World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : நேபாளம்

Nepali Maoists to lay down arms and enter the government

நேபாள மாவோவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கத்தில் நுழைகின்றனர்

By W.A. Sunil
11 December 2006

Use this version to print | Send this link by email | Email the author

நேபாள மாவோவாதிகளின் கம்யூனிஸ்ட் கட்சி (CPN-M), ஒரு தசாப்தத்திற்கும் மேலான கெரில்லாப் போராட்டத்தின் பின்னர், ஆயுதங்களைக் கைவிட்டு ஒரு இடைக்கால கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக 10 அம்ச ஒப்பந்தமொன்றில் கடந்த மாதம் கைச்சாத்திட்டது. பல அம்ச சமாதான உடன்படிக்கை (CPA) என்றழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, ஜூன் மாதத்தில் அதன் வரைவுகள் தொடர்பான உடன்பாடுகளை அடுத்து மாதக்கணக்காக நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாகும்.

அமெரிக்கா மற்றும் அயல்நாடான இந்தியா உட்பட்ட பெரும் வல்லரசுகள், மன்னர் கயனேந்திராவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, ஏப்பிரலில் காத்மண்டுவில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடுத்து, நாட்டில் ஸ்திர நிலைமையைக் கொண்டு வருவதற்கான வழிவகை என சி.பி.ஏ. யை பாராட்டியுள்ளன. தன்பங்கிற்கு நேபாள அரசியல் ஸ்தாபனத்திற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொண்ட மாவோவாத தலைமைத்துவம், சோசலிசத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் எண்ணம் இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி பிரகடனம் செய்துள்ளது.

நாட்டின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம், அதே போல் சர்வாதிகார மன்னராட்சியினது முடிவை பெரும்பாலான நேபாள மக்கள் வெளிப்படையாகக் கொண்டாடினார்கள். எவ்வாறெனினும், மாவோவாதிகள் அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளமை, நாட்டின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முடிவுகட்ட எதையும் செய்யப் போவதில்லை. அத்துடன் இது அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் கொள்கைகளுக்கும் எதிரான எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதையும் இலக்காக்க கொண்டுள்ளது. முதலாளித்துவ ஆட்சியை எதிர்ப்பதற்குப் பதிலாக, மாவோவாதிகள் அதைத் தூக்கி நிறுத்துகின்றனர்.

பிரதமர் ஜி.பி. கொய்ராலா, நவம்பர் 21 இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்ட பின்னர், நேபாளத்தில் "புதிய யுகம் ஒன்று தொடங்கிவிட்டது" என ஊடகங்களின் முன்னால் புகழ்ந்துகொண்டார். "துப்பாக்கி ரவைகளின் ஊடாக அன்றி, பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்வு காண முடியும் என்ற செய்தியை நேபாளிகள் சர்வதேச சமூகத்திற்கும் மற்றும் பூகோளம் பூராவும் உள்ள பயங்கரவாதிகளுக்கும் அனுப்பியுள்ளனர்."

பிரச்சன்ட என்றழைக்கப்படும் மாவோவாதத் தலைவர் புஷ்ப கமால் தால், "21ம் நூற்றாண்டில் உலகின் முதலாவது உயர்ந்த பரிசோதனை" என இந்த உடன்படிக்கையை விவரித்தார். இந்த உடன்படிக்கை, "புதிய நேபாளத்தை உருவாக்கக் கனவு கண்ட நேபாளிகளுக்கு ஒரு வெற்றி, மற்றும் முழு பிற்போக்குச் சக்திகளுக்கும் கொள்கைகளுக்கும் ஒரு தோல்வியாகும்," என அவர் தெரிவித்தார்.

உண்மையில், இந்த நேபாள மாவோவாதிகள், 1990களில் தமது ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களைக் கைவிட்டுவிட்டு, பெரும் வல்லரசுகளின் ஆசியுடன் முதலாளித்துவ அரசியலின் பிரதான ஊற்றுக்குள் நுழைவதற்காக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்ட தேசியவாத கெரில்லா இயக்கங்களின் நீண்ட வரிசையில் புதியவர்களாவர். இப்போது பிரச்சன்ட கடந்த தசாப்தங்கள் பூராவும் தனது கெரில்லா இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க உதவிய அதே கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த மாவோவாதிகள், இந்திய அரசாங்கத்தின் மெளன ஆதரவுடன் 2005 நவம்பரில் புது டில்லியில் வைத்து ஏழு கட்சிகள் அடங்கிய தற்போதைய கூட்டணியுடன் இந்த விரிவான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டனர். ஆனால், ஏப்பிரலில் தலைநகரில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வரை இந்த அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கைக்கான உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்த திட்டமிட்ட பொலிஸ் மற்றும் இராணுவப் பாய்ச்சலுக்கு மத்தியிலும் மன்னருக்கு எதிராக பத்தாயிரக்கணக்கானவர்கள் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்புகளை எதிர்கொண்ட மன்னர் கயனேந்திரா, பின்வாங்கியதோடு பாராளுமன்றத்தை மீண்டும் நிறுவி ஏழு எதிர்க் கட்சிகளின் கைகளில் அதிகாரத்தைக் கையளிக்கத் தள்ளப்பட்டார். எவ்வாறெனினும், பரந்த வறுமையை தணிக்க அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழங்கத் தவறியதால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கங்களில் இந்தக் கட்சிகள் அங்கம் வகித்ததால், இந்த ஏழு கட்சிகள் அடங்கிய கூட்டணி சாதாரண உழைக்கும் மக்களின் கண்களின் முன்னாலேயே அவதூறுக்குள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, பிரதமர் கொய்ராலா புதிய அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்த மாவோவாதிகளின் பக்கம் உடனடியாகத் திரும்பினார்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத் தட்டினரும் காத்மண்டு வீதிகளில் இறங்கிய நிலையில், பெருமளவில் நாட்டுப்புறத்திலேயே ஒதுங்கியிருந்த மாவோவாதிகளுக்கும் இந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஒரு அதிர்ச்சியைத் தந்தன. அண்மையில் வெளியான ஏசியன் டைம்ஸ் கட்டுரையின் படி, "சமகாலப் போக்குகளும் மற்றும் நேபாளத்தினுள்ளும் மற்றும் அதைச் சூழவும் இடம்பெறும் நிகழ்வுகளும் தாம் தலைமை வகிக்கும் கிளர்ச்சியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற அவர்களை அனுமதிக்காது என்பதை மாவோவாதிகள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை பிரச்சன்டவின் உதவியாளர் பிரபுராம் பட்டாராய் ஏற்றுக்கொண்டார்..."

சி.பி.என்.-எம் ஐ ஒரு "பயங்கரவாத" அமைப்பாக முத்திரை குத்தியதோடு நேபாள இராணுவத்தைப் பலப்படுத்த உதவிய புஷ் நிர்வாகத்தின் எதிர்ப்பு ஒரு பிரதான கால்தடுமாறச் செய்யும் தடையாக இருந்தது. ஆளும் கூட்டணியும் மற்றும் மாவோவாதிகளும், யுத்தத்திற்கு முடிவுகட்டவும் ஒரு கூட்டு இடைக்கால நிர்வாக அரசாங்கத்தை அமைக்கவும் ஜூன் மாதத்திலேயே ஒரு உடன்பாட்டை அடைந்திருந்தாலும் கூட, அந்த உடன்படிக்கை முழுமைபடுத்தப்படவில்லை. பெரும் வல்லரசுகள், குறிப்பாக அமெரிக்கா, மாவோவாதிகள் எந்தவொரு அரசாங்கத்திற்குள்ளும் நுழைவதற்கு முன்னதாக தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இறுதி உடன்படிக்கையின் கீழ், ஐ.நா. மூலம் தமது ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு பூட்டப்பட்ட படையினரின் ஏழு குடியிருப்புக்குள் மாவோவாத போராளிகள் வரையறுக்கப்படுவர். சுமார் 35,000 பேராக உள்ள முன்நாள் கெரில்லாக்களுக்கு பங்கீடு வழங்கவும் மற்றும் "புனர்வாழ்வுக்கும் ஒருமைப்பாட்டுக்கும்" உதவவும் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. ஆயினும், தற்போதுள்ள நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகும். வெறும் 70 மில்லியன் நேபாள ரூபாய்கள் அல்லது 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான தொகை, மிக விரைவில் செலவாகப் போகிறது.

தாம் முன்னர் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த கிராமப்புற பிரதேசங்களில் தமது "புரட்சிகர அரசாங்கத்திற்கும்" முடிவுகட்டவும் சி.பி.என்-எம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த இடைக்கால பாராளுமன்றத்தில் மாவோவாதிகள் 73 ஆசனங்களைக் கொண்டுள்ளனர். இது போட்டிக் கட்சியான நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிய- லெனினிஸ்டுகள்) கொண்டிருக்கும் எண்ணிக்கைக்கு சமமானதும், கொய்ராலாவின் நேபாளி காங்கிரஸின் 85 ஆசனங்களுக்கும் குறைவானதாகும். எஞ்சியுள்ள 99 ஆசனங்கள் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் பங்கிடப்படும். சி.பி.என்-எம் அமைச்சரவையிலும் பதவிகளைப் பெறும்.

அரசியலமைப்பு சபைக்கான தேர்தலொன்று 2007 ஜூனில் நடைபெறவுள்ளது. அதன் முதலாவது கூட்டத்தில், மன்னராட்சியை ஒதுக்கித்தள்ளுவதா, அல்லது அதை தொடர்வதானால் அரசியலமைப்பில் மன்னருக்கு உள்ள பாத்திரம் என்ன, என்பதை பற்றி சாதாரண பெரும்பான்மையில் முடிவெடுக்கவுள்ளது. முன்னதாக எந்தவொரு உடன்படிக்கைக்குமான முன்நிபந்தனையாக மன்னராட்சிக்கு முடிவுகட்டுமாறு மாவோவாதிகள் வலியுறுத்தி வந்தனர். கொய்ராலாவும் மற்றும் நேபாளி காங்கிரஸும், முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த மன்னரை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பாத்திரத்துடன் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகின்றன.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட டெலிகிராப் சஞ்சிகைக்கு கடந்த மாதம் செவ்வி வழங்கிய பிரச்சன்ட, நேபாளத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் மூலதனம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். "நாங்கள் சோசலிசத்திற்காகப் போராடவில்லை," "நாங்கள் வெறுமனே நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக மட்டுமே போராடுகிறோம்." நாங்கள் ஒரு முதலாளித்துவ முறையிலான உற்பத்திக்காகப் போராடிக்கொண்டிருகிறோம். நாங்கள் முதலாளித்துவத்திற்கும் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கும் அதிக இலாபம் பெற்றுத்தர முயற்சிக்கின்றோம், என அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பிரச்சன்டவின் கருத்துக்கள், தேசியவாத மாவோவாத கருத்தின் பிரதான உள்ளடக்கமான ஸ்ராலினிச இரண்டு கட்டக் கொள்கையின் நேரடியான விளைவாகும்.

மாவோவாதிகள், எப்பொழுதும் தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளதும் நலன்களை முதலாளித்துவ வர்க்கத்தின் "முன்னேற்றமான" பிரிவினருக்கு கீழ்ப்படுத்தி வந்துள்ளதோடு, சோசலிசத்தை தொலைதூர எதிர்காலத்திற்குள் தள்ளினர். ஆளும் வர்க்கம் மாற்றமின்றி வெகுஜனங்களின் மீது திரும்புகையில், ஒரு நாட்டை அடுத்து இன்னொரு நாடு என விளைவுகள் அழிவுகரமானதாக உள்ளன.

அதன் பொருளாதார மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கும் அப்பால் நேபாளம் ஒரு முதலாளித்துவ நாடே அன்றி நிலப்பிரபுத்துவ நாடு அல்ல. மன்னர் கயனேந்திராவும் கூட தனது வியாபார கொடுக்கல் வாங்கல்களில் நன்கு பிரசித்தி பெற்றவர். மாவோவாதிகளின் வேலைத்திட்டம் சாதாரண உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, நேபாளத்தை வெளிநாட்டு முதலீட்டுக்காக திறந்துவிடுவதில் இலாபத்தை அறுவடை செய்ய அக்கறையாக இருக்கும் வர்த்தகத் தட்டுக்களின் சில பிரிவுகள், மன்னரை ஒரு முட்டுக்கட்டையாகக் கருதுகின்றன. சி.பி.என்-எம் அலுவலர் தேவ் பஹதுர் குருங், அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில், தமது கட்சி "பூகோளமயமாக்கம் அல்லது பொருளாதார தாராளமயமாக்கம் அல்லது திறந்த சந்தை பொருளாதாரத்தை" எதிர்க்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.

குறிப்பிடத்தக்கவகையில், மாவோவாதிகள் வேலைநிறுத்தங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நசுக்க உதவுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். உடன்படிக்கையின் 7வது அம்சம் பிரகடனப்படுத்துவதாவது: "நாட்டில் நிலவும் கைத்தொழில் காலநிலைக்கு தடையேற்படாதவாறு உற்பத்தி தொடர வேண்டும் மற்றும் கூட்டாக பேரம்பேசும் உரிமையும் மற்றும் சமூகப் பாதுகாப்பும் மதிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். நிர்வாகத்துடனான எந்தவொரு பிரச்சினையும் "சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்."

ஏனைய நேபாள தலைவர்களுடன் சேர்ந்து, பிரச்சன்டவும் அடுத்த ஆண்டு தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு முன்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டருக்கு அழைப்புவிடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார். "சாதகமான சூழ்நிலையொன்றில் அரசியலமைப்பு சபை தேர்தலை நடத்த உங்களது அர்ப்பணிப்பை நான் மதிக்கிறேன்," என அவர் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் வெறுமனே காட்டருக்கு அன்றி, அமெரிக்க ஆளும் தட்டுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதை இலக்காகக்கொண்டு முகவரியிடப்பட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் மாவோவாதிகளுடனான உடன்படிக்கைக்கு தயக்கத்துடனேயே ஆதரவளித்துள்ளது. ஏப்பிரல் வரை, நாட்டினுள் அமெரிக்க செல்வாக்கை கட்டியெழுப்பும் வழிமுறையாக மன்னருக்கும் மற்றும் அவரது சர்வாதிகார முறையிலான ஆட்சிக்கும் வாஷிங்டன் ஆதரவளித்தது. நேபாளம் தொடர்பான அதன் நிலைப்பாடு, தெற்காசியா உட்பட சீனாவின் அயல்நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துக்கொள்வதன் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்துவதை இலக்காக்க கொண்டதாகும்.

மாவோவாத கெரில்லாக்களை தாமும் எதிர்கொள்ளும் இந்தியா, சி.பி.என்-எம் மற்றும் ஏழு கட்சி கூட்டணிக்கும் இடையிலான உடன்படிக்கையை முன்னிலைப்படுத்துவதில் ஒரு பிரதான பாத்திரத்தை இட்டு நிரப்பியது. இந்தியாவில் உள்ள மாவோவாத குழுக்களையும் இதே பாதையைப் பின்பற்ற உற்சாகமூட்டும் வழிமுறையாக இந்த உடன்படிக்கையை புதுடில்லி நோக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மாதம் 10 அம்ச உடன்படிக்கையில் இறுதியாகக் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக பிரச்சன்ட இந்தியாவிற்கு விஜயம் செய்தார். தனது கட்சி "(ரஷ்ய) அக்டோபர் புரட்சி போன்ற ஒரு நிகழ்வை நேபாளத்தில்" முன்னெடுக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் மாநாட்டை மீண்டுமொரு முறை பயன்படுத்திக்கொண்டார்.