World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

July4th 2006: The state of US democracy 230 years after the American Revolution

ஜூலை 4, 2006 : அமெரிக்க புரட்சியின் 230 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை

By Bill Van Auken
4 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

சுதந்திர பிரகடனம் என்னும் ஆவணத்தின் 230வது ஆண்டு நிறைவை இந்த ஜூலை 4ம் தேதி குறிக்கிறது; அந்த ஆவணமோ காலனித்துவம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு புரட்சியை தோற்றுவித்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. அறிவொளிமிக்க கருத்துக்களான ஜனநாயகம், சமத்துவம், சட்டத்திற்கு கட்டுப்பட்ட அரசு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய நாடு தோற்றுவிக்கப்பட்டு, 13 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த பிரெஞ்சு புரட்சியை முற்கூட்டி காட்டி பல தலைமுறைகளுக்கு பின்னரும் சர்வதேச ரீதியாக எதிரொலித்து கொண்டிருந்தது.

1776ல் கையெழுத்திடப்பட்ட ஆவணம் ஆழ்ந்த சுதந்திர தன்மையை கொண்டு, அமெரிக்கா மட்டுமின்றி எல்லா இடங்களிலும் மக்கள் உரிமையை பிரகடனப்படுத்தி அவர்களுடைய "பறிக்கமுடியாத உரிமைகளை" மிதிக்கும் அரசாங்கங்களை அகற்றுவதற்கு புரட்சிகர வழிவகைகளை கொள்ளலாம் என்று பறையறிவித்தது.

பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிரான எழுச்சிக்கு தலைமை வகித்தவர்கள் தங்கள் செயற்பாடுகளின் சர்வதேச உட்குறிப்புக்கள் பற்றி முழு உணர்வு கொண்டிருந்ததுடன், பிரகடனத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் அறிந்திருந்தனர். தோமஸ் ஜெபர்சன், ஜோன் ஆடம்ஸிற்கு எழுதியது போல் (இருவருமே துயரந்தோய்ந்த, நெறியான வரலாற்று சமகால நிகழ்வில் சுதந்திர பிரகடனத்தின் 50வது ஆண்டு நிறைவன்று மரணமடைந்தனர்) "1776 ஜூலை 4ம் தேதி எரியூட்டப்பட்ட கொழுந்து உலகெங்கிலும் பரந்துள்ளது; இதை சர்வாதிகார இயந்திரத்தின் வலுவற்ற தன்மை அணைக்க முடியாது; மாறாக, இவை அந்த இயந்திரங்களையும் அவற்றிற்காக பணிபுரிபவர்களையும் தீக்கிரையாக்கிவிடும்."

அறிவுவொளி சான்ற காலத்தின் உயர் இலக்குகளினாலும் மற்றும் அது அறியாமை, சுரண்டல், சமத்துவமற்றதன்மை ஆகியவற்றின்மீது கொண்டிருந்த பெரும் இகழ்வினாலும், சுதந்திரப் பிரகடனம் ஆக்கம் பெற்றிருந்தது. இத்தகைய ஜனநாயக உயர் இலக்குகள், அதுவும் அவை அபிவிருத்தியடைந்த குறிப்பிட்ட சமூகப் பொருளாதார வடிவமைப்பான 18ம் நூற்றாண்டின் அமெரிக்க முதலாளித்துவ சொத்துரிமை உறவுகள் மற்றும் மனிதர்களை வாங்கி விற்ற அடிமை முறையினுள் அவை கொண்டிருந்த இயல்பான மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை மார்க்சிச வாதிகள் நன்கு அறிவர். ஆயினும்கூட பிரகடனத்தின் ஆரம்ப பத்திகளில் உள்ள ஜனநாயக உள்ளடக்கமும், உலகந்தழுவிய முறையில் கொண்டிருந்த முக்கியத்துவமும் மறுக்க முடியாதவையாகும்.

"அனைத்து மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளனர், சில மாற்றத்தக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு படைப்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றுள் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான விருப்பு என்பவையும் அடங்கும் என்ற உண்மைகள் இயல்பான நிரூபணத்துடன் கூடியவை என்று நாங்கள் உறுதியாகக் கொள்ளுகிறோம்; இந்த உரிமைகளை காப்பதற்கு மனிதர்களிடையே அரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன; ஆளப்படுபவர்களிடம் இருந்து நியாயமான அதிகாரங்களை அவை பெறுகின்றன -- எந்த வகை அரசாங்கமும் இந்த இலக்குகளை அழிக்கும் வகையில் இருக்குமானால், அப்பொழுது அதை மாற்றுவதற்கும், அகற்றுவதற்குமான உரிமை, மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவி அதன் அடிப்படையை அத்தகைய கோட்பாடுகளைக் கொண்டு வடிவமைப்புக் கொடுத்து தங்கள் பாதுகாப்பு, மகிழ்ச்சியை மீண்டும் கொண்டுவரும் அதிகாரம் மக்களுக்கு உண்டு."

இத்தகைய வார்த்தைகளை கொண்டுள்ள ஆவணம் ஒன்று இன்றைய அமெரிக்க காங்கிரசில் இரு பிரிவுகளிலும் நிறைவேற்றி ஒப்புதல் பெறும் அல்லது இப்பொழுது வெள்ளை மாளிகையில் இருப்பவருடைய தடுப்பு அதிகாரத்திற்கு தப்பிவிடும் என்று எவரேனும் உறுதியாகக் கூறமுடியுமா? இப்பொழுது அமெரிக்க அரசாங்கத்தை நடத்துபவர்களின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தின் முழுப் பொருளுரையும் 1776ம் ஆண்டு உயர் இலக்குகள் மற்றும் கொள்கைகளை முற்றிலும் நிராகரிக்கும் தன்மையைத்தான் கொண்டுள்ளன.

சுதந்திரப் பிரகடனத்தின் பெரும்பகுதி மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிரானது; சிறு திருத்தம்கூட இல்லாமல் அவை இப்பொழுதுள்ள குடியரசுக்கட்சி அரசாங்கத்திற்காகவும் அதன் போர்க்குற்றங்களுக்கு கூட்டாளியாக உள்ள ஜனநாயகக் கட்சி உடந்தையாளர்களுக்கு எதிராகவும் எடுத்துக் கொள்ளப்படலாம்; அல்லது தங்கள் நாட்டின் மீது ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர்களை எதிர்க்கும் ஈராக்கியர்களின் செயல்களை நியாயப்படுத்தும் அரசியல் ஆவணமாகவும் கொள்ளப்படலாம்.

பல விஷயங்களுடன் பழைய பிரிட்டிஷ் அரசர் "பொதுமக்களின் அதிகாரத்திற்கு மேலாகவும் சுயாதீனமாகவும் இராணுவ அதிகாரத்தை ஆக்கும் செயல்களைச் செய்தார்" என்று குற்றம் சாட்டப்பட்டார். இந்தத் தவறான போக்கு வாஷிங்டனில் உள்ள நிர்வாகத்தின் தனி முத்திரையாக உள்ளது; தொடர்ந்து தன்னுடைய முன்னுதாரணமில்லாத வகையில் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு, இதை நியாயப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் "தலைமைத் தளபதி" என்ற அந்தஸ்து இடமளிக்கிறது என்றும் கூறுகிறது.

பிரிட்டிஷ் முடியரசர் "ஏராளமான இராணுவப் படைகளை எங்களுள் நிலைநிறுத்தியுள்ளார்; இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் மீது அவர்கள் நடத்தும் குற்றங்கள் பற்றி தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்குப் போலி விசாரணையையும் நடத்துகிறார்" என்று பிரகடனம் குற்றம் சாட்டுகிறது.

பிரகடனம் தொடர்கிறது: "அவர் எங்களுடைய கடலை கொள்ளையிடுகிறார், கடற்கரையோரப்பகுதிகளை அழித்துவிட்டார், எங்களுடைய நகரங்களை தீக்கிரையாக்கி விட்டார், எங்கள் மக்களுடைய வாழ்வை அழித்துவிட்டார்.

"இப்பொழுதும் அவர் ஏராளமான வெளிநாட்டு கூலிப்படைகளை கொண்டுவந்து இறப்பு, பெரும் நாசம், கொடுங்கோன்மை செயற்பாடுகளை முழுமையாக்க அனுப்பிக் கொண்டிருக்கிறார்; இவை அனைத்துமே மிகுந்த காட்டுமிராண்டி காலத்தில்கூட இணையாக காணமுடியாத வகையில் தொடங்கிவிட்டன; ஒரு நாகரிகமடைந்த நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு முற்றிலும் தகுதியற்ற செயல்களாகும்"

"சூறையாடுதல்", "இறப்புக்கள்", "பெரும் நாசம்", "கொடுங்கோன்மை", "கொடூரம்", "ஏமாற்றுத்தனம்" என்று ஒவ்வொரு சொல்லும் இன்னும் கூடுதலான சக்தியுடன் ஈராக்கின்மீதான வாஷிங்டனுடைய மிருகத்தனமான படையெடுப்புக்கும் ஆக்கிரமிப்பிக்கும் பொருந்தும்.

அமெரிக்க அரசாங்கத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் காலனித்துவவாதத்திற்கு எதிரான புரட்சி நடந்து இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க அரசாங்கம் ஈராக்கின் மக்களை அடிமைப்படுத்தும் மற்றும் அந்நாட்டின் எண்ணெய் வளத்தையும் அபகரிக்கும் நோக்கத்தையும் கொண்ட காலனித்துவ போர் ஒன்றை நடத்திக் கொண்டு வருகிறது.

ஜோர்ஜ் மன்னர், தன்னுடைய பாதுகாப்புக்காகவும் இருக்கும் பேரரசை காப்பதற்கும் பிரிட்டிஷ் என்று நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், மக்கள் மீது தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளப் போரிடுகிறேன் என்றாவது வாதிட முடியும்.

இதற்கு மாறாக ஈராக்கில் ஆபத்தான அமெரிக்க காலனித்துவ செயல், இல்லாத பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள் பற்றிய பொய்கள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய பொய்களின் அடிப்படையில், தூண்டதல் இன்றி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புப் போராகும். தவிர்க்கமுடியாமல், இது அத்தகைய தலையீடுகளில் தொடர்புடைய அனைத்து கொடூரங்கள், குற்றங்களையும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது; இப்பொய்களின் அடிப்படையில் கொல்லவும் கொல்லப்படவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள படையினர் இன்னும் கூடுதலான மிருகத்தன்மையைக் கொண்டுள்ளனர்; இதன் விளைவு தொடர்ச்சியான, முடிவற்ற போர்க்குற்றங்களாகும். இந்தக் குற்றம் சார்ந்த செயற்பாடு அரசியல், ஒழுக்கநெறி பேரழிவாகக்கூட மாறிவிட்டது; அரசியல் கட்டமைப்பின் எந்தப் பிரிவும் இதை நிறுத்த முயலவும் இல்லை; நிறுத்தவும் முடியாது.

சுதந்திரப் பிரகடனம் பிரிட்டிஷ் மன்னர்மீது "எங்களுடைய பல வழக்குகளில் நடுவரை கொண்ட நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் நலன்களையும் பறித்துள்ளது", "கடலுக்கு அப்பால் போலிக்காரணங்களை காட்டி வெளியேற்றுகிறது" என்றும் குற்றம் சாட்டியது.

அமெரிக்க அரசாங்கம் தான் "எதிரிப் போராளிகள்" என்று நினைப்பவர்களை விசாரணையோ குற்றச்சாட்டுக்களோ இல்லாமல் காலவரையின்று அடைத்துவைக்கும் உரிமையைக் கொண்டுள்ளது எனக் கூறும்போதும், பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை வழமையாக "அசாதாரண முறையில் கைப்பற்றப்பட்டு" கடல் கடந்து விசாரணைக்கு என்று இல்லாமல், சிந்திரவதைக்கு அனுப்பிவைப்பதை காணும்போது மீண்டும் ஜோர்ஜ் மன்னருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் திக்கபிரமை அடையும் வகையில் தற்காலத்திய சூழலைக் கொண்டுள்ளன.

திங்களன்று நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த ஆழமான கருத்து உடைய கட்டுரை ஒன்றில் புரூக்லின் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியரான எட்வின் ஜி. பரோஸ், புரட்சிக் காலத்தில் நியூயோர்க் நகரத்தில் பிரிட்டிஷாரால் சிறையிலடைக்கப்பட்ட அமெரிக்கக் காலனிவாசிகளின் கதியை பற்றிக் குறிப்பிடுகிறார். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இழிவான நிலைமையின் காரணமாக 12,000 பேர் மடிந்து போயினர் என்றும், பலர் தற்காலிகமாக பொது, தனியார் கட்டிடங்களிலும், நியூயோர்க் துறைமுகத்தில் இருந்த உடைந்த கப்பல்களிலும், போதுமான உணவு, நீர் அல்லது சிறிதும் சுகாதாரமற்ற தன்மை இல்லாத வகையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்க எழுச்சியாளர்களை மிருகத்தனமாக நடத்தியதை பிரிட்டிஷ் முடியாட்சியால் "அவர்கள் வீரர்கள் அல்ல கிளர்ச்சியாளர்கள் எனக் காரணம் கூறி" நியாயப்படுத்தப்பட்டது; அவர்களை போர்க்கைதிகள் என்று வரையறுத்தால் அது அமெரிக்க சுதந்திரத்தை நடைமுறையில் அங்கீகரித்ததாக போய்விடும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க கைதிகளின் துன்பியலான விதி 1785ல் முதன்முதலாக சுதந்திரமடைந்த அமெரிக்காவிற்கும் பிரஷ்யாவிற்கும் இடையே போர்க்கைதிகள் மனிதத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் எனக்கூறிய ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது; இந்த ஆவணம்தான் ஜெனிவா உடன்பாட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

இத்தகைய ஒப்பந்தம் முன்னாலேயே இருந்திருந்தாலும் அது அமெரிக்க கைதிகளை காப்பாற்றி இருக்க முடியாது என்று பேராசரியர் பரோஸ் முடிவுரையாகக் கூறுகிறார். "இப்பொழுது அமெரிக்கா இருப்பது போல், அந்நாட்களில் பிரிட்டன் உலகின் உயர் சக்தியாக விளங்கியது; மனிதாபிமான முறையில் கிளர்ச்சி கைதிகளை மன்னர் ஜோர்ஜ் நடத்த விரும்பவில்லை என்றால், கொள்கையும் மனச்சாட்சியும்தான் அவரைத் தடுத்திட முடிந்திருக்கும்."

தன்னுடைய கருத்துக்களின் உட்குறிப்புக்களை விளக்க தேவையில்லை என்று வரலாற்றாளர் உணர்ந்தார் போலும். ஜெனிவா உடன்படிக்கையை மீறுவதற்கு ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "எதிரிப் போராளி" என்பதை பயன்படுத்துவதற்கு உள்ள சமாந்தரம், வாஷிங்டனுடைய "உலகந்தழுவிய பயங்கரவாதத்தின் மீதான போரில்" கைப்பற்றப்பட்டவர்களுக்கு சர்வதேசச் சட்டம் கோரும் குறைந்த பட்ச உரிமைகளை மறுப்பது, சித்திரவதையை நியாயப்படுத்துவது அனைத்துமே வெளிப்படையாகத்தான் உள்ளது.

"பறிக்கமுடியாத உரிமைகள்" என்னும் "வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிக்கான விருப்பு" பற்றி குறிப்பிட்ட பின்னர் நாட்டின் புரட்சிகர நிறுவனர்கள் உரிமைகள் சட்டத்தில் விளக்கிக் கூறி, தடையற்ற பேச்சுரிமை, மத உரிமை, செய்தி ஊடக உரிமை, கூடும் உரிமை, விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படக் கூடாது என்ற உரிமை, ஒருதலைப்பட்சமான சோதனைகள், சொத்துப் பறிப்புகள் கூடாது என்ற உரிமை ஆகியவை உறுதிபடுத்தவும் பட்டன.

இப்பொழுது அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் குண்டர்கள் இந்த நூற்றாண்டுக் கணக்கில் நீடித்துள்ள ஜனநாயக உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்; கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள் அனைவரையுமே மாபெரும் சட்ட விரோத ஒற்றுச் செயல்களுக்கு உட்படுத்தி அரசியல் அமைப்பின் நான்காம் திருத்தத்தையும் முற்றிலும் நிராகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி ஊடகம் இக்குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்தியதற்கு விடையிறுக்கும் வகையில் நிர்வாகம் அப்பட்டமான மிரட்டல் பிரச்சாரத்தை ஏவியுள்ளது; காங்கிரசில் உள்ள இதன் முக்கியக் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தனிப்பட்ட செய்தித் தாட்களை "தேசத்துரோகத்திற்கு" உட்படுத்தி குற்றம் சார்ந்த தடைகளையும் அவற்றின்மீது கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனர். "பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போர்" என்பதற்கு தீய காரணம் கற்பிக்கப்பட்டு 1776 உடன் பிணைந்த பல மற்றைய அடிப்படை உரிமைகளுடன் செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தையும் செயலற்றதாகச் செய்துவிட்டது.

அரசியல் கட்டமைப்பினுள் இருந்து எதிர்ப்பு ஏதும் இல்லாமல், ஒரு ஜனாதிபதிச் சர்வாதிகாரம், அரசியலமைப்பின் அமெரிக்கக் குடியரசு நிறுவியவர்கள் ஏற்படுத்தியுள்ள பரிசீலித்து கட்டுப்படுத்தும் முறைகள் அகற்றப்பட்டு அரசாங்கம் தன்னுடைய "நியாயமான அதிகாரங்களை ஆளப்படுபவர்களின் விருப்பத்துடன்" பெற வேண்டும் என்று சுதந்திரப் பிரகடனத்தில் பொறிக்கப்பட்டுள்ள கொள்கைக்கு நேர் விரோதமான முறையில், தோற்றுவிக்கப்படுகிறது.

காங்கிரஸும் அதிகார நிறைவேற்று பிரிவு ஜனநாயக உரிமைகள்மீது நடத்தும் தாக்குதலுக்கு அதிக உரம் கொடுக்கும் வகையில் அமெரிக்க அரசியலமைப்பை பிற்போக்கான, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திருத்தும் வகையில், ஓரினத் திருமணம் தொடங்கி கொடியை எரிப்பது குற்றம் என்பது வரை தண்டனைக்குட்படும் செயல்கள் எனக் கொண்டுவர உள்ளது.

மிகப் பிற்போக்கான உணர்வுகளுக்கு அழைப்புவிடும் வகையில், குடியரசுக் கட்சியின் வலது பிரிவு அமெரிக்க புரட்சியின் மதசார்பற்ற அஸ்திவாரங்கள், மத உரிமை, சமயத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறும் உரிமை என்று சுதந்திரத்தை வலியுறுத்தும் தன்மையின்மீதும் முழு அளவு தாக்கும் வகையை கொண்டு, முதல் திருத்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ள அரசாங்கத்திற்கும் திருச்சபைக்கும் இடையே பிளவு வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் கருத்திற்கு எதிராகவும் செயல்பட முன்வந்துள்ளது. மத நம்பிக்கைகளை சட்டமாக்கும் முயற்சிகளும், பூகோள வெப்பமடைதல் முதல் தனிக்கல (stem cell) ஆராய்ச்சி வரையிலும், பாலியல் மூலம் பரவும் வியாதிகளுக்கான மருத்துவம் உட்பட அறிவியல் வளர்ச்சியைக் குறைக்கும் வகையில் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

புரட்சியின் ஜனநாயக உயர் கருத்துக்களுக்கும், இன்றைய அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார எதார்த்த நிலைமைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு இதுகாறும் இல்லாத அளவிற்குத் தீவிரமாகியுள்ளது.

உயர் சிந்தனைக்கும் உண்மைக்கும் இடையே எப்பொழுதம் பெருகிவரும் பிளவின் அடித்தளத்தில் முன்னோடியில்லாத வகையில் ஒரு குறுகிய நிதிய பெருநிறுவன உயரடுக்கிற்கும் பெரும்பான்மையான மக்களான அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அதிகரித்துவரும் பெரும் இடைவெளி வந்துவிட்டது. குறுகிய நிதிய பெருநிறுவன உயரடுக்கோ இரு பெரும் கட்சிகளையும், அரசாங்கத்தின் அனைத்து அமைப்புக்களையும் கட்டுப்படுத்துகிறது; அமெரிக்க தொழிலாள வர்க்கம் நடைமுறையில் அரசியல்ரீதியாக உரிமையற்று உள்ளது.

பில்லியனர்களும், பல மில்லியன் உடையவர்களும் நிறைந்துள்ள ஆளும் உயரடுக்கு அரசாங்கத்தின் மீது தனக்கு இருக்கும் பிடியைப் பயன்படுத்தி சமூக இழப்புக்கள், சமத்துவமற்ற நிலை இவற்றைச் சீர்படுத்தும் அனைத்துக் கொள்கைகளையும் திட்டங்கள் மூலம் வறுமை ஒழிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை வேண்டும் என்பதை நிராகரிக்கிறது. அத்தகைய நடவடிக்கைகள் தனியாரின் தடையற்ற சொத்துக் குவிப்பிற்கு ஏற்கமுடியாத தடைகள் என்று நிராகரிக்கப்படுகின்றன. மாறாக சமூகத்தால் தோற்றுவிக்கப்படும் பேரழிவுகளை எதிர்கொள்ளுபவர்களை பில் கேட்ஸ், வாரன் பபே போன்றவர்களுடைய கொடை வள்ளல்களை நாடுமாறு கூறப்படுகின்றனர்.

அமெரிக்காவின் நிறுவன ஆவணங்களுடன் இன்றைய தடையற்ற சமூகப் பொருளாதாரச் சமத்துவத் தன்மையை சமரசப்படுத்த இயலாது. எதிரெதிர் முனையில் செல்வக் கொழிப்பும் வறுமையும் உள்ள நிலைமை சமூகப் பொருளாதார போராட்டங்களில் தங்கள் வெளிப்பாட்டை காணும்; பெரும் செல்வந்தர்களுக்காக நடத்தப்படும் அரசாங்கத்தில் இருந்து பெருகியளவில் விரோதப்படுத்தப்பட்டும், கோபமும் அடைந்து வரும் பரந்துபட்ட தொழிலாளர்கள் பெருமளவில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளுவர்.

ஜூலை 4, 2006ல் மீண்டும் சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள, அவர்களுடைய "பறிக்கமுடியாத உரிமைகளை" குறைக்க அல்லது "மாற்ற அல்லது இல்லாதொழிக்க" எந்த அரசாங்கமாவது முயலுமானால், அதற்கு பதிலாக "அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய" புதிய அமைப்பால் மாற்றீடு செய்துகொள்ளும் உரிமையையும் உறுதிப்படுத்தி நினைவு கூறுதல் மிகப் பொருத்தமாகும்.

அமெரிக்க உழைக்கும் மக்கள் தங்களுடைய இந்த உலகந்தழுவிய உரிமையைச் செயல்படுத்தி, உலகிலுள்ள அனைத்து தொழிலாளர்களுடன் இணைந்து ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி போர், வறுமை, ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு முடிவு கட்டி, ஒரு ஆளும் உயரடுக்கின் இலாப நலன்களுக்கு என்று இல்லாமல், பெரும்பாலான மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவும் நாள் வரும் என்று சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக எதிர்பார்க்கிறது.

Top of page