World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Angry German farmers rally in Berlin

ஆத்திரமடைந்த ஜேர்மன் பால் உற்பத்தியாளர்கள் பேர்லினில் பேரணி நடத்துகிறார்கள்

By Stefan Steinberg
9 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

பெரிய பால் ஆலைகள் மற்றும் பாரிய அங்காடிகள் தங்களுக்கு அளிக்கும் குறைந்த கொள்முதல் விலையை எதிர்த்து ஜேர்மன் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் புதனன்று பேரணி நடத்தினார்கள். இருபது டிராக்டர்கள் பேர்லின் பாராளுமன்ற கதவின் முன் வரிசையாக நிறுத்தப்பட்ட நிலையில், பால் உற்பத்தி தொழிலாளர்களான நிறைய இளைஞர்கள் உட்பட, கூட்டத்தினர் பால் உற்பத்தியாளர் பிரதிநிதிகளின் பேச்சுக்களைக் கவனித்தனர்.

பேரணியில் இடம் பெற்ற விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் பால் உற்பத்தியாளர்களின் போர்குண உணர்வை எடுத்துக்காட்டியது. பெரிய உணவுபொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய விலை நிர்ணய கொள்கைகள் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் மத்திய தர ஜேர்மன் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தி வருகிறது என அவர்கள் தெளிவுபடுத்தினர்.

பேரணியில் பேசிய பேச்சாளர்கள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஹாலாந்து பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பேரணிக்காக வந்திருந்த ஐக்கியத்திற்கான வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டமை, அதிகரித்திருக்கும் உற்பத்தி செலவும், குறைந்து வரும் வருவாயும் ஓர் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிரச்சனையாகும் என்பதை தெளிவுப்படுத்துகிறது. பால் உற்பத்தியாளர்களின் செலவுகள் கணிசமாக உயர்ந்திருக்கும் போதில், பாலுக்காக ஐரோப்பிய ஒன்றிய பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் கொள்முதல் விலைகள் கடந்த ஆறு மாதங்களில் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றிய வேளாண்மை விலை நிர்ணய முறையானது விலைகள் மற்றும் மானியத்தின் மீது நெதர்லாந்தில் இனது பிரீஸ்லாந்து மற்றும் காம்பினா மற்றும் டென்மார்க்கில் அர்ல்கா போன்ற பெரிய பால் கூட்டுறவு நிறுவனங்களின் அதிகபட்ச இலாபத்திற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேசமயம் ஐரோப்பா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு மற்றும் மத்திய தர பால் உற்பத்தியாளர்களின் பிழைப்பாதாரத்தை மட்டுமே பாதுகாத்தது.

அனைத்து மானியங்களையும் நீக்கவும், பல சிறு பால் உற்பத்தியாளர்கள் வேறு வழியின்றி நசுக்கப்படவும் வகை செய்யும் கட்டுப்பாடற்ற சந்தையை ஐரோப்பிய பால் உற்பத்தியாளர்கள் மீது திணிக்க தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் அதன் பாலின் கொள்முதல் அளவை 2 சதவீதம் குறைத்தது மற்றும் 2014க்குள் பால் கொள்முதல் அளவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 1 சதவீதம் குறைக்க திட்டமிடுகிறது. 2007இன் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி மானியங்கள் அளிப்பதையும் நிறுத்தியது.

ஐரோப்பிய பால் உற்பத்தியாளர்கள் ஒருபக்கம் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளாலும், மற்றொரு பக்கம் உயர்ந்து வரும் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணெய் மற்றும் டீசல் விலைகளின் சமீபத்திய பெருமளவிலான உயர்வானது வேளாண்மை இயந்திரங்கள் பயன்பாட்டை மிகவும் செலவுடையதாக்கி உள்ளது என்பதுடன் உரங்கள் மற்றும் கால்நடை தீவனங்களின் விலைகளையும் உயர்த்தி விட்டிருக்கிறது. அதே சமயத்தில், ஜேர்மன் பால் உற்பத்தியாளர்கள் ஜேர்மன் பாரிய அங்காடிகளின் சந்தை பலத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவை விலைகளைக் குறைவாக வைத்திருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் குறைவான வருவாயை பெறுவதற்கும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்துகின்றன. இந்த கொள்கை அவர்களுக்கு மேலதிக இலாபத்தை கொடுத்திருக்கிறது. ஜேர்மனின் பணக்கார தொழில்வழங்குனர்களின் பட்டியலில் Aldi, REWE மற்றும் Lidl போன்ற மலிவு விலை உணவுப்பொருட்கள் விற்பனை அங்காடிகளின் உரிமையாளர்களும், பங்குதாரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மே 27ல் தொடங்கிய ஜேர்மன் பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு இதுவே பின்புலமாகும். முன்னொருபோதுமில்லாத நடவடிக்கை ஒன்றில், பால் உற்பத்தியாளர்கள் பால் வினியோகத்தை புறக்கணித்தனர், மேலும் பிற உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆலைகளுக்கு பால் சென்று சேராத வகையில் பல பகுதிகளில் ஜேர்மன் பால் ஆலைகளை அவர்கள் முற்றுகையிட்டனர். வடக்கு ஜேர்மனியிலுள்ள Nordmilch இல் இதுபோன்றதொரு முற்றுகையைத் தொடர்ந்து, மறியல்போராட்டக்காரர்களுக்கு 500,000 யூரோ (780,000 டாலர்) நஷ்ட ஈடுகோரப்போவதாக அந்நிறுவனம் அச்சுறுத்தியது. கடந்த திங்களன்று, ஹம்பேர்க்கின் வடக்கிலுள்ள ஆலைகளில் ஜேர்மன் கலக ஒடுப்பு போலீஸ் போராட்டக்காரர்களை இழுத்து சென்றது. சிறு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பின் (BDM) சார்பில் பால் உற்பத்தியாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாத நடவடிக்கையை ஜேர்மன் பால் உற்பத்தியாளர்களின் அதிக உறுப்பினர்களை கொண்ட, பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் (DBV) தலைவர்கள், பகிரங்கமாக கண்டித்தனர்.

பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தை தாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்ததாக பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் (DBV) தலைவர் ஹெர்ட் சோன்லெட்நெர் தெளிவுபடுத்தினார். புறக்கணிப்பின் போது, "சட்டவிரோத" நடவடிக்கைகள் என்ற வார்த்தைகளில் அது குறிப்பிட்டிருந்ததன் மீது DBV அதன் எதிர்ப்பை அறிவித்தது. பேர்லின் பேரணியில் கூட்டத்தின் கூச்சல்களாலும், வசைமொழிகளாலும் DBV பேச்சாளர் வரவேற்கப்பட்டார்.

கடந்த பத்து நாட்களில் பால் உற்பத்தியாளர்களின் போர்குண உணர்வும், நம்பிக்கையும் வளர்ந்துள்ளது. மேலும் பெருமளவிலான மக்களிடமிருந்து ஐக்கியமும், ஆதரவும் பெற்று வருவதாக பால் உற்பத்தியாளர்கள் பேர்லினில் தெரிவித்தனர்.

அவர்களின் நடவடிக்கை ஒரு போர்குண உணர்வலையைக் கட்டவிழ்த்துவிட்டு தங்களின் கட்டுப்பாட்டை மீறிவிடும் என்ற அச்சத்தால் சிறு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பின் (BDM) தலைமை, பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தையும், ஜேர்மன் பால் ஆலைகள் மற்றும் பாரிய அங்காடிகளின் முற்றுகையையும் கைவிடுமாறு பேர்லின் பேரணியில் கேட்டுக் கொண்டது. அவர்களின் நடவடிக்கைக்கு வளர்ந்து வரும் மாபெரும் ஆதரவு மற்றும் வளர்ந்து வரும் ஐரோப்பிய ஒற்றுமையை (கடந்த சில வாரங்களில் பால் உற்பத்தியாளர்களின் போராட்ட நடவடிக்கைகள் பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் பல்கேரியாவிலும் கூட மேற்கொள்ளப்பட்டிருக்கிறது) உறுதி செய்யும் வகையில், பால் உற்பத்தியாளர்களின் நடவடிக்கை முழுமையாக வெற்றி பெற்றிருப்பதாகவும், உடனடியாக அவர்கள் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் BDM தலைவர் ரோமெளல்டு ஷாபர் வலியுறுத்தினார்.

பால் உற்பத்தியாளர்களின் நடவடிக்கைக்கு மத்தியில், நடவடிக்கையை கட்டுப்படுத்துவதில் அமைப்பு மும்முரமாக இருப்பதை ஏற்கனவே BDM தலைவர்களில் ஒருவரான பிரான்ஸ் குரோஸ குறிப்பிட்டிருந்தார். "ஆலைகளுக்கு வெளியே எவ்வித மோதல்களும் வேண்டாம். இதன் மூலம் நம்மால் அமைதியான பேச்சுவார்த்தை நடத்த முடியும்." என்றார்.

தமது அங்காடிகளில் பால் பொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்த உடன்பட்ட Lidl அங்காடிகளுடன் கடந்த சில நாட்களாக நடந்த உடன்படிக்கையை பேர்லின் பேரணி மேடையில் ஷாபர் வரவேற்றார். பிற அங்காடிகளும் இதையே பின்பற்றும் எனக் குறிப்பிட்டு, "இறுதி தடையும் வீழ்ந்துவிட்டது" என்றும், பால் உற்பத்தியாளர்கள் வெற்றிக்காக தங்களை தாங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும் என்றும் ஷாபர் வார்த்தை ஜாலத்துடன் அறிவித்தார்.

உண்மையில் ஸ்காபெரால் அறிவிக்கப்பட்ட வெற்றி முழுவதும் பொய்யானது. பிற பெரிய அங்காடிகள் எவ்வித சலுகைகளையும் அளிக்கவிருப்பதற்கான சமிக்கைகள் எதையும் தெளிவாக அறிவிக்கவில்லை. பால் உற்பத்தியாளர் பிரதிநிதிகளால் வெற்றி குறித்து பேசப்படும் எதுவும் முற்றிலும் தவறானதாகும் என "போலியான வெற்றி" என்ற தலைப்பில் Süddeutsche Zeitung இதழில் வெளியான ஒரு விமர்சனம் குறிப்பிட்டது. அவர்களின் அடிப்படை பிரச்சனை ஒன்றுமே கையாளப்படவில்லை.

மீதமிருக்கும் பெரும்பான்மை பெரிய அங்காடிககளிடமிருந்து எவ்வித உறுதிமொழியும் கிடைக்கவில்லை, மேலும் எவ்வித உடன்படிக்கையும் பால் உற்பத்தியாளர்களுக்கு நிச்சயமாக பலனளிப்பதாகவும் தெரியவில்லை. அதற்கு பதிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் பால் பொருட்களின் விலைகள் நுகர்வோர் மீது ஏற்றப்படலாம். Lidl நிறுவனத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட இதேபோன்ற சலுகை குறித்து Süddeutsche Zeitung குறிப்பிடுவதாவது:

"முதலும் முதன்மையாகவும் Lidlஆல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தல் உத்தியாகும் என்று சிந்திப்பதற்கு அடித்தளம் இருக்கிறது. கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு பெரும்பான்மை நுகர்வோர்கள் ஆதரவளிப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன. Lidl நிறுவனமும் இதை அறியும். பொதுமக்களின் பார்வையில் முதலில் வழிவிடுகிறவர் நல்லவராகிறார். நியாயமான விலைகளை அவர் (Lidl) முன்மாதிரியாக அமைக்கிறார், அதையே பிறரும் பின்பற்றுகிறார்கள். அதன் தொழிலாளர்களை கண்காணித்த அவதூறு [தன் சொந்த தொழிலாளர்களை ஒற்றுப்பார்க்க வீடியோ கேமராக்களையும், பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளையும் Lidl நிறுவனம் பயன்படுத்துகிறது என்பது சமீபத்தில் வெளியானது] முடிந்து விட்டிருக்கும் நிலையில், Lidlஇன் கெளரவத்தை மெருகூட்ட சரியான நேரத்தில் இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது."

பேர்லின் ஆர்பாட்டங்களின் போது உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல இளைய தலைமுறை பால் உற்பத்தியாளர்களுடன் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள Schleswig-Holstein மாநிலத்திலிருந்து லார்ஸ் மற்றும் ஷோரன் வந்திருந்தனர்.

Schleswig-Holstein மாகாணத்தில் 147 பசுக்களைக் கொண்ட மத்திய தர கூட்டுறவு பண்ணையில் ஷோரன் பணியாற்றுகிறார். பால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் சில பிரச்சனைகள் குறித்து அவர் குறிப்பிட்டதாவது:

"எங்களின் உற்பத்தி செலவை அதிகரித்து வரும் விலையுயர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம். அதே நேரம், பெரிய அங்காடிகளுடன் இணைந்து பால் விலையை நிர்ணயிக்கும் பெரிய பால் ஆலைகளிடமிருந்து நாங்கள் பெறும் வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இலையுதிர் காலத்தின் போது, ஒரு லிட்டர் பாலுக்கு நாங்கள் 47 செண்டுகள் பெற்றோம். தற்போது ஒரு லிட்டருக்கு எங்களுக்கு 25திலிருந்து 33 செண்டுக்கு இடையில் தான் வழங்கப்படுகிறது. அதே சமயம் எங்களின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கால்நடை தீவணங்களின் விலைகள் 70 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. உரங்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன, மேலும் கடந்த சில மாதங்களுக்கிடையில் டீசல் விலையில் ஏற்பட்டு வரும் திடீர் உயர்வுகளையும் நாங்கள் எதிர் கொண்டிருக்கிறோம். விலை நிர்ணய முறை சீர்திருத்தப்படாவிட்டால் தொடர்ந்து நடத்துவது என்பது சாத்தியப்படாது." என்று தெரிவித்தார்.

Lidl அங்காடி சில சலுகைகளை வழங்க உடன்பட்டதாகவும், ஆனால் பிற பெரிய நிறுவனங்கள் எவ்வித உறுதியும் அளிக்கவில்லை என்றும் ஷோரன் குறிப்பிட்டார். "பெரிய உணவுபொருள் வினியோக நிறுவனங்கள் உறுதியான அறிக்கை வெளியிடும் வரை நான் தொடர்ந்து அழுத்தம் அளித்துக் கொண்டு தான் இருப்பேன். Aldi, REWE பபோன்றவை இன்னும் பெரிய நிறுவனங்களாகும். எல்லா நிறுவனங்களும் ஒத்துக் கொள்ளும் வரை எங்களின் போராட்டத்திலிருந்தும் மற்றும் பால் வினியோக புறக்கணிப்பிலிருந்தும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்." என்று தெரிவித்தார்.

நுகர்வோர் மீது திணிக்கப்படும் எவ்வித விலையுயர்வையும் Sören கடுமையாக எதிர்த்தார்: "பாரிய அங்காடிகளின் உரிமையாளர்கள் ஜேர்மனியின் பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள். Aldi நிறுவனத்தின் உரிமையாளர் ஆல்பிரெச்ட் சகோதரர்கள் ஜேர்மன் பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்கள். எங்களின் தயாரிப்புகளுக்கு ஒரு நியாயமான விலை கொடுக்க கூடிய அளவிற்கு அவர்கள் ஏற்கனவே போதிய இலாபங்களை பெற்று வருகிறார்கள். நுகர்வோர் மீது திணிக்கப்படும் எவ்வித விலையுயர்வையும் நான் எதிர்க்கிறேன்." என்று தெரிவித்தார்.

இந்த பேரணியில் கலந்து கொள்ள North Rhine Westphalia மானிலத்திலுள்ள வெஸெர் நகரிலிருந்து மோரிட்ஸ் மற்றும் ஆண்ட்ரஸ் வந்திருந்தார்கள்.

தமது பகுதியில் சிறு மற்றும் மத்திய தர பால் உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து ஆண்ட்ரஸ் விவரித்தார். மொத்தம் 70 பசுக்களைக் கொண்ட பண்ணையில் ஆண்ட்ரஸ் பணியாற்றுகிறார்.

"பொதுமக்களிடம் இருந்து கிடைத்து வரும் ஆதரவால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். தாங்கள் வாங்கும் பாலுக்கு கூடுதல் விலை அளிக்க தயாராக இருப்பதாக நிறைய மக்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் தற்போதைய விலை நிர்ணய கொள்கை தவறானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விலையுயர்வால் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எங்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நான் நினைக்கிறேன். உண்மையில், பிற நாடுகளில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் ஆதரவானது இது ஜேர்மன் பிரச்சனை மட்டுமல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கண்டத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சனையைத் தான் சந்தித்து வருகிறார்கள்." என்று தெரிவித்தார்.

போராட்டம் முடிவேதுமற்று கைவிடப்படுவதை மோர்ட்ஸ் மற்றும் ஆண்ட்ரஸ் இருவரும் எதிர்த்தனர். "எங்களின் பால் உற்பத்தி புறக்கணிப்புக்கு ஆரம்ப பிரதிவிளைவை நாங்கள் பார்த்துவிட்டோம், ஆனால் அது போதியதாக இல்லை. நாங்கள் முழுமையான பலன்களைப் பெறும் வரை எங்களின் நடவடிக்கைத் தொடர வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் மீண்டும் போராட்டத்திற்கு தெருவிற்கு வரவேண்டியிருக்கும்." என்று தெரிவித்தனர்.