World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

An insight into the White House debate over military action against Iran

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை பற்றி வெள்ளை மாளிகை விவாதம் பற்றி ஓர் உட்பார்வை

By Peter Symonds
18 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டனை தளமாக கொண்டுள்ள கார்டியன் ஈரானுக்கு எதிரான ஆக்கிரோஷமான இராணுவ நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக புஷ் நிர்வாகத்திற்குள் சீறியெழுந்து கொண்டிருக்கும் கொடூரமான விவாதம் பற்றி ஒரு புதிய பார்வையை வழங்கியுள்ளது. திங்களன்று "வாஷிங்டன் உயர்மட்ட ஆதாரங்களை" அடிப்படையாக கொண்ட கட்டுரை ஒன்றில், சமச்சீர்நிலை "இப்பொழுது 18 மாதங்களில் ஜோர்ஜ் புஷ் பதவியில் இருந்து இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாகியுள்ளது" என செய்தித்தாள் முடிவுக்கு வந்துள்ளது.

துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் அவருடைய வலதுசாரி ஆதரவாளர்கள் ஈரான் மீது ஒரு இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதும் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நடத்தும் தூதரக முறைகளை எதிர்க்கின்றனர் என்பதும் இரகசியம் அல்ல. அமெரிக்க விமானத் தளத்தை கொண்ட கடற்படைக் கப்பலில் மே மாதம் பேசிய செனி பாரசீக வளைகுடாவில் இருக்கும் பெரும் அமெரிக்க கடற்படை இருப்பு அமெரிக்கா "கடல் பாதைகள் திறந்திருப்பதற்கு உதவும்" மற்றும் "மற்றவர்களோடு இணைந்து இப்பகுதியில் ஈரான் அணுவாயுதங்கள் பெற்று ஆதிக்க நிலைக்கு வருவதை தடுக்கும் வகையிலும்" ஒரு தெளிவான தகவலை கொடுக்கும் நோக்கத்தை கொண்டது என்று எச்சரித்திருந்தார்.

கார்டியன் கட்டுரையின்படி, ஓர் உள் பரிசீலனைக்கு பின்னர் வெள்ளை மாளிகை மீண்டும் ஈரான் பற்றிய கொள்கையை கடந்த மாதம் உயர்மட்டத்தில் மூத்த பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் விவாதித்தது. முன்பு புஷ், ரைசின் கொள்கையான ஐரோப்பிய ஆதரவை சேர்த்துக் கொண்டு "ஈரான் மீது தூதரக நெருக்கடி கொடுப்பதற்கு" ஆதரவு தந்திருந்தார். ஆனால் கூட்டத்தில், அரசு துணைசெயலரான நிக்கோலா பேர்ன்ஸ் தூதரக முயற்சிகள் ஜனவரி 2009க்கு அப்பாலும் தொடரக்கூடும், அதாவது புஷ்ஷின் பதவிகாலத்திற்கு பின்னரும், என்று குறிப்பிட்டார். செனி இதற்கு ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், புஷ்ஷும் அவர் பக்கம நின்றார்.

"ஈரான் பற்றி முடிவெடுக்காமல் புஷ் பதவியில் இருந்து விலகப்போவதில்லை" என்று ஒரு வாஷிங்டன் ஆதாரம் கார்டியனிடம் கூறியது. "சமசீர்நிலை மாறியுள்ளது. கவலைக்கு காரணம் உள்ளது". அடுத்து வெள்ளை மாளிகைக்கு வரக்கூடியவர், குடியரசு அல்லது ஜனநாயக என்று எக்கட்சியானாலும் சரி, ஈரானுடன் தீர்மானகரமாக நடப்பதற்கு நம்பகத்திறன் உடையவர்கள் அல்லர் என்று புஷ்ஷும், செனியும் கருத்துடையவர்கள் என்று விளக்கியது.

புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி நிறைந்த கன்னை சக்திகளில் சரியான சமசீர் நிலைமையை ஒற்றை ஆதாரத்தை வைத்து, அது எவ்வளவு உயர்மட்டமாயினும், உறுதி செய்வதும் கடினம்தான். ஜூன் 15ம் தேதி நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று வேறுவிதமான கதையை, இதே வெள்ளை மாளிகை கூட்டத்தின் உயர்மட்ட ஆதாரத்தை கொண்டு கூறியுள்ளது. மேலும் அக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு இறுதிக்கு பின்னரும் தூதரக முயற்சிகள் தொடரும் என்பது பற்றி "அறையில் இருந்த பருந்துகள், பின்னர் தாங்கள் வியப்படையவில்லை, ஆனால் பெரும் மகிழ்ச்சி அற்றவர்களாக" இருந்தோம் எனக் கூறினர்.

தன்னுடைய ஆதாரங்களில் இருந்து ரைசும் அவருடைய உதவியாளர்களும் "[விவாதத்தில்] இதுவரை வென்று கொண்டு வருவது போல் தோன்றுவதாக" நியூ யோர்க் டைம்ஸ் முடிவுரையாக கூறியுள்ளது. ஆனால், "நிர்வாகத்திற்குள் இருக்கும் பழமைவாதிகள் இன்னும் கடுமையான நிலைப்பாடு வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர், அரசாங்கத்திற்கு வெளியே இருக்கும் தங்களுடைய நண்பர்கள் பகிரங்கமாக இதைக் கோருகின்றனர் என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளனர்" என்று கட்டுரை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஐ.நா. தூதரான ஜோன் போல்டன், அவர்கள் விரும்பினால் "ஆட்சி மாற்றம் அல்லது வலிமையை பயன்படுத்துதல் என்பவைதான் அணுசக்தி வசதிகளை பெறுவதில் இருந்து ஈரானை தடுக்கக்கூடிய விருப்புரிமைகளாகும்" என்று கூறிய கருத்துக்களை இது குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது.

செனியின் உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவர், முக்கியமான புதிய கன்சர்வேட்டிவ் டேவிட் வுர்ம்சர் சமீபத்தில் வாஷிங்டனிலுள்ள கன்சர்வேடிவ் ஆய்வுக்குழுக்களிடமும் ஆலோசனை நிறுவனங்களிடமும் துணை ஜனாதிபதி ரைசின் தூதரக மூலோபாயம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்றும், "அடுத்த வசந்தகாலத்திற்குள்" புஷ் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை பற்றி முடிவெடுக்கக்கூடும் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

செனி பக்கம் புஷ் மாறிக் கொண்டிருக்கிறாரா அல்லது ரைஸ் "இதுவரை வெற்றி பெற்றுள்ளாரா" என்பது தெளிவாக இல்லை. வெள்ளை மாளிகையில் மிகுந்த இராணுவவாதம் கொண்டுள்ள பிரிவு ஈரானுக்கு எதிரான தவிர்க்க முடியாத இராணுவ நடவடிக்கையை தொடக்குவதற்கு உறுதியான வகையில் உள்ளேயும் பொது அரங்கிலும் போராடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது; அதுவும் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் எதிர்கொண்டுள்ள பேரழிவு மற்றும் அமெரிக்க மக்களுடைய மகத்தான போர் எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றையும் மீறிய வகையில் இது உள்ளது. செனி குழுவின் திரிக்கப்பட்ட தர்க்கத்தின்படி, மத்திய கிழக்கில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள இடர்பாடுகள் தெஹ்ரானில் இருந்து தொடங்குகின்றன; அந்நாட்டு ஆட்சியை முடக்குவது அல்லது ஈரானிய ஆட்சியை இராணுவத் தாக்குதல்கள் மூலம் அகற்றுவது என்பதன் மூலம்தான் இதற்குத் தீர்வு காணமுடியும் என்பதாகும்.

ஈரான் பற்றிய வெள்ளை மாளிகை விவாதத்தின் பரப்பு மிகக் குறுகிய முறையில் உள்ளது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். ரைஸை ஒரு "புறா" எனக் கருதுவது அபத்தமானதாகும். ஜூலை 6ம் தேதி CNBC க்குக் கொடுத்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அவர் ஈரானை மிக ஆபத்தான நாடு என்றும், "அதிகரித்த அளவில் ஆபத்தானது" என்றும் முத்திரையிட்டுள்ளார். தூதரக வழிவகைக்கு வாஷிங்டன் கட்டுண்டாலும், "அமெரிக்கக் கொள்கையில் சில வலியுறுத்தும் கூறுபாடுகளும் உண்டு" என்று ரைஸ் அறிவித்தார். "தன்னுடைய மேசையில் இருந்து விருப்புரிமைகளை புஷ் அகற்றப் போவதில்லை" என்று அவர் வலியுறுத்தினார்; வேறுவார்தைகளில் சொல்வதானால் இராணுவ நடவடிக்கை என்ற அச்சுறுத்தல் செயல்படுத்தப்படலாம்.

ரைஸின் கருத்துக்கள் வாஷிங்டன் விருப்பப்படிதான் எத்தகைய தீர்வும் இருக்கும் என்ற, அவ்வம்மையாரின் "தூதரக நெறி" எனப்படுவதின் போர் நாட்டத்தைத்தான் உறுதிப்படுத்துகின்றன. இராணுவ அச்சறுத்தலை அடிக்கோடிடும் வகையில் புஷ் இரண்டாம் விமானத் தளமுடைய போர்க்கப்பலை பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பிய பின்னர்தான் ரைஸ் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்காக அதன்மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்ற தூதரகவகை தாக்குதலை தொடங்கினார். தெஹ்ரான் சர்ச்சைக்குரிய நிலையங்களை முன்கூட்டியே மூடினால் ஒழிய ஈரான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்த அவர் மறுத்துவிட்டார். நேருக்கு நேர் நடந்த பேச்சுக்கள் பாக்தாத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஈரானிடம் அது ஈராக்கில் செய்யப்படுவதாகக் கூறும் "தலையீடுகளை" நிறுத்த வேண்டும் என்று கூறியதில் மட்டும் இருந்தது. ஐ.நா.வில் ரைஸின் தூதரக முறை ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் சீனாவை மிரட்டி தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவை திரட்டுவதாக உள்ளது; இதற்கு மாற்றீடு ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை என்னும் அச்சுறுத்தல் உள்ளது என்பது உட்குறிப்பாக இருக்கிறது.

"ஜனநாயக சார்பு உடைய" நடவடிகைகளுக்கு ரைஸ் பகிரங்கமாக கூடுதலான நிதியங்கள் தேவை என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளார்; இதில் ஈரானிய ஆட்சிக்கு இருக்கும் உள் அரசியல் விரோதிகளுக்கு கொடுக்கும் ஆதரவும் அடங்கும். பல செய்தித்தாள் தகவல்கள் கடந்த 18 மாதங்களில் CIA மற்றும் அமெரிக்க அமைப்புக்கள் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆட்சிக்கு எதிர்ப்பை தூண்டுகின்றன என்றும் இதில் ஆயுதமேந்திய தாக்குதல்கள், ஈரானிய ஆட்சியை சீர்குலைத்தல் ஆகியவை உட்படும் என்றும் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், வெளியுறவுத்துறை செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் நிதானமானவை எனக் கூறப்படுபவற்றை, ஈரானிய எதிர்ப்புக் கூட்டிற்காக ஒருங்கிணைக்க முற்பட்டுள்ளது. இது அப்பகுதியில் ஈரானிய செல்வாக்கை கீழறுக்க பயன்படுத்தப்படும். ஐ.நா. பொருளாதார தடைகளுக்கும் அப்பால் சென்று, ஈரானுடன் உறவுகளை துண்டிப்பதற்கு சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் நெரிக்கப்படுவதற்கான அமெரிக்க கருவூலத்தின் முன்முயற்சிகளுக்கும் ரைஸ் ஆதரவு கொடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இப்பொழுது அவர் தாக்குதலுக்கு வாதிடாவிட்டாலும், செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால் அச்சுறுத்தல்கள் மட்டுமே பயனற்றவை என்பதை ரைஸ் நன்கு உணர்ந்துள்ளவர். மேலும் அவருடைய ஆக்கிரோஷமான "தூதரக" நடவடிக்கைகள் எவையுமே எதிர்பாராத நிகழ்வு விளைவுகளை ஏற்படுத்தி இராணுவ மோதலுக்கு வழிவகுக்கக்கூடும். சற்றே நிதானமான ரைசின் அணுகுமுறை புஷ் நிர்வாகத்தின் பொறுப்பற்ற இராணுவவாதம் பற்றிய விமர்சனத்தின் தீவிரத்தை மழுங்கடிக்கும் இலக்கைக் கொண்டதாகும். அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை நடைமுறையின் சில பகுதிகள், ஈரான் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில் 2003 ஈராக்கிய படையெடுப்பால் ஏற்பட்ட அமெரிக்க நலன்கள் மீதான அழிவுகரமான பாதிப்பை அதிகப்படுத்தும் என்று கருதுகின்றன.

இஸ்ரேலிய கோரிக்கைகள்

கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் இரண்டுமே ஈரானுடைய அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை வேண்டும் என்று இஸ்ரேல் கோரியுள்ளமை புஷ் நிர்வாகத்தின் கருத்துக்களில் முக்கிய கூறுபாடாக உள்ளது என்று உயர்த்திக் காட்டியுள்ளன. International Institute for Strategic Studies ல் இயக்குனராக இருக்கும் பாட்ரிக் கிரோனின் கார்டியனிடம் கூறியதாவது: "சிவப்புக் கோடு ஈரானில் இல்லை. சிவப்புக் கோடு இஸ்ரேலில் உள்ளது. தாக்குவேன் என்று இஸ்ரேல் பிடிவாதமாக இருந்தால், அமெரிக்கா ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டி வரும். இஸ்ரேலிடம் கூடாது எனச் சொல்லுதல், இஸ்ரேலை காரியத்தைச் செய்யவிடல், அல்லது நீயே காரியத்தை முடித்தல் என்பவைதான் விருப்பத் தேர்வுக்கு உரியவைகளாக உள்ளன."

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஈரானிய அணுசக்தி நிலையங்கள்மீது இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்களை கோடிட்டு சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொடுத்துள்ள ஆத்திரமூட்டும் தன்மையுடைய அறிக்கைகளை அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகள் பயன்படுத்தி தங்களுடைய இராணுவ அச்சுறுத்தல்களை தீவிரமாக்கியுள்ளனர். நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையின்படி, இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியான Shaul Mofaz, வாஷிங்டனில் கடந்த மாதம் ரைஸிடம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், ஈரான் யூரேனிய அடர்த்தித் திட்டத்தை இவ்வாண்டிற்குள் நிறுத்திவிடும் வகையில் கடுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இல்லாவிடில், "நாம் எங்குள்ளோம் என்பது பற்றி இஸ்ரேல் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவின் இசைவு இல்லாமல் ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது; இறுதிப் பகுப்பாய்வில் எந்த அமெரிக்க இராணுவ முடிவிலும் இதுதான் நிர்ணயிக்கும் கூறுபாடாக இருக்கும். ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் வாஷிங்டன் செயல்படவேண்டும் என்று அழுத்தத்தை சீராக கொடுத்து வருகின்றனர். முன்னாள் இராணுவ உளவுத்துறை ஆராய்ச்சி பிரிவின் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் யோடி குபெர்வாசர் கடந்த வாரம் Jerusalem Post இடம், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக திறமையான இராணுவத் தாக்குதல் தொடங்குவதற்கான நேரம் விரைவில் கடக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ஈரான் அணுவாயுதங்களை கட்டமைப்பதில் தீவிரமாக இருக்கிறது என்பதை எந்த ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு குபெர்வாசர் பொறுமையின்றி எச்சரித்தார்: "நாட்கள் செல்லச் செல்ல ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் திட்டத்தின் அபாயத்தைக் குறைக்கும் தன்மை குறைந்துவிடுகிறது; அவர்கள் தொழில்துறை அளவில் யூரேனியத்தை செறிவூட்டக் கூடிய கட்டத்திற்கு வெகு அருகில் உள்ளனர்."

போருக்கு போலிக் காரணத்தை கொடுக்கக்கூடிய ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை அடுக்கடுக்காக முன்வைக்கும் தன் வழிவகையை புஷ் நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது: ஈரான் அணுவாயுதங்களை கட்டமைக்க முற்பட்டுள்ளது, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுத்துவருகிறது, லெபனான், பாலஸ்தீனிய பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் "பயங்கரவாததிற்கு" துணை நிற்கிறது. ஆனால் ஈரானுக்கு எதிரான போருக்கான முக்கிய உந்துதல் சக்தி மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய வளம் கொழிக்கும் பகுதிகளில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்னும் அமெரிக்காவின் விழைவுதான். ஒப்புமையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பெருகிய முறையில் தன்னுடைய இலக்குகளை அடைவதற்கு இராணுவ வழிவகையை கையாள முற்படுகிறது. ஈரானுடன் எவ்வித அமெரிக்க தூதரக உடன்பாடும் கூடாது என்பதற்கான முக்கிய வாதம் அது ஏற்கனவே தெஹ்ரானுடன் வலுவான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களை கொண்டுள்ள அதன் ஐரோப்பிய மற்றும் ஆசியப் போட்டியாளர்களை இன்னும் சாதகமான நிலையில் இருத்தி விடும் என்பதாகும்.

இந்தக் கால கட்டத்தில், வெள்ளை மாளிகை விவாதத்தின் விளைவை கணிப்பது முடியாததாகும். ஆனால் புஷ்ஷின் உள்ளார்ந்த எதிர்கொள்ளும் தன்மை அவருடைய நிர்வாகத்தின் மிக இரக்கமற்ற, இராணுவாத தட்டுக்களுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்க உயர் மட்ட ஆதாரங்களுடன் தொடர்பு கொண்டவர் என அறியப்பட்டுள்ள, மூத்த ஆய்வுச் செய்தியாளரான சேமூர் ஹெர்ஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல முறையும் புஷ் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான தயாரிப்புக்கள் பற்றி எழுதியுள்ளார்; ஜூன் 26 Campus Progress National Conference ல் ஜனாதிபதியின் சிதைந்த மனப்போக்கு நிறைந்த கருத்துக்களில் இருந்த உட்பார்வை பற்றியும் பயந்த வகையில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெர்ஷின் ஆதாரங்களின்படி, புஷ் அடிக்கடி தன்னை வின்ஸ்டன் சேர்ச்சிலுடன் ஒப்புமை கொள்ளுகிறார்; கடுமையான போர்க்கால நடவடிக்கைகள் எடுப்பதாகவும், மக்கள் கருத்து பற்றியோ உண்மையான ஈரானிய அச்சுறுத்தல் பற்றியோ பொருட்படுத்துவதில்லை. "தன்னை ஒரு பிரத்தியே நபராக புஷ் காண்கிறார் -- அதாவது, கருத்துக் கணிப்பில் எனக்கு 30 சதவிகித ஆதரவுதான் இருக்கக்கூடும், ஆனால் 20 அல்லது 30 ஆண்டுகளில் அவர்கள் நான் செய்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பர்." ஹெர்ஷ் விளக்கினார்: "எப்படியும், நீங்கள் என்ன கேள்விப்பட்டிருந்தாலும் ஈரான் ஒன்றும் அணுகுண்டுத் தயாரிப்பின் அருகில் இல்லை. அந்நிலையில் இருந்து பல ஆண்டுகள் தள்ளி உள்ளனது; ஒரு சமாதான உறுதிமொழி கொடுத்தால் நாளையே இத்திட்டத்தையும் நிறுத்திவிடுவர்... உளவுத்துறைப் பிரிவு "அங்கு குண்டு இல்லை" என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். செனியோ இளவயது அதிகாரிகளிடம், "மகனே, நன்றி. நான் அதை நம்பத் தயாராக இல்லை" என்று மிகவும் நயமாகக் கூறுகிறார்.

ஈரானுடனான பதட்டங்களை அமெரிக்கா முடிவிற்குக் கொண்டுவர என்ன வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு, ஹெர்ஷ் அப்பட்டமாக புஷ்ஷைக் குறிப்பிட்டு விடையிறுத்தார்: "சரி, இந்நபரை அகற்றுவதற்கு நீங்கள் இராணுவ ஆட்சி மாற்றத்தைக் கொள்ள வேண்டும். அவர் ஈரானியர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தப்போவதில்லை. எப்படியிருந்தாலும், அவர் அதைச் செய்யப்போவதில்லை; அது மிகவும் பயங்கரம், ஏனென்றால், ஈரானியர்களோ பேச்சுவார்த்தைகளுக்கு ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர்." இராணுவ ஆட்சி மாற்றம் என்பது, தெஹ்ரானுடன் எவ்வித பொருளுடைய பேச்சையும் நடத்த புஷ் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை அடிக்கோடிடுவதற்காக கூறப்பட்டுள்ள கருத்து ஆகும். ஆனால் அமெரிக்க அரசியல் நடைமுறையில் விரோதப் போக்கு எந்த அளவிற்குக் கடுமையாக இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஹெர்ஷிடம் பேசும் உயர்மட்ட புஷ்ஷை விமர்சிப்பவர்களின் பெருத் திகைப்பையும் இது சுட்டிக் காட்டுகிறது; அவர்கள் ஈரான்மீதான எத்தகைய இராணுவச் செயல்பாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு பேரழிவைத்தான் கொடுக்கும் என்று கருதுகின்றனர்.