World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Joschka Fischer demands German combat troops be sent to southern Afghanistan

ஜொஸ்கா பிஷ்ஷர் ஜேர்மன் போரிடும் துருப்புக்களை தெற்கு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப கோருகிறார்

By Stefan Steinberg
6 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

முன்னாள் வெளியுறவு மந்திரியும் பசுமைக் கட்சியின் முன்னனி உறுப்பினருமான ஜொஸ்கா பிஷ்ஷசர், தெற்கு ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் துருப்புக்களை (Bundeswehr) ஈடுபடுத்துவதற்கான உக்கிரமான விவாதத்திற்கு, Die Zeit நாளிதழில் தனது வாராந்திர கருத்துபந்தியை பயன்படுத்தி இருக்கிறார்.

தற்போது ஆப்கானிஸ்தானில், முப்பதேழு நாடுகள் இடம் பெற்றிருக்கும் நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப்படைக்கு ஆதரவாக மூன்றாவது மிகப் பெரியளவலான படைகளை (சுமார் 3,200 படையினர்) ஜேர்மன் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ஜேர்மன் படையினர், பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் மற்றும் பொதுமக்கள் ஆதரவு திட்டங்களில் முதன்மையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஓரளவு அமைதியான வடக்கில் ஜேர்மன் இராணுவம் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் (ISAF) பிராந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது. அசாதாரண சூழநிலைகளில் அதன் கூட்டாளிகளுக்கு அவசர உதவிகளை வழங்க ஜேர்மன் இராணுவம் தெற்கு ஆப்கானிஸ்தானில் தலையிடுவதை தற்போதைய பாராளுமன்ற தீர்மானம் அனுமதித்துள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணியில் (1998-2005) வெளியுறவு மந்திரியாக இருந்த பிஷ்ஷர், முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கு எதிரான நேட்டோ யுத்தத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் முதல்முதலாக ஜேர்மன் துருப்புகளை வெளிநாட்டில் தலையீடு செய்வதை நடைமுறைப்படத்துவதில் முக்கியமானவராவார். தற்போது அவர் ஒருபடி மேலாக சென்று, தெற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சி படைகளுக்கு எதிராக கொடூரமான இரத்தம் தோய்ந்த யுத்தத்தை நடத்துவதில் அமெரிக்க துருப்புக்களுக்கு உதவியாக ஜேர்மன் இராணுவப் பிரிவுகளை அனுப்பக் கோரி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜேர்மன் இராணுவத்திற்கு ஜேர்மன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் எதிர்ப்பு உள்ளதை பேர்லினில் உள்ள பெரிய கூட்டணி (சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன்-SPD,CDU,CSU) அறிந்திருந்தும், தெற்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் துருப்புக்களை அது ஈடுபடுத்த அமெரிக்க மற்றும் கனடா அரசாங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கையை எதிர்க்காமல் இருக்கிறது.

தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் யுத்தத்திற்கு" வெளிப்படையாக ஒத்துழைக்க கூட்டணியின் அரசாங்கத்தின் நிலையை மாற்ற நேரடியாக ஆளுமை செலுத்த முயல்வதை, Die Zeit இல் குறிப்பிட்டுள்ள பிஷ்ஷரின் சமீபத்திய முறையீடு வெளிப்படுத்துகிறது. பிஷ்ஷரின் இந்த நிலை, சமீபத்திய தங்கள் பேட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத் துருப்புக்களை அனுப்புவதை தவிர ஜேர்மன் அரசாங்கத்திற்கு வேறெந்த வழியும் இல்லை என வாதிட்டிருந்த இரண்டு முன்னாள் ஜேர்மன் இராணுவ ஜெனரல்களான கிளவுஸ் நெளவ்மான், ஹெரால்ட் கூஜாட் ஆகியோருடன் சேர்த்து இவரை முன்னிலையில் நிறுத்துகிறது. அதே நேரத்தில் பிஷ்ஷரின் இந்த அழைப்பினால், தெற்கில் ஜேர்மன் துருப்புக்களை நிறுத்துவதில் உள்ள ஆபத்துக்களை முன்னிறுத்தி எச்சரிக்கின்ற SPD-CDU-CSU பாராளுமன்ற குழுக்களின் கூடிய பெரும்பான்மையையும் மற்றும் சுதந்திர சந்தைக்கான தாராளவாத ஜனநாயக கட்சியையும் (FDP) வலதுபக்கத்தில் இருந்து தாக்குகின்றார்.

கடந்த வாரம், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இராபர்டு கேட்ஸ், தெற்கிற்கு யுத்த துருப்புக்களை அனுப்ப தவறியமைக்காக அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணிகளை விமர்சிக்க, வழக்கில் இல்லாத கொடூரமான மொழியை பயன்படுத்தி இருந்தார். கூடுதலாக 3,200 துருப்புக்களை கோரி, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி பிரன்ஸ் யோசெப் யுங் இற்கு நேரடியாக அனுப்பப்பட்ட கேட்ஸின் கடிதம், ஜேர்மனியுடனான அமெரிக்காவின் அதிருப்தியை வலியுறுத்தும் ஒரு வெளிப்பாடாகக் கருதப்பட்டது.

கடந்த வெள்ளியன்று அவசரமாக கூட்டப்பட்ட ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் துருப்புக்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு இருப்பதை நியாயப்படுத்தி கூறும் போது, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி கேட்ஸின் கோரிக்கையை நிராகரித்தார்: "நாம் நம் கவனத்தை வடக்கு ஆப்கானிஸ்தானில் இருத்த வேண்டிய தேவை உள்ளது." என அவர் தெரிவித்தார். உதவிக்கான கேட்ஸின் கோரிக்கை மீதான யுங்கின் நிராகரிப்பானது, அதே நாளில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரியும் மற்றும் துணை அதிபருமான பிரங்க்-வால்ட்டர் ஸ்ரைன்மையர் (SPD) ஆலும் வழிமொழியப்பட்டது.

அதிபர் அங்கேலா மேர்க்கெலின் (CDU) செய்தி தொடர்பாளரான உல்றிச் வில்கெல்ம், ஆப்கானிஸ்தானில் தற்போதைய ஜேர்மன் படைகளில் மாற்றம் ஏற்படுத்த "எவ்வித யோசனையும் தற்போது இல்லை" என அறிவித்தார். மேலும் அவர் கேட்ஸின் கோரிக்கையையும் நிராகரித்தார். அவரின் உரை முழுவதிலும், தற்போதைய படையின் அளவை பற்றி "விவாதிப்பதற்கான வாய்ப்பேதுமில்லை" - அதுவே அரசாங்கத்தின் "உறுதியான நிலையாகும்" என்பதை அதிபர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக வில்கெல்ம் தெளிவுபடுத்தி இருந்தார்.

அதிபர் மேர்க்கெலுக்கு தமது சொந்த மேல்முறையீட்டை அளித்ததன் மூலம் ஜொஸ்கா பிஷ்ஷர், அமெரிக்காவின் கோரிக்கை மீதான ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட மறுப்புக்கு பதிலளித்திருந்தார். தீவிர யுத்தத்தின் பின்னணியிலும் மற்றும் தெற்கில் அமெரிக்க மற்றும் கனடா துருப்புகளின் அதிகரித்துவரும் இழப்புகளுக்கு மத்தியிலும், "களத்தில் வெற்றி அல்லது தோல்வி" என்பதே ஆப்கானிஸ்தானின் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் தான் "நேட்டோவின் மிகமுக்கிய எதிர்காலம்" அடங்கி இருக்கிறது என்றும் Die Zeit இல் பிஷ்ஷர் விவாதிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "சிலகாலமாக நிலமட்டத்தின் கீழ் கொதித்துக்கொண்டிருக்கும் முரண்பாடுகள் இன்று மேல்மட்டத்திற்கு வருகையில் ஆப்கானிஸ்தானின் ஒரு தோல்வி ஏற்படுமாயின் அதற்கான முக்கிய பொறுப்பாக ஜேர்மனி நோக்கப்படும் அபாயம் இருக்கிறது." என அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் கூட்டு நடவடிக்கை தோல்வியடையுமானால், அதன் விளைவாக ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை பாரதூரமான பாதிக்கப்படும் என பிஷ்ஷர் தொடர்ந்தார். ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் நடவடிக்கைகளுக்கு தாயகத்தில் மிகவும் எதிர்ப்பு இருக்கிறது என்பதையும் மற்றும் அந்நாட்டின் தெற்கில் ஜேர்மன் போரிடும் துருப்புகளின் ஒரு புதிய நடவடிக்கைக்கு ஜேர்மன் பாராளுமன்றத்தின் புதிய உத்தரவு தேவைப்படுகிறது என்பதையும் பிஷ்ஷர் ஒத்துக் கொண்டார்.

பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவது போன்ற பணிகள் அதிபரிடமே தங்கியுள்ளது என பிஷ்ஷர் விவாதிக்கின்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், தொடர்ந்து ஊசலாடும் இந்த பிரச்சனையை மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது, நேரடியான தலைமை மற்றும் அவரின் ( அதிபரின்) விடாநம்பிக்கையை எடுத்துக்காட்டுவதின் மூலம், அதிபர் இந்த பரந்த மக்கள் எதிர்ப்பை தாண்டி மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் நடக்கும் இரத்தந்தோய்ந்த யுத்தத்தில் ஜேர்மன் படையினர் பங்கு பெறுவதை உறுதிப்படுத்த அவரின் பாராளுமன்ற கூட்டாளிகளின் தடுமாற்றத்தையும் சமாளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இது ஜேர்மன் இராணுவவாதத்தின் தெளிவான குரலன்றி வேறொன்றுமில்லை. ஒரு போரிடும் படையாக செயலாற்றும் ஜேர்மன் இராணுவத்தின் பங்களிப்புக்கு இருக்கும் பொதுமக்களின் அதிருப்தியை போக்குவதற்கான மத்திய அரசியல் தலைமைக்காக, முன்னனி இராணுவ வல்லுனர்களின் மற்றும் முன்னாள் ஜெனரல்களின் ஒன்றிணைந்த பிரச்சாரத்தின் எதிரொலிப்பாக இது இருக்கிறது. ஜேர்மன் துருப்புக்கள் யுத்தத்தில் இரத்தம் தோயவேண்டும் என்பதுடன் தாயகம் திரும்பும் சவப்பைகளின் காட்சியை ஜேர்மன் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் துருப்புக்களின் பிரசன்னத்திற்கு ஜேர்மனிக்குள் வலுத்து வரும் மாபெரும் எதிர்ப்பை ஜேர்மன் அரசாங்கம் எதிர்நோக்கி நிற்கிறது. இந்த சிக்கல்கள் அனைத்தையும் Financial Times Deutschland ஒரு சமீபத்திய கட்டுரையில் பட்டியலிட்டிருந்தது:

"ஒருபக்கம், ஆப்கானிஸ்தானுக்கு ஜேர்மன் அளித்து வரும் உள்நாட்டு ஆதரவும் நழுவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் துருப்புக்களுக்கான யோசனைகள் மீது மூன்றில் இரண்டு பங்கு குடிமக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. மற்றும் ஒரு முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் அதிபர் ஹெல்முட் ஷ்மித்தின் முன்னனி ஆதரவாளரான கிளவுஸ் போலிங், அதுவொரு தேவையற்ற கொலைக்களம் எனக் குறிப்பிட்டு படைகளை பின்வாங்குமாறு கோரியுள்ளார். அவர் படைகளை திருப்பிப் பெறவும் வலியுறுத்தினார். ஜேர்மன் இராணுவம் ஒலிவ் நிற (இராணுவ) உடையணிந்த வெறும் தொழில்நுட்ப உதவிப்படையாக மட்டும் செயல்பட முடியாது என்பது மிகவும் வெளிப்படையாகையில், அதன் மீதான விமர்சனங்களும் கடுமையாகும்."

பரவலான பொதுமக்கள் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டு, அமெரிக்க மற்றும் கனடாவின் அழுத்தத்தின் மீது ஜேர்மன் அரசாங்கத் தலைவர்களின் அடிபணிய விருப்பமின்மையானது, ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடத்துவதில் நேட்டோ கூட்டில் உள்ள ஐரோப்பிய உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டத்தையும், அத்துடன் மத்தியகிழக்கு முழுவதும் அமெரிக்க கொள்கைகள் மீதான அதன் பெரியளவிலான அதிருப்தியையும் எடுத்துக்காட்டுகிறது.

அதே சமயத்தில், ஜேர்மன் துருப்புக்களை தெற்கு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதன் மீதான ஜேர்மன் அரசாங்கத்தின் எதிர்ப்பானது தனது சொந்த ஏகாதிபத்திய கொள்கையின் பகுதியாக இராணுவ பலத்தை பயன்படுத்துவது தொடர்பான எவ்வித விருப்பமின்மையுடனும் தொடர்புடையதன்று. இந்த பெரிய கூட்டணி அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அதன் செயல்பாடுகளை அதிகரித்து வருகின்ற வேளையில் அதன் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் நேட்டா உயர்மட்டத்தின் கட்டளைகளை கண்மூடித்தனமாக பின்பற்ற அது தயாராக இல்லை.

அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் தெற்கில் ஜேர்மன் துருப்புக்களை உள்ளாக்கும் கேட்ஸின் சமீபத்திய கோரிக்கையை நிராகரித்து அது தெளிவுபடுத்திய போது, ஆப்கானிஸ்தானில் விரைவு தாக்குதல் படை (QRF) என அழைக்கப்படுவதை நிறுவ நேட்டோவின் அழைப்பிற்கு ஜேர்மன் பதிலளிக்க வேண்டும் என ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி தெளிவுபடுத்தினார். ஜேர்மனி 250 விரைவு அதிரடி துருப்புக்களை அனுப்பும் என்பதையே இந்த போக்கு எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் இந்த கோடையில் திரும்பிப் பெற்றுக் கொள்ளப்பவுள்ள நோர்வே படைகளுக்கு பதிலாக மஜர்-இ-ஷெரீப் பகுதியில் நிறுத்தப்படுவார்கள்.

தற்போது வரை, ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மன் துருப்புக்களை பங்களிப்பை இராணுவ பயிற்சி மற்றும் உள்நாட்டு மறுசீரமைப்புக்கு உதவி வழங்கும் ஒரு படையாக பயன்படுத்தி வருகிறது, ஆனால் விரைவு அதிரடிப்படை செயல்பாடுகளுக்கு பொறுப்புகளை ஏற்பது என்பது ஜேர்மனியின் தலையீட்டில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என அது ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தது. வடக்கிலுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் மற்றும் அந்நாட்டில் கடத்தலில் ஈடுபடுபவர்களை கையாள்வதில் துருப்புக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் என்பது விரைவு அதிரடிப்படை தீர்மானங்களில் உள்ளவைகளில் ஒரு சான்றாகும்.

அரசாங்க செய்தி தொடர்பாளர் மற்றும் பாதுகாப்பு மந்திரி யுங்கின் வலியுறுத்தல்களுக்கு எதிர்மாறாக, ஒரு உயர்மட்ட பயிற்சி பெற்ற விரைவு அதிரடிப்படையின் விஷேட படையினரை வடக்கிற்கு அனுப்புவது என்பது யுத்தத்திற்கு ஆட்களை அனுப்புவது என்பதாகும். மேலும் அதன் மூலம் தற்போது பாராளுமன்ற தீர்மானங்களின் வரையறையை மீறுவதாகும்.

இதுவுமல்லாமல், ஆளும் கூட்டணியானது அதன் இராணுவ பிரசனத்தை ஆப்கானிஸ்தானில் அதிகரிப்பதற்கான கவனமான நிலைப்பாடானது முன்னாள் வெளியுறவு மந்திரி பிஷ்ஷருக்கு போதுமானதாக இல்லாதுள்ளது. Die Zeit இல் பிஷ்ஷரின் கட்டுரையில், ஆப்கானிஸ்தான் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான "ஐரோப்பிய விருப்பமின்மையை" அவர் விமர்சித்ததுடன், பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் முக்கிய ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே ஏற்படும் பிரிவுகளின் அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கிறார்.

பிஷ்ஷரின் கருத்துப்படி, ஐரோப்பாவின் சொந்த இராணுவப்படைகளின் முன்னேற்றங்களை உறுதிப்படுத்த ஜேர்மனி, பிரான்சு மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று முக்கிய ஐரோப்பிய சக்திகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சில காலங்களுக்கு முன்னால், ஜேர்மனி முக்கிய பங்கு வகிக்கும் ஒருங்கிணைந்த ஐரோப்பிய இராணுவத்தின் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் தேவையைக் குறித்து பிஷ்ஷர் வலியுறுத்தி இருந்தார். அது அமெரிக்க இராணுவ சக்திக்கு சாத்தியமான ஒரு முக்கிய எதிர்கால மாற்று சக்தியாகவும் அமையும் என பிஷ்ஷர் குறிப்பிட்டிருந்தார்.

ஒருங்கிணைந்த ஐரோப்பிய வெளியுறவு கொள்கை மற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஐரோப்பிய இராணுவப்படையின் மேம்பாட்டிற்கான பிஷ்ஷரின் தொடர்ச்சியான முறையீடுகள் அனைத்தும் அவர் ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக இருந்த போது கிடைத்த அவரின் சொந்த அனுபவங்களில் இருந்து பெறப்பட்டவையே ஆகும். 1998ல் யூகோஸ்லாவாயாவில் ஜேர்மனியின் தலையீட்டுக்கு வழிவகுத்ததற்கு அப்பால், ஆப்கானிஸ்தானுக்கு ஜேர்மன் படைகளை அனுப்புவதிலும் பிஷ்ஷர் ஒரு முக்கிய பங்கு வகித்தார். 2001ல், அவர் பீட்டர்ஸ்பேர்க் மாநாட்டிற்கு தலைமை தாங்கியபோது, அது அமெரிக்க அரசாங்கத்திற்கு கால்வருடியாக சேவை செய்யும், இடைக்கால ஆப்கான் அதிகாரத்தின் தலைமையை ஹமீத் கார்ஸாயிற்கு பெற்றுத் தந்தது.

பசுமைக் கட்சியின் ஒரு நீண்ட கால தலைவராக இருந்து அமைதிவாத பாணியிலான அரசியலில் இருந்து ஜேர்மன் இராணுவ நலன்களினதும் மற்றும் ஜேர்மன் முதலாளித்துவத்தின் மிகவும் தீவிரமான பிரிவுகளின் ஒரு குரலாக மாறியுள்ள பிஷ்ஷரின் மாற்றம் முன்னாள் தீவிரவாதிகள் மற்றும் பசுமைக்கட்சி செயல்பாடுகளின் ஈடுபட்டிருந்த ஒரு முழுப்பிரிவினரினதும் அரசியல் பரிணாமத்தின் அடையாளமாக இருக்கிறது.

1999ல், ஒரு புதிய மனிதப்படுகொலையை (Holocaust) தடுக்கும் தேவையின் அடிப்படையாக யூகோஸ்லாவியா மீதான தாக்குதலை பிஷ்ஷர் நியாயப்படுத்தினார். பின்னர், "அமைதி மற்றும் ஜனநாயகத்தை" பரப்புவதாகக் கூறி ஆப்கானிஸ்தான் மற்றும் கொங்கோ மீதான ஜேர்மன் தலையீட்டை நியாயப்படுத்தினார். தற்போது, ஆளும் ஜேர்மன் பிரிவினரின் மூலோபாய நலன்களுக்கு சார்பாக பிஷ்ஷர் வெளிப்படையாக பேசுகிறார் என்பதுடன், ஒரு புதிய ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைக்கு ஜேர்மன் இளைஞர்களின் வாழ்வை அபாயத்திற்குள்ளாக்க மிகவும் விருப்பமுடன் தயராகிவிட்டார்.

இது போன்றதொரு முன்னெடுப்புக்கு உள்ள எதிர்ப்பின் அளவினை பிஷ்ஷர் உணர்ந்திருந்த போதிலும், பழைமைவாத ஜேர்மன் அதிபரை தனது ''தலைமையை'' காட்டும்படி அழைப்பதுடன், யுத்தத்திற்கு எதிரான பரந்த பொதுமக்களின் கருத்துக்கு எதிராக மட்டுமல்லாது ஜேர்மன் இராணுவத்தின் நடவடிக்கைக்கான தற்போதைய பாராளுமன்ற தீர்மானத்தை பாதுகாப்பவர்களையும் எதிர்க்கும்படியும் அழைப்பு விடுக்கிறார். ஆப்கான் யுத்தம் குறித்த பிஷ்ஷரின் சமீபத்திய கருத்துக்கள் ஜனநாயக செயல்முறை மற்றும் பரந்த மக்கள் விருப்பங்கள் மீதான அவமதிப்பாக அமைந்திருக்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கு உறுதிப்படுத்துவதற்கான ஒரு ''வலிமையான அரசுக்கு'' ஆதரவளிக்க தயாராகி இருக்கும் ஒரு தீவிரவாத தட்டுக்களின் பெயரில் அவர் தற்போது பேசி வருகிறார்.