World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

All workers must mobilize behind German train drivers' strike

ஜேர்மன் இரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்துத் தொழிலாளர்களும் அணிதிரட்டப்படவேண்டும்

Statement of the German Socialist Equality Party
19 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில் சாரதிகளின் ஜேர்மன் இரயில்வே (Deutsche Bahn), ஜேர்மனிய வணிகக் கூட்டமைப்புக்கள், பெரும் கூட்டணி அரசாங்கம், செய்தி ஊடகம் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை எதிர்நோக்குகின்றனர். இவை அனைத்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என தீர்மானகரமாக உள்ளதுடன், தேவையானால், GDL (Deutsche Lokomotivfuhrer) இரயில் சாரதிகளினது வேலைநிறுத்தத்தை நசுக்கவும் விரும்புகின்றனர்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை எழுப்புவதால் இந்த வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் அனைவருடன் உடனடியாக இயன்ற அளவு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஒரு உரிய வருவாய் வேண்டும் என்ற கோரிக்கையை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்வைத்திருப்பது முற்றிலும் நியாயமானதாகும்; வாங்கு சக்தி, மற்றும் வேலைநிலைமைகள் மோசமாதலை அவர்கள் ஏற்க மறுப்பது ஒரு கொள்கை ரீதியானதாகும்; இது உட்குறிப்பாக தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை மேற்கொள்ளுவதின் தேவையை எழுப்பியுள்ளது.

ஜேர்மன் இரயில்வேயின் தலைவரான ஹார்முட் மெஹ்டோர்ன் பெருநிறுவனம் மற்றும் அரசியல் உயரடுக்கின் ஆதரவை கொண்டு பெருநிறுவன இலாபங்களை அதிகரித்தல், மக்கள் இழப்பில் நிதிய அடுக்கின் செல்வக் கொழிப்பை பெருக்குதல் ஆகியவற்றிற்கான சமூகக் கொள்கைகளை சுமத்த அனைத்து வழிவகைகளையும் கையாள உறுதியாக இருக்கிறார். அத்தகைய அடுக்குகளுக்கு ஜேர்மன் இரயில்வே நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்கள் ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக 20 மில்லியன் யூரோக்கள் ஊதியம் என்பது சாதாரண, வாடிக்கையான விஷயம்தான்; குழுவினர் தங்கள் ஓய்வூதியங்களை உயர்த்திக் கொண்டுள்ள நிலையில், இரயில் தொழிலாளர்களுக்கான உண்மை ஊதியங்கள் குறைக்கப்பட்டு, வேலைப்பழு அதிகரிக்கப்பட்டுள்ளது; இதையொட்டி ஏராளமான தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய நோக்கம் சமூக வாழ்வின் ஓவ்வொரு கூறுபாட்டையும் முதலாளித்துவ "தடையற்ற சந்தை" செயற்பாடுகளுக்கு திறந்து விடுதல் ஆகும். பல தசாப்தங்கள் பொதுமக்கள் வரிப்பணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவீன போக்குவரத்து சேவை இப்பொழுது தேசியமயத்தில் இருந்து அகற்றப்பட்டு, ஒரு உலகந்தழுவிய நிறுவனமாக, ஒரு சிறு எண்ணிக்கை பங்குதாரர்கள் செல்வத்தை குவிப்பதற்காக மாற்றப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான மீட்டர்கள் தூரம் கொண்ட இலாபமற்ற இரயில் தடங்கள் அகற்றப்பட உள்ளன; தொலைதூரங்களில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

இதே பிரச்சினைகள்தான் சுகாதாரக் காப்பு முறையிலும், இன்னும் பல துறைகளிலும் எதிர்கொள்ளப்படுகின்றன. பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஐரோப்பிய சாலைப் போக்குவரத்து முறையை தனியார்மயமாக்கும் செயலைத் தொடக்கிவிட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகன பாதை வரிகள் கூடிய சரக்குப் போக்குவரத்தை அபராதத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. வாகன பாதைகளின் பகுதிகளை விற்றல் அல்லது வாடகைக்கு தனியார் நிதிக் குழுக்களிடம் அளிக்கும் வகையில் ஏற்கனவே திட்டங்கள் வந்துவிட்டன; அவை பின்னர் அனைத்துவித வாகனங்களிலும், தனியார் போக்குவரத்து உட்பட, கட்டணங்களை சுமத்த முடியும்.

இரயில் சாரதிகளுக்கான ஆதரவு இத்தகைய செல்வக்கொழிப்பு களியாட்டத்திற்கு எதிராக பரந்த அரசியல் அணிதிரட்டலை ஒழுங்கமைப்பதற்கு ஆரம்பக் கட்டமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போக்கு பற்றி சில முக்கியமான படிப்பினைகளை தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

Transnet, DGB ஆகியவற்றின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் பங்கு

ஆரம்பத்தில் இருந்து இரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தம் மிகப் பெரிய தொழிற்சங்கமான Transnet ஆல் எதிர்க்கப்பட்டது; அதுதான் மற்றொரு இரயில் தொழிலாளர் சங்கமான GDBA உடன் இணைந்து ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை இணைந்து நடத்தும் தொழிற்சங்கமாகும். Transnet ஒரு மஞ்சள் சங்கமாக, முற்றிலும் வெட்கம் கெட்ட தன்மையில்தான் செயல்படுகிறது; வெளிப்படையாக தன்னுடைய உறுப்பினர்களை வேலைநிறுத்தக்காரர்களுக்கு பதிலாக அப்பணியை செய்யுமாறு கூறுகிறது. இதற்கு ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) இன் தலைவரான மைக்கேல் சோமரின் முழு ஆதரவு இருக்கிறது; அவரோ சமூக ஜனநாயக கட்சியின் (SPD) உறுப்பினர் ஆவார்; மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களின் தலைமைக்கும் நெருக்கமானவர்.

Transnet இன் தலைவரான நோபேர்ட் ஹான்சென் இரயில் டிரைவர்கள் போராட்டத்தை ஒவ்வொரு வகையிலும் எதிர்த்து வருகிறார். கடந்த வியாழனன்று ஜேர்மன் இரயில்வேயின் கண்காணிப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் (இவரும் அதில் ஒரு உறுப்பினர்), ஹான்சென் "மற்ற தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன்" இணைந்து "GDL வேலைநிறுத்தத்தை தொடர்ந்தாலும்" சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்.

GDL இற்கு எதிரான ஹான்செனின் முக்கிய கருத்து தொழிற்சங்கம் ஒரு சிறுபான்மையினரின் சிறப்பு உரிமைகளுக்காக போராடுகிறது என்றும் அவ்வாறு செய்கையில் மற்ற இரயில் சங்கங்களுடன் இருக்கும் "ஒற்றுமையை" மீறுகிறது என்பதும் ஆகும். ஹான்செனைப் பொறுத்தவரையில், "ஒற்றுமை" என்பது ஜேர்மன் இரயில்வே நிர்வாகத்துடன் நேரடியாக ஒத்துழைப்பதாகும்; இவருக்கு நிர்வாகம் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் என்ற முறையில் கவர்ச்சிகரமான ஊதியத்தைக் கொடுக்கிறது. இரயில்வேக்கள் தனியார்மயமாக்கப்படல் வேண்டும் என்பதற்கு Transnet இன் தலைவர் வலுவான ஆதரவைக் கொடுப்பவர்; பெருவணிகத்தின் இலாப நலன்களுக்காகத்தான் வெளிப்படையாகப் பேசுவார்.

"ஒப்பந்த ஐக்கியத்தை" (Contract Unity) மீறுவதாகவும் GDL மீது குறைகூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், ஒருங்கிணைந்த ஒப்பந்தங்கள் வலிமையான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் பிரிவுகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்த நலன்களின் மூலம் வலுவற்ற அடுக்குகளும் பயன்பெறுமாறு இருந்தன. ஆனால் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான ஊதிய, பொதுநலக் குறைப்புக்களை ஏற்ற அளவில், ஒப்பந்த ஐக்கியம் என்பது தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் மீது உடன்பாட்டை சுமத்தும் ஒரு கருவியாகவும், ஊதியங்களை பெரிதும் குறைத்து, வேலைப்பழுக்களை அதிகமாக்கும் கருவியாகவும் மாற்றிவிட்டது.

ஹான்செனும் மற்ற ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலர்களும் "ஒருங்கிணைந்த தொழிற்சங்க கோட்பாடு" என்பதை உயர்த்தி, GDL இற்கு எதிரான பிரச்சாரத்தில் "ஒருங்கிணைந்த ஒப்பந்த உடன்பாடுகள்" வேண்டும் என்றும் கூறும்போது, அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தொழிலாளர் பிரிவினரை பிளவிற்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றனர்.

பல உதாரணங்களையும் இதற்காக மேற்கோளிட முடியும். தங்கள் வேலைநிலைமைகள், ஊதியங்கள் ஆகியவற்றை சரியச்செய்யும் வகையிலான பேச்சு வார்த்தைகளை தொழிற்சங்க அலுவலர்கள், நிறுவனங்களின் தொழிற்குழுக்கள் நடத்துவதை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் காண்பதுடன் தொழிலாளர் பிரினருக்கு எதிரான உடன்பாடுகளை கொண்டுவருவதையும் காண்கின்றனர்.

இப்படித் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நிலைமைகளில் படிப்படியாக முன்னேற்றத்தை கொண்டுவரும் அமைப்புக்கள் என்பதற்குப் பதிலாக வெளிப்படையாக நிர்வாகத்தின் பங்காளிகளாக இருப்பதும், சமூகச் செலவினங்களை குறைப்பதற்கும், பணி நிலைமைகளை மோசமடைய செய்ய ஆதரவு கொடுத்து இலாப விகிதங்களை அதிகரிப்பதுற்கு ஆதரவு கொடுப்பது Transnet, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றுடன் நின்றுவிடவில்லை. இது ஒரு சர்வதேச நிகழ்வாக பூகோளமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்திமுறையுடன் பிணைந்துள்ளது.

ஒரு தேசிய நாட்டின் வரம்பிற்குள் பொருளாதார நடவடிக்கை நடைபெற்ற வரையில், ஜேர்மனி போன்ற முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கு நியாயமான ஊதியம், தக்க சிறப்புப் பயிற்சி, ஊதியத்தோடு கூடிய விடுமுறை, மருத்துவ நலன்கள், பல நிறுவனங்களில் சராசரிக்கும் மேற்பட்ட ஊதியங்கள் போன்றவற்றை உற்பத்தித் தரத்தை காப்பதற்குக் கொடுக்க முடிந்தது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தில் பெருகிய மேலாதிக்கமும் அத்தகைய ஒப்புமையில் வர்க்க சமரசத்தை அடிப்படை என்று கொண்டிருந்த தளத்தை அகற்றி விட்டன.

தொழிற்சங்கங்கள் நிபந்தனையற்ற முறையில் முதலாளித்துவ உற்பத்தி முறை, சொத்துடமை உறவுகளை அங்கீகரிக்கும் நிலையில், அவர்களுடைய சமூக ஜனநாயக கட்சியின் நெருக்கமான உறவை ஒட்டி, அரசாங்கத்துடன் நெருங்கி இருப்பதை அடுத்து, அவை மிக விரைவாக வலதுசாரி பக்கத்திற்கு மாறிவிட்டன. தங்கள் நலன்களைத்தான் அவை முதலும் முக்கியமானது என்று சமூக உறுதித் தன்மைக்கு நினைத்துக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்திற்கு தீவிர விரோதப்போக்கை காட்டுகின்றன.

GDL இன் பங்கு

இரயில் சாரதிகளுடைய சொந்த தொழிற்சங்கம் ஜேர்மனியின் மறு இணைப்பின் பின்னர் கிழக்கு ஜேர்மனியில் இருந்து வந்துள்ள ஏராளமான சாரதிகளின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயில் சாரதிகள் Transnet மற்றும் GDBA உடன் ஒப்பந்தக் கூட்டை முறித்துக் கொண்டு நிர்வாகம் ஊதியக் குறைப்புக்கள் செய்வதை GDL எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இப்போர்க்குணமிக்க தொழிலாளர் பிரிவில் அதிகரித்த தீவிரமயமாக்கல் இருப்பதை பிரதிபலிக்கிறது; குறிப்பாக சமூகச் சரிவு மிகவும் தெளிவாக நாட்டின் கிழக்குப் பகுதியில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது.

ஆனால் GDL உண்மையில் ஒரு பழைமைவாத சிறப்புத் தொழில்வகை சங்கம் ஆகும்; இது பல ஆண்டுகளாக கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) அரசியல்வாதியான மன்பிரட் ஷெல் இனால் வழிநடத்தப்படுகிறது. பாராளுமன்றத்தில் இரயில்வேக்கள் தனியார்மயமாக்கப்படுதலை எதிர்த்து வாக்களித்த ஒரே கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் பிரதிநிதி தான்தான் என்பது பற்றி ஷெல் அதிகம் கூறுகிறார்; ஆனால் பல வராங்களாக அவர் இரயில்வே நிர்வாகத்துடன் "ஏற்கத்தக்க உடன்பாட்டிற்காக" பாடுபட்டு வருவதுடன் தன் சங்க உறுப்பினர்கள் கோரும் ஊதியத்தை விட குறைவான உடன்பாட்டிற்கு வரத் தயார் என்ற குறிப்பைக் காட்டியுள்ளார்.

ஜேர்மன் இரயில்வே நிர்வாகம், அரசாங்கம், செய்தி ஊடகம், ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப் அனைத்தும் திரண்டு அவருடைய தொழிற்சங்கத்திற்கு எதிராகப் பரந்த முறையில் தாக்குதல் நடத்துவதை அவர் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஜேர்மனிய அதிபருக்கு அவர் சமீபத்தில் கொடுத்த முறையீடுகள் சமூக, பொதுநல உரிமைகளுக்கு எதிராக இடைவிடாத் தாக்குதல்களை நடத்துவதற்குக் காரணமாக இருப்பவர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துவதில் அவருக்கு அக்கறை இல்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளன.

மாறாக, இப்பூசலை அவர் "ஒரு சுயேச்சையான ஒப்பந்த உடன்பாடு" பற்றிய கோரிக்கை என்று குறைத்துக் காட்ட முற்பட்டுள்ளார்; இந்தக் கோரிக்கையின்மூலம் இரயில் சாரதிகளுடைய நிலைமை தெளிவாக மோசம் ஆகக்கூடும் என்றும் கருதுகிறார். சில நாட்களுக்கு முன்பு, செய்தி ஊடகத்தில் ஒரு திட்டம் கொடுக்கப்பட்டது; அதன்படி இரயில் சாரதிகள் ஜேர்மன் இரயில்வேயில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடைய அமைப்பையே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் அதன் விருப்பப்படி ஒப்பந்தம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. அத்தகைய உடன்பாட்டின் விளைவு உழைக்கும் மக்களை சிதற அடிக்கும் என்பதோடு தொழிலாளர்களின் ஒரு பிரிவை மற்ற பிரிவுகளுடன் மோதலுக்கும் உட்படுத்தும்.

இரயில் சாரதிகள் அத்தகைய தீர்வை நிராகரிக்க வேண்டும் போராட்டத்தின் தலைமைய ஷெல், அவருடைய GDL கூட்டாளிகள் கரங்களில் அனுமதித்துவிட கூடாது. தங்கள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு வேலைநிறுத்த தலைமையை மேற்கொள்ள வேண்டும். மற்ற இரயில் சங்கங்களோடு தொடர்பு கொண்டு Transnet இன் வேலைநிறுத்தத்தை உடைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களையும் திரட்ட வேண்டும். வேலைநிறுத்தம் அனைத்து இரயில் தொழிலாளர்களும் காலவரையற்ற முறையில் விரிவாக்கப்பட வேண்டும்.

சர்வதேசியம்

ஒரு சர்வதேசச்சார்பு மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கை ஏற்பது முக்கியமாகும். ஜேர்மனிய இரயில் சாரதிகள் வேலைநிறுத்தம் செய்துள்ள நேரத்திலேயே அவர்களுடைய பிரெஞ்சு சக ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளது விந்தையான தற்செயல் நிகழ்வு என்று பலருக்கு தோன்றலாம். ஆனால் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தை முற்றிலும் தேசிய வரம்பிற்குள் நிறுத்திக் கொள்ள முயன்று தங்கள் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பை இலக்காகக் கொண்டிருந்தாலும், ரைன் நதிக்கு இருபுறத்திலும் உள்ள தொழிலாளர்கள் ஒரேவித பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

தன்னுடைய பங்கிற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தேசிய எல்லைகளை கடந்து ஒத்துழைத்து, தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஒருங்கிணைந்து நிற்கிறது. இதுதான் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் நோக்கமாகும்; இது "தடையற்ற சுதந்திர சந்தையின்" இலாபக் கொள்கை மற்றும் தடையற்ற முறையில் ஒரு சிறுபான்மை அனைத்து நாடுகளிலும் செல்வக் கொழிப்பு பெறுவதை சுமத்துவதற்கு அமைப்புகளை நிறுவியுள்ளது.

இந்தக் கொள்கையை தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த சர்வதேச மூலோபாயத்தால் எதிர்த்து மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுடைய ஐக்கியத்தையும் தீவிரமாகக் கோர வேண்டும். இதற்கு பழைய, தேசிய அமைப்புக்களுடன் முற்றிலும் அரசியல்வகையில் உடைத்துக் கொள்ள வேண்டும்; அவற்றின் பிற்போக்குத்தனமான நிர்வாத்துடன் ஒத்துழைப்பு என்பதும் உடைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

வருமானங்கள் பாதுகாக்கப்படல், சமூக, ஜனநாயக உரிமைகளும் காக்கப்படல் என்பதற்கு அடிப்படையில் ஒரு புதிய அரசியல் மூலோபாயம் தேவைப்படுகிறது. பெருவர்த்தக இலாப நலன்கள், நிதி மூலதனம் ஆகியவற்றிற்கு பதிலாக, சமூக வளர்ச்சியில் உழைக்கும் மக்களின் தேவைகளை ஒரு சோசலிச முன்னோக்கிலான மாற்றீட்டை முன்வைக்கும் கருத்து கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் இரயில்வேக்கள் போன்ற முக்கிய பணிகள் ஒரு சிறு தன்னல நிதியக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த அகற்றப்பட்ட சமூகம் முழுவதற்கும் சேவை என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் இரயில்வேயின் தலைவர் தற்போதைய பூசலை ஒரு போருக்கு ஒப்பிட்டார்; இரயில் சாரதிகளுக்கு எதிரான தன்னுடைய விடாப்படியான எதிர்ப்பை நியாயப்படுத்தும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டார். பின் அரசாங்கம் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்த ஒரு அதிகாரக்குழுவை நிறுவ முற்பட்டார். இப்பொழுது தொழிலாள வர்க்கம் தன்னுடைய சுயாதீன நிலைப்பாட்டை மேற்கொண்டு மேஹ்டோர்ன் விடும் அறைகூவலை எதிர்கொள்ள வேண்டும். சிறிதும் தயக்கமின்றி இரயில் சாரதிகளுக்கு ஆதரவு கொடுத்து சமூகம் ஒரு சோசலிசப் பாதையில் சீரமைக்கப்படுவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய முன்னோக்கிற்கு ஒரு சர்வதேச சோசலிசக் கட்சி கட்டமைப்பது இன்றியமையாதது ஆகும். இந்த இலக்கைத்தான் உலக சோசலிச வலைத்தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொடர்கின்றன. எமது வாசகர்கள் அனைவரும் WSWS இல் வெளிவரும் கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றை வினியோகிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ளுமாறும், ஜேர்மனி, ஐரோப்பா, சர்வதேச அளவில் எமது இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான முடிவை எடுக்குமாறும் அழைப்பு விடுகிறோம்.