World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military continues shelling "no-fire zone"

இலங்கை இராணுவம் தொடர்ந்தும் "பாதுகாப்பு வலயத்தின்" மீது ஷெல் வீசுகிறது

By Sarath Kumara
30 April 2009

Use this version to print | Send feedback

இலங்கை துருப்புக்கள் தீவின் வடக்கில் தமிழ் பிரிவினைவாதிகளிடம் இன்னமும் எஞ்சியுள்ள குட்டி பிரதேசத்தின் மீது தொடர்ந்தும் ஷெல் தாக்குதல்களை நடத்தி, மேலும் பெருந்தொகையான பொதுமக்களை கொன்றும் முடமாக்கியுமுள்ளது. இது, விமானத் தாக்குதலையும் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக மூன்று நாட்களுக்கு முன்னதாக அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி பொய்யானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

திங்களன்று, மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்காக சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்ட அழைப்பை மறுத்து ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், ஒரு சிறிய சலுகை என்று சொல்லக்கூடிய ஒன்றை வழங்கியது. "பொதுமக்களுக்கு சாவை கொணரும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் வான் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என அது அறிவித்தது.

இந்த உறுதி மொழி ஒரு மோசடி என்பது 24 மனித்தியாலங்களுக்குள் தெளிவாகியது. இராணுவப் படைகள் "தாக்குதல்களை தொடர்ந்தும்" முன்னெடுப்பது பற்றிய நம்பகமான செய்திகள் தனக்கு கிடைத்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உப செயலாளர் ஜோன் ஹொம்ஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள மேற்குலக இராஜதந்திரிகள் ஹொம்ஸை ஆதரித்ததாக AFP செய்தி வெளியிட்டிருந்தது.

யுத்த நிறுத்தமொன்றுக்கு நெருக்குவாரம் கொடுக்கவும் மற்றும் சுமார் 50,000 சிவிலியன்கள் இன்னமும் சிக்கிக்கொண்டுள்ள, 10 சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பிரதேசமான யுத்த வலயத்துக்குள் ஐ.நா. குழுவொன்றை அனுப்புவது பற்றியும் இராஜபக்ஷவுடனும் அவரது அமைச்சர்களுடனும் பேச்சு நடத்த ஹொம்ஸ் கொழும்பில் தங்கியிருந்தார். இரு வேண்டுகோல்களையும் அரசாங்கம் நிராகரித்தமை, தொண்டு நிறுவனங்கள் ஒரு புறமிருக்க எந்தவொரு சர்வதேச மேற்பார்வையாளரும் இன்றி, இராணுவத்தின் இழப்புக்களையும் அலட்சியம் செய்து தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல அது உறுதிபூண்டுள்ளதையே தெளிவுபடுத்துகிறது.

செவ்வாய் கிழமை பிரிட்டனை தளமாகக் கொண்ட டெலிகிராப் சஞ்சிகையுடன் பேசிய, ஒரு அரசாங்க வைத்தியரான தங்கமுத்து சத்தியமூர்த்தி, தான் வேலை செய்யும் "பாதுகாப்பு வலயத்தில்" உள்ள ஆஸ்பத்திரி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்ட போது ஆறு நோயாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். "ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள வீதிக்கருகில் நான்கு சடலங்களையும் ஒரு பள்ளத்தில் இரு சடலங்களையும் நான் கண்டேன்," என அவர் கூறினார். இராணுவம், இந்த வலயத்தில் குறைந்தபட்சம் 11 பேரைக் கொன்றதாக தமிழீழ விடுதலைப் புலிகளும் செவ்வாய் கிழமை குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எப்போதும் போல், இராணுவம் இந்தக் குற்றஞ்சாட்டை முழுமையாக நிராகரித்தது. "ஷெல்களையோ மோட்டார்களையோ நாங்கள் பாவிக்கவில்லை, சிறிய ஆயுதங்களை மட்டுமே பாவிக்கிறோம். நாங்கள் எப்படி போரிடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்," என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறிக்கொண்டார்.

அரசாங்கத்தின் சாதனைகளைப் பொறுத்தளவில், அரசாங்கத்தின் மறுப்புக்கள் எதுவாயினும் அதற்கு நம்பகத்தன்மை கிடையாது. உண்மையில், கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என உறுதியளித்து திங்களன்று விடுத்த அறிக்கை, பொதுமக்களுக்கு எதிராக அந்தகைய ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் முதலில் தெரிவித்த மறுப்புக்களை அம்பலப்படுத்துகிறது.

கடந்த இரு வாரங்களில் மாத்திரம், அந்தப் பிரதேசத்தில் செயற்படும் வைத்தியர்களும் தொண்டு நிறுவனங்களும், பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான பொது மக்களை கொன்றும் காயப்படுத்தியும் வருவதாக குற்றஞ்சாட்டினர். இது ஐ.நா. மதிப்பீடு செய்தவாறு கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 6,500 க்கும் அதிகமாகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை 14,000 க்கும் அதிகமாகவும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இராணுவத்தின் சொந்தக் கூற்றுக்களின்படி, திங்கள் முதல் அதன் நடவடிக்கைகளில் தணிவு இருக்கவில்லை. முன்னேறுகின்ற துருப்புக்களை தடுப்பதற்காக புலிகள் கட்டிவைத்திருந்த 500 மீட்டர் மண் மேட்டை தகர்த்து வெள்ளைமுள்ளிவாய்க்கால் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டதாக செவ்வாய் கிழமை இராணுவம் பிரகடனம் செய்தது. புலிகள் மூன்று சதுர கிலோமீட்டர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததோடு கடற்படை மூன்று புலிகளின் படகுகளை அழித்து 25 போராளிகளையும் கொன்றதாகவும் செய்திகள் வந்துள்ளன.

புலி உறுப்பினர்கள் சாதாரண உடையில் நின்று போராடுகிறார்கள் எனக் கூறுவதன் மூலம், இராணுவம் பொதுமக்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்துவது தெளிவு. முல்லைத்தீவு பிரதேசத்தில் துருப்புக்களின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஷெவேன்திர சில்வா, "இப்போது புலிகள் சீருடையின்றி போராடுவதோடு புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி அறிவது கடினம்" என தெரிவித்ததாக நேற்று புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் சகல தமிழர்களையும் எதிரிகளாக கருதி தனது யுத்தத்தின் இலக்காக்குகிறது என்ற உண்மையை மட்டுமே இந்த கருத்து வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறியதில் இருந்து குறைந்தபட்சம் 160,000 தமிழர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. முகாம்களுக்கு சென்ற தொண்டு ஊழியர்கள், அங்கு உணவு பற்றாக்குறை, சுகாதார பற்றாக்குறை, அவநம்பிக்கையான மருத்துவ நிலைமை மற்றும் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலைமைக்கும் சாட்சியாக உள்ளனர்.

ஐ.நா. குறிப்பிடுவதன் படி, அப்புறப்படுத்தப்பட்ட சிறுவர்களில் சுமார் நால்வரில் ஒருவர் கடுமையான போசாக்கின்மையால் வாடுகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு முன்னதாக பொதுமக்கள் உயிரிழப்பது பற்றி செய்திகள் வருவதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன. இது எஞ்சியுள்ளவர்களின் அவல நிலையை கோடிட்டுக் காட்டுகிறது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (யூ.என்.எச்.சீ.ஆர்.) படி, வவுனியா பிரதேசத்தில் மட்டும் 32 முகாம்களில் கிட்டத்தட்ட 140,000 அகதிகள் உள்ளனர். யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் வில்லியம் ஸ்பின்ட்லர் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "அந்தப் பிரதேசங்களில் உள்ள நிலைமை உச்சகட்டத்தை எட்டியுள்ளதோடு, இருக்கும் மனிதாபிமான சேவைகளின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது." தங்குமிடம் இல்லாத மக்கள் எரியும் வெய்யிலிலும் வியர்க்கும் உஷ்னத்திலும் வெளியில் நின்றுகொண்டிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள முகாம்களில் (ஐந்து பேருக்கு அமைக்கப்பட்ட) ஒரு கொட்டிலில் சராசரியாக 18 பேர்வரை மட்டுப்படுத்தப்பட்ட தண்ணீர் விநியோகத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்கள் இணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவிக்கின்றது.

வவுனியாவில் அதிக கூட்டம் நிறைந்த வலயம் 2ல் இருக்கும், சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பின் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டெயின் லீட் எழுதியதாவது: "சிறுவர்கள் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அல்லது பிரிக்கப்பட்டுள்ள தமது நண்பர்கள் மற்றும் குடும்பங்களின் படங்களை காட்டி, 'இது நண்பர், அவர் கொல்லப்பட்டார், இது எனது நண்பன், அவர் இப்போது ஒரு காலை இழந்துவிட்டார், இது எனது சகோதரர், அவர் இறந்துவிட்டார்' என கூறுகிறார்கள்."

தமது பெற்றோர்களை இழந்துவிட்டதால் பல சிறுவர்கள் தமது இளையவர்களை பராமரிக்கின்றனர். காயமடைந்த சில சிறுவர்களுக்கு இன்னமும் சிகிச்சையளிக்கப்படவில்லை. "வலயம் 2ல் அதிஷ்டமுள்ள சிலரே கொட்டில்களை பெற்றுள்ளனர். ஏனையவர்கள் தரையில் அல்லது மரங்களுக்கு கீழ் உறங்குகிறார்கள். இதுவரை சாதாரண உணவுகளும் தண்ணீருமே விநியோகிக்கப்பட்டு வருகிறது," என லீட் தொடர்ந்தும் தெரிவித்தார்.

தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துவரும் வெளிநாட்டு சக்திகளின் பிரதிபலிப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற நம்பிக்கையில், இலங்கை அரசாங்கம் புலிகளை அழித்தொழிக்க எண்ணுகிறது. 2006ல் இருந்து இராஜபக்ஷவுக்கும் அவரது யுத்தத்துக்கும் இரகசியமாக ஆதரவளித்து வரும் இந்த சக்திகள், தமிழர்களின் அவலம் பற்றி பாசாங்குத்தனமாக கவலை தெரிவிக்கின்றன.

தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஒரு "அரசியல் தீர்வு" காண முயற்சிக்குமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இராஜபக்ஷவை நெருக்குகின்றன. அவற்றின் பிரதான குறிக்கோள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முறையில் அமைந்துள்ள தீவிலும், அதே போல் அயலில் 60 மில்லியன் தமிழர்கள் வாழும் இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலும் தொடரும் ஸ்திரமின்மையை தடுப்பதே.

பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னார்ட் குஷ்னர் உட்பட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று கொழும்புக்கு வருகை தந்த போதிலும், யுத்த நிறுத்தத்துக்கான அவர்களது கோரிக்கை செவிடன் காதில் கூறியதாகியது. செய்தியாளர் மாநாடொன்றில், கடந்த ஆறு மாதங்களில் எடுத்த முன்னேற்றம் "கவனத்துக்குரியது" என கூறி, மிலிபன்ட் இராணுவத்துக்கு கூட பாராட்டுத் தெரிவித்த அதே வேளை, "யுத்தத்தில் வெற்றிகொள்வது போலவே சமாதானத்தை வெற்றிகொள்வதும் இன்றியமையாதது" என அரசாங்கத்துக்கு அறிவுறுத்தினார்.

அவர்களது யுத்த நிறுத்த அழைப்பை இராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்ததைப் பற்றி கேட்ட போது, குஷ்னர் தெரிவித்ததாவது: "நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம், ஆனால், அதை அனுமதிப்பதா இல்லையா என்பது எமது நண்பர்களைப் பொறுத்தது." வேறு வார்த்தைகளில் சொன்னால் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளுக்கு, தமது "நண்பர்கள்" வடக்கில் மேலும் அட்டூழியங்களை முன்னெடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை என்பதாகும்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவில் இணைவதற்கு சுவீடன் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட்டுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்து விட்டது. 2002ல் கொழும்புக்கும் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்ய ஸ்தாபிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவில் இருந்த ஸ்கன்டினேவிய நாடுகளில் சுவீடனும் ஒன்றாகும். 2006ல் இராஜபக்ஷ யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறியதை அடுத்து, சில சம்பவங்களில் அவர்கள் இராணுவத்தின் அட்டூழியங்களை விமர்சித்த காரணத்தால், இந்த நாடுகளுடன் பதட்ட நிலைமைகள் எழுந்தன.

முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் புலிகளுடன் எந்தவொரு யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் எதிர்க்க அணிதிரண்டுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியான பெளத்த அதி தீவிரவாத ஜாதிக ஹெல உறுமய கட்சி, மிலிபன்டின் வருகையை எதிர்த்து பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நேற்று மறியலில் ஈடுபட்டது. ஹெல உறுமய தலைவர்களில் ஒருவரான உதய கம்மன்பில, மிலிபன்ட் "பிரபாகரனுக்கு [புலிகளின் தலைவர்] உதவுவதற்கே இங்கு வந்துள்ளார்" என தெரிவித்து, அவரை "ஒரு பயங்கரவாத பிரதிநிதியாக" விவரித்தார்.

செவ்வாய் கிழமை, சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) புலிகளின் தலைவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்க தயாராவதாக குற்றஞ்சாட்டியது. ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, அரசாங்கம் யுத்த நிறுத்தம் பிரகடனம் செய்துள்ளதாகக் கூட செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். யுத்தத்தை புதுப்பிக்க இராஜபக்ஷவை தூண்டுவதில் முன்னணியில் இருந்த ஜே.வி.பி. தனது சிங்கள இனவாத கொள்கைக்கு மீண்டும் செல்ல வேண்டுமென்றே இனவாத பதட்டங்களை கிளறிவிடுகின்றது.

செவ்வாயன்று நடந்த இன்னுமொரு பத்திரிகையாளர் மாநாட்டில், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, "பயங்கரவாதத்தை அழித்தொழிக்காவிட்டால் அதன் எச்சங்கள் தமது அசிங்கமான தலையை எதிர்காலத்தில் மீண்டும் தூக்கும்" என்பதால் பயங்கரவாதத்தை ஒழிப்பதன் பேரில் சண்டையை தொடருமாறு கோரினார்.

இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை புதுப்பித்ததில் இருந்தே, பெரும் வல்லரசுகளதும் பெரும் வர்த்தகர்களதும் ஆதரவுடன் புலிகளுடன் "சமாதான முன்னெடுப்புகளை" தொடங்க யூ.என்.பி. முன்னர் எடுத்த முயற்சிகளை கைவிட்டது. ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் இரு தசாப்த கால யுத்தத்துக்கு முடிவுகட்டவும் மற்றும் இலங்கையை மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதற்கு திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தவும் திட்டமிடப்பட்ட ஒரு தீர்வில் புலிகளை இளைய பங்காளிகளாக ஈடுபடுத்திக்கொள்ள 2002ல் யூ.என்.பி. அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது.

இலங்கை முதலாளித்துவ கும்பல் வெளிப்படையான இராணுவவாதத்துக்கு திரும்பியது, 1948ல் பிரித்தானியர்கள் சுதந்திரத்தைக் கொடுத்ததில் இருந்தே அதன் அடிநிலையில் இருந்து வந்த நிலைப்பாட்டின் வழியிலாகும். அவ்வப்போது, அது தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் வெகுஜனங்ளை பிளவுபடுத்தவும், தமது வாழ்க்கைத் தரத்தை காக்க அவர்கள் முன்னெடுக்கும் ஐக்கியப்பட்ட போராட்டத்தை கீழறுக்கவும் இரத்தக்களரி நிறைந்த இனவாதத்தை நாடியுள்ளது. ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி நிலமையின் கீழ், கொழும்பு அரசியல் ஸ்தாபனம் அதே பிற்போக்கு வழிமுறைகளை மீண்டும் நாடுகிறது.