World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US drumbeat against Iran threatens new war of aggression

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் முரசு ஒரு புதிய ஆக்கிரமிப்பு போருக்கு அச்சுறுத்துகிறது

By Bill Van Auken
11 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க போரும் ஆக்கிரமிப்பும் ஈராக்கில் விரைவில் மூன்றாம் ஆண்டு நிறைவை எட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்யை தளமாகக் கொண்டு, அமெரிக்க மக்களை பயங்கர வாத அச்சுறுத்தல்கள் மூலமாக மிரட்டியும் இந்தக் காரணமற்ற ஆக்கிரமிப்பு போரை தொடக்கிய புஷ் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மீண்டும் போர் முரசு கொட்டிக் கொண்டு, இம்முறை ஈரானுக்கு எதிராகப் புறப்பட்டுள்ளனர்.

ஈரானுடைய அணுசக்தித் திட்டம் பற்றி ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிற்கு முறையீடுகளை அனுப்புவதில் வாஷிங்டன் வெற்றியடைந்துள்ளது; அங்கு இதற்கு விடைகாணும் வகையில் ஒரு விவாதம் அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமையன்று கூடி பூசலைப் பற்றி அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்; இதில் தெஹ்ரான் அரசாங்கம் நேரடியாகக் கண்டிக்கப்பட வேண்டும் மற்றும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்பவை சேர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

வாஷிங்டனில் செய்தித்தாட்கள் வெளியீட்டாளர்களுடன் கேள்வி-பதில் நிகழ்வு ஒன்றில் வெள்ளியன்று கலந்து கொண்ட ஜனாதிபதி புஷ் ஈரானிய அணுசக்தித் திட்டம் "பெரும் தேசிய பாதுகாப்பு பற்றிய கவலை கொண்டது" என்றும் தன்னுடைய 2002 காங்கிரசுக்கான வருடாந்திர உரையில் ஈரானை "தீமைகளின் அச்சு" என்று அழைக்கப்படுவதில் சேர்த்தது பற்றியும் நினைவு கூர்ந்தார். அமெரிக்கா "மற்ற நாடுகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து இப்பிரச்சினைகளை ராஜீய முறையில் தீர்க்க முயலும் -- வேறுவிதமாகக் கூறினால் இன்று இந்த அச்சுறுத்தல்கள் எப்படிச் சமாளிக்கப்பட வேண்டும் என ஆராயும்" -- என்று அவர் அறிவித்தார்.

ஈராக்கில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயத்தை பற்றி விடையிறுக்கையில் தொடர்பற்ற முறையில் புஷ் தன்னுடைய வெற்றிகளை பற்றிய கணிப்பை வலியுறுத்தி வாஷிங்டன் ஜனநாயகத்திற்காக போராடுகிறது என்றும் கூறினார். இதன் பின்னர் அவர் கூறியதாவது: "ஈரானைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. சுதந்திரமான ஈராக் என்பது ஈரானில் உள்ள சீர்திருத்த வாதிகளுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கும்."

இத்தகைய கூற்று தெளிவாக கேலிக்கூத்தேயாகும். உலகின் மற்ற பகுதிகளில் உள்ளதைப் போலவே, ஈரானிய மக்களும் அண்டை நாடான ஈராக்கில் 100,000க்கும் மேலான சாதாரண குடிமக்களை கொலைசெய்தது, அடிப்படை பொருளாதார, சமூக வாழ்வு சிதைந்தது மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட அரசாங்கம் மரணம்விதிக்கும் குழுக்கள் சித்திரவதைகள் பயன்படுத்துதல் இவற்றைக் கொண்டு ஆண்டுவருகிறது என்பதை பெரும் பீதியுடன் பார்த்துத்தான் வருகின்றனர்.

புஷ்ஷின் அபத்தமான கருத்தில் எதிர்பாரமால் கடுகளவு உண்மையேனும் இருக்கும் என்றால் அது இன்னும் பதவியில் இருந்து இறக்கப்பட்ட மறைந்த ஷா மன்னரின் புதல்வர் ரேஸா பஹ்லவி போன்ற "சீர்திருத்தவாதிகள்" பழைய வாஷிங்டனுடைய ஆதரவிற்குட்பட்ட போலீஸ் அராங்கம் ஈராக்கிய முறையில் மீண்டும் வரும் என்று நம்பிக்கைகொள்வதுதான்; அவ்விதத்தில்தான் அமெரிக்க "அதிர்ச்சி மற்றும் வியப்பு" இரண்டையும் தரும் பிரச்சாரம் ஈரானுக்கு எதிராகத் தொடக்கப்பட்டுள்ளது.

புஷ்ஷின் கருத்துக்கள் முதல் நாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் செனட் பண ஒதுக்கீட்டுக் குழுவில் கூறியிருந்த கருத்துக்களையே எதிரொலிக்கிறது; அவ்வம்மையார் அமெரிக்கா ஈரானை விடவும் "தனியொரு நாட்டிலிருந்து மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளவில்லை" என்று கூறினார்.

வேண்டுமேன்றே தூண்டுதல் தன்மையைக் கொடுத்த கருத்துக்களில் ரைஸ் ஈரானிய அரசாங்கத்தை "பயங்கரவாதத்திற்கு மைய வங்கியாளர் போன்று உள்ளது" என்று முத்திரையிட்டு, "ஈரான் பயங்கரவாத்திற்கு கொடுக்கும் ஆதரவு சில இடங்களில் மத்திய கிழக்கில் ஜனநாயக மற்றும் உறுதியான அரசாங்கங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளதுடன் அவற்றின் வலிமையை குன்றச் செய்யும் வகையிலும் இருக்கிறது" என்று கூறினார்.

ஈராக்கில் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ள மூன்றாண்டு போரைத் தொடர்வதற்கு 92 பில்லியன் டாலர்களை கூடுதலாக நிர்வாகம் கோரும் பின்னணியில் ரைஸ் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதேபோல் செனட் மற்றும் 75 மில்லியன் டாலர்களை ஈரானில் "ஜனநாயகத்தை வளர்ப்பதற்கான ஒதுக்கீட்டிற்கு" ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். இத்தகைய நிதிய உதவி அமெரிக்க ஆதரவு பெற்ற புலம் பெயர்ந்த குழுக்கள் மூலம் ஈரானுக்கு செல்லும்; அத்தகைய குழுக்கள்தான் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு வாஷிங்டனுடன் ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு வருகின்றன.

"இந்த நாடு தனக்கு அணுவாயுதம் கூடாது என்று உறுதியாக இருக்கும் சர்வதேச சமூகத்தை மீறி, அணுவாயுதங்களை தயாரிக்க உறுதிபூண்டுள்ளது" என்று ஈரானைப் பற்றி ரைஸ் கூறியுள்ளார்.

ஈரான் ஒரு பயங்கரவாத நாடு என்ற கூற்றை பழையபடி கூறிய அவர், "அக்கருத்தை எடுத்துக் கொண்டு சில நூறுகளினால் அதைப் பெருக்கினால், ஈரான் என்பது அப்பகுதியில் அணுவாயுதத்தை கொண்டால், அங்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்" என்று காங்கிரஸ் குழுவை எச்சரித்தார்.

புஷ்ஷை போலவே ரைசும் ஈரானுடனான மோதலை "ராஜீய முறைகள்" மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கருத்தைக் கொடுத்தார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கள் புஷ்ஷின் ஏராளமான அறிக்கைகளை தொடர்ந்தும் அண்மையில் துணை ஜனாதிபதி டிக் செனி, ஐ.நா.விற்கு அமெரிக்க தூதரான ஜோன் போல்டன் மற்றும் இன்னும் பிறரும் வாஷிங்டனை பொறுத்தவரையில் "அனைத்துவித உபாயங்களும் கையாளப்படலாம்" என்று கூறியதை தொடர்ந்தும் வந்துள்ளன. இதன் பொருள் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவ நடவடிக்கை பற்றிய தெளிவான அச்சுறுத்தும் குறிப்பு ஆகும்.

தன்னுடைய பங்கிற்கு ஈரானிய அரசாங்கம் அதன் அணுக்குரு ஆற்றல் திட்டம் அமைதியான நோக்கங்களான மின் உற்பத்தியைத்தான் மையமாகக் கொண்டுள்ளது வேறு ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது; புஷ் நிர்வாகம் இதை மறுக்கும் வகையில் எந்தவித சான்றும் இன்னும் கொடுக்கவில்லை. வாஷிங்டனில் இருந்து வரும் ஆழ்ந்த அழுத்தத்திற்கு மண்டியிடத் தயாராக இல்லை என்று தெஹ்ரான் உறுதிகூறியுள்ளது.

ஐ.நா.வில் ஈரானிய அணுக்கரு ஆற்றல்திட்டம் பற்றி புஷ் நிர்வாகம் கொண்டுள்ள ராஜீய ரீதியிலான திரித்தல் வேலைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கியப் படையெடுப்பின் போது ஐ.நா.வைத் திரிக்கும் முயற்சியை மேற்கொண்ட பிரச்சாரத்தின் மறுபதிப்பு போலத்தான் தோன்றுகிறது. அப்பொழுது போலவே, இப்பொழுதும் தூதரக நெறிகளை காட்டுவது போல், சர்வதேச அமைப்பை அமெரிக்க போர்த் தயாரிப்புக்களில் ஒரு போலிப் பங்கை காட்டுவதுடன், ஐ.நா. தீர்மானங்கள் என்ற காகித அச்சுறுத்தல்களை ஆக்கிரமிப்புப் போருக்கான போலிச் சட்ட நெறி நியாயப்படுதலை மற்றும் போர்க்கரணம் என்று கூறப்படுபடுவதை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

இதற்கிடையில், நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து தொடர்ச்சியான பகிரங்க அறிக்கைகள் போர் முரசு போல், ஈரானிய அணுவாயுதங்களை பற்றி எச்சரித்து வருவதுடன், அந்நாடு பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெஹ்ரான் அல்கொய்தாவிடம் அணுவாயுதத்தை கொடுக்கக்கூடும் என்ற பெருந்தீமைக் குற்றச் சாட்டையும் தாங்கி வெளிவந்த வண்ணம் உள்ளன; இவை அனைந்தும் அமெரிக்க மக்களிடையே ஒரு பெரும் அச்ச சூழ்நிலையை தோற்றுவிக்கும் நோக்கத்தை கொண்டவை ஆகும்.

புஷ் நிர்வாகம் தெஹ்ரானுடன் சமரசப் போக்கைக் காட்டும் அக்கறை குறிப்பு ஏதும் இல்லை. அணுவாயுத திட்டம் இருப்பதாகக் கூறி மோதல் தன்மையை தக்கவைத்துக் கொள்ளுவதில்தான் அது உறுதியாக உள்ளது; இதற்காக சமாதானம் வேண்டும் என்ற தீர்மானத்தின் எந்தவித சாத்தியத்தையும் ஒதுக்குவது தேவைப்பட்டாலும் அது செய்யும்.

ஈராக்கிற்கான போரில் இவர் கொண்ட பங்கிற்காக இவரை தகுதியற்ற நபர் என அறிவிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்கள் எழுந்து வரும் சிலிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, வெள்ளிக் கிழமை அன்று நிருபர்களிடம் பேசிய ரைஸ், ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு வெளியே நெருக்கடிச் சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் பேச்சு வார்த்தைகள் தொடரப்படலாம் என்று ரஷ்யா விடுத்திருந்த அழைப்பை நிராகரித்தார்.

வியாழனன்று தூதர் போல்டன் இதே நிலைப்பாட்டை எடுத்தார்; உட்குறிப்பாக ஐ.நா.பாதுகாப்புக் குழு ஈரானுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் --இராணுவ நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படலாம் என்று கூற மறுத்தால்-- வாஷிங்டன் தன்னுடைய வழிவகைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். "இது குழுவிற்கு ஒரு பரீட்சை போன்றது. ஈரானியர்கள் தொடர்ந்து அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதில் இருந்து பின்வாங்கிக் கொள்ளவில்லை என்றால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம்." என்று அவர் அறிவித்தார்.

ஐ.நா.வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஈராக்கிற்கு எதிராக தொடக்கப்பட்ட பிரச்சாரத்தை பெரிதும் ஒத்த முறையில்தான், தற்போதைய பிரச்சாரமும் அப்பட்டமாக உள்ளது. இக்கருத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்: ஈராக்கில் எவர் செய்தது சரி, எவர் தவறு என்பதைப் பற்றி நாங்கள் யாருக்கும் நினைவுபடுத்தவில்லை; விடை மிகவும் வெளிப்படையானதுதான்" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov ரஷ்ய அரசாங்க தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார். ஐ.நா. அணுக்கரு ஆற்றல் ஆய்வு அமைப்பிற்கு ஈரானிய அணுசக்தி திட்டத்தை பரிசீலிக்க இன்னும் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் சீனாவும் ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் போர்க் கொடி உயர்த்தி அச்சுறுத்துவதை குறைகூறியுள்ளது. வெள்ளியன்று பெய்ஜிங்கின் People's Daily யில் வெளியிடப்பட்ட முதற் பக்க அறிக்கையில், பாதுகாப்புக் குழு ஈரானுக்கு எதிரக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

"அமெரிக்க அரசாங்கம் இலக்கில்லாமல் நிலையை மோசமாக்கும் வகையில் செயல்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது" என்று செய்தித்தாள் கூறியுள்ளது.

அமெரிக்க முயற்சி "ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவதை ஆதரிப்பதில் முடியலாம்; அதாவது எண்ணெய்த் தடை ஏற்படும்; மற்றும் நாட்டின் வெளி சொத்துக்கள் முடக்கப்படலாம். ஆனால், அத்தகைய தடைகள் தற்போதைய உலகின் எண்ணெய்ச் சந்தைக்கும், பெருமளவு எண்ணெய் நுகரும் நாடுகளாலும் பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை கொடுத்துவிடும்" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

"பாதுகாப்புக் குழுவிடம் தகவல் கொடுத்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தக்க தீர்வு கிடைக்காது என்றால் அமெரிக்கா ஏன் அதைச் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளது?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈரான் நிபந்தனை இல்லாமல் ஏற்றுக் கொள்ள மறுத்தால், அமெரிக்கா "தன்னுடைய பங்கிற்கு ஈரான் மீது, தனக்காகவும் இஸ்ரேலுக்காகவும் அறுவைச் சிகிச்சையை அளிக்க நேரிடும்; காரணங்கள் ஓரளவு இருந்தாலும் போதும்" என்று செய்தித்தாள் கணித்துக் கூறியுள்ளது. மேலும் "இத்தகைய நடவடிக்கை முஸ்லீம் சமூகத்திற்கு இன்னும் வெறுப்பைக் கொடுக்கும்; அச்சமூகத்தின் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது; இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் முழு முஸ்லீம் உலகிற்கும் இடையே மோதல் நேரலாம்" என்றும் அது எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான Javier Solana வியாழனன்று வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஆக்கிரோஷமான சொற்பரிமாற்றங்கள் "நடைமுறை ராஜீய நெறிக்கு ஏற்ப இல்லை" என்று எச்சரித்துள்ளார்.

ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஈரானில் பல பில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார அக்கறைகளை கொண்டுள்ளதுடன், தங்களுடைய ஆற்றல் ஆதாரங்களுக்கு அதைத்தான் முக்கிய அளிப்பாளராகவும் கொண்டுள்ளன. மாறாக, அமெரிக்காவோ CIA ஆதரவிற்குட்பட்டிருந்த ஷாவின் சர்வாதிகாரம் அகற்றப்பட்டதில் இருந்து அந்நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கொண்டிருக்கிறது. தடைகள் அமெரிக்க நிறுவனங்கள் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் நடத்துவதை தடுத்துள்ளன.

தெஹ்ரானுக்கு எதிரான வாஷிங்டனுடைய ஆக்கிரோஷமான பிரச்சாரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிய படையெடுப்பின் தளத்தில் காணப்பட்ட முக்கிய மூலோபாய இலக்குகளைத்தான் கொண்டிருக்கிறது; அதாவது இராணுவ வலிமையை பயன்படுத்தி பாரசீக வளைகுடாவிலுள்ள பரந்த எண்ணெய் இருப்புக்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை சுமத்தி, அதன்மூலம் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்க மேலாதிக்கத்தை கொள்ளுதல் என்பதேயாகும் அது.

அமெரிக்க நிர்வாகம் முன்பு ஈராக்கிற்கு எதிரான பேரழிவு போர்த் தயாரிப்பில் பயன்படுத்திய பொய்கள், தூண்டுதல்கள் என்ற இழிவான மூலோபாயத்தையே ஈரானுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது என்பது இந்த அரசாங்கத்தின் குற்றம் சார்ந்த தன்மை, ஆற்றொணாநிலை ஆகியவற்றில் வெளிப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள், நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களை கொன்றும், காயப்படுத்தியும் நிகழ்ந்த சட்ட விரோதமான "தவிர்க்க முடியாத" போரைத் தொடர்வதற்கான பொய் நிறைந்த, போலிக் காரணங்கள் அம்பலப்படுத்தப்பட்ட போதிலும், ஈரான் இப்பொழுது பயங்கரவாத அச்சுறுத்தலையும் பேரழிவு ஆயுதங்களையும் கொண்டிருக்கிறது என்ற நிர்வாகத்தின் எச்சரிக்கைகளை எவராவது நம்புவார்களா?

இதே அதிகாரிகள்தான் --புஷ், செனி, ரைஸ், ரம்ஸ்பெல்ட் மற்றும் போல்டன்-- ஆகியோர், உலகின் முன் போர்க் குற்றவாளிகளாக அம்பலப்படுத்தப்பட்டு நிற்கின்றனர். அமெரிக்காவிற்குள்ளேயே, அமெரிக்க இராணுவ பிரிவுகளுக்குள்ளும், ஈராக்கியப் போர் பரந்த முறையில் எதிர்க்கப்படுவதுடன் ஓர் அரசியல் பேரழிவு என்றே கொள்ளப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கு மக்களுடைய எதிர்ப்பு ஐயத்திற்கு இடமில்லாமல் அதிகமாகத்தான் இருக்கும்.

அமெரிக்க அரசியல் எதிர்ப்பு என்ற தோற்றம் இருந்தாலும், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை என்ற கழுதை ஓலம் இன்னும் உரத்துத்தான் இருக்கிறது. முக்கிய ஜனநாயக் கட்சியாளர்களான நியூ யோர்க் செனட்டர் ஹில்லாரி கிளின்டன் போன்றோர் புஷ்ஷை வலதில் இருந்து தாக்கியுள்ளனர். இவ்வம்மையார் நிர்வாகத்தை "ஈரானை எதிர்கொள்ளுவதில் முக்கிய காலத்தை இழந்து விட்டதாகவும், அச்சுறுத்தலை குறைமதிப்பிட்ட வகையில் வெள்ளை மாளிகை நடந்து கொள்ளுவதாகவும், பேச்சு வார்த்தைகளை வெளியாட்கள் மூலம் நடத்துவதாகவும்" சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க ஈராக்கிய ஆக்கிரமிப்பு பெருகிய முறையில் சிதையும் நிலையில் இருப்பதை கண்ணுற்று, அதைவிட நான்கு மடங்கு பெரிதாகவும், மூன்று மடங்கு அதிக மக்கட்தொகையும் உடைய நாட்டின்மீது இரண்டாம் போர் ஒன்றை தொடக்கலாம் என்று கருதுவதை பார்த்தால் பைத்தியயக்காரத்தனம் என்று தோன்றும். ஆனால் வரலாற்றளவில் வலுவற்ற, திகைப்புற்ற அரசாங்கங்கள் பலநேரமும் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பதைக் காணமுடியும்.

See Also:

ஈரான் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் நிதிகள் கோருகிறது

Top of page