World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Rice begins Mideast tour to promote US-Israeli war aims

அமெரிக்க-இஸ்ரேலிய போர் நோக்கங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய கிழக்கு பயணத்தை ரைஸ் தொடங்குகிறார்

By Patrick Martin
25 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஹெஸ்பொலாவிற்கு எதிரான கூட்டு அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை வலுப்படுத்தும் மற்றும் அமெரிக்க குண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி லெபனானை பேரழிவிற்கு உட்படுத்தும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இன்னும் கூடுதலான கால அவகாசம் கொடுக்கும். நோக்கத்தின் முதல் கட்டமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் லெபனானில் உள்ள பெய்ரூட்டிற்கு திங்களன்று வந்து சேர்ந்தார்.

செய்தி ஊடகங்கள் கூறுவதுபோல் சியோனிச ஆட்சியை நிதானத்திற்கு கொண்டுவரும் செல்வாக்கை காட்டுவதற்காக ரைஸ் ஒன்றும் இஸ்ரேலுக்கு வருகை புரியவில்லை. மாறாக, புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் தர்க்கத்தை பின்பற்றி, லெபனானில் உகந்த நிலைமைகள் தோற்றுவிக்கப்படும் பொருட்டு ஜனாதிபதி பஷர் அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராக கூட்டு இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அழுத்தத்தை உக்கிரப்படுத்துவதற்கு தெற்கு லெபனானில் வன்முறையை தீவிரப்படுத்த இஸ்ரேலியருக்கு அழுத்தம் கொடுப்பார்.

அமெரிக்க கொள்கையின் உண்மையான காரணத்தை தவறிப் போய் குறித்துவிட்ட ரைஸ் லெபனானில் அவர் இறங்கியதும் "ஒரு புதிய மத்திய கிழக்கை" தோற்றுவிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் முற்படும் என்று அறிவித்தார். லெபனான் மீதான தாக்குதலுக்கு வாஷிங்டன் ஊக்கம் கொடுத்துள்ளதுடன், தேவையான ஆயுதங்களையும், சர்வதேச ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது; இதற்குக் காரணம் இப்போர் தீவிரமடைதல் என்பது ஈராக்கில் உள்ள மூலோபாய முடக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு வழியைக் காட்டும் என்பதுடன் சிரியா, ஈரான் இரண்டையும் வலுவிழக்கவும் செய்யும்.

பொறுப்பற்ற செயல்பாட்டின் தீவிரக் கூறுபாடும், நோக்குநிலை விலகலும் இந்த முன்னோக்கில் உள்ளன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் முரண்பாடுகள் வெளிப்படையானவை: ஈராக்கில் ஷியைட்டுக்களின் ஆதிக்கம் நிறைந்த அரசாங்கத்தை ஒருங்கிணைக்கும் வகையில் புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது; அதே நேரத்தில் லெபனானில் ஷியைட் தளத்தை கொண்டுள்ள ஹெஸ்பொல்லாவை தகர்த்துவிடும் முயற்சிகளிலும் அது இறங்கியுள்ளது; அத்துடன் ஈரானில் உள்ள ஷியைட் அடிப்படைவாத ஆட்சியாளர்களுடன் போருக்கும் தயாராகி வருகிறது.

அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள ஈராக்கிய பிரதம மந்திரியான நெளரி மாலிகி, ஹெஸ்பொல்லாமீது இஸ்ரேலியர் நடத்தும் தாக்குதல்களை பற்றி பலமுறையும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்; அமெரிக்க குண்டுவீச்சுக்கள், ஏவுகணைகள், அமெரிக்கா கட்டமைத்த விமானங்களில் இருந்து மழைபோல் தெற்கு லெபனானின் ஷியைட் மக்கள்மீது பொழிவதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் முகமாக ஷியைட் மதகுருமார்களின் முக்கிய பிரிவுகள் அவரைச் சந்தித்து அவருடைய திட்டமிடப்பட்டுள்ள வாஷிங்டன் பயணத்தை ஒத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முரண்பாடுகள் மக்கள் பார்வையில் இருந்து பெரிதும் தெரியாவகையில் அடிமைத்தனமான அமெரிக்க செய்தி ஊடகத்தால் வைக்கப்பட்டுள்ளன; ஆனால் வாஷிங்டனில் உள்ள அதிகாரபூர்வ வட்டங்களில் இவை நன்கு அறியப்பட்டுள்ளன; வெளியுறவுக் கொள்கை இயற்றுபவர்களுக்குள்ளேயே சில விமர்சனங்கள் இதையொட்டி எழுந்துள்ளன. கிளின்டன் நிர்வாகத்தில் முன்னாள் மத்திய கிழக்குப்பிரிவு வல்லுனராக இருந்த றொபேர்ட் மால்லே, ரைசின் பயணம் எவ்விதத்திலும் ஒரு ராஜீய முயற்சி எனக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்; ஏனெனில் புஷ் நிர்வாகத்தின் கருத்துப்படி இப்பூசலில் ஆறு பேர் -- இஸ்ரேல், பாலஸ்தீனிய அதிகாரம், ஹமாஸ், ஹெஸ்பொல்லா, சிரியா, ஈரான் -- உள்ளனர் மற்றும் அமெரிக்க அரசாங்கம் அவற்றுள் நான்குடன் பேசத்தயாராக இல்லை.

இதையும் விடக் கடுமையான மதிப்பீடு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) யால் செய்யப்பட்டுள்ளது: இவர் ஒரு புதிய மத்திய கிழக்கின் உதயம் எனப்பட்டுள்ள வனப்புரையை எள்ளி நகையாடியுள்ளார். ஜேர்மனிய செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் எச்சரித்ததாவது: "அது ஒன்றும் மகிழ்ச்சி தரும் முறைப்படுத்திக்கூறல் அல்ல. சில நேரம் பிரசவவலி சிசுவின் இறப்பில் முடிந்துவிடும். இந்த பிரசவ வலி உண்மையில் எதைத் தோற்றுவிக்க முற்படுகிறது என்பதை கண்டிப்பாக அறியவேண்டும். இல்லாவிடில் அது வெறும் ஊகமாகப் போய்விடும்; வரலாற்றுடன், ரஷ்ய அதிருஷ்ட சக்கரச் சூது விளையாடுவது போல் ஆகிவிடும். இவை அனைத்துமே மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு பேரழிவு என்ற முடிவை கூட ஏற்படுத்திவிடும்."

இப்பகுதியில் ரைஸின் முதலாவது நிறுத்தம் ஜெருசலேத்திற்கு அவர் செல்லும் வழியில் பெய்ரூட்டிற்கான அறிவிக்கப்படாத விஜயம் ஆகும். சிரியப் படைகளை லெபனானில் இருந்து திரும்பப்பெறுவதற்கான அமெரிக்க ஆதரவுப் பிரச்சாரத்தை அடுத்து, கடந்த ஆண்டு நிறுவப்பட்ட பிரதம மந்திரி பெளவட் சினியோராவின் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பது ரைசின் நோக்கமாகும். ஹெஸ்பொல்லாவை அழிப்பதை ஆதரிக்கும் லெபனிய அரசியல் சக்திகளில் எவ்வித கூட்டையும் ஒன்றாய்ச்சேர்த்து ஒட்டுப்போடுவதற்கு ரைஸ் முயன்று வருகிறார்.

லெபனிய மக்களுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்போர், இரு வாரங்களாக நடக்கும் நிலையில், நேரடி இராணுவத் தாக்குதல் தெளிவாகவே ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, எதிர்பாராமல் தரையில் இருந்து கடுமையான தடையையும், தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டுகளைப் பொழிந்தபோதிலும்கூட ஹெஸ்பொல்லா போராளிகள், வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ராக்கெட்டுக்கள் வீசுவதைத் தடுப்பதில் இதுவரை தோல்வி அடைந்தே வருகிறது.

கோலானி படைப்பிரிவிலிருந்து வந்த இஸ்ரேலிய சிப்பாய்களில் பெரும்படை ஒன்று, திங்களன்று ஹெஸ்பொல்லா கோட்டையான பின்ட் ஜெபைலுக்கு, போரிட்டு வழியைக் கண்டது. ஹெஸ்பொல்லா போராளிகள் நகரத்தின் கட்டுப்பாட்டை கொண்டிருந்தாலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பீரங்கிகளுடனும் கவச புல் டோசர்களுடனும் ஒரு முக்கிய மலையுச்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. போரின் தீவிரம் இறப்பு எண்ணிக்கையில் நிருபணம் ஆகிறது: நான்கு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டு, 20 பேர் காயமடைந்துள்ளனர்; இரண்டு ஹெஸ்பொல்லா போராளிகள் கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டனர். குறைந்தது ஒரு இஸ்ரேலிய பீரங்கி எரிக்கப்பட்டது.

"விமான சக்தி ஒன்றும் கொரில்லாக்களை அடித்து விரட்டுவதற்கு போதாது; அவர்கள் தரையில் கடுமையான எதிர்ப்பாளர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இதே அறிக்கை தொடர்வதாவது: "போரில் இருந்து திரும்பி வரும் படையினரின் கருத்துப்படி, எல்லையில் கொரில்லா நிலைப்பாடுகளை அகற்றுவதற்கு சிறிய அளவு குவிப்புக் காட்டி நடத்தும் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததைவிட மிகக் கடுமையாக உள்ளன. கடினமான நிலப்பகுதி மற்றும் ஹெஸ்பொல்லா கொரில்லாக்களால் திடீரென தாக்கப்படுதல் பற்றி துருப்புக்கள் புகார் கூறியுள்ளன; போராளிகள் புதர்களில் இருந்து எதிர்பாரா விதமாக வெளிப்பட்டு தானியங்கி ஆயுதங்கள், ராக்கெட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்."

அசோசியேட்டட் பிரஸ்ஸின் மற்றொரு கட்டுரையாளர் காட்சியை விவரிக்கிறார்: "திங்களன்று கனரக பீரங்கிகள் முழங்கின; லெபனிய எல்லைச் சிறுநகரத்தில் ஆபத்தை விளைவிக்கும் குண்டுகள் சரமாரியாக இறங்கி இஸ்ரேலிய பீரங்கிகள், துருப்புக்களை முன்னேறுவதற்கு வகை செய்தன. காலை உதயத்தின்போது, குருதி தோய்ந்த காயங்கள் உடல் முழுவதும் இருந்த படையினர், அவர்களுடைய முகத்தில் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இஸ்ரேலுக்கு எல்லை வழியே மீண்டும் திரும்பினர்... இரண்டு இஸ்ரேலிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர், குறைந்தது 20 பேர் திங்களன்று காயமுற்றனர் என்று இராணுவம் கூறியது; ஹெஸ்பொல்லா கோட்டையான நகரத்தில் இருந்து கொரில்லாக்கள் கடுமையான குண்டு மழைகளை பொழிந்ததுடன், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், எறிகுண்டுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தினர்."

எதிர்ப்பின் உறுதிப்பாடு இஸ்ரேலிய தளபதிகளையும் IDF இன் சாதாரண படையினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது தெளிவு. ஒரு IDF டாங்கி அம்புலன்ஸ் வண்டி போல் பயன்படுத்தப்பட்டது பற்றி AP கூறுகிறது: "தன்னுடைய காயமுற்ற தோழர்களை திரும்பக் கொண்டுவந்த பின்னர், ஒரு டாங்கி ஓட்டுபவர் பீரங்கியை தாங்கி நிற்கும் சுழல் மேடைமீது அமர்ந்துகொண்டு, தனது உறை அணிந்த கைகளுக்கு இடையே தன்னுடைய தலையைப் பிடித்துக் கொண்டு அழுதார்; இரு குழு உறுப்பினர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர்."

காயமுற்ற இராணுவத்தினர் எடுத்துச் செல்லப்பட்டிருந்த இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 21 வயது யிஷான் க்ரீன், படுக்கையில் இருந்தபடி பின்ட் ஜெபயில் பூசல் பற்றி தன்னுடைய விவரணத்தை அளித்தார்: "அது ஒரு பெரும் குழப்பம்; அது பற்றி நான் பேச அனுமதிக்கப்படவில்லை."

எதிர்ப்பின் அளவுத்தன்மையை உணர்ந்து கொள்ளுவதற்கு இஸ்ரேலிய இராணுவத் தலைமை திகைத்து நின்றது. IDF ன் செயற்பாட்டுத் தலைமை கொண்ட மேஜர் ஜெனரல் கடி ஐசென்கோட், ஆரம்பத்தில் 100ல் இருந்து 200 ஹெஸ்பொல்லா போராளிகள் பின்ட் ஜெபலில் நிலவறையில் இருந்ததாக கூறினார். பின்னர் IDF இன் பொதுத் தளபதியான டான் ஹாலுட்ஸ் ஹெஸ்பொல்லா படையின் எண்ணிக்கை 500 ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்.

ஜூலை 12ல் போர் தொடங்கியதில் இருந்து மிகப் பெரிய இஸ்ரேலிய தரைத் தாக்குதல் என்று இருந்தாலும், இஸ்ரேலியத் துருப்புக்கள் 40 மைல் நீண்ட லெபனிய எல்லைப் பகுதியில் ஐந்து மைல் தூரம் ஊடுருவினர் என்றாலும், ஹெஸ்பொல்லா பிரிவுகள் கிட்டத்தட்ட 100 ராக்கெட்டுக்களை அனுப்பி கடந்த இரண்டு வாரமாக அவர்கள் கொண்டுள்ள போரின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

இந்த எல்லைப் போர்களின் விளைவுகள் எப்படி இருந்தாலும், மிகப் பெரிய வெடிகுண்டுத் திறன் மற்றும் ஆகாயக் கட்டுப்பாட்டை கொண்டுள்ள நிலையில் IDF இறுதியில் இத்தகைய தந்திரோபாய மோதலில் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் ஐயமில்லை என்றாலும், நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இஸ்ரேலிய இராணுவச் செயற்பாட்டு முறை கஷ்டத்தில் உள்ளது என்பதற்கான தெளிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

மிகப் பெரிய குண்டுவீச்சுக்கள் ஹெஸ்பொல்லாவை முடக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது தெளிவு. கணிசமான எதிர்ப்பு இன்னும் உள்ளது; முக்கியமான ஹெஸ்பொல்லா தலைவர்கள் எவரும் கொல்லப்படவில்லை; ஏவுகணை தாக்குதல்கள் தணியாமல் தொடர்கின்றன.

லெபனான் மீதான தாக்கம் ஹெஸ்பொல்லாவை அழிப்பது என்றில்லாமல் நாட்டின் குடிமக்களின் உள்கட்டுமானத்தை தகர்ப்பது என்று இருந்தது; இதுவோ உள்நாட்டுப் போருக்கு பின்னர் மிகவும் பரந்த முறையில் 15 ஆண்டுகளில் மறுபடியும் கட்டமைக்கப்பட்டது ஆகும். திங்கள் மாலை செய்தி ஊடகத் தகவல்களின்படி, கிட்டத்தட்ட 90 சதவிகித சிறந்த சாலைகளும் பாலங்களில் 95 சதவிகிதமும் (மலைப்பகுதியில் இன்றியமையாத கூறுபாடு), இஸ்ரேலிய குண்டுகளால் பயன்படுத்தப்பட முடியாதவையாக செய்யப்பட்டுவிட்டன.

உள்கட்டுமானத்தின் மீதான மிக அநியாயமான தாக்குதல்களில் ஒன்று ஞாயிறு இரவு நிகழ்த்தப்பட்டதாகும் லெபனிய உயர்மட்ட நிலங்களில் இருந்த இரு தொலைக்காட்சி கோபுரங்கள் தகர்க்கப்பட்டன; இப்பகுதிகளில் மரோனைட் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர்; முந்தைய லெபனிய படையெடுப்பின்போது இவர்கள் இஸ்ரேலியர்களால் விரும்பப்பட்டிருந்தனர். ஒரு கோபுரத்தில் இருந்து ஹெஸ்பொல்லா வலைப்பின்னற் செய்திகள் ஒலிபரப்பப்பட்டபோது, மற்றொன்று மரோனைட் தளத்தை கொண்ட லெபனிய ஒலிபெருக்கி நிலையத்தால் செயல்படுத்தப்பட்டது. இதை அழித்ததற்கு ஒரே காரணம் அந்த இடத்தில் இருந்து இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பேரழிவுத் தாக்கங்கள் தகவல்களாக வரக்கூடாது என்பதேயாகும்.

அத்தகைய தகவல்கள் வெளிவருவது குண்டுவீச்சுக்களுக்கு சர்வதேச எதிர்ப்பு அதிகமாக ஏற்படும் என்று இஸ்ரேலில் உள்ள ஓல்மெர்ட் அரசாங்கம் நினைப்பதைத்தான் இது பிரதிபலிக்கிறது. ஆனால் இதையும் விட நேரடியான கவலை, இஸ்ரேலிய மக்களின் பொதுக்கருத்தில் இத்தகைய தகவல்கள் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துமோ என்பதுதான்

குண்டு வீச்சிற்கு மக்களிடைய கிட்டத்தட்ட முழு ஆதரவுடனான ஒற்றுமை உள்ளது என்று கூறப்பட்டாலும், இஸ்ரேலிய அரசியல் ஸ்தாபனத்திற்கு 1982ம் ஆண்டு லெபனான் படையெடுப்பின் வரலாறும், IDF தன்னுடைய லெபனிய பாசிச பலசாஞ்சி நட்புப் பிரிவுகளுடன் நிகழ்த்திய மக்கள் படுகொலை பற்றிய சீற்றமும் நன்கு தெரியும். அப்பொழுது படையெடுப்பிற்கு ஏற்பாடு செய்த, பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஏரியல் ஷரோன், பின்னர் இக்குற்றங்களுக்கு ஓரளவு காரணமாக இருந்தார் என்று ஒரு இஸ்ரேலிய விசாரணைக் குழு கண்டறிந்ததையடுத்து, பதவியை விட்டு விலக நேர்ந்தது.

லெபனான் மீதான தற்போதைய தாக்குதலும் அதேபோன்ற அளவில் ஏற்கனவே ஒரு போர்க் குற்றமாகிவிட்டது. அமெரிக்க செய்தி ஊடகம் சிறிதும் திறனாயாமல் இஸ்ரேலிய, புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரங்களை கிளிப்பிள்ளை போல் திருப்பிக் கூறி, ஹெஸ்பொல்லாவை பயங்கரவாத அமைப்பு, சிவிலியன்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துபவர்கள், இஸ்ரேலிய இலக்குகள் பயங்கரவாத போராளிகள்தான், அது குடிமக்கள் இறப்புக்களை தவிர்க்க விரும்புகிறது என்றெல்லாம் சித்தரித்துக் காட்டினாலும், உண்மையான நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் இருந்து அறியப்படலாம்.

திங்கள் வரை 39 இஸ்ரேலியர் உயிரிழந்தனர்; 22 பேர் போரில் கொல்லப்பட்ட படையினர்; 17 பேர் சாதாரண மக்கள். லெபனிய பக்கத்தில் குறைந்தது 384 உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளன; இவற்றில் 31 பேர்தான் லெபனிய இராணுவத்தினர் (அதுவும் அவர்களுடைய முகாம்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சிற்குட்டபட்டபோது தகர்க்கப்பட்டு உயிரிழந்தவர்கள்); அல்லது ஹெஸ்பொல்லா போராளிகள், 353 பேர் சாதாரணக் குடிமக்கள் ஆவர்.

வேறுவிதமாகக் கூறினால், இஸ்ரேலிய மாண்டவர்களில் 42சதவிகிதத்தினர் சாதாரண குடிமக்கள் ஆவர்; அதேவேளை லெபனிய இறப்புக்களில் 91 சதவிகிதம் பேர் சாதாரண குடிமக்கள் ஆவர். மேலும் இஸ்ரேல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட லேசரால் வழிநடத்தப்படும் குண்டுகள் மற்ற கருவிகளை, ஒப்புமையில் பின்தங்கிய ஹெஸ்பொல்லாவின் Katyusha ராக்கெட்டுக்களை விட, நுட்ப உயர்வை பெற்றவற்றை பயன்படுத்துகிறது. இக்கருவிகள் லெபனிய சாதாரணக் குடிமக்களை நூற்றுக் கணக்கில் கொன்று கொண்டிருக்கின்றன என்று சொன்னால், அது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் கொள்கை ஆகும்.

இறப்பின் அளவும் அழிவின் அளவும் லெபனிய மக்கள்மீது செலுத்தும் வகை தெளிவாகியுள்ள நிலையில், இஸ்ரேலிய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கையும் கூடிக் கொண்டு வருகிறது, இஸ்ரேலிய பொது மக்களுடைய கருத்தில் பெரும் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும்.

இராணுவ அணிதிரட்டலும் இஸ்ரேலிய மக்களிடையே மிகப் பெரிய நேரடிப்பாதிப்பை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட 18,000 தயார்நிலை துருப்புக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; இது கிட்டத்தட்ட 750,000 புதிய அமெரிக்க துருப்புக்களை அணிதிரட்டுவதற்கு சமமாகும். இஸ்ரேலிய மக்கட் தொகையின் முழுமையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என IDF லோ அல்லது அதன் தாயார்நிலை இருப்புப்படை பிரிவுகளிலோ படைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறித்துள்ளபடி, இத்தகைய குவிப்பு கடந்த காலத்தில் உள்நாட்டு எதிர்ப்பை இராணுவ நடவடிக்கைகளுக்கு கொடுத்துள்ளது; பாலஸ்தீனிய சிறு நகரங்களிலும் மேற்குக் கரையில் நடைபெற்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வந்துள்ளது. "வயதும் அனுபவமும் வெற்றி பெறும் என்ற முன்னோக்கின் காரணமாக, தயார்நிலை துருப்புக்கள் முறையான இராணுவத்தினரை காட்டிலும் நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை ஒட்டி இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட முடியுமா என்ற வினாவை எழுப்பக் கூடும்."

கடந்த காலத்தில் கடத்தல் நிகழ்வுகள், கொல்லைப்புற வழியான பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய, இரு சிப்பாய்கள் கடத்தல் என்ற நிகழ்விற்கு விடையிறுக்கும் வகையில் அமைச்சரவையை கேட்காமல் எடுத்த முழுஅளவு இராணுவத் தாக்குதல் என்ற ஓல்மெர்ட்டின் முடிவு மீதாக, இஸ்ரேலிய அரசாங்கம் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாய் தெரிகிறது. எங்கும் எதிர்பார்க்கின்றவாறு, ஹெஸ்பொல்லா இரு சிப்பாய்களை திரும்ப ஒப்படைத்தல், எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறுதல், ராக்கெட் குவிப்புக்களை கலைத்தல் ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்தால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதுபற்றி அமைச்சரவைக்குள்ளே ஒருமித்த கருத்து இல்லை.

ஏற்கனவே ஓல்மெர்ட் அரசாங்கம் தன்னுடைய நிலைமையை ஒரு சர்வதேசப் படையை எல்லைப் பகுதியில் நுழைத்தது மூலம் மாற்றிக் கொண்டுள்ளது; இது வலிமை இழப்பின் அடையாளம், உட்சிதறலின் அடையாளமும் ஆகும். ஆரம்பத்தில் எந்த சர்வதேச படையும் இல்லை என்று மறுத்தவர்கள் இப்பொழுது NATO வரவேற்கப்படலாம் எனக் கூறுகின்றனர்.

ஆனால், இஸ்ரேலியர்கள் தங்களுடைய இடர்ப்பாடுகளுக்கு கொடுக்கும் விடையிறுப்பு, ரைஸ் மற்றும் புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தை ஒட்டி, லெபனானில் வன்முறையை பெருக்குவதும், இன்னும் கூடுதலான முறையில் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை காட்டுவதுமாக இருக்கக் கூடும்.

See Also :

ரைசின் மத்திய கிழக்குப் பயணம்: போரை துரிதப்படுத்துவதில் "இராஜதந்திரம்"

லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு

லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு

லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்

அமெரிக்க-இஸ்ரேலிய போர்க் கொள்கையை எதிர்க்க முடியாத ஐரோப்பாவின் இயலாமை

G8 அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன

இஸ்ரேல் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன

Top of page