World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

War now, peace later: Israel's doves line up behind war

போர் இப்பொழுது, சமாதானம் பின்னர் : இஸ்ரேலின் புறாக்கள் போருக்கு ஆதரவு கொடுத்து நிற்கின்றனர்

பகுதி 1 | பகுதி 2

By Jean Shaoul
12 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

இது இஸ்ரேலின் "சமாதானம் இப்பொழுது" இயக்கம், லெபனான் மற்றும் காசாவில் ஓல்மெர்ட் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு போர்களை பற்றி கொண்டுள்ள அணுகுமுறை பற்றிய இரு-பகுதிக் கட்டுரையின் முதற் பகுதியாகும்.

இஸ்ரேலின் காசா மற்றும் லெபனான்மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு போர்களின் மிகவும் குறிப்பிடத்தக்க கூறுபாடுகளில் ஒன்று கடந்த காலத்தில் "புறாக்கள்" என்று கருதப்பட்ட இயக்கங்களுக்கும் இப்பொழுது "பருந்துகள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையாகும்.

"சமாதானம் இப்பொழுது" என்னும் இயக்கம் ஜூன் மாதத்தில் இருந்து ஹமாஸ் மீதும் பாலஸ்தீனியர்கள் மீதும் காசாவில் நடத்தப்படும் இஸ்ரேலின் பெரும் தாக்குதல்கள் பற்றி பெரும்பாலும் மெளனம்தான் சாதித்துள்ளது. லெபனானை பொறுத்தவரையில், ஹெஸ்பொல்லா ஜூலை மாதம் இரு இஸ்ரேலிய இராணுவத்தினரை சிறைப்பிடித்ததை தொடர்ந்து, "சமாதானம் இப்பொழுது" அமைப்பு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கும் (IDF) ஓல்மெர்ட்டின் அரசாங்கத்திற்கும் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது.

தன்னுடைய வலைத் தளத்தில் இதன் உறுப்பினர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் கோனெனுக்கு, இஸ்ரேலிய துருப்புக்கள் சிறைபிடிக்கப்பட்டதை எதிர்க்கும் உரிமை உண்டு எனப் பிரகடனப்படுத்துவதற்கு சென்றுள்ளனர் என்று விளக்கவும், சமாதானம் இப்பொழுது இஸ்ரேல் தன்னுடைய எல்லைகளை காக்கும் உரிமையை ஆதரிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமாதானம் இப்பொழுது, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவினால் செய்யப்படும் ஆத்திரமூட்டல்களைத்தான் இஸ்ரேல் எதிர்கொள்ளுகிறது என்னும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை எதிரொலித்துக் கூறுகிறது; இரண்டு அமைப்புக்களும் பயங்கரவாதக் குழுக்கள் என்று உத்தியோகபூர்வ இஸ்ரேலிய, அமெரிக்க வரையறைகளையும் ஏற்றுள்ளது. இங்கு ஒன்றும் நிலப்பரப்பு பற்றிய பிரச்சினைகள் இடரார்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறும் அது, ஆகையால் இஸ்ரேல் அரசின் இறையாண்மை மீதான தூண்டுதலற்ற நிலையில் வெளித் தாக்குதல்கள் என்று ஊறப்படுபவைகளுக்கு அரசாங்கத்தின் விடையிறுப்பு முற்றிலும் நியாயமே என்றும் கூறியுள்ளது.

1982 ஜூன் மாதம், ''சமாதானம் இப்பொழுது'' அமைப்பு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தை எதிர்த்தது; அப்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் போருக்கு எதிராக திரட்டப்பட்டனர். இதுகாறும் இல்லாத அளவிற்கு ---400,000 மக்கள்-- மெனச்செம் பெகினின் அரசாங்கம் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஏரியல் ஷரோன் ஆகியோருக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு சக்தி என்ற வகையில் அதன் கூட்டாளியான லெபனானின் பாசிச அமைப்பான பலாஞ்சிஸ்ட், 800 பாலஸ்தீனியர்களை சப்ரா மற்றும் ஷட்டில்லா அகதி முகாம்களில் படுகொலை செய்ததில் உடந்தையாக இருந்ததிலும் உதவியதிலும், அதன் பாத்திரத்திற்காக அதற்கு எதிராகவும் பங்கேற்ற, அந்த ஆர்ப்பாட்டத்தை அது ஒழுங்கு செய்தது. பல இஸ்ரேலிய வர்ணனையாளர்களும் பெகினையும், ஷரோனையும் போர்க்குற்றவாளிகள் எனவும் அமெரிக்கா இவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்றும்தான் கருதினர்.

1980களின் கடைசிப் பகுதியில், சமாதானம் இப்பொழுது அமைப்பு, 1967ல் இருந்து இஸ்ரேலினால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீது ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசிற்கு அழைப்பு விடுத்த முதல் பெரும் சக்தியாகும்; அதாவது இரு அரசுகள் என்று அழைக்கப்பட்ட தீர்வு; இதையொட்டி பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) மற்றும் யாசீர் அரஃபாத்துடனும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும் என்றும் கூறியது. தொழிற்கட்சியும் இந்தப் பதாகையை எடுத்துக் கொண்டு இக்கோரிக்கைகளை உள்ளடக்கிய 1993ன் துரதிருஷ்டவசமான ஓஸ்லோ ஒப்பந்தந்திலும் கையெழுத்திட்டது.

"சமாதானம் இப்பொழுது" அமைப்பு, சாதாரண குடிமக்களுக்கு எதிரான ஒரு தடையற்ற ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கும் அமைப்பாக மாறியுள்ளது, அதுவும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சர்வதேச உறவுகளை கட்டுப்படுத்தும் விதிகள் அனைத்தையும் மிதிக்கும் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்திருப்பது, இஸ்ரேலின் உழைக்கும் மக்களின் மகத்தான அரசியல் குழப்பத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த அமைப்பைத்தான் பலரும் பாலஸ்தீனிய, லெபனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் குற்றம் சார்ந்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கான தங்களுடைய எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும் தன்மையுடையதாக கருதியிருந்தனர்.

சமாதான அமைப்பு என்று அழைக்கப்படுவது போருக்கு தன்னுடைய ஆதரவை கொடுத்துள்ள நிலையில், இஸ்ரேலின் ஆயுதப்படைகள் நடத்திக் கொண்டிருக்கும் படுகொலைகள், அழிப்புக்கள் இவற்றால் பீதியடைந்தவர்கள் அரசியலில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அமைப்பு ஒன்றும் இல்லாமற் போய்விட்டது.

பெய்லினும் ஓஸும்

இஸ்ரேலின் பாராளுமன்றத்தில் உள்ள Meretz-Yachad கட்சியின் தலைவராக யோசி பெய்லின் உள்ளார்; இவர் சமாதானம் இப்பொழுது அமைப்புடன் மிக நெருக்கமாகவும் உள்ளார். ஒஸ்லோவில் PLO உடன் நடத்திய இரகசியப் பேச்சுக்களுக்கு இவர்தான் தலைமை தாங்கியிருந்தார். மே 2000த்தில் லெபனானில் இருந்து தொழிற்கட்சி அரசாங்கம் வெளியேறியபோது நீதித்துறை மந்திரியாக இவர் இருந்தார்; 2000த்தில் காம்ப் டேவிட்டிலும் 2001ல் டாபாவிலும் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகளின்போது இவரும் பங்கு பெற்றிருந்தார்; இதைத்தவிர 2003ல் ஜெனிவா உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

இவர் இப்பொழுது கதீமா-தொழிற்கட்சி அரசாங்கம் போரை நியாயப்படுத்தி பேசுவதைத்தான் எதிரொலிக்கிறார். சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை மீட்கவும், இஸ்ரேலிய குடிமக்களை காப்பதற்கும்தான் போர் ஆரம்பிக்கப்பட்டது என்று வாதிடுகிறார். லெபனானில் இருந்து முன்னர் படைகள் திரும்பப் பெறபட்டதற்கான தன்னுடைய காரணங்களை ஒட்டியே இப்பொழுதும் நடவடிக்கைகள் உள்ளன என்றும் வாதிடுகிறார்.

"என்னைப் போன்றவர்கள் லெபனானில் இருந்து படைகள் 2000த்தில் திரும்பப் பெற வேண்டும் என்ற இயக்கத்தை முன்னின்று நடத்தினோம்; அப்பொழுது அவர்கள் தொடர்ந்து வன்முறையை நமக்கு எதிராக பயன்படுத்தி நம்மை லெபனானில் இருந்து சுட்டால் என்ன ஆகும் என்று கேட்கப்பட்டோம்; அப்பொழுது நாங்கள் ஐ.நா. தீர்மானத்தின்படி லெபனானை விட்டு நீங்குகிறோம் என்று கூறினோம்; வன்முறையை எவரேனும் நமக்கு எதிராகக் கொள்வார்கள் என்றால் தடையின்றி நாமும் எதையும் செய்யலாம் என்றுதான் பொருள். எனவேதான் இப்பொழுது ஒரு கடினமான நிலையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அரசாங்கம் எதைச் செய்தாலும் நாம் குறைகூறிக் கொண்டிருக்க முடியாது; அதிலும் குறிப்பாக இஸ்ரேலின் பக்கத்தில் இருந்து எந்த ஆத்திரமூட்டலும் ஏற்படவில்லை என்ற நிலையில்."

தன்னை ஒரு விசுவாசமிக்க எதிர்க்கட்சியாளராக பெய்லின் காட்டிக் கொள்ளுகிறார்; அதாவது போர் இப்பொழுது வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்து, அதே நேரத்தில் இஸ்ரேலின் நீண்ட கால தேசிய நலன்களை காப்பதற்கும் நிதானமான செயற்பாடு தேவை என்பதைக் கூறுகிறார். ஆகஸ்ட் 9ம் தேதி ஹாரெட்சில் "சியோனிச இடதிற்கு ஒரு சோதனை" என்ற தலைப்பில் அவர் அறிவிப்பதாவது: "யூத மக்கள் ஒரு ஜனநாயக, மதசார்பற்ற நாட்டைக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்பதில் நாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்; அதில் உறுதியான யூதப் பெரும்பான்மை இருக்கும். எமது தேசிய நலன்கள் பாலஸ்தீனியர்கள், சிரியா மற்றும் லெபனானுடன் சமாதானப் பாதை வழிகளை நிறைவு செய்வதில்தான் உள்ளது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே உடன்பாட்டை தவிர வேறு மாற்று வழியும் கிடையாது... ஆனால் நீண்ட காலம் முன்னரே சமாதானம் அடையப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எங்களிடம் உள்ளது; இஸ்ரேல் அத்தகைய நிலைக்கு முக்கியமான பங்கைத்தான் கொண்டு செயல்பட்டது; அப்படியும் சமாதானம் வரவில்லை என்பதற்காக எமது விரோதிகள் நடத்தை அனைத்தும் எங்களுடைய பார்வையில் ஏற்பதற்கில்லை."

"காசாவில் இராணுவ மூலம் விடையிறுப்புக் கொடுத்தது எங்கள் பார்வையில் நியாயமானதே; லெபனானில் செய்வதும் அதேபோல் நியாயமானதே ஆகும்" என்று அவர் தொடர்ந்து எழுதுவதாவது: "தொடக்கத்தில் இஸ்ரேல் எதிர்பார்க்காத நிலைமைகளில் இஸ்ரேல் நழுவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையைத்தான் இப்போர் கொடுத்துள்ளது என்ற எங்களுடைய பங்கினை காண்கிறோம். மேலும் இஸ்ரேலிய சமுதாயத்தின் மதிப்பீடுகளுக்கு எதிரான செயல்கள் விளைவதின் எச்சரிக்கையையும் காண்கிறோம்; அதே நேரத்தில் நாம் போர்நிறுத்தம் பற்றி விரைவில் பேச்சு வார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது."

1978ல் சமாதானம் இப்பொழுது இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான அமோஸ் ஓஸ் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று வாஷிங்டனின் புதிய பழமைவாதிகளின் சீற்றம் நிறைந்த கருத்துக்களில் இருந்து பிரிக்க முடியாத தன்மையைத்தான் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய துருப்புக்களை ஹெஸ்பொல்லாவினர் "கடத்தியது", ஒரு "இஸ்ரேலிய பகுதிக்குள் தீய, தூண்டுதல் இல்லாத நிலையில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இம்முறை இஸ்ரேல் லெபனான் மீது படையெடுக்கவில்லை. அன்றாட துன்பப்படுத்துவதில் இருந்தும் எங்கள் பேரூர்கள், கிராமங்கள் இவற்றை குண்டுவீச்சில் இருந்து காப்பதற்கும், ஹெஸ்பொல்லா எங்கு பதுங்கியிருந்தாலும் அதை நசுக்குவதற்காகவும்தான் இந்த நடவடிக்கை" என்று அவர் எழுதியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகிறார்: "இஸ்ரேலிய சமாதானம் இயக்கம் தற்காப்பு என்ற எளிய முறையான இஸ்ரேலிய முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்; அதுவும் இந்த நடவடிக்கை பெரும்பாலும் ஹெஸ்பொல்லாவை இலக்கு கொண்டு தொடரப்பட்டால் இயன்றளவு அவ்வாதரவு வேண்டும்; சில நேரங்களில் ஹெஸ்பொல்லா ஏவுகணைத் தாக்குதல் நடத்துபவர்கள் லெபனிய குடிமக்களை மணல் மூட்டைகளைப் போல் பயன்படுத்துவதால் லெபனிய குடிமக்களும் இலக்காகின்றனர் (அதைத் தவிர்ப்பது எளிதல்ல.) " (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது)

ஈரான் மற்றும் சிரியாவின் ஆதரவு பெற்றுள்ள ஒரு பயங்கரவாத வலைப்பின்னலுக்கு எதிராக இஸ்ரேல் போராடிக் கொண்டிருக்கிறது என்ற புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு ஓஸ் ஒப்புதல் கொடுக்கிறார். "ஹெஸ்பொல்லாவின் ஏவுகணைகள் ஈரான் மற்றும் சிரியாவால் அளிக்கப்படுகின்றன; இவற்றை மத்திய கிழக்கில் அனைத்து சமாதான துவக்க முயற்சிகளையும் தகர்க்க வேண்டும் என்ற உறுதி பூண்ட நாடுகள்" என்று அறிவித்துள்ள இவர் மேலும் கூறுவதாவது: "இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மையான போர் ஹாபாவிற்கும் பெய்ரூட்டிற்கும் அல்ல; சமாதானத்தை நாடும் நாடுகளான இஸ்ரேல், லெபனான், எகிப்து, ஜோர்டான், செளதி அரேபிய ஒருபுறமும் ஈரான் மற்றும் சிரியாவில் எரியூட்டப்பட்டுள்ள தீவிர வெறியுடைய இஸ்லாம் மறுபுறமும் என்றுதான் உள்ளது."

லெபனானை அழிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் உண்மை நோக்கங்கள் பற்றி ஓஸ் நன்கு அறிவார். 1982ல் அவர் எழுதியுள்ளபடி, அவ்வாண்டின் இஸ்ரேலிய படையெடுப்பு "எமது நிலைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதை விரட்டுவதற்காக அல்ல; இடையூறு கொடுக்கும் தன்மையுடையதை அகற்ற வேண்டும்; இப்பகுதியின் வரைபடத்தையும் அதிகம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இருந்தது."

பெரெட்ஸ்: போருக்குப் பொறுப்பு கொண்டுள்ள "புறா"

சமாதானம் இப்பொழுது அமைப்பின் இழிசரிவை அமிர் பெரெட்ஸைக் காட்டிலும் அதிகமாக எவரும் உருவகப்படுத்தி நிற்கவில்லை; இவர் முன்னாள் இடது கருத்துக்கள் பேசும் தொழிற்சங்க தலைவராக இருந்தவர்; இப்பொழுது தொழிற் கட்சியின் தலைவர்; நாட்டின் பாதுகாப்பு மந்திரியாக இருப்பவர். "இப்பொழுது சமாதானத்தால் நடத்தப்பெறும் முதல் போர்" என்ற தலைப்பில் ஹாரெட்ஸ் சுட்டிக்காட்டியபடி, பெரெட்ஸ்தான் இப்போரை கட்டமைப்பவர், தலைமைப் பொறியாளர் மற்றும் முக்கிய பதாகை ஏந்துபவர்" என்று குறிப்பிட்டுள்ளது.

இப்பொழுது சமாதான அமைப்பின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அவர், 1980 களில் பெய்லினுடன் பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற எட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகளிலும் ஒருவராக இருந்தார்.

ஓராண்டிற்கும் சற்று குறைவான காலத்தில், ஒஸ்லோ ஒப்பந்தத்தை கட்டமைத்து இருந்த ஷிமோன் பெரஸிற்கு எதிராக தொழிற் கட்சியின் தலைவராக, ஏரியல் ஷரோனின் லிக்குட் கட்சியுடன் கூட்டணிப் பங்கை தொழிற்கட்சி கொண்டதில் இகழ்வுற்ற கட்சி உறுப்பினர்களால் மாற்றீடாக பெரெட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனியர்களை மிருகத்தனமான அடக்குதல், "ஒருதலைப்பட்ச பிரிவினை" என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட மேற்குக்கரையில் நடத்திய நிலப்பறிப்பு, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகள் போன்ற ஷரோனின் செயற்பாடுகளுக்கு, தொழிற்கட்சி தலைவர்கள் அரசியல் மூடிமறைப்பு ஒன்றைக் கொடுத்தனர்.

பாலஸ்தீனியர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகள், இஸ்ரேலுக்குள் எழுச்சி பெற்று வரும் சமூக சமத்துவின்மையை களையும் நடவடிக்கைகள் எடுத்தல் என்ற இரட்டை உறுதிமொழிகளின் அடிப்படையில் பெரட்ஸ் தலைமையிடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். தொழிற்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, பெரசின் ஆதரவுடன் ஷரோனை லிக்குட்டை உடைத்து ஒரு புதிய கட்சி -- கதீமாவை -- நிறுவுதலை அறிவிக்க ஷரோனுக்கு உந்துதலைக் கொடுத்தது; இக்கட்சி ஷரோனின் விரிவாக்க செயற்பாடுகளை முன்கொண்டுசெல்ல நிறுவப்பட்டதாகும்.

ஆனால் கதீமா அதிக இடங்களை கொண்ட ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் இருந்த கட்சியாக வெளிவந்த கடந்த மார்ச் பொதுத் தேர்தல்களை அடுத்து, மே மாதத்தில் பெரெட்ஸ் தொழிற் கட்சியை மீண்டும் கதீமாவுடன் கூட்டணிக்கு இட்டுச் சென்றார்; அப்பொழுது கதீமா எகுட் ஓல்மெர்ட்டின் தலைமையில் வந்தது; பெரெஸ், ஓல்மெர்ட்டின் துணைத் தலைவராக இருந்தார்.

பாதுகாப்பு மந்திரி பொறுப்பை ஏற்க உடன்பட்ட இவருடைய முதல் நடவடிக்கைகள் பாலஸ்தீனிய விடுதலைக்கான மக்கள் முன்னணியின் ஐந்து உறுப்பினர்களை படுகொலை செய்தல் மற்றும் காசாவில் பாலஸ்தீனியர்களின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துதல் என்று ஆயிற்று. வாஷிங்டனுடைய முழு ஆதரவை அடுத்து, நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த லெபனான் மீதான வான்வழி, கடல்வழி, தரைவழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்; இருப்புப் படை வீரர்களுக்கும் அழைப்பு விடுத்து, இஸ்ரேலை போர்க்கோலம் கொள்ள வைத்தார்.

Yediot Aharonot உடன் இணைந்துள்ள கட்டுரையாளரான Nahum Barnea பெரெட்சின் பங்கு பற்றி பொருத்தமாக சுருக்கி கூறியுள்ளார். ஒரு பரந்த தளத்தை உடைய அரசாங்கம், ஓல்மெர்ட்டின் கதீமாக் கட்சியினால் வழிநடத்தப்படுவது, தொழிற் கட்சியின் தலைவர் அமிர் பெரெட்ஸ் பாதுகாப்பு மந்திரியாக இருப்பது, "எவர் மேலாவது இராணுவத் தாக்குதலை தொடக்குவதை எளிதாக்குகிறது." என்று அவர் எழுதியுள்ளார்.

சியோனிசத்தை ஏற்றல்

சமாதானம் இப்பொழுது அமைப்பானது போருக்கு வெளிப்படையாக வாதிடும் அமைப்பாகப் போய்விட்டது, குஷ் ஷலோம், மற்றும் கம்யூனிஸ்ட், அரேபியக் கட்சிகளை போரை எதிர்க்கும் நிலையை கொண்டுள்ளவையாக முன்வைத்துள்ளது. லெபனானில் போர் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் போர் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், கண்காணிப்பும் நடத்துபவர்களின் எண்ணிக்கை முதலில் மிகவும் குறைந்து இருந்தாலும், இப்பொழுது ஆயிரக்கணக்கில் ஈர்க்கின்றன. ஆகஸ்ட் 5ம் தேதி போர்வெறியும், அணிவகுப்போர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும்கூட டெல் அவிவில் 10,000 பேர் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

"யூதர்களும் அரேபியர்களும் விரோதிகளாக மறுக்கின்றனர்!", "அமெரிக்கப் பணிக்காக நாங்கள் கொல்லவும் மாட்டோம், கொல்லப்படவும் தயாரில்லை!" "குழந்தைகள் பெய்ரூட்டிலும் ஹைபாவிலும் வசிக்க விரும்புகின்றன!", "பெரட்சே, பெரட்சே இராஜிநாமா செய், சமாதானம் இன்னும் அதிகமாகத் தேவை!", "ஒரு மில்லியன் அகதிகள், இது ஒரு போர்க்குற்றம்!", "ஓல்மெர்ட், பெரெட்ஸ் மற்றும் ரமோனே, லெபனானை விட்டு நீங்குக!" என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

ஆனால் போருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு, பழைய சமாதான முறை ஏன் இத்தகைய வியத்தகு இழிசரிவிற்கு மாறியது என்பதை புரிந்து கொள்ளுவது அவசியமாகும். இப்பொழுது சமாதானம் அமைப்பு போர் நடக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு காரணம் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பூசல் பற்றிய வரலாற்று, வர்க்கப் பகுப்பாய்வை அது நிராகரித்ததை ஒட்டித்தான் அறியமுடியும்; அதேபோல் சியோனிச திட்டத்தை தேசிய வகையில் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பதின் அடிப்படையை புரிந்து கொண்டால்தான் முடியும்.

லெபனானுக்கு எதிரான போரில் நிலப்பரப்பு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்ற இதன் கூற்று, ஹெஸ்பொல்லாவின் தூண்டுதல்களுக்குத்தான் இஸ்ரேல் விடையிறுத்துக் கொண்டிருக்கிறது என்ற அறிக்கைகளின் அபத்தத்திற்கு ஒப்பானதாகும். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் நடத்தும் வன்முறையையும் அவர்களுடைய நிலப்பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்தாலும், மீண்டும் மீண்டும் கடந்த மாத இஸ்ரேலிய படையெடுப்பிற்கு முன்பே பலமுறை இவர்கள் தூண்டுதல் கொடுத்துள்ளதற்கு தக்க சான்றுகள் உள்ளன. உதாரணமாக, லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால படைகளின் இடைக்கால அறிக்கைகள் இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் லெபனானின் வான்வழி உரிமைகள் கிட்டத்தட்ட அன்றாட அடிப்படையில் 2001ல் இருந்து 2003 வரையிலும், பின் 2006 வரையிலும் தொடர்ச்சியாக மீறின என்றும், பல நேரமும் மக்கள் நிறைந்துள்ள பகுதிகளில் ஒலித் தடையை மீறியது என்றும் கூறியுள்ளது.

நிலப்பரப்பு பிரச்சினைகளை பொறுத்த வரையில், சியோனிஸ்டுகள் நீண்ட காலமாகவே லெபனானில் ஆர்வம் கொண்டிருந்தனர்; இது 1938ம் ஆண்டில் பென் குரியன், பின்னர் இஸ்ரேலின் முதல் பிரம மந்திரியாக 1948ல் வரவிருந்தவர், லிட்டனி ஆற்றின் வடபகுதி வரை உள்ள தெற்கு லெபனானை உள்ளடக்கிய இஸ்ரேல் அரசு வேண்டும் என்று கருதியிருந்தார்.

தொடரும்......

Top of page