World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 1: இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

விஜே டயஸ்

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள் வெடிப்பது நீண்ட காலமாக பொறிபறந்து வளர்ச்சி கண்டுவரும் தீப்பிளம்பு பற்றி எரியும் போதேயாகும்.

சகல தீப்பிளம்புகளும் எங்கும் எப்போதும் ஒரே பணியை ஆற்றுவதில்லை. சில தணிந்து போகலாம் அல்லது தணிக்கப்பட்டுவிடலாம். ஆனால், அவற்றின் சூட்டிலும் உத்வேகம் பெறும் வெவ்வேறு தீப்பொறிகள் யுத்தப் பிளம்புகளை தோற்றுவிப்பதில் வெற்றிகாணும். தொகை பண்பாக மாறுகின்றது என்ற இயக்கவியல் விதி இங்கு செல்லுபடியாகின்றது.

தமிழர் விரோத இனவாத யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 1983ல் 13 பேர் வடக்கில் கொலை செய்யப்பட்டதால் ஆரம்பமானதாக சிங்கள இனவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். தாராளவாத முகமூடி போட்டுக் கொண்டுள்ள முதலாளித்துவக் கையாட்கள் இனவாத யுத்தம் 1983 கறுப்பு ஜுலையின் பெறுபேறு என்கின்றனர்.

வரலாற்றாசிரியர்களாக வேஷம் போடுவோரும் இனவாத யுத்தத்திற்கு இரு விதமான காரணங்களை காட்டுகின்றனர். சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த அதில் ஒரு சாரார் யுத்தத்திற்கான காரணங்களை பிரித்தானிய ஆட்சிக்காலம் வரை நீடிக்கின்றனர். இதில் பலர் இனவாத விதிமுறைகளை நடைமுறைக்கிடுகையில் இந்நாட்டு பிற்போக்கு சிங்கள-தமிழ் முதலாளித்துவத்தின் பொறுப்பை பூசி மெழுக முயற்சிக்கின்றனர். இங்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து பிரிவினைக்கு முதலில் நடவடிக்கை எடுத்தது தமிழ் தேசிய இனத்தின் முதலாளிகளா அல்லது சிங்கள தேசிய இனத்தின் முதலாளிகளா என்பதை தேடுவது, முதலில் தோன்றியது முட்டையா அல்லது கோழியா என்பதை தேடுவது போன்றதாகும். ஏகாதிபத்திய அவசியங்களின்படி, பிரிவினையை எதிர்பார்த்த சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்கள் இரண்டினதும் முதலாளிகள் அனுமதி கிடைத்த இடத்திலேயே அதைப் பற்றிக்கொண்டனர்.

பிரித்தானியர்களின் ''பிரித்தாளும்'' விதிமுறை, சிங்கள-தமிழ் முதலாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் நடைமுறைக்கிடப்பட்ட ஒன்றல்ல. ஏகாதிபத்தியவாதிகளுக்கும் தேசிய முதலாளிகளுக்கும் இடையே இங்கு நிலவிய இருதரப்பு ஒத்துழைப்புக்குமான காரணம், அவர்களிடையே இருந்து வந்ந கருத்து வேறுபாடுகளை காட்டிலும் அவர்கள் இரு சாராரும் இந்நாட்டு சிங்கள தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்தின் மூலம் எழுச்சி பெறும் சவாலைப் பற்றி பீதியும் எதிர்ப்பும் அடைந்ததேயாகும். அது வர்க்க உறவு மற்றும் வர்க்க ஆட்சி பற்றிய விடயமாகும்.

இரண்டாம் பிரிவைச் சேர்ந்த ''வரலாற்றாசிரியர்கள்'' 1948ன் பின்னைய யூ.என்.பி - ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்களின் இனவாதக் கொள்கையை யுத்தத்திற்கான காரணங்களாக காட்டுகின்றார்கள். இந்தப் பிரிவில் பெரும்பான்மையாக அடங்குவோர் இடதுசாரி வேஷம் போட்டுக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் ஆவர்.

1948ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவது, தேசிய சுதந்திரத்துக்கும் தேசிய ஐக்கியத்துக்கும் எதிராக ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முன்னெடுத்த சதியின் பெறுபேறு என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. 1949ன் பிரஜா உரிமைச் சட்டம் போலவே 1956ன் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய சட்டமும் சிங்கள முதலாளித்துவ ஆட்சியின் கீழ் நடைமுறைக்கிடப்பட்ட இனவாத பாகுபாடுகளுக்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

ஆனால், 1948ன் சுதந்திரம் எனப்படுவதைப் போலவே 1956ன் பிற்போக்கு மசோதாவுக்கும் எதிராக நின்று முதலாளித்துவ காட்டுமிராண்டி விதிமுறையைத் தோற்கடிக்கும் வல்லமை வாய்ந்த ஒரு அரசியல் சக்தி இருக்கவில்லையா? உண்மையிலேயே இருந்தது. இடதுசாரி வேஷம் போடும் தீவிரவாதிகள் அவ்வாறில்லை எனக் கூறுவது அவர்கள் பேணிக்கொள்ள முயலும் பழைய இடதுசாரி அரசியல் அமைப்புக்களின் காட்டிக்கொடுப்புக்கும் துரோகத்திற்கும் முந்தைய வரலாற்றுக்கே காலால் எட்டி உதைப்பதாகும்.

இந்தச் சம்மந்தப்பட்ட காலப்பகுதியில் சிறப்பாக போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜ கட்சி, 1950க்கு முன்னர், யூ.என்.பி. க்கும் சமரசவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக இன பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுகின்றதும் வழிநாடாத்துகின்றதுமான முக்கிய அரசியல் சக்தியாக விளங்கியது. 1953 ஹர்த்தால் போராட்டம் காட்டியதை போல், அந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் வல்லமை கொண்டிருந்தது. இந்த அரசியல் இயக்கத்தின் பிற்காலத் துரோக நடவடிக்கைகளுக்கும் இனவாத யுத்தத்துக்கும் இடையே நிலவும் உறவைக் கவனத்தில் கொள்ளாமல், முதலாளித்துவ அரசாங்கங்களின் இனவாத விதிமுறைகளைக் குற்றம் சாட்டுவதானது புறநிலை ரீதியாக முதலாளி வர்க்கம் சம்பந்தமாக பரிந்துரைக்கும் விதிமுறைகள் மூலம் வரலாற்றை விளக்குவதாகும். அது திரிப்பே அன்றி வரலாறு அல்ல.

1960-70களில் அரசியல் கட்சி நடவடிக்கை

அரசியல் கட்சிகளின் பணி, புறநிலை அபிவிருத்திகளினுள் அகநிலை காரணிகளாக செயற்படும் வர்க்க ரீதியான அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் திட்டவட்டமான பணிகளை இட்டு நிரப்புகின்றன. அந்தப் பணியை நோக்காது வரலாறு சப்பந்தமாக நிஜ புரிந்துணர்வைப் பெறமுடியாது. வரலாறு சம்மந்தமான அத்தகைய விளக்கங்கள் புறநிலை வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

1964 சமாசமாஜ-ஸ்டாலினிசக் கட்சிகளின் காட்டிக்கொடுப்பு இல்லாது இருந்திருக்குமானால், 1948 ஏகாதிபத்திய சார்பு சதிக்கும் 1956 சி.ல.சு.க. இனவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பிற்காத்தில் மூண்ட இனவாத யுத்தத்தை தவிர்க்க இடம் இருக்கவில்லையா? அவ்வாறு இல்லை எனக் கூறுவது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலீடு இல்லை எனவும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி, மனித இனத்தின் அமைதியான வாழ்க்கைக்கு வழியமைக்க இப்புவியில் இடமில்லை எனவும் கூறுவதற்கு சமமானதாகும்.

சி.ல.சு.க. அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சமசமாஜக் கட்சி 1964ல் இழைத்த மாபெரும் காட்டிக்கொடுப்பினால் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக சோசலிச மாற்றீட்டுக்கு இந்நாட்டின் சிங்கள தமிழ் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்து வந்த சோசலிச பதிலீட்டு தீர்வுக்கான வாய்ப்புக்கள் இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமன்றி 1970-75 முதலாளித்துவ கூட்டரசாங்க காலத்தில் அத்தகைய ஒரு முற்போக்கு பதிலீட்டுக்காக சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களிடையே வளர்ச்சி கண்டுவந்த முயற்சிகளை முதலாளித்துவ அரச பலத்தைக் கொண்டு இரத்தத்தில் மூழ்கடிக்கும் பொல்லாக முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தின் பங்காளி என்ற விதத்தில் சமசமாஜ மற்றும் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறின. இது 1970க்கு முன்னர் அகநிலைவாதிகளால் கண்டு கொள்ள முடியாது போன 1964ன் மாபெரும் காட்டிக்கொடுப்பின் அழிவுகரமான நடைமுறைப் பாத்திரத்தை வெளிக்காட்டியது.

எனவேதான் நாம் இனவாத யுத்தத்தின் வேர் அந்தக் காலப்பகுதியை நோக்கி வேரூன்றியுள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

1970-1977 காலத்தில் இருந்து வந்த முதலாளித்துவ கூட்டரசாங்கம் மூலம், சிறப்பாக 1972 தொடக்கம் அத்திவாரம் இடப்பட்டு யூ.என்.பி.யினால் அப்பட்டமான யுத்த மட்டத்துக்கு கட்டி எழுப்பப்பட்ட தமிழர் விரோத இனவாத யுத்தம், இன்று இரண்டாவது பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் கீழ் முன்னொருபோதும் இல்லாத காட்டுமிராண்டித் தனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது. அன்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த கூட்டரசாங்கத்துக்கு தோள்கொடுத்த சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூ.என்.பி.க்கு வழியமைத்துக் கொடுத்து மட்டுமன்றி, பின்னர் யூ.என்.பி. அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற இனவாத யுத்தத்திற்கும் ஆதரவளித்தனர் என்பதை அறியாதோர் கிடையாது. 1987ல் இந்திய இராணுவத்தை தருவித்து, தமிழ்ப் பொதுமக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க யூ.என்.பி அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினை அங்கிகரித்தது வரையும் அவர்கள் இரத்தவெறி ஆர்வத்துடன் யூ.என்.பி. யின் இனவாத யுத்தத்தின் வக்கீல்களாகினர்.

தமிழ்ப் பொது மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கியும் அங்கிருந்து வவுனியாவின் சித்திரவதை முகாம்களுக்கும் குடும்பத்தோடு கலைத்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணரும் பொருட்டு, சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகள் மட்டுமல்லாது ஏனைய சகல குட்டி முதலாளித்துவ கட்சிகளும், தீவிரவாதக் குழுக்களும் தோள் கொடுத்தன என்பது அப்படி ஒன்றும் இரகசியம் அல்ல. நவசமசமாஜ கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஜே.வி.பி, மற்றும் ஜனதா மிதுரோவும் அவ்வாறே விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ் முதலாளித்துவ அமைப்புக்களும் சந்திரிகா குமாரதுங்காவை ஜனாதிபதியாக்க தோள் கொடுத்தனர். இந்த அடிபணிவானது ஜனாதிபதி வேட்பாளரின் குள்ளத்தனங்களைக் காட்டிலும், அடிபணிந்தவர்களது அரசியல் வங்குரோத்தினையும் முறைகேடுகளையும் எடுத்துக் காட்டியது. பிற்போக்கு தலைவிரித்தாடும் இந்த வங்குரோத்துக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக உறுதியாகப் போராடிய ஒரே அரசியல் அமைப்பு, அனைத்துலக குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) மட்டுமே ஆகும்.

யுத்தத்தின் பேரழிவு

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் முன்னேரு போதும் இல்லாத அளவுக்கு உக்கிரம் கண்டதன் மூலம் சிங்கள-தமிழ் தேசிய இனங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு அளப்பரியதாகும்.

அரசாங்கத்தின் ஆண்டின் முழுச் செலவில் நூற்றுக்கு 25 வீதம் இப்போது மக்கள் படுகொலை யுத்தத்துக்கு செலவிடப்படுகிறது. அது ரூபா 5000 கோடிக்கும் அதிகமாகும். 1995ல் அரசாங்கம் சுகாதார செலவுகளுக்கு 1095 கோடி ரூபாய்களை செலவிட்டது. கல்விச் செலவுக்கு 1890 கோடி ரூபாய்களை செலவழித்தது. இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1995ல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு செலவு நூற்றுக்கு 50 சதவீதத்தினால் அதிகரித்ததோடு பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் எதிர்கால சந்ததியினரின் கண்களைத் திறக்கவும் அவசியமான சுகாதார, கல்வி சேவைகளுக்காகவும் செலவான செலவுடன் ஒப்பிடும்போது அதில் எந்தவிதமான அதிகரிப்பும் ஏற்படவில்லை. அந்நிலையில் 1996ல் வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் ஒதுக்கப்பட்ட தொகையையும் விட, இனவாத யுத்தத்துக்கும் இராணுவமயமாக்கத்துக்கும் ஒதுக்கிய தொகை அதனையும் தாண்டி மேலும் 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. அந்த விதத்தில், இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 80 வீதத்தினால் அதிகரிக்க பொதுஜன முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முதலாளித்துவ அரசியல் அடக்குமுறை இயந்திரமான இராணுவத்தினதும் பொலிசினதும் கொலைகாரப் படையாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசியங்களை இட்டுநிரப்ப செலவிடக்கூடிய பெருமளவிலான பணத்தைக் கொண்டே இந்த அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. 1985-95 க்கும் இடைப்பட்ட ஒரு தசாப்த காலத்தில் யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1985-95 தசாப்தத்தில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு கம்போடியா, ஈரான், பர்மா முதலான நாடுகளில் முறையே (நூற்றுக்கு) 153, 68, 54 வீதங்களாக விளங்கியது. ஆனால், அதே காலப்பகுதியில் இலங்கையில் இராணுவ-பொலிஸ் படைகளின் தொகை நூற்றுக்கு 483 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதாவது கம்போடியாவைக் காட்டிலும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. படைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இன்று இலங்கை உலகில் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் சனத்தொகையும் பரப்பளவும் சிறியது என்பதை மனதில் கொண்டால் இங்கு மக்கள் படுகொலைகள் உக்கிரம் கண்டுள்ளது பளிச்சிடும். 1985ல் 22,000 ஆக இருந்த இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை இன்று 126,000ஐத் தாண்டியுள்ளது. யுத்தத்தில் உயிரிழக்கும் படையினரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மட்டுமன்றி படைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இது இளம் தலைமுறையினரை மக்கள் படுகொலைக்காரர்களாகவும், மக்கள் படுகொலை யுத்தத்தின் பலிகடாக்களாகவும் மாற்றும் ஒரு பொறிக்கிடங்காக விளங்குகிறது.

யூ.என்.பி.யைப் போலவே பொதுஜன முன்னணி அரசாங்கமும் இளைஞர், யுவதிகளை திரட்டுவது அவர்கள் தம்மையும் பொது மக்களையும் வாழவைக்க வழிவகுக்கும் தொழில்களுக்கு அல்ல, மக்கள் படுகொலை இராணுவத்துக்கேயாகும். இளம் தலைமுறையினரின் சிருஷ்டித் திறன்மிக்க உற்பத்திச் சக்திகள் கசக்கிப் பிழியப்படுவதோடு அலுக்கோசு கொலைகாரப் படையாகவும் அவர்கள் மாற்றப்படுகின்றனர். அவர்களால் கொலைசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளதோடு கொலையுண்ட படையினரின் எண்ணிக்கை பல்லாயிரங்களைத் தாண்டியுள்ளது.

கொலையுண்ட லட்சக் கணக்கானோரிடையே முதலாளித்துவக் குடும்பங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கையை தனியொருவரின் கைவிரல்களைக் கொண்டே கணித்துவிடலாம். முதலாளி வர்க்கத்தினால் தமது சுய அவசியங்களுக்காக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இரத்தக் களரியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு மேலும் சாட்சி வேண்டுமா? இனவாத யுத்தத்தினை மையமாக கொண்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ள இந்த மக்கட் படுகொலையின் முக்கிய பயங்கர பணி யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களினால் இட்டு நிரப்பபட்டுள்ள அதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தமிழ் இயக்கங்களின் துணை நடவடிக்கைகளின் கொடுமைகளை எந்த விதத்திலும் குறைந்தவையாக நோக்க முடியாது.

இனவாத யுத்தத்தினதும் அதன் பின்னணியில் வளர்ச்சி கண்டுள்ள ஒடுக்குமுறை அரச இயந்திரத்தினதும் நச்சுத்தனமான பெறுபேறுகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்பட்டது என்ற கருத்து ஒரு பயங்கரமான நப்பாசையாகும் என்பது இதுகாறும் சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்குத் தெளிவாகியுள்ளது.

சமூக சீரழிவு

இனவாத யுத்தம் என்பது முழு நாட்டையும் படுகொலைக்குள்ளும், பயங்கரங்களுக்குள்ளும் மூழ்கடிக்கும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாகும் என சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே தோடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளன. இதன் உண்மை, 1988-90 காலப்பகுதியில் இடம்பெற்ற இளைஞர் படுகொலைகள் மூலம் நாடு பூராவும் பரந்து விரிந்து, இன்னமும் இடத்துக்கு இடம் வெறிபிடித்துள்ள அரசியல் காடைத்தன இயக்கங்கள் மூலமும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களது போராட்டங்களையும் ஊர்வலங்களையும் இரத்தத்தினால் மூழ்கடிக்க இராணுவ-பொலிஸ் அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலமும், மின்சாரசபை ஊழியர் போராட்டத்தில் தலைதுக்கியது போல் அவசரகால சட்ட ஆட்சியின் கீழ் தொடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்கள் மூலமும் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இவை யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்களாகும். இவற்றுக்கு மேலதிகமாக முதலாளித்துவ அமைப்பின் கீழ் வாழ்க்கைக்கு வழியில்லாத நிலமைக்குள் தள்ளப்பட்டு குழம்பிப் போயுள்ள மக்கள், கொலைகள், கொள்ளைகளில் ஈடுபடுவதோடு தற்கொலை செய்துகொள்ளவும் திரும்பியுள்ளமை பொறுக்க முடியாத சமூகச் சீரழிவினை வெளிக்காட்டுகின்றது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 1995 ஜுன் 1ம் திகதி தொடக்கம் 1996 ஜுன்1ம் திகதி வரையிலான ஒரு வருட காலத்துள் 1270 கொலைகள் இடம்பொற்றுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடத்தில் 2246 கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறானால் ஒரு நாளைக்கு 7 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 565 வாகன கொள்ளையடிப்புகள் 43 கற்பழிப்பு சம்பவங்களும் இக்காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகக் கலாச்சார மரபுகள் மூலம் போடப்பட்டுள்ள தடைகளின் கீழ் கற்பழிப்பு பற்றிச் செய்யப்படும் முறைப்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் கொள்ளும்போது இந்தப் புள்ளி விபரம் எந்தளவுக்குப் பரந்துபட்டுள்ள சமூக முறைகேடுகளின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. பொலிஸ் அறிக்கைகள் மூலம் அம்பலமாகும் இந்த சமூக அழிவு, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இடம்பெற்றவை மட்டுமே. இனவாத யுத்தப் பிராந்தியமான வடக்கு-கிழக்கில் இடம்பெறும் கொலைகள், சமூக ஊழல்கள் இதைக் காட்டிலும் பிரமாண்டமானவை என்பதைக் கூற வேண்டுமா?

காதில் கேட்டவுடன் மெய்சிலிர்க்க வைக்கும் அளவிலான சமூகப் பேரழிவுகள் நடைபெறும் இன்றைய நிலைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சாதாரண பொதுமக்களா? அல்லது அம்மக்களைச் சிறைப்படுத்தி ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள முதலாளித்துவ அமைப்பும் அதன் ஆட்சியாளர்களுமா? அதனுடன் இணைந்த இன்னொரு கேள்வியும் உள்ளது. பொது மக்களின் பேரில் பேசிக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியின் மரணத்தை தள்ளிப்போட 1970-77 கூட்டரசாங்கத்துக்கும், யூ.என்.பி. க்கும் போல் இன்றைய பொதுஜன முன்னணி அரசங்கத்துக்கும் முண்டு கொடுத்துள்ள துரோக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த நச்சுப் பொறுப்பில் இருந்து விடுபட முடியுமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதே அவற்றுக்கு சரியான பதில்களை வழங்கும். நாம் மேலும் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம். இந்தத் துரோகத்துடன் கூட்டுச் சேராமல் யூ.என்.பி. முதலாளித்துவ கூட்டரசாங்க ஆட்சியை தூக்கி வீசவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்ந்து, சமுக சமத்துவத்தையும் நீதியின் அடிப்படையில் சமாதானமான சுபிட்சமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டும் பொது மக்களுக்கு வழிகாட்டிய கட்சி இருந்ததா? அதற்குப் பதில் ''நிச்சயமாக ஆம்'' என்பதேயாகும். அது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே ஆகும்.

நாம் மீண்டும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முகம் கொடுக்கும் சமுகப் பேரழிவுகள் பற்றிய பிரச்சனைக்குத் திரும்புவோம். இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியது போல், இராணுவமயமாக்க வேகத்தைப் போலவே தற்கொலை சம்பவங்கள் அளவுகணக்கற்ற விதத்தில் அதிகரிப்பதிலும் இலங்கை உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. சனத்தொகையின் ஒவ்வொரு இலட்சத்துக்கும் 47 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 22பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வோரிடையே அதிகமானோர் கடன் பளுவைச் செலுத்த முடியாமை, தனது குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியாமை, வேலை நீக்கம் போன்ற காரணங்களினால் இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாங்க முடியாததும் விடுவித்துக்கொள்ள முடியாததுமான தரித்திர நிலைமைக்குள் தாம் அகப்பட்டுக்கொண்டுள்ளோம் என்ற மன உளைச்சலில் அவர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நெருக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இங்ஙனம் தற்கொலை செய்து கொள்வது அவர்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டுள்ள நாற்றம் கண்ட முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக சுமத்தப்படும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இந்தச் சமுகச் சீரழிவு முதலாளித்துவ அமைப்பின் கீழ் உக்கிரம் கண்டுள்ளதை அம்பலமாக்கும் இன்னோரு விடயம் நாடு பூராவும் சிறுவர் பாலியல் உழைப்பு பரந்து பட்டு வருவதாகும். 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 10000 க்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் இந்தக் மோசமான தொழிலுக்கு பலியாக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2001ம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை 80000ஐ தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுச் சனத்தொகையில் கிட்டத்தட்ட சரி அரைவாசிப் பேர் மாதம் ரூபா.500க்கும் குறைவான வருமானம் பெற்று வாழ்க்கையை ஓட்டும் நிலையில், அழிவுமிக்க பெறுபேறுகள் சகல வகையிலும் வெளிப்பாடாகத் தொடங்கி உள்ளது.

17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த யூ.என்.பி. அரசாங்கத்தைப் போலவே இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கமும் தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் பிரச்சாரங்களுக்கு அரச குண்டர் படைகளைப் பாவித்தும் நலன்புரிச் சேவைகளை வெட்டியும் பொதுமக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளுவதும் இனவாத யுத்தத்தின் கல் உருளையை பாவித்தாகும். யுத்தம் நடக்கும் வரை எதையும் கேட்க வேண்டாம்! ஆளும் வர்க்கத்தின் யுத்தக் கோஷம் அதுவே. இப்போது நடத்திவரும் மக்கட் படுகொலை யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொணர்ந்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதானது, சிங்கள-தமிழ் இரண்டு தேசிய இனங்களதும் பொதுமக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தை தொடுப்பதற்குத் தயாராகும் வரை நடாத்தும் மோசடியாகும்.

இந்த மோசடி ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் கீழும் அவ்வாறே ஆர்.பிரேமதாச, டீ.பீ.விஜயதுங்கவின் கீழும் பாவிக்கப்பட்டவையாகும். சகல துரோகத் தலைவர்களினாலும் தூக்கிப்பிடிக்கப்பட்ட சந்திரிகா குமாரதுங்க மீண்டும் திணிப்பதும் இந்த மோசடியையேயாகும்.

ஒரே வழி

இனவாத யுத்தத்தை நிறுத்தவும் தமிழ் முதலாளித்துவ பிரிவனைவாதத்தினை தோற்கடிக்கவும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை வறுமையில் இருந்து மீட்கவும் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச சமத்துவத்தின் அடிப்படையில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வது அத்தியாவசியமாகும். இதற்காக சிங்கள, தமிழ் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த பொதுமக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டும் கட்சியை கட்டியெழுப்புவது சோசலிச சமத்துவக் கட்சியேயாகும்.

வேலையின்மை, வறுமை, தொற்றுநோய்கள் மற்றும் படிப்பறிவின்மை உக்கிரம் கண்டுவரும் நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக உடன் நிறுத்தப்பட வேண்டிய யுத்தத்தை தள்ளி வைத்துவிட்டு, ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கமும் அவர்களின் பொதுஜன முன்னணி அரசாங்கமும் ஊழையிடுவது கொலைகார இனவாத யுத்தத்தின் வெற்றிகளைப் பற்றியேயாகும். பொதுமக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது என்பதற்கு வேறு சாட்சியும் வேண்டுமா?

முதலாளி வர்க்கமும் அவர்களின் அரசாங்கமும் மக்களின் நலன்களையிட்டு எதுவித அக்கறையும் கொள்ளாததற்கு காரணம் அவர்கள் தப்பெண்ணங்களைக் கொண்டுள்ளதால் அல்ல. அவர்களது நடைமுறையைத் தீர்மானிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு காலாவதியாகிப் போய் மனித இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனத்தை திணிக்கும் ஒரு அமைப்பாக பரிணாமம் கண்டுவிட்டதனாலாகும். மக்கள் படுகொலை இனவாத யுத்தம் போலவே கொலைகார மோதுதல்களை தூண்டும் முதலாளித்துவ பிரிவினைவாதத்தையும் இதில் இருந்து வேறுபடுத்த முடியாது.

''தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் எமது யுத்தம் அல்ல'' என்ற தொழிலாளர் வர்க்க ஒடுக்கப்படும் மக்களின் நிலைப்பாட்டையும் மனோபாவத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாகத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. அது காட்டுமிராண்டித்தனம் கோலோச்சும் முதலாளி வர்க்கத்தின் யுத்தமாகும்.

முதலாளி வர்க்கமும் அவர்களின் யூ.என்.பி - பொதுஜன முன்னணி அரசாங்கமும் நடத்திவரும் மக்கள் படுகொலை யுத்தத்தின் பின்னணியைத் தயார் செய்து கொடுப்பதில் சமசமாஜ, ஸ்டாலினிச கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, இ.தொ.கா, ஜே. வீ. பி. தலைமைகள் இட்டு நிரப்பிய நச்சுத்தனமான அரசியல் பாத்திரத்துக்கு வெளியே இனவாத யுத்தத்தின் பிற்போக்கு பணியை புரிந்து கொள்ள முடியாது. இனவாத யுத்தத்தின் முக்கிய சிருஷ்டி பணியை இந்த துரோகத் தலைமைகளே இட்டுநிரப்பி உள்ளன.

இனவாத யுத்தத்திற்கான திட்டத் தயாரிப்புக்கள் செய்யப்பட்ட தருணத்தில் இருந்து யுத்தத்தை எதிர்த்து நின்று வந்த ஒரே அரசியல் அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே (இப்போது சோசலிச சமத்துவக் கட்சி) என்பதை இங்கு குறிப்பிட்டு, அந்த இனவாத யுத்தச் சதியின் அடி வேரை தெளிவுபடுத்தும் பணியை அடுத்துவரும் பகுதிகளிடம் ஒப்படைத்து இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

தொடரும்......

See Also :

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 2: 1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும்

பகுதி 3: யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

பகுதி: 4: 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

பகுதி 5 : 1983 கறுப்பு ஜூலை

பகுதி 6 : இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது