்டிருந்த Socialisme ou Barbarie குழு, அதிகாரத்துவம் ஒட்டுண்ணித் தன்மை கொண்ட சமூக அடுக்கு அல்ல மாறாக ஒரு புதிய சுரண்டும் சமூக வர்க்கம் என்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தது.

1960களின் மத்திவரை லியோதார்ட் இந்தக் குழுவில் இருந்தார்; அக்காலக்கட்டத்தில் அவர் மார்க்சிசத்துடன் முற்றிலும் முறித்துக் கொண்டு விட்டார்.

மனிதகுல விடுதலையின் "அரிய கூற்றுக்களை" தள்ளுகை செய்த வகையில் லியோதார்ட் பெரிதும் அடையாளம் காணப்படுகிறார்; அதன் முறைமையானது 20ம் நூற்றாண்டின் நிகழ்வுகளால் மறுக்கப்பட்டுவிட்டன என்பது அவருடைய கூற்று ஆகும். அவர் வாதிடுவதாவது:

"மனிதகுல விடுதலை பற்றிய மாபெரும் கூற்றுக்கள் ஒவ்வொன்றினது அடிப்படையும் எடுத்துக்கூறுவதாயின், அது கடந்த ஐம்பது ஆண்டுகளில் செல்லாததாக்கப்பட்டுவிட்டது. மெய்மையானவை (Real) அனைத்தும் ஆய்வறிவானவை (Rational), ஆய்வறிவானவை அனைத்தும் மெய்மையானவை என்பது, 'அவுஸ்விற்ச்' ஊகக் கோட்பாட்டை மறுக்கின்றது. குறைந்த பட்சம் குறைந்த பட்சம் மெய்மையானதாக இருந்த அந்தக் குற்றம், ஆய்வறிவற்றதாக இருந்தது. பாட்டாளி வர்க்கமாய் இருக்கும் அனைவரும் கம்யூனிஸ்ட்டாய், கம்யூனிஸ்டாய் இருக்கும் அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் இருப்பர்: 'பேர்லின் 1953, புடாபெஸ்ட் 1956, செக்கோஸ்லோவாக்கியா 1968, போலந்து 1980 நிகழ்வு" (கூறுவதற்கு மிக வெளிப்படையான உதாரணங்களே இவை) வரலாற்றுச் சடவாத கோட்பாடை மறுக்கின்றன: தொழிலாளர்கள், கட்சிக்கு எதிராக எழுகின்றனர். ஜனநாயகத்திற்காக இருப்பவை அனைத்தும் மக்கள் மூலமாய் மக்களுக்காக உள்ளன; எதிர்விதத்தில் இல்லை. "மே 1968" நிகழ்வு பாராளுமன்ற தாராளவாத கோட்பாட்டை மறுக்கிறது." அவற்றின் போக்கில் விட்டால், தேவை, அளிப்பு விதிகள் உலகத்தில் எல்லா நிலைகளிலும் செல்வச்செழிப்பை கொடுக்கும்; உலகத்தின் முழு செல்வச்செழிப்பில் தேவை அளிப்பு விதிகள் இயல்பாக செயல்படும். "1911 மற்றும் 1929 நெருக்கடிகள் பொருளாதார தாராளவாத கோட்பாட்டை" மறுக்கின்றன.[6]

லியோதார்ட்டின் பின்நவீனத்துவ செயற்திட்டம் முழுவதன் பின்னே இருக்கும் தத்துவார்த்த நோக்குநிலை தவறல், உள உரங்குலைதல், அவநம்பிக்கைவாதம் ஆகியவற்றின் சேர்க்கையானது இந்த பகுதியில் சுருங்கக் கூறப்படுகிறது. அதை மறுத்து ஒரு முழு உரை, ஏன் ஒரு புத்தகம் கூட எழுதப்படமுடியும். இங்கு நான் ஒரு சில கருத்துக்களோடு மட்டும் என்னை வரையறைக்குட்படுத்திக் கொண்டாக வேண்டும்.

அவுஸ்விற்ச் நிகழ்வு வரலாற்றைப்பற்றி விஞ்ஞானபூர்வமான முறையில் புரிந்து கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்கிறது என்ற வாதம் எந்தவகையிலும் லியோதார்ட்டுக்கு மூல உரிமையானது அல்ல. அதேபோன்ற கருத்து பிராங்போர்ட் (கருத்தியர்) பள்ளியின் தந்தையர்களான Adorno, Horkheimer எழுதிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய எழுத்துக்களின் அடிப்படையை அமைக்கின்றன. அவுஸ்விற்ச் மெய்மையானது மற்றும் ஆய்வறிவற்றது என்ற இரண்டுமாகும் என்று லியோதார்ட்டின் அறிவிப்பு ஹெகெலுடைய இயங்கியல் புரட்சிகர கருத்துருவை எளிமையாக்கும் முறையில் திரித்தல் ஆகும். லியோதார்ட் தள்ளுகைசெய்வதாகக் கூறுவது, ஒரு மெய்யியலுக்குரிய கருத்து என்ற வகையில், அதனுடன் இருக்கும் மெய்மையை கொச்சையான முறையில் அடையாளப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏங்கல்ஸ் விளக்கியுள்ளபடி, ஹெகலால் புரிந்துகொள்ளப்பட்டவாறு, மெய்மை என்பது, எந்த வகையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா காலங்களிலும், எந்த கொடுக்கப்பட்டுள்ள சமூக அல்லது அரசியல் நிலவும் நிலைமைகளின் தனிஇயல்பு மெய்மை அல்ல." [7] நிலவும் நிலைமையானது சமூக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் ஆய்வறிவற்றதாக இருப்பதால் மனித சமுதாயத்தின் புறநிலை வளர்ச்சியுடன் அந்தளவுக்கு அடியோடு மோதல்கொள்ள முடியும், எனவே அது மெய்மையற்றது, நீடித்து நிற்கவியலாதது மற்றும் அழிவுற வேண்டியது ஆகும். இந்த ஆழ்ந்த அர்த்தத்தில், நாசிசத்தையும் அவுஸ்விற்சையும் விளைவித்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஹெகலுடைய மெய்யியல் கருத்தின் உண்மையைத்தான் விளக்கியது.

ஸ்ராலினிசத்தற்கு எதிரான தொழிலாள வர்க்க எழுச்சிகள் வரலாற்று சடவாதத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அவை லியோதார்ட் தழுவிக்கொண்ட Socialisme ou Barbarie இன் அரசியலைத்தான் மறுதலிக்கின்றன. வரலாற்று சடவாத பகுப்பாய்வின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி இத்தகைய எழுச்சிகள் வரக்கூடும் என்று முன்கூட்டியே கணித்திருந்தார். Soialisme ou Baribarie குழு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு, ஒரு ஒட்டுண்ணி சாதி என்றவகையில், அவற்றிடம் இல்லாதிருந்த (அவை ஒட்டுண்ணிகள் என்பதால்) ஓரளவு அதிகாரத்தையும், உறுதித் தன்மையையும் அளித்துள்ளது. மேலும் லியோதார்ட் கம்யூனிசத்தை ஒரு புரட்சி இயக்கம் என்பதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளாக பார்ப்பதற்கும் இடையிலான ஒன்றாக அடையாளம் காண்கிறார், அவை உண்மையில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் அமைப்புக்கள்தாம்.

பொருளாதார மற்றும் பாராளுமன்ற தாராளவாதத்தை மறுப்பது என்பதை பொறுத்த வரையில், இது லியோதார்டால் மேற்கோளிடப்படும் நிகழ்வுகள் நடப்பதற்கு நெடுங்காலம் முன்னரே மார்க்சிஸ்டுகளால் சாதிக்கப்பட்டுவிட்டது. மே 1968 பாராளுமன்ற தாராளவாதம் வீழ்ச்சியுற்றது என்று அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பாக விசித்திரமானது. ஸ்பானிய உள்நாட்டுப் போர் என்ன ஆயிற்று? வைமர் குடியரசின் பொறிவை பற்றி என்ன கூறவேண்டும்? பிரெஞ்சு மக்கள் முன்னணியின் காட்டிக் கொடுப்பு பற்றி என்ன கூறுவது? இந்நிகழ்வுகள் அனைத்தும் மே-ஜூன் 1968க்கு 30 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்தவை. பெரும் மெய்யியற் கண்டுபிடிப்புக்கள் என லியோதார்ட் முன்வைப்பவை ஏமாற்றமடைந்த முன்னாள் இடது (அல்லது வலதுபுறம் நகரும்), கல்விப்புலம் சார்ந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அவநம்பிக்கைவாதம் மற்றும் வெறுப்பு மனப்பான்மையின் சற்று அதிகமான வெளிப்பாடு ஆகும்.

ரிச்சார்ட் ரோர்டி புறநிலை உண்மை பற்றிய கருத்துரு பற்றிய தனது நிராகரிப்பை புரட்சிகர சோசலிச அரசியலை தள்ளுகைசெய்வதுடன் தொடர்புபடுத்துவதில் வெட்கமற்று உள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் இடதுசார்புடைய அறிவுஜீவிகளுக்கு நீண்ட காலம் காத்துக் கிடந்த வாய்ப்பை, புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்கு எந்தவித அறிவுஜீவி அர்ப்பணிப்பையும் (அல்லது உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பையும் கூட) முதலும் கடைசியுமாக கைவிட வாய்ப்பை வழங்கியது.

"... மனித சமூகங்களின் கதியை நிர்ணயிக்கும் சக்திகளின் அடிப்படை ஆதாரமாக உள்ள, ஆழ்ந்த ஒன்றைப் பற்றி அறிய வேண்டும் அல்லது அறியக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அறிவுஜீவிகள் லெனினிசத்தின் இறப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர் என நான் நம்புகிறேன்."

"அறிவுஜீவிகளாகிய நாம் நம்முடைய கடையை விரித்ததில் இருந்தே அத்தகைய அறிவை நாம் பெற்றுள்ளோம் எனக் கூறிவந்திருக்கிறோம். முன்னொரு காலத்தில் அரசர்கள் மெய்யிலாளர்களாகவோ, மெய்யிலாளர் அரசர்களாகவோ இருந்தாலன்றி நீதி கோலோச்ச முடியாது என்று கூறிவந்தோம்; இத்தகைய அறிவை வரலாற்றின் இயக்கத்தை மற்றும் வடிவத்தை புரிந்துகொண்டதன் அடிப்படையில் அறியவந்தோம் எனக் கூறினோம். அநீதியை எதிர்த்து எவ்வாறு முடிவு கட்டுவது என்பதைக் கண்டறியும், சிறு பரிசோதனை வழிமுறைகளுக்கு எதிராக பெரும் தத்துவார்த்த வழிகள் இருந்தாக வேண்டும் என்ற பிளாட்டோவிற்கும் மார்க்ஸுக்கும் பொதுவான, உறுதியான நம்பிக்கையிலிருந்து இறுதியாக விடுபடுவதற்கு நேரம் வந்துவிட்டது என நான் நம்புவேன்."[8]

இத்தகைய தத்துவார்த்த கைவிடுதலை அடுத்து என்ன நேரிடும்? ரோர்ட்டி "இடது" அரசியல் பற்றிய மறுநோக்குநிலைக்கான அவரது முன்மொழிவுகளை முன்வைக்கிறார்:

" முதலாளித்துவம், சோசலிசம் போன்ற சொற்களை இடதின் அரசியல் சொற்களஞ்சியத்திலிருந்நு நீக்கிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 'முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு சாதாரண, தத்துவார்த்தமல்லாத முறையில்- தவிர்க்கக் கூடிய மனிதத் துன்பங்களுக்கு எதிரான போராட்டம் என்பது போன்ற ஏதோஒன்றை பதிலீடாகக் கூறுவது சிறந்த கருத்தாக இருக்கும். இன்னும் பொதுவாக, இடது அரசியல் ஆழ்ந்தாராய்வுகளின் முழு சொற்களஞ்சியத்தையும் அற்பமானதாக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். நாம் முதலாளித்துவ கருத்தியல் என்பதற்கு பதிலாக, பேராசை, தன்னலம் ஆகியவற்றையும், பட்டினி ஊதியம், வேலை நீக்கம் என்று கூறுவதைவிட உழைப்பை பண்டமயமாக்கல் என்றும், சமூகம் வர்க்கங்களாக பிரிந்துள்ளது என்பதற்கு பதிலாக பள்ளிகளில் வேறுபட்ட முறையில், தலா மாணவர்களுக்கு எவ்வளவு செலவு, சுகாதாரத்தில் வேறுபட்ட முறையில், தலா நபருக்கு எவ்வளவு செலவு என்றும் கூறத் தலைப்படலாம் என்று கருதுகிறேன்."[9]

இது "மெய்யியல்" என்று அழைக்கப்படுகிறது? "அற்பமானதாக்கல்" என்று ரோர்ட்டி கூறுவது அறிவார்ந்த மற்றும் அரசியல் காயடிப்பு (நலமடிப்பு) என்று தேர்ந்த முறையில் விபரிக்கப்படலாம். விவாதத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கும் மேலான சமூக சிந்தனையின் விளைவை விவாதிப்பதிலிருந்து அகற்ற முன்மொழிகிறார். இந்த முன்மொழிவுக்கு அடிப்படையான கருத்து, சிந்தனையின் அபிவிருத்திதாமே முற்றிலும் தான்தோன்றித்தனமான, மற்றும் பெரும்பாலும் அகநிலை செயல்முறை ஆகும். சொற்கள், தத்துவார்த்த கருத்துப்படிவங்கள், தர்க்கரீதியான வகையினங்கள், மெய்யியல்முறைகள் ஆகியவை, பல்வேறு அகநிலை இலக்குகளின் நலன்களின் பேரில் செயற்பாட்டுரீதியாக மாயவித்தைசெய்யும் வெறும் சொற்புனைவுகள் ஆகும். தத்துவார்த்த சிந்தனையின் அபிவிருத்தி என்பது, இயற்கை மற்றும் சமுதாயம் பற்றிய மனிதனின் படிப்படியான அபிவிருத்தியை, ஆழப்படுத்தலை மற்றும் என்றும் மேலும் மேலும் சிக்கலான மற்றும் நுட்பமான புரிதலை வெளிப்படுத்தும், ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காகும், இது ரோர்ட்டியை பொறுத்தவரையில் ஒரு ஹெகெலிய-மார்க்சிச பரிபாஷையைத்தவிர வேறொன்றுமில்லை. வேறொரு பகுதியில் அவர் வலியுறுத்திக் கூறுவதாவது: "இயற்கை விஞ்ஞானிகள் குறிப்பாக நுண்திறம் பெற்றிருக்கும், கண்டுபிடிக்கப்பட வேண்டிய இயல்புள்ள 'அறிதல்' என்று அழைக்கப்படும் நடவடிக்கை இல்லை. இவை சாதாரணமாய் பார்வையாளர்களிடத்தில் நம்பிக்கைகளை நியாயப்படுத்தும் செயல்முறைகள்தாம்." [10]

எனவே, "முதலாளித்துவம்", "தொழிலாள வர்க்கம்", "சோசலிஸ்ட்", "உபரி மதிப்பு", "கூலி-உழைப்பு", "சுரண்டல்", மற்றும் "ஏகாதிபத்தியம்" போன்ற பதங்கள் ஒரு புறநிலை மெய்மையை குறிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் கருத்துப் படிவங்கள் அல்ல. அவை, இன்னும் குறைந்த உணர்வை மெய்யென முன்கூட்டியே கொள்ளும் மற்றவற்றால், ரோர்ட்டி அழைக்காவிட்டாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் "இடக்கரடக்கல்" (தீயதை நல்வார்த்தையால் கூறல்) என்று அழைக்கும் சொற்களால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே மேற்கோளிட்டபடி, "தவிர்க்கக் கூடிய மனிதத் துன்பங்களுக்கு எதிரான போராட்டத்தை பற்றி" நாம் பேசவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். ஒரு கணம் இந்த அரிய ஆலோசனையை ஏற்போம். உடனடியாக நாம் வேறு ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றோம். எந்த வடிவ, எந்த அளவிலான மனிதத் துன்பங்கள் தவிர்க்க கூடியவை என்று நாம் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? துன்பம் தவிர்க்கப்படக் கூடியது அல்லது அது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூட எந்த அடிப்படையில் நாம் கூறுவது? துன்பமானது மனிதனின் ஊழ்வினை, இறையருள் இல்லாமற்போனவர்களுக்கு அதுதான் விளைவு என்று வாதிடுவோருக்கு நாம் என்ன பதிலைக் கூறவேண்டும்? சமயவாதிகளின் வாதங்களை தவிர்த்தாலும்கூட, எமது துன்பங்களை சமயசார்பற்ற முறையில், ஒரு சமூகப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டாலும், துன்பங்களுக்கான காரணங்களை ஆராயும் பிரச்சினையை எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

"தவிர்க்கக்கூடிய மனிதத் துன்பங்கள்" அகற்றப்படுவதற்கான வேலைத்திட்டம் என்பது சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பை ஆராய்வதற்கு நிர்பந்திக்கப்படும். அத்தகைய விசாரணை ஏதேனும் குறிப்பிடத்தக்க அளவு நேர்மையுடன் நடத்தப்பட்டால், "தவிர்க்க முடியாத மனிதத் துன்பங்களுக்கு" எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் "சொத்துஉடைமை", "சொத்து", "இலாபம்" மற்றும் "வர்க்கம்" பற்றிய பிரச்சினைகளை எதிர்கொள்ளுவர். இந்த சமூக இயல்நிகழ்ச்சியை விளக்குவதற்கு அவர்கள் புதிய சொற்களைத் தேடலாம்; ஆனால் ரோர்ட்டியின் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகத்தில் இவை இருக்கும்.

ரோர்ட்டியுடைய தத்துவார்த்த கருத்துருக்கள் அப்பட்டமான ஒத்திசைவின்மைகளையும் முரண்பாடுகளையும் தாராளமாய் கொண்டுள்ளன. "உண்மை" என்று கண்டுபிடிக்கப்பட வேண்டியது, அறிந்துகொள்ளப்படவேண்டியது, ஒன்றுமில்லை என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். உண்மையெனக் கொள்ளும் பாங்கில், உண்மை என்பது இல்லை என்ற தன்னுடைய கண்டுபிடிப்பு அவருடைய மெய்யியலின் அடித்தளத்தை அமைப்பதால், அது "உண்மை" யாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் இந்த படுமோசமான ஒத்திசைவின்மை பற்றி விளக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டால், இப்பிரச்சினையை தவிர்க்கும் வகையில் வினாவின் விதிகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்று அறிவித்துவிடுவார்; அது பிளாட்டோ காலத்தில் இருந்து, மரபுவழி மெய்யியல் சொல்லாடலில் வேரூன்றி உள்ளது. உண்மை என்பது பழங்காலத்திய பிரச்சினைகளில் ஒன்று, அது இப்பொழுது காலாவதியாகிவிட்டது, இக்காலத்தில் அதற்கு மெய்யியலளவில் விவாதத்திற்கு ஆர்வம் கொள்ள முடியாது என்றும் ரோர்ட்டி வலியுறுத்துகிறார். பிரச்சினை எழும்போது சிடுமூஞ்சித்தனத்துடன் குறிப்பதுபோல், "விவாதப் பொருளை மாற்ற விரும்புவதாக" குறிப்பிடுவார்.[11]

ரோர்ட்டியுடைய மெய்யியற் கருத்துருக்களை புரிந்துகொள்ளுவதற்கான திறவுகோல் அவருடைய அரசியல் நிலைமைகளில் காணக் கிடைக்கிறது. மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி குறைமதிப்பிடும் வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பேச முற்பட்டாலும், தனது தத்துவார்த்த கருத்துருக்கள் ஒரு அரசியல் நிலைப்பாட்டில் நேரடியாக பதிக்கப்பெற்ற- அதாவது, மார்க்சிச புரட்சிகர அரசியலை தனது எதிர்ப்பிலும் நிராகரிப்பிலும் பதிக்கப்பெற்ற இன்னொரு நிகழ்கால மெய்யியலாரை (philosopher) காண்பது அரிதாகும். மார்க்சிசத்தை முறையாக பகுத்து ஆராய்ந்து அதை மறுப்பதற்கு ரோர்ட்டி முற்படவில்லை. ரோர்ட்டியை பொறுத்த வரையில் மார்க்சிசம் சரியானதா, தவறானதா என்பது ஒரு தேவையற்ற விவாதமாகும். சோசலிச செயற்திட்டம் (சோவியத் ஒன்றியத்தின் கதியுடன் மிகப் பெரிய அளவில் ரோர்ட்டி அடையாளம் கண்டிருந்த) தோற்றுவிட்டது, அதாவது ரோர்ட்டியைப் பொறுத்தவரையில் வருங்காலத்தில் அது வெற்றிபெற அதிக வாய்ப்பு இல்லை. பழைய மார்க்சிச இடதின் சரிவில் இருந்து, எதுவும் உருப்படியாகக் காப்பாற்றப்பட முடியாது. வரலாறு, கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள் மற்றும் எல்லாவற்றிலும் மோசமாக புறநிலை உண்மை இவற்றின் மீதாக புது கொள்கை போராட்டங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக, மிகக் குறைந்த பொதுப் பெயரிடல் பற்றிய ஏற்கத்தக்க அரசியலுக்கு பின்வாங்கி செல்வது சிறந்தது. இதுதான் ரோர்ட்டியின் மெய்யியல் ஆகும்- மற்றும் பெரும்பாலான அமெரிக்க கல்விப்புலம் சார்ந்த பின் நவீனத்துவ சொல்லாடலும் உண்மையில் இதுவேதான்.

ரோர்ட்டிக்கும் (நாம் பின்னர் பார்க்கவுள்ளபடி இன்னும் பலருக்கும்), "1989 நிகழ்வுகள், மார்க்சிசத்தின் பேரில் இன்னும் நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு, நம்முடைய சிந்தனையை நிலைநிறுத்துக் கொள்ள ஒரு வழியும், எதிர்காலத்தை, நிகழ்காலத்தைவிட சிறப்பாக ஆக்கிக் கொள்வதற்கு ஒரு வழிவகையும் தேவைப்பட்டது, அது முதலாளித்துவம், முதலாளித்துவ வாழ்க்கை முறை, முதலாளித்துவ சிந்தனை, தொழிலாள வர்க்கம் என்ற குறிப்புக்களைக் கைவிட்டது." [12] குறைக்கப்பட்ட துன்பம் பற்றிய எமது கற்பனைத் திறன்களை நெய்யும் ஒரு குறியிலக்கின் பெயராய் 'வரலாற்றை' பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது என்று அவர் வாதிடுகிறார். முழுப் புரட்சிக்கு இன்னும் ஆர்வம் கொண்டிருந்தால், உலக வரலாற்றளவில் தீவிரப் போக்குடை ஏனையோரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், 1989 நிகழ்வுகள் உனக்கு அதிருஷ்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது"[13] என பிரான்சிஸ் புகுயாமா, (அவருடைய புகழ் பெற்ற கட்டுரையான The End of History TM) சுட்டிக்காட்டுகிறார்.

இந்த வகை சிடுமூஞ்சித்தனமும், அருவருப்பான வஞ்சப்புகழ்ச்சியும், ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவை தொடர்ந்து வந்த அரசியற் பிற்போக்கினை எதிர்கொள்கையில் இடது கல்வியாளர்கள் மற்றும் தீவிரப்போக்கினரின் சமூகச்சூழலை விரைந்து அடித்துச்சென்ற சரணாகதி, உள்ள உரம்குலைதல் இவற்றின் வெளிப்பாடு ஆகும். ஸ்ராலினிச ஆட்சிகளிளின் உடைவின் வரலாற்று, அரசியல், பொருளாதார மற்றும் சமூக வேர்களை கருத்தூன்றி ஆராய முயற்சிப்பதை காட்டிலும், வெகு எளிதில் இப்போக்குகள் பிற்போக்குத்தனம், குழப்பம் மற்றும் அவநம்பிக்கைத்தனம் ஆகியவை நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொண்டன.

தொடரும்..........

Notes:

[3] On "What Is History?" (London and New York, 1995), pp. 6-7.

[4] Ibid, p. 7.

[5] The Content of the Form: Narrative Discourse and Historical Representation (Baltimore, 1990), p. 63.

[6] Quoted in Jean-François Lyotard, by Simon Malpas (London and New York, Routledge, 2003), pp. 75-76.

[7] Marx Engels Collected Works, Volume 26 (Moscow, Progress Publishers, 1990), p. 358.

[8] Truth and Progress (Cambridge, 1998) p. 228.

[9] Ibid, p. 229.

10] Philosophy and Social Hope (London and New York, 1999), p. 36.

[11] Cited in Jenkins, p. 103.

[12] Truth and Progress, p. 233.

[13] Ibid.

Top of page