World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Communist Party of India (Marxist): a key prop of Indian bourgeois rule

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): இந்திய முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய முண்டுகோல்

By Deepal Jayasekera and Arun Kumar
20 May 2009

Back to screen version

இந்தியாவின் ஒரு மாத காலம் நடந்த பொதுத் தேர்தலில் ஐந்தாம் கட்டத்தின், இறுதிக் கட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நாங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுகள்) மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபனை பேட்டி கண்டோம்.

CPM மற்றும் தேர்தல் கூட்டாக பலகட்சிகளை இது வழிநடத்தும் இடது முன்னணி ஆகியவற்றின் வரலாறு முன்னோக்கு பற்றி அவர் வெட்கமின்றி பாதுகாத்துப் பேசினார். நான்கு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு CPM முண்டுகோலாக நின்று முட்டுக் கொடுத்ததும் அடங்கும்; தற்பொழுது அதன் முயற்சியான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதித் தளங்களை கொண்ட கட்சிகளை ஒரு "மதசார்பற்ற", "மக்கள் சார்பு உடைய" அரசாங்கத்திற்கு மாற்றீடு என்ற முறையில் சேர்த்திருத்தல்; முதலீட்டாளர் சார்பு உடைய "தொழில்மயமாக்கும்" கொள்கை மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தால் தொடரப்படுதல்; மற்றும் பெருமந்த நிலைக்குப் பின்னரான மிகப் பெரிய முதலாளித்துவ நெருக்கடி இருக்கும் காலத்திலும் சோசலிசம் வரலாற்று செயல்பட்டியிலில் இருந்து தொலைவில் இருக்கிறது என்று வலியுறுத்தியது-- CPM ன் மூத்த அரசியல் வாதியின் சொற்களில் "ஒரு தொலைதூரக் கனா" என்பது ஆகியவை அடங்கும். (பேட்டியின் சுருக்கத்தை "இந்திய ஸ்ராலினிச தலைவர் காங்கிரஸ், வலதுசாரி பிராந்தியக் கட்சிகளுடன் கொண்ட கூட்டை சரி என்கிறார்" என்பதில் காணவும்.)

"புரட்சிகர" சடங்கான சிவப்புக் கொடிகள், அரிவாள், சுத்தியல்கள், மார்க்ஸ், லெனின், சேகுவாரா படங்கள் ஆகிய முகப்பிற்கு பின், CPM இந்திய முதலாளித்துவ நடைமுறையின் ஒருங்கிணைந்த கட்சியாகச் செயல்பட்டு, உலக முதலாளித்துவ முறைக்கு ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை அளித்து, வெளிநாட்டு முதலீட்டிற்கு இந்தியா காந்தம் போல் ஈர்க்கும் தன்மையைக் கொள்ள வேண்டும் என்று உள்ள இந்திய முதலாளித்துவ உந்துதலை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை திசைதிருப்பி, தடம் புரளவைக்கவும் இது பாடுபடுகிறது.

CPM சார்பாகப் பேசிய பத்மநாபன், "20 ஆண்டுகளாக நாங்கள் தாராளமயமாக்கல் கொள்கைகள், பூகோளமயமாக்கல் கொள்கைகள் எனக் கூறப்படுவதற்கு எதிராக போராடுகிறோம்" என்றார். இது ஒரு பொய். பாராளுமன்ற வாக்குகள் மூலம் CPM மற்றும் இடது முன்னணி நரசிம்மராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தை (1991-96)ல் பாராளுமன்ற வாக்குகள் கொடுத்து நிலைநிறுத்தியது; அந்த அரசாங்கம்தான் இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதாரக் கொள்கையான" தனியார்மயம், கட்டுப்பாட்டை தளர்த்தல், பெருவணிகத்திற்கு வரிக்குறைப்புக்கள், விவசாய விளைபொருட்களுக்கு கொடுத்து வந்த விலை ஆதரவு நிதியுதவியை அகற்றியது மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்படுத்தியது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இன்னும் நேரடிப் பங்கை 1996-98ல் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்திற்கும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கமும் நிலைத்திருக்கும் வகையில் செய்து உண்மையில் அவற்றின் கொள்கைகளையும் இயற்றியது; அவை இரண்டும் புதிய தாராளச் சீர்திருத்தங்களை முன்வைத்து சென்றன.

அவர்கள் அதிகாரம் செலுத்திய மாநிலங்களில், இடது முன்னணிக் கட்சிகள் நேரடியாகவே முதலாளித்துவ முறையில் மறுகட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தின. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை உவந்து வரவேற்கும் முறையில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் வேலைநிறுத்தத்தை தடைசெய்தது, வரிச் சலுகைகளை வழங்கியது, சமூகச் செலவினங்களைக் குறைத்தது மற்றும் சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவும் அன் திட்டத்திற்காக நிலங்களை அபகரிக்கையில் எழுந்த விவசாய எதிர்ப்புக்களை அடக்க போலீஸ் மற்றும் குண்டர்கள் வன்முறையைப் பயன்படுத்தியது.

இந்த வலது சாரிக் கொள்கைகள் கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளும் முன்னாள் இந்து வெறிபிடித்த BJP யின் நண்பருமான மமதா பானர்ஜி மற்றும் அவருடைய திரிணாமூல் காங்கிரஸை ஏழைகளின் பாதுகாவலர் என்று ஓரளவு வெற்றியுடன் காட்டிக் கொள்ளும் நிலைமைகளைத் தோற்றுவித்தன.

CPM பொருளாதாரத்தின் சில பிரிவுகளை சர்வதேச மூலதனத்திற்கு திறந்துவிடுவதில் தாமதிக்க அல்லது தடைசெய்ய முற்படுகிறது; அதேபோல் இலாபகரமான பொதுத் துறைப் பிரிவுகளை முற்றிலும் தனியார் மயமாக்குதலையும் தடைக்கு உட்படுத்த விழைகிறது. ஆனால் ஒரு தொழிலாள வர்க்கத் தலைமையிலான வெகுஜன இயக்க்தை முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்க்கும் நிலைப்பாட்டுடன் இவ்வாறு செய்யவில்லை; மாறாக இந்திய முதலாளித்துவத்தில் வலுக் குறைந்த பிரிவுகளைக் காப்பாற்றி, இந்திய முதலாளித்துவ அரசாங்கம் வெளிநாட்டு மூலதனம், சக்தி இவற்றின் அழுத்தத்தை ஈடு செய்யும் வகையில் ஊக்கம் பெறுவதற்கு செய்கிறது.

இதேபோல் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் "சுயாதீன வெளியுறவுக் கொள்கைக்கு" அழைப்பு என்பது உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரட்டுவது என்பதில் இல்லை. இந்திய முதலாளித்துவத்திற்கு "பன்முகத் தளம்" என்ற அடிப்படையில், அதாவது ஐக்கிய நாடுகள் மற்றும் சீனா, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகள் வேண்டும் என்ற விதத்தில் ஒரு மாற்றீட்டு வெளியுறவுக் கொள்கையை CPI வளர்க்கப்பார்க்கிறது; மிக நெருக்கமாக அமெரிக்காவுடன் இருந்தால் முதலாளித்துவ இந்தியாவிற்கு அதன் நலன்களை உறுதிபடுத்துவதில் தடை ஏற்படும் என்பது அதன் வாதம் ஆகும்.

CPM தொடர்ச்சியான UPA உட்பட பல வலதுசாரி அரசாங்கங்களுக்கு புது தில்லியில் ஆதரவை அது ஒன்றுதான் இந்து மேலாதிக்கவாத BJP பதவிக்கு வருவதை எதிர்க்கும் ஒரே வழிவகை என்று கூறி நியாயப்படுத்தியுள்ளது.

ஆனால் BJP எழுச்சியுற்றதும், ஏராளமான சாதித் தளத்தைக் கொண்ட கட்சிகள் 1980 களின் ஆரம்பத்தில் இந்திய அரசியலில் முக்கிய பங்கைப் பெற்றதும், பல தசாப்தங்கள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தை ஒன்று அல்லது மற்றொரு முதலாளித்துவ கட்சிக்கு தாழ்த்தி வைக்கும் கொள்கையின் விளைவுதான்; அதே நேரத்தில் இது தொழிலாள வர்க்கத்தை போர்க்குணம் மிகுந்த ஆனால் குறுகிய தொழிற்சங்கப் போராட்டங்களின் வரம்பில் வைத்திருந்தது.

1960-1970களில் உலக முதலாளித்துவ நெருக்கடி பெருகிய சூழ்நிலையில், இந்தியா பல தொழிலாளர், விவசயிகள் போராட்ட அலைகளால் அதிர்வுற்றது. ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்திய முதலாளித்துவத்திற்கு சவால் விடும் வாய்ப்பு தொழிலாள வர்க்கத்திற்கு இல்லை என்று வலியுறுத்தினர்; இந்திய முதலாளித்துவமோ அதன் கால் நூற்றாண்டு சுதந்திர ஆட்சியில் இயல்பான திறமையின்மையைத்தான் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை பணிகளை செய்வதில் காட்டியது; இதில் நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதியம் ஆகியவையும் அடங்கியிருந்தன. ஸ்ராலினிசத்தின் இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாட்டை ஒட்டி --CPM அதை மக்களின் ஜனநாயகப் புரட்சி என்று கூறுகிறது-- ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கம் அதன் ஆதரவை முற்போக்கு-ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவப் பிரிவிற்கு இந்திய தேசிய முதலாளித்துவ வளர்ச்சி ஒருங்கிணைக்கப்படுவதற்குக் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திரா காந்தி என்று போயிற்று. CPM க்கு, CPI ல் இருந்து 1964ல் பிரிந்ததற்கு இது ஜனதா கட்சி என்று ஆயிற்று. அக்கட்சி BJP யின் முன்னோடிக் கட்சியான ஜனசங்கின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்று ஆகும். ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அதிகாரத்திற்கு மக்கள் எழுச்சியால் பத்மநாபனே ஒப்புக் கொள்ளும் வகையில் ஈர்க்கப்பட்டபோது, அவர்கள் இருக்கும் சட்ட-அரசியலமைப்பு வடிவமைப்பிற்குள் முதலாளித்துவ ஆட்சியை செலுத்தியது.

இறுதியில் அடக்குமுறை (இந்திரா காந்தியின் நெருக்கடிக்கால ஆட்சி) மற்றும் சலுகைகள் (மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் இயற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டம் போன்றவை) ஆகியவற்றால் முதலாளித்துவம் மக்கள் எழுச்சியை விரட்டி தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பின்னரான தேசிய வளர்ச்சி மூலோபாயத்தின் (காங்கிரஸ் சோசலிசம் என்று அழைக்கப்பட்டதற்கு) வெளிப்படையான தோல்விக்கு தன் தீர்வை முன்னெடுப்பதிலிருந்து தடுக்கப்பட்டதால், பல வலதுசாரி சாதிய மற்றும் வகுப்புவாதக் கட்சிகள் மக்கள் வறிய நிலை, பெருகிய சமூக சமத்துவமின்மை மற்றும் சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றில் மக்கள் சீற்றத்தைத் திரிக்கவும், திசை திருப்பவும் முடிந்தது.

BJP யின் எழுச்சி என்பது இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் சமூக நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை மற்றும் சிதைந்த நலனின் அளவு ஆகும்-- இந்த ஜனநாயகம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மற்றும் தெற்கு ஆசியாவில் வகுப்புவாத பிரிவினைகள் ஆகியவற்றின் குறைப் பிரசவத்தில் தோன்றியது; எனவே தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாய் அணிதிரட்ட வேண்டும் என்ற அவசரம் இருந்தது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களை பொறுத்தவரை, BJP யின் ஏற்றம் இன்னும் வலதிற்கு பாய்வதற்கு போலிக் காரணம் கொடுத்து, அவர்களை இன்னும் ஆழ்ந்த முறையில் இந்திய நடைமுறை அரசியலில் ஒருங்கிணைத்திருக்கும்

UPA இல் இருந்து மூன்றாம் அணி வரை

வர்க்கப் போராட்டத்தை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அடக்கிய பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய நடவடிக்கைகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

2004 தேர்தல்கள் காட்டியபடி, உத்தியோகபூர்வ வண்ணப்பட்டையின் சிதைந்த வடிவத்தின் மூலம் என்றாலும், இந்திய முதலாளித்துவத்தின் சமூகப் பொருளாதார செயற்பட்டியலுக்கு வெகுஜன எதிர்ப்பு இருந்தது. "சீர்திருத்தங்கள், ஆனால் மனித முகத்துடன்" என்ற அழைப்பின் அடிப்படையில் காங்கிரஸ் முதலிடத்திற்கு உந்தப் பெற்றது; இடது முன்னணி இதுகாறும் இல்லாத அளவிற்கு சிறந்த தேர்தல் முடிவுகளைக் கண்டது, முக்கியமாக காங்கிரஸின் இழப்பில் ஆகும்.

பெருவணிகத்தின் ஆணைகளை நிறைவேற்றும் காங்கிரஸின் விருப்பத்தை அடிக்கோடிடும் வகையில், சோனியா காந்தி 1990 களின் தொடக்கத்தில் "சீர்திருத்தங்களை" நிதி மந்திரியாக கொண்டுவந்த மன்மோகன் சிங்கை பிரதம மந்திரியாக இருக்க அழைத்தார். இதற்கிடையில் CPM ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றாம் கட்சி ஆதரவை திரட்டுவதில் முக்கிய பங்கைக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை இயற்றுவதிலும் துணையாக இருந்தது--இந்தியாவை ஒரு குறைவூதிய சிறப்புப் பகுதியாக உலக முதலாளித்துவ உற்பத்திக்கு மாற்றும் முதலாளித்துவத்தின் உந்துதலும் இந்தியாவின் உழைக்கும் மக்களுடைய தேவைகள், விழைவுகள் ஆகியவையும் சமரசப்படுத்தப்பட முடியும் என்ற பொய்யை தளமாகக் கொண்ட ஆவணம் அதுவாகும்.

ஒரு சில மாதங்களுக்குள்ளேய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அவர்கள் பாராளுமன்றத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தியுள்ள UPA அரசாங்கம் அதற்கு முன்பு BJP தலைமையில் இருந்த அரசாங்கம் செயல்படுத்திய கொள்கைகளில் இருந்து அதிகம் மாறுபாடற்ற கொள்கைகளைத்தான் செயல்படுத்துகிறது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயப் பங்காளித்தனத்தை இணைத்துக் கொள்ளுதல் என்பதும் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டது.

"சரியான நேரத்தில் காங்கிரஸுடனும் UPA உடனும் CPM முறித்துக் கொண்டது" என்று பத்மநாபன் கூறுகிறார். உண்மையில் காங்கிரஸ்தான் இடது முன்னணியை திறமையுடன் அரசாங்கத்தில் இருந்து உதைத்துத் தள்ளியது.

CPM பலமுறையும் இந்தியாவிற்கு உறுதியான அரசாங்கத்தைக் கொடுப்பதாக உறுதியளித்து, முழு ஐந்து ஆண்டு பதவிகாலத்திற்கும் UPA க்கு ஆதரவை உத்தரவாதம் கொடுத்திருந்தது; ஒரே ஒரு நிபந்தனை போடப்பட்டது, அதாவது UPA அமெரிக்காவுடன் செய்து கொண்ட சிவிலியன் அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தக்கூடாது என்பதே அது. ஓராண்டிற்கும் மேலாக காங்கிரஸ் பல உத்திகளைக் கையாண்டது; அணுசக்தியை விரைவில் செயற்பாட்டிற்கு கொண்டுவரும் பல கட்டங்களுக்கும் ஸ்ராலினிஸ்ட்டுக்களை ஒப்புக் கொள்ள வைத்தது; பின்னர் தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மூடிவிடத் தீர்மானித்தது.

இதன் காங்கிரஸுடனான பங்காளித்தனம் நட்புக்கட்சி இந்திய-அமெரிக்க "மூலோபாய உடன்பாட்டை அழுத்தமாகக் கொண்ட அளவில் முடிவுற்றது; அந்த உடன்பாட்டின் ஒரு தலையாய இலக்கு இந்திய முதலாளித்துவத்தின் இலக்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றொரு பிற்போக்குத்தன, பாராளுமன்ற நெறியில் திவாலான தந்திரத்தை தொடர்ந்தது. "BJP எதிர்ப்பு, காங்கிரஸ்-எதிர்ப்பு" என்ற மூன்றாம் அணியை ஒன்று சேர்த்தது; இதில் பல மாநில மற்றும் சாதி அடிப்படைக் கட்சிகள் இருந்தன--அனைத்துமே முன்னர் BJP அல்லது காங்கிரஸின் நட்புக்கட்சிகளாக இருந்தவை; அனைத்துமே வலதுசாரி வரலாற்றைத்தான் கொண்டிருந்தன--இது "ஒரு மதசார்பற்ற, மக்கள் சார்பு அரசாங்கத்திற்கு" தளம் கொடுக்கும் என்றும் கூறியது.

பத்மநாபன் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் மூன்றாம் அணி நட்பு கட்சிகளின் பிற்போக்கு வரலாற்றை மறுக்க முடியாது. போலீஸ் வன்முறை, வேலை நிறுத்தத்தை முறிப்பவர்கள் மற்றும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தல் மூலம் 2003ல் அரசாங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முறியடித்த AIADMK தலைவி ஜெயலலிதா தமிழ் நாட்டுத் தொழிலாளர்களால் சரியாக வெறுக்கப்படுகிறார். TDP தலைவர் சந்திரபாபு நாயுடு உலக வங்கிக்கு ஏவற் பையனாக செயல்பட்டார். ஆயினும்கூட பத்மநாபன், ஜெயலலிதாவும் நாயுடுவும் தங்கள் அனுபவங்களில் இருந்து "கற்றுள்ளனர்", காங்கிரஸ் மற்றும் BJP யின் கொள்கைகளை எதிர்ப்பதாக அவர்கள் கூறும்போது நம்ப வேண்டும் என்று வாதிடுகிறார். ஒரு மார்க்சிச வர்க்கப் பகுப்பாய்வு பற்றிய குறிப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "ஜனநாயக சக்திகள்" என்று பத்மநாபன் அழைப்பது உண்மையில் இந்திய முதலாளித்துவத்தின் பிராந்திய பிரிவுகள் பலவற்றின் நலன்களை வளர்க்கும் முதலாளித்துவக் கட்சிகள்தாம்; அவைதான் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு இன-மொழி, சாதி அடையாளங்களை திரித்துக் காட்டுகின்றன.

மூன்றாம் அணி ஒரு அரசியல் இழிபொருள், தற்காலிகமாக வட்டார முதலாளித்துவமுறை கட்சிகள் தங்களுக்கு முக்கிய வாய்ப்பு என்று கருதி இணைந்த ஒரு குழுவாகும். இது ஒரு அறிக்கையையோ அல்லது கொள்கை ஆவணத்தையோ அளிக்க முடியவில்லை; தேர்தல்கள் முடிவதற்கு முன்னரே அதன் கூறுபாடுகள் பலவும் காங்கிரஸ் அல்லது BJP உடன் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் ஈடுபட்டன.

CPM மற்றும் இடது முன்னணியைப் பொறுத்தவரையில், அவையும் மரபார்ந்த வகையில் இந்திய முதலாளித்துவத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸுடன் தந்திரோபாய உத்திக்குத் தயாராயின. மூன்றாம் அணி அரசாங்கம் என்ற முழுத் திட்டமும், தேர்தல்கள் ஒரு வலுவிழந்த காங்கிரஸை கொடுக்கும் அது BJP தலைமையிலான NDA பதவிக்கு வருவதை அனுமதிப்பதற்குப் பதிலாக பல வட்டாரக் கட்சிகள் மற்றும் ஸ்டாலினிஸ்ட்டுக்கள் அமைக்க இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவை "வெளியில் இருந்து" கொடுக்கும் என்ற முன்கருத்தில் தோற்றுவிக்கப்பட்டது. CPM மற்றும் CPI தலைவர்கள் BJP வருவதைத் தடுக்கும் முறையில் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வருவதற்கு ஆதரவு கொடுக்கும் கதவை மூடிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினர். இடது முன்னணி காங்கிரஸிற்கு பாராளுமன்ற ஆதரவை முற்றிலும் ஒதுக்கிவிடுமா என வினவப்பட்டதற்கு, CPM பொலிட்பீரோ உறுப்பனரான சீத்தாராம் யெச்சூரி அறிவித்தார்: "ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் நிலை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை."

CPM மற்றும் அதன் இடது முன்னணி ஆகியவை இந்திய முதலாளித்துவ கட்சிகளின் தோற்றங்களை வளர்க்கவும், கேரளா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் தாங்களே நேரடியாக முதலாளித்துவத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளாது இருக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை தடுத்து, அடக்கவும்தான் பயன்படுகின்றன.

ஒரு சோசலிச நோக்கு உடைய தொழிலாளர்கறள், மாணவர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் இந்தியாவில் டிராட்ஸ்கிசத்தின் புரட்சிகர மரபியத்திற்கு மாறி, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தைத் தளமாகக் கொண்ட ஒரு புதிய புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய காலம் பலநாட்களாக உள்ளது. நிலப்பிரபுத்துவம், சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவ முறையிலான முழு பிற்போக்குதன மரபியம், மற்றும் இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஏகாதிபத்திய அடக்குமுறை ஆகியவற்றை அகற்றுவதற்கு தொழிலாளர் வர்க்கம் உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகர எதிர்ப்பிற்கு வழிநடத்த வேண்டும்; இது உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved