World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

As Pakistanis risk life and limb to oppose Musharraf, US elite rallies round military regime

முஷாரஃப்பை எதிர்க்க பாக்கிஸ்தான் மக்கள் உயிரையும் உறுப்புக்களையும் பணயம் வைக்கையில், அமெரிக்க உயரடுக்கு இராணுவ ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது

By Keith Jones
7 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

பல்லாயிரக்கணக்கான பாக்கிஸ்தானிய மக்கள் கடந்த இரு நாட்களாக --கைது செய்யப்படல், தாக்குதல், ஏன் நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளினால் சுடப்படல் என்ற ஆபத்தையும் எதிர்கொண்டு-- அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியான தளபதி பர்வேஸ் முஷாரஃப் இராணுவச் சட்டத்தை சுமத்தியுள்ளதற்கு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

முஷாரஃப் சனி மாலை அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்த முதல் 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் பிரிவினர் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை "தடுப்புக் காவலின்கீழ்" கைது செய்து வைத்துள்ளதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. திங்களன்றும், மீண்டும் நேற்றும், பாதுகாப்புப் படைகள் பரந்த அளவில் எழுந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ளை முறித்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடியால் அடித்து பலரை சிறைக்கு இழுத்துக் கொண்டும் சென்றனர்.

நெருக்கடி நிலைமையின்கீழ், அரசியல் அமைப்பு மற்றும் தடையற்ற பேச்சுரிமை, இடம் பெயரும் உரிமை மற்றும் கூடும் உரிமை ஆகியவற்றுக்கான அதன் உத்தரவாதங்கள் காலவரையற்று நிறுத்திவைக்கப்படும். எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் மக்களைக் கைது செய்து காவலில் வைக்கும் புது அதிகாரங்கள் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன; செய்தி ஊடகம், குறிப்பாக ஒலி/ஒளி பரப்புபவை கடுமையான தணிக்கைக்கு உட்படும். சனிக்கிழமை மாலையில் இருந்து, அரசாங்கத் தொலைக்காட்சி இணையம்தான் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. முஷாரஃப்பின் இடைக்கால அரசியலமைப்பு ஒழுங்கு (Provisional Constitutional Order -PCO) நிர்வாகத்துறையின் அரசியல் அமைப்பு சிறப்பு அதிகாரமான அரசாங்க நடவடிக்கைகளின் சட்ட நெறிக்கு உட்பட்ட தன்மை பற்றி பரிசீலனை செய்யும் அதிகாரத்தை அகற்றியுள்ளது; நீதிமன்றங்கள் ஜனாதிபதி முஷாரஃப், பிரதம மந்திரி அஜிஸ் அல்லது அவர்களுடைய பெயரில் அதிகாரம் செலுத்துபவர்களைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறப்பட்டு விட்டது.

இராணுவ ஆட்சிக்கு இதுவரை உடந்தையாக இருந்தது என்ற இழிந்த பெயரைக் கொண்டிருந்த நீதித்துறையின் உயர் மட்ட அதிகாரிகள், பாக்கிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகள் உட்பட, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; PCO விற்கு அவர்கள் இசைவு தரவில்லை அல்லது தக்க முறையில் வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாதவர்கள், என்று கருதப்பட்டதால் இராணுவத்தின் புதிய பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை.

முஷாரஃப்பின் ஆட்சிக்கு --1999ல் ஆட்சிக்கவிழ்ப்பை ஒட்டி அதிகாரத்திற்கு வந்து தொடர்ந்த இராணுவ ஆட்சிக்கான போலி ஜனநாயக முகப்பைக் கட்டும் அதன் சொந்த முயற்சியை கைவிட்டுள்ள- ஒரு சட்டபூர்வ மூடிமறைப்பை கொடுக்கும் முயற்சியில், எஞ்சியிருக்கும் தலைமை நீதிமன்ற நீதிபதிகளும் சில புதிதாக முஷராப்பால் நியமிக்கப்பட்டவர்களும் செவ்வாயன்று கூடினர். கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் பிரிவுகளால் கலைக்கப்படுவதற்கு முன் நெருக்கடி நிலை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று அறிவித்த பாக்கிஸ்தானின் தலைமை நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுதான் இவர்களின் முதல் நடவடிக்கை ஆகும்.

பெருகிய முறையில் துணிவான மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டதை எதிர்கொள்ளும் வகையில், முஷாரஃப்பும் அவருடைய எடுபிடிகளும் பலமுறை கடந்த ஆறு மாதங்களில் அவசரநிலை ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த வண்ணம் இருந்தனர். இறுதியில் முஷாரஃப்பின் இரண்டாம் ஆட்சிக் கவிழப்பு என்று சிறப்புப்பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தக்க தூண்டுதல், முஷாரஃப்பின் இன்னும் ஐந்து ஆண்டு காலம் ஜனாதிபதி பதவிக்கான சமீபத்திய "தேர்வு" அரசியலமைப்பிற்கு முரணானது என்று தலைமை நீதிமன்றம் கூறிவிடுமோ என்ற அச்சம்தான். அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதிக்கான வாக்களிப்பு ஒரு இராணுவ ஆதரவில் நடத்தப்பட்ட போலி ஒத்திகை நிகழ்வு ஆகும்; அரசியலமைப்பின் எழுத்துக்கள், கருத்துக்கள் ஆகியவற்றை அது மோசமானவகையில் மீறிய தன்மையை கொண்டிருந்தது.

பாக்கிஸ்தான் முஷாரஃப் மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்புடன் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் அதேவேளை, புஷ் நிர்வாகமும் அமெரிக்க ஆளும் உயரடுக்கும் தாங்கள் இராணுவ ஆட்சிக்குத்தான் ஆதரவைக் கொடுப்பர் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அவ்வாட்சிக்கு மகத்தான உதவிகளை தொடர்ந்து உட்செலுத்துவதை வழங்கும் என்றும் மிகத் தெளிவுபடுத்தியுள்ளன.

திங்களன்று அவசரகால சட்டத்தை முஷாரஃப் அறிவித்ததற்கு பின்னர் முதல் தடைவையாக பகிரங்கமாகப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், தளபதியும் அவருடைய அரசாங்கமும் இராஜிநாமா செய்யக் கோருவது ஒருபுறம் இருக்க, இராணுவ ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கோரவில்லை. மாறாக, முஷாரஃப் "எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஜனநாயகத்தை மீட்டுவிடுவார்" என்று நம்புவதாகக் கூறினார்: அதைத்தான் கடந்த எட்டு ஆண்டுகள் இராணுவ ஆட்சியின்போது பாகிஸ்தானின் சர்வாதிகாரி செய்யப்போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

தளபதியின் செயற்பாடுகளை புகழ்ந்தபின் புஷ் அத்துடன் சம்பிரதாயமான முறையில் தளபதியின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றிக் குறைகூறும் வகையில், "ஜனாதிபதி முஷாரஃப் தீவிரவாதிகள், தீவிரப்போக்கினருக்கு எதிரான வலிமையான போராளியாக இருந்து வருகிறார்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி, இஸ்லாமாபாத்துக்கு வாஷிங்டன் கொடுத்துள்ள அழைப்பான நெருக்கடியை அகற்றிவிட்டு, முஷாரஃப் முன்னதாகக் கொடுத்துள்ள உறுதிமொழியான இராணுவத் தலைமையை புதிய ஜனாதிபதியாக பதவிக்காலம் தொடங்கு முன் கைவிடுதல், ஜனவரி மாதம் தேர்தல்கள் நடத்துவேன் எனக் கூறியது ஆகியவற்றை செய்யாவிட்டால் அமெரிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பாகக் கூறவில்லை. "நாம் செய்யக் கூடியதெல்லாம் ஜனாதிபதியுடனும் பாக்கிஸ்தான் அரசாங்கத்தில் இருக்கும் மற்றவர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்பதுதான்" என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் புஷ்ஷின் கருத்துக்களை எதிரொலித்துக் கூறினார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுக்கும் உதவிகள், பல திட்டங்களின் அடிப்படையில் --செப்டம்பர் 2001ல் இருந்து அமெரிக்க அரசாங்கம் இஸ்லாமாபாத்திற்கு $10 பில்லியன் கொடுத்ததாகவும், பெரும்பாலும் அது இராணுவ உதவி என்றும் ஒப்புக் கொண்டுள்ளது-- இது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றார்; ஏனெனில் அவற்றுள் சில அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வழங்கப்படக்கூடாது என்ற விதிகளுக்கு உட்பட்டவை ஆகும். இந்த சட்டநெறி கட்டாயம் ஒருபுறம் இருக்க, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தின்மீதான போரில் நமக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடாக தொடர்ந்து இருக்கிறது என்ற உண்மையைக் கருத்திற் கொள்ளவேண்டும்; இதையொட்டி நடந்துகொண்டிருக்கும் பாதுகாப்பு உறவுகளில் நமக்குத் தொடர்ந்த கவலைகள் உண்டு." என்றும் கேட்ஸ் வலியுறுத்தினார்.

ஒரு பெயரிடாத மூத்த அமெரிக்க அதிகாரி Assoicated Press இடம் கூறினார்: "ஒரு மிக நெருக்கமான நண்பர், ஒரு தவறைச் செய்கிறார் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நீங்கள் உடனே அவர்மீது தாக்குதல்களை நடத்தி, பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்து, அவரை விரட்டுவீர்களா? அல்லது மீண்டும் பழைய தடத்தில் அவர் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவீர்களா?"

ஜனநாயகக் கட்சியின் தலைமையும் இதே நிலைப்பாட்டைத்தான் அடிப்படையில் எடுத்துள்ளது.

பாக்கிஸ்தானுக்கு கொடுக்கப்படும் அமெரிக்க உதவியைப் பயன்படுத்திக் கொண்டு முஷாரஃப் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இன்னும் கூடுதலான வேகத்தில் தாலிபன் மற்றும் பிற இஸ்லாமிய குடிப்படைகளுக்கு எதிராக செயல்படச் செய்து, அதன்மூலம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை வலிமைப்படுத்தியிருக்கலாம் என்று கடந்த ஆண்டில், ஜனநாயகக் கட்சியினர் புஷ் நிர்வாகத்தை திரும்பத்திரும்ப விமர்சித்திருந்தனர்..

(உண்மையில் முஷாரஃப் ஆட்சி பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் பல பெரிய தாக்குதல்களை நடத்தியது; அதன் விளைவாக பாக்கிஸ்தானின் இராணுவம் நிறைய துருப்புக்களை இழந்தது; பல துருப்புக்கள் இராணுவத்தை விட்டு நீங்கியும் போனார்கள்.)

முஷாரஃப்பின் ஆட்சிக்கவிழப்பை தொடர்ந்து, பல ஜனநாயகக் கட்சி தலைவர்கள் இக்குறைகூறல்களை பல முறையும் கூறி, வருங்காலத்தில் பாக்கிஸ்தானுக்கு உதவி என்பது அமெரிக்க கூறவதற்கு ஏற்ப இஸ்லாமாபாத் நடந்து கொள்ளுவதுடன் பிணைக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக அந்நாட்டின் உறுதிப்பாடு குலைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போரில் பாகிஸ்தான் ஒரு முக்கிய நட்பு நாடு என்ற புஷ் நிர்வாகத்தின் வலியுறுத்தலை அனைத்துத் தரப்பினரும் எதிரொலித்துள்ளனர்; மேலும் அமெரிக்கா முஷாரப்புடன் நெருக்கமான நட்பைத் தொடர வேண்டும் என்றும், எல்லாவற்றிகும் மேலாக அவருடைய ஆட்சி நம்பியிருக்கும் பாக்கிஸ்தானிய இராணுவத்துடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஹில்லாரி கிளின்டன் கூறினார்: "இந்த ஜனாதிபதியின் தோல்வியுற்ற கொள்கைகளினால் மோசமாகிவிட்ட, மற்றொரு அச்சுறுத்தலை கொடுக்கும் சவாலையும் நாம் இப்பொழுது எதிர்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம்."

கனக்டிகட் இன் செனட்டரான Chris Dod, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மனுச்செய்கையில் இரண்டாம் அடுக்கில் இருப்பவர் கூறினார்: "இந்த நேரத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கொடுக்கும் உதவியை நிறுத்த வேண்டும் என்பதை நான் உறுதியாக எதிர்க்கிறேன். உண்மையில் வரவிருக்கும் நாட்களில்தான் இன்னும் கூடுதலான உதவிகள் கொடுக்கப்பட வேண்டும்."

அமெரிக்க உயரடுக்கின் முக்கிய செய்தி ஊடகக் குரல்களும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் முன்வைத்துள்ளன. "அமெரிக்காவிற்கு இங்கு முக்கிய அக்கறை ஒரு உறுதியான பாக்கிஸ்தான், ஜிகாத்வாதிகளை தோற்கடிக்க உதவும் வகையில், தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுதான்" என்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று அறிவித்தது. "திரு முஷரப்புடன் உறவுகளை துண்டிக்கும் வகையில் முன்கூட்டி செயல்பட்டால் அந்த நலன்களுக்கு உதவாது; அதே போல் 1990 களின் அமெரிக்க பாகிஸ்தான் இராணுவத்துடன் நடந்து கொண்டது போலும் இருக்கக் கூடாது."

அமெரிக்கத் தாராளவாத நடைமுறையில் முக்கிய குரலான, நியூ யோர்க் டைம்ஸ், செவ்வாயன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், புஷ் நிர்வாகத்தை அதன் பாக்கிஸ்தான் கொள்கையை "அடிமைத்தனமாக ஒற்றை சர்வாதிகார ஆட்சியாளர்" மீது "மையமாக" கொண்டிருப்பதற்காக குறை கூறியது. அமெரிக்கா "$10 பில்லினுக்கும் மேலாக பாக்கிஸ்தான் கருவூலத்தை நிரப்பியும் கூட அதிக செல்வாக்கை அடையவில்லை" என்று இது குறைகூறியுள்ளது.

ஆனால் வெள்ளை மாளிகையில் இருந்து அதிகம் வேறுபட்டிருக்காத ஒரு கொள்கைக்குத்தான் இதுவும் விரைவில் வந்தது: "அமெரிக்கா பெருகிய முறையில் பல மோசமான விருப்புரிமைகளைத்தான் கொண்டுள்ளது. உதவியை நிறுத்துவது என்பது பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடுவதின் வேகத்தைக் குறைத்து, அமெரிக்கா ஒரு நம்பகத்தன்மை உடையது என்ற கருத்திலும் ஐயங்களை எழுப்பிவிடும்."

இராணுவமும் பெனாசீர் பூட்டோ, அவருடைய Pakistan People's Party (PPP) க்கும் இடையே அதிகாரப் பகிர்வு உடன்பாட்டைப் புதுப்பிக்க புஷ் நிர்வாகத்தை டைம்ஸ் வலியுறுத்தியுள்ளது. "தளபதி முஷாரஃப்பின் பின் செயற்பாட்டுத் தளத்தை புதுப்பிக்கும் வகையில், முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோவுடன் நல்லுறவைக் கொள்ளச் செய்யும் வகை தற்போதைய பெரும் பாதாளத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு வகையாக இருக்கலாம்..." என்று அது கூறியுள்ளது.

ஆனால் டைம்ஸின் நம்பிக்கை பயனற்றுப் போகக்கூடும். வாஷிங்டனுடைய நலன்களுக்கு ஏற்ப தான் நடந்து கொள்ளுவதாகவும் பாக்கிஸ்தான் இராணுவத்துடன் இணக்கமாக இருந்து முஷாரப்பிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு வெடிப்பதை தடுக்கத் தாயார் என்று பலமுறை பூட்டோ அடையாளம் காட்டியுள்ளார். முஷாரஃப் ஆட்சியை திருத்தி அமைத்த வகையில் PPP க்கு ஒரு பங்கு கொடுக்கப்பட்டால், அதற்கு ஈடாக மக்கள் மற்றும் "ஜனநாயக முகத்தை" உடைய ஒரு தன்மையை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக உறுதியளித்து, அந்த அரசாங்கம் இராணுவ, அதன் அமெரிக்கப் புரவலர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முஷாரஃப் அவசரகால அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூட்டோ தளபதியுடன் இனி பேச்சு வார்த்தைகளுக்கு இடம் இல்லை என்று கூறாததுடன், அவருடைய PPP கட்சியும் இராணுவச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அதிகம் கலந்து கொள்ளவும் இல்லை.

ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து இவர் பின்வாங்கி, தளபதி-ஜனாதிபதியை தான் சந்திப்பதாக இல்லை என்று அறிவிக்க வேண்டியிருந்ததுடன், வெள்ளியன்று ஒரு எதிர்ப்பு அணிவகுப்பிற்குத் தலைமை தாங்குவேன் என்றும் அறிவித்தார்.

பூட்டோவின் நோக்கங்கள் அப்படியேதான் இருந்துவருகின்றன. ஆனால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு பெருகிக் கொண்டுவருகையில், முஷாரஃப் அதிகமாக நேரடி அடக்குமுறையை நம்பியுள்ள நிலையில், PPP க்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு இவ்வம்மையார் சர்வாதிகாரியில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளாவிட்டால் பெரிதும் குறைந்துவிடக் கூடும். ஏற்கனவே PPP தலைமைக்குள் ஆழ்ந்த பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க நடைமுறை முஷாரஃப் மற்றும் பாப்கிஸ்தானிய இராணுவத்திற்கு ஆதரவு கொடுத்து நிற்பது, அதுவும் அவை பாக்கிஸ்தான் மக்களுடைய மிக அடிப்படையான ஜனநாக உரிமைகளை மிதிக்கும்போது, மீண்டும் புஷ் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் உலகம் முழுவதும் அமெரிக்க தூதரக முறை மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு ஒரு ஜனநாயக முறையிலான சொல் மூடிமறைப்பைக் கொடுத்த பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க உயரடுக்கு பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி முற்றிலும் அசட்டைத் தன்மையையும், விரோதப் போக்கையும் கொண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமான, உயர்ந்த அளவு பங்கை முஷாரஃப் ஆட்சி கொடுத்து வருகிறது. 2002 போலித் தேர்தல்களில் இருந்து இந்த மே மாதம் கராச்சியின் முஷரப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் வரை கணக்கிலடங்காத சமயங்களில் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் மீறப்பட்டபோதும், முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப் செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானுக்கு மீண்டும் வர முயற்சித்தபோது அவரை நாடுகடத்தியது மற்றும் தற்போதைய இராணுவச் சட்ட ஆட்சிப் பிரகடனம் வரை, புஷ் நிர்வாகம் அவற்றிற்கு உடந்தையாக இருந்ததுடன், ஆதரவாகவும் பேசிவந்துள்ளது.

பாக்கிஸ்தானிடம் வாஷிங்டன் கொண்டுள்ள அணுகுமுறை, முற்றிலும் அமெரிக்க கொள்ளை முறையின் மூலோபாய நலன்களினால் உருவாக்கப்பட்டது ஆகும். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் கொழிக்கும் அண்டைப் பகுதிகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முற்படும் முயற்சிகளுக்கு பாக்கிஸ்தான் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவும், ஆக்கிரமிப்பு நடத்தவும் அமெரிக்கா கொண்ட முயற்சிகளுக்கு பாக்கிஸ்தான்தான் முக்கிய தள ஆதரவைக் கொடுத்தது; அருகில் இருக்கும் மத்திய ஆசிய குடியரசுகள் ரஷ்ய செல்வாக்கின் கீழ் குறைந்த ஒத்துழைப்புள்ளதாய் ஆகி வருகையில், ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்க செயற்பாடுகளில் அமெரிக்காவிற்கு கூடுதலான முக்கியத்துவத்தை கொண்டுள்ளதாகக் கூட ஆகி வருகிறது. பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சி அமெரிக்க இராணுவத்தை ஈரானுக்கு எதிரான போரில் இந்நாட்டை தளமாகக் கொள்ள அனுமதித்துள்ளது; பயிற்சி முகாம்கள், ஈரானுக்குள் ஊடுருவல் போன்றவற்றை செய்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டவிரோதமான முறையில் சித்திரவதை செய்யப்படுவதற்கு தளங்கள் கொடுத்துள்ளதாகவும் பாக்கிஸ்தான்மீது பரந்த சந்தேகம் இருந்து வருகிறது.

அமெரிக்க உயரடுக்கு முஷாரஃப்பின் ஆட்சிக் கவிழ்ப்பால் பெரும் கவலை கொள்ளவில்லை என்று சொல்வதற்கு அல்ல. இது புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு சரியான முறையில் ஒரு சங்கடம் என்றுதான் காணப்படுகிறது; ஏனெனில் ஜனநாயகத்தை இது வளர்ப்பதாக கூறிக்கொள்ளும் கருத்துக்களின் வெற்றுத் தன்மையையும், பாசாங்குத்தனத்தையும் சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளது. புஷ் நிர்வாகமே பாரட்டிய ஆட்சி ஒன்று, அமெரிக்காவில் முக்கிய கூட்டாளி எனக் கூறப்படுவது மீண்டும் தன்னுடைய நச்சுப் பற்களைக் காட்டியுள்ளது.

இன்னும் முக்கியமாக, முஷாரஃப்பின் நடவடிக்கைகள் மறுதாக்குதலை கொடுத்து மக்கள் திரள்வதை ஏற்படுத்தலாம்; அது இராணுவ நலன்களுக்கு மட்டுமில்லாமல், அதன் முக்கிய புரவலராக இருக்கும் அமெரிக்காவின் நலன்களுக்கும் எதிராகப் போய்விடக்கூடும் என்ற பரந்த அச்சுறுத்தல்கள் உள்ளன.

இச்சமன்பாட்டில் இருந்து முஷாரஃப்பை அகற்றி, மற்றொரு தளபதி பூட்டோவுடன் உடன்பாடு காண்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அதாவது முஷாரஃப் கொடுக்க மறுப்பதை கொடுக்கும் வகையில், இராணுவ ஆட்சியை சற்று மாற்றி, அதே நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்படா வண்ணம் செய்தல் என்பதே அமெரிக்காவின் முயற்சியாக இப்பணயத்தில் இருக்கும்.

அமெரிக்க உயரடுக்கு முழுவதும் உறுதியாக தவிர்க்க விரும்பும் ஒரு விஷயம், பாக்கிஸ்தானின் சாதாரண மக்கள் நாட்டின் அரசியல் வாழ்வில் உண்மையான தலையீடு செய்யக்கூடாது, அதிலும் குறிப்பாக வெகுஜன வன்முறை கூடாது என்பதே ஆகும்.