World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 2: 1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும்

விஜே டயஸ்

Use this version to print | Send this link by email | Email the author

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத யுத்தம் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அவ்வாறு கொள்ளக் காரணம் அந்த யுத்தத்திற்கு அடிக்கல் நாட்டும் வேலைகள் ஸ்ரீலங்கா- சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கீழ் 1972ல் இருந்து ஆரம்பமாகிவிட்டதேயாகும். இதை நாம் கடந்த பகுதியில் சுட்டிக்காட்டினோம்.

1972ல் இடம்பெற்றது என்ன? அந்த ஆண்டில் கூட்டரசாங்கம் சிங்கள-பெளத்த இனவாத அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அது சிங்கள-பெளத்த மக்கட் பிரிவினரை தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த ரீதியில் தூண்டிவிடும் ஒரு நனவான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக விளங்கியது.

1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்கு என்னவாக இருந்தது? இதைப் புரிந்து கொள்வதற்கு 1945ல் இயற்றி 1947ல் நடைமுறைக்கிட்டதும் 1972வரை அமுலில் இருந்ததுமான அரசியலமைப்புச் சட்டத்தின் அரசியல் பின்னணியையும் செயற்பாட்டையும் பற்றி சிறிது தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

1947 அரசியலமைப்புச் சட்டம், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இலங்கையில் அதி வலதுசாரி படு பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் இடையே பொதுமக்களுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒரு சதியின் பெறுபேறாகும். இந்த அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடுவதற்கு சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எந்தவிதமான சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. அத்தோடு முதலாளி வர்க்கத்தின் தீவிரவாதிகளாகக் கோலம் போட்டுக் கொண்ட பகுதியினருக்கும் கூட அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இருந்து வந்த முதலாளித்துவ அமைச்சரவை 1944ல் தயாரித்த அரசியலமைப்பு வரைவே 1947 அரசியலமைப்புச் சட்டத்துக்கு அடிப்படையாக இருந்து வந்தது. அரசியலமைப்புச் சட்ட வரைவினைத் தயார் செய்ய டீ.எஸ். சேனநாயக்கவின் தலைமையில் இருந்த அமைச்சரவையைத் தூண்டியது 1943 மே மாதத்தில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனமாகும்.

ஏகாதிபத்திய இரண்டாம் உலக யுத்தம் அதன் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த இந்தக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் ஆசிய காலனிகள் யப்பான் ஏகாதிபத்தியத்தின் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தன. யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், முகங்கொடுத்திருந்த அச்சுறுத்தலின் தன்மைக்கும் சமாந்தரமாக, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனித்துவ கைக்கூலி முதலாளிகளைக் கொண்டு இத்தருணத்தில் பொது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளைத் தீவிரமாக்கினர்.

மக்கள் விரோத ஒடுக்குமுறையானது தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டிக் கொண்டு தேசிய சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமாகப் போராடிய லங்கா சமசமாஜக் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டதன் மூலம் அப்பட்டமான முறையில் வெளிப்பாடாகியது. 1940 ஜூன் மாதத்தில் சமசமாஜக் கட்சியின் அரச சபை எம்.பீ.க்கள் இருவர் உட்பட முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டதோடு கட்சியின் அரசியல் நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டன. சமசமாஜக் கட்சி அந்தரங்கமாகச் செயற்படத் தள்ளப்பட்ட போதிலும் அதன் தொழிற்சங்கங்கள் இன்னமும் இருந்துவர இடமளிக்கப்பட்டது. 1942 மார்ச்சில் அந்த அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தத்துக்கு தோள்கொடுத்தபடி, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியைக் கொண்டிருக்க முழு மூச்சாக நின்று வந்த ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த பொதுஜன ஒடுக்குமுறைக்கு மத்தியில் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை முற்றுகையிட்டுக்கொள்ளவும், இலங்கை தேசிய காங்கிரசின் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தமது ஏகாதிபத்தியச் சார்பு துரோக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அமைச்சரவையின் அரசியலமைப்புச் சட்ட வரைவு முன்வைக்கப்பட்ட போது டீ.எஸ். சேனநாயக்க இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் வெளியேறி இருந்தார். காங்கிரசின் முதலாளித்துவ தீவிரவாதிகளின் கோரிக்கைகளைக் கூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே தேசிய முதலாளித்துவ வர்க்கத் தலைவரான அவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சரவை வரைவு தயார் செய்யப்பட்டது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி பொதுமக்கள் மீது திணித்த மிலேச்ச ஒடுக்குமுறைகளினால் மதங்கொண்டிருந்த தேசிய முதலாளிகளின் விருப்பு வெறுப்புகளின் பேரிலாகும். எனினும் 1944ல் நியமனம் செய்யப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுகளின்படி, ஐவர் ஜென்னிங்சினால் தயார் செய்யப்பட்ட "சோல்பரி அரசியலமைப்பு" யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஏகாதிபதிய சார்பு ஆட்சியின் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

சிங்கள முதலாளிகள் ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து சகல சலுகைகளையும் தமது மடியில் போட்டுக் கட்டிக்கொள்ள முயற்சி செய்தாலும் -அத்தருணத்தில் ஒரு தொகை இனவாத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்ததால்- உறிஞ்சப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஐக்கியத்தின் அச்சுறுத்தலின் எதிரில், சிங்கள-தமிழ் மற்றும் இன, மத முதலாளித்துவ குழுக்களிடையே இடம்பெறும் குத்து வெட்டுக்களினால் தோன்றக் கூடிய அரசியல் ஆபத்துக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்புக்கு சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் சில நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இதற்குக் காரணம் நளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற இனவாத முதலாளித்துவ பரிந்துரையாளர்கள் கூறுவது போல், சிறுபான்மை மக்கள் குழுக்கள் சம்பந்தமாக பிரித்தானியர்களிடையே தலை தூக்கிய அனுதாபம் அல்ல. ஒரு ஆளும் வர்க்கம் என்ற முறையில், தாம் பெற்றிருந்த அனுபவத்தின் அடிப்படையில் அன்றைய முதலாளித்துவ ஆட்சிக்கு இருந்து வந்த அச்சுறுத்தல்களை புரிந்து கொண்டதே அதற்கு காரணமாகும். அந்த நிலைமைகளுக்கு அவசியமான முறையில் பொதுமக்களைக் குழப்பியடிக்கவும் ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவ பகுதியினரைப் பிளவுபடுத்தவும் (இந்தியாவில் போன்று) மறுபுறத்தில் ஏகாதிபத்திய அவசியங்களுக்காக இனத்துவ முதலாளித்துவ பகுதியினரை திரட்டி, தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களின் அச்சுறுத்தலை நசுக்கிவிடும் அளவுக்கு ஒரு ஆளும் வட்டத்தை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் நியமித்திருந்தனர்.

1947ல் இருந்து தொழிற்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தின்படி, பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்களுக்கு ஒரு சில வரையறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

(அ) எந்த ஒரு மதப் பிரிவினரதும் சமய செயற்பாட்டை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல்.

(ஆ) ஏதாவதொரு மக்கள் குழுவையோ அல்லது மதப் பிரிவையோ சேர்ந்த தனிநபர்களை, வேறு பொது மக்கள் குழுவையோ அல்லது மதங்களையோ சேர்ந்தவர்கள் கீழ்ப்படுத்தும் தடைகளுக்கு அல்லது வரையறைகளுக்கு கீழ்ப்படுத்தல்.

(இ) எந்த ஒரு மக்கட் குழுவையோ அல்லது மதத்தினையோ சேர்ந்த தனியாட்களுக்கு வேறு மக்கட் குழுக்களையோ அல்லது மதங்களையோ சேர்ந்த தனியாட்களுக்கு வழங்கியிராத சலுகைகளை அல்லது நன்மைகளை வழங்குதல்.

(ஈ) எந்த ஒரு மத அமைப்பினதும் அமைப்பு விதிகளை அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் அங்கீகாரம் இல்லாமல் மாற்றுதல்.

இவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் செய்ய முடியாமல் இருந்தது. அத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் அவை அரசியலமைப்புக்கு அமைய செல்லுபடியற்றதாகும்.

அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களும் அந்தந்த காலப்பகுதியில் நிலவிய வர்க்க சமபல நிலையின் வெளிப்பாடாகும். அவ்வாறே அந்த சமபல நிலையைத் தமக்குச் சார்பான விதத்தில் திருப்பிக் கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் முயற்சியின் ஒரு பெறுபேறுமாகும்.

தமிழ் மற்றும் சிறுபான்மைக் குழுக்களின் முதலாளித்துவப் பகுதியினருடன் சேர்ந்துகொள்ளாமல் இலங்கையில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியை நடத்திச் செல்ல வாய்ப்புக் கிடையாது என சிங்கள முதலாளி வர்க்கப் பகுதியினருக்கு எச்சரிக்கை செய்தவர்களும் அவர்களுக்கு அதைப் புரிய வைத்தவர்களும் பிரித்தானியர்களே. ஆளும் வர்க்கத்தின் நோக்கில் அதன் சரியான தன்மை, அந்த ஆண்டின் சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கும் மற்றும் அது 1947ல் அமுலுக்கு இடப்பட்டதற்கும் இடையே கழிந்து சென்ற இரண்டு ஆண்டுகளுள் அது நிரூபிக்கப்பட்டது.

சிங்கள தமிழ் முதலாளித்துவக் கூட்டு

1945ல் ஆரம்பமாகி 1947 பொது வேலை நிறுத்தம் மூலம் உச்சக் கட்டத்தை அடைந்த ஒரு தொகை தொழிலாளர் போராட்டங்கள் இந்த இரண்டு வருட காலத்தினுள் வெடித்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியும் (நான்காம் அகிலத்தின் பகுதி) சட்ட விரோத நிலைமையில் இருந்து விடுபட்டு மீண்டும் வெளிப்படையாகச் செயற்படத் தொடங்கியதோடு ஸ்டாலினிஸ்டுகளின் ஏகாதிபத்தியச் சார்பு கருங்காலி இயக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டிக்கொள்ள முடிந்தமை அந்தப் போரட்டங்களின் பின்னால் இருந்து வந்த முக்கிய அரசியல் காரணியினாலே ஆகும். நடேசையரின் தலைமையிலான இலங்கை இந்திய காங்கிரஸின் மூலம் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்ட நடாத்திய ஒரு தொகை போராட்டம் இதனுடன் இணைந்து கொண்டது. இந்தப் புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இலக்குடனேயே சிங்கள-தமிழ் முதலாளிகளின் கூட்டு நிர்மாணிக்கப்பட்டது. 1947 பொது வேலை நிறுத்தத்தில் கொலன்னாவையில் இருந்து புறப்பட்ட தொழிலாளர் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அரசாங்க லிகிதர் சேவை சங்கத்தின் (GCSU) கந்தசாமியை கொலை செய்ததன் மூலம் இந்தப் பிற்போக்கு கூட்டின் மக்கள் விரோத காட்டுமிராண்டி இலக்கு இரத்தத்தினால் பொறிக்கப்பட்டது.

பாகுபாடுகளுக்கு இடம் வைக்காமல் பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையேயும் சமத்துவத்தை ஸ்தாபிதம் செய்யும் நோக்குடன் சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 29வது சரத்து, மக்களை ஏமாற்றி முதலாளித்துவ பிரிவினரிடையே ஒரு கூட்டுக்கு வழிவகுப்பதாக விளங்கியது என்பது இன்னொரு விதத்தில் நிரூபிக்கப்பட்டது. அது இந்திய பிறப்புரிமை கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்துக் கட்டும் சட்டம் 1949ல் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

1949 ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை மசோதா, இலங்கையில் வசித்த ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராகத் திட்டவட்டமான பாகுபாடு காட்டுவதாகவும் அவர்களின் உரிமைகளை பிடுங்கிக் கொள்வதாகவும் விளங்கியது. அது அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தினால் தவிர்க்கப்படவில்லை. அது மட்டுமன்றி, அந்த காட்டுமிராண்டி மசோதாவுக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆதரவை யூ.என்.பி. வெற்றிகொள்ளவும் முடிந்தது. இந்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது எனக் காட்டி சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அதற்கு எதிராக அணிதிரட்டப் போராடியது போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜக் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியுமே ஆகும்.

1950ல் ஒன்றிணைந்து கொண்ட இந்த இரண்டு சமசமாஜக் கட்சிகளதும் தலைவர்கள், 1972 பிற்போக்கு குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், சோல்பரி அரசியலமைப்பின் 29வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புகளில் இருந்தும் சிறுபான்மைக் குழுக்களை தள்ளி வைக்க பங்களிப்பு செய்தனர். சோல்பரி அரசியலமைப்பின் 29வது அரசியலமைப்பு இருந்து வந்த நிலைமையிலும் குடியுரிமை மசோதா, சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கும் சட்டம் போன்ற தமிழ் பேசும் மக்களுக்கு பாகுபாடு காட்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது உண்மையே. எனினும் குறைந்தபட்சம் அந்த சரத்தின் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்ய இந்நாட்டின் தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கமொன்று போராடிக்கொண்டுள்ளதையிட்டு தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் 1972ல் சமசமாஜ துரோகத்தின் மூலம் சிதறடிக்கப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றதும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை பிடுங்கிக்கொள்கின்றதுமான சகல சட்டங்களும் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினுள் உறிஞ்சிக்கொள்ளப்பட்டது மட்டுமன்றி, பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம், அவை இன்னொரு அடி முன்னெடுக்கவும் பட்டன. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது சரத்து, "இலங்கை மக்கள் குடியரசு பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதே சமயம் அதன் பிரகாரம் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் பொறுப்பாகும்" என்றது.

பெளத்த மதத்தை கோலோச்ச செய்யும் இந்த நடவடிக்கையானது முக்கியமாக அன்று பெரும்பான்மையாக இந்து சமயத்தினை பின்பற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டது என்பதை ஆளும் வர்க்கம் அங்கீரித்து ஒப்புக்கொண்டது.

இதனை இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டின: 1. கத்தோலிக்க, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்தமை. 2. யூ.என்.பி. சிறப்பாக அந்த சரத்துக்கு ஆதரவு வழங்கியமை.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிபலிப்புகள் மூலமும் இந்த அங்கீகாரம் வெளியாகிற்று. 1972 அரசியலமைப்புச் சட்டதுக்கு எதிராக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடையே பரவி இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்தன. இவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தன. தமிழ் மக்களிடையே பலவீனம் கண்டுவரும தமது அரசியல் ஆளுமையை கட்டியெழுப்பும் பொருட்டு 1972 அரசியலமைப்பினால் தொடுக்கப்பட்ட தமிழ் மக்கள் விரோத தாக்குதலை பயன்படுத்திக் கொள்ள கூட்டாக தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் அங்ஙனம் முடிவு செய்தன.

சிங்கள-தமிழ் மக்கள் குழுக்களுக்கு இடையே மோதுதலை புதிய மட்டத்துக்கு உயர்த்தும் நோக்கத்துடன் 1972 அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டது எனவும், அது தமிழர் விரோத இனவாத யுத்தத்துக்கான அடிக்கல் நாட்டலாக விளங்கியது எனவும் நாம் வலியுறுத்தக் காரணம், அது முன்னொரு போதும் இல்லாத விதத்தில் இனவாத துருவப்படுத்தலுக்கு வழிவகுத்ததேயாகும்.

சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை ஐக்கியப்படுத்துவதற்காக முன்னர் போராடிய சமசமாஜக் கட்சி, 1964 முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கங்கத்தினுள் நுழைந்துகொண்டு இழைத்த மாபெரும் காட்டிக் கொடுப்பின் நடைமுறைப் பெறுபேறாகவே இது இடம்பெற்றது. இது துருவப்படுத்தப்பட்ட இரண்டு இனக் குழுக்களுக்கிடையே யுத்த மோதுதல் அரசியலை நிகழ்ச்சி நிரலில் புகுத்தியது.

1972 ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியலமைப்பு, அக்கட்டத்தில் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களின் பேரிலான பிற்போக்கு முதலாளித்துவ பிரதிபலிப்பாக விளங்கியது.

மக்கள் போராட்டம்

1970 மே பொதுத் தேர்தலில் ஒரு தொகை மோசடி வாக்குறுதிகள் மூலம் பொது மக்களை ஏமாற்றி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒரு சில மாதங்கள் கழிவதற்கும் முன்னரே தொழிலாளர்களதும் ஒடுக்கப்படும் மக்களதும் வெறுப்புக்கும் ஆத்திரத்துக்கும் இலக்காகியது. ஐக்கிய முன்னணியின் வாக்குறுதிகளால் உற்சாகமடைந்து அது ஆட்சிபீடம் ஏறத் தொழிற்பட்ட மக்கட் பகுதியினர், அரசாங்கம் அமைக்கப்பட்டது தான் தாமதம் தத்தமது கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் இறங்கினர். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்குள் அணிதிரண்டு போய் இருந்த தொழிலாளர்கள் ஓரளவிற்கு சகிப்புடன் நடந்து கொண்ட போதிலும், வீடுகளை இழந்த ஏழை மக்கட் பகுதியினர் தனிப்பட்ட முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் காணிகளைக் கூட்டாகக் கைப்பற்றிக் கொண்டு பகிர்ந்து கொள்ளும் இயக்கத்தை நாடு பூராவும் பல்வேறு பிராந்தியங்களிலும் ஆரம்பித்தனர். அரச பலத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இந்த ஏழை மக்களைக் கலைத்து தனிப்பட்ட முதலாளித்துவக் காணிச் சொந்தக் காரர்களின் உரிமைகளை பாதுகாக்க ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் ஒரு கணமும் தாமதம் காட்டவில்லை.

சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்குள் கால் கட்டுப் போட்டுவிட்டிருந்த ஒரு சமயத்தில், சகிக்க முடியாத வாழ்க்கைச் சுமைகளால் நலிந்து போய்வந்த ஏழை மக்கள், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வேலைத் திட்டத்தினைக் கொண்ட ஒரு தலைமை இல்லாமல் செய்யப்பட்டதன் தீய விளைவாக தமது போராட்டங்களில் இருந்து பின்வாங்கச் செய்யப்பட்டனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் தமது அடிப்படை உரிமைகளை முதலாளித்துவ சொத்து அமைப்புக்கும் அரசுக்கும் எதிராக உறுதியாக போராடக் கூடியதும் போராடுகின்றதுமான தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலைமையின் கீழேயே வெற்றி கொள்ள முடியும் என்ற மறக்க முடியாத விஞ்ஞானபூர்வமான மார்க்சிய உண்மை மீண்டும் ஒரு தடவை ஊர்ஜிதமாகியது.

எனினும் ஜே.வி.பி. இந்த உண்மைக்கு மாறாக, தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தை ஏழை மக்களதும் இளைஞர்களதும் விடுதலையாளனாகப் பிரகடனம் செய்து கொண்டு செயற்பட்டது. 1970ல் பிற்போக்கு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதற்கு செயற்பட்டதன் விளைவாக, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி., அரசாங்கத்துக்கு எதிராக பொறுமையிழந்து வந்த ஒடுக்கப்படும் மக்களுக்கிடையே சந்தர்ப்பவாத ரீதியில் தமது அடிப்படையை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது. அங்கு அது சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியல் கட்சிகளின் துரோகத்தினை முழு தொழிலாளர் வர்க்கத்தினதும் இலாயக்கற்ற தன்மையாகக் காட்டியும், அசிங்கமான சிங்கள பெளத்த சிந்தனா முறையைக் கொண்ட குப்பை கூழங்களை தவிர்க்க முடியாத விதத்தில் பயன்படுத்தியும் ஏழை மக்களையும் இளைஞர்களில் ஒரு பகுதியினரையும் தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தினுள் ஈர்த்துக்கொள்வதில் வெற்றி கண்டது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் யூ.என்.பி., ஐக்கிய முன்னணி என்ற இரு சாராரும் ஜே.வி.பி. யின் சர்ந்தர்ப்பவாதத்தைப் பற்றியும் குட்டி முதலாளித்துவ அரசியல் வங்குரோத்தையிட்டும் விழிப்பாக இருந்து வந்தன. ஆதலால், அந்த இரு சாராரும் ஜே.வி.பி.யை தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள உள்ள வாய்ப்பையும் அவ்வாறு முடியாதவிடத்து, ஜே.வி.பி. யின் அரசியல் மலட்டுத்தனத்தை பயன்படுத்தி அதனை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கவும் கணக்கிட்டுக் கொண்டு செயற்பட்டனர். அந்தக் கணிப்பின்படியே ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஏப்பிரல் வரை ஜே.வி.பி. சுதந்திரமாக தமது அரசியல் பிரச்சாரங்கள் மூலம் அரசாங்கத்தை சவால் செய்ய இடமளித்து பார்த்திருந்ததே தவிர, பாதுகாப்புத் துறையினர் வழங்கிய அறிக்கைகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டதனால் அல்ல. இந்த விடயத்தையிட்டு நாம் கவனம் செலுத்துவது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கும் அதன் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கும் மார்க்சிசத்தை நனவான முறையில் காட்டிக்கொடுத்த கட்சிகளின் திட்டவட்டமான ஆதரவு கிடைத்து வந்தது என்பதை கணக்கில் கொண்டேயாகும். அதைப் பற்றி இன்று போலவே அன்றும் நனவற்ற முறையிலும் குருடாகவும் இருந்தது அரசியல் ரீதியில் வங்குரோத்தான ஜே.வி.பி. யேயாகும்.

1971 ஏப்பிரலில் ஜே.வி.பி. நடாத்திய கிளர்ச்சி, ஐக்கிய முன்னணியும் யூ.என்.பி. யும் கூட்டாக கட்டவிழ்த்துவிட்ட அரச ஒடுக்குமுறையின் மூலம் இரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களுக்கிடையே ஐக்கிய முன்னணியின் ஆதரவு அடியோடு முழுமனே சிதறுண்டு போய் இருந்தது என்ற யதார்த்தத்தையிட்டு அரசாங்கம் கண்களை மூடிக்கொள்ள விரும்பவில்லை. இதுவரை காலமும் குட்டி முதலாளித்துவ மத்தியதர வர்க்க பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியைக் காக்க மேற்கொண்ட தமது மூலோபாய வேலைத் திட்டங்களை மீளச் சீர்செய்து கொள்ளும் பிரச்சினையை ஆளும் வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை.

இரண்டு முக்கிய காரணிகள்

இச்சமயத்தில் தலைநீட்டிய இரு வேறு முக்கிய காரணிகள் முதலாளித்துவ ஆட்சியில் மூலோபாய மாற்றத்தினை வேண்டி நின்றன:

1. 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் இடையே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிலைநாட்டப்பட்ட பெறுமதி உறவுகள் தகர்ந்தமை. பிரெட்டன்வூட்ஸ் உடன்படிக்கையின்படி 1 அவுன்ஸ் தங்கம் 35 டாலர்களுக்கு சமம் எனவும், அந்த நிலையான பெறுமதி அமைப்பின்படி ஏனைய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியை தீர்மானம் செய்யவும் இருந்து வந்த உடன்பாடு, அமெரிக்க ஜனாதிபதி றிச்சர்ட் நிக்சனால் ஒருதலைப்பட்சமான முறையில் உடைத்தெறியப்பட்டது. இது உலகம் பூராவும் பணவீக்கம் அலை அலையாக பெருக்கெடுக்க காரணமாகியது. சிறப்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமக்குக் கிடைக்கும் டொலர்களின் பெறுமதி குறைந்து போவதை ஈடு செய்யும் பொருட்டு எண்ணெய் விலையை அதிகரித்தன. இதனால் சகல பொருட்களதும் விலைகளும் அத்தோடு எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரம், விவசாய இரசாயனப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்களைத் தொடர்ந்தும் வழங்குவது ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் பிரச்சினையாகியது.

2. இந்தப் பணவீக்க சூழ்நிலையில் இதுவரை காலமும் மெளனமாக இருந்துவந்த மற்றும் ஜே.வி.பி.யினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்ததுமான தொழிலாளர் வர்க்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டங்களின் மூலம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் இறங்கியமை, 1973-75 காலப்பகுதியில் பிரித்தானியாவிலும் ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் அவ்வாறே ஐரோப்பா பூராவும் பரந்து வந்ததும், இந்தியாவினுள் இந்திராகாந்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்து வந்ததுமான ஒரு தொகை புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களின் முன்னோடியாக, 1971ன் கடைப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

வங்கி ஊழியர்கள் தமது போராட்டத்துக்கான தயாரிப்பு நடவடிக்கையாக 1971 டிசம்பர் 13ம் திகதி நடைபெற்ற மாநாட்டில் தமது தொழிற்சங்கத் தலைமையில் இருந்து சமசமாஜவாதிகளை வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்ட தலைமை ஒரு மத்தியவாத தலைமையாக இருந்த போதிலும் சமசமாஜக் கட்சியை பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு கால்கட்டு போடும் ஆளும் வர்க்க உபாயம் சிதறுண்டு போகும் என்பதற்கு அது நல்லதொரு சாட்சியாக விளங்கியது. புதிய தலைமையின் கீழ் 1972 மார்ச்சில் வெடித்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தம், தீவெங்கிலும் கைத்தொழில், வர்த்தக நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தது. தொழிலாளர் வர்க்கத்தினுள் தலைநீட்டி இருந்த இந்த எச்சரிக்கை, ஏழைகளின் போராட்டத்தைக் காட்டிலும் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆபத்தானதாக விளங்கியது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மேயில் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது இந்த அரசியல் பின்னணியிலேயே ஆகும்.

துரோகத் தலைவர்களைக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தை நெறிப்படுத்திக்கொள்ள முடியாதெனில், உதவி மானியங்களை வழங்கி, கிராமப்புற ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் கால் கட்டுப் போட இருந்து வந்த வாய்ப்புக்கள் அடைப்பட்டுப் போனால் முதலாளித்துவ ஆட்சியை காக்க இப்போது செய்ய வேண்டியது என்ன? ஆளும் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினதும் எதிரில் தோன்றிய தீர்க்கமான பிரச்சினை இதுவேயாகும்.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சிங்கள-தமிழ் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத் திட்டங்களுக்குள் அடைத்துப் போடுவது ஆளும் வர்க்கத்தின் புதிய மூலோபாயமாகியது. முதலாளி வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாதத்துக்கு தோள் கொடுத்து, ஜே.வி.பி. யினால் கிளறிவிடப்பட்ட தொழிலாளர் விரோத அவ்வாறே சிங்கள-பெளத்த பேரினவாத அட்டூழியங்களில் இருந்தும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அனைத்துலகவாதத்தின் கீழ், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டு இன்னமும் நான்கு ஆண்டுகள் கடந்து விடாத நிலையில், ஜே.வி.பி. யை இழுத்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வைத்திருப்பதன் இலாபத்தை முதலாளி வர்க்கம் பற்றிக் கொண்டது.

1947ல் இருந்து நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியலமைப்புச் சட்டம், யுத்தத்துக்கு பின்னைய முதலாளித்துவ ஆட்சியின் சார்புரீதியான உறுதிப்பாட்டை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்குமாயின், 1972 அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்திய உலக அமைப்பின் வெடிப்பின் புதிய சுற்றின் தொடக்கத்துடன் எழுந்த வர்க்கப் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் காட்டுமிராண்டி எதிர்பார்ப்புக்களுடன் தயார் செய்யப்பட்டதாகும். இனவாதத்தைத் தூண்டுவதற்கு மேலாக முழு மக்களதும் சிவில் உரிமைகளை நசுக்கித் தள்ளப் பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட அதிகாரங்களைச் சாதாரண சட்டங்களாக்கிக் கொண்டு, 1972 அரசியலமைப்புச் சட்டம் இந்தக் காட்டுமிராண்டி இலக்குகளை வெளிக்காட்டிக் கொண்டது.

சிங்கள, தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத்தினுள் அவர்களைத் தள்ளும் பொருட்டு 1972 அரசியலமைப்பை சட்டமாக்கிய ஸ்ரீலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பங்காளிகளே 1994ல் பொதூஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை மீண்டும் தோளில் சுமந்து கொண்டுள்ளனர். அதிகாரங்களைப் பரவலாக்கி, ஜனநாயகத்தை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு ''அரசியல் தீர்வு'' என்ற பேரில் தூக்கிப்பிடிக்கப்படும் புதிய அரசியலமைப்பை சுற்றி பேராசையுடன் சகல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் சதிராடுகின்றார்கள். சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ஆய்வுக்கட்டுரைகளைத் தீட்டுகின்றார்கள். இவை எல்லாம் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்தத்தினை உக்கிரமாக்கி உள்ள ஒரு நிலையிலேயே இடம்பெறுகின்றன. யுத்தத்தின் பேரால் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு எத்தகைய ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியை கொணரப்போகின்றது என்பதைப் புரிந்து கொள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்படும் அரசியல் பின்னணியே போதுமானது.

இனவாத யுத்தத்துக்கு அடிப்படையான 1972 அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட காலப்பகுதி இதற்குப் பெரிதும் சமமானது.

இன்றைய ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க, இன்று போல் அல்லாது அன்று பெரும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமராக விளங்கினார்.1970 ஜூலை 19ம் திகதி அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற பேரில் நவரங்கஹலவில் (புதிய நாடக அரங்கு) கூடிய முதலாளித்துவ பாராளுமன்ற நடிகர் நடிகைகள் முன்னிலையில் பேசிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிக்கை, ஜனநாயகத்துக்கு இரு புறத்திலும் குழி தோண்டுவதாக விளங்கியது. அவர் கூறியதாவது:

''நான் அரசியலமைப்புச் சட்டத்தை முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எமது புதிய அரசியலமைப்பு எமது தேசத்தின் ஒற்றையாட்சிப் பண்பை பலப்படுத்த உதவுவதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நான் கூறியாக வேண்டும். எம்மிடையே சிங்களம், தமிழ், முஸ்லீம், பறங்கியர் மற்றும் நானாவித இனக்குழுக்களும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்ற பல மதக்குழுக்களும் இருந்த போதிலும் நாம் ஒரு தேசிய இனமாகச் செயற்பட வேண்டும்.''

நிலமானித்துவ பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒரு அம்மணி, தமது பண்ணை அடிமையின் திருமண வைபவத்துக்கு சென்று சாய்மனைக் கதிரையில் நீட்டி நிமிர உட்கார்ந்து கொண்டு, தாமும் தமது அடிமைகளும் ஒரே குடும்பத்தின் பங்காளிகள் எனக் கூறினால் அதில் பொதிந்திருக்கும் வஞ்சனைக்கு மேலான எதுவும் இந்த அறிக்கையில் பொதிந்திருக்கவில்லை, என்பதை இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் நடவடிக்கைகள் நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே காட்டிக்கொண்டு விட்டது. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ''ஜனநாயக மதிப்பு'', தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அல்லாது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அவசியங்களினால் வழிநடத்தப்படுவதே அதற்குக் காரணம்.

இன்றைய ''அரசியல் தீர்வை'' முன்வைக்கும் போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்தகால தீவிரவாத மிகைப்படுத்தல்களை தூக்கிப் பிடிப்பதன் மூலம் அவரது அரசியல் பின்னணி இருட்டடிப்புச் செய்யப்படுவதோடு, அவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் அவசியத்தினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டப்பட்டு வருகின்றது. சில தமிழர்கள் சம்பந்தமாக கடந்த காலத்தில் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பும் ஆதரவும் இதற்கு சாட்சியாகக் காட்டப்பட்டது. இந்தக் கதையளப்பில் ஈடுபட்டுள்ள மந்திரவாதிகள், முதலாளித்துவத்தின் நாற்றமெடுப்புச் சகாப்தத்தில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியாது என்ற பொது உண்மையை குழிதோண்டிப் புதைக்கின்றார்கள். ஜயவர்த்தனவின் தந்திரங்களில் அல்லது பிரேமதாசவின் களவுகள் அல்லது காடைத்தனங்களுக்கு கைநீட்டியவாறு அவர்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மக்கட் படுகொலைகள் மற்றும் இனவாத யுத்தம் உட்பட நாசகார நடவடிக்கைளை சிருஷ்டித்த நிஜ காரணிகளை அவர்களால் விளக்கிக் காட்ட முடியாது. அது மட்டுமன்றி, முதலாளித்துவ அரசியல்வாதிகளால் அன்று தொடக்கம் இன்று வரை ஏதேனும் ஒரு இடத்தில் வெளியிடப்பட்டுள்ள வாயளவிலான தீவிரவாத அறிக்கைகளைக் கொண்டும் அவர்களின் பணியை புரிந்து கொள்ள முடியாது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகள் ஊற்றெடுப்பது, சமூக உற்பத்தி செயற்பாட்டினுள் அவர்கள் வகிக்கும் பிற்போக்கு நிலைப்பாடுகளில் இருந்தாகும். இனவேறுபாடுகள் தணிந்து போய் விடுவதில்லை. முதலாளி வர்க்க பகுதியினர் அவற்றை உலகம் பூராவும் உக்கிரம் அடைபவையாக மாற்றியுள்ளனர். இலாபப் பொதியை காத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் கையாலாகாத்தனமான முயற்சியாக, அதற்குக் குறுக்கே நிற்கும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை இரத்தத் தடாகத்தில் மூழ்கடித்து நாசமாக்கிவிட துடிப்பதே காரணமாகும்.

லங்கா சமசாமாஜ கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் வரை, தமிழ் மக்கள் உட்பட்ட தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரின் ஜனநாயக உரிமைகளை காக்க வாயளவில் மட்டுமன்றி செயலளவிலும் போராடிய வரலாற்றை தனதாக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய ஒரு கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா, உற்சாகத்துடன் சிங்கள-பெளத்த பேரினவாதமயமானதும் பொதுமக்கள் ஒடுக்குமுறையை இலக்காகக் கொண்டதுமான 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞர் ஆகியதை அவரின் தனிப்பட்ட நெறிகேடாக மட்டும் விளக்க முடியுமா? இல்லை. அது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டு சமசமாஜக் கட்சி தீர்க்கமான முறையில் முதலாளித்துவ முகாமுக்குள் மாறிக்கொண்ட கூட்டரசாங்க அரசியலின் ஒரு பெறுபேறாகும்.

முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க, சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் முதலான பிரிவினருக்கு ஒரு தேசிய இனமாக தொழிற்படுவதற்கு வழங்கிய மோசடி மிக்க வாக்குறுதியை வீசி எறிந்தார் எனினும், ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்ட வரலாறு படைத்த சமசமாஜ கட்சித் தலைவர் வழங்கிய வாக்குறுதி சம்பந்தமாக பொதுமக்கள் எதிர்ப்புக்களைக் கொண்டிருந்தனர். 1970 கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், முதலாவது சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா, ''இலங்கையர்களை உண்மையில் சுதந்திர, சுயாதீனமான, இறைமை கொண்ட மக்களாக மாற்றும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கு நாம் செயற்பட்டு வருகிறோம்'' என்றார். நாற்றம் எடுத்த முதலாளித்துவ அமைப்பின் பாதுகாப்புக்கு அர்ப்பணம் செய்துகொண்டுள்ள ஒரு முதலாளித்துவ ஆட்சியினால் இதை நிறைவேற்ற முடியுமா? என்ற பிரச்சனையை அணுகாத சகல தீவிரவாதிகளும், இன்று போல் அன்றும் அந்த வாக்குறுதிகளை தோள்களில் சுமந்துகொண்டு மக்களை குழப்புவதில் ஈடுபட்டனர்.

1972 ஜூலை மாதத்தில் "அரசியலமைப்புச் சபை" என்ற பெயரில் பாராளுமன்றம் புதிய நாடக அரங்கில் கூடிய போது, யூ.என்.பி. மட்டுமன்றி சகல தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் அதை அங்கீகரித்து அதில் பங்குகொண்டன. இன்று போலவே அன்றும் இந்த அங்கீகாரத்தின் மீது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சகல கட்சிகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசியலமைப்புத் தொடர்பான செயற்குழு, பணியை ஆரம்பித்தது.

 

அவசரகாலச் சட்ட ஆட்சி

முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் விழுந்தடித்துக்கொண்டு பொதுமக்களின் கள்ளக் கையொப்பங்களில் நிறைவேற்றிக்கொண்ட அரசியலமைப்பு நிர்ணயசபை, இன்று போல் அன்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்துவந்த நிலையிலேயே தனது பணியை முன்னெடுத்தது. 1971ல் இருந்து தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது. வெளியீட்டுச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்காக லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரசமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு சகல அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களும் உத்தரவு பெற்ற செய்தி அதிகாரிகளின் கீழ் கொணரப்பட்டது.

புதிதாக வரையப்பட்டுவந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் இலட்சணம், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நின்று, கூட்டரசாங்கத்துக்கு எதிராக தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) தொழிலாளர் செய்தி, கம்கரு புவத், இளைஞர் செய்தி ஆகிய பத்திரிகைகள் 1971ல் இருந்து ''சீல்'' வைக்கப்பட்டதன் மூலம் எல்லாவற்றுக்கும் மேலாக அம்பலமாகியது.

அன்று நவசமசமாஜக் கட்சியின் இன்றைய தலைமையானது சமசமாஜக் கட்சியினுள் பதுங்கிக் கொண்டு, 1971ல் ஆரம்பமான இளைஞர் படுகொலைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முழுமனதாக ஆதரவு வழங்கியதோடு, 1972 அரசியலமைப்புச் சட்ட நிறைவேற்றத்தின் பின்னணியில் இருந்துவந்த அவசரகாலச் சட்ட ஆட்சியின் பங்காளியாகவும் விளங்கியது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கான தமது தொண்டர் சேவையை எதுவிதமான குறைச்சலும் இன்றி இட்டு நிரப்பும் பொருட்டு, ஏப்ரல் கிளர்ச்சியின் எதிரில் இடைஞ்சல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரசின் ஆயுதப்படைகளுடன் கைகோர்த்துக்கொண்டு அலுகோசு வேலையில் இறங்கும் பொருட்டு, சமசமாஜக் கட்சித் தலைமையின் கீழ் அன்னம் படைப்பிரிவு (ஹங்ச றெஜிமேன்துவ) என்ற ஒன்றை அமைக்கவும் கூட கருணாரட்ன தலைமையிலான தற்போதைய நவசமசமாஜத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்த நிலைமையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரச படைகளின் முதுகெலும்பை நிமிர்த்தும் பொருட்டு, ஒடுக்கப்படும் இளைஞர்களை ஈடுபடுத்தி சங்கிலிப்படைகள் அமைக்கும்படி யூ.என்.பி.அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் நவசமசமாஜக் கட்சி பிற்காலத்தில் இந்த அலுகோசு வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுத்தது.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் ''மக்களின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை''யை ஊர்ஜிதம் செய்ய வாக்குறுதி அளித்து, பொதுமக்களின் மீது திணித்த 1972 பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முன்னுரையாக மற்றுமோர் நச்சுத்தனமான மசோதா நிறைவேற்றப்பட்டது. அது1972 ஏப்ரல் மாதத்தில் அதாவது, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு இன்னமும் ஒன்றரை மாதங்கள் இருக்கையில் நிறைவேற்றப்பட்ட "குற்றவியல் ஆணைக்குழு மசோதாவாகும்". முதலாளித்துவ நிறைவேற்று அதிகாரத்தின் நச்சுத்தனமான தடியடிகளால் நசுங்கி வந்தவர்கள் முதலாளித்துவ நீதிமன்றத்தின் எதிரில் முறைப்பாடு செய்து, நிவாரணம் கேட்க இருந்து வந்த கந்தலான உரிமையும் இந்த மசோதாவின் மூலம் பறிக்கப்பட்டது. தமது அரசியல் எதிரிகளை சுதந்திரமாக இழுத்துச் செல்லவும், கைகால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கவும் அரச படைகளுக்கும் அதிகாரிகளுக்கும் இதன்மூலம் எல்லையற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.

 

ஸ்டாலினிசத்தின் தொழிற்பாடு

1965-70 யூ.என்.பி. ஆட்சிக்காலப் பகுதியில், பிரமாண்டமான வாழ்க்கைச் சுமைகளால் நசுங்குண்டு வந்த மக்களிடையே பதட்ட நிலை அதிகரித்து வருகையில், தொழிலாளர்களை வார்த்தையாலங்களின் மூலம் வெறியூட்டி, ஸ்தம்பிக்க வைக்கவும் இளைஞர்களுக்கு கயிறு கொடுத்து முதலாளித்துவ பொறியில் மாட்டிவைக்கவும் ''கிளருங்கள் கிளருங்கள் கிளர்ந்து எழுங்கள்! நாட்டின் சகல புறத்திலும் கிளர்ந்து எழுங்கள்!" என்ற மோசடி சுலோகங்களைக் கோசித்துவந்த ஸ்டாலினிஸ்டுக்கள், 1972 அளவில் கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் புதிய இராகத்தை இசைக்கத் தொடங்கினர். அதாவது ''1970ல் மக்கள் வெற்றியை காப்பதற்கும் அதை முன்கொண்டு செல்வதற்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும்'' என்ற திருப்பத்தைப் போடுவதாகும்.

ஸ்டாலினிஸ்டுக்கள் இந்த மோசடி வேசம் போடப் பொருத்தமான விதத்தில், குற்றவியல் ஆணைக்குழு மசோதாவினை, ''ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முற்போக்கு வேலைக்கு இடையூறாக விளங்கும்" அரசாங்கத்தின் உள்ளேயான ஒரு சதிகாரர்களின் வேலையாக'' வருணித்தனர். அந்த சதி எனப்படுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க தொடக்கம் என்.எம்.பெரேரா, கெனமன் வரையிலான தமது மீட்சிக்கான தலைவர்கள் சகலரும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதைக் குறிப்பிடாமல் இருப்பதில் கவனமாக இருந்து கொண்ட ஸ்டாலினிஸ்டுகள், 1972 ஏப்ரல் 10ம் திகதி ''அத்த'' பத்திரிகையில் தமது முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் உரையின் அறிக்கையொன்றை குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தனர்:

''பொதுமக்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டுள்ள பிற்போக்காளர்கள் தமது இயக்கத்தை நடத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜக் பெரெரா, சமிபத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் ஆணைக்குழு மசோதாவை அதற்கு ஒரு உதாரணமாகக் காட்டினார்.''

ராவய, யுக்திய, தியச, பிரவாத போன்ற சஞ்சிகைகள் மூலமும் ஜே.வீ.பி.யின் பல்வேறு வெளியீடுகள் ஊடாகவும் சந்திரிகா குமாரதுங்காவை சிம்மாசனம் ஏற்றுவதற்கு வியர்வை சிந்தி இன்று களைத்துப்போயுள்ள தீவிரவாத போர்வை போர்த்தியுள்ள முதலாளித்துவக் கைக்கூலிகளும் இப்போது முரண்பட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளதைப் பேலவே, அந்தச் சகலரின் சார்பிலும் முன்கூட்டியே அன்று ஸ்டாலினிஸ்டுக்கள் குள்ளத்தனமான முறையில் கூச்சல் போடத் தொடங்கினார்கள். முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமான வழியில் இறங்கி, முதலாளித்துவ எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுவதைத் தவிர்க்கும் கடைகெட்ட மோசடிக்கு குறைந்த எதுவும் இன்று போலவே அன்றும் அந்த முறைப்பாட்டுக்குள் உள்ளடங்கியது கிடையாது. உருவாகியுள்ள 'துரதிஷ்டவசமான நிலையை ஆழமாக ஆய்வு செய்யும் பொருட்டு', அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்மேளனத்தை கூட்டிய ஸ்டாலினிஸ்டுக்கள், அன்று நிலவிய சூழ்நிலையை பற்றிய ஒரு சாராம்சத்தை, சம்மேளனம் நடைபெற்ற நாளான 1972 ஏப்ரல் 9ம் திகதி வெளியான அத்த பத்திரிகையில், 'பொது அரசியல் போராட்டத்தை தேர்ந்தெடுப்போம்' என்ற தலையங்கத்தின் கீழ் வெளியிட்டிருந்தனர்.

''ஐக்கிய முன்னணி பதாகையின் கீழ் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்ட பொது முற்போக்கு மக்களை போலவே, தொழிலாளர் வர்க்கத்தினது எதிர்ப்புக்கள் எதிர்பாராத விதத்தில் தகர்ந்து கொட்டி வருகின்றன... ஏகாதிபத்திய ஏழு கட்சிக் கூட்டை தோற்கடிக்க மனப்பூர்வமாக தொழிற்பட்ட மக்கள் பகுதியினர் இடையே விரக்தியும் வெறுப்பும் கொண்ட ஒரு தன்மை படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகிறது." (அத்த பத்திரிகை -1972 ஏப்ரல் 9) தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ ஆட்சியுடன் கட்டிப்போடும் புதிய சூழ்ச்சிகளின் துணையை நாட ஸ்டாலினிஸ்டுக்கள் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் பொது மக்களிடையே வளர்ச்சி கண்ட இந்த விரக்தியேயாகும். இந்தச் சூழ்ச்சிகள் மூலம் சிருஸ்டிக்கப்பட்ட நச்சு வாயுக்களின் பின்னணியில் இனவாத யுத்த திட்டமான 1972 அரசியலமைப்பு நிர்ணயம் சகலரதும் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் சென்றது.

இனவாத யுத்தத்தை உக்கிரமாக்கி பொதுஜன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, ஒரு அரசியல் தீர்வு கண்கட்டி வித்தையை முன்வைத்து, அதன் பின்னணியில் மக்களை இடுப்புவரை ஆணி அறையும் இன்றைய வேலைத்திட்டம், 1972 அரசியலமைப்புச் சட்ட நிர்ணயத்துடனும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. மீண்டும் அத்த பத்திரிகையில் இருந்து மேற்கோள் காட்டுவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுக்கள் அன்று அந்த நிலைமையை குறிப்பிட்ட விதத்தினைக் காட்டுவது பொருத்தமானது:

''இன்று இந்நாட்டின் விலைவாசி வேகமாக உயர்ந்து வருவதோடு இதனால் அரச, கூட்டுத்தாபன துறை ஊழியர்களும் நாட்டின் பொது மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. எனினும் அரச, கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் ஒரு சதத்தினாலும் அதிகரிக்கப்படவில்லை. ''(அத்த -1972 ஏப்ரல் 10)

இலவு காத்த கிளிகளைப் போல அன்று சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஜனநாயகத்தை பகிர்ந்து தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். அதற்குள் தலைகீழாக விழுந்த தீவிரவாதிகள் இன்று போலவே அன்றும் பொதுமக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கி, முதலாளித்துவ தாக்குதல்களுக்கு பலிகடாக்களாக்க செயற்பட்டனர்.

இந்த அரசியல் மூலோபாயங்களின் படிப்பினையை இன்றைய தலைமுறையினருக்கு வழங்குவதற்கு இலாயக்கான அமைப்பாக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே உள்ளது. அன்று சிறிலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் சகல மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கொள்கையின் வாரிசாக அது விளங்குவதே அதற்குக் காரணமாகும்.

தரப்படுத்தல்

இனவாத யுத்தத்தின் பேரழிவுகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் பொருட்டு தொடுக்கப்பட்ட ஆத்திரமூட்டல்கள் நிறைந்த 1972 சிங்கள-பெளத்த அரசியலமைப்புக்கு முன்னோடியாக, தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டினரையும் இளைஞர்களையும் ஆயுதப் போராட்டப் பாதையில் தள்ளிவிடும் மற்றொரு மாற்றமும் கூட்டரசாங்கத்தினால் செய்யப்பட்டது. அது 1971 பல்கலைக்கழக புகுமுக தகுதி தொடர்பாக மாணவர்கள் மீது திணித்த தரப்படுத்தலாகும். தரப்படுத்தலின் கீழ் ஒரே வினாப் பத்திரத்துக்கு விடையிறுக்கும் மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவதற்கான வாய்ப்பு தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் இரண்டினையும் சேர்ந்தவர்களுக்கு இரண்டு விதத்தில் வழங்கப்பட்டது. உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்கு நுழைவதற்கு தமிழ் தேசிய இனத்தின் மாணவர் ஒருவர் 1971ல் 400மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் 250 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டி இருந்த அதே வேளை, தெற்கில் சில பகுதிகளில் சிங்கள மாணவர் 229 புள்ளிகளை பெற்று அதை அடைய முடிந்தது. சிங்கள, தமிழ் மாணவர்கள் ஒரே ஆங்கில மொழியில் பதிலிறுத்த போதிலும் கூட, தமிழ் மாணவர்கள் இந்த இனரீதியான பாகுபாடுகளுக்கு உள்ளானார்கள். கண்களில் எதிரில் பளிச்சிட்ட இத்தகைய பாகுபாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் கூட இன்றுவரை நாளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற முன்னணி இனவாத கழிசடைகள் தமிழ் மக்களுக்கு இடம்பெற்றுள்ள விசேட அநீதிகள் என்ன என வெட்கமற்ற முறையில் கேள்வி எழுப்புகின்றார்கள்.

படித்த இளைஞர்களின் உயர் கல்வி உரிமைக்குத் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மெருகூட்டும் பொருட்டு, தமிழ் விடைத்தாள் திருத்துபவர்கள் தமிழ் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் காட்டி அதிக புள்ளிகள் வழங்கினர் எனக் கூச்சலிடப்பட்டது. பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் இந்தக் கரிபூசல்களுக்கு ஒரே குரலில் எதிர்பைத் தெரிவித்ததோடு விசாரணையை ஒன்றையும் நடத்தும்படியும் கோரினர். அதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட தமிழ், சிங்கள பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் கொண்ட கமிட்டி, அத்தகைய மேலதிக புள்ளிகளை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் புள்ளி வழங்கும் திட்டத்தின் கீழ் கிடையாது எனவும் ஆதலால், குற்றச்சாட்டு பொய்யானது எனவும் குறிப்பிட்டது. எனினும் இனவாதப் பாகுபாடுகள் காட்டும் தரப்படுத்தல் நின்று விடவில்லை.

1971க்குப் பின்னர், சிறப்பாக விஞ்ஞான பாடங்கள் தொடர்பாக பல்கலைக்கழக கல்வித் துறைகளில் தமிழ் மாணவர் எண்ணிக்கையை சிங்கள மாணவர்களுடன் ஒப்பிடுமிடத்து வேகமாக வீழ்ச்சி கண்டு சென்றது. 1972ல் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 63 வீதமாக இருக்க, தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை நுற்றுக்கு 33.6 வீதமாகியது. அது, 1973ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 67.4 வீதமாகவும் தமிழ் மாணவர் என்ணிக்கை 29.5 வீதமுமாக மாறியது. 1974ல் சிங்கள மாணவர் நூற்றுக்கு 75.4 வீதமாக தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 20.9 வீதமாகிற்று. 1975ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை 78 வீதம் வரை உயர்ந்த அதே வேளையில், தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 19 வீதத்துடன் நின்று கொண்டது. இனவாதிகளின் பிரச்சாரத்தின் பெறுபேறாக சிங்கள முதலாளித்துவ, மத்தியதர வர்க்க இளைஞர்கள் அதிகளவிலானோர் கொழும்பில் கற்றுக்கொண்டு ஊவா பிரதேசத்தில் இருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மோசடியின் கீழ் உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் ஏழை மக்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதனால் கிடைத்த வாய்ப்புக்கள் எதுவும் கிடையாது. முதலாளித்துவ சிறிலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் உருவான தரப்படுத்தலின் தாக்கம் காரணமாக வளர்ச்சி கண்ட தமிழ் ஒடுக்கப்படும் மக்களின் பதட்ட நிலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு, துப்பாக்கிகாரர்களாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருவோரும் இந்த பெரும்பான்மை ஏழை இளைஞர்களே.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமது மொழிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் இதுவரை காலமும் இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகள் நின்றுவிடும் என முதலாளித்துவ தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை. தமிழ் முதலாளித்துவத் தலைவர்கள் முதுகை வளைத்துக்கொண்டு, முதலாளித்துவ அமைப்பினுள் ஏதேனும் ஒரு மாயையை திணித்து, தமிழ் ஒடுக்கப்படும் மக்களை தூங்கச் செய்ய முயற்சித்தனர். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட கைவிட்டு விட்டு, சிங்களத்தையும் தமிழையும் வடக்கு-கிழக்கு நிர்வாக மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு கூட அரசியலமைப்பு நிர்ணய சபையினுள் அவர்கள் குழிபறிந்து போயினர். எனினும் அந்த சமரசத்தையும் கூட முதலாளித்துவ கூட்டரசாங்கம் நிராகரித்தது. முதலாளித்துவ பாராளுமன்ற விளையாட்டு தொடர்பாகவும் தமது தேசிய ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் மக்களிடையே வளர்ச்சி கண்டு வந்த எதிர்ப்பின் காரணமாக, அரசியலமைப்பு நிர்ணய நடவடிக்கைகள் ஆரம்பமாகி ஒரு ஆண்டின் பின்னர் -1971 ஜூனில்- அதில் இருந்து விலகிக் கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு செய்தது.

முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக நடிப்பதற்கும் இடையேயான முரண்பாடுகளுக்குள் தமிழரசுக் கட்சி அகப்பட்டுப் போய்க் கிடந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அரசியலமைப்பு நிர்ணய சபையை பகிஷ்கரித்து நிகழ்த்திய உரை இதை நன்கு தெளிவு படுத்தியது; ''விவாதத்துக்கு உள்ளாகியுள்ள பிரச்சனை தொடர்பாக உடன்பாட்டுடன் கூடிய ஒரு தீர்வுக்காக நாம் சமரசத்துக்கு விருப்புக் கொண்டுள்ளோம். அரசியலமைப்பில் சேர்க்கப்பட எமக்கு அவசியமாக உள்ள குறைந்த பட்ச உரிமைகள் பற்றி, பிரதமருக்கும் அரசியலமைப்பு விவகார அமைச்சருக்கும் நாம் தெரிவித்தோம். பிரதமருடன் அரசியலமைப்பு விவகார அமைச்சருடனும் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் சினேகபூர்வமாகவும் எமது கருத்துக்கள் ஆழமான கவனத்துக்கு உள்ளாகும் என தோன்றிய போதிலும் அடிப்படைப் பிரேரணைகளில் எந்தவிதமான திருத்தத்தையும் செய்ய அவர்கள் தயாராகவில்லை.''

 

ஆட்சியின் மூலோபாய மாற்றம்

உருவாகியுள்ள பொருளாதார, அரசியல் வேறுபாடுகள் மூலம் முதலாளித்துவ ஆட்சி ஒரு மூலோபாய மாற்றத்தை வேண்டி நின்றது. இது தமிழ் முதலாளித்துவ தலைவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாகியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய உலகப் பொருளாதார அமைப்பின் காவலாளி போல் விளங்கிய, தங்கத்துக்கும் டொலருக்கும் இடையேயான உத்தியோகபூர்வமான உறவு, 1971 ஆகஸ் 15ம் திகதி நீக்கப்பட்டது. இது முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய ரீதியிலான நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக்காட்டியது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இதன் தாக்கம் நேரடியானதாயும் திட்டவட்டமானதாயும் விளங்கிற்று. முன்னைய யூ.என்.பி. ஆட்சியின் கீழ் இடம்பெற்ற உதவி மானிய வெட்டுக்களுக்கு எதிராக, ''சந்திரனில் இருந்தென்றாலும் அரிசி கொணர்ந்து தருவோம்'' எனப் பொய் வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த கூட்டரசாங்கம், 1971 நவம்பரில் சமர்ப்பித்த இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் உணவு மானியத்தையும் நலன்புரி சேவைகளையும் வெட்டத் தொடங்கியது. உலக சந்தையில் எண்ணெய் விலை பன்மடங்காக அதிகரித்ததுடன் அரசாங்கம் வெளிநாட்டு செலாவணி தொடர்பாக பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தி வேகமாக வீழ்ச்சி கண்டு வந்ததோடு உணவு தட்டுப்பாடு பட்டினி மட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதனால் உருவாகும் பொதுமக்களது கொதிப்பை நசுக்குவதற்கான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்துக்கு அவசியப்பட்டது.

ஒடுக்கப்படும் மக்கள் தமது அவசியங்களின் பேரில் நடத்தும் போராட்டத்தில் அணிதிரளக் கூடிய ஒரு சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் தலை உயர்த்துவதையிட்டு ஆளும் வர்க்கம் எல்லையற்ற பீதி கொண்டிருந்தது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, 1964ல் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்து கொண்டார்களேயாயின், 1972 அளவில் அந்த கூட்டரசாங்க மூலோபாயம் சிதறுண்டு போய் வந்தது. பொது மக்கள் மீது சகிக்க முடியாத சுமைகளைத் திணிப்பது தொடர்பாக மக்களின் வெறுப்பு அன்று நிதி அமைச்சராக விளங்கிய என்.எம்.பெரேராவுக்கு எதிரானதாக விளங்கிற்று. இந்தக் குழிபறிந்துபோன முண்டுகளின் துணையோடு அதிகாரத்தைக் கொண்டிருப்பது இனி பெரும் சிக்கலானது என்பதை முதலாளித்துவ ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டு வந்தது.

கூட்டரசாங்க அரசியலில் எதிர்ப்புரட்சித் தன்மையை அரசியல் ரீதியில் இன்னமும் புரிந்து கொண்டிராது விடினும், சமசமாஜ-ஸ்டாலினிஸ்ட் தலைவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்கப் போட்ட முடிச்சுக்களை அறுத்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளும் பிரச்சாரங்களும் வெடித்துக் கிளம்பின. உடனடியாக 50 ரூபா சம்பள உயர்வு வழங்கும்படியும் குறுங்கால விடுமுறை வெட்டு, புகையிரத பருவச் சீட்டுக்களுக்கு விதித்த 30 மைல் கட்டுப்பாடு, வேலைத்தல உணவகம் ஆகிய சேவை நிலமைகள் வெட்டுக்களை நிறுத்தும்படியும் தொழிலாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கினர்.

அரசாங்க திணைக்களங்களை கூட்டுத்தாபனங்களாக மாற்றுவதை நிறுத்தும்படியும் அரச ஊழியர்களை 55 வயது கட்டாய ஓய்வுபெறச் செய்வதை நிறுத்தும்படியும் ஓய்வூதியத்தை சகல கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் உத்தரவாதம் செய்யும்படியும் கோரும் ஒரு தொகை கோரிக்கைகளை தொழிலாளர்கள் இதில் சேர்த்துக் கொண்டிருந்தனர்.

முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் ஆட்சிக்கும் முழுச் சவாலாக வெடித்துக்கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க அணிதிரள்வுகளைக் குழப்பத்தில் மூழ்கடித்து கலைத்துவிட தமக்கு 1964ல் இருந்துவந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஆளுமை சிதறுண்டு போய் விட்ட ஒரு நிலையில், தொழிலாளர்களுக்கு புதிய நச்சு வாயுக்களை ஏற்றுவதன் மூலம் அவர்களை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்பதை சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகள் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். எனவேதான் முதலாளி வர்க்கத்தின் பாதுகாப்புக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் பொதுஜன அடக்குமுறையையும் இலக்காகக் கொண்டே 1972 அரசியலமைப்புச் சட்ட வரைஞராக சமசமாஜ தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா விளங்கியமையும், அந்த அரசியலமைப்பின் முன்னணி பாதுகாவலர்களாக சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளை முதன்மையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் விளங்கியமையும் தற்செயலானது அல்ல.

 

துரோகத் தலைமைத்துவத்திற்கு எதிராக பு.க.க. போராட்டம்

முதலாளித்துவ அரச அடக்குமுறைக்கு இலக்காகி பொதுமக்களிடையே மிகவும் மதிப்பிழந்துபோனதன் காரணமாக, தொழிலாளர் வர்க்க புரட்சிகர முன்னணிப் படையணிக்கு, அன்று இன்னமும் சமசமாஜ-ஸ்டாலினிச அரசியலில் சார்ந்திருந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நனவான பகுதியினரை மக்கள் முன்னணி அரசியலில் இருந்து பிரித்து எடுக்கும் பணி புறநிலை ரீதியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அதற்கான பொருத்தமான பிரச்சார உபாயமாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ''சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறும் சோசலிச வேலைத் திட்டத்துக்கு அர்ப்பணம் செய்துகொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறும்'' நெருக்கும் இயக்கத்தை முன்னெடுத்தது. இது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை நிராகரித்து, இறுதியில் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதற்கு அர்ப்பணம் செய்து கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்களது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் தொழிலாளர் வர்க்கத்தை நனவான அரசியல் சக்தியாக அணிதிரட்டி, அதன் சிறந்த பிரிவினரை கட்சியின் பக்கம் வென்றெடுத்து, புரட்சிகர காரியாளர்களாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.

முதலாளித்துவ கூட்டரசாங்கம், தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்திற்கான பின்ணிடையை உருவாக்கி, தமது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய 1972 மே மாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமது பத்திரிகைகள் தடை செய்யப்பட்டிருந்த ஒரு நிலையிலும், அதிகாரம் பெற்ற பத்திரிகை அதிகாரியின் தணிக்கைக்கு உள்ளாக்கி பிரசுரங்கள் வெளியிடத் தள்ளப்பட்ட ஒரு நிலையிலும் கூட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அச்சிட்டு வெளியிட்ட பிரசுரத்தின் மூலம் ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசியல் முன்னோக்கை திடசங்கற்பத்துடன் வழங்கியது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:

"ஸ்டாலினிஸ்டுகள் இரண்டு கட்டப் புரட்சி மூலம் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை 'முற்போக்கு முதலாளித்துவ வர்க்கத்துடன்' ஒன்றிணைந்து ஆற்ற வேண்டும் என்ற உயிராபத்தான வர்க்க அவசியங்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தை கீழ்படுத்துகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் அடிப்படை உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முக்கிய தடையாக இருப்பது, இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிர்ப் புரட்சிக்கான கட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும் மக்கள் முன்னணி அரசியலேயாகும்.

''...சகல போராளிகளும் சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இருந்து பிரித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வல்லதும் முதலாளித்துவ சொத்துக்களை ஒழித்துக் கட்ட சபதம் பூண்டதுமான சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்களினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்தினை அமைக்க போராடும்படி நெருக்க வேண்டும்.

''முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களும் சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை எதிர்ப்பர். தொழிலாளர் வர்க்கத்தின் இழப்புக்களின் பேரில் முதலாளி வர்க்கத்தினை பாதுகாக்கும் அந்த துரோகிகளைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் இருந்து துரத்தி அடிக்கவும் நிஜ மாக்சிச தலைமையைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வெற்றி கொள்ள முடியும்.

"தொழிலாளர் வர்க்கத்தின் சகல போராளிகள் முன்நிலையிலும் இந்தப் பிரச்சனை உருவாகியுள்ளது. அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதில் இருந்து விடுபட்டு ஓடமுடியாது.''

இரண்டரை வருட காலங்கள் -1975 பெப்பிரவரி வரை- காங்கேசன்துறை இடைத் தேர்தலை நடத்துவதை நிராகரித்ததன் மூலம் 1972 முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் அரசியலமைப்பின் இனவாத யுத்த இலக்குகள் மேலும் வெளிச்சத்துக்கு வந்தன. நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பேரில் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தன்னும் வழங்காதிருப்பது ஆளும் வர்க்கத்தின் தீர்மானமாக விளங்கியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் இந்த முடிவுக்கு தோள் கொடுத்து வந்தனர்.

தம்மீது திணிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களின் எந்த ஒரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்காதிருப்பது சர்வாதிகார ஆட்சி முறையின் ஒரு இலட்சணமாகும். முதலாளித்துவ ஜனநாயகத் திரைமறைவில் பொது மக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தின் பாதையில் ஆளும் வர்க்கம் திரும்பியுள்ளமை இதன் மூலம் பிரபல்யமாகியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ பிரிவினைவாத அரசியலை நோக்கி அவர்களைத் தள்ளவும், இரத்தம் சிந்தும் இனவாத யுத்தத்தின் மூலம் அவர்களை நசுக்கித் தள்ளவும் அத்திவாரமிடப்பட்டது 1972ம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம், இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னராகும் என்பதை அது நிரூபிக்கின்றது.

இடைத் தேர்தலில் கருத்து வெளிப்பாட்டுக்கான சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதோடு மட்டும் நின்றுவிடாது இன்னும் நச்சுத்தனமான இனவாத நடவடிக்கைகள் பலவற்றை 1972-75 காலப்பகுதியில் முதலாளித்துவ கூட்டரசாங்கம் எடுத்தது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதை இலக்காகக் கொண்ட 1971ம் ஆண்டின் தரப்படுத்தல் கொள்கை மேலும் இனவாத அடிப்படையில் வலுப்படுத்தும் நடவடிக்கை 1972ல் இடம்பெற்றது. அப்போது க.பொ.த. (உயர்தர) விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பாக இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த செய்முறைப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டது. இந்தப் பிற்போக்கு நடவடிக்கையானது செய்முறைப் பரீட்சை முறை விஞ்ஞான கூடங்கள் இல்லாத கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அநீதியானது என்ற பிரச்சாரத்துடனேயே செய்யப்பட்டது. கிராமப்புறப் பாடசாலைகளில் நடைமுறையில் இருந்து வந்த கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றமான கற்பித்தல் முறைகளின் மட்டத்திற்கு தூக்கிநிறுத்தும் அவசியம் பற்றி எந்த ஒரு முதலாளித்துவப் பரிந்துரையாளரும் பேசியது கிடையாது. அதற்குப் பதிலாக அவர்கள் செய்தது எல்லாம், ஏழை பாடசாலைகளின் மட்டத்திற்கு ஏற்ற விதத்தில் கல்வி முறையை மாற்றியதேயாகும். பொது மக்களின் அவசியங்களை இட்டு நிரப்ப முடியாத முதலாளித்துவத்தின் சீர்திருத்தங்களை எதிர்பார்த்து நிற்கும் சகலரதும் பிற்போக்கு நடைமுறை இதன் மூலம் வெளியரங்குக்கு வந்தது. இன்று உலகளாவிய ரீதியில் இவர்கள் வடிக்கும் முதலைக் கண்ணீரானது "பொருளாதார அபிவிருத்திக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும்" உலகில் உள்ள மிகக் குறைந்த மட்ட சம்பளம் அனைத்து நாடுகளதும் சம்பள மட்டம் ஆக வேண்டும் என்பதாகும்.

தேசியவாத சீர்திருத்தங்களின் கூச்சல்காரர்கள் இன்று இத்திசையிலேயே பயணம் செய்து கொண்டுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான சீ.ஆர்.டி. சில்வா 1977ல் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தச் செய்முறைப் பரீட்சையை இரத்துச் செய்ததைப் பற்றிக் கூறியதாவது: "இந்த வேலைத்திட்டம் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு சம வாய்ப்புக்களை உத்தரவாதம் செய்வதாக அமைச்சு கூறினாலும், யாழ்ப்பாண தமிழ் மக்கள் இதனை விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் தாம் கொண்டிருந்த முன்னுரிமையை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு முயற்சியாகவே அர்த்தப்படுத்திக் கொண்டனர்". தமிழ் மக்களின் "அர்த்தப்படுத்தல்" 1977 அளவில் போதுமான அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டதை பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி சுட்டிக்காட்டியது.

1974ல் இடம்பெற்ற மற்றுமோர் பாகுபாடு, தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் மேலும் தீவிரமாக்கியது. அது பல்கலைக்கழக அனுமதியின் பேரில் அமுலுக்கு வந்த மாவட்ட கோட்டா முறையை ஏற்படுத்துவதாகும். இது பிராந்திய வாதத்தினையும் இனவாதத்தினையும் மேலும் கட்டவிழ்த்துவிடுவதாக இருந்தது. 1971 தரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி அதன் வாய்ப்பினை சிங்கள குட்டி முதலாளித்துவ தட்டினரின் கைகளில் ஒப்படைத்த போதிலும், இந்த வேலைத் திட்டத்தினால் பிராந்திய மற்றும் இனக்குழுக்கள் ஊக்கமடைந்து தலைநிமிர்த்தத் தொடங்கி இருந்தன.

இனவாதத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராக பாகுபாடு காட்டுதல் ஆரம்பமாகும் போது அதில் இருந்து ஏனைய இனக்குழுக்கள் இடையே உருவாகும் உயிர்காப்புப் பீதியினாலும், ஆரம்ப இனவாத பாகுபாடுகளால் அடைந்த நலன்களின் ஒரு பங்கினை பங்கிட்டுக் கொள்ளவும் ஒவ்வொரு வகையிலான முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் குழுக்களிடையே நாய்ச் சண்டை ஏற்படுவது இயற்கை.

முஸ்லீம் முதலாளித்துவக் கோரிக்கை

முஸ்லிம் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்த முதலாளித்துவத் தலைவரான பதியுதீன் முஹமது கல்வி அமைச்சராக இருந்து வந்த நிலைமையில், சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கிய இனவாதப் பாகுபாடுகள் மூலம், சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம் தட்டிக் கொண்ட வாய்ப்புக்களின் ஒரு பங்கு தமக்கும் வேண்டும் என பதியுதீன் முஹமதைச் சூழ முஸ்லிம் முதலாளிகள் அணிதிரண்டனர். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அடிப்படையில் இடம்பெற்ற தரப்படுத்தல், தமிழ் மூலம் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கு அநீதியானது என்பது அவர்களின் இனவாத விளக்கமாக விளங்கியது. தமிழ் மக்களிடையே பாகுபாடுகளுக்கு எதிராக வளர்ச்சி கண்டுகொண்டிருந்த எதிர்ப்பை நசுக்கும் பொருட்டு, தமிழ் மொழிபேசும் மக்களிடையேயும் மத அடிப்படையில் மேலும் பிளவை உண்டுபண்ணுவது வாய்ப்பானது எனக் கருதிய முதலாளித்துவ கூட்டரசாங்கம், உடனடியாக முஸ்லிம் கோரிக்கையின் நீதியைப் புரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சையாக பல்கலைக்கழக அனுமதிக்கு மாவட்டக் கோட்டா முறையை நடைமுறைப்படுத்தியது.

இந்த மாவட்ட கோட்டா முறையின்படி பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு, அந்தந்த மாவட்ட ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தமக்கு கூடுதலான வாய்ப்புகள் கிட்டும் என மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வசித்த முஸ்லிம் மக்கள் நினைத்தனர். கண்டிய சிங்கள இனவாதிகளும் இதே பேராசை பிடித்த நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் நிலைப்பாட்டில் பெரிதும் நாற்றம் கண்டது என்னவெனில், தம்முடைய பங்களிப்புடன் பிரஜா உரிமை இல்லாமல் ஆக்கப்பட்டவர்களும், எந்த விதமான கல்வி வசதிகளுக்கும் உரிமை கொண்டாடாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுமான தோட்டத்துறை தமிழ் மக்களின் எண்ணிக்கையும் தமது மாவட்ட ஜனத்தொகையுடன் சேர்க்கப்பட்டு அதன் மூலம் மாவட்ட கோட்டா முறையின் கீழ் கூடுதல் வாய்ப்புக்களை திரட்டிக்கொள்ளலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த எந்த ஒரு நடவடிக்கையும் தமிழ் மக்களுக்கு பாகுபாடு காட்டும் இலக்கில் இடம்பெறவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு விசேடமான அநீதி எதுவும் இடம்பெறவில்லை எனவும் கூறுகையில், நளின் டி. சில்வா மற்றும் குணதாச அமரசேகர தலைமையிலான இனவாத கழிசடைகள், தாம் குருடர்கள் என்பதை காட்டிக்கொள்வது மட்டுமன்றி, முதலாளித்துவ அமைப்பின் கையாட்களாக இவர்கள் ஸ்திரமாக கூறுவது என்னவெனில், வறிய மக்கள் மீதான உண்மையான பற்றினுள் மூழ்கிப்போயுள்ள முதலாளிகள், சமூக நியாயங்களுக்காகவே இதை செய்தனர் என்றாகும். இந்நடவடிக்கையின் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தை குட்டிகளுக்கு கிடைத்த நிவாரணம் எத்தகையது? இதை நன்கு அறிந்தோர் அந்த மாகாண மக்களே. தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இனவாத யுத்த மட்டத்தை நோக்கி வளர்ச்சி கண்டதற்கு சமாந்தரமாக, கிராமப்புற இளைஞர் படுகொலைகள் மற்றும் டயர் தீச்சுவாலைகளுடன் துப்பாக்கி வேட்டுக்களும் தீப்பிளம்புகளும் புறப்பட்ட விதத்தையும அறிந்தோர் அவர்களே. இதற்கிடையே இனவாத பிணந்தின்னும் காக்கைகள் வடக்கிலும் தெற்கிலும் கொலைக்குப் பலியானவர்களின் பிணங்களை சுற்றி வளைத்துக்கொண்டு கரைந்தன. பல்கலைக் கழகங்களுக்குள் நுழைவது மட்டுமல்ல, பாடசாலை கல்வியைக் கூட ஒழுங்குமுறையாக கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்காது, அரச படைகளில் அலுகோசு வேலைகளில் இறக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு இட்டுச் செல்லப்படுவதன் மூலம் கொலைக்கு உள்ளாகும் அல்லது தெற்கில் இளைஞர் படுகொலைகளுக்கு இலக்காகும் எந்தவொரு இளைஞனைப் பற்றித் தன்னும் எந்தவிதமான அனுதாபமும் இந்த இனவாத பிணந்தின்னி காக்கைகளுக்கு கிடையவே கிடையாது.

கல்வித்துறைகளிலான பாகுபாடு மூலம் பின்தங்கிய சிங்கள மக்கள் பகுதியினரிடையே ஆர்வத்தைத் தூண்டிவிட்ட ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்டு கூட்டரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்த தாக்குதல்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுத்தது.

1974 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் யாழ்ப்பாண நகரம் விழாக்போலம் பூண்டிருந்தது. அது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாகாநாட்டின் பேரில் இடம்பெற்றது. பல்வேறு நாடுகளிலும் வாழும் பரந்த அளவிலான தமிழ் புத்திஜீவிகள் கலந்து கொண்ட இம்மாகாநாட்டினை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஒரு கெளரவமாகக் கொண்டனர். சிறப்பாக இந்நாட்டு தமிழ் மக்களின் கலாச்சார, கல்வி உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் இடம்பெற்ற இந்த மாகாநாடு அம்மக்களிடையே ஒரு பலம் வாய்ந்த ஆர்வத்தை துளிர்விடச் செய்தது. யாழ்ப்பாண நகரம் கலாச்சாரக் காட்சிகளால் நிறைந்திருந்தது.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 19ம் திகதி மாலை, பொதுமக்கள் அணிதிரண்டிந்த ஒரு பொதுக் கூட்டம் இடம்பெற்றது. முதலாளித்துவ கூட்டரசாங்கம், பொலிசைப் பயன்படுத்தி செய்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு அதை ஒரு தருணமாக்கிக் கொண்டது. பொலிசார் திடீரென ஆகாயத்தில் வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்கினர். பொதுமக்கள் கிலிகொண்டு ஒடத் தொடங்கினர். மின்சாரக் கம்பி வயர்களில் பட்ட துப்பாக்கிச் சூட்டில் அறுந்து போன வயர்கள், ஓடிய மக்கள் மீது விழுந்தன. இதனால் ஒன்பது பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

இது உண்மையில் பிற்காலத்தில் யூ.என்.பி. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டு நடாத்திய வாக்குச் சீட்டுக் கொள்ளைக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் பெறுமதிமிக்க நூல் நிலையத்தினைச் சாம்பலாக்கி ஆத்திரமூட்டும் யுத்த நடவடிக்கைகளுக்கு முன்நடவடிக்கையாகியது. இதனை முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பொலிசார் நடத்தினர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக

இனவாத யுத்த தீச்சுவாலைகளை மூட்டுவதற்கு ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்ந்து வந்த வேலைகள் தோட்டத்துறை தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமோர் கட்டத்தை எட்டியது.

1974 ஜனவரி 29ம் திகதி கைச்சாத்தான ஸ்ரீமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் மூலம் மேலும் 75,000 தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த தீர்மானம் செய்யப்பட்டது. 1964 ஸ்ரீமா -சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்ட 525,000 பேருடன் இந்தப் புதிய தொகையும் சேர்க்கப்பட வேண்டும். 1964 மாபெரும் காட்டிக்கொடுப்பின் கீழ் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்த சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் புதிய நடவடிக்கைகளையும் ஒருமனதாக அங்கீகரித்தன.

1949 குடியுரிமை மசோதாவின் மூலம், மலைநாட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவாத சிங்கள முதலாளித்துவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், முழுத் தமிழ் மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்ட வழிசமைத்துக் கொடுத்தது என்பதை தமிழ் மக்கள் இத்தருணத்தில் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். ஆதலால் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள் ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தத்தை தமக்கு எதிராக உக்கிரமடையும் இனவாத தாக்குதலின் ஒரு பாகமாக புரிந்து கொண்டிருந்தனர்.

இந்தத் தமிழ் பொதுஜன அபிப்பிராயம், அன்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக விளங்கியதைப் போலவே இன்று தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ தலைமை கொண்டிருந்த கருத்துக்கும் முரண்பட்டதாக விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கை, ஸ்ரீமா-இந்திரா உடன்படிக்கைக்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் கூறியதாவது: அது "நாடற்றவர் என்ற அவல நிலையில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை விடுவிப்பதாகும்" என்றது.

தமிழ்நாட்டு முதலாளிகளதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் சிங்கள இனவாத ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாக வடக்கில் கச்சதீவினை இலங்கைக்கு வழங்க முன்வந்ததும் இந்தத் தருணத்திலேயேயாகும்.

கடலில்போகும் மீனவர்களின் ஒரு தற்காலிக ஓய்வுக்களமாக மட்டுமே இது பயன்பட்டது. மக்கள் குடியிருப்பு இல்லாத இந்தக் காட்டுத் தீவை இலங்கைக்கு எழுதிக் கொடுத்தமையை, முதலாளித்துவக் கூட்டரசாங்கம் ஒரு மாபெரும் வெற்றியாகக் காட்டிக் கொண்டது. 1948ல் மலர்க் கொத்துக்களைச் சார்த்தி பெற்ற சுதந்திரம் எனப்பட்டது, ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளிகளும் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக சிருஷ்டித்த ஒரு சதியாகியதைப் போலவே, கச்சதீவு வெற்றியும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவப் பிடி தொடர்ந்தும் நீடிப்பதற்காக இனவாதக் குத்துவெட்டல்களைத் தூண்டிவிடும் பிற்போக்குத் திட்டத்தின் ஒரு பாகமே தவிர வேறொன்றும் அல்ல. பின்னர் இனவாத யுத்தப் பிளம்புகளின் மத்தியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மீனவர்களைத் தண்டிக்கவும் சித்திரவதைக்கு உள்ளாக்கவும் ஒரு சுவர்க்கமாக கச்சத்தீவு எல்லையை பாவிக்கின்றமை இதை நன்கு நிரூபித்துள்ளது.

இத்தகைய துன்பகரமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருந்தாலும், கச்சதீவு வெற்றி முதலாளித்துவ கூட்டரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் ஆழமான கேலிக்கூத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்தது.

உலக நிலைமையின் பாரதூரமான மாற்றம்

சீர்திருத்தவாத சமசமாஜக் கட்சித் தலைவர்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தை திணித்தபோது இருந்த வந்த உலக நிலைமை இன்று பாரதூரமான விதத்தில் மாற்றம் கண்டுவிட்டது. யுத்தத்தின் பின்னைய உலக ஏகாதிபத்திய அமைப்பின் எதிரில் தலைகுனிந்து, நான்காம் அகிலத்தின் சுயாதீன புரட்சிகரப் பணியை நிராகரித்த பப்லோவாதத்தின் கைத்தேங்காயாகச் செயற்பட்ட சமசமாஜக் கட்சியும் அதன் தலைமையும், முதலாளித்துவம் அதனது அடிப்படை முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டது என்ற மாயையில் மூழ்கி இருந்தன. இந்த மாயைக்கு இணங்க கணக்குப் போட்டுக் கொண்ட இவர்கள், ட்ரொட்ஸ்கிச அனைத்துலக் குழுவுக்கு எதிராக, சோசலிசத்தின் ஊடாகப் பாராளுமன்றப் பாதை ஒன்றும், முதலாளிகளை இடதுபக்கம் (இடதுசாரிகளாக) தள்ளிச் செல்லும் சந்தர்ப்பமும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டனர்.

இந்த மார்க்சிச எதிர்ப்பு, ஸ்டாலினிச சார்பு நப்பாசைகள் 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையேயான மதிப்பு தொடர்பான உடன்பாடு சிதறுண்டு போனதாலும் அதன் பெறுபேறாக, சகல பொருட்களின் விலைகளும் அவ்வாறே சிறப்பாக எண்ணெய் விலையும் பன்மடங்கால் அதிகரித்ததாலும் தோன்றியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் பதுங்கிக் கொண்டு, இந்த உலக முதலாளித்துவ நெருக்கடியை பொதுமக்களின் கண்களில் இருந்து மூடி மறைக்க தலைகீழாக நின்று வந்தனர். அது முக்கியமாக அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதி சமர்ப்பித்த உலக சோசலிச முன்நோக்கிற்கு எதிராக இடம்பெற்றது.

மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தினை எந்த விதத்திலும் புரிந்து கொண்டிராத சமசமாஜக் கடசித் தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா, தாம் கலாநிதிப் பட்டத்தை தீட்டிக்கொள்ள சார்ந்திருந்த கீன்சியன் (Keynesian) பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய கீன்ஸ் ஆகிவிட முயற்சித்தார். கீன்சின் கோட்பாடுகளின்படி ஸ்தாபிதம் செய்யப்பட்ட பிரெட்டென்வூட்ஸ் ஒப்பந்தம் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையே சிருஷ்டித்த நிலையான உறவு வீழ்ச்சி கண்டுள்ள நிலைமையில், கடதாசி தங்கத்தை (paper gold) அங்கீகரிக்கும் ஒரு அர்த்தமற்ற கோட்பாட்டை அவர் முதலாளித்துவ உலகுக்கு முன்வைத்தார். எந்தவொரு பொறுப்புள்ள முதலாளித்துவப் பொருளியலாளரும் அவரின் வழித்தடுமாற்றம் நிறைந்த கோட்பாட்டுக்கு இணக்கம் காட்ட முன்வந்ததில்லை. ஆதலால், அது சமசமாஜ தலைமை அலுவலகத்திலும் முதலாளித்துவ கூட்டரசாங்க தஸ்தாவேஜுக்களிடையேயும் மீண்டும் தலையெடுக்க முடியாத விதத்தில் புதையுண்டு போயிற்று.

அர்த்தமற்ற அது வெடித்துச் சிதறுண்டு போனதன் பின்னர், சமசமாஜக் கட்சி தலைவர்களும் கதியற்றுப் போன கூட்டரசாங்கமும் இலங்கையில் எண்ணெய் தோண்டும் முயற்சியில் தொங்கினர். இதற்குப் பெரும் ஊக்கமாக கச்சதீவு வெற்றி பறைசாற்றப்பட்டது. ஸ்டாலினிச கம்யூனிஸட் கட்சி உடனடியாக சோவியத் யூனியனில் இருந்து எண்ணெய் அகழ்வாராய்ச்சி நிபுணர்ளைத் தருவித்துக் கொண்டு இந்தச் செப்படி வித்தைக்கு மேலும் கோலங்கள் போட்டது.

எனினும் இந்த மோசடி 'சந்திரனில் இருந்து அரசி எடுத்துத் தருவோம்' என கூட்டரசாங்கம் 1970 பொதுத் தேர்தலில் வழங்கிய பொய் வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைவானது அல்ல. இப்போது அவர்கள் கச்சதீவின் நாற்புறமும் உள்ள மணல்களைத் தோண்டி எண்ணை எடுப்பதாக நாடுபூராவும் அலைந்து வாக்குறுதி அளித்தனர்.

இந்தப் பொய்யளப்புக்களின் பின்னணியில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக தொடுக்க ஆரம்பித்திருந்த இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனம் விளங்கியது. இந்த எண்ணெய் வளத்தை குழி தோண்டி புதைக்கும் கொடூரமான இயக்கமே தமிழ் மக்களின் எதிர்ப்பு இயக்கம், என்ற மிகைப்படுத்தல் அந்த இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பொய் வாக்குறுதிகளால் கவரப்பட்ட பொது மக்களை தட்டுத் தடுமாற வைத்த இன்றைய நவசமசமாஜ கட்சித் தலைவர்கள் உட்பட சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகளின் அங்கத்தவர்களில் எவரையும் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமையாக எவரும் பெயர் குறிப்பிட முடியுமா? இந்தப் பிரச்சினைக்கான பதிலை சகல வர்க்க நனவுள்ள தொழிலாளியும் ஒடுக்கப்படும் மக்களும் இளைஞர்களும் தீர்க்கமான முறையில் மனம் கொண்டாக வேண்டும்.

பிற்போக்கு, இனவாத 1972 அரசியல் அமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றியமையும் அதன் அடிப்படையில் தொடுத்த இனவாத யுத்த நடவடிக்கைகளையும் அங்கீகரித்த சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், பொது மக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கும் பொருட்டு இழைத்த சகல வேலைகளுக்கும் இன்று பொதுமக்களே நட்டஈடு கொடுக்க நேரிட்டுள்ளது. 1940 களில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் எதிராக ஈவிரக்கமற்ற முறையில் போராடி கட்டி எழுப்பிய அரசியல் உருவத்தை, 1964 காட்டிக்கொடுப்பின் பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் பங்குதாரர்களாக மாறியதன் மூலம் அவமானத்திற்கு உள்ளாகிய சமசமாஜ கட்சித் தலைவர்கள், 1975ல் வரட்டிப் பாண் கடையாகியது ஒன்றும் புதுமை அல்ல.

1975ல் சிறிமாவோ பண்டாரநாயக்க, சமசமாஜ தலைவர்களுக்கு சவால் விடுத்து, அதே ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தால் நினைவு தினக் கூட்டத்தில், அந்தத் தலைவர்கள் செவல பண்டாவின் பிற்போக்கு உருவத்தை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டிய போது, அது பெரும் புதுமையான சம்பவமாகியது. அத்தருணத்தில் கூட்டரசாங்க அரசியலின் கீழ் பொது மக்கள் மத்தியில் சமசமாஜக் கட்சித் தலைவர்களின் உருவமே அவமானத்திற்கு உள்ளாகி இருந்தது என்பதை முதலாளித்துவ ஆட்சியாளர் என்ற வகையில் நன்கு அறிந்தே அவர் இந்த சவாலை விடுத்தார். முதலாளித்துவ சார்பு சந்தர்ப்பவாதத்தினுள் சேடம் இழுக்கும் அளவுக்கு தலைமூழ்கிப் போயிருந்த சமசமாஜ தலைவர்கள் அநாதை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமது உருவத்தை எப்பாடுபட்டேனும் குறைந்தபட்சம் ஒரு சில அமைச்சர் பதவிகளையும் அவற்றைச் சுற்றி குந்தி எழும்பும் வயிற்றுமாரி கொசு கும்பல்களின் வயிற்றுப்பிழைப்பையும் கணக்கில் கொண்டு, பிரதமரிடம் மன்னிப்புக் கோரியேனும் அரசாங்கத்தில் தொங்கிக்கொள்ள சமசமாஜ தலைமைப் பீடத்தில் கொல்வி. ஆர். டி. சில்வா பிரேரித்தமையும் ஒரு பரிதாபகரமான முயற்சியாகியது. சமசமாஜ கட்சிக்குள் இருந்துகொண்டே அத்தருணத்தில் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் அணிதிரண்டிருந்த வாசுதேவ நாணயக்காரவும் இந்த நரித் தந்திரத்தை அங்கீகரித்தமையும் பின்னர் அம்பலத்திற்கு வந்திருந்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் கம்பீரமாகத் தோன்றினாலும் தேசியவாத சந்தர்ப்பவாதத்தில் தலைமூழ்கி சீரழிந்து போனமைக்காக நல்ல படிப்பினை இந்த பரிதாபகரமான சந்தர்ப்பத்துக்குள் பொதிந்து போயுள்ளது.

See Also :

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 1: இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

பகுதி 3: யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

பகுதி: 4: 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

பகுதி 5 : 1983 கறுப்பு ஜூலை

பகுதி 6 : இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது