World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Stop the US war drive against Iran!

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலை நிறுத்து!

By the Editorial Board
14 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒரு அடித்தளத்தை அமைக்கும் புஷ் நிர்வாகத்தின் இராணுவ மற்றும் அரசியல் ஆத்திர மூட்டல்களை உலக சோசலிச வலைத் தளம் கண்டனம் செய்கிறது. வாஷிங்டனிலுள்ள எரியூட்டும் வெறியர்களின் மிருகத்தனமான மற்றும் கிறுக்குத்தனமான போர்வெறியை எதிர்க்க வருமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் மாணவ இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம். போர் தவிர்க்கப்பட வேண்டுமானால் பெருவணிகம் மற்றும் அரசியல் ஸ்தாபன அமைப்பின் ஏகாதிபத்திய ஆதரவு கட்சிகளில் இருந்து சுயாதீனமான முறையில் அரசியல்ரீதியாய் நனவு கொண்ட வர்க்க அடிப்படையிலான இயக்கத்தை அவசியம் கட்டியமைக்க வேண்டும்.

சுய திருப்தி மற்றும் பிரமைகளுக்கான நேரம் இதுவல்ல. அமெரிக்க மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று மத்திய கிழக்கிலான போரை வெகுஜன அபிப்பிராயமாக நிராகரித்து மூன்று மாதங்களுக்குள், புஷ் நிர்வாகம் ஈராக்கில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் விளைவைப் பொருட்படுத்தாது அதன் அண்டை நாடான ஈரானுக்கு எதிராகவும் ஒரு புதிய போரை நோக்கி வலுக்கட்டாயமாக நுழைந்துகொண்டிருக்கிறது.

நிகழ்வுகளின் வேகத்தில் ஐயத்திற்கு இடமின்றி துரித செயல்பாடு உள்ளது. ஈரானுடனும் சிரியாவுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்த ஈராக்கிய ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை புஷ் நிர்வாகம் உதறித்தள்ளி விட்டது. மாறாக, ஜனவரி 10ம் தேதி தன்னுடைய ஈராக் பற்றிய "அலைஎழுச்சியை" அறிவித்த முறையில் புஷ், ஈரானும் சிரியாவும் ஈராக்கில் அமெரிக்க-எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியையும் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி, அமெரிக்க இராணுவம் அத்தகைய ஆதரவு கொடுக்கும் வலைப்பின்னல்களை "தேடிப்பிடித்து அழிப்பதாக" அறிவித்தார். ஒவ்வொரு நாளும் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒத்துழைப்புத் தரும் செய்தி ஊடகத்தின் ஊக்கத்தோடு, தெஹ்ரான் ஈராக்கில் "குறுக்கீடு" செய்கிறது, அமெரிக்க இராணுவ துருப்புக்கள் கொல்லப்படுவதற்கு உதவி கொடுக்கிறது என்ற குற்றச் சாட்டுக்களை சுமத்தி போர் முரசுகளையும் ஆபத்துதரக்கூடிய வகையில் முழக்கி வருகின்றனர். இவை அனைத்தும் சிறிதுங்கூட ஆதாரங்கள் இல்லாமல் கூறப்படுகின்றன.

கடந்த வாரத்திற்குள்ளேயே, சந்தேகத்திற்குரிய முறையில் பென்டகன் அதிகாரிகள் அமெரிக்க ரோந்துப் படைகளுக்கு எதிராக வீசப்பட்ட சில குண்டுகள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என்பதற்கு "சான்றுகளை" கொடுத்துள்ளனர். அவர்களும் நிர்வாகத்தில் உள்ள மற்றவர்களும் "ஈரானிய அரசாங்கத்தின் மிக உயர்மட்டத்தினர்" உறுதியாக இதில் தொடர்பு கொண்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இத்தகைய சான்றுகள் எனக் கூறப்பட்டதை கொடுத்த பென்டகன் அதிகாரிகள் தங்களுடைய பெயர்கள் வெளிவரக்கூடாது என்ற நிபந்தனையில் இதை கூறியுள்ளனர்; இது தெஹ்ரானுக்கு எதிரான போருக்கான காரணத்தை தேடலின் போலித் தயாரிப்பு தன்மையைத்தான் குறிக்கிறது. உண்மையில், இந்தச் "சான்று" பாக்தாத்தில் கொடுக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குளாகவே, கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான, தளபதி பீட்டர் பேஸ் ஈராக்கிய ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்ததில் ஈரானிய அரசாங்கத்திற்கான தொடர்பு பற்றி இராணுவத்திற்கு ஏதும் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆயினும்கூட, தெஹ்ரானுக்கு எதிரான இக்குற்றச்சாட்டுக்கள் மிகப் பரந்த அளவில் செய்தி ஊடகத்தால் கிளிப்பிள்ளை போல் திரும்பத்திரும்ப கூறப்பட்டுவந்திருக்கின்றன; ஊடகமானது, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு இட்டுச்சென்றதில் பங்குவகித்த ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத தொடர்புகளின் அச்சுறுத்தல் பற்றிய பொய்யான போர்ப் பிரச்சாரத்திற்கான ஒரு வடிகால் குழாயாக ஆற்றிய அதே நயவஞ்சக பாத்திரத்தை ஆற்றுவதற்கு பெரும்பான்மையான பகுதி மனநிறைவு கொண்டிருந்தது.

ஈரானுக்கு எதிராக தயாரிக்கப்படும் வாதமும், களத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ஆத்திரமூட்டல்களுடன் இணைந்துள்ளன; இதில் ஈராக்கில் இருக்கும் ஈரானிய அரசாங்க அலுவலகங்களில் திடீர் இராணுவச் சோதனை மற்றும் ஈரானிய தூதர்களை ஆயுதமேந்தியோர் கடத்துதல் ஆகியவையும் அடங்கும்.

இதற்கிடையில் பாரசீக வளைகுடாவில் இராணுவ நிலைகளைக் கட்டுதல் வேகமாக நடைபெற்று வருகின்றன. பெப்ருவரி மாத இறுதியில், இப்பகுதியில் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் உட்பட, 50 அமெரிக்க கடற்படை கப்பல்கள் நிறைந்த தொகுப்பு ஒன்று, மார்ச் 2003க்கு பின்னர் முதல் தடவையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கடற்படைப் பிரிவு ஒன்றும் அங்கு வந்து சேரக்கூடும் என்ற தகவல்கள் வந்துள்ளன. இப்பகுதி முழுவதும் இருக்கும் இராணுவத் தளங்களின் வலைப்பின்னல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர் விமானங்களின் ஆதரவுடன், அமெரிக்க இராணுவத்திற்கு சிறப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான போர் விமானங்களை கொண்டு 24 மணிநேரமும் குண்டுவீசும் திறன் இருக்கும். Patriot எனப்படும் ஏவுகணை-எதிர்ப்பு வழிவகைகளும் வளைகுடா நாடுகளில் இப்பொழுது நிறுவப்படுகின்றன; இவை முக்கியமான அமெரிக்க இராணுவ தளவாடங்களை காப்பதற்கும், ஈரானியரின் பதிலடி கொடுக்கக் கூடிய திறனையிட்டு பதட்டமடையும் நட்பு நாடுகளின் அச்சத்தை போக்குவதற்கும், Patriot எனப்படும் ஏவுகணை-எதிர்ப்பு முறையின் மின்கலத்தொகுதிகள் வளைகுடா நாடுகளில் இப்பொழுது நிறுவப்பட்டு வருகின்றன.

இவ்வித இராணுவத் தயாரிப்புக்களுடன், வாஷிங்டன் தன்னுடைய தூதரக முயற்சிகளையும் ஆழ்ந்த முறையில் மேற்கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் மூத்த புஷ் அதிகாரிகள் எகிப்து செளதி அரேபியா, ஜோர்டான் ஆகியவை உள்பட ஈரானிய எதிர்ப்பு கூட்டணியை ஒருமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடான இஸ்ரேல் ஏற்கனவே ஈரானை அது தன்னுடைய அணுசக்தி திட்டங்களை மூடாவிட்டால் "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.

ஈராக் மீதான படையெடுப்பிற்கு முக்கிய ஊக்கம் கொடுத்தவரான துணை ஜனாதிபதி டிக் செனி இப்பகுதியில் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டதாகும். கடந்த அக்டோபர் மாதம் செளதி அரேபிய மன்னரை அவர் ஒரு நாள் பயணத்தின் போது சந்தித்ததை தொடர்ந்து, செளதி எண்ணெய் உற்பத்தியில் சீரான அதிகரிப்பு இருப்பதுடன் உலக எண்ணெய் விலையில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது; இது ஈரானிய பொருளாதாரத்தை கீழறுப்பது மட்டுமல்லாமல், போரின் பொருளாதார அதிர்ச்சிக்கு எதிராக ஒரு அதிர்ச்சியை குறைக்கும் மெத்தையையும் வழங்குகிறது. இம்மாதமும் செனி ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு சென்று ஈரான் பற்றிய அமெரிக்க திட்டங்களுக்கு இந்த நெருக்கமான கூட்டாளிகளிடமிருந்து ஆதரவை சேர்க்க இருக்கிறார்.

ஒவ்வொரு முயற்சியும் போரை தூண்டும் விதத்தில் செய்யப்படுகிறது. "அவர்கள் எந்த அளவிற்கு தூண்டிவிட முடியுமோ அதைச் செய்து ஈரானியர்கள் (அமெரிக்காவிற்கு) ஏதேனும் செய்து, அதற்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்" என்று புஷ் நிர்வாகத்தின் முன்னாள் தேசிய பாதுகாப்புக் குழுவின் ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா விவாகரப் பிரிவின் இயக்குனரான Hillary Mann நியூஸ் வீக்கிடம் தெரிவித்தார்.

செனியின் "ஈரான் ஆண்டு"

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் கூறுவதாவது: "சில மூத்த நிர்வாக அதிகாரிகள் இன்னும் ஒரு நேரடியான மோதல் என்ற கருத்தை விரும்புகின்றனர். வாஷிங்டனில் ஒரு தூதர், துணை ஜனாதிபதி செனியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான John Hannah, சமீபத்திய கூட்டம் ஒன்றில் நிர்வாகம் 2007 ஐ "ஈரான் ஆண்டு" எனக் கருதுவதாகவும், அங்கு அமெரிக்க தாக்குதல் உண்மையில் நிகழலாம் என்று கூறியதையும் பற்றி கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்."

இதற்கிடையில், கனக்டிகுட்டின் ஜனநாயகக்கட்சி செனட்டரான கிறிஸ்தோபர் டொட், ஞாயிறன்று கொடுத்த தொலைக்காட்சி பேட்டியில், "பலரும் நிச்சயமாய் ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். "கடந்த காலத்தை போலவே அதற்கான நல்ல காரணத்தை தயாரிப்பதைவிட வேறெதனையும் அவர்கள் விரும்பவில்லை என்பதை பார்த்திருக்கிறோம்." என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இதேபோல், நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் போல் க்ருக்மன் திங்கட்கிழமை கட்டுரையில் ஈரான் மீது தாக்குதல் வரும் என்று எச்சரித்தார்: "குறைந்த பட்சமாக, நிர்வாகத்தினுள் ஒரு சக்திவாய்ந்த பிரிவு சண்டைக்கு பெரிதும் முயன்று வருகிறது என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன."

இன்னும் கூடுதலான வகையில், புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை பற்றிய விளக்கங்களும், அதன் உள் இயக்கமும் நாஜி ஜேர்மனி அல்லது ஜப்பானிய பேரரசின் உத்திகளைத்தான் மிகப் பெரிய அளவில் ஒத்திருக்கின்றன. மற்றொரு அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் என்பது தவிர்க்க முடியாது என்ற கருத்தை செயல்படுத்தத் துடிக்கும் குற்றம் சார்ந்த, போர் வெறி பிடித்த சூழ்ச்சிக் குழுவினால் வாஷிங்டனின் கொள்கை பெரிதும் உந்தப்படுகிறது என்பது அதிகரித்த வகையில் வெளிப்படையாக தெரிகிறது.

ஈராக்கிய போருக்கு முன்பு அமெரிக்காவில் இருந்தது போலவே, ஜனாதிபதி புஷ் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தும் உடனடியான திட்டங்கள் ஏதும் இல்லை என்று தொடர்ந்து அறிவித்து வருகிறார். இம்மறுப்புக்கள் நம்பகத்தன்மை கொண்டதல்ல. புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பற்றி மிகப் பெருந்தன்மையான விளக்கம் வேண்டும் என்றால், தெஹ்ரானை மிரட்டுவதன் மூலம் அது ஈரானிய ஆட்சி தன்னுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிபந்தனையற்ற சரண் மூலம் விட்டுவிட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் எனக் கூறலாம். இத்தகைய முரட்டுத்தன நடவடிக்கை அதன் தர்க்கத்தை கொண்டுள்ளது; ஆனால் ஆரம்ப விருப்பங்கள் எப்படி இருந்தாலும் எளிதில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு பெரிய இராணுவப் பூசலை ஏற்படுத்திவிடக் கூடும். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக புஷ்ஷின் நோக்கம் கனிவாக இல்லவே இல்லை என்பதற்கான அதிக ஆதாரங்கள்தான் உள்ளன. அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் வெள்ளை மாளிகையில் இருக்கும் கடுமையான இராணுவாதப் பிரிவினரின் கருத்துக்களை வெளியிடும் புதிய கன்சர்வேட்டிவ்கள் மத்திய கிழக்கை அமெரிக்க ஆதிக்கத்திற்குள் கொண்டுவரும் பரந்த உத்தியை மாற்றியமைக்கும் விதத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் "ஆட்சி மாற்றம்" வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வெள்ளை மாளிகையை கட்டுப்படுத்தும் வலதுசாரி அடுக்கின் பார்வையை நெருக்கமாக பிரதிபலிக்கும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று ஒரு தலையங்கம் எழுதியது; இதில் ஈரான் பற்றிய புஷ் நிர்வாகத்தின் குற்றச் சாட்டுக்கள் நல்ல நாணயம் போல் ஏற்கப்பட்டுள்ளது; மேலும் "அமெரிக்கர்களை எவ்வித பதிலடியையும் பெறாமல் கொன்றுவிடமுடியாது என்ற தகவலை ஈரானுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் இது வலியுறுத்தியுள்ளது." உடனடியாக குண்டுவீச்சு நடவடிக்கை தேவை என்று இது வற்புறுத்துவதுடன், "அதில் புரட்சிப் படைகளின் இலக்குகள் மற்றும் ஈரானிய ஆயுதத் தயாரிப்பு ஆலைகளும் இலக்கு கொள்ளப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பில் என்ன உள்ளது என்பது பற்றி, கவலை தரும் எச்சரிக்கை பெப்ருவரி 1ம் தேதி முன்னாள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski செனட் மன்றத்தின் வெளியுறவுக் கொள்கை குழுவில் அளித்த சாட்சியத்தில் வெளிவந்துள்ளது. புஷ்ஷின் கொள்கைகள் அமெரிக்காவை பேரழிவிற்கு கொண்டு செல்கிறது என்பதில் உளைச்சல் உற்ற பிரிஜேஜின்ஸ்கி ஈராக்கிய போரை, "ஒரு வரலாற்று, மூலோபாய மற்றும் அறநெறித் தன்மைகளின் பேரிடர்" என்று கண்டித்துள்ளார். அமெரிக்கா "ஈராக்கில் நீண்ட இரத்தம் தோய்ந்த தொடர்பில் ஆழ்த்திக் கொள்ளுவதை தொடர்ந்தால், இந்தச் சரிவின் இறுதி முடிவு, நேரடியாக ஈரானுடன் மோதல் என்பதில் முடியும் மற்றும் இஸ்லாமிய உலகின் பெரும் பகுதியுடன் மோதலை ஏற்படுத்தும்."

புஷ் நிர்வாகத்தின் முழு "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" கடுமையாக தாக்குகையில் பிரிஜேஜின்ஸ்கி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அல் கொய்தாவையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாஜி ஜேர்மனி, சோவியத் ரஷ்யா காட்டிய அச்சுறுத்தலுடன் ஒப்பிட்டுக் கூறுவது கற்பனையான வரலாற்று விளக்கம்" என்று விவரித்தார். "இன்னும் பரந்த இஸ்லாமிய அச்சுறுத்தலுடன் இப்பகுதியில் அமெரிக்கா ஏற்கனவே போரில் உள்ளது, அதில் ஈரான் மையப் பகுதியாக உள்ளது, என்று வாதிடுவது தானே கூறும் முன்கணிப்பிற்கு ஆதரவைக் கொடுப்பது போலாகும்" என்றார். "தெளிவற்ற, தூண்டிவிடும் பேச்சுக்கள்... அமெரிக்க-எதிர்ப்பு உணர்வை ஆழ்ந்து வளர்த்து வருகின்றன; அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே ஒரு புதிய நீண்டகால மோதல் வரக்கூடிய ஆபத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன" என்று அவர் அறிவித்தார்.

"ஈரானுடன் ஓர் இராணுவ மோதல் வரக்கூடிய காட்சி" பற்றிய அவருடைய விவரிப்பு மிகவும் அதிர்ச்சியையும், உளைச்சலையும் கொடுப்பதாக இருந்தது. அது "குறிப்பிட்டவற்றை ஈராக் செய்யத் தவறிவிட்டது, இதன் பின்னர் அத்தகைய தவறிவட்டதற்கு ஈரான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்கள், பின்னர் ஈராக்கில் ஒரு ஆத்திரமூட்டலோ அல்லது அமெரிக்காவில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலோ நடந்தால் ஈரான்மீது குற்றம் சாட்டுவது, இறுதியில் ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் என பரந்த மற்றும் ஆழ்ந்த புதைசேறுவரை தனியாக அமெரிக்காவை மூழ்கடிக்கும், ஈரானுக்கு எதிரான 'தற்பாதுகாப்பு' அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எடுப்பதில் உச்சக்கட்டத்தை அடைவதை" சம்பந்தப்படுத்தும், என்று அவர் கருத்துரைத்தார்.

சாட்சியத்தின்போது பிரிஜேஜின்ஸ்கி, வெள்ளை மாளிகை இக்காட்சியைத்தான் அடைந்து கொண்டிருக்கிறது என்றும் "ஈராக்கில் சில ஆத்திரமூட்டல்களோ அல்லது அமெரிக்காவில் ஒரு பயங்கரவாத தாக்குதலோ" ஈரானுக்கு எதிராக போர் நடத்துவதற்கு ஒரு போலிக்காரணத்தை" தயாரிக்கும் திறனுடையது என்றும் கூறினார். அமெரிக்க அரச எந்திரத்தின் மிக உயர்வட்டங்களில் பல தசாப்தங்கள் அனுபவமுடைய ஒரு மனிதரிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வருவது என்பது புஷ் நிர்வாகம் ஈரானுடன் இராணுவ மோதலுக்கு விரைந்து செல்லுகிறது என்பதற்கான தீவிர குறிப்பு ஆகும்; மேலும் அதன் நடவடிக்கைகளின் தொலைதூர பேரழிவு விளைவுகளைப் பற்றியும் அது சிறிதும் கவலைப்படவில்லை என்பதையும் குறிக்கிறது.

ஈரான் மீதான எத்தகைய போரும், ஏற்கனவே அமெரிக்காவால் ஊக்குவித்து, உதவப்பட்டிருந்த 1980கள் முழுவதும் ஈராக்குடன் ஒரு இரத்தம் தோய்ந்த மோதலில் நீடித்திருந்த நாட்டு மக்களுக்கு பெருந்துயர் தரும் விளைவுகளை உடனடியாக கொடுக்கும். ஈரானுக்கு எதிராக அணுகுண்டுகளை பயன்படுத்துவது என்பது அமெரிக்க, இஸ்ரேலிய உயர் வட்டங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது; 1945 ஹிரோஷிமா, நாகாசாகி ஜப்பானிய நகரங்கள் அமெரிக்காவினால் அழிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக ஒரு அணுவாயுதப் பேரிடர் வரும் அச்சம் மூண்டுள்ளது.

ஈராக்கை விட மூன்று மடங்கு பெரிய நாடாகிய, 70 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் மீது அமெரிக்க தாக்குதலின் பாதிப்புக்கள் ஈரானையும் தாண்டித்தான் செல்லும். இம்மோதல் தவிர்க்கமுடியாமல் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா முழுவதும் ஆழ்ந்த உறுதிகுலைக்கும் விளைவைக் கொடுக்கும்; இப்பகுதியின் பெரும் ஆற்றல் இருப்புக்களில் முக்கிய ஆதாயம் பெறும் பிரதான ஐரோப்பிய, ஆசிய அரசுகளையும் இழுக்கும் திறனை உடையது.

புஷ் நிர்வாகத்தின் செயல்முறை பெருகிய முறையில் முதல் இரண்டாம் உலகப் போர்களுக்கு வழிவகுத்த பொறுப்பற்ற ஆக்கிரோஷ செயல்களுடன் வியக்கத்தக்க வகையில் ஒத்திருக்கிறது. 1930 களில் ஜேர்மனியும் ஜப்பானும் தங்கள் துருப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக பல நாடுகளுக்குள் அணிவகுத்துச்சென்று அம்மக்களை பெரும் பீதிக்கு உட்படுத்தி சர்வதேச சட்டத்தை முற்றிலும் இழிவுபடுத்தும் வகையிலும், திமிர்த்தனமாக போலிக் காரணங்களின் அடிப்படையில் அப்பகுதிகளில் தங்கள் கைப்பாவை ஆட்சிகளை நிறுவின. அதேபோல் இன்றும், உலக அரசியலானது மேலும் மேலும் உலகந்தழுவிய பெரும் பேரழிவை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பிடிவாத உறுதிகொண்ட பைத்தியக்காரர்கள் மற்றும் தற்புகழ்ச்சி கிறுக்கர்களின் பிடியில் உள்ளதாக தோன்றுகிறது.

அமெரிக்க இராணுவவாதத்தின் வேர்கள்

இந்த பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு இடையறாத தர்க்கம் உள்ளது. அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்கான அடித்தள காரணங்கள் இலாபமுறையிலேயே இருக்கும் அடிப்படை மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகளை கடப்பதற்காக ஆளும் உயரடுக்குகள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகளில் காணப்படுகின்றன: அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் காலம் கடந்துவிட்ட முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள பிளவு, மற்றும் சமூகமயமான உற்பத்திமுறைக்கும் தனியார் உடைமையை அடிப்படையை கொண்ட சந்தையின் அராஜகத்திற்கும் இடையே இருக்கும் பிளவு என்பதுதான் அது. இலாப விகிதம் சரிந்து கொண்டிருப்பதும் உலகப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஆழமடைந்து வருதலும் பெரிய வல்லரசுகளை மலிவான உழைப்புச் சந்தைகள் மற்றும் வளங்களுக்கான ஈவிரக்கமற்ற போட்டிகளில் தள்ளிவருகிறது மற்றும் அது இறுதியில் இராணுவ வழிமுறைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

அமெரிக்காவை விட வேறு எங்கும் இந்த வழிவகைகள் அதிக தீவிர வெளிப்பாட்டை பெற்றிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், மூன்று தசாப்தங்களாக போர், பெருமந்த நிலை ஆகியவற்றால் அழிக்கப்பட்டிருந்த உலக முதலாளித்துவ ஒழுங்கிற்கு முட்டுக்கொடுப்பதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னிடத்தில் இருந்த பரந்த பொருளாதார ஆதாரங்களை பயன்படுத்த முடிந்தது. இதன் பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய ஆசிய போட்டியாளர்களுக்கு எதிராக தன்னுடைய பொருளாதார சரிவைக் கண்டது உலகின் மிகப் பெரிய கடன் கொடுக்கும் நாடு என்பதில் இருந்து மிகப் பெரிய கடனாளி நாடு என்ற அதன் மாற்றத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டது, அது அமெரிக்காவை உலக அரசியலில் உறுதியற்ற காரணியாக மாற்றிவிட்டது. தன்னுடைய பொருளாதார பலவீனத்தை ஈடுகட்டும் முரட்டுத்துணிச்சலான முயற்சியில், வாஷிங்டன் பெருகிய முறையில் தன்னுடைய எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையை கொண்டு உலக ஆதிக்கம் என்ற தன்னுடைய நிலைமையை தக்க வைத்துக்கொள்ள முயன்றுவருகிறது.

ஈரானுக்கு எதிராக புஷ் போர்த்தயாரிப்பில் ஏன் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான காரணங்கள் தெஹ்ரானிடம் இருப்பதாக கூறப்படும் அணுவாயுத திட்டங்களோ, ஈராக்கின் விவகாரங்களில் அது "குறுக்கிடுகிறது" என்ற கூற்றுக்களோ அல்ல. 1979ம் ஆண்டு தன்னுடைய விசுவாசத்திற்குரிய நண்பர் ஷா ரேஸா பஹ்லவி பதவி அகற்றப்பட்டதை அடுத்து ஈரான்மீது வாஷிங்டன் பொருளாதார முற்றுகையை தொடர்ந்திருந்ததுடன், ஐரோப்பிய சக்திகள் மற்றும் ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகியவை இந்த இஸ்லாமிய குடியரசுடன் இலாபம் தரும் பொருளாதார உடன்பாடுகளில் கையெழுத்து இடுவதையும் கண்டுவருகிறது; இந்நாடுகள் குறிப்பாக ஈரானின் ஆற்றல் இருப்புக்களை பயன்படுத்த விரும்புகின்றன. பொருளாதார அளவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவமுடியாத நிலையில், புஷ் நிர்வாகம் தன்னுடைய இராணுவ வலிமையை கொண்டு உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு, மூன்றாம் பெரிய எண்ணெய் இருப்புக்கள் ஆகியவற்றின்மீது தன்னுடைய கட்டுப்பாட்டை கொண்டுவர முற்படுகிறது.

அமெரிக்காவிலோ, சர்வதேச அளவிலோ ஆளும் வட்டங்களில் உள்ள அறிவுடைய அடுக்குகளால் ஈரானுடனான போரை நோக்கிய சரிவு நிலையை தடுக்க முடியும் என்று நம்புவது மிகப் பெரிய அரசியல் தவறாகிவிடும். அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபன அமைப்பில் பிரிஜேஜின்ஸ்கி இன் எச்சரிக்கைகள் பெரும் மெளனத்துடன் வரவேற்கப்பட்டது என்பது, ஈராக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு பச்சை விளக்கை காட்டிய ஜனநாயகக் கட்சியாளர்கள், புஷ் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள், ஈரானை தாக்குவதன் மூலம் உலகத்துடன் ரஷ்ய ரூலே சூதாட்டம் ஆடுவதை தடுக்க ஏதும் செய்ய மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது. ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறவேண்டும் என்பதற்கான பிரிஜேஜின்ஸ்கியின் சொந்த முன்மொழிவு மற்றும் அதற்காக அனைத்து பிரதான அரசுகளையும் சம்பந்தப்படுத்தும் ஒரு பிராந்திய ரீதியான தீர்வு என்பது உள்ளார்ந்த காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. அந்தகைய திட்டம் தவிர்க்கமுடியாமல் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை அரிப்பிற்கு உட்படுத்திவிடும்; எனவே உலகளாவிய முறையில் அத்தகைய நடவடிக்கை அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கிற்கு முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா அல்லது ஐ.நா. ஆகியவை புஷ் நிர்வாகத்தின் பெரு உந்துதல் மீது தடையாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டவர்கள் ஏமாறப்போவது உறுதியாகும். தங்கள் பொருளாதார நலன்களை காக்கும் வகையில் நீடித்த தந்திர உத்தியை கையாண்ட பின், அனைத்து பெரும் சக்திகளும் டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானமான ஈரானின் அணுவாயுத திட்டம் உலக சமாதானத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்ற அறிவிப்பில் சேர்ந்ததுடன், அவற்றை மூடாததற்காக தெஹ்ரானை கண்டிக்கவும் செய்தன. ஈராக்கிய போருக்கு முன்னர் நடந்ததை போலவே, அமெரிக்கா ஐயத்திற்கு இடமின்றி ஐ.நா. தீர்மானத்தை பயன்படுத்திக் கொள்ள முற்படும்; அத்தீர்மானத்தின் சொற்றொடர்களும், சட்டபூர்வ நெறிகளும் எப்படி இருப்பினும், அது ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போதுமானவை என்று அமெரிக்கா கருதும். ஐ.நா.வை பொறுத்தவரையில், அதன் உயர்மட்ட அதிகாரிகள், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா இராணுவ நிலைகளை கட்டியெழுப்புகின்ற போதிலும் முற்றிலும் ஊமையாய் உள்ளனர்.

ஈரானுடனான போர் என்பது அமெரிக்காவிற்கு ஆழ்ந்த அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். நவம்பர் தேர்தலின் விளைவை புஷ் நிர்வாகம் சிறிதும் பொருட்படுத்தாதது அதை அமெரிக்க மக்களுடன் மோதும் போக்கில் இருத்தியுள்ளது. ஈரான்மீது ஒரு அமெரிக்க தாக்குதல் என்பது இன்னும் கூடுதலான வகையில் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பதுடன் தொடரும்; ஏனெனில் வெள்ளை மாளிகை தன்னுடைய அதிருப்தியான கொள்கைகள் பற்றிய எத்தகைய எதிர்ப்பையும் வேரோடு அழிக்கத்தான் முயலும். ஒருவேளை தயக்கத்துடன் காங்கிரஸ் புஷ்ஷின் திட்டங்களை தடுக்க முற்பட்டால், அமெரிக்க நிர்வாகம், ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு நடைமுறைகளின்படி விதிக்கு ஒத்துப்போகும் என்ற உத்தரவாதம் கிடையாது. ஏற்கனவே பலமுறை, நீண்ட காலமாக நிலைத்துள்ள ஜனநாயக, சட்ட நெறிகளை தூக்கியெறிதல் பற்றி, தலைமைத் தளபதி என்னும் முறையில் தான் கொண்டுள்ள "உரிமைகள்" பற்றி, புஷ் திரும்பத்திரும்ப வலியுறுத்தியுள்ளார்.

வெளி நாடுகளில் புஷ் நிர்வாகத்தின் கொள்ளையடிக்கும் கொள்கை, உள்நாட்டில் முறையே மறுசீரமைத்தல், ஆட்குறைப்பு, வெளிப்படையான நிதிக் கொள்ளையடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அதே ஒட்டுண்ணித்தன பெருநிறுவன மேலடுக்கின் நலன்களைத்தான் பேணுகின்றன. இழிவான வகையில் பெரும் செல்வக் குவிப்புடைய ஒரு சிலருக்கும் மோசமான வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உயிர்வாழப் போராடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி இப்பொழுது மகத்தான சமூக இடைவெளியை கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களின் நலன்களானது புஷ்ஷின் போர்த்திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதில் இல்லை; மாறாக, உலகம் முழுவதும் அவர்களைப் போலவே இருக்கும், அமைதியை விழையும், கெளரவமான வாழ்க்கைத்தரத்தை விரும்பும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நாடும் பரந்த மக்கட்தொகையுடன் ஐக்கியப்படுவதில்தான் உள்ளது.

ஈரானுக்கு ஏதிராக ஏகாதிபத்திய தாக்குதலுக்கு உலக சோசலிச வலைத் தளம் காட்டும் எதிர்ப்பு ஜனாதிபதி அஹ்மதினெஜாதின் பிற்போக்குத்தனமான மதகுருசார்ந்த ஆட்சிக்கு அரசியல் ஆதரவு என்ற உட்குறிப்பைக் கொடுக்கவில்லை. ஈரானிய அரசாங்கம் தனக்கான மக்கள் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள, மத அலங்காரச் சொற்களையும், சில நேரம் ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்களையும் பயன்படுத்தும் முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவ நலன்களின் உறுதியற்ற கூட்டணியைத்தான் பிரதிபலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கம் புதுப்பிக்கப்படுவது பற்றி அது அஞ்சுகிறது; அது புரட்சிகர சோசலிச போராட்டங்களின் நீண்ட வரலாற்றை பெற்றுள்ளது. மத குருக்களின் ஒடுக்குமுறைக் கொள்கைகள் ஈரானிய மக்களுடைய உண்மையான ஜனநாயக, சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் ஈரானிய முதலாளித்துவ ஆட்சியுடன் கணக்கை தீர்ப்பது என்பது ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் பணியாகும். உண்மையில், புஷ் நிர்வாகத்தின் போர்க்கோலம், அஹ்மதிநெஜாதின் அரசாங்கத்திற்கு ஈரானுள் இருக்கும் அழுத்தும் சமூகத் தேவைகளில் இருந்து மக்களுடைய கவனத்தை திசைதிருப்பும் வாய்ப்பைத்தான் கொடுத்துள்ளது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது என்பது ஒரு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்காது, மாறாக, மற்றொரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவி நாட்டை அமெரிக்க பாதுகாப்பிற்குட்பட்ட அரைக்காலனித்துவ அந்தஸ்துடைய நாடாக குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடுவது என்பதாகத்தான் இருக்கும்.

போருக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக

அமெரிக்க இராணுவவாத வெடிப்பை எதிர்க்கக்கூடிய ஒரே வழிவகை, போர் மற்றும் முதலாளித்துவத்திற்குள்ளேயே வேரூன்றியுள்ள அதன் மூலகாரணத்திற்கு எதிராக, உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியமைப்பதுதான்.

உழைக்கும் மக்களின் சுயாதீனமான வலிமையானது, ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து உடனடியாக அனைத்து அமெரிக்க துருப்புக்கள் திரும்ப நிபந்தனையின்றி அழைக்கப்பட வேண்டும், பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க்கப்பல்களின் தொகுப்பு அகற்றப்பட வேண்டும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா முழுவதும் பென்டகன் நிறுவியுள்ள இராணுவ வலைப்பின்னல்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் ஆகியவை உள்ளடங்கலான உறுதியான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கட்டாயம் அணிதிரட்டப்பட வேண்டும்.

அமெரிக்க நிர்வாகத்தினுள் ஈராக் மீது காரணமற்ற போரை நடத்த சதிசெய்த பொறுப்புடையவர்கள் மீதும், இப்பொழுது ஈரானுக்கு எதிராக போர் நடத்துவதற்காக பொய்களை தயாரிப்பவர்கள் மீதும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களுடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்கும் வகையில் கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உழைக்கும் மக்கள் அமெரிக்காவிலோ அல்லது ஏனைய இடங்களிலோ கட்டாய இராணுவ சேவையை திணிக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்; ஏனெனில் அத்தகைய கட்டாய இராணுவ சேவை தொழிலாள வர்க்க இளைஞர்களை இப்போர்களுக்கு இரையாக்கிவிடத்தான் உதவும்.

போருக்கு எதிரான போராட்டம் குறிப்பிட்ட வர்க்கம் மற்றும் அது வளர்க்கும் இலாப நலன்களுக்கு எதிராகவும் கட்டாயம் வழிநடத்தப்பட வேண்டும். மகத்தான இராணுவ-தொழில்துறை பிணைப்பு அமெரிக்காவில் தனியார் கரங்களில் இருந்து எடுக்கப்பட்டு பொதுப் பயன்பாடாக மாற்றப்பட்டு சமாதான வகையிலான உற்பத்தி முறைகள்பால் திருப்பி இயக்கப்பட வேண்டும். மிகப் பரந்த பொது வளங்கள் -- கிட்டத்தட்ட 470 பில்லியன் டாலர்கள், இவ்வாண்டு மட்டும் பென்டகன் செலவுக்காக ஒதுக்கப்பட்டது-- அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள உழைக்கும் மக்களின் அழுத்தமான சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கட்டாயம் திருப்பிவிடப்பட வேண்டும்.

அதேபோல், ஈராக்கின் இறப்பிலும் அழிவிலும் பெரும் இலாபங்களை சுருட்டிய ஆற்றல் பெருநிறுவனங்காளான ExxonMobil, Chevron, Conoco-Phillips போன்றவை அனைத்தும், பொது உடைமை மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

ஈராக்கில் தொடர்ந்திருக்கும் போருக்கும், புதிய இன்னும் இரத்தக்களரியான ஈரான் மீதான தாக்குதல் பற்றிய அச்சுறுத்தலுக்கும் முடிவு கட்டுவதற்கான போராட்டம் இப்பொழுது இருக்கும் பெரு வணிகக் கட்சிகள் மூலமோ மற்றும் அமெரிக்காவிலோ மற்றும் எந்த நாட்டிலோ இருக்கும் அரசு அமைப்புக்களின் மூலமோ முன்னெடுக்கப்பட முடியாதவை ஆகும். அதற்கு உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் மக்களை, ஒரு வெகுஜன சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டுவதற்கான முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது தேவைப்படுகிறது. இப் பணிதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் (International Students for Social Equality -ISSE) அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அமெரிக்காவில் அவசர மாநாடு ஒன்றை, "ஆக்கிரமிப்பை முடித்துக் கொள், ஈராக்கில் இருந்து அனைத்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறு! ஈரானுக்கு எதிராகப் போர் வேண்டாம்! " என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளதை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வலுவாக ஆதரிக்கிறது.

மார்ச் 31, ஏப்ரல் 1ம் தேதிகளில் மிச்சிகன் ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு ஏகாதிபத்திய போர் மற்றும் அதைத் தோற்றுவிக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கு ஒரு இன்றியமையாத அரங்காக பயன்படும்.

See Also:

ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்திடுக! ஈரானுக்கு எதிராகப் போர் வேண்டாம்!
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி போருக்கு எதிரான அவசர மாநாட்டை நடத்துகின்றன

ஈராக்கில் யுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அனைத்துலக ரீதியில் அணிதிரட்டு