World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

An unpalatable truth for Bush: most foreign insurgents in Iraq are Saudis

புஷ்ஷற்கு விரும்பத் தகாத உண்மை : ஈராக்கில் இருக்கும் வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் செளதிக்கள்

By Peter Symonds
17 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் உள்ள வெளிநாட்டு எழுச்சியாளர்களின் தேசிய மூலத்தைப் பற்றி ஞாயிறன்று Los Angeles Times ல் வந்துள்ள கட்டுரை ஒன்று, புஷ்ஷின் ஈரானுக்கு எதிரான இடைவிடா பிரச்சாரத்தில் ஒரு பெரிய துளையை போட்டுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்தல், பயிற்சியளித்தல், பணம் கொடுத்தல், புதிய இணையங்களை கொடுத்தல் போன்றவற்றை செய்து ஈராக்கில் "தலையிடுவதாக" தெஹ்ரானை வெள்ளை மாளிகை பல மாதங்களாக அரக்கத்தனமாக சித்தரித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான வெளிநாட்டு போராளிகள் ஈரானில் இருந்து வரவில்லை, மாறாக, புஷ் நிர்வாகம் குறிப்பிட்ட முறையில் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள அமெரிக்காவிற்கு வெகு நெருக்கமான நட்பு நாடாகிய செளதி அரேபியாவில் இருந்துதான் வருகின்றனர்.

Los Angeles Times கொடுத்துள்ள இராணுவ புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க துருப்புக்கள் மற்றும் ஈராக்கிய குடிமக்கள், பாதுகாப்பு படைகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வெளிப் போராளிகளில் கிட்டத்தட்ட 45 சதவிகிதத்தினர் செளதி அரேபியாவில் இருந்து வருகின்றவர்கள் எனத் தெரிகிறது. மற்றொரு 15 சதவிகிதத்தினர் சிரியா மற்றும் லெபனானில் இருந்தும், 10 சதவிகிதத்தினர் வட ஆபிரிக்காவில் இருந்தும் வருகின்றனர். தற்பொழுது ஈராக்கிலுள்ள அமெரிக்க தடுப்புக் காவல் நிலையங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 135 வெளிநாட்டுப் போராளிகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவர்கள் செளதிக்கள் ஆவர்.

செய்தித்தாளிடம் ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி, வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் விட ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல்களை அதிக அளவில் செளதி அரேபியர்கள் நடத்தினர் என்று நம்பப்படுகிறது என்று கூறினார். செளதி ஜிஹாதிஸ்டுக்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஈராக்கிற்கு தற்கொலைத் தாக்குதல் நடத்த வருகின்றனர் என்றும் கடந்த ஆறு மாத காலத்தில் குறைந்தது 4,000 ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, உடலுறுப்புக்கள் சிதைக்கப்பட்டதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.

Los Angles Times விளக்குவதாவது: "இந்த நிலைமை அமெரிக்க இராணுவத்தை [புஷ் நிர்வாகம் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்] வெளிநாட்டுப் போராளிகள் அதிகமுள்ள ஒரு எதிரியுடன் போராடும் நிலையில் தள்ளியுள்ளது; அவர்களோ அமெரிக்காவின் முக்கிய நட்புநாட்டை சேர்ந்தவர்கள்; அந்நாடு தங்கள் குடிமக்களை ஈராக்கிற்கு எதிராக குருதித் தாக்குதலில் ஈடுபடுவதை தடுக்க முடியவில்லை; மோசமான வகையில் அமெரிக்கப் படைகள், ஈராக்கிய குடிமக்கள், பாக்தாத்திலுள்ள ஷியைட் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளை அனுப்புவதில் அரசாங்கமும் உடந்தையாக உள்ளது."

செளதியின் உள்துறை அமைச்சரகத்தில் செய்தித்தொடர்பாளர் தளபதி மன்சூர் துர்க்கி செளதிப் போராளிகள், ஆயுதங்கள் மற்றும் பணம் ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு செல்வதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செளதி அரேபியா செய்துவருவதாக வலியுறுத்தினார். தகவல் கொடுக்காததற்காக ஈராக்கிய அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அவர், "இவர்கள் யார் என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை... ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ள செளதிக்களை பற்றி ஈராக்கிய அரசாங்கம் தகவல்கள் கொடுத்தால், நாங்கள் உதவுவதற்கு அது உபயோகப்படும்" என்றார்.

ஆயினும், மூத்த அமெரிக்க அதிகாரி இதனை மறுத்து, "எல்லா வழிவகைகளையும் செளதிக்கள் கையாள்கின்றனரா? இல்லை... இப்பிரச்சினை பற்றி ஈராக்கிய அரசாங்கம் கூறவேண்டியது அவசியமாகிறது. செளதி அரேபியா போன்ற நாட்டிடம், 'உங்களுடைய இளைய ஜிஹாதிக்களை இங்கு அனுப்ப அனுமதித்து, அவர்கள் அல் கொய்தா என்னும் உலகம் முழுவதும் இருக்கும் சட்ட விரோத வலைப்பின்னலுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை நீங்கள் கொல்கிறீர்கள்' என்று கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது" என்று இதற்கு விடையிறுக்கும் வகையில் கூறினார்.

புஷ் நிர்வாகத்தை பொறுத்தவரையில், இப்பிரச்சினையில் வேண்டுமென்றே அது மெளனத்தை சாதிக்கிறது; அதே நேரத்தில் ஈராக்கில் "ஈரானிய தலையீடு" பற்றிய பிரச்சாரத்தையும் தொடர்கிறது. தெஹ்ரான் தொடர்பை மறுத்துக் கூறுபவற்றை அமெரிக்கா உதறுகையில், ஈராக்கிய எழுச்சியாளர்களுக்கு செளதி ஆதரவு தருவதை நிறுத்தியுள்ளது பற்றிய ரியாத்தின் கூற்று உட்குறிப்பாக நல்ல நாணயம் என ஏற்கப்படுகிறது. வெள்ளை மாளிகையும், வெளியுறவுத்துறையும் Los Angeles Times இன் கருத்து பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டன.

இந்த எண்ணிக்கை ஒன்றும் புதியவை அல்ல. ஜூன் 20 அன்று, MSNBC.com கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈராக்கில் வெளிநாட்டுப் போராளிகள் இறந்தது பற்றி பாராட்டி, இஸ்லாமிய வலைத்தளங்களில் வந்துள்ள கட்டுரைகள் பற்றிய பகுப்பு ஆய்வு ஒன்றை வெளியிட்டது. ஈராக்கில் மடிந்துவிட்ட 400க்கும் மேற்பட்ட போராளிகளில் 55 சதவிகிதத்தினர் செளதி அரேபியாவில் இருந்தும், 13 சதவிகிதத்தினர் சிரியாவில் இருந்தும், வட ஆபிரிக்காவில் இருந்து 9 சதவிகிதத்தினரும், ஐரோப்பாவில் இருந்து 3 சதவிகித்தினரும் வந்தனர். கிளர்ச்சியில் முன்னணி ஆதாரமாக செளதி அரேபியாவும் சிரியாவும் இருந்தன என்பதை MSNBC.com இடம் அமெரிக்க இராணுவம் உறுதி செய்தது.

ஈராக்கிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Muwafaq al-Rubaie கடந்த வாரம் செய்தி ஊடகத்திடம் ஈராக்கிய நீதிமன்றங்களில் 160க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்குள்ளாகியுள்ளனர் என்றும் நூற்றுக்காணக்கானவர்கள் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கூறினார். அல்-ரூபே கடந்த வாரம் செளதி அரேபியாவிற்கு இப்பிரச்சினை பற்றி விவாதிக்கச் சென்றிருந்த உயர்மட்டக் குழுவின் தலைவர் ஆவார். ஈராக்கில் உள்ள சுன்னிக்களுக்கும் ஷியைட்டுக்களுக்கும் இடையில் குறுகிய வெறிகொண்ட வன்முறையை தூண்டிவிடும் மத ஆணைகள் அல்லது பட்வாக்களை (மத தண்டனைகளை) கண்டிப்பதற்கு இருதரப்பினரும் உடன்பட்டனர் என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்க கொள்கை

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிலையாக இருந்திருந்தால், வெள்ளை மாளிகையும் பென்டகனும் ரியாதை கண்டித்து செளதிப் போராளிகளை உள்வருவதைத் தடுத்து நிறுத்துமோறு கோரியிருக்கும். அமெரிக்க செய்தி ஊடகங்களில் சர்வாதிகார செளதி ஆட்சியைப் பற்றியும், மகளிரை அது அடக்கிவைத்துள்ளது பற்றியும், ஷரிய சட்டத்தின் காட்டிமிராண்டித்தன செயல்பாட்டையும் அம்பலப்படுத்தி கதைகள் வெளிவந்திருக்கும். கடந்த ஆண்டு செளதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் ஒரு சிவிலிய அணுசக்தி திட்டம் தொடக்குவது பற்றிய அறிவிப்பு கொடுத்ததை பற்றி வெளியுறவுத்துறை பெரும் அச்சங்களை வெளிப்படுத்தியிருக்கும். அமெரிக்க இராணுவவாதிகளில் மிகத் தீவிரமானவர்கள் ஆட்சி மாற்றத்தை கோரி புஷ், ரியத் மீது தாக்குதல் நடாத்துவது உட்பட "அனைத்து விருப்பத் தேர்வுகளும் மேசையில் இருக்கின்றது" என அறிவித்திருப்பார்.

இவற்றில் ஏதும் நடக்கவில்லை என்பதும், நடக்கவும் போவதில்லை என்பதும் தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்கக் குற்றச்சாட்டுகள் ஈரானுக்கு எதிராக ஒருவேளை இராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை நியாயப்படுத்துவதற்கு கூறப்படும் போலிக் காரணங்கள் என்பதைத்தான் மீண்டும் நிரூபணம் செய்கின்றன. ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அமெரிக்கத் துருப்புக்களின் உயிர்கள் பற்றிய கவலையால் செயற்தூண்டல் அளிக்கப்படவில்லை மாறாக மத்திய கிழக்கிலும் அங்குள்ள மாபெரும் ஆற்றல் இருப்புக்கள் மீதும் அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவுதற்கான புஷ் நிர்வாகத்தின் விழைவுகளால் ஆகும். ரியாத்துடன் வெளிப்படையாக இடித்துரைப்பதற்கு பதிலாக வெள்ளை மாளிகை சமீப மாதங்களில் எகிப்து, ஜோர்டான் உட்பட, செளதி அரேபியா மற்றும் பிற "நிதானமான" அரேபிய நாடுகளுடன், ஈரானிய எதிர்ப்பு கூட்டணி ஒன்றில் அணிவகுப்பதற்குத்தான் முயற்சித்து வருகிறது.

ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பு இப்பகுதியை ஆழமாய் சீர்குலைத்துவிட்டது; போட்டிகள் மற்றும் குறுகிய பற்றுடைய பதட்டங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பை தயக்கத்துடன் ஆதரித்திருந்த செளதி அரேபியா, தன்னுடைய மரபார்ந்த வளைகுடா எதிரியான ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைனின் ஆட்சியை ஒரு தடுப்பு அரணாக கருதியிருந்தது. ரியாத், பாக்தாத்தில் இருக்கும் ஷியைட் ஆதிக்கம் நிறைந்த அரசாங்கத்திடம் ஆழ்ந்த விரோதப் போக்கை கொண்டுள்ளது, அதனை அது ஈரானுக்கு ஒரு பதிலாளாகத்தான் கருதுகிறது. செளதி அரசர் அப்துல்லாவும் மற்ற உயரதிகாரிகளும் தங்கள் விரோதப் போக்கைக் காட்டும் வகையில் பல முறையும் பிரதம மந்திரி நூரி அல்-மாலிகியை குறிப்பிட்ட வகையில் அவமானப் படுத்தியுள்ளனர்.

ஈரானுடனான செளதியின் பகைமை, செளதி அரேபியாவில் உள்ள வஹாபிய மத அமைப்பு ஷியைட் பிரிவிற்கு எதிராக ஆழ்ந்த விரோதப்போக்கு கொண்டிருப்பதிலும் ஈராக்கிலுள்ள சுன்னி பழங்குடி மக்களுடன் மரபார்ந்த வகையில் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளுடனும் ஊடறுத்துச் செல்கிறது. கடந்த நவம்பர் மாதம், அமெரிக்க இடைத்தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அரசர் அப்துல்லா துணை ஜனாதிபதி டிக் செனியிடம் அமெரிக்க படைகள் வெளியேறினால், மாலிகி அரசாங்கத்திற்கு எதிராக சுன்னி கிளர்ச்சிக் குழுக்களின் பக்கம் சார்ந்து ஈராக்கில் தலையிடுவதற்கு தன்னுடைய ஆட்சி நிர்பந்திக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

நவம்பர் 29ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த ஒரு முக்கியமான கட்டுரையின்படி, செளதி நாட்டு பாதுகாப்பு ஆலோசகரான நவப் ஒபைட் செளதி தலையீடு பற்றி எச்சரித்தது பற்றிக் கூறியதில், குறிப்பிட்டதாவது: "கடந்த ஓராண்டு காலமாக ஈராக்கில் இருக்கும் சுன்னி சமூகத்தை காப்பாற்றுவதற்கும், அங்கு ஈரானிய செல்வாக்கை தகர்ப்பதற்கும் பலர் செளதி அரேபியாவிற்கு குரல் கொடுத்துள்ளனர். மூத்த ஈராக்கிய பழங்குடி மற்றும் மத தலைவர்கள், எகிப்து, ஜோர்டான் இன்னும் பல அரேபிய, முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து செளதித் தலைமைக்கு ஈராக்கிய சுன்னிகளுக்கு ஆயுதங்கள் நிதியுதவி தருவதற்காக மனுக்கொடுத்துள்ளனர். மேலும், தலையிடவேண்டும் என்பதற்கு உள்நாட்டிலும் கடுமையான அழுத்தம் உள்ளது. ஈராக்கில் இருக்கும் தங்கள் உணர்வுடன் வரலாற்று, சமூகத் தொடர்புகளை மிக நெருக்கமாக கொண்டுள்ள செளதி பழங்குடி கூட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றன. இப்பகுதியில் தங்கள் அரசாங்கம் இன்னும் கூடுதலான வகையில் தசை வலிமையைக் காட்ட வேண்டும் என்று கருதும், அரசாங்கத்தின் முக்கிய நிலைகளில் உள்ள செளதி அரச குடும்பத்தின் புதிய தலைமுறையால் அவர்கள் ஆதரிக்கப்படுகின்றனர்."

செளதி முடியாட்சி பகிரங்கமாக ஒபைட்டை புறக்கணித்தாலும், அவருடைய கருத்துக்கள் ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவின் உணர்வுகளைத் தான் பிரதிபலிக்கின்றன. ஆட்சியானது ஏற்கனவே ஈராக்கில் இருக்கும் ஷியைட்டுக்களுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்த வேண்டும் என்று கூறும் செளதி மத வெறியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 38 செளதி மத அறிஞர்கள் ஈராக்கிய சுன்னி சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆணை ஒன்றை வெளியிட்டனர்; "புனிதப் போர் நடத்துபவர்களும்" [US], ஈரானின் "சபாவிக்களும்" (Safavis) ஒன்றாகச் சேர்ந்து ஈராக்கை அழிப்பதற்கு சதி செய்கின்றனர் என்றும் இப்பகுதி முழுவதிலும் சுன்னி செல்வாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றும் அவர்கள் கூறினர். செளதி ஆட்சிக்கு அல் கொய்தாவின் எதிர்ப்பு இருந்தபோதிலும், சாதாரண ஈராக்கிய ஷியைட்டுக்கள் மீதான அதன் கொலைகார தாக்குதலுக்கு செளதி ஆளும் வட்டங்களில் ஐயத்திற்கு இடமின்றி கணிசமான அனுதாபம் உள்ளது.

ஈராக்கில் இருக்கும் சுன்னி எழுச்சியாளர்களை பகிரங்கமாக ஆதரிப்பதன் மூலம் செளதி முடியாட்சி புஷ் நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள முடியாது. மேலும் இன்னும் கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்கும் கூறுபாடுகள் ஈராக்கில் இருந்து திரும்பி வரும் செளதி போராளிகள் முடியாட்சிக்கு எதிரான உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை வலுப்படுத்தக்கூடும் என்றும், அதையொட்டி நாட்டின் உறுதி குலையக்கூடும் என்றும் ஐயத்திற்கு இடமின்றி பயப்படுகின்றன. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக CIA, செளதி, மற்றும் பாகிஸ்தானிய உளவுத்துறைகள் கூட்டாக ஆதரித்த 1980களின் "புனிதப் போரின்" உருவாக்கம்தான் அல் கொய்தா மற்றும் ஓசாமா பின் லேடன் ஆகும்.

அதே நேரத்தில் செளதி, தான் ஈராக்குடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறுவது சிறிதும் நம்பத்தகுந்தது அல்ல. இதன் மிகப் பெரிய உளவுத்துறை எந்திரம் ஈராக்கில் தீவிரமாய் செயலாற்றுகிறது என்பது நிச்சயமாகும், ஷியைட் மற்றும் ஈரானிய செல்வாக்கிற்கு எதிரான ஒரு மறைமுகப் போரை நடத்துவதற்கு செளதி ஜிஹாதிகளுக்கு அது ஆதரவு கொடுக்கலாம். Los Angeles Times ல் கொடுத்துள்ள கருத்துக்களில், மாலிகியின் ஆலோசகர்களில் ஒருவரான ஈராக்கிய ஷியைட் சட்டமன்ற உறுப்பினரான சமி அஸ்காரி, பாக்தாத்தில் குழப்பத்தை வேண்டுமென்றே விளைவிப்பதில் செளதி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் நாட்டின் தெற்கு ஷியைட் பகுதியில் அமைதியின்மையை தூண்டிவிடுவதற்கு நிதியம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈராக்கில் குறுங்குழுவாத போர் இவ்வட்டாரத்தில் பரந்த முறையில் மோதல்களை ஏற்படுத்தும் என்ற அபாயம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பொறுப்பற்ற, ஒத்திசைவற்ற தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. சதாம் ஹுசைனை அகற்றி ஈரானுடன் வலுவான தொடர்புகள் இருக்கும் ஷியைட் கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவிய பின்னர், ஈரானுடனான மோதலில் புஷ் நிர்வாகம் செளதி அரேபியா போன்ற சர்வாதிகார "சுன்னி" ஆட்சிகளிடம் இருந்து ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை தீர்க்க முடியாத நிலையில், புஷ் நிர்வாகம் ஈராக்கில் செளதி நடவடிக்கைகள் பற்றி கல்லுளி மங்கன் போல் உள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க இராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் தளபதி கெவின் பெர்ஜ்நர் தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்களால் ஏற்படும் அழிவின் தன்மை பெருகுவதை பற்றி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, பெரும்பாலான தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் வெளிநாட்டினர் என்றும் இதற்குக் காரணம் தங்களுடைய நாட்டு மக்களையே பொறுப்பற்ற முறையில் படுகொலை செய்வதற்கு ஈராக்கியர்களை தேர்ந்தெடுப்பது சுன்னி தீவிரக் குழுக்களுக்கு இயலவில்லை என்றும் அவர் கூறிப்பிட்டார். ஜனாதிபதி புஷ்ஷை போலவே, பெர்ஜ்நரும் பலமுறையும் அல் கொய்தாவின் பங்கை சுட்டிக் காட்டி, தொடர்ந்திருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி பேசினார். தன்னுடைய வாதத்தை சித்தரித்துக்காட்டும் வகையில், அவர் ஒரு மசூதியில் ஆட்தேர்வு செய்யப்பட்டிருந்த, ஒரு மத்தியதர குடும்பத்தை சேர்ந்த தற்கொலை குண்டுவெடிப்பாளர், சிரியா வழியாக ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட விவரத்தை கூறினார். அவர் எந்த நாட்டில் இருந்து வந்தவர் என்று பெர்ஜ்நர் கூறவில்லை; அதற்கான தெளிவாக்கல் தனக்கு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். Los Angeles Times ல் வந்துள்ள இராணுவ ஆதாரத்தின்படி, அம்மனிதர் ஈராக்கினுள் நுழையும் பல தற்கொலை குண்டுவெடிப்பாளர்களை போல் அவரும் ஒரு செளதிக் குடிமகன் ஆவார்.