World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

In honor of the bicentenary of Abraham Lincoln and Charles Darwin

ஆபிரகாம் லிங்கன், சார்ல்ஸ் டார்வின் 200வது பிறந்த நாள் ஆண்டு விழாவிற்கான கெளரவம்

By Tom Eley and Daniel Douglass
12 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

வரலாற்றின் மிகக் குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வுகளில் ஒன்று ஆபிரகாம் லிங்கனும் சார்ல்ஸ் டார்வினும் ஒரே நாளில், பெப்ருவரி 12, 1809 அன்று பிறந்தது ஆகும். அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி என்ற முறையில் ஆபிரகாம் லிங்கன் மனிதகுலத்தின் அரசியல் விடுதலைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார். அறிவியல்துறையில் டார்வின் புத்திஜீவித விடுதலைக்கு மகத்தான பங்களிப்பை கொடுத்தார். உலக சோசலிச வலைத் தளம் இன்று இரு மிகப் பெரிய மனிதர்களுடைய நினைவிற்கும் புகழாரம் சூட்டுகிறது.

ஆபிரகாம் லிங்கன்

Abraham Lincolnஉள்நாட்டுப் போர் (1861-65) காலத்தில் அமெரிக்காவிற்கு தலைமை தாங்கியது மற்றும் அடிமை முறையை தகர்ப்பதற்கு சட்ட அடிப்படையை கொடுத்த விடுதலைப் பிரகடனத்தை இயற்றியதில் மத்திய பங்கு வகித்ததால் ஆபிரகாம் லிங்கனின் புகழ் வரலாற்றில் இடம் பெறுகிறது. ஆனால் அடிமை முறையும் மற்றும் அதை நம்பியிருந்த தென்புற தன்னலச் சிறுகுழு ஆகியவை இறுதியில் தெற்கில் கூட்டாட்சி இராணுவம் அடைந்த வெற்றியால்தான் அழிக்கப்பட்டன; இது நீண்டகாலமாக இருந்த குழுவாத மோதலை வரலாற்றாளர் ஜேம்ஸ் மக்பேர்சன் மிகவும் பொருத்தமாக கூறுவதுபோல் இரண்டாம் அமெரிக்க புரட்சியாக மாற்றியது.

அமெரிக்க வரலாற்றில் மற்றவர்களைவிட மிக அதிகமாக லிங்கனைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அவருடைய அசாதாரண அரசியல் போக்கின் ஒவ்வொரு கூறுபாடும் அநேகமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவருடைய பெயரைச் சூழ்ந்துள்ள சிறப்பு மிகப்பரந்த நிலையில் இருப்பதால் இந்த உண்மை மனிதரை, புகழ்ச்சி சின்னம் என்பதில் இருந்து பிரித்துப் பார்ப்பது கடினமாகி விட்டது. ஆனால் அடிமை முறை மற்றும் கூட்டாட்சியில் தலைவிதி ஆகிய அவருடைய காலத்தின் மிகப் பெரிய வரலாற்றுப் பிரச்சினைகளுடன் லிங்கனின் வாழ்வும் குணநலன்களும் பிணைந்து நின்றது குறிப்பிடத்தக்க கவனத்தைக் கொண்டுள்ளது.

தற்கால வரலாற்றில் மிகப் பெரியதும் மிக முற்போக்கானதுமான போராட்டங்களில் ஒன்றில் லிங்கன் மத்திய பங்கை ஆற்றியிருந்தார். முதல் அமெரிக்கப் புரட்சி தீர்க்க முடியாமல் விட்டுச் சென்றிருந்த அடிப்படை முரண்பாடுகளில் இருந்து உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாமல் எழுச்சியுற்றது; அதுவோ கிளர்ந்தெள செய்யும் வார்த்தைகளில் மனிதனின் சமத்துவத்தை பிரகடனப்படுத்தியிருந்ததுடன், அனைத்து வகை கொடுங்கோன்மையை அழிப்பதற்குப் புரட்சி பயன்படுத்தப்படலாம் என்ற உரிமையையும் வழங்கியிருந்தது.

தங்கள் சமத்துவம் பற்றிய அலங்காரச் சொற்களுக்கும் அடிமைமுறை இருக்கும் நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை பற்றி நன்கு அறிந்திருந்தாலும் 1776ம் ஆண்டு புரட்சியாளர்கள் "இந்த விந்தையான முறை" பற்றித் தங்கள் கொள்கைகளை சமரசத்திற்கு உட்படுத்தினர். அவர்களில் பலரும் அடிமைப் பிரச்சினை நாளடைவில் தானே தீர்ந்துவிடும் எனக் கருதியதில் ஐயமில்லை. ஆனால் புரட்சிக்கு பின் அடிமை உடைமை வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை அரசாங்கத்தின் நிறுவனங்கள் மீது படிப்படியாக அதிகரித்தது.

குடியரசின் ஆரம்ப காலத்தில் நிலப்பரப்பின் பரந்ததன்மை அடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பற்றிய பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பியது. தெற்கு பண்ணை வகுப்பு அதன் சலுகை பெற்ற அரசியல் நிலையை உறுதியுடன் பாதுகாக்கப் போராடும் வகையில் புதிய அடிமை பிராந்தியங்கள் குறைந்த பட்சம் எண்ணிக்கையிலும் மற்றும் வாக்களிக்கும் வலிமையிலும் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒப்பாக இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். தெற்கில் இருந்த அதிகரித்தளவில் சிதைவடைந்த உயரடுக்கின் சில பிரிவுகள் கரிபியன் தீவுகள் வரை படர்ந்திருக்கக்கூடிய ஒரு அடிமைப் பேரரசு பற்றிய கற்பனைகளை கூட கொண்டிருந்தன.

1846ம் ஆண்டு மெக்சிகோ மீது அமெரிக்க நடத்திய ஆத்திரமூட்டும் போர், டெக்ஸாஸில் இருந்து பசிபிக் பெருங்கடல் வரை பரந்த புதிய பகுதியில் இருக்கும் "அடிமைகளைக் கொண்ட சக்திக்கு" பலன் அளிக்கும் நோக்கத்தை கொண்ட பல நிகழ்வுகளை தொடக்கி வைத்தது, இறுதியில் உள்நாட்டு போருக்கு வழிவகுத்தன. இந்தப் போருக்கு விடையிறுக்கும் வகையில்தான் அப்பொழுது இல்லிநோய்சில் இருந்து தேசிய சட்ட மன்ற உறுப்பினராக இருந்த லிங்கன் தன்னுடைய மிகக் குறிப்பிடத்தக்க உரைகளில் ஒன்றை நிகழ்த்தினார்; இது ஒரு தவறான "இராணுவப் பெருமை--குருதி பெருக்கின் மீது படர்ந்து எழும் அழகிய வானவில்." என்று அதைக் கண்டித்தார். போருக்கான ஜனாதிபதி ஜேம்ஸ் கே. போல்க் கூறிய போலிக்காரணங்கள் அனைத்தையும் லிங்கன் ஆய்விற்கு உட்படுத்தி, அவை தவறு என்றும் போர் அரசியலமைப்பிற்கு பொருந்ததாது என்றும் அம்பலப்படுத்தினார். மெக்சிக-அமெரிக்கப் போரை அடுத்து, லிங்கன் காங்கிரஸை வெறுப்புடன் உதறித்தள்ளிவிட்டு, இல்லிநோய்ஸில் உள்ள ஸ்ப்ரிங்பீல்டில் தன்னுடைய சட்டத் தொழிலுக்கு மீண்டும் திரும்பினார்.

1850 களில் தெற்குப்புற உயரடுக்கு தன் அரசியல் மேலாதிக்கத்தை அரசாங்க அதிகார நெம்புகோல்களின் மீது பிணைத்து ஜனாதிபதி பதவி, காங்கிரஸ் மற்றும் தலைமை நீதிமன்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வந்தது. இந்த சக்தியை அதன் ஆத்திரமூட்டும் செயல்களாக மாற்றியமை வடக்கின் கருத்துக்களை பெருகிய முறையில் சீற்றமுற செய்தது.

1854ம் ஆண்டு கன்சாஸ்-நெப்ரஸ்கா சட்டம் இல்லிநோய்சின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஸ்டீபன் டக்ளஸால் சட்ட மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அடிப்படையில் 1820ம் ஆண்டு மிசூரி சமரசத்தை மாற்றி வடக்கு பகுதியிலும் "மக்கள் இறைமையின்" அடிப்படையில் அடிமை முறை விரிவாக்கப்பட அனுமதித்தது; இதையொட்டி கன்சாஸ் பகுதியில் அடிமைமுறை எதிர்ப்புப் பெரும்பான்மைக்கும் அடிமை முறை ஆதரவு சக்திகளுக்கும் இடையே மிசூரியில் அண்மைப்புறங்களில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. 1857ம் ஆண்டு இழிவான Dred Scott வழக்கு வந்தது; இதில் தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகர் டானி அடிமையாயினும் சுதந்திர மனிதராயினும் ஆதி இனவழி மக்கள், மக்கள் என்ற முறையிலோ அல்லது குடிமக்கள் என்ற முறையிலோ உரிமையற்றவர்கள் என்றும் காங்கிரசிற்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் அடிமை முறையை சட்டவிரோதமாக்குவதற்கான அதிகாரம் இல்லை என தீர்ப்பு அளித்தார்.

கன்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம் லிங்கனை மீண்டும் அரசியல் வாழ்விற்குக் கொண்டுவந்து குடியரசுக் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கு உந்ததுல் கொடுத்தது. 1854ல் நிகழ்த்திய Peoria உரையில் லிங்கன் புதிய பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்த கட்டத்தில் இருந்து, அவருடைய அரசியல் நட்சத்திரம் குடியரசுக் கட்சியுடன் இணைந்து உயர்ந்தது; டிரெட் ஸ்காட் தீர்ப்பிற்குப் பிறகு அதிகரித்தளவில் வட மானிலங்களின் அடிமை முறைக்கான எதிர்ப்பு மிகவும் உறுதியடைந்தது.

1858ல் குடியரசுக் கட்சிக்காக செனட் வேட்பாளர் நியமனத்தை ஒப்புக் கொண்ட லிங்கன் இல்லிநோய்சில் பெரும் புகழ் பெற்ற விவாதத் தொடர்களை ஸ்டீபன் டக்ளசுக்கு எதிராக நடத்தினார். பல ஆயிரக்கணக்கான இல்லிநோய்ஸ் மக்கள் பல நாட்கள் பயணித்து இந்த பல மணிநேர விவாதங்களைக் கேட்டனர். அடிமைப் பிரச்சினைதான் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக இருந்தது. தெற்கின்பால் சமரசக் கொள்கை வேண்டும் என்று டக்ளஸ் விரும்பினார்; ஆனால் லிங்கன் அடிமை முறை மேலும் விரிவாக்கம் செய்யப்படுவதையும் மற்றும் கன்சாஸ்-நெப்ரஸ்கா சட்டத்தையும் எதிர்த்தார். லிங்கன்-டக்ளஸ் விவாதங்கள் நாடு முழுவதும் கவனமாக கேட்கப்பட்டது. வரலாறு லிங்கனை ஈர்த்தது என்பது மட்டுமின்றி வடக்கில் வாழ்ந்த மக்களையும் ஈர்த்தது என்ற பொருளை இது கொடுத்தது. தேர்தலில் அவர் சிறு எண்ணிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலும், ஒரு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக லிங்கன் வெளிப்பட்டார்.

1860 பெப்ருவரி கடைசியில் நியூயோர்க் நகரத்தில் Cooper Union உரை நிகழ்த்தியதுதான் குடியரசுக் கட்சியின் தலைமையை நோக்கி லிங்கன் உயர்வதற்கு காரணமாயிற்று. அந்த உரை டக்ளஸின் கருத்தான மக்கள் இறைமை பற்றிய பயனற்ற தன்மை பற்றி நன்கு கவனத்துடன் ஆராய்ந்து தொகுத்துக் கூறப்பட்ட கருத்துத் தொகுப்பு ஆகும். லிங்கனுடைய அறிவார்ந்த தன்மையின் ஆற்றலை இப்பேச்சு நிரூபணம் செய்தது மட்டும் இல்லாமல் அவருடைய மகத்தான அரசியல் திறமைகளையும் வெளிப்படுத்தியது. இந்தத் திறன்கள் அவரை இரை விட நன்கு அறியப்பட்டிருந்த வேட்பாளர்களான நியூயோர்க் செனட்டர் வில்லியன் சீவர்ட், ஒகையோவின் ஆளுனர் சால்மன் சேஸ் போன்றோரை 1860ம் ஆண்டு குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பு நியமனத்தில் தோற்கடிக்க உதவின.

1860ம் ஆண்டு நால்வர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றார்; ஜனநாயகக் கட்சியின் ஸ்டீபர் டக்ளஸைத் தோற்கடித்தார்; டக்ளஸ் சமரசத்திற்காகக் கொண்டிருந்த கனவுகள் தெற்கு ஜனநாயகவாதி கென்டக்கியின் ஜோன் பிரெக்கென்ரிட்ஜ் வேட்பிற்கு ஆதரவாக அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே இருந்ததால் சிதைந்து போயின. எஞ்சியிருந்த விக் கட்சியைச்(Whig Party) சேர்ந்தவர்கள் ஜோன் பெல்லை வேட்பாளராக்கினர். நாட்டின் இருந்த துருவமுனைப்படுத்தப்பட்ட நிலையால் லிங்கன் நியூ ஜேர்சியைத் தவிர அனைத்து வடக்கு மானிலங்களிலும் வெற்றி பெற்றார்; ஆனால் இரு தெற்கு மானிலங்களைத் தவிர மற்ற இடங்களில் வாக்கெடுப்பில் இருந்து தடைக்கு உட்பட்டார்.

பெரும்பாலான தெற்கு மானிலங்கள் மூன்று மாதங்களுக்குள் கூட்டாட்சியில் இருந்து பிரிந்த நிலையைத்தான் லிங்கனின் வெற்றி எதிர்கொண்டது. ஏப்ரல் 1861ல் தெற்குப் படைகள் தெற்கு கரோலினாவில் இருந்து சும்டர் கோட்டையில் இருந்த ஒரு கூட்டாட்சி இராணுவத் தளத்தைத் தாக்கின. இதற்கு விடையிறுக்கும் வகையில் லிங்கன் உடனே மக்களைத் திரட்டி, அவர் ஒரு கிளர்ச்சி என்று அதற்குப் பின் குறிப்பிட்டுவந்தால் எதிர்ப்பைத் தோற்கடித்தார். அரசியலில் கடுமையான சோதனைகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.

கூட்டாட்சி நிலைநிறுத்தப்பட எந்த வித சமரசத்திற்கும் விருப்பம் காட்ட விரும்பாத லிங்கனின் நிலைப்பாடு வடக்கே பலருடைய புரிந்துகொள்ளத் தன்மை மற்றும் எதிர்ப்பைக் கண்டது. அவர்கள் தெற்கின் கிளர்ச்சியைத் தோற்கடிப்பது இயலாது அல்லது உகந்தது அல்ல என்று நம்பினர். அவர்களுள் முக்கிய இராணுவத் தலைமையிட உறுப்பினர்கள், தலைமைத் தளபதி ஜோர்ஜ் மக்கிளெல்லன் உடன்பட பலர் இருந்தனர்; இவர்கள் போரைத் தேவையான உறுதிப்பாட்டுடன் தொடர மறுத்தனர்; அது கிட்டத்தட்ட துரோகத்திற்கு ஒப்பானது.

லிங்கனின் துவக்க விருப்பம் அடிமை முறையை அழித்துவிடுதல் அல்ல என்பது நன்கு தெரிந்ததுதான்; தனிப்பட்ட முறையில் அவர் அடிமை முறையை எதிர்த்தாலும், கூட்டாட்சியைக் காப்பாற்றுவதற்காக 1862ம் ஆண்டு அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்ட ஹோரேஸ் கிரீலிக்கு புகழ் பெற்ற கடிதத்தில் அவர் எழுதியதாவது: "எந்த அடிமையை விடுவிக்காமல் கூட்டாட்சியை காப்பாற்ற முடியும் என்றால், நான் அதைச் செய்வேன். அனைத்து அடிமைகளையும் விடுவிப்பதின்மூலம் காப்பாற்ற முடியும் என்றால், அதையும் செய்வேன்; சிலரை விடுவித்து, சிலரைப் பற்றி ஒன்றும் செய்யாமல் இருப்பதின் மூலம் கூட்டாட்சியைக் காப்பாற்ற முடியும் என்றால், அதையும் நான் செய்வேன்." அடிமை அகற்ற வேண்டும் எனக் கூறிய பிரெடெரிக் டுக்ளஸ், வில்லியம் லாயிட் காரிசனட் போன்றவர்கள் இந்த நிலைப்பாடு போதாது என்றும் தோற்றுவிடும் என்றும் நினைத்தனர். இறுதியில் அகற்ற வேண்டும் என்பவர்களின் கருத்துத்தான் சரியெனப் போயிற்று.

தெற்குப் பகுதியின் கிளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கு கூட்டாட்சி புரட்சிகர கொள்கைகளை ஏற்க வேண்டும் என்ற முடிவிற்கு இறுதியில் லிங்கன் வந்தார்; கூட்டாட்சி தெற்கத்திய தன்னலக்குழு மற்றும் அடிமை முறையை அழிக்காமல் காப்பாற்றப்பட முடியாது என்பதை உணர்ந்தார். இந்த முடிவிற்கு அவர் வந்தபின், இந்தப்புரட்சிகர இலக்கு அவரை அமெரிக்காவில் மட்டுமில்லாமல் தற்கால உலக வரலாற்றிலேயே பெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக உயர்த்தியது;

பெரும் தேர்ச்சி பெற்ற அசாதாரண செயலாற்றல் படைத்தவர் என்று லிங்கன் தன்னை நிரூபணம் செய்து கொண்டார். நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலை நிரூபித்தார்; நிகழ்வுகளின் போக்கில் அதன் தன்மை எப்படி இருக்கும் என்பதை அறிந்து, ஒரு முடிவு எடுக்குமுன் முக்கிய பிரச்சினைகளை முதிர்வடைய விட்டார். சில நேரங்களில் அவர் நிகழ்வுகள் வளர அனுமதித்த பொறுமை காலம்கனியும்வரை காத்திருப்பது என்ற அணுகுமுறையை நாடுவதுபோல் தோன்றியது.

ஒரு ஜேர்மனிய செய்தித்தாளுக்கு அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றி கட்டுரைகள் எழுதிவந்த கார்ல் மார்க்ஸ் இத்தன்மையை 1862 இல், லிங்கன் மக்கிளெல்லனை பதவி நீக்கம் செய்த போதே குறிப்பிட்டு எழுதினார்: "ஜனாதிபதி லிங்கன் நிகழ்வுகளின் போக்கு மற்றும் பொதுமக்களின் பொது உணர்வு இனியும் தாமதிக்கப்படக்கூடாது என்று காட்டியபின்தான் அடுத்தபடி முன்வைக்க முன்வந்தார். ஆனால் "மூத்த ஆப்"(Old Abe) அத்தகைய திருப்பு முனை வந்துவிட்டது என்று உணர்ந்துவிட்டால், நண்பர்களையும் எதிரிகளையும் வியக்க வைக்கும் அளவிற்கு திடீர் நடவடிக்கைளில் ஈடுபட்டு விஷயத்தை முடிவிற்குக் கொண்டுவந்து விடுவார்."

உள்நாட்டுப்போரை உறுதியாகத் தொடர்ந்ததால்தான் லிங்கனுடைய பெயர் விடுதலை என்றும் பெரும் வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சியுடன் அடையாளம் காணப்படுகிறது. 1863 ஜனவரி 1ம் தேதி லிங்கன் விடுதலைப் பிரகடனத்தை(Emancipation Proclamation) வெளியிட்டார்; "கூட்டாட்சிப் பகுதிக்குள் இருக்கும் அடிமைகளாக இருப்பவர்கள் அனைவரும் இனி சுதந்திரமாக இருப்பர்" என்று அது பறையறிவித்தது. விடுதலைப் பிரகடனம் போரின் இராணுவத் தேவைகளை ஒட்டி ஏற்பட்டது. ஆனால் முதல் தடவையாக அது வெளிப்படையாக போரின் புரட்சிகரத் தன்மையை ஒப்புக் கொண்டது. அடிமைகளை சட்டபூர்வமாக சுதந்திர மனிதர்களாக அறிவித்ததின் மூலம் ரஷியப் புரட்சிக்கு முன்னதாக உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய வகையில் தனியார் சொத்தை அரசாங்க நடவடிக்கை மூலம் பறித்தனூடாக லிங்கன் தெற்கே இருந்த முழு சமூக ஒழுங்கமைப்பிற்கும் ஒரு மரண அடி கொடுக்க இலக்கு கொண்டார்.

ஐரோப்பாவில் வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் அடிமை முறையை அழித்தால் லிங்கனை ஒரு மாபெரும் முற்போக்கான செயலுக்கு தலைவராகக் கண்டனர். இக்கருத்துடன் அவர்கள் தங்கள் முழுமையாக அடையாளம் கொண்டு தங்கள் அரசியல் ஒற்றுமை உணர்வையும் கொடுத்தனர். உள்நாட்டுப் போர் இங்கிலாந்தின் பருத்தி ஆலைகளை இயங்காதுசெய்த போதிலும்கூட, இது உண்மையில் குறிப்பாக ஆங்கிலத் தொழிலாளர் வர்க்கத்திற்கு பொருந்தும். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் இருந்து ஆங்கில முதலாளித்துவத்தினர் பெரும் இலாபங்களை ஈட்டியபோதிலும்கூட, பிரிட்டிஷ் தொழிலாளர்களிடம் இருந்த அடிமை முறை பற்றிய வெறுப்பு உணர்வு 1864 வரை தீவிரமாகக் கருதப்பட்ட தெற்கிற்காக போரில் ஆங்கில முதலாளித்துவத்தினர் தலையிடுதல் என்பது அரசியல்ரீதியாக இயலாததாக போயிற்று.

மறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதலாம் அகிலத்தின் சார்பில் மார்க்ஸ் லிங்கனுக்கு பாரட்டுக்களைத் தெரிவித்தார். "தொழிலாளர் வர்க்கத்தின் பலம்வாய்ந்த, உறுதியான மைந்தருக்குத் தன் நாட்டை சங்கிலியால் பிணைக்கப்பட்ட இனத்தை மீட்பதற்கும் ஒரு சமூக உலகத்தை மறு கட்டமைக்கும் போராட்டத்தில் இடையறாமல் ஈடுபடச் செய்து தன் நாட்டின் தலைமையை மேற்கொள்ளும் பொறுப்பு லிங்கனுக்கு ஏற்பட்டது" என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்ஸ் எழுதிய கடிதம் பெருமையுடன் வரவேற்கப்பட்டு பிரிட்டனில் லிங்கனின் தூதராக இருந்த ஜோன் ஆடம்ஸின் பேரன் சார்ல்ஸ் பிரான்ஸிஸ் ஆடம்ஸ் மூலம் பதிலளிக்கப்பட்டது.

அவருடைய செயல்களின் அடித்தளத்தில் இருந்த நேர்மையின் வலிமைதான் ஒரு சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அவரை கூட்டாட்சியின் சீரிய இலக்குகள் பற்றி அசாதாரண, பெரும் நயத்துடன் கூடிய சொற்களில் கூற முடிந்தது. சுதந்திரப் பிரகடனத்தில் உள்ள தோமஸ் ஜெபர்சனுடைய உரைநடைக்கு ஒப்ப இருந்த லிங்கனின் உரைகள் அவற்றின் பெரும் உயிர்ப்பை இன்னமும் இழந்துவிடவில்லை; அவருடைய சிறந்த சூத்திரங்கள் ஆங்கில மொழியின் மிகப் பெரிய சொற்சுவைப் பகுதிகளில் ஒன்றாக உள்ளன.

உலகம் கவனிக்கும்படி அமெரிக்க இலக்கியம் ஒரு கலையுணர்வைப் பிரதிபலித்த நேரத்தில் லிங்கன் வெளிப்பட்டிருந்தார். நாதானியன் ஹாதோர்ன் மற்றும் ஹெர்மன் மெல்வில்லே இருவரும் இவருடைய சமகாலத்தவர்கள் ஆவர். லிங்கனுக்கு இலக்கியச் செல்வாக்கின் முதன்மையாக இருந்தவை அரசர் ஜேம்ஸின் விவிலியம் மற்றும் ஷேக்ஸ்பியரின் நூல்கள் ஆகும்; முந்தையதில் அவருடைய ஆர்வம் முற்றிலும் இலக்கிய நயம் பற்றியதாக இருந்தது. அவர ஒரு திருச்சைபையிலும் சேர்ந்ததில்லை; ஒரு முறை அறிவித்தார்: "விவிலியம் என்னுடைய நூல் அல்ல; கிறிஸ்துவம் என்னுடைய சமயம் அல்ல. கிறிஸ்துவக் கோட்பாட்டின் நீண்ட, சிக்கல் வாய்ந்த அறிக்கைகளுக்கு நான் ஒப்புதுல் தர இயலாது." அவருடன் இருந்தவர்கள் எப்படி லிங்கன் மனப்பாடமாக பல நீண்ட பகுதிகளை ஷேக்ஸ்பியரின் வரலாற்று, சோகவியல் நாடகங்களில் இருந்து ஒப்பித்தார் என்பதை நினைவு கூர்ந்துள்ளனர்.

விவிலிய உவமைகளும் கவியின் வரலாற்று நாடகத்தின் பார்வையும் லிங்கனின் உரைநடையில் மிளிர்ந்தன. 1863ம் ஆண்டு கெட்டிஸ்பர்க் உரையில், லிங்கன் போருக்கான போராட்டம் "மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசாங்கம்" நிலைத்திடுவதற்காக என்று வரையறுத்தார். 1858ல் டக்ளஸுடனான ஒரு விவாதத்தில் லிங்கன், "நான் ஒரு அடிமையாக இருக்க மாட்டேன் ஆகையால், நான் ஒரு எஜமானனாகவும் இருககமாட்டேன். இது மக்களாட்சி பற்றிய என்னுடைய கருத்தைக் குறிக்கிறது" என்றார். இல்லிநோய்ஸ் மானிலத்தில் இருந்து குடியரசு கட்சியின் செனட் வேட்பாளர் நியமனத்தை 1858ல் ஏற்கையில் தீர்க்கதரிசனமாக லிங்கன் "தன்னுள்ளேயே பிளவுகளை வைத்திருக்கும் ஒரு வீடு நிலைத்திருக்க முடியாது'' என எச்சரித்தார்.

தன்னுடைய இரண்டாம் ஆட்சித் துவக்க உரையில், லிங்கன் உள்நாட்டுப் போரில் இருந்த சமயக் குறிப்புக்கள் பற்றி அவநம்பிக்கையுடன் கூடிய ஒவ்வாத நிலையைத்தான் குறிப்பிட்டார்: "இரு பகுதியினரும் ஒரே விவிலியத்தைப் படிக்கின்றனர், ஒரே கடவுளை வழிபடுகின்றனர்; மற்றவருக்கு எதிராக ஒரே கடவுளின் துணையைத்தான் நாடுகின்றனர். மற்றவர்களுடைய முகத்தில் இருந்து கசியும் வியர்வையில் இருந்து வரும் ரொட்டியை அபகரிப்பதற்கு மனிதர்கள் ஒரு நியாயமான கடவுளின் உதவியைக் கோருதல் விந்தையாக உள்ளது; ஆனால் நாம் எவர் பற்றியும் தீர்ப்புக் கூற வேண்டாம், ஏனெனில் நாமும் தீர்ப்பிற்கு உட்பட்டர்கள்தாம்."

உண்மையான மனிதாபிமானம் நிறைந்தவராக லிங்கன் இருந்தார். அவருடைய தளபதிகள் அதிர்ச்சியுறும் வகையில் போரில் ஈடுபடாமல் ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அவர் நிறுத்திவைத்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒற்றை நிர்வாகத்துறை கருணை மன்னிப்பில் அவர் சொந்த முறையில் 269 சியோக்ஸ், 1862ல் மின்னிசோடா எழுச்சியின் போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்தார்.

அறிவார்ந்த நகைச்சுவையுடன் கதைகள் கூறும் ஆற்றல் பற்றியும் அவர் நன்கு அறியப்பட்டிருந்தார். ஆனால் இதே குணநலன்களுடனை இணைந்த வகையில் ஒரு ஆழ்ந்த துக்க உணர்வும் அவரிடம் இருந்தது; அவருடைய புகைப்படங்களில் இது நன்கு புலனாகும். உள்நாட்டுப் போரின்போது, போர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றிய முடிவுகளை அறிவதற்கு வாஷிங்டனில் ஒரு தந்தி அலுவலகத்தில் காத்திருப்பார். நான்கு ஆண்டுகள் போர் நீடித்து அவருடைய குடும்பத்தை தனிப்பட்ட சோகங்களும் கொந்தளிப்பும் நிறைந்து அவருடைய மனைவி மேரி டோட்யும் தாக்கியது போலவே 600,000 உயிர்களைக் குடித்தது லிங்கனின் மனத்தில் பெரும் சுமையைக் கொடுத்தது. இத்தம்பதியினரிடம் இருந்து மரணம் இரு குழந்தைகளை எடுத்துக் கொண்டது; 1862ல் 11வது வயதில் ஒருக்கால் டைபாயிட் காய்ச்சலில் இறந்த இரண்டாம் குழந்தை வில்லி மீது லிங்கன் குறிப்பாக பாசத்துடன் இருந்தார்.

ஒரு கவித்துவப் பெரும் சோகம் போல் லிங்கனே 1865 ஏப்ரல் 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்; வேர்ஜீனியாவில் Appomattox Court House இல் கான்பெடரசி சரணடைந்த ஒரு வாரத்திற்குப் பின் இது நடந்தது. வாஷிங்டனில் இருந்து போர்ட்ஸ் நாடக அரங்கில் ஒரு நகைச்சுவை நாடகத்தை லிங்கன் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர்களில் ஒருவரான ஜோன் வில்கிஸ் பூத் இவருடைய பார்வையாளர் அறையில் நூழைந்து தலையின் பின்புறம் சுட்டுவிட்டான்.

லிங்கனின் படுகொலையை அடுத்து ஐரோப்பிய சோசலிச தொழிலாளர்களின் சார்பில் மார்க்ஸ் மீண்டும் தன்னுடைய பேனாவை எடுத்து லிங்கனின் தகுதியை விட மிகக் குறைந்த ஆற்றல் பெற்றிருந்த துணை ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்சனுக்கு எழுதினார். "கடுமையான சூழ்நிலைகளினால் லிங்கன் பாதிப்புறவில்லை; அதேபோன்று வெற்றியினால் பெரும் களிப்பையும் அடையவில்லை; தன்னுடைய பெரிய இலக்கை அசைவுறாமல் அடைய முற்பட்டார்; குருட்டுத்தன அவசரசத்தினால் அந்த இலக்கை அவர் சமரசத்திற்கு உட்படுத்தியதில்லை; மெதுவாகத் தன்னுடைய நடவடிக்கைகளைக் கனியவிட்டார்; அவற்றில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை; மக்களுடைய ஆதரவு என்ற நிலையில் அதிக எழுச்சி பெற்று எதையும் செய்ததும் இல்லை; மக்களுடைய உணர்வு மங்கிய நேரத்தில் அதற்காக தன்னுடைய ஊக்கத்தைக் கைவிட்டதும் இல்லை; கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போதுகூட அவற்றை ஒரு குழந்தையின் இதயத்தின் கருத்துக்களால் இளக வைத்தார்; இருண்ட காட்சிகளைக்கூட நகைச் சுவை என்ற சிரிப்பால் ஒளிர வைத்தார்; தன்னுடைய மகத்தான பணியை ஏதோ ஆகாயத்தில் இருந்து தோன்றியவர்கள் போன்ற ஆட்சியாளர்கள் பெரும் ஆடம்பரத்துடனும் அலங்காரத்துடனும் செய்ததை இவரோ பணிவுடனும் எளிமையுடன் செய்து முடித்தார்; சுருங்கக்கூறின், பெரும் செயல்கள் புரிவிதல் வெற்றிகண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர்; ஒரு பொழுதும் நன்மையை விட்டுக் கொடுத்ததில்லை. இந்த பெரிய, சிறந்த மனிதனின் அடக்கம் மிகப் பெரியது; ஒரு தியாகியாக அவர் மடிந்தபின்தான் உலகம் அவரை ஒரு தலைவர் எனக் கண்டுகொண்டது."

இத்தகைய அவருடைய நம்பிக்கையும் மனிதத்தன்மை இணைந்து உள்நாட்டுப் போர் என்ற பெரிய செயலைத் தொடர்ந்ததுதான் நம்முடைய உணர்வுகளில் லிங்கன் பிடிப்புடன் இருப்பதற்குக் காரணம் போலும். தற்கால வரலாற்றில் இத்தகைய ஆழ்ந்த பிரியத்தை இறந்து 154 ஆண்டுகளுக்குப் பிறகு எழுப்பும் திறன் கொண்ட நினைவைக் கொண்ட மற்றொரு நபரை சிந்திப்பது கடினம் ஆகும். 1865ல் லிங்கன் படுகொலையுண்டது இப்பொழுதும் ஒரு பெரிய வரலாற்றுப் பெரும் சோகமாகத்தான் உணரப்படுகிறது.

ஆனால் அவருடைய மரணத்திற்குப் பின் ஒரு தலைமுறைக்குள் உத்தியோகபூர்வமான லிங்கன் பற்றிய பாராட்டு நிகழ்ச்சிகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அவருடைய வாழ்வின் புரட்சிகர முக்கியத்துவத்தை அகற்றுவதற்கு வாய்ப்பைக் கொடுத்து உள்நாட்டுப் போர் முன்வைத்திருந்த புதிய முரண்பாடுகளை புறக்கணிக்கவும் உதவின. 1877 ஐ ஒட்டி, அமெரிக்காவில் வெடித்தெழுந்த சமூக வர்க்கங்களின் பூசல்கள், 19ம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதி முழுவதும் பாரிய குருதி சிந்திய வேலைநிறுத்தங்களுக்கு இடையே வெளிப்பாட்டைக் கண்டன. இப்புதிய பூசல் அக்கட்டத்தில் இருந்து அமெரிக்க வரலாற்றின் முக்கிய உந்துதல் சக்தியாக இருந்தது.

அதே 1877ம் ஆண்டு, தெற்கு மறுசீரமைக்கப்படல் கைவிடப்பட்டதும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. குடியரசுக் கட்சி மூலம் செயல்பட்ட வடபுல முதலாளித்துவத்தினர், தோற்கடிக்கப்பட்ட தெற்கு உயரடுக்குடன் ஒரு உடன்பாட்டைக் கொண்டனர். அது பிந்தையவர்களின் அரசியல் மறுசீரமைப்பிற்கு அனுமதித்தது; ஆனால் அதற்கு ஈடாக தடையற்ற தொழில்துறை முதலாளித்துவம் மற்றும் அதன் கொள்கைகள் நாடு முழுவதும் மேலாதிக்கம் செலுத்தும் என்பது ஏற்கப்பட்டது.

லிங்கனின் படுகொலையுற்றது மறுசீரமைப்புக் காலத்தில் வெளிப்பட்ட அரசியல் நெருக்கடியை அவர் எவ்வாறு எதிர்கொண்டிருந்திருப்பார் என்ற வினாவிற்கு விடை கொடுக்காமல் செய்துவிட்டது. ஆயினும்கூட கூட்டாட்சி முதலாளித்துவ வகைகளில் வளர்ச்சியுற்றது ஒரு வரலாற்று நிர்ணயம் பெற்ற வழிவகையாகும்; அதன் கூறுபாடுகள் அனைத்தும் அதில் இருக்கும். மறுசீரமைப்பின் இறுதிக் காட்டிக் கொடுப்பை லிங்கனால் தடை செய்திருக்க முடியுமா என்பதை கற்பனை செய்வதும் கடினம் ஆகும்.

அடுத்த தசாப்தங்களின் போக்கில் ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் பெரும் எண்ணிக்கை அதன் குடி உரிமைகளைப் பெறவில்லை; நிற பாகுபாடு ஆட்சி சுமத்திய இழிவுகளுக்கு உட்பட்டது; இதில் பலவித கொடூரங்கள், அடித்துக் கொலை செய்யப்படல் உட்பட நிகழ்ந்தன. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு முறையாக சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டது உள்நாட்டுப் போர் முடிந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட 1960 கள் வரையிலும் தொடர்ந்தது.

ஆனால் இந்த வரலாறு ஒரு உண்மையான முன்னேற்றகரமான, ஜனநாயகப் புரட்சியின் தலைவர் என்னும் லிங்கனின் நிலைமை மதிப்பைச் சிறிதும் குறைக்கவில்லை. மற்ற பெரும் வரலாற்று நபர்களைப் போலவே, லிங்கன் அவருடைய காலத்தின் சுவடு மற்றும் மட்டுப்படுத்தல்களைக் கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முற்போக்கான வரலாற்றுப்போக்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வில் அதன் காலத்தைவிட உயர்ந்து நின்று அதைதொடர்ந்து வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு அறிவுரை வழங்கும். லிங்கனுடை செயல்கள், அதை நியாயப்படுத்த அவர் கையாண்டு விளக்கிய சொல்லாட்சி தொடர்ந்து ஊக்கத்தை அளிக்கும்.

சார்ல்ஸ் டார்வின்

Charles Darwinஉயிரினங்களின் தோற்றம் பற்றி என்னும் சார்ல்ஸ் டர்வினின் நூல் வெளியீடு இயற்கை உலகு பற்றிய நம் உணர்தலில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது. அறிவு ஓளி சான்ற காலத்தில் அறிவியல் சாதனைகளை உள்ளடக்கி, டார்வின் இயற்கை வரலாற்றில் சிக்கல் வாய்ந்த வடிவமைப்புக்கள் தோன்றுவதின் இயற்கையை ஆளும் இயக்கவியல் விதிகளைக் கண்டுபடித்தார். அவர் பிறந்து 200 ஆண்டுகளில் டார்வினின் இயற்கைத் தேர்வில் கூர்ப்பு என்னும் கோட்பாடு மிகப் பெருகி வரும் உயிரியல் அறிவியல் துறையில் முக்கிய கோட்பாடாக உள்ளது.

இயற்கைத் தேர்வு கூர்ப்பு விதியின் கண்டுபிடிப்பு அறிவுவொளி காலத்து இயற்கை வாதப் பின்னணியில் அறியப்பட வேண்டும்; இதில் டார்வினின் கோட்பாடு மிக அரிய உச்சக் கட்டம் ஆகும். ஒளி அறிவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் கோப்பர்நீக்கஸ், ப்ரூனா மற்றும் கலிலியோ ஆகியோரை புனிதஏடுகளில் இருந்து அல்லாது அவதானத்தால் அறியப்பட்ட விதிகளால் உலகம் ஆளப்படுவது என்ற மதரீதியான அண்டக் கோட்பாட்டிற்குப் பதிலாக அறிவியல் சார்ந்த அண்டம் கருத்தாய்வு பற்றிக் கூற வைத்தது. இதேபோல் இயற்கைத் தேர்வு விதி, டார்வினின் உயிரினங்களின் தோற்றம் பற்றிய நூலில் கோடிட்டுக் காட்டப்பட்டது, மிகப் பரந்த அறிவு உடல்கூறு அறிவியல்களின் மூலம் குவிக்கப்பட்டதில் இருந்து ஒழுங்குற இணைக்கப்பட்டதுடன், உயிரின வளர்ச்சியில் ஆராய்ச்சி, புவியியல் தொடர்பு, அறிவியல் ஆய்வுப் பயணங்கள் உலகம் முழுவதும் நடத்தப்பெற்றவை ஆகியவறறில் இருந்தும் முடிவுகள் வந்தன.

18, 19ம் நூற்றாண்டு கடற்பயணங்களில் கண்டறியப்பட்ட உயிரினங்கள் பெருமளவு வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றின் உடற்கூறுபாடுகளின் வேறுபாடுகளை ஒட்டி இயற்கை அறிவியல்வாதிகளான கார்ல் லின்னியஸ், ஜெப்ரி செயின்ட் ஹிலேர், ஜோர்ஜெஸ் குவியர், ரோபர்ட் ஒவென் போன்றோரால் வகைபிரிக்கப்பட்டன. உயிரினங்கள் உடற்கூறுபாடு பிணைப்புக்களை ஒட்டி படிமுறைரீதியாக வகைப்படுத்தப்பட்டன; இவை அவை முறையே உயிர் வாழ்ந்த நிலைமையை ஒத்து அறியப்பட்டன.

காம்டே டி பபான், லாமார்க், ரோபர்ட் சேம்பர்ஸ் மற்றும் டார்வினின் பாட்டனார் எராஸ்முஸ் ஆகியோர் உட்பட சில இயற்கைவாதிகள் டார்வினின் காலத்திற்கு முன்பே உயிரனங்கள் காலக்கிரமத்தில் மாறின என்ற கருத்தை முன்வைத்தனர். புவியியல் வல்லுனர் சார்ல்ஸ் லயெல் பூமிக்குக் கீழ் புதைந்து கிடக்கும், தற்பொழுது காணப்படாத உயிரினங்களின் எலும்புகளைப் பற்றிக் கூறுகையில் வாழ்க்கை என்பது பூமியின் நீண்டகால வரலாற்றில் கணிசமாக மாறியுள்ளது என்பதை உணர்ந்தார்; ஆனால் இந்த மாறுதல்களை விளக்குவதற்கு தக்க கருவிஅமைப்புமுறைகள் இல்லாததால் அவர் இவை இறைவனின் படைப்புக்கள் என்றார்.

HMS Beagle கப்பலில் 1836ல் பயணிக்கத் துவங்கியபின், டார்வின் உயிரோடு இருக்கும் மற்றும் அழிந்துவிட்ட உயிரினங்கள் "சுதந்திரமாகப் படைக்கப்படவில்லை, ஆனால் மற்ற உயிரினங்களில் இருந்து மாறுபட்ட விதத்தில் தோன்றின என்று" கூறினார். அனைத்து உயிரினங்களையும் மாற்றங்கள் கட்டுப்படுத்துகின்றன என்றும் இந்த மாற்றங்கள் மரபுக் கோட்பாட்டு அடிப்படையில் பல தலைமுறையாக கடத்தப்பட்டுவருகின்றன என்றும் டார்வின் கூறினார். உயிர்வாழ்வதற்கான போராட்டம் பற்றியும் அவர் கண்டறிந்து, சில உயிரின வகைகள் தப்பிப் பிழைக்குத் தகமையை கொண்டிருந்ததையும், சிலவற்றில் அது இருக்கவில்லை என்பதைக் கண்டார். இவற்றை ஒட்டி 1859ல் உயிரினங்களின் தோற்றம் என்பதில் பின்வருமாறு தொகுத்துக் கொடுத்தார்.

"இவ்விதத்தில் இயற்கைக்கும் பஞ்சம், இறப்பு ஆகியவற்றிற்கும் எதிரான போராட்டத்தில் இருந்து, நாங்கள் விளங்கிக்கொள்ள விரும்பும் முக்கிய பிரச்சனைக்கான முடிவிற்கு வரக்கூடியதாக உள்ளது. அதாவது, இந்த போராட்டத்தினாலேயே மிக உயர்ந்த வளர்ச்சியடைந்த விலங்கினங்கள் நேரடியாகத் தோன்றுகிறது. இத்தகைய உயிரின் தோற்றம் பற்றிய கண்ணோட்டத்தில் ஒரு மாட்சிமை உள்ளது; ஒரு சில உயிரின வடிவமைப்புக்கள் முதலில் இருந்து அல்லது தனியாக இருந்தவை நிலையான புவியீர்ப்பு விதியின் படி இந்த உலகத்தில் நடைபெற்ற மாற்றங்களூடாக, மிக எளிமையான உயிரன அமைப்பில் இருந்து கணக்கிலடங்கா வடிவமைப்புக்கள், மிக அழகியவை, வியக்கத்தக்கவை என்று வளர்ச்சி பெறுகின்றன."

டார்வினுடைய கண்டுபடிப்பு உடனடியாகப் பெரும் பரபரப்பை தோற்றுவித்ததுடன், இன்றுவரையும் கணக்கிலடங்கா அறிவார்ந்த மற்றும் அரசியல் பூசல்களின் மையமாக உள்ளது. டார்வினுடைய பெயர் மதவாத வலதுசாரிகளுக்கு விரும்பத்தகாததாக உள்ளது; அதேபோல் பிற்போக்குத்தனம், அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கு ஊக்கம் கொடுத்து வளர்ப்பவர்களுக்கும் பிடிக்காததாக உள்ளது. இயற்கைத் தேர்வு கூர்ப்பு கோட்பாடு விவிலிய படைப்புக் கதையை மாற்றுவது மட்டும் இல்லாமல் (டார்வின் அதை "உலகம் பற்றி வெளிப்படையான தவறான வரலாறு" என்றார்), இயற்கை வரலாற்றின் ஆதிக்கத்திற்குள் மனித குலத்தின் உருவாக்கத்தை டார்வின் தெளிவாக நிலைநிறுத்துகிறார்.

"இயற்கையில் அனைத்தும் நிலையான விதிகளின் விளைவுதான்" என்று டார்வின் எழுதினார்; இதில் மனிதகுலம் மற்றும் "சிந்தனையின் கருவிகளும்" அடங்கும். கூர்ப்பினை நன்கு புரிந்து கொள்வதன் ஊடாக, "ஒவ்வொரு சிந்தனைத்திறனும் படிப்படியாகவே பெறப்பட்டிருக்கவேண்டும் என்பதால் உளவியல் புதிய அஸ்திவாரத்தைத் தளமாகக் கொள்ளவேண்டும்."

டார்வினுடைய சாதனை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் சாதனைகளுக்கு நெருக்கமான இணைந்துள்ளது; அவர்களும் இவருடைய படைப்பின் முக்கியத்துவத்தை முதலில் அறிந்தவர்களுள் இருந்தனர். மூலதனம் மற்றும் சமூக வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் வரலாற்று விதிகளைக் கண்டுபிடித்த எழுத்துக்கள் அறிவுஒளி காலச் சாதனையின் உச்சக்கட்டத்தைத்தான் சமமாகப் பிரதிபலிக்கிறது.

வருங்காலத்தை ஒரு நம்பிக்கையுடன் டார்வின் கண்ணுற்றதுடன், இளைய, எழுச்சி பெறும் இயற்கைவாதிகளிடமும் நம்பிக்கை கொண்டா.; கூர்ப்பு பற்றிய அறிவின் மூலம், "நாம் மங்கிய முறையில் இயற்கை வரலாற்றில் ஒரு புரட்சி இருக்கும் எனக் கணிக்க முடியும்" என்றார். அவர் மிகச்சரியாகவே கூறியுள்ளார். டார்வினின் கோட்பாடு அப்பொழுது முதல் செழித்து வருகிறது; மெண்டலிய மரபு அறிவியலினால் ஊட்டம் பெற்று, தற்கால கண்டுபிடிப்புகள், மரபணு கண்டுபிடிப்பு மற்றும் பரந்த முறையில் தற்கால உயிரியில் ஆய்வுகளால் வளமுற்றுள்ளது..

இவருடைய கோட்பாடு முன்பு இருந்ததைவிட மிகவும் உயிர்ப்பைக் கொண்டுள்ளது. உயிரியலின் எந்தப் பிரிவும் கூர்ப்பினை அறிந்துகொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாதது ஆகும். அதுவும் வாழ்வு பற்றிய ஒருங்கிணைந்த கோட்பாடு பற்றித் தெரியாமல். உயிர் வேதியல், மரபியில், நுண்ணுயிரியல், உயிரியல் வளர்ச்சி, தொற்று நோய்க் கூறுபாடுகளின் விளக்கம், நவீன மருந்துகள் ஆகியவற்றின் இதயத்தானமாக கூர்ப்பு உள்ளது. மரபார்ந்த பாதைகளான உயிர்தட ஆராச்சியிலும் கூர்ப்பு தொடர்ந்துள்ளதுடன், மேலும் நரம்புப் பிரிவு உயிரியல், மற்றும் உளவியில் உடற்கூறு என்ற புதிய பரபரப்பான பகுதிகளுக்குள்ளும் விரிவடைந்துள்ளது.

அவர் பிறந்து இருநூறாண்டுகளுக்குப் பின்னரும் சார்ல்ஸ் டார்வினுடைய படைப்பினால் உந்துதல்பெற்ற அறிவியல், புத்திஜீவித புரட்சி தொடர்ந்தும் பெரும் பலத்தை பெறுகின்றது.