World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : நேபாளம்

Nepal's Maoist prime minister steps down

நேபாள மாவோயிச பிரதமர் பதவி விலகல்

By W.A. Sunil
8 May 2009

Use this version to print | Send feedback

கடந்த ஞாயிறன்று மாவோயிச தலைமையிலான அரசாங்கம் பதவியை எடுத்துக் கொண்டு ஒன்பது மாதங்களில் சரிந்ததை அடுத்து ஒரு புதிய அரசியல் நெருக்கடி நேப்பாளத்தில் வெடித்துள்ளது. CPN-M எனப்படும் (Unified Communist Party of Nepal-Maoist,) நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தகல் (பிரச்சண்டா என்றும் அறியப்படுபவர்) பிரதமர் பதவியில் இருந்து திங்களன்று இராஜிநாமா செய்தார்.

இராணுவத் தலைவர் தளபதி ருக்மாங்குத் கடவாலை, குடிமக்கள் ஆட்சிக்கு "கீழ்ப்படியவில்லை" என்று குற்றம் சாட்டி பதவியில் இருந்த தகல் அகற்றப்பட்ட முற்பட்டதை அடுத்து, ஆளும் கூட்டணி முறிந்தது. CPN-M இன் நட்புக் கட்சிகள், நேபாள UML எனப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, கூட்டணியில் இருந்து விலகி அதற்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாமல் செய்துவிட்டன.

தன்னை "பதவி நீக்கம்" செய்ததை தளபதி கடவால் ஏற்க மறுத்தார்; பிரதம மந்திரிக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது என்று அறிவித்தார். நாட்டின் இடைக்கால அரசியல் அமைப்பின்படி இராணுவத்தின் மீதான அதிகாரம் முறையாக ஜனாதிபதியிடம்தான் உள்ளது-- அவர் பழமைவாத நேபாளி காங்கிரஸ் கட்சி (NCP) யில் ஒரு தலைவராக இருக்கும் ராம் பரன் யாதவ் ஆவார். பிரதம மந்திரியின் முடிவை யாதவ் தள்ளுபடி செய்து மாவோயிஸ்ட்டுக்கள் "ஒருதலைப்பட்சமாக" நடந்து கொள்ளுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதியின் நடவடிக்கை "அரசியலமைப்பிற்கு ஒவ்வாதது, ஜனநாயகத் தன்மை அற்றது" என்று தகல் கண்டித்து நெருக்கடியை "எதிர்க் கட்சிகளும் வெளி சக்திகளும் விரைவுபடுத்தி விட்டன" என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். ஆயுதப் போராட்டத்திற்கு திரும்புவது பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை; மாறாக "ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கவும் சமாதான வழிவகையைக் காப்பாற்றவும்" பதவியை விட்டு விலகுவதாகக் கூறினார்.

ஜனாதிபதி யாதவ் ஒரு புதிய அரசாங்கம் சனிக்கிழமை அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்; ஆனால் 20 எதிர்க் கட்சிகள் ஒரு உறுதியாக கூட்டணியை அமைக்க முடியுமா என்பது சந்தேகம்தான். 601 இடங்கள் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் 248 உறுப்பினர்களுடன் ஆதிக்கம் கொண்டுள்ளனர்; இது நாட்டின் அரசியல் அமைப்பையும் தயாரிக்கிறது. அரசியலமைப்பிற்கு இசைவு தெரிவிக்க மன்றத்தில் மூன்றில் இரு பகுதியினர் ஆதரவு வாக்கு அளிக்க வேண்டும்.

தன்னுடைய கட்சி புதிய அரசாங்கம் அமைக்கத் தயார் என்று நேற்று தகல் கூறினார்; ஆனால் தன்னுடைய அரசியலமைப்பு முறையை மீறிய ஜனாதிபதி அந்த தவறை திருத்திக் கொண்டால்தான் என்றார். ஞாயிறு முதல் மாவோயிச ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காத்மாண்டுவில் நடைபெற்று வருகின்றன. திங்களன்று போலீசார் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களை தடை செய்தனர்; செவ்வாய் மற்றும் புதனன்று மாவோயிச எதிர்ப்பாளர்களுடன் மோதி பலரையும் கைது செய்தனர்.

மாவோவிஸ்ட்டுக்களுக்கும் இராணுவ அதிகாரி ஜாதிக்கும் இடையே உள்ள விரோதம் நாட்டின் நீடித்த உள்நாட்டுப் போரில் இருந்து வருகிறது. 2006ம் ஆண்டு அரசர் ஞானேந்திராவிற்கு எதிரான மக்கள் இயக்கத்தை அடுத்து ஓர் உடன்படிக்கையின்படி மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களைக் களைந்துவிட்ட, இடைக்கால அரசாங்கத்தில் சேர்வதாகவும் 2008 தேர்தல்களில் பங்கு பெறுவதாகவும் ஒப்புக் கொண்டனர். புதிய தேசிய சட்ட மன்றம் முடியாட்சியை அகற்றவே, ஆகஸ்ட் மாதம் மாவோயிஸ்ட்டுக்கள் அரசாங்கத்தை அமைத்தனர்.

ஆனால் அடித்தளத்தில் இருந்த பதட்டங்கள் தொடர்ந்தன. முடியாட்சிக்கு முக்கிய தூணாக இருந்த இராணுவம் அரசாங்கத்திடம் வெளிப்படையாக விரோதப் போக்கை கொண்டிருந்தது தளபதி கடவல் பலமுறையும் முன்னாள் மாவோயிச போராளிகளை நாட்டின் இராணுவ வீரர்களாக சேர்க்க மறுத்தார்; ஆனால் 2006 உடன்பாட்டின்படி அவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அரசாங்கம் தளபதியை நீக்கும் முடிவை எடுத்தது இம்முடிவு இராணுவம் முன்னாள் கெரில்லாக்களை கவனத்தில் கொள்ளாமல், இன்னும் 3,000 வீரர்களை தேர்ந்து எடுத்ததை அடுத்து வந்தது.

நேபாள நடைமுறையில் இருக்கும் பழமைவாத அடுக்குகள் மாவோயிஸ்ட்டுக்கள்பால் ஆழ்ந்த விரோதப் போக்கைத்தான் கொண்டிருக்கின்றன. வெளியார் முதலீட்டை ஈர்ப்பதற்கும் தடையற்ற சந்தை திட்டத்திற்கும் பிந்தையவர் ஆதரவு கொடுத்தும் இந்நிலைதான் உள்ளது. அரசாங்கம் வேலைநிறுத்தங்களை தடைசெய்து பொருளாதர பொறுப்பிற்காக உலக வங்கி மற்றும் IMF னால் பாராட்டப்பட்ட ஒரு வரவு-செலவு திட்டத்தை நாட்டின் மீது சுமத்தியது.

CPN-N அதன் தேர்தல் உறுதிமொழிகளான நாட்டின் கிராமப்புற மக்களுடைய வறுமையை நிலச் சீர்திருத்தச்சட்டங்கள் மூலம் அகற்றுதல், இளைஞர்களுக்கு வேலைகள் மற்றும் வறியவர்களுக்கு உதவித் தொகை போன்ற அனைத்தையும் திறமையுடன் தூக்கி எறிந்து விட்டது. தனிநபர் சராசரி வருமானம் 250 அமெரிக்க டாலரகளாக உள்ளது; உலகின் மிகக் குறைவானவற்றுள் இதுவும் ஒன்றாகும். மக்களில் 55 சதவிகித்ததினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.

கடந்த ஆண்டில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி இன்னும் மோசமாயிற்று. ஒரு நாளின் பெரும்பகுதியில் தலைநகரத்தில் மின் வசதி இல்லை. பணவீக்க விகிதம் மார்ச்சில் 13.7 என்று இருந்தது. உலகச் சரிவு ஆடை ஏற்றுமதிகளை குறைத்துவிட்டது; அதே போல் சுற்றுலா வருவாயும் குறைந்து விட்டது; மற்ற நாடுகளில் இருக்கும் நேபாள குடியேறிய தொழிலாளர்கள் அனுப்பும் பணமும் குறைந்துவிட்டது.

இந்தியா நேபாள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தலைவர் ஆகியோருடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. திரைக்கு பின்னால், புது தில்லியின் காத்மாண்டுவிற்கான தூதர் ராகேஷ் சூட், டகலைச் சந்தித்ததுடன் அரசாங்கத்திற்கு தளபதி கடவல்லை நீக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. இந்தியா இராணுவம் மற்றும் நேப்பாள நடைமுறை ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கிறது; இது மாவோவிச செல்வாக்கை கட்டுப்படுத்தும் ஒரு வழிவகையாகும்.

2006 சமாதான ஒப்பந்தத்தை முடிக்கச் செய்வதில் இந்தியாவும் ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது; இதற்கு ஓரளவு காரணம் உள்நாட்டில் மாவோயிச எழுச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்பதாகும். நேபாளிய மாவோயிஸ்ட்டுக்களை எதிர்க்கும் சீனா காத்மாண்டுவில் அதிக செல்வாக்கு பெறுவதை தடுக்கும் கவலையையும் இந்தியா கொண்டிருந்தது. பெய்ஜிங்குடன் நெருக்கமான தொடர்பு இல்லாவிட்டாலும், CPN-M எப்பொழுதும் நேபாள விவகாரங்களில் இந்தியாவின் மேலாதிக்க பங்கிற்கு விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளது.

ஒரு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் இவ்வாரம் கூறியதாவது: "கடந்த காலத்தில் சீனா மியன்மார், இலங்கை மற்றும் பிற நாடுகளில் இந்தியா காட்டிய தயக்கத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த வெற்றிடத்தில் விரைவாகப் புகுந்தது. பிரச்சண்டா அதிகாரத்தில் இருக்கும் நிலையில், நேபாளமும் அதே வழியில்தான் செல்லுகிறது."

அமெரிக்கா தற்போதைய நெருக்கடி பற்றி எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் ஒபாமா நிர்வாகம் கடந்த மாதம் நேப்பாள நாடு பற்றிய அறிக்கையில், CPN-M "இன்னமும் அமெரிக்கா குறித்துள்ள பயங்கரவாத அமைப்பாகத்தான் உள்ளது" என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

புஷ் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்க மாவோயிஸ்ட்டுக்களை கடுமையாக எதிர்த்து, பெரும் தயக்கத்துடன்தான் இந்தியா இடைத்தரகராக இருந்து கொண்டுவந்த 2006 உடன்பாட்டை ஒப்புக் கொண்டது. ஒபாமா நிர்வாகத்தாலும் இக்கொள்கை தொடரப்படுகிறது; இந்நிர்வாகம் வாஷிங்டனை திருப்திப்படுத்த நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் மேற்கொள்ளும் பல முயற்சிகளையும் பொருட்படுத்துவதில்லை.

பிற்போக்கு ஸ்ராலினிச இரண்டு கட்ட தத்துவத்தினால் வழிகாட்டப்படும் மாவோயிஸ்ட்டுக்கள் "முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை" செயல்படுத்துவதாக கூறுகின்றனர். இதற்கு நிலப்பிரபுத்துவ முறையின் எச்சசொச்சங்கள் அகற்றப்பட வேண்டும், முதலாளித்துவ ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் முதலாளித்துவம் செழிக்க அனுமதிப்பதன் மூலம் தேசியப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்கின்றனர்.

ஒரு புதிய சமாதானக் காலம், ஜனநாயகம், செழிப்பு ஆகியவற்றிற்கு அரங்கு அமைப்பதற்கு முற்றிலும் மாறாக, CPN-M அரசாங்கம் 2006ல் வெடித்த மக்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தி நேபாள நடைமுறையின் இராணுவத்தை மையமாகக் கொண்டுள்ள தீவிர வலதுசாரிக் கூறுபாடுகளை மறு தாக்குதல் நடத்த தங்களை தயார் செய்து கொள்ள அனுமதித்து விட்டது.

அரசாங்கத்தின் உத்தரவுகளை தளபதி கடவால் நிராகரித்தது இராணுவம் ஒரு ஆட்சிமாற்றத்திற்கு தயார் செய்கிறது என்ற ஊக அலையைத் தூண்டியுள்ளது. இராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரமிந்த்ரா செட்ரி ஏப்ரல் 26ம்தேதி ஒரு அறிக்கையை வெளியிடும் கட்டாயத்திற்கு ஆளானார்: "ஆட்சி மாற்றம், ஊரடங்கு உத்தரவுகள் பற்றிய வதந்திகள் முற்றிலும் ஆதாரம் அற்றவை. நேபாள இராணுவம் ஆட்சி மாற்றத்தை நடத்தாது. அது எப்பொழுதும் ஜனநாயக முறைக்கு உறுதி கொடுத்துள்ளது; அந்நிலை தொடரும்."

ஆனால் இராணுவம் முடியாட்சியின் சர்வாதிகாரத்திற்கு ஆதரவு மற்றும் அதற்கு வரும் எதிர்ப்பை மிக இரக்கமற்ற முறையில் அடக்குவது என்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது ஆகும். பழமைவாத கட்சிகள், வணிக உயரடுக்கு, அரசாங்கக் கருவிகள் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்டுள்ள தளபதிகள் மாவோயிஸ்ட்டுக்களுடைய பொருளாதாரக் கொள்கையால் பெறும் ஏமாற்றம் அடைந்திருக்கும் மக்கள் அதிருப்தியை பயன்படுத்தி தங்களுக்கு உரிய நல்ல காலத்தை எதிர் நோக்கியிருக்கின்றனர்.

தற்போதைய நெருக்கடிக்கு பின் எவ்வித அரசாங்கம் வெளிப்பட்டாலும், இராணுவம் அதனிடத்தில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி நேபாளத்தில் முதலாளித்துவ ஆட்சிக்குத் தேவையான ஆதரவைக் கொடுக்கும். அதன் நடவடிக்கைகள் மாவோயிசத்திற்கு எதிராக மட்டும் இராது, மாறாக எந்த எதிர்ப்பையும், குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களிடம் இருந்து வரும் எவ்வித எதிர்ப்பையும் நசுக்குவதாக இருக்கும்.