World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Palestinians to form national unity government

பாலஸ்தீனியர்கள் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க உள்ளனர்

By Jean Shaoul
22 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

பல மாதங்கள் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, கடந்த வாரம் ஃபத்தாவின் தலைவரான பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ், தான் ஹமாசுடன் சேர்ந்து ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அறிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச உதவி அமைப்புக்கள் பாலஸ்தீனிய அதிகாரத்தின் மீது (PA) சுமத்தியுள்ள முடக்கம் தரும் பொருளாதாரத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுக்கும் என்றும் --கடந்த ஜனவரியில் ஃபத்தாவை ஹமாஸ் தேர்தலில் தோற்கடித்ததில் இருந்து இது நடைமுறையில் உள்ளது-- பாலஸ்தீனியர்களுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை மறுபடியும் தொடக்க உதவும் என்றும் அப்பாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பெரும் சங்கடத்தை கொடுத்த லெபனான் போருக்கு பின்னர் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரானுடனும் சிரியாவுடனும் போர் தொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு இணங்க அமெரிக்காவிற்கு தக்க சூழ்நிலையை உருவாக்கும் வகையில் அப்போர் தொடக்கப்பட்டிருந்தது; இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கங்கள் இரண்டுமே சமூக அதிருப்தியைத்தான் அதன் விளைவாக கண்டன.

பாலஸ்தீனிய பகுதிகளுக்குள், ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது என்பது முழு அளவு உள்நாட்டு போராகிவிடுமோ என்ற அச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்த பிரிவுகளின் உட்பூசல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் என்ற நோக்கத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உட்பூசல்களில் குறைந்தது 58 பேராவது கொல்லப்பட்டுள்ளனர்; செப்டம்பர் 15 அன்று மற்றும் ஒரு நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் இந்த உடன்பாட்டிற்கு இணங்குவதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், முழு விவரங்களுக்கும் இறுதி வடிவம் கொடுப்பதற்கு சில வாரங்கள் ஆகலாம். அவை இன்னும் தெளிவுபடுத்தப்படவும் இல்லை. இது நடந்தேறுமா என்பதும், எந்த வடிவத்தில் நடந்தேறும் என்பதும் வாஷிங்டனை பொறுத்தது; இது தன்னுடைய வீட்டின் கொல்லைப்புறம் எனக் கருதப்படும் பகுதியில் ஐரோப்பிய சக்திகளாலான தலையீடு என்று அமெரிக்கா நினைக்கிறது.

ஹமாஸ் பிரதம மந்திரி இஸ்மாயில் ஹனியாவை அடுத்த அரசாங்கத்தை அமைக்குமாறு அப்பாஸ் கேட்டுக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் எட்டு காபினெட் மந்திரிகள் ஹமாசில் இருந்து இருப்பர்; நான்கு பேர் ஃபத்தா, பல சுயேச்சையாளர்கள், பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், "தொழில்நுட்ப வல்லுனர்கள்" ஆகியவர்களின் சார்பாக இருப்பர்.

இந்த உடன்படிக்கை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சிறைக்கைதிகள் சாசனம் என்று அழைக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையை தளமாகக் கொண்டுள்ளது; அதுவோ 2002 அரபு லீக் கொடுத்த ஒரு திட்டத்தை தளமாகக் கொண்டது; அதற்கு ஹமாஸ் முன்னரே ஒப்புக் கொண்டிருந்தது.

இது இஸ்ரேலுடனான பூசலில் இரு-நாடுகள் தீர்விற்கு ஆதரவு கொடுக்கிறது; அதையொட்டி இஸ்ரேல் தகர்க்கப்பட வேண்டும் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இல்லை என்று கூறும் ஹமாசின் சாசனம் வழக்கொழியும். பழைய வரலாற்றளவிலான பாலஸ்தீனம் முழுவதும் அல்ல, மேலும் அந்தப் பகுதிக்குள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பை குவிக்க வேண்டும் என்ற உறுதிமொழிகளையும் அல்லாமல்,1967க்கும் பின்னர் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிக்குள்ளான ஒரு பாலஸ்தீனிய அரசை தோற்றுவிப்பதற்கு இது உடன்படுகிறது.

ஆனால் தான் தோன்றியதில் இருந்து ஃபத்தாவுடன் வேறுபட்டிருந்த பல கருத்துக்களையும் இப்பொழுது ஒப்புக் கொண்டாலும், ஹமாஸ் வெளிப்படையாக இஸ்ரேல் இருக்கும் உரிமை, பாலஸ்தீனிய பகுதியில் ஆக்கிரமித்துள்ளதை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளது.

புஷ் நிர்வாகமும் கடிமா-லேபர் கூட்டணி அரசாங்கமும் இவ்வாறு ஹமாஸ் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், முற்றுகையை நிறுத்தி பேச்சு வார்த்தைகளை தொடக்க வன்முறையை கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளன.

இதற்கு விடை காணும் வகையில், உடன்பாடு அப்பாஸால் பிரதிபலிக்கப்படும் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை பாலஸ்தீனியர்களின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இசைந்துள்ளது; ஆனால் சர்வதேச அளவில் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதி மன்றமாக இருக்கும் பாலஸ்தீனிய தேசியக் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்றும் கூறியுள்ளது. உடன்பாட்டை ஒப்புக் கொண்டுள்ள இரு கட்சிகளும் அப்பாஸிற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்திருப்பது இஸ்ரேலை ஹமாஸ் உட்குறிப்பாக ஏற்பதற்கு ஒப்பாகும் எனக் கருதுகின்றன.

இந்த உடன்பாட்டில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெளிவாக்கியுள்ளது. "சர்வதேச சமூகத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் விருப்பத்தை நடைமுறையில் காட்டாமல் இருந்த நிலையில் ஹமாஸ் அரசாங்கம் சிறந்தது என்பதை இவ்வுடன்பாடு காட்டும் முயற்சி அல்ல என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி அமிர் பெரெட்ஸ் கூறினார். இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஓல்மெர்ட்டின் அலுவலகம் இதுபற்றிக் கருத்துக் கூற மறுத்துவிட்டது.

ஆனால் லெபனானனுக்கு எதிரான பேரழிவு கொடுத்த போரின் அரசியல், இராணுவப், பொருளாதார விளைவுகள், மற்றும் அலையென வந்துள்ள ஊழல் அவதூறுகள், அவற்றின் பொருளாதார, சமூகத் தாக்குதல்கள் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் மீது படர்ந்துள்ள தன்மை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள மகத்தான உள்நாட்டு அழுத்தத்தை ஓல்மெர்ட் அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது.

ஹாரேட்ஸ்-ன் கட்டுரையாளர் Danny Rubinstein அரசாங்கம் பாலஸ்தீனிய அதிகார அரசாங்கத்திற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், வெளியுறவு மந்திரி Tzipi Livni இந்த வாரத் தொடக்கத்தில் நியூ யோர்க்கில் ஐ.நா. கூட்டத்தின் போது அப்பாசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

உடன்பாடு அறிவிக்கப்பட்ட மறுநாள், ஒரு இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வீரர் கிலட் ஷாலிட்டை கடத்தியதற்கு பதிலடியாக கடந்த ஜூன் மாதம் கடத்தியிருந்த 21 ஹமாஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள், மந்திரிசபை உறுப்பினர்கள் ஆகியவர்களை விடுவிக்குமாறு உத்திரவிட்டது. அரசாங்கம் இதற்கு மேல்முறையீடு செய்தாலும் இது ஷாலிட்டிற்காக பாலஸ்தீனிய கைதிகள் பரிவர்த்தனையில் முதல் படியாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவின் பங்கு

ஐரோப்பிய சக்திகள் இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ளன; லெபனான் போருக்கு பின்னர் மத்திய கிழக்கில் உறுதிநிலையை தக்க வைக்க இது தேவை என்று அவை வாதிட்டுள்ளன.

இப்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பொதுவாக பெரும் ஆதரவு காட்டும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர்கூட ஈரானுக்கும் சிரியாவிற்கும் எதிராக விரோத நடவடிக்கைகளை தொடங்குவது, குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் இன்னும் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், அறிவார்ந்த செயலாக இருக்காது என்று மதிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு அண்மையில் மூன்று நாட்கள் வருகை தந்திருந்தபொழுது இத்தகைய உடன்பாடு வேண்டும் என்று அவர் விழைந்திருந்தார்; அங்கு அவர் ஓல்மெர்ட், அப்பாஸ் இருவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்; ஹமாசின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில், கட்சி மட்டும் அல்லாமல் தேசிய ஒற்றுமை அரசாங்கம் முழுவதும் வன்முறையை கைவிட்டுவிட்டு கடந்த இடைக்கால ஒப்பந்தங்களையும் ஒத்துக் கொண்டால், உடன்படிக்கையை இஸ்ரேல் ஏற்கும் என்றும் கூறினார். மேலும் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் முன்னிபந்தனையேதும் இன்றி பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பதில் மற்ற ஐரோப்பிய சக்திகள் இன்னும் குறைவான ஆர்வத்தைத்தான் கொண்டுள்ளன. ஈராக் மற்றும் லெபனானில் அமெரிக்க பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதில் அவை தம்மை மத்திய கிழக்கில் சுதந்திரமாகத்தான் வலியுறுத்தி நின்றன; தொடக்கத்தில் ஈரானுடன் தூதரக முறையில் உடன்பாடு வேண்டும் என்று வாதிட்டன; பின்னர் இப்பொழுது ஃபத்தா-ஹமாஸ் உடன்பாட்டை வரவேற்றுள்ளன.

ஒரு பாலஸ்தீனிய தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவது என்பது பொருளாதாரத் தடைகள் நீங்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது. பிரெஞ்சு வெளியுறவு மந்திரியான Philippe Douste-Blazy, "ஒரு பாலஸ்தீனிய தேசிய ஐக்கிய அரசாங்கம்... பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கு உதவிகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் சர்வதேச சமூகம் தன்னுடைய கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கு வழிகோலும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாட்டிற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்லாந்து தலைமை உறுப்பு நாடுகள் அனைத்தும் அத்தகைய அரசாங்கத்தை வரவேற்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. பின்லாந்தின் வெளியுறவு மந்திரான எர்க்கி துவோமியோஜா இந்த நடவடிக்கை சமாதான வழிவகைகளை மீண்டும் தொடக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் 25 ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் தயாரித்த அறிக்கையொன்று புதிய அரசாங்கம் வரவேற்கப்பட வேண்டும் என்று கூறினாலும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கூறாமல் நிறுத்திக் கொண்டது. உதவித் தடைகள் தொடரப்பட வேண்டுமா என விவாதிக்க அவர்கள் பின்னர் கூட இருக்கின்றனர்.

இத்தாலிய வெளியுறவு மந்திரியான Massimo D'Alema ஒரு படி மேலே சென்று தன்னுடைய சகமந்திரிகள் ஏற்கனவே புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதாக உடன்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கொடையாளிகள் சர்வதேச கூட்டம் ஒன்றில், பாலஸ்தீனிய பகுதிகளுக்கு 500 மில்லியன் டாலர்கள் மொத்த உதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. உதவிப் பிரிவின் தலைவரான ஜேன் எகலாண்ட் மாநாட்டில் முந்தைய வாரம் லெபனானுக்கு உறுதி மொழி கொடுக்கப்பட்ட அளவு பணமாவது பாலஸ்தீனத்திற்கும் தேவை என்று கூறினார்.

பத்து நாட்களுக்கு முன்பு காசாவில் இருந்து திரும்பியிருந்த உதவிப் பணியாளர் ஒருவர் அங்கு ஊட்டமின்மை மிக அதிக அளவில் இருப்பதாகவும், புதிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் உள்ளார்கள் என்றும் மாநாட்டில் கூறினார். பாலஸ்தீனிய பொருளாதாரம் முறிந்து விழும் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது. தனிநபர் தலா வருமானத்தில் ஆபத்தான சரிவு ஏற்பட்டுள்ளது; வேலையின்மை 50 சதவிகிதமாக உள்ளது; மூன்றில் இரு பகுதிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றன. காசாவில் கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் பொறுப்பற்ற தன்மையினால் விளைந்துள்ள பெருங்குழப்பத்தினால் ஐரோப்பியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; அதேபோல் இஸ்ரேலுக்கு எதிர்ப்பை காட்டியதால் ஏற்பட்டுள்ள செல்வாக்கு ஹெஸ்பொல்லாவிற்கு கூடியுள்ளதும் அவர்களுக்கு வியப்பு ஆகும். மத்திய கிழக்கில் உறுதியற்ற தன்மை, ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வட ஆபிரிக்கா உட்பட மத்தியதரைக்கடல் பகுதியில் அமெரிக்காவில் பெருகிய கட்டுப்பாடு ஆகியவை இருப்பதில் பெருகிய கவலை இருப்பதை அவர்கள் காட்டும் அக்கறை வெளிப்படுத்துகிறது.

ஆனால் அவர்களும்கூட தடையற்ற மேலாதிக்கத்தை கொள்ள விழையும் அமெரிக்க முயற்சிகளுக்கு சவால் விடுக்கும் முறையில் இராணுவ மற்றும் தூதரக முறையில் இப்பகுதியில் அழுத்தம் கொடுக்க விரும்புகின்றனர். எனவேதான் பாலஸ்தீனியர்களுடைய சமாதான அழைப்பிற்கும், லெபனானிற்கு படைகள் அனுப்புவதற்கும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்படுகின்றன.

ஈரான் மற்றும் சிரியா இரண்டுமே வாஷிங்டனுடன் ஒருவித உடன்பாட்டைத்தான் காண விரும்புகின்றன; இவையும் தேசிய ஐக்கிய அரசாங்கம், சமாதானத்திற்கு உறுதிமொழி கொடுத்துள்ளதை வரவேற்றுள்ளன.

முன்னாள் ஈரானிய ஜனாதிபதியும், அமெரிக்காவிற்கு 1979க்கு பின்னர் வருகை புரியும் மூத்த ஈரானிய அரசியல்வாதியுமான மொகம்மத் கடேமி, 12 நாள் சொந்த உரையாற்றும் பயணத்தை அமெரிக்காவில் மேற்கொண்டிருக்கும் போது பேசுகையில், அவருடைய சொற்கள் அரசாங்க கொள்கையை பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார். "இன்று ஒரு ஜனநாயக வழிவகைப்படி பதவிக்கு வந்துள்ள ஹமாஸே அதனுடைய உரிமைகள் கொடுக்கப்பட்டால் இஸ்ரேலுடன் சமாதானமாக வாழத்தயார் என நான் நினைக்கிறேன்; அதை ஒரு ஜனநாயக நாட்டை நடத்துவது போல் நடத்த வேண்டும், பாலஸ்தீனிய அரசாங்கத்தையும் அவ்வாறு நடத்த வேண்டும்; அப்பொழுது ஹமாசின்மீது இருக்கும் அழுத்தங்கள் குறையும். பாலஸ்தீனியர்கள் என்ன நினைத்தாலும் அதை நாங்கள் மதிக்கத் தயாராக இருக்கிறோம்"

சிரியாவின் வெளியுறவு மந்திரியான பரூக் அல்-ஷாரா முன்னாள் பாலஸ்தீனிய பிரதமர் அஹ்மத் குவேரியாவுடன் பேசிய பின் தன்னுடைய நாடு, "பாலஸ்தீனிய பிரிவுகளுக்கு இடையே தேசிய கொள்கைகளின் அடிப்படையில் உடன்பாடு காண்பதை வரவேற்கிறது" என்று கூறினார். சிரியாவில் நாடுகடத்தப்பட்ட பல பாலஸ்தீனிய தலைவர்கள் உள்ளனர்; இதில் ஹமாசின் அரசியல்குழுத் தலைவர் கலீட் மெஷாலும் அடங்குவார்.

வெள்ளை மாளிகையின் ஆரம்ப எதிர்கொள்ளல் புதிய அரசாங்கத்தின்மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றுவது போல் இருந்தது.

மத்திய கிழக்கு விவகாரங்களுக்கு அமெரிக்க அரசுத்துறை செயலராக இருக்கும் டேவிட் வெல்ச் புதிய அரசாங்கத்தின் திட்டத்தை நன்கு வாஷிங்டன் ஆராயும் என்றும், "நாங்கள் பார்க்கும் வரையில் அது ஒரு நல்ல தரத்தை எட்டியதாக தெரியவில்லை" என்றும் கூறினார்.

அரசுத்துறையின் செய்தி தொடர்பாளர் சீன் மக்கோர்மக் எதுவும் மாறிவிடவில்லை என்று வலியுறுத்தினார். "பாலஸ்தீனியர்கள் ஒரு ஒற்றுமை அரசாங்கம் பற்றி உடன்பாடு கண்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று அவர் கூறினார். தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றால் பாலஸ்தீனியர்கள் "விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்" என்றும் எச்சரித்தார்.

ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஐ.நா. என்ற நால்வர் அமைப்பின் மற்ற மூவருடனும் செப்டம்பர் 20 அன்று நியூ யோர்க் நகரில் சந்தித்துப் பேசிய பின்னர், அமெரிக்கா ஒரு கூட்டு அறிக்கையில், "பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியை, அத்தகைய அரசாங்கத்தின் அரங்கு நால்வர் கோட்பாட்டை பிரதிபலித்து விரைவில் செயற்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதை" வரவேற்கிறது என்று கையெழுத்திட்டுள்ளார்.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் மீதுள்ள தடைகளை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதி அளிக்கவில்லை என்றாலும், இந்த அறிக்கை மனிதாபிமான வகையிலான உதவிகள் பாலஸ்தீனத்திற்கு ஹமாஸ் தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் அல்லாமல் மாற்றுவழியாக தற்காலிக சர்வதேச அமைப்பு ஒன்றின் மூலம் அனுப்பப்படலாம் என்றும், இஸ்ரேல் வரி, சுங்கத்துறை வருமானங்களுக்காக கொடுக்க வேண்டிய, நிறுத்தி வைத்துள்ள 500 மில்லியன் டாலர்களை பாலஸ்தீனியர்களுக்கு கொடுக்கலாம் என்றும் ஊக்கம் அளித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைசினால் ஒப்புதல் தரப்பட்டுள்ள இந்த அறிக்கை கடந்த வாரம் வந்த ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின் கருத்தைப் பிரதிபலிக்கிறது. நால்வர் குழு எதையும் செய்யும் என்று இந்த அறிக்கை உறுதி கொடுக்காவிட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செல்ல அமெரிக்கா தயாராக இருப்பது லெபனான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலேற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து அதன் நிலைமை வலுவற்று இருப்பதை பிரதிபலிக்கிறது; எனவே பாலஸ்தீனிய அதிகாரத்துடன் ஏதோ ஒருவிதத்தில் உடன்பாட்டை காண இஸ்ரேல் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.

சுயாதீனமான சோசலிசக் கொள்கை தேவை

கடந்த ஜனவரி மாதம் சட்ட மன்றத் தேர்தல்களில் அமோக வெற்றியடைந்து எட்டு மாதங்களில் ஃபத்தாவுடன் ஹமஸ் உடன்பாட்டை கொண்டுள்ளது. இதன் தேர்தல் வெற்றி இடைவிடாப் பேரழிவு மீதான மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களின் அவமானங்கள் ஆகியவை அவர்கள் மீது இஸ்ரேலினால் சுமத்தப்பட்டது, வாஷிங்டன் தன்னுடைய வட்டார மேற்பார்வையாளரை கட்டுப்படுத்தாது, ஃபத்தாவின் ஊழல், ஒருதலைப்பட்ச ஆதரவு, பெருகிய முறையில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வளரும் வறுமை ஆகியவற்றின் மீதுகொண்டிருந்த பெருந்திகைப்பு, சீற்றம் ஆகியவற்றின் விளைவு ஆகும்.

ஹமாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை இஸ்ரேல் வரவேற்று, அது பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டனால் அழைக்கப்பட்டதை பயன்படுத்தி தன்னுடைய இலக்குளை மிருகத்தனமான சக்தியினால் கொள்ளுவதற்கு உரிமம் பெற்றது போல் நடத்து கொண்டு, ஒருதலைப்பட்சமாக எல்லைகளை மாற்றியமைத்தும், மேற்குக்கரையில் உள்ள மகத்தான இராணுவச் சுவருக்கு பின் இருக்கும் பெரும் நிலப்பகுதிகளை அபகரிக்கவும் முயன்றது.

ஃபத்தாவுடன் ஓர் அரசாங்கத்தை ஹமாஸ் அமைக்க ஒத்துக் கொண்டு, இரண்டு நாடுகள் தீர்விற்கும் தயாராக உள்ளது; மிகக் குறைந்த, பாலஸ்தீனிய இறைமையை ஓரளவேனும் காட்டும் நாட்டை கூடத் தான் ஏற்க முடியாது என்று இஸ்ரேல் கூறிய பின்னரும் கூட இந்த உடன்பாடு வந்துள்ளதானது பாலஸ்தீனியர்களைப் பட்டினி போட்ட இஸ்ரேலின் கருத்துக்களை ஏற்க வைக்கும் முயற்சி மற்றும் காசாவிலும் மேலைக் கரையிலும் நிகழ்த்தப்பட்ட குருதிப் பிரச்சாரங்கள், "இரு நாடுகள் தீர்வு" மற்றும் "சாலை வரைபடம்" என்ற அனைத்துப் பேச்சையும் அம்பலப்படுத்தின. உண்மை என்ன என்றால் தொடர்ந்த சட்ட விரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்களுள் ஒன்று பாலஸ்தீனியர்களை இராணுவத் தாக்குதல்கள், படுகொலைகள், கடத்தல்கள், குண்டுவீச்சுக்களுக்கு ஆளாதல், ஊரடங்கு உத்தரவுகள், நிதிய, மற்றும் அரசியல் தடைகளை வாஷிங்டன் சுமத்துதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தியுள்ளன.

பாலஸ்தீனியர்களால் முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இஸ்ரேலுடன் "சமாதானப் பேச்சுக்கள்", உடன்பாட்டிற்கான தளத்தை காண்பதற்கு அடிப்படை ஆகியவை வேண்டுமென்றே நாசத்திற்கு உட்படுத்தப்பட்டன. இஸ்ரேல் பாலஸ்தீனிய குடிமக்களை கொன்றதுதான் ஹமாசுக்கும் ஃபத்தாவுக்கும் இடையே இப்பொழுது ஒப்புக்கொள்ளப்பட்டது போன்ற உடன்படிக்கையை முன்னரே கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் ஆகும்; அவை பதிலடி தாக்குதல்களுக்கு தூண்டுதல் கொடுத்தன; ஜூன் மாதம் முதல் காசா மீது முழு அளவிலான இராணுவத் தாக்குதலுக்கும் முக்கிய காரணமாகும். இஸ்ரேலின் எல்லைகள் ஒருதலைப்பட்சமாக வரையறுப்பதற்கு கிழக்கு ஜெருசெலம் மற்றும் மேற்குக்கரையின் பெரும்பகுதிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஓல்மெர்ட் அரசாங்கம் செயல்படுத்த விரும்புகிறது.

ஃபத்தாவிற்கு தக்க மாற்றீடாக ஹமாஸ் இருந்ததில்லை. இதன் வளர்ச்சி PLO திட்டமான மதசார்பற்ற தேசியத்தின் தோல்வியை ஒட்டி விளைந்த பிற்போக்குத்தனமாகும். ஆனால் ஹமாஸ் தான் பிரிதிநிதித்துவப்படுத்தும் பாலஸ்தீனிய மற்றும் அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் பகுதிகளுக்குகாக அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதைத்தான் ஹமாசும் விரும்புகிறது.

பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொண்டுள்ள கொடூரமான நிலைமை அவர்கள் தங்கள் ஜனநாயக, சமூக விழைவுகளை ஒரு தேசிய திட்டத்தின்கீழ், பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டும் தன்மையின் கீழ் அடையமுடியாது என்பதை நிரூபணம் செய்கிறது. பல தசாப்தங்கள் பெரும் வீரத்துடனும், தியாகத்துடனும் நடத்தப்பட்ட போராட்டத்தில் விளைந்தது எல்லாம் இஸ்ரேலின் முழு தயவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கட்டுப்பாட்டிற்குள்ளே இருக்கும் சேரிகளின் தோற்றம்தான்.

மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளின் உருவாக்கத்தை நோக்கமாக கொண்ட சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியின் மூலம்தான் ஒரு முன்னேற்றகரமான தீர்வு காணப்பட முடியும். அதுதான் ஏகாதிபத்தியத்தால் சுமத்தப்பட்ட செயற்கையான எல்லைகளை அகற்றி, பகுதியின் விலைமதிப்பற்ற வளங்களை அதன் அனைத்து மக்களும் பயன்பெறக்கூடியதாக ஆக்கும்.