World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US forces carry out provocative raid on Iran's consulate in northern Iraq

வடக்கு ஈராக்கில் ஈரான் தூதரகத்தின்மீது அமெரிக்கப் படைகள் ஆத்திரமூட்டும் திடீர் சோதனைகளை நடத்துகின்றன

By Peter Symonds
12 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

நேற்று அதிகாலையில், ஈராக்கின் வடபகுதியில் உள்ள இர்பில் நகரத்தில் உள்ள ஈரானிய தூதரகத்தை அமெரிக்கப் படைகள் சோதனைக்கு உட்படுத்தி குறைந்தது ஐந்து ஊழியர்களையாவது காவலில் வைத்தனர். இதற்கு சில மணிநேரங்கள் முன்பு, அமெரிக்க இராணுவம் "ஈரானில் இருந்தும் சிரியாவில் இருந்தும் ஆதரவு வருவதை தடுக்கும்' மற்றும் ஈராக்கில் உள்ள எமது விரோதிகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் வலைப்பின்னல்களை தேடி அழிக்கும்" என்று ஜனாதிபதி புஷ்ஷின் உரையில் அடங்கியிருந்த போரூக்கமுள்ள செய்தியை வலுப்படுத்துவதைத்தான் இந்த கைதுகள் தெளிவாக நோக்கமாகக் கொண்டிருந்தன.

2005ல் இருந்தே, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஈரானும் சிரியாவும் உதவிபுரிந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் பல முறையும் கூறிவந்தாலும், அதற்கு தக்க சான்றுகள் எதையும் அளிக்கவில்லை. நேற்றைய சோதனைக்கு பின்னர் அமெரிக்க இராணுவம் கூட்டணி-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக "நெருக்கமான பிணைப்பு உடையவர்கள் என்று சந்தேகப்படும்" ஆறு நபர்கள் "வாடிக்கையான பாதுகாப்புச் செயற்பாடுகளின்" ஒருபகுதியாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற பசப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கூட்டணிப் படைகள், ஈராக்கிய அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி ஈராக்கின் உள் பாதுகாப்பு விவகாரங்களில் விரோதமாக செயல்படுபவர்களால் மேற்கொள்ளப்படும் தலையீட்டை தடுக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

ஆனால் எவ்விதத்திலும் வாடிக்கையான செயல் என்று கூறமுடியாதபடிதான் இந்த நடவடிக்கை இருந்தது. உள்ளூர் குர்திஷ் அதிகாரிகளின் கூற்றின்படி, காலை 3 மணிக்கு அமெரிக்கப் படைகள் தூதரகத்திற்கு வெளியே இருந்த காவலாளிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு, கட்டிடத்திற்குள் நுழைந்து கணினிகளையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்தன. வானத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. இந்த தொடர்பு அலுவலகம் தூதரகப் பாதுகாப்பு கொண்டது என்பதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்தாலும், அது தூதரக முறைப்படி பயண ஆவணங்களை கொடுப்பதுடன் ஏனைய தூதரகச் செயல்களையும் மேற்கொண்டு அதிகாரபூர்வ அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்ததாகும். நடவடிக்கையின்போது கட்டிடத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஈரானியக் கொடி கீழே இறக்கப்பட்டது.

"ஈராக் அரசாங்கத்துடன் சேர்ந்து வேலைசெய்கிறோம்" என்பதை பொறுத்தவரையில், அமெரிக்க இராணுவம் எந்த ஈராக்கிய அரசாங்க அதிகாரிகளிடமோ அல்லது வட்டார குர்திஷ் அரசாங்கத்திடமோ தங்களின் திட்டங்கள் பற்றித் தெரிவிப்பது தொடர்பாக பொருட்படுத்தவில்லை. குர்திஷ் அதிகாரிகளிடம் இருந்து கவனமாக வந்த அறிக்கை ஒன்று தூதரகம் சர்வதேச உடன்பாட்டின்படி பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கை "ஈராக்கின் இதர இடங்களில் சமாதானம், உறுதிப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவாது" என்று எச்சிரித்துள்ளது. மேலும் "எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் முன் குர்திஸ்தான் அரசாங்கத்திற்கு தெரிவிப்பது நல்லது" என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஓர் இரண்டாம் சோதனை இர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கையில் கிட்டத்தட்ட அமெரிக்கப் படைகளுக்கும் குர்திஷ் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்படவிருந்தது என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது. விமான நிலையத்திற்குள் இருக்கும் சில நபர்களை கடத்த அமெரிக்க படைகள் முயன்றன என்றும் அவர்கள் குர்திஷ் படைகளால் சூழப்பட்டனர் என்றும் தெரிகிறது. ஈராக்கிய வெளியுறவு மந்திரி ஹோஷ்யார் ஜேபாரி செய்தி ஊடகத்திடம் "எங்கிருந்தோ இக்குழு வந்தது, தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை" என்று கூறினார். ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்திருந்த மூத்த குர்திஷ் அரசியல்வாதியான ஜேபாரி "கூட்டணியில் இருக்கும் எமது நண்பர்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை; (ஆனால்) இது ஒரு எளிதில் ஊறுபடத்தக்க விவகாரம் ஆகும்" என்று கூறினார்.

ஈரானிய தூதரக ஊழியர்களை காவலில் வைத்துள்ளது தெஹ்ரானிடம் இருந்து சீற்றமான விடையிறுப்பை கொடுத்தது; அந்நாடு ஈராக்கிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சரகம் ஈராக்கிய, ஸ்விஸ் தூதர்களை வரவழைத்து நிகழ்வு பற்றி ஒரு விளக்கத்தைக் கோரியது. (ஸ்விட்சர்லாந்து ஈரானில் அமெரிக்க நலன்களுக்கு பிரதிநிதியாக உள்ளது.) ஈரானிய செய்தித் தொடர்பாளர் Mohmmad Ali Hossseini அரசு நடத்தும் வானொலியில், அமெரிக்க நடவடிக்கை ஈரான் மீது "அழுத்தத்தை தொடர்ந்து கொடுப்பதை" பிரதிபலித்தது என்றும், ஈராக்கிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே "நெருக்கடியை தோற்றுவிக்கும்" நோக்கத்தை கொண்டது என்றும் கூறினார்.

ஈரானிய ஆட்சிக்கு எதிரான நோக்கத்தை இச்சோதனை கொண்டிருந்தது என்பது மட்டும் இல்லாமல், அமெரிக்க மூலோபாய திட்டங்களில் தலையிடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பாக்தாத்தில் பிரதமர் நூரி அல்-மாலிகியின் தலைமையிலான அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் ஷியைட் அடிப்படைவாத கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது; அவை அனைத்தும் நீண்ட காலமாக ஈரானுடன் தொடர்பு உடையவை. ஈரானிய ஊழியர்களை இர்பில் நகரில் காவலில் வைத்ததின் மூலம், புஷ் நிர்வாகம் ஈரானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் ஈராக்கிய அரசாங்கத்தின் முயற்சிகளை நேரடியாக கீழறுத்ததுடன், ஈராக்கினுடைய வெளிநாட்டுக் கொள்கை பாக்தாத்தில் இல்லாமல் வாஷிங்டனில்தான் நிர்ணயிக்கப்படும் என்பதையும் தெளிவாக்கியது.

மனம் வெறுத்திருந்த ஈராக்கிய செய்தித் தொடர்பாளர் அலி அல்-தப்பக் நேற்று செய்தி ஊடகத்திடம் அவருடைய அரசாங்கம் அமெரிக்க, ஈரானிய அதிகாரிகளிடம் இருந்து கைது பற்றி விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்காவிற்கும் ஈராக்கின் அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் முன்னேற்றம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர் அறிவித்ததாவது: "சில நேரங்களில் நாங்கள் (ஈராக்) ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள உறவுகளின் நெருக்கடிக்கு கடும் விலை கொடுக்க வேண்டியுள்ளது". ஈரானுடனும் சிரியாவுடனும் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று புஷ் நிர்வாகம் உறுதியாக நிராகரித்துவிட்டது.

ஈர்பிலில் நேற்று நடந்த நடவடிக்கை ஈராக்கில் ஈரானியர்களுக்கு எதிரான அமெரிக்கர்களின் இரண்டாவது ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும். கடந்த மாதம், அமெரிக்க இராணுவம் குறைந்தது ஐந்து ஈரானியர்களை இரண்டு பாக்தாத் சோதனைகளின் பொழுது கைது செய்தனர்; அவர்கள் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு உதவி செய்வதில் தொடர்பு உடையவர்கள் என்றும் கூறினர். டிசம்பர் 20 அன்று நடந்த முதல் நடவடிக்கையில், அமெரிக்க இராணுவத்தினர் ஒரு காரை நிறுத்தி நான்கு பேரை கைது செய்தனர் --மூன்று ஈரானியர்கள் மற்றும் ஒரு ஈராக்கியர். ஈரானியர்களில் இருவர் முறையான அங்கீகாரம் பெற்ற தூதர்கள் ஆவர்; அவர்கள் ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் டாலிபானியான் டிசம்பர்மாதம் தெஹ்ரானுக்கு சென்றிருந்தபோது ஈராக்கிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். நான்கு பேரும் இறுதியில் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்கர்களின் வற்புறுத்தலின்பேரில் இரண்டு தூதர்களும் ஈரானுக்கு ஈராக் அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

டிசம்பர் 21 அதிகாலை நடவடிக்கை ஒன்றில், மாலிகியின் ஆளும் கூட்டணியில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் ஈராக்கில் புரட்சிக்கான உயர் சபையின் (SCIRI ன்) தலைவரான அப்துல் அஜிஸ் அல்-ஹகிமின் இல்லத்தை சோதனைக்கு உட்படுத்தினர். இரண்டு ஈரானியர்களும் எட்டு ஈராக்கியர்களும் ஈராக்கிய பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவரும், SCIRI உடைய ஆயுதப் பிரிவான பதர் அமைப்பின் தலைவருமான ஹதி அல்-அமேரியின் வீட்டில் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க இராணுவம் இரு ஈரானியர்களும் மூத்த இராணுவ அதிகாரிகள் என்றும் ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியது. தடுப்பிற்கு உட்பட்டவர்களில் சிலரிடம் "ஈராக்கில் இருக்கும் ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஆயுதங்கள் அளிப்பதில்" தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக ஆதாரமற்ற, தெளிவற்ற குற்றச் சாட்டுக்களும் கூறப்பட்டன.

ஒரு வாரத்திற்கு முன்புதான் வாஷிங்டனில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய ஹகிம் மிகவும் பணிவுடன் இதற்கு உடன்பட்டு எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. ஒரு முக்கிய குர்திஷ் தலைவரான ஈராக்கிய ஜனாதிபதி டாலிபானியும் இதுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் அமெரிக்க நடவடிக்கைகளினால் கடும் சீற்றம் அடைந்தனர் என்பதில் ஐயமில்லை. ஈராக்கில் உள்ள தங்களின் விசுவாசமான கூட்டாளிகள் மத்தியில் அதாவது SCIRI மற்றும் குர்திஷ் கட்சியை சேர்ந்தவர்கள் மத்தியில் இருப்பவர்களின் உணர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா நடந்து கொள்ளும் விருப்பமானது, ஈரானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், புஷ் நிர்வாகமானது ஈராக்கிலுள்ள தன்னுடைய கைப்பாவை அரசாங்கத்திடம் இருந்து எந்த எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ளாது என்பதற்கான கடுமையான அடையாளத்தை காட்டுகிறது.

அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் கொள்கை குழுவிற்கு கொடுத்த சாட்சியம் ஒன்றில் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் புதனன்று ஜனாதிபதி புஷ்ஷின் உரையின் மையக் கருத்துக்களை வலியுறுத்தினார்: அமெரிக்கா சிரியாவிற்கு எதிராகவும், குறிப்பாக ஈரானுக்கு எதிராகவும் இன்னும் கூடுதாலான ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொள்ளும் என்பதே அது. தன்னுடைய உரையில் புஷ் ஈராக்கில் ஈரானிய மற்றும் சிரியத் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் அமெரிக்க கருத்தை அறிவித்ததோடு மட்டும் இல்லாமல் பாரசீக வளைகுடாவிற்கு விமானத் தளம் உடைய இரண்டாம் கப்பல் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதோடு, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் நட்புநாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு முறைகளும் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார்.

குழுவின் தலைவர் ஜோ பிடென் எழுச்சியாளர்களுக்கு வருவதாகக் கூறப்படும் "தொடர்ச்சியான ஆதரவை" முறியடிக்க ஈரான் மற்றும் சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க புஷ் நிர்வாகம் விரும்புகிறதா என்று ரைஸை நேரடியாகக் கேட்டார். ஆரம்பத்தில் குவிப்பு ஈராக்கிற்குள் காட்டப்படும் என்று வலியுறுத்திய ரைஸ், இரு அண்டை நாடுகளுக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று கூறிவிடமுடியாது என்றார். "எமது படைகளை காப்பாற்ற எதையும் நமது ஜனாதிபதி செய்வார். ஆனால் இப்பொழுது திட்டம் ஈராக்கில் இருக்கும் வலைப்பின்னல்களை வீழ்த்துவதுதான்" என்று அவர் கூறினார்.

CBS இன் "Early Show" வில் ரைஸ் தன்னுடைய கருத்துக்களை இன்னும் விரிவாகக் கூறினார்; மத்திய கிழக்கில், ஈரானிய எதிர்ப்புக் கூட்டணி ஒன்றை அமெரிக்கா அமைத்துக் கொண்டிருக்கிறது என்ற குறிப்பை காட்டினார். ஈரானுடனும் சிரியாவுடனும் மோதலுக்கான அரங்கு அமைக்கப்பட்டுவிட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் விடையிறுத்ததாவது: "வெளிப்படையாக ஜனாதிபதி அந்த விருப்பத்தேர்வை ஒன்றும் தவிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தக் கட்டத்தில் நாங்கள் எதிர்பார்ப்பதை, இப்பிராந்தியத்தில் ஈரானின் நகர்வை, அதன் பிராந்திய ஆக்கிரமிப்பு பற்றிய அச்சத்தைப் பற்றி அப்பகுதியில் ஒருமித்த உணர்வை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை அவர் நம்புகிறார்."

இதேபோன்ற கேள்வி NBC இன் "Today Show" வில் வந்தபோது, ரைஸ் பாக்தாத்தில் டிசம்பர் மாதம் ஈரானிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதை உயர்த்திப் பேசி அறிவித்தார்: "கிறிஸ்துமஸ் நேரத்தை ஒட்டி, எமது படைகளின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஈரானியர்கள் குழு ஒன்றைக் கண்டோம். நாங்கள் சென்று அவர்களை கைப்பற்றினோம்; பின்னர் ஈராக்கிய அரசாங்கத்திடம் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரினாம்; அவர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களுடைய நடவடிக்கைகளை அமெரிக்கா ஏற்காது, பொறுக்காது, எமது படைகளுக்கு கெடுதல் செய்வதையோ, ஈராக்கின் உறுதி குலைக்கப்படுவதையோ நாம் ஏற்கமாட்டோம் என்பதை ஈரானியர்களும் சிரியர்களும் நன்கு அறியவேண்டும்."

ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி எந்த ஆதாரமும் கொடுக்காத ரைசின் பதில், டிசம்பர் சோதனைகள் வெள்ளை மாளிகையின் உயர்மட்டங்களில் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அதன் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகிறது. இர்பிலில் நேற்றைய நடவடிக்கை, இத்தகைய ஆத்திரமூட்டல்கள் வரவிருக்கும் மாதங்களில் கூடுதலாக இருக்கும் என்பதையும், ஈரானுக்கு எதிராக ஒரு பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள புதிய சாக்குப்போக்குகளை தோற்றுவிக்கும் என்ற புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளைத்தான் காட்டுகிறது.