World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush's "victory" visit to Iraq meets with contempt and protest

ஈராக்கிற்கு புஷ்ஷின் "வெற்றி" வருகை இழிவையும் எதிர்ப்பையும் சந்திக்கிறது

By Bill Van Auken
16 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் போரின் தோற்றங்களை பல ஆண்டுகளாக கட்டுப்படுத்த விழைந்த புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு பின்னர், ஞாயிறன்று ஒரு ஈராக்கிய செய்தியாளர் அரபுலகம் முழுவதும் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு எதிர்ப்புச் செயல் மூலம் நிலைமையை மாற்றிக் காட்டினார்.

பாக்தாத்தின் பிர்டோஸ் சதுக்கத்தில் இருந்த சதாம் ஹுசைனின் சிலையை திரைக்குப் பின்னிருந்து கீழே இறக்கியதில் இருந்து USS ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து "பணி முடிக்கப்பட்டது" என்று கூறிய உரையை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதியின் விமானம் இறங்கியது வரை, டோவர் விமானத் தளத்தில் இருந்து சவப்பெட்டிகள் இறக்கப்படுவதை செய்தி ஊடகம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று விதித்திருந்த தடை வரை, புஷ் நிர்வாகம் இடைவிடாமல் ஈராக்கில் அமெரிக்கப் போரின் நிகழ்வுகளை திரித்தும் உற்பத்தி செய்தும் கொடுத்து வந்தது.

இப்போரின் கொள்ளை மற்றும் குற்றம் சார்ந்த தன்மையை மூடிமறைப்பதுதான் எப்பொழுதும் இலக்காக இருந்தது; மேலும் எண்ணெய் அமெரிக்க உலக மேலாதிக்கம் என்ற உண்மைகளைவிட ஜனநாயகம், சுதந்திரம் வழங்குதல் போன்ற பொய்ப் பிரச்சாரங்களும் அதைச் செயல்படுத்துவதற்காக போலிக் காரணங்களைக்கூறி போரை தொடக்க வேண்டும் என்ற இலக்கும் உருவாக்கப்பட்டது.

இந்த முயற்சி ஓரளவு தற்காலிக வெற்றியைக் கண்டது என்றால் அதற்குக் காரணம் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் கொடுத்த தீவிர உதவியாகும். "சிதைத்தல், அரை-உண்மைகள், சில நேரம் அப்பட்டமான பொய்களையும் பரப்புவதில் அமெரிக்கச் செய்தி ஊடகமும் துணை நின்றன" என்று புஷ்ஷின் முன்னாள் செய்திப்பிரிவு செயலரான ஸ்கொட் மக்கிளெல்லனே விவரித்திருந்தார். (See "Ex-Bush spokesman: White House fed war propaganda to a ‘complicit' media").

இப்பொழுது ஒரு ஈராக்கிய செய்தி ஊடக உறுப்பினர் ஒரு தைரியமான எதிர்ப்புக் காட்டும் செயல்மூலம் நிலையை மாற்றியுள்ளார்; இதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் பற்றிய அடிப்படை உண்மையை காட்டுகிறது. இந்தத் தோற்றம் நீண்ட காலம் இருக்கும்.

இந்த செய்தியாளர் அல் பாக்தாதியா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூத்த நிருபரான முன்ததார் அல் ஜைதி ஆவார். ஒரு கட்டுப்படுத்த முடியாத சீற்றத்தினால் அவர் முதலில் தன் இரு காலணிகளில் ஒன்றையும் பின்னர் மற்றொன்றையும் ஞாயிறன்று நடந்த ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தலையைக் குறிவைத்து வீசினார்.

தன்னுடைய இச்செயலை புரிகையில், ஈராக்கிய பண்பாட்டில் மிக இழிந்த அடையாளத்தை செய்கையில், அல் ஜைதி அரபு மொழியில் உரக்கக் கூச்சலிட்டார்: "இதுதான் ஈராக்கிய மக்களிடம் இருந்து விடைகொடுக்கும் முத்தமாகும், நாயே. ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள், அங்குள்ள விதைவகள் அனாதைகளிடம் இருந்து இது வருகிறது."

தன்னுடைய நாட்டிற்கு ஆறாண்டு காலமாக நடைபெற்று வரும் அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகளால் அடைந்த சீற்றத்தின் தன்னிச்சையான வெடிப்புத்தான் இவருடைய நடவடிக்கை என்று இந்த 28 வயது நிருபரை அறிந்த பலர் கூறுகின்றனர். பல சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்ட பாக்தாத் புறநகரான ஷியா சேரிப்பகுதியில் இருக்கும் சதர் நகரத்தில் அமெரிக்க குண்டுவீச்சை பற்றி தகவல் திரட்டும்போது அவர் ஆழ்ந்து பாதிப்பிற்குட்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு காலகட்டத்தில் அவர் எந்தக் காரணமும் இல்லாமல் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த எதிர்ப்பு ஈராக்கிய பிரதம மந்திரி நூரி அல் மாலிகி ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தி மாநாட்டில் புஷ் தன் கருத்துக்களை கூறி முடித்த உடன் வந்தது; இரு நாட்டுத் தலைவர்களும் Stastus of Forces Agreement SOFA எனப்படும் படைகளின் நிலைப்பாடு பற்றிய உடன்பாடு என்பதில் கையெழுத்திட்டிருந்தனர்; இதில் அனைத்து அமெரிக்கப் படைகளும் 2011 ஐ ஒட்டி திரும்பப் பெறப்படும் என்று உள்ளது. மேலும் ஒரு "மூலோபாய வடிவமைப்பு உடன்பாடும்" கையெழுத்தாயிற்று; புஷ்ஷின் சொற்களில் அது "எமது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, தூதரக, பண்பாட்டு, பாதுகாப்புப் பிரிவுகளில் நட்பு, ஒத்துழைப்பு உறவுகளை முறையாக்கியது.'

இந்த உடன்பாட்டுக் கையெழுத்திடல் பிரச்சார நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது; ஏனெனில் கடந்த மாதம் வாஷிங்டன் சார்பில் அமெரிக்கத் தூதர் ரியன் கிரோக்கர் ஏற்கனவே ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டார். இந்த நிகழ்ச்சி நிர்வாகத்தால் அதன் கடைசி நாட்களில் பேரழிவு கொடுத்த அதன் ஈராக் போரை "வெற்றி", நாடு "பாதுகாப்பாக உள்ளது" என்று காட்டும் வகையில் நடத்தப்பட்ட மற்றும் ஒரு முயற்சி ஆகும்.

முந்தைய வருகைகளை போலவே புஷ் ஈராக்கிற்குள் முந்தைய அறிவிப்புக்கள் ஏதும் இல்லாது நுழையும் கட்டாயத்திற்கு உட்பட்டார்; அமெரிக்க தளங்கள் பகுதிகள் என்று மிக அதிகமான பாதுகாப்பு இருக்கும் இடத்தில்தான் அவர் நுழைய முடிந்தது. நிகழ்ச்சி நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க, ஈராக்கிய பாதுகாப்புப் பிரிவினரால் பல முறை சோதனைக்கு நிருபர்கள் உட்படுத்தப்பட்டனர்.

தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கையில் உடன்பாடுகள் "நாம் போராடிக் கொண்டிருக்கும் வருங்காலத்திற்கு, மத்திய கிழக்கின் இதயத்தானத்தில் ஒரு வலுவான, திறமையான ஜனநாயக ஈராக் சுதந்திரம் மற்றும் சமாதானத்திற்கு ஒரு சக்தியாக விளங்குவதற்கு" அரங்கு அமைப்பாக இருக்கும் என்று புஷ் தெரிவித்தார். "இன்னும் போர் முடியவில்லை" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

ஈராக்கிய பாதுகாப்புப் படைகள் அல் ஜைதியை தரையில் விழுத்தி போரிட்டு அவரை கூட்டத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்றனர். அடுத்த அறையில் நிருபர் மிருகத்தனமாக அடிக்கப்பட்ட ஒலிகளுக்கு நடுவே புஷ்ஷும் மாலிகியும் தொடர்ந்து பேசினர்.

"ஒரு பெண்மணி போல் அவர் அழும் வரை அவர்கள் அவரை உதைத்து அடித்தனர்" என்று Dawa கட்சிக்கு சொந்தமான அபக் தொலைக்காட்சி நிலையத்தில் நிருபர் மகம்மத் டேஹர் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

புஷ்ஷும் அமெரிக்க செய்தி ஊடகத்தின் பிரிவுகளும் ஈராக்கில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள "சுதந்திரத்தின்" நிரூபணம்தான் இந்த நிகழ்வு என்ற முறையில் கதை கூறியுள்ளன; மேலும் சதாம் ஹுசைன் காலத்தில் இவ்வாறு எவர் செய்திருந்தாலும் உடனே கொல்லப்பட்டிருப்பார் என்றும் அவை கூறியுள்ளன.

ஆயினும்கூட அல் ஜைதி எங்கு உள்ளார், எப்படி இருக்கிறார் என்பது இன்னமும் வெளியிடப்படவில்லை. விசாரணைக்காக அவர் இருத்தப்பட்டுள்ளார் என்ற அறிக்கையை ஈராக்கிய ஆட்சி வெளியிட்டு, காலணிகளை தூக்கியெறியுமாறு எவரேனும் அவருக்கு பணம் கொடுத்தார்களா என்பதை நிர்ணயிக்க முற்படுவதாகவும் கூறியுள்ளது.

கெய்ரோவில் இருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும், அல்-ஜைதியின் அல் பாக்தாதியா தொலைக்காட்சி நிலையம், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"ஈராக்கிய மக்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ள ஜனநாயகம், சுதந்திர வெளிப்பாடு இவற்றின் வழியில் எங்கள் நிருபர் முன்டதர் அல் ஜைதி உடனடியாக ஈராக்கிய அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அல்-பாக்தாதியா தொலைக்காட்சி கோருகிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"முன்தாகருக்கு எதிரான எந்த நடவடிக்கையும் சர்வாதிகாரி காலத்தில் நடத்தப்பட்ட வன்முறை, நினைத்தவரை கைதுசெய்தல், ஏராளமானோரை கொன்று கல்லறைகளில் தள்ளியது, மக்களுடைய சுதந்திரங்களை பறிமுதல் செய்தது ஆகியவற்றைத்தான் நினைவுறுத்தும்" என்று அது தொடர்ந்து எழுதியுள்ளது.

"அவருடைய உயிர் பாதுகாப்பு குறித்து அஞ்சுகிறோம்" என்று நிலையத்தின் நிகழ்ச்சிகள் இயக்குனரான முஷிர் அல்-காபாஜி கூறினார்; வாடிக்கையான நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு பல முறையும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டதுடன், அமெரிக்கப் போரினால் ஏற்பட்ட பேரழிவுகள் பற்றிய வீடியோ காட்சிகளும் அவற்றைக் கண்டிக்கும் பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு பின்னர் புஷ், "அந்த நபர் எதற்காக இதைச் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்மையிலேயே காரணம் புரியவில்லை என்றால், ஈராக்கில் இருக்கும் மக்கள் அனைவரும் அப்படித்தான் என்று கூறுவதற்கு இல்லை; இன்னும் சொல்லப்போனால் அரபு உலகம், உண்மையில் இப்பூகோளம் அனைத்திலும் அவ்விதமேதான் என்று கூறலாம்.

ஈராக்கிய மக்கள் மில்லியன் பேருக்கும் மேலானவர்களின் உயிரைக் கொடுத்த தூண்டுதலற்ற போர்தான் "காரணம்"; இப்போர் 2 மில்லியன் ஈராக்கியர்களை காயப்படுத்தியதுடன் 4 மில்லியன் மக்களை நாடுவிட்டு நீங்கும்படி அல்லது உள்நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலையை கொடுத்ததுடன் ஒரு சமூகத்தின் முழுத் தன்மையையும் வீணடித்துள்ளது.

அல் ஜைதாவின் சகோதரர் திர்காம் செய்தி ஊடகத்திற்கு விளக்கியபடி, "ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள பாக்தாத்தில் இருந்து தகவல் கொடுக்கும்" என்று எப்பொழுதும் செய்தியை முடிக்கும் நிருபர் தன் நாட்டிற்கு அமெரிக்கர்கள் தொடுத்த போரை வெறுத்து, அமெரிக்க இராணுவம் நிலைநிறுத்தப்பட்டது மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மதகுருக்களின் சக்தியான பிற்போக்குத்தன ஷியாவின் எழுச்சியையும் வெறுத்தார். "அமெரிக்கா ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தியுள்ளதை எந்த அளவிற்கு வெறுத்தாரோ அதே போல் ஈரானிய அறநெறிவகையிலான ஆக்கிரமிப்பையும் அவர் வெறுத்தார்" என்று திர்காம் கூறினார்.

ஈராக்கிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்ரா நகரத்தின் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்; அவர்களில் பலர் காலணிகளை தூக்கி அசைத்துக் காட்டியதுடன் அல்-ஜைதி விடுவிக்கப்பட வேணடும் என்ற கோஷ அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். அமெரிக்க கொடிகள் எரிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நிருபரின் நடவடிக்கை பற்றிய களிப்பைக் காட்டியது போலவே மாலிகி ஆட்சியின்கீழ் அவருக்கு கொடுக்கப்பட்ட அடி, உதைகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பும் ஆகும்.

தெற்கில் பாஸ்ராவிலும் நஜப்பிலும் இதே போன்ற எதிர்ப்புக்கள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன; பிந்தைய இடத்தில் எதிர்ப்பாளர்கள் பாக்தாதில் இருந்து வந்த தகவல்களால் ஊக்கம் பெற்ற முறையில் பாதையைக் கடந்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவ ரோந்து வாகனத்தின்மீது காலணிகளை வீசினர்.

பெரும்பாலான அரபு நாடுகளில் செய்தித்தாட்கள் புஷ்ஷிற்கு எதிரான எதிர்ப்புக்களை முக்கியமாக எடுத்துரைத்தன; தொலைக்காட்சி நிலையங்கள் நிருபர் அமெரிக்க ஜனாதிபதி மீது காலணிகளை வீசிய ஒளிநாடாப் பதிவை பல முறையும் போட்டுக் காட்டின.

செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஈராக்கியர்களும் அப்பகுதி முழுவதும் இருக்கும் மக்களும் நிருபருக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

"நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் புஷ்ஷை எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அது பிரதிபலிக்கிறது" என்று 35 வயதான போலீஸ்காரரான மகம்மத் அல்-ஹிலி கூறினார். "எங்களுடைய அரசாங்கத்திற்கு எங்களிடம் இருந்து வேறுபட்ட அணுகுமுறையும் நம்பிக்கையும் உள்ளது. திரு முன்டடர் ஒரு வீரர் என்று சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்; அவர் எங்கள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் பிரதம மந்திரியாகவேனும் இருக்க வேண்டும். அல் மாலிகிக்குப் பதிலாக ஒரு உண்மையான ஈராக்கியர், திரு முன்டடர் வரவேண்டும்."

"பல தேசிய பிரிவுகளை சேர்ந்த ஈராக்கியர்கள் அனைவரும் இச்செயல் பற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று ஆண்டவன் மீது சத்தியம் செய்வேன்" என்று 45 வயதான Yaareb Yousif Matti என்னும் வடக்கு நகரமான மோசூலை சேர்ந்த ஆசிரியர் கூறினார்.

பாலஸ்தீனிய மேற்கு கரையான நப்லஸில் 48 வயதான டாக்டர் வாபா கயத், அல் ஜைதியின் செயலை "மக்களை கொலை செய்தல் அவமானப்படுத்துதல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்ற செய்தியை புஷ்ஷிற்கும் அனைத்து அமெரிக்க கொள்கை இயற்றுபவர்களுக்கும் தெரிவிக்கிறது" என்றார்.

ஜோர்டானில் சமீர் டாப்லத் என்னும் 42 வயது வணிகர், அந்நிருபரை "அரேபிய தலைவர்கள் செய்ய முடியாததை செய்து காட்டிய... ஒரு மனிதன்" என்று பாராட்டினார்.

காலணிகள் வீசப்பட்டது பற்றிய விவாதங்கள் தொடர்கையில், புஷ் கையெழுத்திட வந்திருந்த உடன்பாடுகள் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி கூறியவை நடக்காது என்பதற்கான வலுவான அடையாளங்கள்தான் வந்துள்ளன; மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடித்து தொடர்வதற்கான அரங்கு அமைக்கப்படுகிறது போல்தான் தோன்றுகிறது; அதே போல் பாக்தாத் ஆட்சி அமெரிக்காவில் ஒரு வாடிக்கை அரசாங்கமாக இருக்கும் என்பது முறைப்படுத்தப்பட்டது போல் உள்ளது. (See "Security agreements mean Iraq occupation will continue to 2012 and beyond")

சனிக்கிழமைன்று பேசிய ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதி ஜேனரல் ரே ஒடீர்னோ அமெரிக்க ஈராக்கிய SOFA, ஜூன் 30ம் தேதி அனைத்து அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கிய நகரங்களில் இருந்து திரும்பப் பெறப்படுவதற்கான காலக் கெடு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அத்தேதிக்கும் அப்பாலும் படைகள் தொடர்ந்திருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

"இந்த மாறுதற்கால ஆண்டை கடக்க உதவும் வகையில் அங்கு போதுமான படைகள் நிறுத்தப்படுதல் முக்கியமானது" என்று கூறிய ஒடீர்னோ, "நாம் அங்கு பல முன்னேற்றப் பாதையில் சென்றுள்ள நிலையில் பின்னடைவு ஏற்படும் விதத்தில் ஒரு நடவடிக்கையும் கூடாது" என்றும் தெரிவித்தார்.

ஈராக்கிய நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கூட்டு இராணுவத் தளங்களில் அமெரிக்க துருப்புக்கள் "பயிற்சி கொடுத்து, ஆதரவளிக்கும் பங்கை" தொடரும் என்று ஒடீர்னோ குறிப்பிட்டார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் பிரதம மந்திரி நூரி அல் மாலிகியின் அலுவலகம் உடன்பாட்டின் விதிகள் மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஒப்புக் கொண்டார்: "தேதியை அல்லது விதிகளை தேவையானால் நாம் மாற்றிக் கொள்ளலாம்." ஆனால் அமெரிக்கப் படைகள் நகரங்களில் தொடர்வது பற்றிய ஒடீர்னாவில் கணிப்புக்களை "பக்குவமடையாதவை" என்று அவர் அறிவித்தார்.

கடந்த வாரம் ஈராக்கிய அரசாங்க செய்தி தொடர்பாளர் அலி அல்-டப்பாக் வாஷிங்டனில் கூறிய கருத்துக்களை அடுத்து எழுந்த விவாதத்தை அடுத்து இந்தக் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது; அப்பொழுது அவர் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு பாக்தாத் 2011 என்ற காலக் கெடுவை நீடிக்க தயார் என்றும், ஈராக்கிய பாதுகாப்புப் படைகள் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு நாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கணித்துக் கூறியிருந்தார்.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் மாலிகி தன்னுடைய எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டு டப்பாக் "தன்னுடைய சொந்த கருத்துக்களை கூறியுள்ளார் என்றும் அது ஈராக்கிய அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கவில்லை" என்றும் தெரிவித்தார்.

மொக்தாதா அல்சதருக்கு விசுவாசமாக இருக்கும் பாராளுமன்ற முகாம், SOFA வை எதிர்த்திருந்தது, இந்த அறிக்கைகள் வாஷிங்டன் மற்றும் மாலிகி ஆட்சி கூறும் கருத்துக்களுக்கு பின் இருக்கும் உண்மையை அம்பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளது.

"அமெரிக்க படைகள் அடுத்து கோடையில் திரும்பச் செல்லாது என்றும் எமது கருத்தைத்தான் இது உறுதிபடுத்துகிறது, அவர்கள் 2011க்கு முன்பு ஈராக்கை விட்டு நீங்க மாட்டார்கள்" என்று சதார் முகாமில் செய்தித் தொடர்பாளரான அஹ்மத் அல்-மசூதி, வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார். "இந்த உடன்பாடு பற்றி அரசாங்கம் வெற்றுத்தனமாக பேசியுள்ளது என்று ஈராக்கியர்கள் கண்டறிவர்."

அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வது என்பது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவின் வரவிருக்கும் நிர்வாகத்தின் கொள்கையையுடனும் முற்றிலும் இயைந்துள்ளது; சமீபத்திய வாரங்களில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கில் "எஞ்சிய படைகளாக" நிறுத்தி வைக்கப்படும் என்றுதான் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.