World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The Bush administration's economic war on Iran

ஈரான் மீதான புஷ் நிர்வாகத்தின் பொருளாதாரப் போர்

By Peter Symonds
12 February 2007

Back to screen version

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவத் தயாரிப்பு தொடர்ந்து வருகையில், ஈரானுக்கு எதிராக அந்நாட்டை மண்டியிட வைக்கும் நோக்கத்துடன் புஷ் நிர்வாகம் ஏற்கனவே ஒரு பொருளாதாரப் போரை நடத்தி வருகிறது. இச்செயலின் மிக வெளிப்படையான தன்மை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள், பெரிய வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்ற வணிகங்களையும் தெஹ்ரானில் முதலீட்டை நிறுத்தவும், மற்ற கடன்கள், நிதிய உடன்படிக்கைகளை அகற்றிக் கொள்ளும் முயற்சியில் நிதி அமைச்சரகமும் மற்ற அமெரிக்க பிரிவுகளும் ஈடுபட்டு வருவதாகும்.

டிசம்பர் மாதம் ஈரானின் அணுவாயுதத் திட்டங்களை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு சுமத்திய மட்டுப்படுத்திய பொருளாதாரத் தடைகளுக்கு மிகவும் அப்பால் அமெரிக்க கோரிக்கைகள் உள்ளன. இவை ஐரோப்பாவும் ஆசியாவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானுடன் நிறுவியுள்ள பொருளாதர உறவுகளை நேரடியாகத் தாக்கும் வகையில் உள்ளன. தெஹ்ரானுடனான மோதல் என்பது எரிபொருள் வளம்மிக்க நாட்டில் தன்னுடைய போட்டியாளர்களின் இழப்பில் அமெரிக்க ஆதிக்கம் மீண்டும் நிறுவப்படுவதுதான் தனது முக்கிய நோக்கம் என்பதை புஷ் நிர்வாகத்தின் இப்பிரச்சாரம் தெளிவாக்குகிறது. ஈரான் அணுவாயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட ஈராக்கில் "குறுக்கீடு செய்துவருகிறது" என்ற கூற்றுக்கள் அனைத்தும் வெறும் போலிக் காரணங்கள்தான்.

பெப்ருவரி 21ம் தேதி ஈரான் பிரச்சினை மீண்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் வரவிருக்கும்போது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு வாதிடும் என்று வாஷிங்டன் ஏற்கனவே குறிப்புக் காட்டியுள்ளது. இதற்கிடையில், வரவிருக்கும் போர்ச்சூழல் மற்றும், தற்போதுள்ள அமெரிக்க சட்டங்களை பயன்படுத்தி, அதாவது அமெரிக்க அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானிய எரிபொருள் இருப்புக்களில் முதலீடு செய்வதற்கு அபராதம் விதிக்கலாம் எனக்கூறுபவற்றை பயன்படுத்தி ஐரோப்பிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களை ஈரானுடன் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் முரட்டுத்தனமாக விரும்புகின்றனர்.

ஜனவரிக் கடைசியில் தன்னுடைய எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டுமானத்தை உயர்த்திக் கொண்டு விரிவுபடுத்துவதற்கு மிகவும் தேவையான மூலதனத்தை ஈர்க்கும் ஈரானிய முயற்சிகளை தடுக்க அமெரிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. Washington Post இடம் ஒரு ஐரோப்பிய உயரதிகாரி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஈரான் "விவகாரம் சூடுபிடித்துவிட்டது, இன்னும் அதிக சூடுபிடிக்கும்" என்று வெளிப்படையாக எச்சரித்ததாக தெரிவித்தார். மற்றொரு உயர் அதிகாரி கூறினார்: "[அமெரிக்க] நிர்வாகம் வெளிநாட்டு நிறுவனங்கள்மீது முற்றிலும் அழுத்தம் கொடுத்து ஈரானுடன் ஏதேனும் தொடர்பு கொண்டால் அது பெருந்தவறாகிவிடும் என்று விளக்கவும் பெரிதும் முயன்றுள்ளது."

வாஷிங்டனுடைய மிரட்டும், அச்சுறுத்தல் வகை தாக்குதல்கள் ஐரோப்பிய அரசாங்க மற்றும் வணிக வட்டங்களில் பெரும் எதிர்ப்புணர்வை தூண்டியுள்ளது என்பதில் வியப்பு ஏதும் இல்லை. Associated Press இடம் ஒரு ஐரோப்பிய எண்ணெய் ஆலோசகர் "தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் இருந்து பலரும் முறையாக வந்து சந்திப்பதாக அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் உங்களுக்கு தெரிவிக்கும்... ஈரானுடன் வணிகம் செய்யும் வாய்ப்பை, அமெரிக்கர்களை திருப்திப்படுத்துவதற்காக எவரும் ஐரோப்பாவில் இழந்துவிடப் போவதில்லை." என கூறினார்.

இந்த எண்ணெய் நிறுவனங்களை இலக்காக கொள்ளுதல், National Iranian Oil Co (NIOC) புதிய எண்ணெய் தளங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க ஒரு கூட்டத்தை பெப்ருவரி தொடக்கத்தில் வியன்னாவில் ஏற்பாடு செய்திருந்ததை இல்லாதொழிக்கும் நோக்கத்தை கொண்டது ஆகும். அமெரிக்க அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும்கூட, 50 சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 200 பேருக்கும் மேலாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதற்கு ஒரு வாரம் முன்புதான் ஆங்கில-டச்சு எரிபொருள் பெருநிறுவனமான Shell அமெரிக்க அழுத்தத்தை அசட்டை செய்து ஈரானுடன் திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு (LNG) திட்டத்தை தெற்கு பார்ஸ் வயலில் அபிவிருத்தி செய்வதற்காக ஒரு பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புஷ் நிர்வாகம் சற்றும் கைவிட்டுவிடுவதாக இல்லை. பெப்ருவரி 7ம் தேதி முனிச்சில், சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் (IAEA) அமெரிக்க தூதரான Gregory Shulte "என்னை உறுதியாக கூறவிட்டால், அமெரிக்க முன்னோக்கில், பாதுகாப்புக் குழு நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டு மிகக் குறைவாகத்தான் செயற்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இன்னும் அதிகமாகச் செய்யலாம், செய்யவேண்டும்." என அறிவித்தார்.

அரசாங்கக் கடன்கள் வணிகத்திற்கு கொடுக்கப்படும் கூறுபாடு பற்றி Shulte குறிப்பாக இலக்கு வைத்துப் பேசினார்: "உதாரணமாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் எதற்காக ஈரானுக்கான ஏற்றுமதிகளுக்கு கடன்கள் கொடுக்க வேண்டும்? உதாரணமாக ஐரோப்பிய அரசாங்கங்கள் முதலீடுகள் மற்றும் பிற நிதிய நடவடிக்கைகளை குறைக்கும் நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?" அமெரிக்கரின் கூற்றின்படி ஐரோப்பிய அரசாங்கங்கள் 2005ம் ஆண்டில் கடன் உறுதிமொழிகள் $18 பில்லியனை ஈரானுக்கு வழங்கியுள்ளன. இதில் இத்தாலி $6.2 பில்லியன், ஜேர்மனி $5.4 பில்லியன், பிரான்ஸ் $1.4 பில்லியன், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா தலா $1 பில்லியன் என்று உள்ளது. ஈரானுடன் உறவுகளைத் துண்டித்துவிடுமாறு பெரும் சர்வதேச வங்கிகளுக்கும் அமெரிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.

அரசாங்கம் ஊக்கத்தில் கொடுக்கப்படும் வணிகக் கடன் என்பது சர்வதேச அளவில் பரந்திருக்கும் ஒரு வழக்கமாகும். இது சட்டவிரோதம் அல்ல; ஈரான் மீதான ஐ.நா. தடைகளின் விதிகளுக்கு எதிரானதும் இல்லை. தெஹ்ரானுடன் பொருளாதார உறவுகளைத் ஒடுக்கசெய்துவிடவேண்டும் என்னும் வாஷிங்டனின் உறுதி ஈரானுக்கு எதிராக இருப்பது போலவே தன்னுடைய போட்டியாளர்களுக்கு எதிராகவும் உள்ளது. கடந்த தசாப்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாகியுள்ளது; இயந்திரங்கள், தொழில்துறை கருவிகள் மற்ற பொருட்கள் எரிபொருள் தேவைக்காக விற்கப்படுகின்றன. மாறாக அமெரிக்காவோ ஈரானுடன் எந்த வணிகத்தையும் கொள்ளவில்லை; அமெரிக்க நண்பரான ஷா (Shah Reza Pahlavi) நாட்டில் இருந்து 1979இல் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்தே ஒரு பொருளாதார முற்றுகையைத்தான் மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் மட்டுமே இலக்கால இல்லை. ஈரானுடனான வணிக உடன்பாடுகளுக்காக சீனாவும் அமெரிக்க பதிலடியை எதிர்நோக்கியுள்ளது. ஈரானும் சீனாவின் மிகப் பெரிய கடல்கடந்த எண்ணெய் உற்பத்தியாளர் CNOOC யும் டிசம்பர் மாதம் ஈரான் கடலுக்கு அருகில் வடக்கு பார்ஸ் எரிவாயு வயலில் $16 பில்லியன் மதிப்புள்ள திட்டம் ஒன்றிற்கு தொடக்க ஒப்பந்தத்தை அறிவுத்துள்ளன. இந்த ஒப்பந்தம் ஒரு அமெரிக்க சட்ட மன்றக் குழுவினால் CNOOC இற்கு எதிராக சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஈரான் பொருளாதாரத்தடைகளின் கீழ் பொருளாதார அபராதங்களுக்கு உட்படுத்த முடியுமா என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதே சட்டத்தின் கீழ் இந்தியாவும் அச்சுறுத்தப்படுகிறது; இதன்படி ஈரானின் விசைப் பிரிவில் $40 மில்லியனுக்கும் மேலாக எந்த வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்தாலும் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படலாம். இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர் David Mulford, இந்தியாவின் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜீயிடம் அவர் ஈரானுக்கு கடந்த வாரம் பயணிப்பதற்கு முன் இச்சட்டம் பற்றி தெரிவித்ததாக அறிவித்துள்ளார். இந்திய ஒரு பெரிய $7 பில்லியன் எரிவாயுக் குழாய்த்திட்டம் ஈரானில் இருந்து பாக்கிஸ்தான் ஊடாக நிர்ணயிப்பதில் தொடர்பு கொண்டுள்ளது; இத்திட்டத்தை அமெரிக்கா ஏற்கனவே எதிர்த்துள்ளது.

புஷ் நிர்வாகம் ரஷ்யாவிடமும் கிட்டத்தட்ட கட்டிமுடியும் நிலையில் இருக்கும் Bushehr நகரில் உள்ள ஈரானிய அணுசக்தித் திட்டம் உள்ள பணியை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துவருகிறது. கிட்டத்தட்ட $1 பில்லியன் அளவு ஒப்பந்த வேலை முடிவுற்ற நிலையில், ரஷ்யா தெஹ்ரானில் இன்னும் பெரிய கட்டுமான உடன்பாடுகளை, அதிக எரிபொருள் உற்பத்திக் கூடங்களை நிறுவுவதற்காக, கையெழுத்திடும் நிலையில் இருக்கிறது. ஈரானுக்கு ரஷ்யா ஆயுதங்களை விற்பதற்கும் வாஷிங்டன் கடுமையாக குறைகூறியுள்ளது; சமீபத்தில் நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை திட்டங்களை ஈரான் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளதும் இதில் அடங்கும்.

எண்ணைய் விலை என்னும் கருவி

லண்டனை தளமாக கொண்ட டைம்ஸில் கடந்த மாதம் "ஈரானுக்கு புதிய அமெரிக்க மூலோபாயம் டாவோசில் (Davos) வெளிப்படுகிறது" என்ற தலைப்பில் வந்த கட்டுரை புஷ் நிர்வாகத்தின் பொருளாதாரத் தாக்குதலை, "ஒரு புறத்தில் நிதிய இராஜதந்திர முறை, மறு புறத்தில் எரிபொருள் கொள்கை என்றவிதத்தில் கத்தரிக்கோல் போல் இருபக்கத்திலும் தாக்கும் பொருளாதார நடவடிக்கை" என்று கூறியுள்ளது.

கத்தரிக்கோலின் ஒரு பகுதி ஈரானை சர்வதேச நிதிய, வணிகத்தில் இருந்து கத்தரித்துவிட நோக்கம் கொண்டுள்ளது. ஈரான் உலகில் நான்காம் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகும்; ஆனால் அதன் உள்கட்டுமானத்தை உயர்த்த, விரிவுபடுத்த தேவையான முதலீட்டிற்கு பெரும் நெருக்கடியில் உள்ளது. இக்கட்டுரையின்படி, இரண்டாம் பகுதி வேண்டுமேன்றே உலகில் எண்ணெய் விலையைக் குறைக்கும் முயற்சியில் தொடர்பு கொண்டு, அதையொட்டி எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து ஈரான் வருமானம் பெறுவதை குறைக்கப்பார்க்கும். புஷ் நிர்வாகத்தின் எண்ணெய் விலையை குறைக்கும் இம்முயற்சிக்கு முக்கிய நட்பு நாடு ஈரானை தன்னுடைய வட்டாரத்தின் முக்கிய போட்டி நாடாகக் கருதும் சவுதி அரேபியா ஆகும். உலகின் இரண்டாம் பெரிய உற்பத்தியாளர் நாடு என்னும் வகையில் அது உற்பத்தியை பெருக்கி விலையைக் குறைக்க இயலும்.

டைம்ஸ் கட்டுரை விளக்கியது: ஈரானுடைய பொருளாதாரம் முற்றிலும் எண்ணெய் விற்பனையைத்தான் நம்பியுள்ளது; நாட்டின் ஏற்றுமதிகளில் அது 90 சதவிகிதமாக இருப்பதுடன் அதேபோன்றே அரசாங்கச் செலவினங்களிலும் விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஜூலையில் இருந்து ஒரு பீப்பாய் எண்ணெய் $78 டாலரில் இருந்து $50 க்கு சற்று அதிகம் என்று குறைந்து, அரசாங்கத்தின் வருமானத்தையும் மூன்றில் ஒரு பங்கு குறைத்துவிட்டது. எண்ணெய் விலை $35 முதல் $40 என்று குறையுமானால், ஈரான் பற்றாக்குறை நிலைக்குத் தள்ளப்படுவதுடன், ஐ.நா. பொருளாதாரத் தடைகளால் வெளிநாட்டு கடன்களும் கிடைக்காத நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிதியம் கொடுக்கும் திறனில் எளிதில் வீழ்ச்சி அடையும். இந்த அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில், ஈரான் OPEC கூட்டம் விலைகள் உறுதிப்படுத்தவே என்று கூறியுள்ளது; ஆனால் நடைமுறையில் சவுதி அரேபியா ஒன்றுதான் இதைச் செய்யும் சக்தியை உடையது.

"இம்மாத தொடக்கத்தில், ஒரு மிக முக்கியமான அறிக்கையில் சவுதிஅரேபிய எண்ணெய் மந்திரியான அலி அல் நைமி விலைச் சரிவுகளை நிறுத்துவதற்கு உற்பத்தி வெட்டுக்கள் வேண்டும் என்ற ஈரானிய அழைப்புக்களை பகிரங்கமாக எதிர்த்தார். திரு.நைமியின் அறிவிப்பு அரசியலுடன் தொடர்பு இல்லாத ஒரு தொழில்நுட்ப விடயமாகக் காட்டப்பட்டது; ஆனால் ஈரான், ஈராக்கில் அல்லது இப்பிராந்தியம் முழுவதும் இராணுத் தலையீட்டின் மூலமோ அல்லது இன்னும் நயமான பொருளாதார வழிவகைகள் மூலமோ, தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுவதை தடுப்பதற்கு தன் நாடு எதையும் செய்யும் என்ற அப்துல்லா அரசரின் தனிப்பட்ட எச்சரிக்கைகளைத்தான் உறுதிபடுத்துகின்றன."

ஒரு பீப்பாய்க்கு உற்பத்திச் செலவு ஈரானுக்கு 25$ முதல் 18$ வரை என்று ஆகிறது; இது சவுதி அரேபியாவிற்கு ஆகும் பீப்பாய்க்கு 2$ முதல் 3$ வரை என்பதை விட அதிகமாகும்; எனவே உலகில் எண்ணெய் விலைக் குறைப்பு என்பது ரியாத்தைவிட தெஹ்ரானைத்தான் அதிகமாக பாதிக்கும். எனவே சவுதி அரேபியா இதில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதை மறுத்து தன்னுடைய உற்பத்தி வெட்டைக்குறைத்து எண்ணெய் விலையை உயர்த்தவும் மறுத்துவிட்டது. ஆனால் வேண்டுமென்றே சவுதி-அமெரிக்க மூலோபாயம் ஈரானின் பொருளாதாரத்தை குறைப்பதற்காகத்தான் என்பதை ஊகிப்பதாக டைம்ஸ் மட்டும் இல்லை.

சரியும் எண்ணெய் விலைகளைப்பற்றி குறிப்பிடுகையில் நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாதம் முற்றிலும் வணிகம் என்பதைத் தவிர "மற்ற நோக்கங்களும் உள்ளன போல் தோன்றுகிறது; இவற்றில் சவுதி இப்பிராந்தியத்தில் ஈரானின் பேரவாக்களை தடுக்கும் விருப்பமும் இதில் அடங்கும். இதில் அமெரிக்க செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது வெளிப்படையான பிரச்சினைதான். நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் துணை ஜனாதிபதி டிக் செனி அரசர் அப்துல்லாவைச் சந்தித்தார்; ஆனால் எண்ணெய் விவகாரம் விவாதிக்கப்பட்டதா என்று அவருடைய அலுவலகம் ஏதும் கூறவில்லை. வெள்ளை மாளிகை சவுதி அரேபியாவில் எரிபொருள் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது; ஜனாதிபதி புஷ்ஷும் அவருடைய தந்தையாரும் சவுதி தேசியப் பாதுகாப்பு மந்திரியும் முன்னாள் வாஷிங்டனில் தூதராகவும் இருந்த இளவரசர் பண்டார் பின் சுல்த்தானுடன் மிகவும் நெருக்கமானவர்கள்."

இளவரசர் பண்டர் பிர் சுல்தானைப் போலவே அமெரிக்காவை தளமாக கொண்ட சவுதி பாதுகாப்பு ஆலோசகரான நவப் ஒபைடும் ஈரானிய செல்வாக்கைத் தடுப்பதற்கு இன்னும் ஆக்கிரோஷமான சவுதி கொள்கை வேண்டும் என்று வாதிட்டுள்ளார்; இதற்காக அவர் வெளிப்படையாகவே எண்ணைய் விலை ஒரு பொருளாதாரக் கருவியாக பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தையும் நவம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்த கட்டுரையில் கூறியுள்ளார். "சவுதி அரேபிய உற்பத்தியை அதிகரித்து விலையைப் பாதியாகக் குறைத்தால், அப்படியும் அதன் தற்போதைய செலவை முடியாட்சி பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் அது ஈரானுக்கு பேரழிவு தரும்; ஏனெனில் ஈரான் இன்றைய உயர் விலையிலும் அது கடுமையான பொருளாதார இடர்பாடுகளை சந்திவருகிறது." என்று அவர் விளக்கியுள்ளார்.

எந்த அளவிற்கு அத்தகைய திட்டம் நடைமுறையில் இப்பொழுது உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக, அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கையில், அதன் பொருளாதாரத்தை குறைமதிப்பிட்டு, அரசாங்கத்தை வலுவிழக்க செய்வதற்காக பொருளாதார தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொருளாதார, இராணுவ மூலோபாயங்களின் பரந்த இலக்குகள் ஒரே மாதிரியானவைதாம்: மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுதல் என்னும் நோக்கத்தை அடைதலின் ஒரு பகுதியாக, ஈரான் மற்றும் அதன் எரிபொருள் இருப்புக்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved