World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Bush in Germany beats drum for war against Iran

ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கு புஷ் ஜேர்மனியில் முரசொலிக்கிறார்

By Stefan Steinberg
12 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜேர்மனிக்கு இறுதி விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் புதனன்று, ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கான அவரின் அச்சுறுத்தலை மீண்டும் வலியுறுத்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்) உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டை பயன்படுத்தினார்.

ஈரானை பொறுத்த வரை "நான் ஏற்கனவே கூறியது போல, எல்லா வாய்ப்புகளும் நம் முன்னால் இருக்கின்றன." என அமெரிக்க ஜனாதிபதி கூடியிருந்த ஊடகத்தினரிடம் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்வதைத் தடுக்க அதற்கெதிரான ஓர் காரணமற்ற இராணுவ தாக்குதலுக்கான "வாய்ப்பை" வாஷிங்டன் கொண்டிருக்கிறது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அவர் கைவிடுவாரா என நேரடியாக ஒரு பத்திரிகையாளரால் கேட்கப்பட்ட போது, "அனைத்து வாய்ப்புகளும் முன்னால் இருக்கிறது" என அவர் மீண்டும் தெரிவித்தார். அப்பிரச்சனை குறித்து பத்திரிகையாளர்கள் மீண்டும் வற்புறுத்திய போது, பொருளாதார தடைகளின் நேர்மறையான பங்களிப்பு குறித்தும், சர்வதேச ஒருங்கிணைப்பின் தேவை குறித்தும் அவர் தெளிவில்லாமல் பேசினார், ஆனால் இராணுவ நடவடிக்கை குறித்த அவரின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள மறுத்து விட்டார்.

புதனன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் புஷ் மற்றும் மேர்க்கெல் இருவரும், சர்வதேச வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான இரு நாடுகளின் விருப்பங்கள் குறித்து தெளிவில்லாத கருத்துக்களை அளித்ததன் மூலம் அவர்கள் தங்களின் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை வெளிபடுத்தினார்கள். ஆனால் இதேபோன்று அவரின் முதல் ஐரோப்பிய நிறுத்தமான ஸ்லோவேனியாவில் கூறியது போன்று, தெஹ்ரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உட்பட கடுமையான பொருளாதார தடைகளை ஐரோப்பிய தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரானிய அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் குறித்து குற்றஞ்சாட்ட ஜேர்மனியின் இந்த விஜயத்தை புஷ் பயன்படுத்தி கொண்டார்.

ஈரானிய பிரச்சனைக்கு ஒரு இராஜாங்கரீதியான உடனடி தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் கோரும் வேளையில், புஷ்ஷின் இந்த கருத்துகள் வந்திருக்கின்றன. வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஐரோப்பிய உயர் அதிகாரி ஜேவியர் சோலானா, ஈரான் அதன் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உடன்பட்டால், அதற்கு பதிலாக அவ்வரசாங்கத்திற்கு வழங்கப்படும் வர்த்தக மற்றும் பொருளாதார சலுகைகள் குறித்து பேச, இந்த வாரயிறுதியில் தெஹ்ரானுக்கு பயணிக்கவுள்ளார்.

ஜேர்மனியில் அவரை குறிப்பிட பயன்படும் "நொண்டி வாத்து ஜனாதிபதி" எனும் அடைமொழியை சர்வதேச அளவில் துடைக்கும் பொருட்டு, தமது நிர்வாகம் "இறுதி எல்லையை அடைவதற்கான பாய்ச்சலை" தொடங்கும் என புஷ் குறிப்பிட்டார்.

புஷ்ஷூக்கு நேரடியாக பதிலளிக்க முடியாது, ஈரானுடனான முரண்பாட்டில் எடுக்கப்படும் ஒரு கடுமையான இராஜாங்க தீர்வுக்கு ஜேர்மனி ஆதரவளிக்கும் என மேர்கெல் அறிவித்தார். புஷ்ஷின் சுற்றுபயணத்தில், பிற ஐரோப்பிய தலைவர்கள் போன்றே புஷ் நிர்வாகத்தின் யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் ஈரான் கொள்கை மீது எவ்வித வெளிப்படையான கண்டனங்களையும் மேர்க்கெல் தர மறுத்தார். விடயங்களை நேரடியாக பேசும் அடித்தளத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் உற்சாகப்படுவதாக அவர் அறிவித்தார். பின்னர் பாராட்டு மழையை பொழியும் போது, தமது எல்லையைக் கடந்து சென்று பின்வருமாறு அறிவித்தார்: "இந்த கூட்டுறவு மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது என நிச்சயமாக நான் கூறியாக வேண்டும், ஜனாதிபதி கூறியது போல, அவரின் கடைசி பதவியில் இருக்கும் நாட்களில் இதுவொரு பாய்ச்சலாக அமைய இருக்கிறது." என்றார்.

ஈரானுக்கு எதிரான ஓர் இராணுவ வாய்ப்புக்கான புஷ்ஷின் பிரச்சாரம், 2002ல் ஈராக்கிற்கு எதிராக அவர் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்த நேரத்தில், ஈராக் மீதான சட்டவிரோத தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வெள்ளை மாளிகையால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் மற்றும் பொய்களின் அடிப்படையிலான பிரச்சார விளம்பரத்திற்கு சவால் விட பெரும்பான்மையான ஐரோப்பிய தலைவர்கள் மறுத்தார்கள். பொதுப்படையாக தங்களின் எதிர்ப்புகளை வெளியிட மறுத்ததன் மூலம், ஈராக்கில் ஏற்பட்ட படுகொலை விளைவில் அவர்களும் பொறுப்பேற்கிறார்கள்.

இன்று ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோத இராணுவ தாக்குதலை நியாயப்படுத்த அதே போன்ற பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை முன்வைத்து வருகிறது. மீண்டுமொரு முறை ஐரோப்பிய தலைவர்கள் வெளிப்படையாக கண்டன வார்த்தைகள் தெரிவிக்க மறுத்து வருகிறார்கள்.

ஈரானுடனான மோதலால் ஏற்படும் அபாயங்கள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், வரும் மாதங்களில் அமெரிக்க பின்னாதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் ஒரு தாக்குதலை நடத்தலாம் என்ற கணிப்புடன் மே இறுதியில் முன்னாள் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ்கா பிஷ்ஷர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். ஈரான் மீது அமெரிக்க ஆதரவிலான தாக்குதல் பற்றிய எவ்வித பொது விவாதமும் பொதுமக்களிடையே ஆத்திரமூட்டலையும் மற்றும் எதிர்ப்புக்கான ஒரு பாரிய அலையை தூண்டிவிடும் என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.

உண்மையில், ஈரான் பிரச்சனை குறித்து மேர்க்கெலுடன் வெளிப்படையாக சவால் விடும் ஒரே ஜேர்மன் தலைவர் வலதுசாரி சுதந்திர ஜனநாயக கட்சியின் (FDP) தலைவர் கைடோ வெஸ்டர்வெல மட்டுமே ஆவார். ஓர் இராணுவ தாக்குதலுக்கான வாய்ப்புக்கு புஷ் அழைப்பு விடுத்ததற்கு மேர்க்கெல் புஷ்ஷை எதிர்க்காதது "வருந்ததக்கதுடன், தவறானதும் ஆகும்" என அவர் குறிப்பிட்டார்.

2003ல் ஈராக் மீதான தாக்குதலுக்கு மேர்க்கெல் தமது சொந்த ஆதரவை வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு கட்டுரையில் வெளியிட்டிருந்ததால், மேர்க்கெல் தமது அரசாங்கத்தின் நிரந்தரமான ஆதரவாளர் கூட்டணியில் இருக்கும் ஒருவர் என்பதை அறிந்திருந்த நிலையில், ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கு தமது வாதத்தை நியாயப்படுத்த ஜேர்மனியின் பத்திரிகையாளர் கூட்டத்தை புஷ் பயன்படுத்தினார்.

புதனன்று பிரிட்டிஷ் தினசரி செய்தித்தாள், டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு பேட்டியில் தமது கருத்துக்களை மீண்டும் கூறிய புஷ், யுத்தத்தை நியாயப்படுத்த தாம் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்த போதினும், தாம் முழுவதுமாக தாக்குதலுக்கும், ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவளிப்பதாக புஷ் அறிவித்தார். பொய்யுரைகளின் அடிப்படையில் மீண்டுமொரு முறை ஒரு சட்டவிரோத யுத்தத்திற்கான நியாயப்பலுத்தல் ஜேர்மன் அதிபரால் முற்றிலும் எதிர்க்கப்படாமல் விடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி மீதான அதிருப்தியை நன்கு அறிந்திருந்த நிலையில், புஷ்ஷின் கடைசி உத்தியோகபூர்வ வருகையை பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வைக்க, ஜேர்மன் அதிபர் அலுவலகம் அதனால் முடிந்தவரை ஏற்பாடு செய்திருந்தது. எவ்வாறிருந்தபோதினும், ஜேர்மனியில் அவரின் வருகை விமர்சனங்களை பெறாமல் போகவில்லை. அவரின் வருகை தொடர்பாக ஜேர்மன் ஊடகத்தினதும் மற்றும் பொதுமக்களினதும் பிரதிபலிப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்மறையாக இருந்தன.

முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளின் ஜேர்மனிய விஜயங்கள், பேர்லினின் பாராளுமன்ற வாயில் போன்ற முக்கிய சின்னங்களின் முன்னால் தவிர்க்க முடியாத தொடர் அணிவகுப்புகள் மற்றும் பெரிய உரைகளை உட்கொண்டிருந்தன. முந்தைய தசாப்தங்களில், ஜோன் எப். கென்னடி போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளும், வெகு சமீப காலத்திய ரோனால்ட் ரீகன் மற்றும் பில் கிளின்டன் போன்ற குறைந்த பிரபலமான ஜனாதிபதிகளும் குடியரசிற்கான தங்களின் சுற்றுப்பயணத்தில் ஜேர்மன் அரசியல் மேற்தட்டால் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பத்திரிகைகளில் சாதகமான பாரிய பிரசுரத்தை அனுபவித்த இந்த அமெரிக்க ஜனாதிபதிகள், பெரியளவிலான ஜேர்மன் குடிமக்கள் கூட்டங்களிலும் பேச முடிந்தது.

ஜோர்ஜ் புஷ்ஷின் இந்த இறுதி விஜயத்தில் இருந்த பெரிய முரண்பாடு இதைவிட பெரிதாக இருக்கமுடியாது. குறைந்த காலத்திற்கு ஜேர்மனியில் தங்குவதற்கான அவரின் ஆயத்தங்கள், பெருமளவில், திருடன் இரவில் கள்ளத்தனமான செயல்படுவதற்கு ஒத்திருந்தன. அவர் அங்கு இருந்த வரை, பிரண்டன்பேர்க் மானிலத்தில் உள்ள மிகவும் கிராமப்பறத்தில் அமைந்தருக்கும் மேஸபேர்க் கோட்டையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். SZ செய்தித்தாளின் கருத்துப்படி, "மேஸபேர்க் நிறைய சாதகமான தன்மைகளை கொண்டிருக்கிறது. அது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மிகவும் தள்ளி இருக்கிறது, மேலும் சுற்றிலும் வேலி போடப்பட்டு முழுவதும் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அதுவொரு பழங்கால கோட்டையாக தெரிந்தது. ஆனால் உண்மையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், உயர் பாதுகாப்பு குழுக்களுடனும் இருந்தது..."

புஷ் விஜயத்தை உள்ளடக்கிய பெருமளவிலான பத்திரிக்கை விவரணங்கள் முகஸ்துதி வகையில் இல்லாமல் இருந்தன. குறிப்பாக, அவரின் விஜயத்தின் அதே நாளில் வெளியான SZ இன் விவரணத்தை குறிப்பிடலாம்.

"இரண்டு தலைமுறையாக பெரும்பான்மை ஜேர்மானியர்களுக்கு, புஷ் விரும்பப்படாத ஓர் அமெரிக்க ஜனாதிபதியாகவே இருக்கிறார். அவரின் நிர்வாகம் ஜேர்மனியில் மட்டுமின்றி பல நாடுகளிலும் அமெரிக்க அரசியல் முறைக்கு மோசமான மதிப்பை ஏற்படுத்தி தந்தது. கடந்த தசாப்தங்களில் அமெரிக்காவின் மீது ஜேர்மனியில் உருவாகி இருந்த நன்றியுணர்வு, மதிப்பு மற்றும் புரிதல் ஆகியவை புஷ்ஷின் குவாந்தாநமோ அரசாங்கத்தால் படிப்படியாக அழிக்கப்பட்டன. ஆனால் ஜேர்மன்-அமெரிக்க உறவுமுறையை பாதுகாக்கும் மேற்தட்டுக்கு இது பொருந்தாது. இந்த உறவு யுத்தத்திற்கு பிந்தைய ஜேர்மன் குடியரசு அடையாளத்தின் தனிச்சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் அது மேஸபேர்க் உயர்பாதுகாவல் பகுதியில் இருந்து காணமுடியாத சராசரி ஜேர்மனிய குடிமகனுக்கு பொருந்தாது."

அதே விவரணத்தின்படி, அமெரிக்க அரசியலைப் பொறுத்த வரை, பொதுவாக அமெரிக்காவிற்கு எதிராக கூட "வெறுப்பு, ஏளனம், கோபம், உறுதிப்பாடின்மை ஆகியவற்றின் கலவையாக புஷ் நிர்வாகத்தின் பாரம்பரியம் விளங்குகிறது." சர்வதேச அளவில் அமெரிக்கா மீதான எதிர்மறை விளைவுகள் ஜனாதிபதி புஷ் தலைமையுடன் மட்டும் முடிந்து விடாது, புதிய ஜனாதிபதியாக பாரக் ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட தொடரும் என அந்த விமர்சனம் ஓர் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டி இருந்தது.

ஒருநாள் முன்னதாக அதே செய்தித்தாள், புஷ்ஷூடன் இணைந்திருக்க விருப்பமில்லாத முன்னனி ஐரோப்பிய அரசியல்வாதிகள் குறித்து எழுதியிருந்ததாவது: "வாஷிங்டன்னில் இருக்கும் கூட்டாளி அசுத்தமான கதிர்வீச்சால் மாசடைந்தவர் என்பது ஒவ்வொரு ஐரோப்பிய அரசியல்வாதிக்கும் தெரியும். புஷ்ஷூடன் யார்யார் தொடர்பு கொண்டிருந்தார்களோ, அவர்கள் வாக்காளர்களால் கைவிடப்படுவார்கள்."

சமீபத்திய கருத்து கணிப்புகளின்படி, ஐரோப்பிய மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் புஷ் நிர்வாக கொள்கைகளை எதிர்க்கின்றனர்.

சகல கட்சிகளையும் சேர்ந்த ஜேர்மன் அரசியல் தலைவர்களும் புஷ் நிர்வாகத்தின் மீது தங்களின் கண்டனங்களினால் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஈகோன் பாஹர் கருத்துப்படி: "அமெரிக்க வரலாற்றில், தமது நாட்டை இந்த அளவிற்கு பாதிக்க செய்த வேறெந்த ஜனாதிபதியையும் எனக்கு தெரியாது." சர்வதேச அளவில் அமெரிக்காவின் பெருமை பெருமளவில் குறைந்ததற்கு புஷ் தான் முக்கிய காரணம் என முன்னாள் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஹன்ஸ்-டீட்ரிச் ஹென்சர் குறிப்பிட்டார்.

புஷ்ஷின் ஜனாதிபதி பதவி முடிவுக்கு வருகிறது என்ற ஐரோப்பிய அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் இருந்து வெளியான ஒட்டுமொத்த மீட்பு செய்தி என கிறிஸ்துவ சமூக யூனியனை சேர்ந்த வெளியுறவுத்துறை கொள்கை வல்லுனர் கார்ல்-தியோடர் வொன் குட்டன்பேர்க் வெளிப்படுத்தினார். "நாங்கள் ஒரு புதிய அமெரிக்க ஜனாதிபதியை எதிர்பார்க்கிறோம்." என அவர் அறிவித்தார்.

அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அமெரிக்க ஜனாதிபதியின் மீது கண்டனங்களைப் பொழிய தயாராகி விட்ட போதினும், அட்லாண்டிக்கிற்கு இடையிலான கூட்டினருக்கு இடையே பிளவுகளை அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து யாரும் குறிப்பிடவில்லை.

குறிப்பாக, அமெரிக்காவின் குறைந்த பிணையுள்ள அடமான கடன் நெருக்கடியுடன் ஆரம்பித்த சர்வதேச நிதி நெருக்கடியும், சமீபத்தில் பெரியளவிலான எண்ணெய் விலைகளின் உயர்வால் அது தீவிரமாக அதிகரித்திருப்பதும் ஜேர்மன் பேச்சுவார்த்தை நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்படாது இருக்க ஒரு மறைமுக உடன்பாடு இருந்ததுபோல் தோன்றியது. அதற்கு மாறாக ஸ்லோவேனியாவில் செய்ததுபோல், தமது ஈரானுக்கெதிரான புதிய பல விரோத அச்சுறுத்தல்களுடன் ஜேர்மனி விவாதங்களில் ஆர்ப்பரிக்க புஷ் அனுமதிக்கப்பட்டார்.

நிதி நெருக்கடி அட்லாண்டிக்கு இடையிலான நாடுகளின் பதட்டங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறது

2005ல் இருந்து அதிபராக இருக்கும் அங்கேலா மேர்க்கெல், தாம் புஷ் அரசாங்கத்தின் ஒரு நம்பிக்கையான கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளார். இருந்த போதினும், அவரின் நோக்கங்களின் அப்பாற்பட்டு, அதிகரித்து வரும் சர்வதேச நிதி மற்றும் அரசியல் நெருக்கடியானது, அட்லாண்டிக்கு அப்பாலுள்ள நாடுகளின் உறவுகள் உடையும் நிலைக்கு இட்டுச்செல்கின்றது.

இந்த ஆண்டிற்கு முன்னதாக, ஏப்ரலில் ருமேனியாவில் நடந்த நேட்டோ மாநாடு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பதற்றங்களைத் தோற்றுவித்தது. அம்மாநாட்டில், ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கு விரைவில் நேட்டோ அந்தஸ்து அளிப்பதன் மூலம் "பழைய ஐரோப்பாவை" விடுத்து "புதிய ஐரோப்பாவை" வலிமைப்படுத்தவும், ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தவும் சாதகமாக, புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தடுக்க பிரெஞ்ச் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன.

ஈரானுக்கு எதிராக புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட மூர்க்கமான நிலைப்பாட்டை உட்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் அரசியல் பதற்றங்களுடன், முக்கிய பொருளாதார மற்றும் நிதியியல் கேள்விகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வேறுபாடுகளும் விரைவாக எழுச்சி பெற ஆரம்பித்துள்ளன.

ஐரோப்பாவிற்கு வருவதற்கு முன்னால், ஜனாதிபதி புஷ் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னான்கி இருவரும் டாலர் நிலை குறித்து பேசினார்கள். அவர்கள் மறைமுகமாக, ஐரோப்பிய மத்திய வங்கியும், அதன் தலைவர் ஜீன் கிளெட ரீசேயும் அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களை விட சற்றே கூடுதலான வட்டி விகிதங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று விமர்சித்தார்கள்.

"அமெரிக்கா ஜேர்மன் மத்திய வங்கியின் நிழலை பார்க்கிறது" என்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸின் தலையங்கம் ஒன்று, இந்த பிரச்சனையின் மீது அட்லாண்டிக்கு அப்பாலுள்ள நாடுகளின் கூட்டினருக்கு இடையிலான முரண்பாடுகளை பின்வருமாறு குறிப்பிட்டது:

"1980 களின் பிற்பகுதியில், உயர்ந்த வட்டிவிகிதங்கள், குறைந்த நுகர்வுதன்மை மற்றும் ஸ்திரமற்ற டாலர் மதிப்பு ஆகியவற்றை ஜேர்மனியின் மத்திய வங்கி நிலைப்படுத்தி இருந்ததால் அமெரிக்கா (மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதி) அதன் மீது சீற்றம் கொண்டன. இருபது வருடங்களுக்குப் பின்னர், வளர்ச்சியை ஆதரிப்பதற்கான அமெரிக்க உறுதிப்பாடு மீண்டும் ஒருமுறை பணவீக்கத்தை நசுக்குவதற்கான ஐரோப்பிய உறுதிப்பாட்டுடன் முரண்பட்டிருக்கிறது. தற்போதைய யுத்தகளம் பரிமாற்ற விகிதமாக இருக்கும்."

சமீபத்திய மாதங்களில் யூரோவிற்கு எதிரான டாலரின் மதிப்பு வீழ்ச்சி அமெரிக்க உள்ளாட்டு சந்தையில் ஐரோப்பிய ஏற்றுமதியின் விலையை பெரியளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், யூரோவின் ஒப்பீட்டு வலிமை சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளிப்போர்களுக்கு அதை கவர்ச்சிகரமாக உருவாக்கி வருகிறது. இது உலகளவில் பெருமளவில் விரும்பப்படும் கையிருப்பு நாணயம் என்ற டாலர் பங்கினை மேலும் அச்சுறுத்துகிறது.

ஜேர்மன் மற்றும் ஐரோப்பா ஒட்டுமொத்தமும் நிதி சந்தைகளிலுள்ள அமெரிக்க நெறிமுறைகளின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயல வேண்டும், "மேலும் அவை தங்களின் பொருளாதார அதிகாரத்தை சர்வதேச நிதி சந்தைகளில் உள்ள விதிகள் மற்றும் வழிமுறைகள் மீது மாற்றி விட வேண்டும்" என்று அதே செய்தி தாளுக்கு பேட்டி அளிக்கும் போது ஜேர்மன் அதிபர் அவர் பங்கிற்கு இவ்வாறு பிரதிபலித்திருந்தார். புஷ்ஷூடனான கூட்டு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தமது ஐக்கியத்தைக் காட்டிய அதே நாளில் மெர்கேலின் இந்த பேட்டி பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது.

மேர்க்கெல் பைனான்சியல் டைம்ஸிடம் கூறியதாவது: "ஐரோப்பா ஒரு கணிசமான சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதற்காக யூரோ முறைக்கு நன்றி கூற வேண்டும். ஆனால், விதிகளைப் பொறுத்த வரை, நிதியியல் சந்தைகளின் தெள்ளத் தெளிவான வழிமுறைகள் மற்றும் முழுமையான தரமுறைகளில் நாம் ஒரு பழைய ஆங்கிலோ சக்சன் (Anglo-Saxon) ஆதிக்கமுறையையே வலுவாக பின்பற்றி வருகிறோம்... யூரோவின் ஸ்திரமான நாணய முறை நிதி சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் விதிகளில் போதிய செல்வாக்கைப் பெறவில்லை." என்றார்.

அமெரிக்காவில் அதன் பார்வையை திருப்பியுள்ள அதிகரித்துவரும் பொருளாதார வீழ்ச்சியினால் இழுக்கப்படும் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ நலன்களின் அபாயத்திற்கு, யூரோவின் பொருளாதார அதிகாரத்தைப் பிரதிபலிக்க கூடிய நிதியியல் வரையறைக்கான ஒரு சர்வதேச முறை என்பதே ஜேர்மன் அதிபரின் பிரதிபலிப்பாக இருந்தது. அதாவது, ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் பொருளாதார நலன்களை வலுவில்லாத ஒரு வல்லரசிடமிருந்து பிரிக்க அனுமதிக்கும் திடமான ஒரு கொள்கையைப் பின்பற்றும் போதினும், ஈரானுக்கெதிராக வளர்ந்து வரும் அமெரிக்க இராணுவ சாகச அச்சுறுத்தல்களுக்கு இணங்கி போக தயாராகவுள்ள ஒரு முழு ஐரோப்பிய அரசியல் மேற்தட்டு அடுக்கை குறித்து மெர்கேல் இதில் பேசுகிறார்.

சர்வதேச நிதி நெருக்கடி, சர்வதேச நிதியியல் நெறிமுறைகளின் புதிய வடிவங்களுக்கான முனைவுகள் ஆகியவையே வரவிருக்கும் G8 நாடுகளுக்கான மாநாட்டின் அட்டவணையில் முக்கிய இடம் பிடிக்கும். ஈரானை பயமுறுத்தும் அமெரிக்காவிற்கு ஜேர்மன் அதிபரின் தடைகளற்ற உடன்பாடு இருந்த போதினும், அட்லாண்டிக் கூட்டினருக்கு இடையே மேலும் ஏற்படவிருக்கும் முரண்பாடுகள் மற்றும் பிரிவினைகளும் தவிர்க்க முடியாதவையாகும்.