World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Election manifesto of the Socialist Equality Party of Britain

பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை

27 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

மே 3ம் தேதி ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்ட மன்றத்திற்கு நடக்க இருக்கும் தேர்தல்களுக்கான பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கீழே வெளியிடுகின்றோம். மேற்கு ஸ்கொட்லாந்திலும் தெற்கு வேல்ஸ் மத்திய பகுதியிலும் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் நிற்கும் பிராந்திய பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் வலைத் தளத்தை "ஸ்கொட்லான்ட் மற்றும் வேல்ஸில் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்" என்பதில் எளிதாய் அணுக முடியும்.

ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்ற தேர்தல்கள் மே 3 அன்று நடைபெற உள்ளன; எமது பிரச்சாரத்திற்கு அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஆதரவு கொடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

SEP க்கான வாக்கு என்பது, பெரும் செல்வம் கொழிப்பு உடையவர்களின் அரசியல் கருவியாக செயல்படும் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய, உண்மையான, சோசலிச இயக்கத்தை வளர்ப்பதற்கான வாக்கு ஆகும். இன்னும் கூடுதலான வகையில் தனியார் செல்வக்குவிப்பை என்றுமில்லாத அதிக மட்டத்திற்கு குவிக்கும் இச்சலுகை நிறைந்த உயரடுக்கின் முயற்சிகள் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக அழிவுகரமான காரணி ஆகும்.

வெடித்துள்ள அமெரிக்க வலியத்தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பில், பிரிட்டனில் இருக்கும் தொழிலாளர் அனைவரும் சர்வதேச அளவில் அவர்களுடைய சகோதரர்கள், சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு நாங்கள் முயல்கிறோம்; தொழிற்கட்சியின் ஆதரவுடன் அத்தகைய வலியத்தாக்குதல் ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சட்டவிரோத போர்களை ஈரானுக்குள்ளும் விரிவடையச் செய்யும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

ஒட்டுண்ணித்தன உயரடுக்கின் சுய நலன்களுக்கு பதிலாக, உலக மக்களில் பரந்த பெரும்பான்மையினரின் சமூக நலன்களை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார வாழ்வை மறு ஒழுங்கு செய்வதன் மூலம் போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ இலாப முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

ஏகாதிபத்திய போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக

தொழிற்கட்சி அதிகாரத்திற்கு வந்த பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இத்தேர்தல்கள் ஒன்றாக வருகின்றன. அப்பொழுது பிரதம மந்திரி "நிலைமை சீரடையும்", தொழிற்கட்சி "அறநெறி சார்ந்த" வெளியுறவுக் கொள்கைகளை தொடரும், "தூயதைவிட தூயதாக" இருக்கும் எனக் கூறியதெல்லாம் இப்பொழுது வெறுப்படைய வைக்கும் நகைச் சுவையாகத்தான் உள்ளன.

ஈராக்கை ஒரு குருதி கொட்டும் தீய கனவாக மாற்றிவிட்ட தடையற்ற இராணுவவாத ஆக்கிரமிப்புக் கொள்கையை கொண்டுள்ள வெள்ளை மாளிகையின் குற்றம் சார்ந்த சிறுகுழுவின் முக்கிய கூட்டாளியாக பங்காற்றியது பிளேயர் அரசாங்கத்தின் மிகப் பெரிய தனியொரு குற்றம் ஆகும்.

நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதன் எண்ணெய் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக நாட்டின் உள்கட்டுமானம் பெரும் அளவில் அழிக்கப்பட்டுவிட்டது. நாட்டு மக்கள் அன்றாடம் அடக்குமுறை, சித்திரவதை மற்றும் வன்முறையை ஆக்கிரமிப்பு படைகள், மற்றும் அவற்றின் கைப்பாவை அரசாங்கம் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்கின்றனர். குறுகிய பற்று பதட்டங்கள் வேண்டுமேன்றே உள்நாட்டுப் போரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தூண்டிவிடப்படுகிறது; இது நாட்டை மத, இனக்குழு வழிகளில் பிரிப்பதற்கான முன்னோடிச் செயல்களாகும்.

இப்பொழுதும் கூட ஒரு முடிவு தென்படவில்லை. மாறாக இன்னும் 30,000 கூடுதலான அமெரிக்கப் படைகள் பாக்தாத்திற்கு எழுச்சியை அடக்குவதற்கும் அமெரிக்க பெருநிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெயை கவர்வதற்காகான முயற்சிகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன.

புஷ் நிர்வாகமும் பிளேயர் அரசாங்கமும் ஆப்கானிஸ்தானில் வசந்தகாலத்தில் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன - இது இராணுவ வகை கத்திரிச் செயற்பாடு போல் அமைந்து மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியன் பகுதியில் இருக்கும் உலகின் எண்ணெய் வளங்களின் பெரும்பகுதியின் மீது இரும்புப் பிடியினால் ஒருங்கிணைக்கும் வகையில் இருக்கும்.

இத்தகைய எண்ணெய்க்கான போரின் மையத்தில் ஈரான் மீது ஒரு இராணுவத் தாக்குதல் நடத்துவதை நியாப்படுத்துவதற்கான பிரச்சாரமும் உள்ளது; அதில் ஒருவேளை அணுவாயுதத் தாக்குதல்களும் இருக்கக்கூடும்; கற்பனையும் செய்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை அது கட்டவிழ்த்துவிடும். பிரிட்டனின் திரிசூல (Trident) முறை நவீன தரத்திற்குக் கொண்டுவரப்படும் என்னும் முடிவு முக்கியமான அணுவாயுத ஆபத்து வாஷிங்டன் மற்றும் லண்டனில் இருந்து வருகின்றன என்பதை தெளிவாக்குகிறது.

இப்படி நடந்து கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் பரந்த போர் எதிர்ப்பு உணர்வை மீறும் வகையில் இடம்பெறுகின்றன.. பல மில்லியன்கள் அளவிலான மக்கள் உலகளாவிய முறையில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னரும்கூட ஈராக்கியப் போர் தொடக்கப்பட்டது. நவம்பர் 2006 தேர்தல்களில் அமெரிக்க மக்கள் புஷ்ஷின் போர் ஈடுபாட்டை நிராகரித்த சில வாரங்களுக்குள்ளேயே ஈராக்கில் புஷ்ஷின் "அலை எழுச்சி" வந்தது.

பிரிட்டனில், பிளேயர் வாக்காளர்களின் விருப்பத்தை மீறுவதுதான் தனக்கு வழிகாட்டும் கொள்கை என்று வைத்திருக்கிறார். ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்களின் திறனில் சிறிது குறைந்தாலும் அது வாஷிங்டனுடனான உடன்பாட்டை மீறல் என்று சிலர் கூறுவது "Son of Star Wars" ஏவுகணைப் பாதுகாப்பு முறை நிலைநிறுத்தப்படுவது பற்றி புஷ்ஷும் பிளேயரும் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என்ற வெளிக்காட்டலால் நிராகரிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ கட்சிகளுள் இப்போர் உந்துதலுக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு ஏதும் இல்லை. தொழிற் கட்சிக்குள்ளேயோ அல்லது எதிர்க்கட்சிகளுக்குள்ளேயோ ஈராக்கில் இருந்து உடனடியாக படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையோ அல்லது பிளேயர் போருக்குப் பொறுப்பு கூறவேண்டும் என்றோ தீவிர முயற்சி ஏதும் இல்லை. ஈரானுக்கு எதிரான ஆக்கிரோஷமான போர் முயற்சிகளுக்கு எதிராக எவரும் ஒரு நிலைப்பாட்டையும் கொள்ளவில்லை. அமெரிக்காவில் பெயரளவிற்கு ஒரு எதிர்ப்பு என்பதை தவிர ஜனநாயகக் கட்சியினர் ஏதும் செய்துவிடவில்லை; அதே நேரத்தில் புஷ்ஷின் மீது பெரிய குற்ற விசாரணை நடத்தவோ போருக்கு நிதி மறுக்கும் முயற்சியோ இல்லை.

தந்திரோபாய அளவில் பூசல்கள் எப்படி இருந்த போதிலும்கூட, அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஐரோப்பிய, ரஷ்ய, சீன போட்டியாளர்களுக்கு எதிராக சரிந்து கொண்டிருக்கும் தன்னுடைய பொருளாதார நிலையை சீர்படுத்த, உலகின் முக்கிய ஆதாரங்கள், சந்தைகளை பிரித்துக் கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு தன்னுடைய மேலாதிக்கம் நிறைந்த இராணுவ நலன்களை பயன்படுத்திக் கொள்ள உறுதி பூண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து தன்னுடைய உலக அந்தஸ்திற்கு அமெரிக்காவின் ஆதரவை நம்பியிருக்கும் பிரிட்டன் உலக அரங்கில் தன்னுடைய வலிமையை காட்டிக் கொள்ளுவதற்கு வாஷிங்டனுடன் உடன்பாட்டை கொண்டுள்ளது.

ஐரோப்பிய சக்திகள் அல்லது ஐக்கிய நாடுகள் மீது அமெரிக்காவின் போர் உந்துதலை எதிர்ப்பதற்கு எத்தகைய நம்பிக்கையையும் வைப்பதற்கில்லை. 2003ல் இருந்து ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவம் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஒப்புதல் முத்திரையிட்ட தீய பங்கைப் புரிந்து, லெபனான் மீதான தாக்குதலிலும் அதை தொடர்ந்து ஆபிரிக்காவில் கணக்கிலடங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆதரவைத்தான் ஐ.நா. கொடுக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய சக்திகளை பொறுத்த வரையில் வாஷிங்டனை தொடர்ந்து திருப்திபடுத்தத்தான் அவை முற்பட்டுள்ளன; அதே நேரத்தில் இராணுவத்தை பயன்படுத்தி தங்களுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னிலைப்படுத்துவதற்கும் அவை முற்பட்டுள்ளன.

போருக்கு எதிரான போராட்டம் என்பது எல்லாவற்றிகும் மேலாக ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும். பிளேயர் அரசாங்கமும் அதன் புது கன்சர்வேடிவ் நட்புக் கட்சிகளும் உலகெங்கிலும் பெருநிறுவனம் மற்றும் நிதிய அமைப்புக்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிதி ஆதிக்க குழுவின் அரசியல் பிரதிநிதிகள்தாம்; அக் குழுவின் கொள்ளை நலன்களோ, வலிமையை பயன்படுத்தித்தான் அடைய முடியும்; அதுவும் கூட உலகின் பெரும்பாலான மக்களின் இழப்பில்தான் முடியும். தேசிய எல்லைகளை கடந்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கம் ஒன்றுதான் ஒரு மூன்றாம் உலகப் போருக்கு சரிகின்ற போக்கை நிறுத்த முடியும்.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம்

இராணுவ வெற்றிகள் வகைக்கு இணையாக தொழிற்கட்சி அரசாங்கத்தின் உள்நாட்டை கொள்ளையடித்து சூறையாடும் கொள்கையும் உள்ளன. முக்கியமான சமூக இருப்புக்களின் மீது பிளேயர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்; மார்கரெட் தாட்சர் ஆரம்பித்த அரசாங்கத்தின் பொதுநலன்களை தனியார் மயமாக்குதலையும் இவர் தொடர்கிறார்.

1997ம் ஆண்டு தொழிற்கட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, பிரிட்டனின் உயர் மட்ட ஆயிரம் செல்வந்தர்களின் மொத்த செல்வம் 100 பில்லியன் பவுண்டிற்கு சற்றே குறைவாகத்தான் இருந்தது. இன்றோ இது 300 பில்லியன் பவுண்ட் என்று மும்மடங்காக உயர்ந்துள்ளது; இதற்குக் காரணம் சண்டே டைம்ஸ் விளக்கியுள்ளது போல் உலகின் முதலாவது "கடல் கடந்த வரிவிலக்கு காப்பகமாக" இது இருப்பதுதான். பிரிட்டனின் 54 பில்லியனர்கள் தங்கள் செல்வங்களில் அதிகமாக வரிகள் ஏதும் செலுத்தவில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது; அவர்களில் 32 பேருக்கும் மேலானவர்கள் தனிப்பட்ட வரி ஒரு பென்னி கூட செலுத்தவில்லை என்றும் தெரிகிறது. இதற்கு மாறாக தொழிற்கட்சி பதவிக்கு வந்த பின்னர், பிரிட்டனில் உள்ள மிக வறிய இல்லங்கள்கூட வரிகளில் உயர்ந்த பங்கைக் கொடுத்து அரசாங்க நலன்களிலும் மிக குறைவான பங்கைத் தான் கொண்டிருக்கின்றன.

இதன் விளைவாக, இப்பொழுது பிரிட்டன் உலகிலேயே பெரும் சமூகரீதியாய் துருவமுனைப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. மக்களில் ஒரு சதவிகிதத்தினர் நாட்டின் 23 சதவிகித செல்வம் அனைத்தையும் கொண்டுள்ளனர்; 62 சதவிகித எளிதில் பணமாக மாற்றக்கூடிய மொத்த சொத்துக்களை கொண்டுள்ளனர்; அதே நேரத்தில் மக்களில் மிக வறியவர்களில் பாதிப்பேர் நாட்டின் செல்வத்தில் 6 சதவிகிதத்தை மட்டுமே கொண்டும் எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதை பெற்றிருக்கின்றன.

வேலை கிடைக்காதவர்கள், இயலாதவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிப்பவர்கள் எனக் கூறுதல் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வக் கொழிப்புடைய ஒட்டுண்ணி அடுக்குத்தான் பொறுக்க முடியாத தன்மையை கொண்டுள்ளது எனலாம்.

ஆளும் உயரடுக்கு, பிரான்சில் புரட்சிக்கு முன்பு இருந்த மேட்டுக்குடி ஆட்சியின் தன்மையைக் கொண்டுவிட்டது. பெரும் செல்வந்தர் அடுக்கு சமூகத்தின் பொருளாதார நலன்களுக்கு எந்த பங்களிப்பையும் செய்வது இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊக முறை, அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்கியது மற்றும் இருக்கும் நிறுவனங்களின் இருப்புக்கள் குறைக்கப்பட்டது ஆகியவற்றின் மூலம் பெரும் செல்வத்தை அடைந்துள்ளனர். அவர்கள் தலைவர்களாக இருக்கும் நிறுவனங்களில் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன, வேலைகள் தகர்க்கப்படுகின்றன, ஓய்வூதிய நிதிகள் சூறையாடப்படுகின்றன; அதே நேரத்தில் அவர்கள் தங்களுக்கு என மிக உயர்ந்த ஊதியம், போனஸ், பங்கு விருப்பங்கள் போன்றவற்றைக் கொடுத்துக் கொள்ளுகின்றனர்.

செல்வம் இவ்விதத்தில் மறுபங்கீட்டிற்கு உட்படுதல் என்பது தொழிலாளர்களிடம் இருந்து பணக்காரர்களுக்கு செல்வது என்பது மிகக் கடுமையான சமூக இழப்புக்கள், பொருளாதார இடர்ப்பாடுகள் ஆகியவற்றிற்கு வகை செய்துள்ளது.

அனைவருக்கும் பொதுநல ஏற்பாடுகள் என்பது இப்பொழுது இருப்புக்கள் அடிப்படையில் சோதிக்கப்படும் நலன்களாக மாற்றப்பட்டு மிகுந்த தேவையுடையவர்களுக்கு மட்டும் இலக்காக கொள்ளப்படுகிறது. ஆயினும்கூட இங்கிலாந்தில் சிறு குழந்தைகளின் வறிய நிலை ஐரோப்பாவிலேயே மோசமானது ஆகும்; ஓய்வூதியம் பெறுபவர்களில் 14 சதவிகிதத்தினர் ஆண்டு ஒன்றிற்கு 5,000 பவுண்டுகளுக்கும் குறைவாத பணத்தில்தான் வாழ்கின்றனர்.

அரசாங்கத்தின் பொருளாதார, பொதுநலக் கொள்கையின் உண்மையான மரபுரிமைச் செல்வம் உழைக்கும் ஏழைகளுடைய எண்ணிக்கையில் மிகப் பெரிய அதிகரிப்பு ஆகும். 3.4 மில்லியன் குழந்தைகளில் பாதிப் பேர் வறுமையில் வாடுகின்றன மற்றும் வேலைசெய்தால் சம்பளம் என்ற நிலையில் பெற்றோரை கொண்டுள்ளனர். இன்னும் ஊதிய விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதுதான் தொழிற் கட்சியின் சமீபத்திய நலம்சார் நன்மைகள் மீதான தாக்குதலுக்கு உந்துதலாக உள்ளது; இது குறிப்பாக ஒற்றைத் தாயார் மகளிருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஏணியில் கிழ்ப்படிகளில் உள்ளவர்கள் அப்படி இருப்பதற்குக் காரணம் அவர்கள் கடுமையாக உழைக்காததுதான் என்று பல முறையும் கூறப்படும் மந்திரம் ஒரு தீய அவதூறு ஆகும். உண்மையில் ஐரோப்பாவிலேயே அதிக நேரம் பிரிட்டிஷார் உழைத்தும் கூட, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு கூடுதல் நேரம் ஊதியமில்லாமல் உழைத்தும்கூட, தொழிலாளர்கள் வறிய நிலையில் இருப்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஆகும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உயிர் பிழைத்திருக்கவே மிகப் பெரிய முறையில், திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு தனிநபர் கடன்களை வாங்கும் கட்டாயம் இல்லாவிடில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும்.

இங்கிலாந்தின் மொத்த தனிக் கடன் இப்பொழுது 125 டிரில்லியன் பவுண்டுகளாக இருப்பதுடன் ஒவ்வொரு நான்கு நிமிஷங்களுக்கும் 1 மில்லியன் பவுண்டுகள் அதிகமாகி வருகிறது. இங்கிலாந்தில் சராசரி இல்லக்கடன் 9,000 பவுண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது; இதில் அடமானம் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் வயதிற்கு வந்த மக்கள், எடின்பரோ, கிளாஸ்கோ, கார்டிப் மற்றும் ஸ்வான்ஸி நகரங்களின் மொத்த மக்கட் தொகைக்கு சமமானவர்கள் திவாலாகும் தன்மையை எதிர்நோக்கியுள்ளனர்; இவர்களுடைய பாதுகாப்பு கொடுக்கப்படாத கடன்கள் (கடன் அட்டைகள் போன்றவை) 10,000 பவுண்டிற்கும் மேலானது ஆகும். ஒவ்வொரு வேலைநாளிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் ஒரு நபர் திவால் என்று அறிவிக்கப்படுகிறார். தனிப்பட்ட திவால்கள் கடந்த ஆண்டு 55.5 சதவிகிதம் உயர்ந்துவிட்டது; தனிப்பட்ட விருப்பு உரிமை உடன்பாடுகளின்படி (கடன்காரர்களுக்கும் கடன்கொடுப்பவர்களுக்கும் இடையே முறையான ஒப்பந்தம்) கடன்கள் ஆண்டு ஒன்றிற்கு 118 சதவிகிதம் அதிகரித்து வருகின்றன.

அடமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரி இல்லக் கடன் கிட்டத்தட்ட 60,000 பவுண்டுகள் ஆகின்றது. இது தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே போகிறது; இங்கிலாந்தில் சராசரி வீட்டு விலை இப்பொழுது 200,000 பவுண்டையும் விடக் கூடுதலாகும். வரிகளுக்கு முன்பு இங்கிலாந்தில் சராசரி இல்ல வருமானம் 30,000 பவுண்டுகள்தான். அடமானத் தொகை செலுத்ததாத நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது; கிட்டத்தட்ட 35,000 வீடுகளைப் பொறுத்த வரையில் 2006 மூன்றாம் காலாண்டு பகுதியில் கடனில் மூழ்கி மறுஉடைமையாக்கிக் கொள்ளும் ஆணைகள் முன் முயற்சிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட தத்தளித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையைத்தான் பல தொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ளனர்; இத்துடன் இது தொடர்பான கவலைகள், குடும்ப முறிவுகள் மற்ற சமூகப் பிரச்சினைகளும் சேர்ந்துள்ளன; இதையொட்டி UNICEF, அமெரிக்காவுடன் சேர்த்து பிரிட்டனை இளமையாக இருக்க வேண்டிய தொழிற்துறை உலகில் மோசமான இடம் என்று விவரித்துள்ளது.

அதேபோல் உலகில் வயதானவர்களும் மோசமான நிலையில் இருக்கும் இடங்களில் ஒன்றாகும்; மிகக் குறைந்த அரசாங்க ஓய்வூதியத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல இந்த நிலைமை. தங்கள் உழைக்கும் நாளெல்லாம் நிர்வாகத்தின் திட்டங்களில் பணம் செலுத்திய மில்லியன் கணக்கான மக்கள் இப்பொழுது அவர்களுடைய பணங்கள் முதலாளிகளால் அபகரிக்கப்பட்டு விட்டதை காண்கின்றனர்; அல்லது பங்குச் சந்தை சூதாட்டத்தில் இழக்கப்பட்டு விட்டதை காண்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள அனைத்து மொத்த தனியார் பிரிவு ஓய்வுத் தொகை பற்றாக்குறை இப்பொழுது 150 பில்லியன் பவுண்டுகள் என்று உள்ளது. ஆனால் பொதுத்துறை ஓய்வுப் பற்றாக்குறை நிதியான 700 பில்லியன் பவுண்டுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவாக போய்விடுகிறது.

உலகில் ஒரு சமயம் பொதுநலத்திட்டங்களை மிகவும் சிறப்பாக வளர்த்திருந்த நாடு என்ற நிலையில் இருந்து, இப்பொழுதும் பிரசவக் காலம் வரை இலவச சுகாதாரத் திட்டத்தையும் மற்றும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியையும் கொண்டிருக்கும் இங்கிலாந்தில், நிலைமை இன்னும் மோசமாகப் போயுள்ளது. இந்தச் சலுகைகளும் இப்பொழுது கல்விக் கட்டணம், ஓய்வூதிய வயது 68க்கு உயர்த்தப்படல், சுகாதாரப் பாதுகாப்பு பகிர்ந்து கொடுக்கப்படல், சில மருத்துவ வசதிகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்ற வகையில் வந்துள்ள தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை பணிகள் அனைத்தும் தனியார் மயமாக்குதல் முற்றுப் பெற்றுவிட்டால், இன்னும் பரந்த மக்கட்தொகை அடுக்குகள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவர். மேலும் பொருளாதார தாழ்வு ஏதேனும் ஏற்பட்டால் அது உடனடியாக மில்லியன் கணக்கான மக்களை வறிய நிலையில் ஆழ்த்திவிடும். Combined Insurance நடத்திய ஆய்வு ஒன்றின்படி, உலக மக்கட் தொகையில் பாதிக்கு மேல் எதிர்பாராமல் வருமான இழப்பைக் கொண்டால் 17 நாட்களுக்கு மேல் தப்பிப் பிழைக்க முடியாது என்று கூறுகிறது.

ஜனநாயக உரிமைகளைக் காத்திடுக

பிரிட்டன் போர்க்கோலத்தில் இருப்பதாக பிளேயர் அறிவித்து, இதற்காக நிரந்தர நெருக்கடிக்கால நிலை தேவை என்று கூறும்போது, அவர் ஒன்றும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. இத்தகைய தீவிர வர்க்க வேறுபாடுகள் இருக்கும் சமூகம், ஜனநாயக வகைப்படி ஒழுங்குபடுத்தப்பட முடியாது.

மக்களில் மிகப் பரந்த பிரிவினரை வறுமையில் ஆழ்த்தும் நடவடிக்கைகளுக்கு ஓர் அரசாங்கம் மக்களுடைய ஆதரவை எதிர்பார்ப்பது என்பது முடியாதது ஆகும். அரச அதிகாரத்திற்கு எதிராக உரிமைகளை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்த சட்டரீதியான பாதுகாப்புக்களை அகற்றவும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்திடம் இருந்து இடைவிடாமல், வரும் கோரிக்கைகளுக்கு தொடக்க உந்துதலை இது வழங்குகிறது.

மேலும், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் என்பது உலகின் ஆதார வளங்களை காலனித்துவ பாணியிலான போர்களின் மூலம் வெற்றி கொண்டு செதுக்கி எடுப்பதற்கான மற்றும் அத்துடன் சேர்ந்ததாய் பிரிட்டிஷ் சமூகத்தை இராணுவமயப்படுத்தல் இவற்றுக்கான உந்துதலின் தவிர்க்க முடியாத விளைவாகும்.

பிரிட்டன் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்ற உண்மை முற்றிலும் அரசாங்கத்தின் பொறுப்பே ஆகும். ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோதப் போரில் சேர்ந்த வகையில், இது மத்திய கிழக்கை உறுதித் தன்மையில் இருந்து குலைத்து, இங்கிலாந்திற்குள்ளும் இன, மத வகை அழுத்தங்களுக்கு எரியூட்டியுள்ளது. இந்த அச்சுறுத்தலை போரிடுவதற்கான வழிவகைகள் எனக் கூறி அரசாங்கம் செயற்படுத்தும் நடவடிக்கைகள் அநீதித் தன்மையைத்தான் வளர்க்கிறது; அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

இதையொட்டி பயங்கரவாத அச்சுறுத்தல் அரசாங்கத்தின் அதிகாரங்களை போலீஸ் வகையிலாக்குவதை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் பிரிட்டிஷ் மக்களுடைய வாழ்வு மற்றும் உரிமைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சி என்ற கருத்திற்கு பலமுறையும் அரசாங்கம் தன்னுடைய இகழ்வை வெளிப்படுத்தியுள்ளது. தான்தோன்றித்தனமாக கைது செய்து சிறை வைத்தலை தடுக்கக் கூடிய ஹாபியஸ் கார்ப்பஸ், ஆட்கொணர்தல் உரிமை, குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது; நடுவர்கள் மூலம் விசாரணை நடத்துவது குறைக்கப்பட்டு விட்டது, பேச்சு சுதந்திரம், வெளிப்பாட்டு உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன, ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்ற கருத்து அலட்சியப்படுத்தப்படுகிறது. நாசிச குற்றங்களால் எங்கும் தோற்றுவிக்கப்பட்ட கடும்வெறுப்புக்களின் விளைவுகளாக இருந்த தஞ்சம் கோருவோர் உரிமைகள் மற்றும் ஜெனிவா மரபுகளின் விதிகள் அகற்றப்பட்டுள்ளன.

சிறுபான்மை சமூகங்கள் போலீசாரால் அற்பமான போலிக்காரணங்களுக்காக சோதனையிடப்படும் தன்மையில் இருக்கும் நாடாக பிரிட்டன் உள்ளது; பல மாதங்களுக்கும் குற்றச்சாட்டு இல்லாமல் மக்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; ஆயுதமேந்திய போலீசார் நடுப்பகலில் நிரபராதிகளை சுட்டுத் தள்ளுகின்றனர். ஒரு நெருக்கடி நிலைமையை அறிவித்து, பாராளுமன்ற இசைவு இல்லாமல் நிர்வாக ஆணைமூலம் ஆளும் அதிகாரத்தையும் அரசாங்கம் தனக்கு அளித்துக் கொண்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒட்டி பீதியைக் கிளப்புதல், அதையடுத்து முஸ்லிம்கள் மற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அவதூறுகள் கூறுதல் ஆகியவையும் வெளிவந்துள்ளன. இதன் நோக்கம் முதலாளித்துவத்தினால் விளையும் சமூகப் பிரச்சினைகளுக்கு பலியாடுகளை உருவாக்குவதன் மூலம் உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதும் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும் ஆகும்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பதற்கு இருக்கும் குடி உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது மட்டும் பொருளல்ல; அவை விரிவாக்கப்படவும் வேண்டும்; இது அரசியல் முறையை முற்றிலும் மறுசீரமைப்பதில் இருந்து தொடங்க வேண்டும். முடியாட்சி மற்றும் பிரபுக்கள் மன்றம் ஆகியவற்றை அகற்றுதல் என்பது வர்க்கச் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தொடக்க முயற்சியாகும். அதுதான், வெஸ்ட்மின்ஸ்டர், ஹோலிரூட் மற்றும் கார்டிப்பில் முதலாளித்துவ அரசாங்கமான பாராளுமன்ற வழிவகைகளுக்கு பதிலாக, உழைக்கும் மக்களால் சமூகத்தின் மீது உண்மையான கட்டுப்பாட்டை கொண்ட அரசாங்க அமைப்பை தோற்றுவிப்பதற்கு ஒருங்கிணைந்த செயற்பாடாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் என்பது பொருளாதார, சமூக ஒழுங்கு அமைப்பில் அடிப்படை மாற்றத்துடன் பிணைந்துள்ளது ஆகும். ஜனநாயகம் என்பது பேரழிவு உடைய தனியார் செல்வத் தரங்கள் ஏற்கப்பட்டு சமூகத்திற்கு எதிராக ஒரு கருவி போல் பயன்படுத்தப்படும் வரை மதிப்புமிக்கதாய் இருக்க முடியாது; அதேபோல் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலையிடங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை ஜனநாயக முறையில் முடிவு செய்யாமல் ஒரு கையளவு பெருநிறுவனத் தலைவர்கள் அல்லது நகர ஊக வணிகர்கள் தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை பறிப்பதாக இருக்க முடியாது.

"பழைய தொழிற் கட்சிக்கு" திரும்ப வேண்டாம்

புதிய தொழிற் கட்சியை பிரித்துக் காட்டியுள்ள ஊழலும், இழிசெயற்பாடுகளும் ஒரு திருட்டுக் கூட்ட அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.

"பிரபுக்கள் பட்டத்திற்காக கடன் கொடுத்தல்" என்ற ஊழல், அழைக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் தன்னுடைய முன்னாள் சமூகத் தளத்தில் இருந்து தன்னையே பிரித்துக் கொள்ளுவதற்கான மற்றும் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்து உத்தியோகபூர்வ அரசியலை அகற்ற வேண்டும் என்ற கட்சியின் உந்துதலில் இருந்தும் விளைந்ததாகும். தொழிற்கட்சி ஒரு அதிகாரத்துவத்தின் எஞ்சிய கூறுபாடாக இழிந்துவிட்டது; இதன் செயற்பாடு மில்லியனர்கள், பில்லியனர்களுடைய நலன்களைக் காக்கும் வகையில் அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதாக உள்ளது.

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் மிக அடிப்படையான நலன்களைக்கூட பாதுகாப்பதில்லை மற்றும் 1984-85ல் நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வரை பின்னால் செல்லும் உடைவில்லாத தொடர்ச்சியான தோல்விகளுக்கு தலைமை வகித்துள்ளன. உறுப்பினர்கள் தாக்கப்படும்போது எல்லாம், மிகப் பெரிய பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள், ஓய்வூதிய விதித் தொகைகள் சூறையாடப்படுதல் என்று எப்படி இருந்தாலும், தொழிற்சங்கங்கள் திருப்பிப் போராடுவதை தடுத்து நிறுத்த முன்வந்து மூலதனத்தின் சார்பில் பாடுபடும் சக்தியாகத்தான் நடந்துள்ளன.

2003 ஈராக்கிற்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்பு தொழிற்சங்கங்களின் பேரவை, போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு என்பதை நிராகரித்து "பராளுமன்றம் இப்போக்கில் செல்ல உள்ளது" என்று வலியுறுத்தி, பிரிட்டனின் இராணுவப் படைகள் "பிரிட்டிஷ் மக்களுடைய ஆதரவை பெற வேண்டும்" என்றும் கூறின.

இப்படி சற்றும் தளர்ச்சியில்லாத வகையில் காட்டிக் கொடுப்பு என்பதை எதிர்ப்பதற்கு பிளேயருக்கு பதில் கோர்டன் பிரெளன் தலைமை மாற்றம் வேண்டும் அல்லது "பழைய தொழிற் கட்சிக்கு" திரும்புவோம் என்று இப்பொழுது ஒரு சில பாராளுமன்ற தொழிற் கட்சியின் இடதுகளால் விடுக்கப்படும் அழைப்புக்கள் மூலம் முடியாது. இந்த இடதுகளோ பல ஆண்டு காலம் எண் 10 டெளனிங் தெருவிற்கு கடமையை ஆற்றிய பின்னர் தேர்தலில் மறைந்துவிடுவோமோ என்ற அச்சம் கொண்டுள்ளனர்.

தொழிற் கட்சியினுடைய செயற்பட்டியல் பெருநிறுவன மற்றும் நிதிய அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது; அவை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் எவ்வித பின்வாங்குதலையும் பொறுப்பதற்கு இல்லை எனக் கூறிவிட்டன. சர்வதேச நிதிய அமைப்பு பொதுநலச் செலவீனங்கள் இன்னும் இரக்கமற்ற வகையில் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

புதிய தொழிற்கட்சி ஒன்றும் பிளேயர் மற்றும் பிரெளனுடைய கற்பனைக் குழந்தை அல்ல. சோசலிசம் வரக்கூடும் என்ற வகையில் தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் கருதிய அளவில் அது தேசிய பொருளாதார கட்டுப்பாட்டின் அடிப்படையில் படிப்படியான சீர்திருத்த செயல்முறைகள் மூலம் அடையப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றின் வளர்ச்சியினால் முன்னோடியில்லாத வகையில் பூகோளமயமாக்கல் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்றுள்ளது என்பது, பொருளாதார வாழ்வின் அடிப்படை அலகாக தேசிய அரசு இன்னும் இல்லை என்ற பொருளைத்தான் கொடுக்கும். மூலதனம் உலகம் முழுவதும் குறைவூதிய உற்பத்திச் செலவினங்கள், ஊதிய விகிதங்கள், குறைந்த வரிகள், மூலப் பொருட்களுக்காக சுற்றி அலைகிறது. மிகப் பெரிய அளவில் நிதியம் ஊகங்களுக்காக ஒதுக்கப்படுகின்றன; அதாவது அதிகரித்த அளவில் அவை உண்மையான உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இருந்து பிரிக்கப்படுகின்றன; இதையொட்டி நிதிய மற்றும் பங்குச் சந்தைகளில் அபாயங்கள் விளைந்து தேசியப் பொருளாதாரங்களை ஒரே இரவில் பேரழிவிற்கு உட்படுத்தப்படுகின்றன.

அனைத்து எதிர்ப்பும் பயனற்றது என அறிவித்துக் கொண்டு தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கம் முன்னர் பெற்றிருந்த சமூக நலன்களைக்கூட அகற்றுவதற்கு தயாராகி உலகப் போட்டித்தனம் என்ற பெயரில் பெருநிறுவன இலபாங்களுக்கு அனைத்துத் தடைகளையும் அகற்றுவதற்கும் தயாராக உள்ளன.

இவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்து தேசியரீதியிலான அமைப்புக்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் ஆகியவற்றின் திவால் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பல முறையும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல், அதிலும் சமீபத்தில் எயர்பஸ்ஸில் பணி முடக்கம் காட்டியுள்ளதுபோல், இந்நிலைப்பாடு ஒரு நாட்டுத் தொழிலாளர்களை மற்றொரு நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டும் தன்மையைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய விரிவாக்கமும் உற்பத்தி சக்திகளை ஐக்கியப்படுத்தியுள்ளதும் உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை பரந்த அளவில் முன்னேற்றுவிக்கும் திறனைக் கொண்டவை ஆகும். ஆனால் முதலாளித்துவம் போட்டியிடும் தேசிய நாடுகளில் இருக்கும் ஆளும் வர்க்கங்களின் தனியார் இலாப நலன்களுக்கு உற்பத்தியை கீழ்ப்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கிறது.

பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக

பிரிட்டனில் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை போன்றவைதான் என்று SEP வலியுறுத்துகிறது. எமது சர்வதேச சக சிந்தனையாளர்களுடன் இணைந்து, நாங்கள் அனைத்துவிதமான தேசியவாதம், இனவாதம் மற்றும் குறுகிய இனக்குழுவாதம் மற்றும் குறுகிய மதவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடி வருகிறோம்.

ஒரு புதிய தொழிலாளர் கட்சியை கட்டியமைப்பதற்கு அடிப்படையாக ஸ்கொட்டிஷ் அல்லது வேல்ஷ் தேசியம் வேண்டும் என்று சித்தரிப்பவர்களை நாங்கள் எதிர்க்கிறோம். ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி (SNP) மற்றும் Plaid Cymru இந்நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளுக்கு "ஆங்கில" ஆட்சி காரணம் என்று கூறுவதையும் எதிர்க்கிறோம்.

அத்தகைய கூற்றுக்கள் ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றம் ஏதோ கூடுதலான வகையில் வெஸ்ட்மின்ஸ்டரைவிட ஜனநாயகத்தன்மை உடையவை என்று பெருமைப்படுத்துவதுடன் இந்த உருட்டித் தள்ளும் அங்கங்களில் கொள்கையை ஆணையிடும் அடிப்படை சமூக நலன்களை மறைக்க முயல்கின்றன.

ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் Tommy Sheridan தலைமையில் நடத்தப்படும் Solidarity இயக்கம் ஆகிய இரண்டும் தாங்கள் SNP ஐ விடத் தொடர்ச்சியான முறையில் தேசியத் தன்மை கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க முற்படுகின்றன. ஸ்கொட்லாந்தில் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினை சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்னும் தேவைதான் என கூறுகின்றன. வேல்ஸில் Scocialist Alternative மற்றும் George Galloway உடைய Respect கூட்டணியும் தேசியத்துடன்தான் மையல் கொண்டுள்ளன.

தேசிய பிரிவினைவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் எத்தொடர்பும் இல்லை. மத்தியதர வர்க்கத்தின் பிரிவு ஒன்று தங்கள் உறவுகள் உள்ளூர் முதலாளித்துவம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற விழைவைத்தான் அது வெளிப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கம் அத்தகைய இயக்கங்களுடன் கொண்ட அனுபவம், பேரழிவைக் கொடுக்கக்கூடியதாகத்தான் இருந்துள்ளது. யூகோஸ்லாவியாவில் அது சகோதரர்களுக்கிடையேயான இரத்தம் சிந்திய பூசலில் ஆழ்த்தி, இத்தாலியில் Northern League, பெல்ஜியத்தின் Vlaamds Beland போன்ற கணக்கிலடங்கா வலதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்குத்தான் அடிப்படையாயிற்று.

பழமைவாதக் கட்சி மற்றும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் ஆகியவற்றின் முயற்சிகளுக்கும் நாங்கள் இத்தகைய விரோதப் போக்கைத்தான் கொண்டிருக்கிறோம்; இவை "Little Englander" தேசியம் என்பதைத்தான் பெரிதுபடுத்துகின்றன. அவை உதவித் தொகைகள் மற்றும் ஸ்கொட்லாந்திலும், வேல்ஸிலும் பெறப்படுவதாகக் கூறப்படும் உதவிக்கொடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோருகின்றன.

எந்தக் கொடியை அசைத்தாலும், தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய அடக்குமுறையாளர்களுக்கும் இடையே பொது நலன்கள் ஏதும் கிடையாது. தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுதல் ஊடாக பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களுடைய கண்டத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு நாங்கள் முயல்கின்றோம்.

இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று தேவைப்படுகிறது; அது பெருவணிகக் குழுவிற்காக செயலாற்றுகிறது; தன்னுடைய முக்கிய போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு வணிக, இராணுவ முகாம் ஒன்றை கட்டியமைக்க விரும்புகிறது. இந்த நோக்கத்தில், கட்டுப்பாடுகளை அகற்றுதல், தனியார் மயமாக்குதல் ஆகியவை மூலம் ஐரோப்பிய பொருளாதாரங்கள் ஒட்டுமொத்தத்தையும் மற்றும் சமூக விதிமுறைகளையும் மறுசீரமைப்பதில் அது ஈடுபட்டுள்ளது. இச் செயற்பட்டியலுக்கு மையமாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் உள்ள குறைந்த செலவு கூடும் அரங்கம் தேவைப்படுகிறது, அதேவேளை வறிய மக்கள் பலரும் அதீதமாய் சுரண்டப்படும் புலம்பெயரும் தொழிலாளர் சக்தி என்ற நிலைக்கு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

ஐரோப்பா மீது முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதின் மூலம்தான், ஐரோப்பா சிதைவுற்று, ஒன்றோடொன்று பகை கொள்ளும் தேசிய அரசுகளாக இருக்கும் நிலையில் இருந்து தடுப்பதுடன் ஐரோப்பாவின் பரந்த செல்வம் மற்றும் உற்பத்தி சக்திகள் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தும் வகையில் செயலாற்றவும் முடியும். அதன் பின்னர்தான் முன்பு வரலாற்றளவில் இருந்ததுபோல் காலனித்துவ முறையிலான அடக்கு முறையில் இல்லாமல், கண்டம் உலகெங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்ற நட்பாக இருக்கும்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரிய தாக்குதலை கொடுக்கும்; வெள்ளை மாளிகையில் இருக்கும் போர் வெறியர்களுக்கு எதிரான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் அதனை வலிமைப்படுத்தும்.

சோசலிசக் கொள்கைகளுக்கான ஒரு வேலைத்திட்டம்

இராணுவவாதம், போருக்கு எதிராக: சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச வெளியுறவுக் கொள்கைக்காக சோசலிச சமத்துவக் கட்சி நிற்கிறது. அனைத்து பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்கள் ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் கோருகிறோம். இரு நாட்டு மக்களுக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீட்டிற்காகவும் மறுசீரமைப்பிற்காகவும் கொடுக்கப்பட வேண்டும். லண்டனிலும், வாஷிங்டனிலும் இருக்கும் போரை வடிவமைத்தவர்கள் போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இராணுவச் சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறோம்; NATO உடனடியாக கலைக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தளங்களும் மூடப்பட வேண்டும் என்றும், Trident இன்னும் பல அணுவாயுதத் திட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்; பிரிட்டனுடைய பரந்த ஆயுதத் தொழிற்சாலை சமூகத்திற்கு பயன்தரும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இராணுவப் படைகளும் பாதுகாப்புப் பிரிவுகளும் மக்களுடைய ஜனநாயக விருப்பத்திற்கு பதில்சொல்லக்கூடிய பாதுகாப்பு அமைப்புக்களால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

ஜனநாயக உரிமைகளைக் காத்தல்: அனைத்து பயங்கரவாத சட்டங்கள் மற்றும் தனிநபர் உரிமைகளை குறைக்கும் ஏனைய நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டும்; இவை நிரபராதிகள் என கருதப்படுதல், ஆட்கொணர்தல் ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. குவண்டநாமோ மற்றும் அதேபோன்ற Belmarsh சிறை ஆகியவை மூடப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.

உலகம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறோம்; NATO உடனடியாக கலைக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்றும், Trident இன்னும் பல அணுவாயுதத் திட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்; பிரிட்டனுடைய பரந்த ஆயுதத் தொழிற்சாலை சமூகத்திற்கு பயன்தரும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இராணுவப் படைகளும் பாதுகாப்புப் பிரிவுகளும் மக்களுடைய ஜனநாயக விருப்பத்திற்கு விடையிறுக்கும் வகையிலான பாதுகாப்பு அமைப்புக்களாக மாற்றப்பட வேண்டும்.

முழுச் சட்ட முறையும் ஜனநாயக முறைப்படி வகுக்கப்பட வேண்டும். அற்ப குற்றங்களுக்காக சிறையில் வாடும் குழந்தைகள் உட்பட, மனநலக் குறைவு, உடல் நலமின்மை அல்லது போதைப் பழக்கம் உடையவர்களையும் ஏராளமாக சிறைச்சாலைகள் கொண்டுள்ளன. மாறாக இவர்களுக்கு தேவைப்படும் சமூக, மருத்து உதவிகள் கொடுக்கப்பட வேண்டும்.

அனைத்து தொழற்சங்க எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம்; தொழிற்சங்கங்கள் அவர்கள் உறுப்பினர்களுடைய ஜனநாயகக் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டமியற்றல் நடவடிக்கைகள் வகுக்கப்படவேண்டும் என்றும் கோருகிறோம்.

அனைத்து மகளிரும் கருக்கலைப்பிற்கு முழு உரிமை பெறுதல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஓரினத் திருமண உரிமை உட்பட, ஓரினக்காரர்களுக்கு முழு சட்ட சமத்துவம் வேண்டும் என்றும் கோருகிறோம். புலம்பெயர்ந்தவர்கள், தஞ்சம் கோருபவர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிவினை நடவடிக்கைகள் அகற்றப்பட்டு, தொழிலாளர்கள் எங்கு விரும்பினாலும் அங்கு படித்து, வாழ்ந்து வேலை செய்யும் உரிமையைக் கோருகிறோம்.

உற்பத்தி வழிவகைகள் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்: இலாபமுறையின் பெரும் குழப்பம் மற்றும் சேதம் ஆகியவை பெருகிய முறையில் தற்கால நாகரிகத்தின் சிக்கல் வாய்ந்த தேவைகளுடன் இயைந்திராத நிலையில் உள்ளன. அனைத்து பெரும் தொழில்கள், பணிகள், மருந்துத் தயாரிப்புக்கள், விவசாய நிறுவனங்கள் பொது உடமை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்; அவற்றுடன் வங்கி, நிதிய அமைப்புக்களும் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ள பணிகளும் மாற்றப்பட வேண்டும். சிறு பங்குதாரர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து தனியார் நிதிய முன்முயற்சி ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டு, அவற்றில் இருந்து விளைந்த கடன்கள் மறுக்கப்பட வேண்டும். சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு கடன் வசதிகள் சுலபமாகக் கொடுக்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் அவை கெளரவமான ஊதியங்கள், வேலை நிலைமைகள் ஆகியவற்றை வழங்க முடியும்.

பொதுப் பணிக்கான பெரிய திட்டங்களுக்கு: பொதுப் பணிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதையொட்டி கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஏனைய இன்றியமையாத சமூகக் கட்டுமானத்தின்மீது ஏற்பட்டுள்ள பேரழிவுத் தாக்கம் அகற்றப்பட வேண்டும். பொதுப் பணித்துறையில் பில்லியன்கள் செலவழிக்கப்பட வேண்டும்; அதையொட்டி தரமான இலவசக் கல்வி, பெருகிய சுகாதாரம், சமூகக் காப்பு விதிகள் ஆகியவை ஏற்படும்; மற்றும் முக்கியமான தொழில்நுட்பக் கருவிகள், ஊழியர் பற்றாக்குறையும் அகற்றப்பட்டுவிடும்.

அத்தகைய திட்டம்தான், கெளரவமான, நல்ல ஊதியம் கிடைக்கும் முழுநேரப் பணிகளை தேவைப்படும் அனைவருக்கும் கொடுக்க இயலும். கூடுதலான வேலைவாய்ப்பை தோற்றுவிப்பதற்கும், தொழிலாளர்கள் அரசியல், பண்பாட்டு வாழ்வில் முழுப்பங்கை பெறுவதற்கும், ஊதிய இழப்பு இன்றி தொழிலாளரின் வேலைநேரம் வாரத்திற்கு 30 மணி என்று குறைக்கப்பட வேண்டும், குறைந்த ஊதியம் இரு மடங்காக மாற்றப்படவேண்டும்; இதுதான் வறுமையை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இருக்கும். அனைத்துத் தொழிலாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆறு வார காலம் முழு ஊதியத்துடன் விடுமுறை பெற வேண்டும்.

அனைவருக்கும் உறுதியளிக்கப்பட்ட நல்ல வாழ்க்கைத் தரங்கள்: ஒவ்வொருவருக்கும் ஒரு கெளரவமான, பாதுகாப்பான வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் உத்தரவாதமாக இருக்க வேண்டும். அதேபோல் வேலை செய்ய இயலாதவர்களான, ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், முழுநேரப் பெற்றோர்கள், காப்பாளர்கள் ஆகியோரும் வாழ்வதற்கு தேவையான ஊதியத்தை பெற வேண்டும். தண்டனைதரும், இழிந்த பொதுநலப் பரிசீலனை, மதிப்பீடுகள் போன்றவை அகற்றப்பட வேண்டும்; இதில் புதிய பேரம் வேலைத்திட்டத்தை தொடர்புடைய நடவடிக்கைகளும் அடங்கும்; இவற்றில் வேலையில்லாதவர்களுக்கு பயனுடைய கல்வியோ, பயிற்சியோ கொடுக்கப்படுவது இல்லை.

அரசு ஓய்வூதியத்தொகை சராசரி ஊதிய மட்டத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்; தானாக ஒய்வுபெறும் வயது 55 ஆக உயர்த்தப்பட வேண்டும். நிறுவன ஓய்வூதியம் சூறையாடப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளை சந்திக்க அனைத்து கடன் திருப்பிச்செலுத்துகையில் வட்டிக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும்; தாங்க இயலாத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக: ஒரு சமுதாயத்தின் வருங்கால நலன் என்பது இளைய தலைமுறையின் துயரத்தின் இன்னல் தீர்க்கும் உடனடி நடவடிக்கையை கோருகிறது. வேலை கிடைக்கும் நம்பிக்கைக்கு முன்நிபந்தனையாக கூடுதலான இளைஞர்கள் உயர்கல்வியை நாடுகின்றனர். இதற்காகவும், சமூகத்தின் பண்பாட்டு, தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும், கல்வி கட்டணம் ஏதுமின்றி இலவசமாக்க்கப்பட வேண்டும் மற்றும் முழுவதுமாய் நிதியூட்டப்பட்ட வேண்டும். வாழ்வதற்கு வருமானத்தை வழங்குவதற்காக மாணவர்களுக்கு கல்விக்கடன் என்பது அகற்றப்பட வேண்டும்; மற்றும் உதவித் தொகைகள் அளிப்பது மறுபடியும் கொண்டுவரப்பட வேண்டும்; இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தனிப்பயிற்சி கட்டணங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். தனியார் மற்றும் மத பள்ளிகளுக்கு பொது நிதி கொடுக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். தரமான முழுநேர வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கும் வேலைப்பயற்சியும் தொழிற் பயிற்சியும் முழுநேரப் பணியாளருக்கு வழங்கும் சம்பளத்தில் இளைய தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக வகை செய்யப்படவேண்டும்.

வீடுகளும் சுகாதாரமும்: வீட்டு உரிமையாளர்களுடைய பரிதாபமான வாழ்க்கத்தரத்திற்கு காரணமான கடன் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; இதற்கு வருமானத்தில் 20 சதவிகிதத்திற்கு மேல் கடனுக்கு திருப்பிக் கொடுத்தல் கூடாது என்றும் வீடுகள் இழப்பின்மீது தடையும் கொண்டுவரப்பட வேண்டும். பாரிய அளவிலான சமூக வீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வசதியான, பாதுகாப்பான, கட்டக்கூடிய குடியிருப்புக்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையின்மையில் வாடுபவர்கள், ஓய்வூதியத்தினர் ஆகியோருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

National Health Service (NHS) ஐ வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதையொட்டி தனியார் மருத்துவ வசதி வளர்ச்சிக்கு உதவுவது நிறுத்தப்பட வேண்டும். GPs, மருந்துகள், பல் அறுவைச் சிகிச்சை உள்பட இலவசமாக அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்கவும் முழு நிதியம் அளிக்கக்கூடியதாகவும் NHS கட்டாயம் மீள ஏற்படுத்தப்பட வேண்டும்.

விஞ்ஞானம், கலாச்சாரம்: அனைத்து தொழிலாளர்களும் தீவிரமாக கலாச்சார, கலை வாழ்விலும் பங்கு பெற வேண்டும். நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரங்குகள், இசைக்குழுக்கள், பொதுத் தொலைக்காட்சிகள், வானொலி ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து இல்லங்களுக்கும் வேக இணைப்புக்கள் கிடைக்கக்கூடியதாக செய்யப்பட வேண்டும். இலாபமுறைக்கு கலை வெளிப்பாடு தாழ்த்தப்படுவது நிறுத்தப்பட்டு ஒரு புதிய, மனிதத்தன்மை உடைய, சர்வதேச கலாச்சாரத்திற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மனிதகுலம் மகத்தான விஞ்ஞான முன்னேற்றங்களை ஏற்கனவே அடைந்துள்ளது; இது ஒரு பகுத்தறிவார்ந்த, முற்போக்கான சமூக ஒழுங்கிற்கு புறநிலையான அடித்தளத்தை கொடுத்துள்ளது. ஆனால் தொழில்நுட்ப சாதனைகள் ஒரு சில மிகப் பெரிய நிறுவனங்களின் ஏகபோக உரிமைக்கு உட்பட்டு விஞ்ஞான சிந்தனை அதன் இடையறா தாக்குதலுக்கும் உட்பட்டுள்ளது; அவர்கள் தங்களுடைய வலதுசாரி சமூக அட்டவணைக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த முற்பட்டுள்ளனர். விஞ்ஞான கல்விக்கு ஊக்கமும், ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவதும் சமூகத்தின் ஒட்டுமொத்த கலாச்சார தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படையனதாகும்.

சுற்றுச் சூழல்: உலகம் வெப்பமயமாதல், மாசுபடுதல் இன்னும் பலவகையிலான சுற்றுச் சூழல் அழிப்பு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்படும் திட்டம் ஒன்றின்மூலம்தான் தீர்வு காணப்பட முடியும்; இதில் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் நலன்கள் உலகின் மக்களுக்கு எதிராக இருத்தப்படுவது தகர்க்கப்பட வேண்டும். அணுவாற்றல் கூட்டிணைவு உள்பட தெளிவான ஆற்றல் தொழில்நுட்டபத்திற்கு ஆராய்ச்சி செய்யவும் அபிவிருத்தி செய்யவும் பொதுநிதியூட்டப்பட்ட ஒரு வேலைத்திட்டத்த்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது. மேலும் அணுசக்தி நிலையங்கள் கட்டமைத்தல், போதுமான பாதுகாப்பு உள்ளது என்று நிரூபிக்கப்படும் வரையில் நிறுத்திவைக்கப்பட வேண்டும். பொது போக்குவரத்து இணையங்கள் விரிவுபடுத்தப்பட்டு, உயர்தரமாக்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் பிரிட்டனின் நகரங்களை மூச்சுத் திணற அடிக்கும் கார்கள்மீது நம்பியிருக்கும் தன்மை முடிவிற்கு வரும்.

ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக

இங்கு கூறப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஒரு சிலரால் கொள்ளப்பட்டுள்ள தனியார் செல்வத்தின் பரந்த இருப்புக்களின் மீது ஆழ்ந்த தாக்குதல் நடத்தாமல் அடையப்பட முடியாது. இந்த நடவடிக்கைகள் சமூகத்தில் சமத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் முன்னேற்ற வரிவிதித்தல் என்ற முறையின்மூலம் நிதியம் பெறச்செய்யப்பட வேண்டும்; அவை மக்களின் பெரும்பாலனவர்கள்மீது வரிசுமத்துவது குறைக்கப்பட வேண்டும்; பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களை அரசியல் அணிதிரட்டல் மூலம்தான் இது அடையப்பட முடியும். ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வாதிடுகிறது; அதுதான் மக்கட்தொகுப்பின் பரந்த பெரும்பான்மையினரின் சமூக பொருளாதார நலன்களை பிரதிபலித்து, தொழிலாளர்கள் முழு ஜனநாயகக் கட்டுப்பாட்டை அவர்கள் வாழ்வை பாதிக்கும் அனைத்து முடிவுகள் மீதும் கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.

இத்தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்தல் என்பது இந்த நோக்கத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும்; தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருடைய அரசியல் நனவை உயர்த்துவதற்கும், ஒரு வெகுஜன சோசலிச கட்சியை கட்டியமைப்பதற்கு தேவையான அஸ்திவாரங்களை அமைக்க இது முயலும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவுதான் சோசலிச சமத்துவக் கட்சி ஆகும். அனைத்து வகையான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் மிகத்தொலைநோக்குடைய மற்றும் மிகத் துணிவான பிரதிநிதிகளின் நீண்ட தசாப்தகால நீண்ட போராட்டத்தின் முக்கிய படிப்பினைகளை தன்னகத்தே பொதிந்துள்ளது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஆசியாவிலும் இருக்கும் எங்கள் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, உலக சோசலிச வலைத் தளத்தால் வழங்கப்படும் நாளாந்த செய்தி, மற்றும் ஆய்வுகள் ஊடக வழியாக ஒரு சோசலிச உலகிற்கான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல விழைகின்றோம்.

எமது அரசியல் பணிக்கு மையமாக இருப்பது, ஸ்ராலினிசம் சோசலிசத்திற்கு சமனானது என்ற நிலைப்பாட்டை மறுப்பது ஆகும். ரஷ்யாவில் எழுச்சியுற்ற இராணுவ-போலீஸ் சர்வாதிகாரம் 1917 அக்டோபர் புரட்சியின் சமத்துவ, சர்வதேச முன்னோக்கின் மரபார்ந்த அமைப்பு அல்ல; அதன் மிகக் கடுமையான விரோதியாகும். "ஒரு நாட்டில் சோசலிசம்" என்னும் ஸ்ராலினின் கொள்கை ஒரு அதிகாரத்துவத்தின் நலன்களைத்தான் வெளிப்படுத்தி, அரச எந்திரத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான, அக்டோபர் புரட்சியின் உண்மையான பிரதிநிதிகளுக்கு எதிரான அடக்குமுறை, குருதிதோய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கின் பாதுகாப்பில் ட்ரொட்ஸ்கியால் அமைக்கப்பட்ட இடது எதிர்ப்பின் போராட்டத்திலும் அவர் 1938ல் நிறுவிய நான்காம் அகிலத்திலும் எமது கட்சி மூலத்தோற்றத்தை கொண்டுள்ளது. அப்போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை மீளக் காய்ச்சியடித்து வலிமைப்படுத்துவதற்கு முக்கியமானவை ஆகும்.

போர், இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல்களை எதிர்ப்பவர்கள், சமூக சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவ கட்சியுடன் தொடர்பு கொள்ளுமாறும் எங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கு பெறுமாறும் அழைப்பு விடுகிறோம். குறிப்பாக மாணவர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பில் இணையுமாறும் அதன் செல்வாக்கை கல்வி வளாகங்களில் கட்டியமைக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள், ஒரு சோசலிச மாற்றீட்டிற்கு உதவுங்கள்!