World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Right-wing mob attacks group of Indians in eastern Germany

கிழக்கு ஜேர்மனியில் இந்திய குழுவினரைத் தாக்கும் வலதுசாரி கும்பல்

By Stefan Steinberg
23 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஆகஸ்ட் 19, ஞாயிற்றுகிழமை காலையில், ஜேர்மன் நகர் மூஹெல்னிலில் நடந்த ஒரு தெருவிழாவின் போது எட்டு இந்தியர்களை கொண்ட குழு ஒன்று ஒரு குடிகார கும்பலால் தாக்கப்பட்டது. அந்நகரின் இந்திய உணவுவிடுதி ஒன்றில் பணியாற்றுபவர்களும், அவ்விடுதியின் உரிமையாளருக்கு நெருங்கிய நண்பர்களுமான அந்த எட்டு நபர்களும், சுமார் 50 பேர் கொண்ட இளைஞர் கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஜேர்மனியின் சாக்சோனியில் அமைந்திருக்கும் இந்த சிறு நகரமான மூஹெல்ன், சமீபத்திய ஆண்டுகளில் பல இனவெறி தாக்குதல்களை சந்தித்திருக்கிறது.

இனவெறி முழக்கங்களை உரக்கக் கத்திக் கொண்டே அந்த குடிகார கும்பலால், எட்டு இந்தியர்களும் தாக்கப்பட்டு இருக்கின்றனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்த அந்த இந்திய குழுவினரை அவர்கள் அடித்தும், உதைத்தும் இருக்கின்றனர். பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அடிப்பட்டவர்களின் காயங்களை தெளிவாக காட்டுகின்றன. முகத்திலும், உடலிலும் உராய்வுகளாலும், வெட்டு காயங்களாலும் அனைவருமே மிக மோசமாக காயப்பட்டு இருந்தனர். இத்தாக்குதலில் சிக்கிய ஒருவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், சிலரின் முகங்களில் தொடர்ச்சியாக உதைக்கப்பட்டது தெளிவாக தெரியும் நிலையில், அவர்களின் முகங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு தையல் போட வேண்டிய நிலையும் இருந்தது.

அந்த இளைஞர் கும்பலின் ஆரம்ப தாக்குதலை தொடர்ந்து, தாக்கப்பட்ட அந்த எட்டு நபர்களும் நகரின் சந்தைப்பகுதியின் குறுக்கே இருந்த தெருமுனை கூட்டத்தில் இருந்து தப்பி ஓடி அருகில் இருந்த உணவுவிடுதியில் தஞ்சம் புகுந்தனர். அதன் உரிமையாளர் அவர்களுக்கு இடம் அளித்தார் என்றாலும், அந்த இளைஞர் கும்பல் அந்த உணவுவிடுதியையும் சூழ்ந்து கொண்டு, பார்வையாளர் கூட்டத்தின் முன்னிலேயே அதன் கதவை உதைத்து திறக்க முயன்றனர். அச்சூழலில் தங்களுக்கு மரணபயம் உண்டானதாக இந்தியர்களின் குழுவில் இருந்த சிலர் தெரிவித்திருந்தனர். உள்ளூர் காவல் அதிகாரிகள் வந்த பின்னரே சகஜ நிலை திரும்பி வந்தது. 21 மற்றும் 23 வயதுடைய தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மட்டும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாலும், இவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதுவொரு இனவாதத்தாக்குதல் என தெளிவாகத் தெரிந்த போதிலும், இத்தாக்குதலை பற்றி முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவதே காவல்துறை மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் உடனடிப் பிரதிபலிப்பாக இருந்ததுடன், இதில் அரசியல் பின்னணி ஏதும் இருப்பதை காவல்துறையினர் உடனயாக மறுத்திருக்கிறனர். லைப்சிக் நகர மையத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல் அதிகாரி ஜேர்மன் செய்தி நிறுவனம் DDP யிடம் திங்களன்று (20.08.07) கூறும் போது, இத்தாக்குதலில் நவ-நாசி செயல்பாடுகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை, இருந்தபோதிலும் வெளிநாட்டை சேர்ந்த சிறு தொழிலாளர் கூட்டத்தை நேரடியாக தொடர்ந்து இனவெறியுடன் அவமானப்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சி கூறி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நகர மேயர் கோதர்டு டியூஸ், நகரில் நவ-நாசிகள் கிடையாது. இந்த சம்பவம் ஒரு தீவிர வலதுசாரி நோக்கத்தை கொண்டிருக்குமேயானால், அது வெளிநபர்களால் தான் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார். அந்த தெருவிழாவில் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக காவல்துறை முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்ததாகவும் டியூஸ் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தின் போது அவர்கள் அதை தடுப்பதற்கு முற்றிலுமாக முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாக்சொன் பிரதம மந்திரி ஜோர்ஜ் மில்பிரண்ட் (கிறிஸ்துவ ஜனநாயக கட்சி - CDU), திங்களன்று (20.08.07) அந்நகரைப் பார்வையிட்ட பின், செய்தியாளர்களிடம் தாக்குதல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அதே பயனற்ற செய்திகளைத் திரும்ப கூறியதுடன், இந்த முரட்டுத்தனமான தாக்குதலுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்து கொண்டார்.

உண்மையில், ஜேர்மனியின் மறுஒருங்கிணைப்பில் இருந்து, அதாவது சுமார் 15 வருடங்களாக கிழக்கு ஜேர்மன் நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்து வரும் வெளிநாட்டினர் மீதான கொடூர வன்முறைகளின் தொடர்ச்சிகளில் ஒன்றாக இந்த சமீபத்திய சம்பவத்தையும் கூறலாம். முன்னாள் ஸ்ராலினிச ஐேர்மன் ஜனநாயக குடியரசில் (GDR) பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்த தேசியவாத, குறுகிய புத்தியானது, கிழக்கு ஜேர்மனியில் இருக்கும் பின்தங்கிய தவறான எண்ணங்களுக்கு அதிக பலம் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அடிப்படை உண்மை என்னவென்றால், சமீபத்திய இனவெறி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பலரும் 1989-90 களில் ஐேர்மன் ஜனநாயக குடியரசு கலைக்கப்பட்ட பின்னரே பிறந்தவர்களாகும்.

உண்மையில், அதிதீவிர வலதுசாரிகளின் உணர்ச்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கட்சி (NPD) போன்ற நவ-நாசி அமைப்புகள், கிழக்கு ஜேர்மனியில் இருக்கும் சில கிராமங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே ஆதரவைப் பெற்றுள்ளன. ஏனென்றால் ஜேர்மனியின் அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளால் அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழிற்துறைகளின் அழிவுகளே இதற்கு காரணமாகும். 1990 இல் ஏற்பட்ட இணைப்பிற்கு பின்னர், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஒரு பொருளாதார தரிசுநிலத்தை பெரிய அளவில் உருவாக்கி இருக்கக் கூடிய சூழலில், ஒவ்வொரு முன்னனி அரசியல் கட்சிகளும் -அவைகள் கிழக்கிலோ அல்லது மேற்கிலோ தனது ஆரம்ப மூலவேர்களை கொண்டிருந்தாலும்- பெருந்திரளான மக்கள் எதிர்நோக்கும் பாரிய வேலைவாய்ப்பின்மைக்கும், வளரும் வறுமைக்கும் மாற்றீடு எதுவும் இல்லை என வாதித்து வந்தன.

இதில் புதிய இடது கட்சியும் உள்ளடக்கமாகும், அதற்கு முன்பிருந்த ஜனநாயக சோசலிச கட்சியை (PDS) பின்பற்றிய அக்கட்சி, நாடு தழுவிய மற்றும் உள்ளூர் அளவிலும் தொழில் மற்றும் வாழ்க்கை தரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திய, கிழக்கு ஜேர்மனி தொழிற்துறையிலும் மற்றும் சமூக அமைப்பிலும் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் ஜனநாயக கட்சி (SPD) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) உடனும் நெருங்கி பணியாற்றி வந்தது. உதாரணமாக, சாக்சோனியில் அரச வீடமைப்பு திட்டத்திற்கு சொந்தமான வீட்டுத்துறை பங்குகளை ட்ரெஸ்டெனில், தனியார் முதலீட்டு நிதியாளர்களிடம் விற்பதில் இந்த இடதுசாரி கட்சி ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக சொத்துக்களின் விலையும், வீட்டு வாடகையும் அதிகரிக்க தொடங்கின.

பழமைவாத வலதுசாரிக்கும், பெயரளவிலான ''இடதுசாரிக்கும்'' இடையே இருந்த இந்த நெருங்கிய உறவு, அதிதீவிர வலதுசாரி குழுக்களை உருவாக்கியதுடன், சாக்சோனி போன்ற கிழக்கு ஜேர்மனி மாகாணங்களில், இளைஞர்கள் மத்தியில் அவர்களுக்குச் செல்வாக்கையும் பெற்று தந்தது.

கிழக்கு ஜேர்மனியில் பொருளாதார சீரழிவு

மக்கள் தொகை மற்றும் அபிவிருத்திக்கான பேர்லின் நிறுவனத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், பரவி வரும் இந்த அபாயத்தின் விளைவுகள் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியில் உருவாக்கப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மற்றும் பொது சேவைகள் பரவலாக மூடப்பட்டு வருவது, பல கிழக்கு ஜேர்மனிய மாகாணங்களில் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக மேற்கு ஜேர்மனி அல்லது வெளிநாடுகளுக்கு குடிபெயர்தல் போன்றவற்றையும் அவ் ஆய்வு விளக்கி இருந்தது. 1990ல் இருந்து சுமார் 1.5 மில்லியன் மக்கள் (அதாவது, முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர்) வேலைவாய்ப்பு தேடி அப்பகுதியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் 35 வயதிற்கு குறைவானவர்கள் என்பதுடன், இவர்களில் சராசரி கல்வி மற்றும் பயிற்சிகளை பெற்றவர்களும் உள்ளடங்குவர்.

இவ்வாறான ஒட்டுமொத்த குடிபெயர்தலில் இருக்கும் காரணங்களில், முக்கியமாக இருப்பது பொருளாதாரம் தான். மாநிலங்களுக்கு இடையே சில சாதாரண வேறுபாடு இருந்தபோதிலும், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இருந்த பொருளாதாரம் தொடர்ந்து மேற்கு ஜேர்மனியை விட பின்தங்கியே இருக்கிறது. உள்ளூர் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருப்பதுடன், சில கிழக்கு ஜேர்மன் நகரங்களில் இது 50 சதவீதத்திற்கு மேற்பட்டும் இருக்கிறது. இதன் விளைவாக, கிழக்கு ஜேர்மனியின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் வயதானவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது என்பதுடன், போதிய கல்வி இல்லாததால் பொருத்தமான பணியைப் பெற முடியாத இங்கிருக்கும் இளைஞர்கள் "இழந்த தலைமுறைகள்" என்றும் குறிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பேர்லின் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவது: "பெரியளவில் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் பகுதிகளில், ஒரு புதிய, கீழ்மட்ட ஆணாதிக்க கீழ்வர்க்கம் உருவாகி வருகிறது. இந்த உறுப்பினர்கள் சமூகத்தின் பெரிய பகுதிகளில் பங்கு பெறுவது தவிர்க்கப்படுகிறது. இவர்களில் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லை, போதிய கல்வி இல்லை, மேலும் அவர்களுக்கு வாழ்கைத்துணையும் இல்லை. இந்த சிக்கலான நிலைமை, எதிர்மறையான ஜனத்தொகை கட்டுமான வளர்ச்சியை மெதுவாக்குவதை அல்லது அதை மாற்றுவதை மேலும் சிக்கலாக மாற்றி வருகிறது என்பதை மிகவும் துல்லியமாகக் காணலாம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பின்மையானது, வறுமையுடன் இணைந்து விடுகிறது. பெர்டல்ஸ்மான் பயிலகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், (மேற்கு ஜேர்மனியின் இரண்டு மாகாணங்களான பிரேமென் மற்றும் ஹம்பேர்க் தவிர்த்து), ஹார்ட்ஸ் IV சமூகநல திருத்த சட்டங்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான குறைந்தபட்ச உதவித்தொகையை நம்பி வாழும் குடும்பங்கள், கிழக்கு ஜேர்மனி மாகாணங்களில் அதிக சதவீதத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயம், சாக்சோனி அதன் "நிலையான வரவுச்செலவுத்திட்ட கொள்கைக்காக" இவ்வாய்வறிக்கையில் புகழ்ந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இம்மாகாணத்தின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் மட்டுமே ஹார்ட்ஸ் IV நிதியுதவியை நம்பி இருக்கின்றனர் என்று அவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எந்தவிதமான சந்தர்ப்பங்களும் இல்லாததன் அடிப்படையில் உருவாகும் வறுமை மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை முதன்மையாக, முன்னால் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சி கூட்டணியின் சமூக எதிர்ப்பு கொள்கைகளால் உருவாகி வந்தது. தற்போதும் அக்கொள்கை தொடர்வதுடன், அதன் தற்போதைய பெரிய கூட்டணி அரசால் (CDU/CSU-SPD) தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை, பல இளைஞர்களை தேசிய ஜனநாயக கட்சி (NPD) போன்ற வலதுசாரி அமைப்புகளை நோக்கியும் அதிதீவிர வலதுசாரி வார்த்தை ஜாலங்களின் பின்னாலும் ஈர்க்கப்படுவதற்கான கிழக்கில் ஒரு செழிப்பான நிலத்தை உருவாக்கி இருக்கிறது.

செப்டம்பர் 2004 தேர்தல்களில், சாக்சோனி மாநில சட்டமன்றத்தில் வலதுசாரி NPD கட்சி பல இடங்களை கைப்பற்றி இருந்தது. அதாவது அந்த மாகாண தேர்தலில் அது 9 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தது. வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றிய இனவாத பேச்சுக்களுடன், சமூக ஜனநாயக-பசுமை கட்சி கூட்டணியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹார்ட்ஸ் IV சட்டங்களை எதிர்க்க ஜனரஞ்சகவாத எதிர்ப்பினை தீவிர வலதுசாரி கட்சி தன்னுடன் சேர்த்து கொண்டது. 25 சதவீதத்தினருக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்மையுடன் இருந்த செக் குடியரசின் எல்லைகளில் இருந்த கிராமப்புறங்களில் NPD கட்சி முக்கிய ஆதரவை பெற்றது. டிரேஸ்டனின் கிழக்கில் இருந்த ஸ்விஷ் சாக்சோனி எனப்பட்ட பகுதி, நவ-நாசிகள் வலுவான கோட்டையாக கருதப்படுகின்றது. 2004 செப்டம்பர் மாதம், சாக்சோனியில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர், ஜேர்மன் மக்களின் "பயன்களை அடைய துடிக்கும் மனநிலை" குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.

அதே நேரத்தில், முன்னனி CDU மற்றும் SPD கட்சி அரசியல்வாதிகள் இணைந்து, பேர்லினில் இருந்த கூட்டணி அரசின் கட்டளைகளுடன், சாக்சோனி மாகாணத்தில் கடுமையான சமூக வெட்டுக்களையும் மற்றும் தொழிற்துறையை பாரியளவில் மறுசீரமைக்கவும் முனைகின்றனர். ஜேர்மன் மறுஒருங்கிணைப்பிலிருந்து 2002-ம் ஆண்டு வரை அம்மாநில பாராளுமன்றம் வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் அனுபவமிக்க அரசியல்வாதியான குர்ட் பிய்டென்கொஃவ்ப் இனாலேயே வழிநடத்தப்பட்டு வந்தது. இவர் கிழக்கில் முதலாளித்துவத்தை மறுஅறிமுகம் செய்வதற்காக மேற்கில் பல்கலைக்கழகத்தில் வகித்து வந்த பேராசிரியர் பதவியை கைவிட்டவராவர்.

நெருக்கமான அரசியல் மற்றும் தொழில் தொடர்புகளை உருவாக்க பிய்டென்கொவ்ப் முக்கிய பங்கு வகித்தார். அது, மக்களின் செலவில் சில உயர்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கட்டிட நிறுவனங்கள் பெரியளவில் இலாபம் சம்பாதிக்க வழிவகுத்தது.

வலதுசாரி இனவாதிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த பொருளாதார நிலையால், பிய்டென்கொவ்ப் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும் ஆத்திரமூட்டும் அரசியல் முனைவுகளை கொண்டு எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டார்கள். மேலும் இவர்கள் நவ-பாசிசகுழுக்களின் நடவடிக்கையையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 1991ல் ஒரு வன்முறை கும்பல், அரசியல் அடைக்கலம் கோரியவர்களை ஹோயெர்ஸ்வெர்டா நகரை விட்டு வெளியேற்ற முனைந்தபோது (அவ்வேளையில் காவல்துறையும் மெளனம் சாதித்தது) சாக்சோனி மாநில தலைமை இது தொடர்பாக கருத்து கூறவும் மறுத்துவிட்டது.

ஜேர்மன் மறுஒருங்கிணைப்பின் பத்தாண்டுகளுக்கு பின்னர், வலதுசாரி அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பிடம் எனும் ஒரு பாராட்டை பிய்டென்கொவ்ப் அரசு பெற்றிருக்கிறது. 1990ல் இருந்து 2000 வரை ஸ்டீபன் ஹெய்ட்மான் சட்ட மந்திரியாக இருந்தார். 1993களில் அவரின் பெயர் தலைப்புச் செய்திகளில் பெரியளவில் வந்து கொண்டிருந்தபோது, ஸ்டுட்கார்ட் நகரைப் பார்வையிட்ட பின்னர், அவர் தெரிவித்ததாவது: "ஜேர்மனியர்கள் பல வெளிநாட்டினர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்." என்று அறிவித்திருந்தார்.

2002ல் பிய்டென்கொவ்ப், தனது கட்சி உறுப்பினரும், 1973 வரை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் உறுப்பினராக இருந்தவரும், சாக்சோனியில் நீண்ட காலமாக நிதியமைச்சராக இருந்த ஜோர்ஜ் மில்பிரண்டிடம் அதிகாரங்களை ஒப்படைத்தார். இருப்பினும், பிய்டென்கொவ்ப்பின் வெளிப்படையான எதிர்ப்புடன், அவரின் முன்னாள் நிதி மந்திரி ஏப்ரல் 2002ல் புதிய பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மில்பிரண்ட் தற்போது சமூக ஜனநாயக கட்சியின் கூட்டணியுடன் பதவியிலிருந்து வருகிறார்.

கூடுதலாக, பெரிய தொழில்கள் மற்றும் வங்கிகளுடனான அவரின் முந்தைய கொள்கைகளை தொடர்வது மட்டுமல்லாது, மில்பிரண்ட் நவபாசிச கட்சியை தேவையற்றதாக்கும் வகையில் அதன் கொள்கைகளை எடுத்துக்கொள்ளும் பிய்டென்கொவ்ப்பின் பாரம்பரிய திட்டங்களையே கையில் எடுத்து கொண்டார். (சாக்சோனியின் நிதி மந்திரியாக முக்கிய பங்கு வகித்த மில்பிரண்ட், Sachsen LB bank பொதுத்துறை வங்கியை சர்வதேச நிதிச்சந்தையில் கொண்டு வர முயன்றார். இதனால் சமீபத்தில் அவ்வங்கி 17.3 பில்லியன் யூரோ அல்லது 23.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனுள் மூழ்கியது).

2005ல், டிரேஸ்டென் நகர குண்டுதாக்குதல் நினைவு நாளில் நடந்த ஒரு சர்வதேச கூட்டத்தில், மில்பிரண்ட் பின்வருமாறு கூறினார்: "மிக பெரும்பான்மை மக்கள் NPD கட்சிக்கு ஆதரவு தரவில்லை என்பதே பிற நாடுகளுக்கு நாங்கள் கூறிக் கொள்வதாகும். அவர்களுக்கு பிராந்திய அரசில் செல்வாக்கு இல்லை என்பதுடன், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளே கிடையாது." என்றார்.

அடிப்படையில், NPD கட்சியை ஓரம் கட்டுவதற்கான மில்பிரண்டின் முறை என்னவென்றால், அவர்களின் திட்டங்களையே பின்பற்றுவதாகும். சமீபத்தில், அதாவது ஜூலை மாத இறுதியில், மில்பிரண் Saarbrücker Zeitung பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். இதில் அவர், அதிதீவிர வலதுசாரி கட்சிகளின் அடிப்படை கோரிக்கைகளை முன்னிறுத்தி இருந்தார். அதாவது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஜேர்மனி தொழிலாளர் சந்தையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்றவற்றை இதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் அந்த பேட்டியின் போது, மில்பிரண்ட், ஜேர்மன் தொழிலாளர்களுக்கு போட்டியாக குறைந்த ஊதியத்தில் பணிக்கு வரும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களால் வரும் அபாயங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார். இது NPDக்கு கிடைக்கும் வாக்குகளை அதிகரிக்கலாம் என அவர் அறிவித்தார். இதற்கு மாற்றாக, மில்பிரண்ட் கூறுகையில், "தீவிரமான நடவடிக்கைக்கு எந்த காரணமும் கிடையாது. எல்லைகளை திறந்து விடுவது என்பது NPDக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதாக கருதமுடியாது. பிராங்பேர்ட்-மயின் நகரில் தொழிலாளர்கள் தேவை இருக்கிறது அதனால், தொழிலாளர் சந்தையில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று மட்டும் ஒருவர் கூறிவிட்டு விட முடியாது. அதேசமயம், எல்லைப்பகுதிகளில் உள்ளவர்களின் பிரச்சனைகளை அவர்களிடமே விட்டுவைக்க வேண்டும்." என்றார். அவர் மேலும் கூறுகையில், இது தொடர்பான பிரச்சனையில் தாம் கிழக்கு ஜேர்மன் மாநில பிரதம மந்திரிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்து விட்டதாக அவர் அறிவித்தார்.

அவரின் சர்வதேச கூட்டாளிகள் மற்றும் தொழில் தொடர்புகளுடனான ஒரு கண்ணோட்டத்துடன், மில்பிரண்ட் சமீபத்தில் மூஹில்னில் நடந்த வன்முறையை கண்டித்துள்ளார். இருப்பினும், அது அவரின் சொந்த அரசியல் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளில் அடங்கும் என்பது தான் உண்மை. இது, அவரின் சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டாளிகளாலும் ஒத்துழைக்கப்பட்டது. மேலும் இது சாக்சோனியில், அதிதீவிர வலதுசாரி அமைப்புகளின் செல்வாக்கை உயர்த்தும் நிலையையும் மற்றும் கடந்த ஞாயிறன்று நடந்த திகைக்க வைக்கும் இது போன்ற தாக்குதல்களையும் உருவாக்கி இருக்கிறது.