World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The Qana massacre: Slaughter of innocents in Lebanon

கானா படுகொலை: லெபனானில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர்

Statement of the Editorial Board
31 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

இக்கட்டுரை பதிவிறக்கம் செய்து விநியோகிப்பதற்காக PDF துண்டுப் பிரசுரமாக இருக்கிறது

லெபனிய மக்களை, முக்கியமாக குழந்தைகளை கானா கிராமத்தில் இஸ்ரேலியர்கள் படுகொலை செய்தமை ஒரு மாபெரும் போர்க்குற்றமாகும்; இதற்கு அமெரிக்க அரசாங்கம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நள்ளிரவில் இலக்கு வைக்கப்பட்ட பாதிப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது ஏவப்பட்ட, பலமுறை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள், ஒரு நான்கு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தையும் அருகில் இருந்த வீடுகளையும் தரைமட்டமாக்கி, குறைந்தது 37 குழந்தைகள் உட்பட 57 பேரைக் கொன்றன.

லெபனிய பிரதம மந்திரி பெளவட் சினியோரா கானா மீதான குண்டுவீச்சை "இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளால்" நடத்தப்பட்ட "இழிந்த குற்றம்" எனக் கூறியுள்ளார். தன்னுடைய செய்தி புஷ் நிர்வாகத்தை சென்றடைய வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசிய சினியோரா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரால் திட்டமிடப்பட்டிருந்த வருகையை, போர் நிறுத்தத்திற்கான அழைப்புவிடும் வரை எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறி, வருகைக்கு முட்டுக்கட்டை இட்டார்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு இந்த கொடூரம் அமெரிக்க ஆதரவுடன் லெபனானில் நடத்தப்படும் போரின் சாரத்தை உணர்த்தியதுடன், அதன் மிருகத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மைகளின் முழு உருவமாகவும் காணப்பட்டது. நிரபராதிகளின் உயிரிழப்பின் சோகம் தோய்ந்த இழப்பு பற்றி, கொடூரமான அதிர்ச்சியை மனிதகுலம் எதிர்கொண்டு, அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்கள் மீது பெரும் சீற்றத்தை கொண்டாலும், வாஷிங்டனிடமிருந்து வெளிப்பட்ட அதிகாரபூர்வ விடையிறுப்பு முற்றிலும் இழிவான இரக்கமற்றதன்மையில் இருந்தது.

சமீபத்திய குற்றத்தையும் இதற்குமுன் நிகழ்த்தப்பட்ட கணக்கிலடங்கா குற்றங்களையும் தோற்றுவித்த கொள்கையை முறைமையானதாக்கும் இத்தகைய வெற்றுச் சொற்றொடர்கள் இருந்தாற்போன்று, தரத்தை நிர்மாணிக்கும் "வருந்துதல்", "சோகம்" என்ற வெளிப்படுத்தல்கள் இருந்தன.

ஜனாதிபதி புஷ் அமெரிக்க மந்திரமான மத்திய கிழக்கில் "நிலைத்திருக்கக்கூடிய சமாதானம்" என்பதை மீண்டும் வலியுறுத்தினார்; இத்தகைய இடக்கரடக்கலானது லெபனானிற்குள் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதிக்கத்திற்கு உள்ள எதிர்ப்புக்களை அழிப்பதற்காக இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதலான அவகாசம் கொடுக்கப்படுவதை மறைக்கிறது. அமெரிக்கா அளித்த, வாஷிங்டனுடைய போர்க் கூட்டாளி இயக்கிய ஏவுகணைகளினால், கொல்லப்பட்டுவிட்ட 37 லெபனிய குழந்தைகளின் சடலங்கள் இன்னும் புதைக்கப்பட வேண்டிய நிலையில், புஷ், தான் "சிறுவர்களும், சிறுமியரும், குறிப்பாக மத்திய கிழக்கில் சமாதானமாக இருக்கும் நிலை வரும்" என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரால் கொண்டலீசா ரைஸ் ஜெருசலேத்தில் செய்தியாளர் கூட்டத்தில் "இந்தக் கொடூரமான உயிரிழப்பு பற்றி" தான் "ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக" கூறி, சிவிலிய இலக்குகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் பற்றி அமெரிக்காவின் "கவலையை" மீண்டும் வலியுறுத்தினார்.

இதன் பின்னர் அவர் கூறியதாவது: "தற்போதைய பூசல்களுக்கு நாங்கள் ஒரு விரைவான முடிவை காண விரும்புகிறோம்; ஆனால் தொடர்புடைய நாடுகள் இதை எப்படி அடைவது என்று கொண்டுள்ள கருத்துக்கள் வேறுபட்ட தன்மையில் உள்ளன." இச்சொற்றொடரின் முதல் பகுதி வெளிப்படையான பொய்யாகும்; இரண்டாம் பகுதி அமெரிக்காதான் போர்நிறுத்தத்தை "தன்னுடைய மாறுபட்ட கருத்துக்களினால்" தடைசெய்து கொண்டிருக்கும் முக்கிய சர்வதேச பங்காளர் என்ற உண்மை கூறப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மற்ற அமெரிக்க செய்தி தொடர்பாளர்கள் சற்றும் இரக்கமற்ற முறையில் இஸ்ரேலின் நடவடிக்கை பற்றி வருத்தம் தெரிவித்தனர். உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் நிகோலா பேர்ன்ஸ், ஹெஸ்பொல்லா "தன்னுடைய இராணுவ சக்திகளை குடிமக்களிடையே இருத்தி வைத்திருந்தது" என்று அறிவித்ததுடன், ஒரு எல்லைத் தாக்குதலை நடத்தி, ஜூலை 12 அன்று இரு இஸ்ரேலிய வீரர்களை கடத்தியதின் மூலம் ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் மகத்தான தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்தது என்ற கதையையும் மறுபடியும் கூறினார்.

இத்தகைய கொடுமைகளுக்கு பின் எப்பொழுதும் போலவே, இஸ்ரேலிய அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களைத்தான் குற்றம்சாட்டினர். பிரதம மந்திரி ஒல்மெர்ட் அறிவித்ததாவது: "கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுக்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட இடங்களாகும்."

ஐ.நா.விற்கு இஸ்ரேலிய தூதரான டான் கில்லர்மன் கானா படுகொலைகளுக்கு ஹெஸ்பொல்லாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்; ஏனெனில் "அது மகளிரையும், குழந்தைகளையும் மனிதக் கவசங்கள் போல் பயன்படுத்தியது." லெபனிய அரசாங்கமும் லெபனிய மக்களும் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவு தருவதாக கூறிய அவர் அதையொட்டி தாங்கள் விதைத்ததைத்தான் அவர்கள் அறுவடை செய்வதாகவும் கூறினார்.

"மனிதக் கேடயம்" என்ற கூற்று பொதுவாக எப்பொழுதும் ஏகாதிபத்திய இராணுவம் சிவிலிய இலக்குகளை தாக்கும்போது கூறப்படும் நியாயப்படுத்தும் வாதம்தான். இந்த நிகழ்வில், லெபனானின் ஷியைட்டு மக்களின்மீது குண்டுத் தாக்குதல்களுக்கு எல்லாவற்றிற்கும் பொருந்தும் வகையில் கொடுக்கப்படும் காரணம், அது ஹெஸ்பொல்லாவிற்கு பெரும் ஆதரவு கொடுக்கிறது என்பதுதான்; இந்த வெகுஜன மக்கள் கட்சி லெபனிய பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது.

பல இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர்களும் தெற்கு லெபனானில் பேரூர்களும் கிராமங்களும் காலி செய்யப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் வீசியிருந்தது என்ற அரசாங்க கருத்தை மீண்டும் கூறினார். ஏதோ இதனால் குண்டுவீசி ஏவுகணைகளை வீடுகளின் மீது துல்லியமாக தாக்கிய குற்றம் இதனால் மறைந்து போகிறது என்பது அவர்கள் கருத்து போலும்! எப்படிப்பார்த்தாலும், இஸ்ரேல் சாலைகளையும், பாலங்களையும் தகர்த்து இடம் பெயர்வதையும் இயலாமல் ஆக்கிவிட்டது; இதையும் தவிர வடக்கே செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவரிசைகளையும் குண்டுவீச்சிற்கு உட்படுத்தியுள்ளது.

படுகொலைகளுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்தியோகரீதியிலான பதில் ஏதேனும் ஒன்றை தனிச்சிறப்பாய் வைக்கிறது என்றால் அது உலகின் பெரும்பாலான மக்களையும் இவற்றையும் பிரிக்கும் பெரும் இடைவெளி ஆகும்.

சர்வதேச அளவில் வெளிப்பட்ட கடும்வெறுப்பு மிகப் பெரிய வகையில் இருந்ததால், இஸ்ரேல் ஒரு 48 மணி நேரத்திற்கு, தெற்கு லெபனானில் அதன் விமானத் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்க இஸ்ரேலிய போருக்கான எதிர்ப்பு கட்டுப்பாட்டை மீறிச்சென்று விடுமோ என்ற அச்சத்தில், புஷ் நிர்வாகம் இன்னும் கூடுதலான வகையில் இஸ்ரேலுடன் கூட்டுப் போர் உத்தியை பரிசீலனை செய்வதற்கும், ஓர் அடையாளத்தை காட்டுவதற்கும், இத் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு உத்திரவிட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான ஆடம் எரேலி ஞாயிறு இரவன்று இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்டதாக அறிவித்தார்; கானா தாக்குதல் பற்றி விசாரணை நடத்த இது அனுமதிக்கும் என்றும் ஒரு போலிக் காரணம் கூறப்பட்டது. ஆனால் "தனக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தாக்குதல்களின் இலக்குகளின்மீது நடவடிக்கை எடுக்கும்" உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்று எரேலி சேர்த்துக் கொண்டார். இப்படிப்பட்ட நிலைப்பாடு இஸ்ரேலுக்கு லெபனிய மக்கள்மீது தாக்குதலை தொடர நிறைய வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.

செய்தித்தாள்களின் தகவல்கள் தெற்கு லெபனான்மீது விமானத் தாக்குதல்களுக்கு மட்டும்தான் தற்காலிக தாக்குதல் நிறுத்தம் பொருந்தும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறுகின்றன; எனவே இது போர்நிறுத்தம் ஆகாது என்றும் பீரங்கிப் படைகளோ, இஸ்ரேலிய தரைப்படைகளின் தாக்குதல்களோ நிறுத்தப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

ஒரு மனம்மாறாட்ட செயல் அல்லது தற்செயல் நிகழ்வு என்பதைவிட கானா படுகொலை என்பது வேண்டுமென்றே செய்யப்பட்ட வெகுஜனக் கொலையாகும். போரின் இலக்கு ஹெஸ்பொல்லா மட்டுமல்ல, லெபனிய மக்கள் அனைவரும்தான் என்பதைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புஷ் நிர்வாகத்தாலும், இஸ்ரேலிய அரசாங்கத்தாலும் நன்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள இச்செயலின் நோக்கம் நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்த்து, பெய்ரூட்டிற்கு தெற்கேயுள்ள பகுதி அனைத்தையும் இடிபாடுகளாக மாற்றிவிட வேண்டியது என்பதுதான்.

வாஷிங்டனுடைய முழு வெளிப்படையான ஆதரவுடன், இஸ்ரேல் பெரும் இறப்பையும் அழிவையும் சுமத்தி ஒரு முழுமையான சாதாரண மக்கட்தொகுப்பை தெற்கு லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் உறுதியாக உள்ளது; அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளுக்கு வசிக்க முடியாதபடி செய்துவிட வேண்டும் என்பதும் அதன் நோக்கமாகும்.

இஸ்ரேலிய "பாதுகாப்பு", லெபனிய "இறைமை" ஆகியவற்றை நிறுவுதல் என்னும் ஜனாதிபதி புஷ், வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மர்ட் ஆகியோரின் வனப்புரைக்கு பின்னணியில் உள்ள பாசிச மூலோபாயம் இதுதான். இதனால்தான் எரிந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, ஜெருசலேத்தில் பேசிய ரைஸ், போர்நிறுத்தம் வேண்டும் என்ற லெபனிய அரசாங்கத்தின் ஆற்றொணா முறையீட்டை நிராகரித்தார்.

வாஷிங்டனும் இஸ்ரேலும் குருதிப் பாதையைத் தொடரவும், அதைப் பெருக்கவும் விரும்புகின்றன; லெபனிய நாடு முழுவதும் அமெரிக்க இஸ்ரேலிய காப்பு நாடாக குறைமதிப்புப் பெறும் வரை இது தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சிகள் உட்பட, அமெரிக்க ஆளும் உயரடுக்கை பொறுத்தவரையில் இந்தக் குற்றம் சார்ந்த நடவடிக்கை, ராஜீய முறையிலோ, பொருளாதார மிரட்டல் மூலமோ, நாச வேலையினாலோ, போரினாலோ, எந்த வழியிலும் சிரிய மற்றும் ஈரானிய ஆட்சிகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

இறுதி நோக்கம் மத்திய கிழக்கையும் மத்திய ஆசியாவையும், அதன் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான காலனியாக ஆக்கி, இஸ்ரேல் அங்கு வாஷிங்டனுடைய இளைய பங்காளியாகவும், தாக்கும் இராணுவ நாயாககவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

டைர் மற்றும் பல அருகிலுள்ள ஊர்களில் இருந்து பொறுப்பற்ற தாக்கதல்கள் இருந்து தப்பி கானாவில் தஞ்சம் தேடி வந்த இப்பெரும்பான்மையினர் மீதான, ஆதரவற்ற சாதாரண மக்கள்மீதான இஸ்ரேலிய தாக்குதல், ஒரு மிருகத்தனமான செயல் என்பது மட்டுமின்றி கோழைத்தனமானதும் ஆகும். குறைந்த ஆயுதங்களை கொண்டிருந்த போதிலும்கூட, ஹெஸ்பொல்லா போராளிகள் பின்ட் ஜெபைலில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மீது கடுமையான, தைரியமான முறையில் நடத்திய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இஸ்ரேல் தன்னுடைய படைகளை ஹெஸ்பொல்லாவின் கோட்டையான அவ்விடத்தில் இருந்து பின்வாங்கியதற்கு மறுநாள் இது நடைபெற்றது. அந்த இழிவிற்கு விடையிறுக்கும் வகையில்தான் இஸ்ரேல் தாக்குதலை ஆயுதமற்ற சிவிலிய மக்களை கொல்லுவதற்கு முடுக்கி விட்டது.

கானாவில் உள்ள வீடுகளை அழிப்பது என்பது வேண்டுமேன்றே கையாளப்படும் உத்தி என்பது இஸ்ரேலின் சொற்களாலும் செயற்பாடுகளாலும் நன்கு தெளிவாகிறது. கடந்த செவ்வாயன்றுதான் இஸ்ரேல், தெற்கு லெபனானில் ஒரு ஐ.நா.கண்காணிப்பு நிலையத்தை அழித்தது; அதையொட்டி ஐ.நா.பார்வையாளர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாகும். கடந்த வார இறுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரிசபையின் உறுப்பினர் ஒருவர், "தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களையும் தேவையானல் தீக்கிரையாக்க வேண்டும். வெற்றி என்ற இலக்கில் இருந்து இஸ்ரேலியப் படை தொலைவில் உள்ளது; நாம்தான் விளையாட்டு விதிகளை மாற்றியமைக்க வேண்டும்...." என்றார்.

பிரிட்டனின் Observer ஏடு ஞாயிறன்று ஒரு தகவலை கொடுத்தது; இதில் இஸ்ரேல் எப்படி சர்வதேச போர்விதிகளை முறையாக மீறியுள்ளது என்பதற்கான சான்றுகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. இந்த செய்தியேடு இக்கொள்கையின் நோக்கம் லெபனானின் தென்பகுதி மக்களற்றதாக மாறவேண்டும் என்றுள்ளது எனக்கூறியுள்ளது.

"லெபனிய மருத்துவப் பணியாளர்கள் கூறியவாறு, ஒரு இஸ்ரேலிய விமானத்தாக்குதல் ஒரு பெண்ணையும் அவருடைய ஆறு குழந்தைகளையும் தெற்கத்திய கிராமமான Nkeiriya வில் கொன்றது என்றதும், பெய்ரூட்டில் இருந்த மேற்கத்திய நாட்டின் தூதர்கள் இத்தகைய இஸ்ரேல் தாக்குதலால் தாங்கள் "பெருந்திகைப்பு" அடைந்ததை ஒப்புக் கொண்டனர். ஆம்புலன்ஸ் வண்டிகள், அகதிகளின் பெரும் எண்ணிக்கைகள், சிவிலிய வீடுகள், உள்கட்டுமானம், ஐ.நா.காவல் நிலையங்கள் என்று அனைத்துமே தாக்கப்படுகின்றன; சிவிலியன்கள் பொஸ்பரஸ் வேதிப்பொருட்களால் காயங்களையும் பெற்றிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன, என்று ஒப்சேர்வர் எழுதியது..

"சாதாரண குடிமக்கள் வசிப்போர் பகுதிகளில் மிகப்பரந்த அளவில் தொகுப்புக் குண்டுத்தாக்குல்கள் நிகழ்த்தப்பட்டதையும் காட்சிப் படங்கள் தெரிவிக்கும் வகையில் வெளிவந்துள்ளன. இஸ்ரேலுக்கு குறைந்தது 100 GBU-28 "நிலவறைத் தகர்ப்புக் குண்டுகளை" அமெரிக்கா வழங்கியுள்ளது பற்றிய கவலையும், அவற்றில் குறைந்த அடர்த்தி உடைய யூரேனிய வெடிமருந்துகள் லெபனானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது பற்றிய கவலையும் உயர்ந்துள்ளன.

"இஸ்ரேல் வேண்டுமென்ற தெற்கில் ஒரு பெரும் பகுதியை மக்கள் அரவம் இல்லாமல் செய்துவிட வேண்டும் என முயற்சிக்கிறது என்று வந்துள்ள தகவல்களைப் பற்றி Mair (Lucy Mair என்னும் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தள ஆய்வாளர்), "இதைப் பற்றி பேசுவதற்கே கஷ்டமாக உள்ளது; ஆனால் இத்தகைய மாபெரும் இடம் பெயர்தல் இருக்கையில், மக்கள் மீண்டும் வருவது பற்றிய நிலைமையை கற்பனை செய்வது கூடக் கடினமாகும்" என்றார்.

சாதாரண மக்களை படுகொலை செய்வது என்பது இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திற்கு புதிய செயல் அன்று. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, லெபனானில் மிகப் பெரிய இஸ்ரேலிய ஊடுருவல் நடைபெற்றபோது, இஸ்ரேலிய பீரங்கிப் படை ஐ.நா. தளம் ஒன்றை இதே கிராமத்தில், இந்த வாரக் கொடுமை நடைபெற்ற இதே இடத்தில் --கானாவில்--- தாக்குதல் நடத்தி அழித்தது. அத்தளத்தில் தஞ்சம் அடைந்திருந்த 100 குடிமக்களுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தகைய வழிவகைகள்தான் சியோனிச அரசு தோன்றிய காலத்தில் இருந்து கடைச்சரக்காக இருந்து வருகிறது. அரேபியர்களை அவர்களுடைய கிராமங்கள், பண்ணைகள், இல்லங்களில் இருந்து விரட்டி இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் நிலப் பரப்பை அதிகரிக்க இத்தகைய வன்முறை, பயங்கரவாத முயற்சி பல முறையும் சாதாரண மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1947ல் பாலஸ்தீன பிரிவினை பற்றிய ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானம் இயற்றப்பட்ட பின், இஸ்ரேலிய அரசியல் தலைமையும் அதன் இராணுவமும் பாலஸ்தீனிய கிராமங்களில் ஏராளமான படுகொலைகளை புரிந்து அங்குள்ள மக்கள் வெளியேறவும், ஐ.நா.விதித்துள்ள நிலப்பகுதி எல்லைகளை மீறிய முறையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யவும் செயலாற்றினர்.

ஒரு குறுகிய காலத்திற்குள் கிட்டத்தட்ட 700,000 பாலஸ்தீனியர்கள் நாடற்ற அகதிகளாக மாற்றப்பட்டனர்; அப்பொழுதில் இருந்து இஸ்ரேலிய கொள்கை அவர்கள் மீண்டும் வருவதை தடுத்து, இஸ்ரேலின் எல்லைகளை இன்னும் கூடுதலாக்குவதாகவும்தான் உள்ளது.

மத்திய கிழக்கில் தன்னுடைய முக்கிய கூட்டாளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சிறிதும் கொள்ளாமல், அமெரிக்க ஆளும் உயரடுக்கு, புஷ் நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேல் இப்பகுதியில் கொண்டுள்ள ஆக்கிரமிப்பிற்கான வேட்கையை, உலக மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனுடைய சொந்த ஏகாதிபத்திய வடிவமைப்புக்களை மேலும் முன்னெடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் கருதுகிறது.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டோர் அனைவருமே, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகள்தாம். அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணியாகும்.

See also :

லெபனான் போர்நிறுத்தத்தை எதிர்க்க புஷ், பிளேயர் சந்தித்து இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்

2006ம் ஆண்டு திருப்திப்படுத்துதல்: அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பா நிபந்தனையற்ற சரண் அடைதல்

Top of page