World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Factional struggle deepens within Iranian ruling elite

ஈரானிய ஆளும் உயரடுக்கிற்குள் கன்னைவாத போராட்டம் வலுக்கிறது

By Peter Symonds
19 June 2009

Back to screen version

தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவியின் (Mir Hossein Mousavi) பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தெஹ்ரான் தெருக்களில் புதிய தேர்தல் நடத்தக் கோரி ஆறாம் நாளாக வந்துள்ள அளவில், ஈரானின் மதகுருமார் சார்பு ஆட்சிக்குள் தீவிரமான உட்பிரிவுப் பூசல்கள் தொடர்கின்றன.

திங்களன்று மோதல்களில் கொல்லப்பட்ட குறைந்தது ஏழு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு துக்கம் தெரிவித்து எதிர்ப்பு நடத்துமாறு வியாழனன்று மெளசவி அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சியின் தளம் மத்தியதர வர்க்கங்களின் உயர் மட்டத்தைத்தான் முக்கியமாகக் கொண்டிருக்கிறது என்ற எதிர்த்தரப்பு தோற்றத்தை அகற்றும் வகையில், இந்த அணிவகுப்பு தலைநகரத்தின் தெற்குப் பகுதியில் முக்கியமாக தொழிலாள வர்க்கம் இருக்கும் இமாம் கோமேனி (Imam Khomeini) சதுக்கத்தில் நடத்தப்பட்டது; இப்பகுதியில்தான் தற்போதைய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளார். ஈரானிய அதிகாரிகள் வெளிநாட்டு செய்தியாளர்கள்மீது தடைகளை விதித்துள்ளதால் அதைப்பற்றிய தகவல்கள் குறைவாகத்தான் வந்துள்ளன; "அங்கீகாரம்" இல்லாத ஆர்ப்பாட்டங்களை காணவருவதும் தடையில் அடங்கியுள்ளது.

அஹ்மதிநெஜாட்டிற்கு ஆதரவு கொடுத்த ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamene), இன்றுவரை, மெளசவி, அவருடைய ஆதரவாளர்கள் பால் ஒரு சமரசப் போக்கு உடையவர் போல் தோன்றுகிறார். அஹ்மதிநெஜாட்டின் எதிர்ப்பாளர்களை முற்றிலும் அடக்குவதற்கு அவர் இசைவு கொடுக்கவில்லை.

இணையதளத்திலும் செய்தி ஊடகத்திலும் தடைகள் போடப்பட்டுள்ளன; Amnesty International கருத்தின்படி குறைந்தத 170 பேராவது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இதில் முக்கிய செய்தியாளர்கள் பலரும் "சீர்திருத்தவாதிகளும்" அடங்குவர். ஆனால் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கள் எந்தவித குறிப்பிடத்தக்க தொல்லைக்கும் உட்படாமல் ஒவ்வொருநாளும் நடத்த அனுமதிக்கப்படுகின்றன.

திங்களன்று நிகழ்ந்த மரணங்கள் எதிர்ப்பாளர்கள் அஹ்மதிநெஜட்டுடன் வலுவான உறவுகள் கொண்ட ஒரு தன்னார்வ குடிப்படைக் குழுவான பஸ்ஜிஸ், வளாகம் ஒன்றின்மீது கற்களை எறிந்த பின், கூட்டத்தின் மீது திரும்ப சுட்டபோது ஏற்பட்டது. தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களும் ஞாயிறு இரவு அவர்களுடைய விடுதிகள் பஸ்ஜிப் போராளிகளால் சோதனைக்குட்பட்டபோது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர். காமேனிக்கு நெருக்கம் என்று அறியப்பட்டுள்ள, பாராளுமன்றத் தலைவர் அலி லரிஜனி (Ali Larijani), தாக்குதலை பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்; உள்துறை அமைச்சரகம்தான் சோதனை மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் என்று குறைகூறியுள்ளார்.

கார்டியன் குழு மூலம் காமெனி, வேறு சில சமரச அடையாளங்களையும் மெளசவியிடம் காட்டியுள்ளார். ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பாக ஜனாதிபதி தேர்தலை மேற்பார்வையிடுகின்ற கார்டியன் குழு, ஏற்கனவே வாக்குப் பெட்டிகளை குறைந்த அளவில் மறு எண்ணிக்கை செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று 646 புகார்களை, தேர்தல் ஒழுங்கீனங்கள் பற்றி மூன்று ஜனாதிபதி போட்டி வேட்பாளர்களான மெளசவி, மெஹ்தி கரெளபி மற்றும் மோசென் ரேஜேய் (Mousavi, Mehdi Karroubi and Mohsen Rezaei) ஆகியோரிடம் இருந்து தான் பெற்றுள்ளதாகவும் சனிக்கிழமை நான்கு வேட்பாளர்களையும் சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளது.

காமேனி, நாளை தெஹ்ரானில் தேசிய ஐக்கியத்திற்கு அழைப்பு கொடுக்கும் விதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கும் வெள்ளி பிரார்த்தனைகளை வழிநடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படும் மெளசவி இன்னும் எதிர்ப்பு அணிவகுப்பை சனிக்கிழமை வரை ஒத்திப் போட்டுள்ளார். ஆளும் உயரடுக்கின் அனத்து பிரிவுகளும், தொடரும் தெரு எதிர்ப்புக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாதது, பெருகும் வேலையின்மை, சரியும் வாழ்க்கைத் தரங்கள் பற்றி அதன் அடக்கிவைத்துள்ள சீற்றத்தை சமூக சக்திகள் இன்னும் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடும் திறனைக் கொண்டவை என்று அஞ்சுகின்றன.

அஹ்மதிநெஜாட் மற்றும் மெளசவியின் ஆதரவாளர்களுக்கு இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் தந்திரோபாய ரீதியானவை. முன்னாள் ஜனதிபதி அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானியினால் வழிநடத்தப்படும் நடைமுறை, கன்சர்வேட்டிவ் என்று அழைக்கப்படுபவர்கள் பல "சீர்திருத்தக்காரர்கள்" உடன் ஒன்றாக வந்துள்ளனர்; இதில் முன்னாள் ஜனாதிபதி மஹ்மத் கடாமியும் உள்ளார்; இவர்கள் வெளியுறவு, பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு மெளசவியை ஆதரிக்கின்றனர்.

ரப்சஞ்சானி மற்றும் கடாமி ஆகியோர் அஹ்மதிநெஜாட்டின் அமெரிக்க எதிர்ப்பு வாய்ச் சவடால் கருத்துக்களை பற்றி குறைகூறுகின்றனர்; இதுதான் ஈரான் இன்னும் பொருளாதார அளவில் ஒதுக்கப்பட்டிருக்க வகை செய்துள்ளது என்று கூறுகின்றனர். ஒபாமா தேர்தலை அடுத்து, ஈரானிய உயரடுக்கின் பல அடுக்குகள் அமெரிக்காவுடன் பதட்டங்களை குறைத்தல், தடையற்ற சந்தை செயற்பட்டியலை சுமத்துதல், மற்றும் நாட்டை வெளியார் முதலீட்டிற்குத் திறந்துவிடுதல் ஆகியவற்றிற்கு வாய்ப்பு வந்துள்ளது என்று நினைக்கின்றனர். இந்த தந்திரோபாயத் தன்மை ஒருபுறம் இருக்க, இப்பூசல்கள் எண்ணெய் விலை குறைவினாலும் மற்றும் உலகப் பொருளாதார மந்த நிலையினாலும் ஈரானில் கடுமையான பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளன.

அசாதாரணமான, சர்வதேச ஊடகத்தின் ஒரு பக்க சார்பு பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மெளசவியின் ஆதரவாளர்கள் அஹ்மதிநெஜாட்டிற்கு 63 சதவிகிதம் வாக்குகளை கொடுத்த தேர்தல் விளைவை "தில்லுமுல்லு செய்யப்பட்டது" என்று கண்டிக்கின்றனர். ஆனால் நாட்டு மக்களின் பெரும்பான்மையினரான நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களிடையே அஹ்மதிநெஜாட் கணிசமான ஆதரவுத் தளத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஒருசில நோக்கர்களே மறுக்கின்றனர்..

அஹ்மதிநெஜாட் ஏழைகளுக்கு கைப்பிடி அளவு நலன்கள் கொடுத்ததை மெளசவி கண்டித்தது, அவருடைய சந்தை ஆதரவுச் சீர்திருத்த வாதம், பரந்த அளவில் ஊழல்வாதி எனப்படும் பில்லியனர் ரப்சஞ்சானி அவருக்குக் கொடுக்கும் ஆதரவு ஆகியவை பெரும்பாலான தொழிலாளர் மக்கள் அல்லாமல் நகர்ப்புற வசதியான மத்தியர வர்க்கத்தை ஈர்க்க கூறப்படுபவை ஆகும்.

Times நிருபர் Joe Klein தயாரித்த நீண்ட நேரடி அறிக்கை தேர்தல் தில்லுமுல்லு நடந்திருக்கக்கூடும் என்றாலும், "எப்படியும் அஹ்மதிநெஜாட் வெற்றி பெற்றிருப்பார் என்பதும் சாத்தியமே, ஒருவேளை குறுகிய வித்தியாசத்தில், 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளில் --அதையொட்டி இரண்டு சுற்று ஏற்பட்டிருக்கும்." என்று குறிப்பிடுகிறது. மற்ற நிருபர்களைப் போலவே Klein ம் தெஹ்ரானில் இருக்கும் வர்க்க பிளவு பற்றி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று அவர் அஹ்மதிநெஜாட்டின் இளம்பிராய பகுதிக்குச் சென்று அதைப்பற்றிக் கூறுவது: "மத்திய மசூதியில் வரிசைகள், நயமான வடக்கு தெஹ்ரான் வாக்குச் சாவடியில் இருந்ததைப் போலவே நீண்டு இருந்தன. ஆங்காங்கே மெளசவியின் ஆதரவாளர்கள் இருந்தனர், ஆனால் அஹ்மதிநெஜாட் வழிபாடு நன்கு உணர முடிந்தது."

வாக்குப்பதிவிற்கு முன், அஹ்மதிநெஜாட் மிகப் பெரிய அளவில் தொலைக்காட்சி விவாதத்திலும் அவருடைய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வென்றார் என்றும் Klein முடிவுரையாகக் கூறுகிறார். சீர்திருத்தக்காரர்கள் மெளசவி, கரெளபி ஆகியோருக்கு எதிரான விவாதங்கள் இவருக்கு "மாபெரும் வெற்றி" என்கிறார். அவர் எழுதுவதாது: "அவருடைய போக்கில் இருந்த பொருட்படுத்தா தன்மையினால் அவர்கள் முடங்கிவிட்டது போல் தோன்றினர்; அமெரிக்க வகையில் விளக்க வேண்டும் என்றால், இவை மூத்த ஜோர்ஜ் புஷ்ஷிற்கும், நிட் கிங்ரிச்சிற்கும், ஒரு கெளரவமான நடைமுறைவாதிக்கும் நயமற்ற ஜனரஞ்சக கூச்சல் போடுவருக்கும் இடையே உள்ள விவாதம் போல் ஆகும்."

விவாதத்தின்போது, அஹ்மதிநெஜாட் வெளிப்படையாக மெளசவியின் ஆதரவாளர்கள், ரப்சஞ்சானி மற்றும் கடாமி ஆகியோரை ஊழல் மலிந்தவர்கள் என்று தாக்கினார். இதற்கு விடையிறுக்கும் வகையில், முன்னோடியில்லாத தன்மையில் ரப்சஞ்சானி பகிரங்க கடிதம் ஒன்றில் அஹ்மதிநெஜாட்டை கட்டுப்பாட்டிற்குள் காமேனி கொண்டுவரவேண்டும் அல்லது சீற்றத்தின் "எரிமலையை" எதிர்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.

மெளசவிக்கு பின் ஆதரவாக இருப்பவர்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தும் நிகழ்ச்சி, இப்பொழுது அதிகார நெம்புகோலை இயக்கும் ஆட்சிக்குள் உட்போராட்டமாக நடத்தப்படுகிறது. சீர்திருத்தக்காரர்கள் என அழைக்கப்படும் கடாமி போன்றவர்கள் முன்பு கடின பழமைவாத போக்கிற்கு பெயர்போன மெளசவியை, தாராளவாதி என்று கூறுபவர்களில் முக்கிய அதிகாரத்தை செலுத்துபவர் ரப்சஞ்சானி ஆவார். கார்டியன் நிருபர் சைமன் டிஸ்டால் குறிப்பிட்டுள்ளபடி, "ஷார்க்", "பதவியில் இருத்துபவர்" என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டவர் "அஹ்மதிநெஜட்டைக் கவிழ்ப்பதற்கு மீர் ஹொசைன் மெளசவியின் பிரச்சாரத்தை இயக்கவும் நிதி கொடுத்து உதவவும் எத்தயக்கமும் காட்டவில்லை."

ரப்சஞ்சானி பல பழமைவாத மற்றும் சீர்திருத்தக்காரர்களை மெளசவிக்கு ஆதரவாகக் கூட்டாக கொண்டுவந்துள்ளார்; ஆனால் அஹ்மதிநெஜாட்டின் வாக்குகளை பிரிக்க கரெளபி மற்றும் ரேஜாயியை நியமித்தததிலும் பங்கு பெற்றிருக்கக்கூடும்; அதையொட்டி தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு வருமாறு நினைத்திருக்கக்கூடும். மெளசவியின் ஆதரவாளர்கள் பிரச்சாரத் தளங்களாகப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு தன்னுடைய தனிப் பல்கலைக்கழகங்கள் பலவற்றை திறந்துவிட்டார். அவருடைய மகன் மெஹ்தி ஹஷேமி ரப்சஞ்சானி, ஆசாத் பல்கலைக்கழகத்தில் இருந்து நயமான தேர்தல் கண்காணிப்பு செயலை நடத்தியவர், நியூ யோர்க் டைம்ஸிடம் "இது உள்துறை அமைச்சரகத்திற்கு இணையானது. ஆனால் எங்களுடையது இரகசியமானது" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

கடந்த வெள்ளி வாக்கெடுப்பை தொடர்ந்து ரப்சஞ்சனி மெளனமாக இருக்கிறார்; ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கும் மையமான Qom ல் உள்ளார்; மத குருமார் நடைமுறையின் ஆதரவை திரட்டுகிறார். சக்திவாய்ந்த வல்லுனர்கள் மன்றம் --Assembly of Expeets-- த்தின் தலைவராக ரப்சஞ்சானி உள்ளார்; அந்த ஒரு அமைப்பிற்குத்தான் காமெனீயை உயர் தலைவர் என்ற நிலைமையில் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவோ, அகற்றவோ அதிகாரம் உண்டு. அத்தகைய நடவடிக்கை முன்னோடியில்லா தன்மை உடையதாகப் போய்விடும். தவிர்க்க முடியாமல் அரசியல் போரை ஏற்படுத்தும், விளைவுகளை பற்றி உறுதியாகக் கூற முடியாது. சில எதிர்த்தரப்பு மத குருமார்கள் காமேனியையே இலக்கு கொள்ள தொடங்கிவிட்டனர் என்று கார்டியன் கூறுகிறது. அவரை சிலிய சர்வாதிகாரி தளபதி பினோசேயுடன் ஒப்பிட்டுள்ளனர்.

பல அடையாளங்கள் திரைக்கு பின் கடுமையான உட்பூசல்கள் நடப்பதை காட்டுகின்றன. பல முக்கிய எதிர்ப்பு மதகுருமார்கள் தேர்தல் முடிவைப் பற்றி பகிரங்கமாக குறை கூறியுள்ளனர். முக்கிய அயதுல்லாக்களின் செல்வாக்கு நிறைந்த குழுவான, Association of Combatant Clerics என்னும் அமைப்பு, கடந்த வெள்ளி தேர்தலை செல்லாதது என அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான Press TV கூற்றின்படி, அந்த அமைப்பு சனிக்கிழமை தெஹ்ரான் தெருக்களில் எதிர்ப்புத் தெரிவிக்க அனுமதி கோரியுள்ளது.

அதே நேரத்தில் அஹ்மதிநெஜாட் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் செயலில் ஈடுபட்டனர். 290 உறுப்பினர்களில் 200 பேர் அஹ்மதிநெஜாட்டிற்கு அவர் வெற்றிக்கு இசைவு கொடுத்து எழுதியுள்ளனர். இந்த உயர்ந்த எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் குறிப்பாக அவருடைய வரவு-செலவு திட்ட மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி அஹ்மதிநெஜாட் பாராளுமன்றத்தில் தீவிர எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தார். தேர்தலுக்கு சற்று முன்பு, பாராளுமன்றம் அஹ்மதிநெஜாட்டின் எரிபொருள், மின்சக்தி, நீர் ஆகியவற்றிற்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை குறைக்கும் திட்டத்தை நிராகரித்தது; ஏனெனில் அவை ஒன்றும் மொத்த அரசாங்கச் செலவில் தடைகளை கொண்டுவரவில்லை.

இந்த ஆழ்ந்த உட்பூசல்களுக்கு இடையே, இருதிறத்தாரும் தொழிலாளர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகள், கெளரவ வாழ்கைத் தரங்கள் பற்றிய கவலைகளை தங்கள் இலக்குகளுக்காக சுரண்டுகின்றனர். சுதந்திரம் பற்றி குழப்பமான உறுதிமொழிகள் இருந்தாலும், மெளசவி ஒன்றும் அவருடைய எதிர்ப்பாளர்களைக் காட்டிலும் "ஜனநாயகத்திற்கு" ஒன்றும் ஆதரவு காட்டுபவர் அல்ல. அவருடைய தடையற்ற சந்தை செயல்பட்டியலை செயல்படுத்துதல், தவிர்க்க முடியாமல் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு புதிய சுமைகளை விளைவிக்கக்கூடியது, எதிர்ப்பைத் தூண்டிவிடாமல் சுமத்தப்பட முடியாது. 1980களில் பிரதம மந்திரியாக இருந்தபோது அவர் செய்தது போல், மெளசவி தன் கொள்கைகளை செயல்படுத்த முழு வலிமையையும் பயன்படுத்த தயங்கமாட்டார்.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வறுமை, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைத்தல் ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். அடிப்படைப் பணி தொழிலாளர்களை நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் இணைத்துத் திரட்டி ஒரு புரட்சிகர கட்சியை, ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் சுயாதீனமாக கட்டியமைப்பதுதான். அத்தகைய இயக்கம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கப் போராட வேண்டும்; மேலும் ஒரு சோசலிச ஈரானை மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச ரீதியான போராட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவ அவசியம் போராட வேண்டும். அந்த முன்னோக்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் முன்வைக்கப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved