World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush administration consolidates plans for war against Iran

ஈரானுக்கு எதிரான போர்த் திட்டங்கள் புஷ் நிர்வாகம் ஒருங்கிணைக்கிறது

By Peter Symonds
17 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈரானுக்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்பு போரை தொடக்குவதற்காக புஷ் நிர்வாகத்தில் பல மாதங்களாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. தெஹ்ரானுக்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரம் இன்னும் உரத்த குரலில் நடந்து வருகையில் செய்தி ஊடக கசிவுகள் வெள்ளை மாளிகையில் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வாதிடும் "இராஜதந்திர அணுகுமுறைக்கும்" துணை ஜனாதிபதி டிக் ஷினியின் கோரிக்கையான இராணுவ நடவடிக்கைக்கும் இடையே பிளவுப் பூசல்கள் இருப்பதை காட்டுகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தி ஊடகங்களில் கடந்த வார இறுதியில் வெளிவந்த கட்டுரைகள் போர் ஆதரவுப் பிரிவு கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ள நிலையில் விவாதம் அநேகமாக முடிந்து விட்டதாக கூறுகின்றன.

''ஈரானுடனான யுத்தத்திற்கு புஷ் அமெரிக்காவை முன்நிறுத்தியுள்ளார்'' என்ற தலைப்பில் Sunday Telegraph ல் வந்துள்ள மிக வெளிப்படையான செய்தி ஊடகத் தகவல் "துணை ஜனாதிபதி டிக் ஷினியுடன் தன்னுடைய வேறுபாடுகளை களைந்துவிட்டு ரைஸ் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடலாம்" என்று முடிக்கிறது. "மேலும் வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவரின் கருத்தின்படி, ரைஸ் இப்பொழுது ஷினியுடன் இணைந்து செயலாற்றி "தங்கள் நிலைப்பாடுகளை சமரசப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியிடம் ஒரு ஒற்றுமையான திட்டத்தை அளிக்கத் தயாராகின்றனர்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈராக் மீதான குற்றம்சார்ந்த படையெடுப்பில் பங்குடைய இருவருமான ஷினிக்கும் ரைஸுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தந்திரோபாய வழிவகையை பற்றியதுதான். ரைஸின் "இராஜதந்திரம்" என்பது ரஷ்யா, சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய சக்திகளை ஈரான் மீது பொருளாதார தடைகளை சுமத்துவதற்கு மிரட்டுதலும், அச்சுறுத்தலும் என்பதோடு அதற்கு ஆதரவாக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவதும்தான். இப்பொழுது, Sunday Telegraph கருத்தின்படி, இவ்வம்மையார் ஷினியிற்கு ஆதரவு கொடுத்து ஒரு ஒருதலைப்பட்ச அமெரிக்க தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார்.

"நீங்கள் அங்கு சென்று உடலின் அசைவுகளை கவனித்தால், ஷினிதான் இன்னும் சக்தி வாய்ந்தவர் என்பது தெரியவரும். கொண்டி இராஜதந்திர முயற்சிக்கு பெரிதும் முயன்றாலும், அவர் ஒன்றும் ஒரு புறா அல்ல. அவசியப்படுமானால் போர் அறைகூவலில் அவரும் ஈடுபடுவார்" என்று வெளிவிவகாரத்துறை அதிகாரி பிரிட்டிஷ் செய்தித்தாளிடம் கூறினார். இந்த விவாதங்களில் ரைசின் ஒரே நிபந்தனை "நிர்வாகம் மீண்டும் போருக்கு செல்வது என்றால் அது பல மாதத் தயாரிப்புக்களை கட்டமைத்து அமெரிக்க காங்கிரசின் ஆதரவையும் போதுமான அளவிற்கு பெற வேண்டும்."

வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள மாற்றம் நேற்று பிரான்சில் வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் கொடுத்த அப்பட்டமான பகிரங்க எச்சரிக்கையினால் அடிக்கோடிட்டு காணப்படுகிறது. தெஹ்ரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போதே, குஷ்நெர் RTL வானொலி மற்றும் LCI தொலைக்காட்சியிடம் கூறினார்: "ஆனால் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதற்கும் என்றால், போர் என்று பொருள்." பிரெஞ்சு இராணுவம் ஏற்கனவே திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. "தலைமைத் தளபதிகளின் சிறப்பு உரிமையான திட்டங்களை தயாரித்து வைப்பது என்பதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்; ஆனால் அது ஒன்றும் நாளையே ஏற்படப்போவதில்லை" என்று அவர் கூறினார்.

மூத்த பென்டகன் மற்றும் CIA அதிகாரிகள், Sunday Telegraph இடம், ஈரானுக்கு எதிரான ஒரு போர்க் காட்சியை முன்வைத்து, தெஹ்ரான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது என்ற போலிக் காரணத்தை கூறியுள்ளனர். "ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி ஈராக்கில் ஈரானியர்கள் குறுக்கீடு செய்வது பற்றிப் பகிரங்கமாக கண்டித்து --அது ஆயுதங்களையும் பயிற்சியையும் போராளிகளுக்குக் கொடுத்து வருகிறது என்று கூறி-- இது எல்லை கடந்து ஈரானிய பயிற்சி முகாம்கள், குண்டுத் தயாரிப்பு ஆலைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்த வழிவகை செய்யக்கூடும்" என்று கூறியதாக செய்தித்தாள் விளக்கியது.

"ஒரு முக்கியமான இலக்காக Fajr தளம் இருக்கக்கூடும்; இது ஈரானிய புரட்சிகரப் படையான தெற்கு ஈரானில் உள்ள Quds படையால் நடாத்தப்படுகின்றது. இங்கு கவசங்களை பிளக்கக்கூடிய ஏவுகணைகள் பிரிட்டிஷ், அமெரிக்க படைகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படுகின்றன என்று மேலை உளவுத்துறைப் பிரிவுகள் கூறுகின்றன. வாஷிங்டன் பாதுகாப்பு வட்டாரங்களில் நம்பகத்தன்மையை பெறும் இந்தக் கருத்தின்படி, அமெரிக்க நடவடிக்கை ஈரானியரிடம் இருந்து ஒரு ஆத்திரமூட்டலை ஏற்படுத்தும்; அது வளைகுடா எண்ணெய் விநியோகங்களை நிறுத்தும் வகையில் இருக்கலாம்; அது ஈரானின் அணுசக்தி நிலையங்களையும், அதன் படைகளையும்கூட விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு உந்துதல் கொடுக்கக்கூடும்."

Sunday Telegraph இன் கருத்தின்படி, "இரு முக்கிய தயாரிப்புத் திட்டங்கள்" இயற்றப்பட்டுள்ளன. ஒன்று ஈரானில் இருக்கும் அணுசக்தி அமைப்புக்களை மட்டும் குண்டுவீச்சிற்கு உட்படுத்துவது. இன்னும் கூடுதலான வகையில், இரண்டாவது விருப்புரிமை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தாக்குதல் நடத்தி அனைத்து முக்கியமான இராணுவத் தளங்களை தாக்குதல் என்பது ஆகும். இத்திட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட இலக்குகள் இருக்கும்." என்று உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறியுள்ளார். Sunday Telegraph இதேபோன்ற கட்டுரை ஒன்றை பதினைந்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டு வலதுசாரி நிக்சன் மையத்தின் Alexis Debat என்பவரை மேற்கோள் காட்டியிருந்தது; அவர் அமெரிக்க இராணுவம் 1,200 இலக்குகளை தாக்குவதற்கு தயார் செய்து வருவதாக விளக்கியிருந்தார். "ஈரானிய இராணுவம் முழுவதையும் தாக்கும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்" என்று Debat உறுதிப்படுத்தும்வகையில் விளக்கியுள்ளார்.

உள்ளத்தை உறையவைக்கும் வகையில், நேற்றைய Sunday Telegraph ஈரானுக்கு எதிராக அணுசக்தி ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றியும் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்று தொடர்ந்து கசிந்து வரும் ஊடகத் தகவல்களை பற்றிச் சேர்த்துக் கொண்டது. "துணை ஜனாதிபதி ஈரானுடைய அணுசக்தி தளங்களுக்கு எதிராக பதுங்கிமிடத் தகர்ப்பு (Bunker-Buster) அணுவாயுதத்தை பயன்படுத்தலாம் என்று வாதிட்டதாக கூறப்படுகிறது. அவருடைய நண்பர்கள் இதை மறுத்தாலும், திரு.ஷினி புரட்சிப் பிரிவுகள் ஷியா இராணுவக் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்" என்று கட்டுரை கூறியுள்ளது.

பிரிட்டிஷ் செய்தித்தாள் கோடிட்டு காட்டியுள்ள போரை பற்றிய தோற்றம், ஒரு வெற்று ஊகம் ஒன்றும் அல்ல. ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, புஷ் நிர்வாகம் ஒரு பிரச்சாரப் போரில் ஈடுபட்டு, தெஹ்ரான் ஈராக்கில் இருக்கும் ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து வருகிறது என்று மட்டும் இல்லாமல் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கும் அத்தகைய உதவிகளை செய்து வருவதாகக் கூறி வருகிறது. இக்கூற்றுகளுக்கு நம்பத்தகுந்த நிரூபணம் ஏதும் ஆதாரங்களாக கொடுக்கப்படவில்லை; அதேபோல் தெஹ்ரானின் ஷியைட் ஆட்சி எதற்காக, தங்களது சமயத்திற்கு புறம்பானவர்களும் மற்றும் பாரசீகர்களுக்கு கடும் விரோதிகள் எனக் கருதும் தீவிரவாத சுன்னிப் பிரிவினருக்கு ஆயுதும் கொடுக்க வேண்டும் என்பதையும் விளக்கவில்லை. ஈராக்கில் "குறுக்கீடு" செய்வதாக ஈரான் மீது அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுவது முற்றிலும் பாசாங்குத்தனம்; அதே நேரத்தில் அமெரிக்கா நூறாயிரக்கணக்கான மக்கள் இழப்பில் இரு நாடுகளையும் காலனித்துவ முறையில் ஆக்கிரமிப்பு செய்ய முனைகின்றது.

அமெரிக்க பிரச்சாரம் மற்றும் இராணுவத் தயாரிப்புக்கள் குறிப்பிடத்தக்க வகையில் பெருகி வருவதைத்தான் இப்பொழுது அனைத்தும் சுட்டிக் காட்டுகின்றன. நேற்று வாஷிங்டன் போஸ்ட் ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் புதிய குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதை உயர்த்திக் காட்டியுள்ளது; அவ்வதிகாரிகள் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிற்கு மிகப் பெரிய ஆயுத விநியோகத்தை கைப்பற்றியதாகவும், அவற்றில் நவீன சாலையோர குண்டுகள், சீறி வெடிக்கும் சிறு ஏவுகணைகள் இருந்ததாகவும் கூறியுள்ளனர் கடந்த வாரம் அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் கெவின் பேர்்ஜ்நர் 240 mm ராக்கட் ஒன்று பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க விமானத் தளத்தை தாக்க தெஹ்ரான் உதவிசெய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்; ஈராக்கில் அத்தகைய தாக்குதல் முதல்தடவையானது என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஈரான்-ஈராக் எல்லையில் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; இவற்றில் ஒரு புதிய அமெரிக்கத் தளத்தை ஈராக்கிற்குள் கட்டமைத்தலும் ஏராளமான பாதுகாப்பு நிறைந்த சோதனைச் சாவடி தொடர் அமைத்தலும் அடங்கியுள்ளன.

இப்படிப் பெருகிய முறையில் அழுத்தம் இருக்கும் சூழ்நிலையில், தற்செயலாகவோ, தயாரிக்கப்பட்ட வகையிலோ, எந்த நிகழ்வு ஏற்பட்டாலும், அது அமெரிக்காவால் இராணுவத் தாக்குதலுக்கு போலிக்காரணமாக எடுத்துக் கொள்ளப்படும்; அது விரைவில் முழுப் போருக்கு வகை செய்யும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் அனுமதி தேவையில்லை என்று வெள்ளை மாளிகை ஐயத்திற்கு இடமின்றி வலியுறுத்தும்; அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தன்னை "பாதுகாத்துக் கொள்ளவே" ஈரான் மீதான "மாற்றுப் போரை" ("Proxy War") செய்கின்றது என்றும் கூறும். "சுயாதீன" ஜனநாயகவாதி ஜோசப் லிபர்மானின் தூண்டுதலின் பேரில், அமெரிக்க செனட் ஜூலை மாதம் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை "கொலை" செய்ததற்காக ஈரான் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக இயற்றிய நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டை குறிப்பிட்டுக் காட்டியது.

பொருளாதாரத்தடைகள் பற்றி பூசல்கள்

புஷ் நிர்வாகம் இராணுவ நடவடிக்கைக்கு செல்லுவதற்கான தூண்டுகோல் ஈரான் கொண்டிருப்பதாக கூறப்படும் அணுவாயுதத் திட்டங்களுக்கு எதிராக ஈரான் மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்ற அமெரிக்காவின் மூன்றாம் சுற்றுக் கோரிக்கைகளுக்கு ஆழ்ந்த சர்வதேச எதிர்ப்பு வந்துள்ளதேயாகும். வாஷிங்டனில் வெள்ளியன்று உயர்மட்ட விவாதங்கள் நடக்க இருக்கின்றன; இதில் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் --அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்; இவற்றுடன் ஜேர்மனியும் சேர்ந்து கொள்ளும். ரஷ்யாவும் சீனாவும் பகிரங்கமாக மேலும் உடனடி நடவடிக்கை ஏடும் கூடாது என்று எதிர்த்துள்ளன. ஆனால் முன்பு வலுவான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்த ஜேர்மனி தடுமாறுகையில், வெள்ளை மாளிகையின் அழைப்பிற்கு இது உந்துதல் கொடுத்துள்ளது போலும்.

The Fox News வலைத்தளம் கடந்த செவ்வாயன்று, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவை கொடுத்தலை நிறுத்தி வைப்பது என்ற ஜேர்மனியின் முடிவு, "வாஷிங்டனில் உள்ள பரந்த அதிகாரிகள் பிரிவை இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்கதலுக்கான தோற்றத் திறன்களை பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு ஊக்கம் கொடுக்க வைத்துள்ளது." என்று எழுதியுள்ளது. பெரிய சக்திகள் சமீபத்தில் பேர்லினில் நடத்தி கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை "அறையை அதிர வைத்து... புஷ் நிர்வாக முக்கிய அதிகாரிகளை பேச்சிழக்க செய்து பொருளாதார தடைகள் மடிந்துவிட்டன என்று எண்ண வைத்தது." அதைத் தொடர்ந்து ஜேர்மனிய அதிகாரிகள் அவ்வறிக்கையை உதறித் தள்ளினர் என்றாலும், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Martin Jaeger வெள்ளியன்று புதிய தடைகளை தாமதப்படுத்துவதற்கு ஜேர்மனி ஆதரவு தரும் என்றும், "ஈரானுக்கு இழந்துவிட்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்" என்பதால் இந்நிலை என்றும் கூறினார். புஷ் நிர்வாகத்திற்கு எவ்விதத் தாமதமும் ஒரு தடையாகும்.

Fox News கட்டுரை பேர்லினுடைய எதிர்ப்பிற்கு காரணங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது; "ஈரான் மீதான கூடுதலான பொருளாதாரத் தடைகளின் சேதந்தரும் விளைவுகள் ஜேர்மனியின் பொருளாதாரத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது." இப்படிக் கூறப்படும் அக்கருத்தில் அடித்தளத்தில் இருக்கும் பொருளாதார, மூலோபாயப் பிரச்சினைகளை உயர்த்திக் காட்டப்படுகின்றது. புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிராகப் போர்த்தயாரிப்பை மேற்கொண்டிருக்கின்றது; இது ஈராக்கில் அது "தலையிடுவதற்காகவோ" அல்லது அது கொண்டிருப்பதாக கூறப்படும் அணுசக்தி திட்டங்களை நிறுத்துவதற்கோ அல்ல; ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்குத்தான். ஈரானிடம் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இருப்பது மட்டும் அல்லாமல், இரு மூலவளங்கள் கொழிக்கும் பகுதிகளுக்கு இடையே அதன் நிலப்பகுதியும் அமைந்துள்ளது.

இராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற்று ஈரானுடன் சர்வதேச பொருளாதார, இராஜதந்திர உறவுகள் சாதாரண முறையில் நடந்தால் என்ன நடக்கும் என்பதை பரிசீலிப்பது பலன் தரும். அந்நிலையில் முக்கிய வெற்றி பெறுபவர்கள் ஐரோப்பிய சக்திகள், சீனா மற்றும் ரஷ்யா என்று இருக்கும்; ஏனெனில் இவை அனைத்தும் ஈரானில் கணிசமான பொருளாதார பணயத்தை கொண்டுள்ளன. முக்கிய இழப்பாளராக அமெரிக்கா இருக்கும்; ஏனெனில் இது அந்நாட்டை அதன் நண்பராக ஷா ரேஸா பஹ்லவி 1979 புரட்சில் வெளியேற்றப்பட்டத்தில் இருந்தே பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தியுள்ளது. இந்த பெரிய முரண்பாட்டை இரு புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. கடந்த வெள்ளியன்று ஈரானிய அதிகாரிகள் சீனா அந்நாட்டின் வணிகப் பங்காளியாக ஜப்பானை கடந்து இரு புறத்தாருக்கும் இடையே இருக்கும் வணிகம் $20 பில்லியனையும் விட அதிகமாக இருக்கும் என்றும் இதில் மிகப் பெரிய எண்ணெய், எரிவாயு உடன்பாடுகளும் அடங்கியுள்ளன என்றும் தெரிவித்தனர். இதற்கு மாறாக 2007ல் அமெரிக்காவுடனான வணிகம் $160 மில்லியனைத்தான் எட்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது சீனாவின் எண்ணிக்கையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவு என்றும் இருக்கும்.

சனிக்கிழமையன்று Guardian பத்திரிகையும் கடுமையான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பு இருந்தால் போர் ஏற்படும் என்ற முன் கணிப்பைத்தான் கூறியுள்ளது. இக்கட்டுரை, "புஷ் நிர்வாகம் இராஜதந்திர முறையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பொறுமை இழந்து விட்டது, காலம் கடக்கப்பட்டு விட்டது என்று காட்டும் அடையாளங்களை கொண்டுள்ளது. துணை ஜனாதிபதி டிக் ஷினியினால் வழிநடத்தப்படும் பருந்துகள் இராணுவ நடவடிக்கைக்கான தங்கள் உந்துதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்; இதற்கு இஸ்ரேலுடைய ஆதரவு இருக்கிறது, சில சுன்னி வளைகுடா நாடுகளுடைய ஆதரவும் இருக்கிறது."

அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் முன்னிழல் படர்ந்திருக்கையில், புஷ் நிர்வாகம் காலம் கடக்கப்பட்டுள்ளது என்று கருதுவதாக Guardian சுட்டிக் காட்டுகிறது: "அணுசக்தி நிலையங்கள் மட்டும் இன்றி, எண்ணெய் தளங்கள், இராணுவ இடங்கள் மற்றும் தலைமை இலக்குகள் ஆகியவற்றையும் தாக்கும் திட்டங்களை வாஷிங்டன் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (International Institute for Strategic Studies) Patrick Cronin, "வாஷிங்டனில், இது ஒரு தீவிர விவாதம் என்றும் இவ் ஜன்னல் நன்கு கவனிக்கப்பட வேண்டும் என்றும் ஏனெனில் "ஈரான் பற்றி ஏதும் செய்வதற்கு" ஆறு மாதங்கள்தான் உள்ளன என்றும் அதன் பின்னர் அது முற்றிலும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டுவிடும்" என்றும் தெரிவித்தார்.

புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தோற்றுவித்துள்ள பேரழிவுகள் போதாது என்று, அனைத்து சான்றுகளும் அமெரிக்க மற்றொரு பொறுப்பற்ற, புதிய இராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக நடத்தக்கூடும் என்றும் அதையொட்டி பேரழிவு விளைவுகள் ஈரானிய மக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியிலும் சர்வதேச அளவிலும் ஏற்படலாம் என்றும் சுட்டிக் காட்டுகின்றன.