World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Bhutto assassination heightens threat of US intervention in Pakistan

பூட்டோவின் படுகொலை பாக்கிஸ்தானில் அமெரிக்க தலையீட்டு அபாயத்தை அதிகரிக்கின்றது

By Bill Van Auken
29 December 2007

Use this version to print | Send this link by email | Email the author

அதன் முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பாக்கிஸ்தானில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அவரைக் கொலை செய்தவர்கள் பற்றிய அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் இரண்டையும் பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாஷிங்டன் மற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகம் இரண்டும் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஏற்ற வகையில் நடந்த நிகழ்வை பற்றி இணைந்து ஒரு தொகுப்பை கொடுத்துள்ளன.

எந்த விதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல், இக்குற்றம் அல் கொய்தாவால் நடத்தப்பட்டது என்று கற்பித்துக் கூறப்பட்டுள்ளது, அதேவேளை, பூட்டோவே தன்னுடைய நாட்டில் ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும், அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போரிலும்" ஒரு தியாகியாக பிரகடனப்படுத்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்பின் அரசாங்கம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல விதங்களிலும், இந்த "உத்தியோகபூர்வ தகவல்" பற்றி வினா எழுப்புவதற்கு தக்க காரணங்கள் உள்ளன.

இந்த மறுப்பதற்கு இடமில்லாத சோக நிகழ்வை இப்பகுதியில் அமெரிக்க மூலோபாய நலன்களைத் தொடர்வதற்கு ஒரு புதிய நியாயப்படுத்தும் காரணமாக மாற்றுவதுதான் இதன் வெளிப்படையான நோக்கம் ஆகும். படுகொலைக்கு முந்தைய வாரத்தில், அமெரிக்க இராணுவ சக்திகள் ஏற்கனவே பாக்கிஸ்தானுக்குள் இயங்கி வருவதாகவும் அத்தகைய நடவடிக்கைகளை கணிசமாக பெருக்குவதற்கான தயாரிப்புக்கள் நடந்து வருவதாகவும் நிறைய தகவல்கள் வந்துள்ளன.

இந்தக் கட்டத்தில் படுகொலையை செய்தவர் எவர் என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை. ஜனாதிபதி முஷாரப்பின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசாங்கம் ஒரு "அல் கொய்தா தலைவர்" கொலை நடத்தியதற்காக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த தொலைபேசி அழைப்பைக் குறுக்கிட்டுக் கேட்டதாக தகவல் கொடுத்துள்ளது. ஆயினும் முந்தைய அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பொறுப்பு எடுத்துக் கொண்ட வலைதளங்கள் பூட்டோ கொலை பற்றி அதே போல் எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து பூட்டோ எப்படி இறந்தார் என்ற வினாவும் உள்ளது. நிறைய நேரில் பார்த்தவர்களின் சாட்சியப்படி, ஒரு குண்டுவெடிப்பு ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெரிதும் குழப்பத்தை ஏற்படுவதற்கு முன் அவர் சுடப்பட்டார் என்று தெரிவிக்கும்போது, பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சரகம் மூன்று முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது: முதல் தகவல் அவர் கழுத்தில் ஒரு தோட்டா காயத்தினால் இறந்தார் என்றது; இரண்டாவது தகவலின்படி அவர் வெடித்தகுண்டில் இருந்து வந்த கூர்மையான பகுதியில் இருந்து அவர் கொல்லப்பட்டார் என்று கூறியது; மூன்றாவது கூற்று அவர் தோட்டாக்களை அல்லது வெடிப்பைத் தவிர்ப்பதற்காக கார்க் கூரையில் வெளியே இருந்த தலையை உள்ளே இழுத்துக் கொள்ள முயன்றபோது கதவின் பிடியில் அவருடைய மண்டை மோதியதால் ஏற்பட்ட காயத்தால் இறந்தார் என்கிறது. இந்தக் கடைசி புதிய முடிவை அரசாங்கம் எப்படி அடைந்தது என்பது தெளிவாக இல்லை; ஏனெனில் பூட்டோவின் உடலில் பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.

பூட்டோவின் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சியின் (PPP) செய்தித் தொடர்பாளர் ஒருவர் முஷாரப் அரசாங்கத்தின் மாறி வந்த தகவல்களை "புளுகு மூட்டை" என்று கூறி, உண்மையான காரணம் தொலைதூரத்தில் இருந்து குறிவைத்து வந்த இயந்திரத்துப்பாக்கித் தோட்டா மூலம்தான் என்று வலியுறுத்தியுள்ளார். பாக்கிஸ்தானிய அரசியல்வாதி உண்மையில் ராவல்பிண்டியில் ஒரு தொலைதூர இயந்திரத் துப்பாக்கி மூலம் கொல்லப்பட்டார் என்றால், நாட்டின் இராணுவத் தலைமையிடத்தின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த இராணுவக் கட்டுப்பாடு நிறைந்த நகரத்தில் இவ்வாறு நடந்தது என்றால், சந்தேகம் இன்னும் தீவிரமான முறையில் அரசாங்கம் அல்லது சக்திவாய்ந்த இராணுவ உளவுத்துறை அமைப்பு மீதுதான் எழும்.

பாக்கிஸ்தானுக்குள்ளேயே இதுதான் மேலோங்கி நிற்கும் மக்களுடைய உணர்வின் பிரதிபலிப்பு ஆகும். Philadelphia Inquirer கட்டுரையாளர் ட்ரூடி ரூபின் அந்நாட்டில் இருந்து கொடுத்த தகவல்படி, "நான் பேசிய பாக்கிஸ்தானியர்கள் அனைவருமே கிட்டத்தட்ட அவருடைய இறப்பிற்குக் காரணம் அல் கொய்தா அல்ல என்றும் தங்கள் அரசாங்கம்தான் --மற்றும் அமெரிக்காதான்" என்றும் கூறினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவிர மறுக்க முடியாத சாட்சியமாக பூட்டோவே அல் கொய்தா என்பதற்கு பதிலாக அரசாங்கம்தான் தன்னுடைய உயிரின் முக்கிய அச்சுறுத்தலுக்கு காரணம் என்பதைக் கண்டிருந்தார்.

வெள்ளியன்று நியூயோர்க் டைம்ஸ் பாக்கிஸ்தானிய அரசியல்வாதியை அவர் கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு சந்தித்த மேலைநாட்டு அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டுள்ளது. டைம்ஸின் கருத்தின்படி, "இராணுவக்குழுக்கள் ஒரு அச்சுறுத்தலைப் பிரதிபலித்தது என்றாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அது தோல்வியடைந்தால் அரசாங்கமும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறினார். அரசாங்கம் இராணுவக்குழுக்களுடன் ஒரு உடன்பாட்டைக் கொண்டுவிட்டது அல்லது தங்களுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர அவர்களை அனுமதித்தது அல்லது தீவிரவாத பிரச்சினை பற்றிய ஜனாதிபதி முஷாரப்பின் அணுகுமுறை முற்றிலும் பயனற்றது" என்று பூட்டோ குறை கூறியதாக அவர் கூறினார்.

வாஷிங்டனில் உள்ள பூட்டோவின் அமெரிக்க ஆதரவாளரான மார்க் சீகல் பூட்டோவிடம் இருந்து தான் கொலை செய்யப்பட்டால் பகிரங்கமாக்கும்படி அவர் கேட்டுக் கொண்ட மின்னஞ்சலை வெளியிட்டார். கடந்த அக்டோபர் மாதம் பூட்டோ உயிர்மீது வைத்த குறி தவறிய பின்னர் இந்தத் தகவல் அளிக்கப்பட்டிருந்தது-- அப்பொழுது நாட்டிற்கு பூட்டோ மீண்டும் வந்ததை அடுத்து நிகழ்ந்த ஊர்வலத்தில் ஒரு மிகப் பெரிய குண்டுத்தாக்குதல் கிட்டத்தட்ட 140 பேரின் உயிர்களை கராச்சியில் பலி கொண்டது. பாக்கிஸ்தானின் இராணுவ உளவுத்துறை அமைப்புக்கு இத்தாக்குதலில் நேரடித் தொடர்பு இருந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தான் பாக்கிஸ்தானில் கொல்லப்பட்டால் "முஷாரப்பைத்தான் பொறுப்பு" எனக் கூறவேன் என்று தன்னுடைய மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்தார். "அவருடைய கையாட்களால் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர வைக்கப்பட்டேன்" என்று பாக்கிஸ்தானிய இராணுவ ஆட்சியாளரை பற்றி அவர் எழுதியிருந்தார்.

அடிப்படை பாதுகாப்புக் கூட கொடுக்க அரசாங்க அதிகாரிகள் மறுத்தது பற்றிய விவரங்களை தெரிவிக்கும் வகையில் பூட்டோ, "தனியார் கார்கள், கறுப்பு மறைப்பு உள்ள கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களை பயன்படுத்துதல் அல்லது [தெருவோரக் குண்டு வீச்சுச் சாதனங்களை] செயலிழக்க வைக்கும் கருவிகளைக் கொடுத்தல் அல்லது அனைத்துப் புறங்களிலும் போலீஸ் காவல்கள் மூடி மறைத்தவண்ணம் வரல் போன்றவற்றை எடுப்பதிலிருந்து என்னைத் தடுப்பதைக் குறிக்கும் வகையில் நிகழ்வது அவருடைய உதவியில்லாமல் நடக்கக்கூடும், வேறுவழியில்லை." என்று எழுதியிருந்தார்.

CNN க்குக் கொடுத்த பேட்டியொன்றில், சீகல் கூறியதாவது: "பிரச்சாரத்திற்கு தயாரித்துக் கொண்டிருந்தபோது, ... தான் கேட்ட பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்பது பற்றி பூட்டோ கவலை கொண்டிருந்தார். ஒரு முன்னாள் பிரதம மந்திரி என்ற அந்தஸ்து இருந்து ஒருவருக்கு தேவையான பாதுகாப்பைத்தான் அவர் அடிப்படையில் கேட்டிருந்தார். அவை அனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டன."

CNN உடைய வொல்வ் பிளிட்சரால் பூட்டோவே சற்று பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளவில்லையா என வினவப்பட்டதற்கு, சீகல் கூறிய விடை: "குற்றத்திற்கு பாதிக்கப்பட்டவரை குறை கூறாதீர்கள். முஷாரப்தான் பொறுப்பு."

இதற்கிடையில் செனட் மன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு முனைந்திருப்பவருமான செனட்டர் ஜோசப் பிடென் ஐயோவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்; அதில் தான் பூட்டோவை காப்பாற்றுவதற்கு குறிப்பிட்ட வகையிலான பாதுகாப்பு முறைகள் கையாளப்பட வேண்டும் என்று தான் கோரியதாக அவர் கூறினார்; அவருடைய வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன என்றும் அவர் கூறினார்.

"திருமதி பூட்டோவைக் காப்பாற்றத் தவறியது அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்கள் விடையளிக்க வேண்டிய பல கடின வினாக்களை எழுப்புகிறது." என்று பிடென் கூறினார். பாக்கிஸ்தானிய அரசாங்கம் வேண்டுமேன்றே பூட்டோவை ஆபத்திற்கு உட்படுத்தியதா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் பின்வாங்கிவிட்டார்; பூட்டோ கொலை செய்யப்பட்டபோது எந்த அளவில் அவர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டார் என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டார்.

இராணுவ-இஸ்லாமியவாதிகளின் தொடர்பு

அல் கொய்தா-- அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாக்கிஸ்தானில் இருக்கும் தீவிரவாத இஸ்லாமியக் கூறுபாடுகளை நாட்டின் இராணுவ-உளவுத்துறை அமைப்பிலிருந்து பிரிக்கும் கோடுகளை உறுதியாக்க் கூறமுடியாது. தளபதி ஜியாவுல் ஹக் அதிகாரத்தைக் கைப்பற்றி அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த பெனாசீர் பூட்டோவின் தந்தையான ஜுல்பிகார் அலி பூட்டோவை 1979ல் தூக்கிலிட்ட காலத்தில் இருந்தே, பாக்கிஸ்தானின் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஆட்சிகள் இஸ்லாமிய சக்திகளை தொழிலாள வர்க்கம் மற்றும் இடதுசாரிகளுக்கு இது ஒரு எதிர்ப்பலமாக இருக்கும் என்று கருதி, அவற்றை ஊக்குவித்து அதன்மீது தங்கியிருந்தது. இராணுவ ஆட்சியும் இன்னும் குறிப்பாக உளவுத்துறைப் பிரிவான ISI கூடுதலான வகையில் இந்த உறவுகளை, 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக நிகழ்ந்த அமெரிக்க ஆதரவுடனான போர் நடைபெற்ற காலத்தில் மேலும் கெட்டிப்படுத்தியது. அப்பொழுதுதான் ISI மற்றும் CIA இரண்டும் ஒன்றாக இணந்து பின்னர் அல் கொய்தா என்று அழைக்கப்பட்ட அமைப்பைக் கட்டமைத்து, ஓசாமா பின் லேடனுன் நேரடியாகவும் ஒத்துழைத்தன.

இந்த உறவுகள் இன்னமும் உள்ளன என்பதில் கேள்விக்கு இடமில்லை. பாக்கிஸ்தானிய தளபதிகள் அல் கொய்தாவிற்கு செய்யப்படவிருக்கும் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை செய்ததாக அமெரிக்க இராணுவத் தளபதிகள் பலமுறையும் புகார் கூறியுள்ளனர். முஷாரப் அரசாங்கம் அல்லது இராணுவத்திற்குள் இருக்கும் பிரிவுகள் இஸ்லாமிய பிரிவினரை இத்தகைய படுகொலையை செய்யப் பயன்படுத்தியிருக்கக்கூடும் --அல்லது அவர்கள் அத்தகைய குற்றத்தை செய்ய உதவியிருக்கக்கூடும்-- என்பது வெளிப்படையாகும்.

ஒரு செயல் நோக்கத்தைப் பொறுத்தவரை, முஷாரஃப்பும் அவருடைய முக்கிய ஆதரவுத்தளமான இராணுவ ஆணையகமும் தெளிவாக ஒன்றைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு அரசு அதிகாரத்தை, மற்றும் ஊழலுக்கும் அமெரிக்க உதவியாகக் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளுவதில் அக்கறை கிடையாது. 1990 களில் இரு முறை பிரதம மந்திரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பெனாசீர் பூட்டோ, இருமுறையும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த அதிகார மாறுதல்கள் ஒவ்வொன்றிம் அவருடைய அரசாங்கத்திற்கும் பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் ISI உடைய உயர்மட்டத்தில் இருக்கும் விரோதப் போக்கு உடைய கூறுபாடுகளுக்கும் இடையே கடுமையான பூசல்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

இப்பொழுது முஷாரப்பின் முக்கிய அரசியல் அதிகாரத்திற்கான போட்டியாளர் இறந்துவிட்டதுடன் அவருடைய கட்சியும் பெரும் சிதைவில் உள்ளது. முஷாரப்தான் பாக்கிஸ்தானில் வாஷிங்டன் நம்பக்கூடிய முக்கிய நபராக உள்ளார்; இந்த உண்மைதான் புஷ் நிர்வாகம், செய்தி ஊகடம் மற்றும் முக்கிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியாகக்கூடிய வேட்பாளர்கள் அனைவரும் அவருக்கு இக்கொலையுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று வலியுறுத்துவதில் வெளிப்பட்டு நிற்கிறது.

54 வயதான, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி வன்முறையால் இறந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் தருவதானாலும், பூட்டோவை ஜனநாயகத்திற்கான ஒரு தியாகி என மாற்றும் முயற்சி பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகும்.

புஷ் நிர்வாகம் இழிந்த முறையில் முஷாரப் தலைமைதாங்கும் இராணுவக் கட்டுப்பாட்டு ஆட்சிக்கு ஒரு போலி ஜனநாயக மூடுதிரையை கொடுப்பதற்காக தயாரித்திருந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் அவர் பாக்கிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டார்.

வெள்ளியன்று கொடுத்த தகவல் ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட் இது பற்றிய விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளது.

பாக்கிஸ்தானில் அரசியல் அமைதியின்மை பெருகிக் கொண்டிருக்கையில், வாஷிங்டன் பெரும் திகைப்புடன் இராணுவ ஆட்சியாளருக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் செயல்பட்டது; அவரைத்தான் அது பயங்கரவாதத்தின்மீதான போர் என்பதில் முக்கிய நபராகக் கருதப்படுபவர் ஆவார்.

"ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் அரசியல் எதிர்காலம் இவ்வாண்டு வெளிப்படத் தொடங்குகையில் பூட்டோ ஒருவர்தான் அவரை அதிகாரத்தில் தொடர வைப்பதற்கு உதவக்கூடிய அரசியல்வாதி என்று ஆனார்." என்று போஸ்ட் தகவல் கொடுத்துள்ளது.

"பூட்டோ ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து அல்ல என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியது; ஆனால் முஷாரப்பின் ஜனாதிபதித்தன்மையை உறுதிபடுத்தித் தக்க வைக்கக் கூடிய உறுதியைக் கொடுக்கக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்று உணர்ந்தது" என்று பூட்டோவின் ஆதரவாளரான மார்க் சீகல் கூறியதாக இந்த ஏடு மேற்கோளிட்டது.

பூட்டோவின் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி முஷாரப் மூன்றாம் முறை ஜனாதிபதியாக கடந்த செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இருந்த பரந்த இகழ்வுற்ற முயற்சியை எதிர்க்கக் கூடாது என்பது உடன்பாட்டின் விதிகளில் இருந்தது; இதற்கு ஈடாக முஷாரப் பூட்டோவிற்கு அவர் முன்பு பிரதம மந்திரியாக இருந்த காலங்களில் முக்கிய கூறுபாடுகளாக இருந்த பெருகிய ஊழல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் இருந்து விலக்குக் கொடுக்கவேண்டும்.

துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர் பெளச்சர் உட்பட அமெரிக்க அதிகாரிகள், இந்த உடன்பாடு கொண்டுவருவதற்கான 18 மாத கால பேச்சுவார்த்தைகளில் நேரடி முகவர்களாக இருந்தனர்; இஸ்லாமாபாத்திற்கும் பூட்டோவின் துபாய் மற்றும் லண்டன் வீடுகளுக்கும் இடையே பலமுறை பறந்து சென்றனர்.

பூட்டோவிற்கு பொது மன்னிப்பு எவ்விதத்திலும் கொடுப்பதை முஷாரப் எதிர்த்தாக கூறப்படுகிறது; அவர் அதிகாரத்திற்கு திரும்புவது பற்றி கூறவே தேவையில்லை. போஸ்ட்டின் கருத்தின்படி, சர்வாதிகாரிகளுடன் ஏராளமான கறைபடிந்த ஊழல்களுக்கு பெயர் போன பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் நெக்ரோபொன்ட் முஷாரப்பை இறுதியாக நம்ப வைத்தார். "நாம் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்ற தகவலை அடிப்படையில் அவர் முஷாரப்பிற்குக் கொடுத்தார்; ஆனால் இதற்கு அரசாங்கத்திற்கு ஒரு ஜனநாயக மூடுதிரை தேவை என்றும் நாம் இவ்விதத்தில் பெனாசீர் சரியான தேர்வு என நினைப்பதாகவும் கூறினோம்" என்று ஒரு முன்னாள் CIA அதிகாரியும், தேசியப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான ப்ரூஸ் ரீடெல் போஸ்ட்டிடம் கூறினார்.

இறுதியில், புஷ்ஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ்தான் அக்டோபர் ஆரம்பத்தில் பூட்டோவிடம் தொலைபேசி மூலம் பேசி அவரை பாக்கிஸ்தானுக்கு திரும்புமாறும், அடிப்படையில் அமெரிக்கக் கொள்கையின் கருவியாக நடந்து கொள்ளுமாறும் முஷாரப் ஆட்சிக்கு ஒரு தூணாக இருக்குமாறும் கோரினார். இவ்வாறு செய்தவிதத்தில், ரைஸ் பூட்டோவை அவர் மரணத்திற்கு அனுப்பி வைத்தார்.

பூட்டோவை தன்னுடைய பிற்போக்குத்தன ஆட்சியின் ஏற்றுக்கொள்ளத்தக்க "முகமாக" ஆக்கும் வாஷிங்டனுடைய முயற்சியில் முஷாரஃப்பிற்கு உண்மையான விருப்பம் கிடையாது; இது அரசு கூறுபாடுகளால் நேரடியாகவே அவரது படுகொலைக்கு வழிவகுக்கவில்லை எனில், குறைந்த பட்சம் பூட்டோவிற்கு அரசாங்கப் பாதுகாப்பு மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

பூட்டோவின் மூடுதிரைக்கு பின்னணியில் இருந்த அரசியல் யதார்த்தம்

இந்த உடன்பாடு நிறைவேற்றப்பட்டிருந்தால், பாக்கிஸ்தானின் ஜனநாயகம் மலர்வதற்கு அது ஒன்றும் வழிவகுத்திருக்காது. மாறாக அது எழுபது சதவிகித மக்கள் இப்பிராந்தியத்தில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு விரோதமாக உள்ள ஒரு நாட்டில், வாஷிங்டன் கட்டுப்பாட்டினுள் இருக்கும் பிரதம மந்திரியை, இராணுவ மேலாதிக்கம் கொண்ட, புஷ் நிர்வாகத்துடன் கூட்டு வைத்துள்ள ஆட்சிக்கு பெயரளவுத் தலைவராக செய்திருக்கும்.

பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி ஜனரஞ்சகவாத முறையில், போலித்தனமான சோசலிச வாய்ச்சவடாலையும் கூட கூறுவதில் ஈடுபட்ட நிலையில், அது எப்பொழுதுமே பாக்கிஸ்தானின் நிலச் சுவான்தார் மேற்குடிப் பிரிவின் பிரதிநிதியாக மற்றும் அதன் அதிகாரத்திற்கும் சலுகைகளுக்கும் உறுதியான பாதுகாவலராகத்தான் இருந்து வந்திருக்கிறது. இரு முறை பதவியில் இருந்தபோது, பூட்டோ குடும்பம் அரசு எந்திரத்தின் மீதான தங்களின் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தங்களை செல்வக் கொழிப்பு உடையவர்களாக மாற்றிக் கொண்டது; பெனாசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, அரசாங்க ஒப்பந்தங்களில் பெற்றுக் கொண்ட ஊழல்தொகைகளுக்காக "திருவாளர் பத்து சதவிகிதம்" (Mr. ten percent) என்ற அடைமொழியைப் பெயரைப் பெற்றார்.

முஷாரஃப்பின் அரசாங்கத்தைப் போலவே, பூட்டோவின் அரசாங்கங்களும் கடுமையான அடக்குமுறை, காணமற்போதல், அரசாங்க கொலையில் ஈடுபடுதல் (இதில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து விலகிய அவருடைய சொந்த சகோதரர் மூர்த்தாசாவும் அடங்குவார்) ஆகியவற்றால் பண்பிடப்பட்டிருந்தன.

பூடோவிற்கும் முஷாரப்பிற்கும் இடைய ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வாஷிங்டன் முடிந்தது என்பது பாக்கிஸ்தானிய முதலாளித்தவ முறை முழுவதும் எப்படி அழுகிய முறையில், ஜனநாயக விரோதத் தன்மை கொண்டிருந்தது என்பதற்கு சான்று ஆகும். இந்த ஆளும் உயரடுக்கு வறிய தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த மக்கள்தொகுப்பில் இருந்து பெரும் பிளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது தன்னுடைய செல்வம் மற்றும் அதிகாரத்தை மிருகத்தனமான அடக்குமுறை அதிகாரத்தின் மூலம் காத்து வந்தது; தவிரவும், ஏகாதிபத்தியத்துடன் வெளிப்படையான பிணைப்பையும் கொண்டிருந்தது; ஒவ்வொரு வகை மத பிற்போக்குத்தனம், வகுப்புவாத விரோதம் ஆகியவற்றிற்கும் கோரிக்கைவிட்டு வந்தது.

முஷாரப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவம் பூட்டோவின் படுகொலையில் நேரடித் தொடர்பு கொண்டிருந்தாலும், அது புஷ் நிர்வாகத்தை அவருடன் ஒத்துழைப்பதில் இருந்து நிறுத்திவிடாது; அல்லது, தேவையானால், மற்றொரு இராணுவ வலிமை உடையவருடன் ஒத்துழைக்க வைக்கும். வாஷிங்டன் அதன் மூலோபாய உடன்பாட்டை பாக்கிஸ்தானுடன் தொடர்ந்த படுகொலைகள், இராணுவ ஆட்சி மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது; அவைதான் இந்நாட்டு வரலாற்றின் தன்மைகளாக இருந்து வந்துள்ளன.

பல குற்றங்களிலும் அது நேரடி உடந்தையாக இருந்து வந்துள்ளது; 1971ல் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கீஸிங்கர் இருவரும் வங்கதேசத்தில் வெளிப்பட்ட தேசிய இயக்கத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இரத்தகுளிப்பிற்கு ஆதரவு கொடுத்ததில் பெரும் இகழ்வை அடைந்தனர்; அந்த இயக்கத்தை அடக்க அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் நூறாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்வதற்கு, ஏன் மில்லியன் பொதுமக்கள் என்றும் கூறலாம்-- பயன்படுத்தப்பட்டன. இன்னும் பல மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

புஷ் நிர்வாகத்தின் நோக்கம் எப்படியும் முஷாரப்பின் ஆட்சியைக் காப்பாற்றி சட்டபூர்வதன்மை வழங்கவேண்டும் என்று உள்ளது. வெள்ளியன்று ஒரு பாதுகாப்பான வீடியோத் தொடர்பு மூலம் கிராபோர்டில் இருக்கும் தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்து வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவுடனும் இஸ்லாமாபாத்தில் இருந்த அமெரிக்க தூதுவருடனும் பாக்கிஸ்தானிய நெருக்கடி பற்றி விவாதித்திருந்தார்.

நாடு முழுவதும் படுகொலையை அடுத்து நிகழ்ந்த வன்முறையில் தள்ளப்பட்ட நிலையில், போலீஸ் நிலையங்கள், வங்கிகள், அரசாங்க அலுவலகங்கள், இரயில்வே நிலையங்கள், இரயில்கள் ஆகியவை எரிக்கப்பட்டு, பல டஜன் மக்களும் கொலையுண்டனர். பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகள் "அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளில்" ஈடுபட்டால் "கண்டதும் சுடுமாறு" உத்தரவைப் பெற்றன. போக்குவரத்துப் பணிகள் மூடப்பட்டுவிட்டன; பெட்ரோல் நிலையங்கள் அரசாங்க உத்தரவின்பேரில் மூடப்பட்டுவிட்டன; ஏராளமான மக்கள் ஆங்காங்கு நிலைகுலைந்து நிற்கின்றனர்.

இச்சூழ்நிலையில், வெள்ளை மாளிகையும் வெளியுறவுத்துறையும் பகிரங்கமாக ஜனவரி 8ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன; தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டால் அது பூட்டோவின் நினைவை மதிப்பிழக்க செய்துவிடும் என்றும் கூறுகின்றன. படுகொலைக்கு முன்பே முஷாரப் அதிகாரத்தில் இருக்கும் நிலையில் அவற்றிற்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லாமல் செய்துள்ளார்; முக்கிய எதிர்க்கட்சி தலைவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவது என்பது இன்னும் கேலிக்கூத்து ஆகும். வெள்ளை மாளிகை இத்தகைய செயல் அதன் பாக்கிஸ்தானில் கொண்டுள்ள ஏகாதிபத்திய கொள்கையை மறைக்க போலி மூடுதிரையாக முற்றிலும் உதவும் என்று கருதிகிறது; அத்தகைய விதத்தில்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் தேர்தல்கள் நடைபெற்றன.

இந்த நடவடிக்கையில் இருக்கும் அவசரம், நாட்டில் பெருகிய முறையில் தன்னுடைய இராணுவச் செயல்களை விரிவாக்கம் செய்ய நினைக்கும் வாஷிங்டனுடைய திட்டங்களுடன் பிணைந்துள்ளது. பூட்டோ படுகொலைக்கு ஒரு நாள் முன்பு, வாஷிங்டன் போஸ்ட்டின் தேசியப் பாதுகாப்பு பற்றிய கட்டுரையாளரான வில்லியம் ஆர்கின் கூறினார்: "அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அமெரிக்க சிறப்புப் பிரிவினர் மிக அதிக அளவில் பாக்கிஸ்தானில் நிலைகொள்வர்; இது அந்நாட்டில் எழுச்சி-எதிர் சக்திகளுக்கு ஆதரவு, பயிற்சி ஆகியவற்றைக் கொடுப்பதுடன், இரகசிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகளுக்கும் உதவும் என்று பாதுகாக்கு அதிகாரிகள், திட்டமிடுதலில் தொடர்பு உடையவர்கள் கூறுகின்றனர்"

அதற்குச் சில நாட்கள் முன்பு NBC யின் பென்டகன் நிருபரான Jim Miklaszewski அமெரிக்க சிறப்புப் படைகள் ஏற்கனவே "அல் கொய்தாவிற்கு எதிராக பாக்கிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திவருவதாகவும்", நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பழங்குடிப் பகுதிகளிலும் செயல்பட்டுவருவதாகவும் தகவல் கொடுத்துள்ளார். இந்தத் தகவல் "பயிற்சியாளர்கள்" என்று அமெரிக்கர்களால் அனுப்பப்படுபவர்கள் நேரடியாக பாக்கிஸ்தானிய படைகளுடன் போர் நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என்றும் தெளிவாக்கியுள்ளது.

இந்த அறிக்கை அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரொபேர் கேட்ஸ், "அல் கொய்தா இப்பொழுது பாக்கிஸ்தானை நோக்கி திரும்பியுள்ளதாகவும், பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்த இருப்பதாவும்" கூறியதாக தெரிவிக்கிறது.

இதற்கிடையில் ஒரு பென்டகன் செய்தித் தொடர்பாளர் வெள்ளியன்று வாஷிங்டன் பாக்கிஸ்தானின் அணுவாயுதங்கள் "கட்டுப்பாட்டின்கீழ்" இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார். ஆயினும்கூட, அமெரிக்க இராணுவம் தேவையானால் இந்நாட்டில் அதன் அணுவாயுதக் கிடங்கு காப்பாற்றப்படுவதற்கு தலையிடுவதற்கு அவசரத் திட்டங்களை பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

பூட்டோ படுகொலைக்கு எதிரான மக்கள் கசப்பு, வெறுப்பு உணர்வு பாக்கிஸ்தானில் பாரிய உறுதியற்ற தன்மையைக் கட்டவிழ்த்துள்ளது. 165 மில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் அமெரிக்கா நேரடியாக மக்கள் எழுச்சியை அடக்க முயற்சிகளை மேற்கொண்டால் அரசியல் நிலைமை இன்னும் தீவிரமாகிவிடும்.